ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

போதை ஏறும் முன் ஒரு நிமிடம் யோசிக்கவும்...

வணக்கம்,

கடந்த வியாழனன்று (ஏப்ரல் 25) அலுவலகம் முடிந்து வீட்டுக்கு கிளம்ப தயாராகி கொண்டிருந்தேன். நண்பர்கள் சிலர் அலுவலகம் அருகில் உள்ள நாவலூர் பாரில் தண்ணி அடிக்க கிளம்பி கொண்டிருந்தனர். அதற்கு முந்தைய நாளும் சரக்கடிக்க கிளம்பி, எல்லா மது கடைகளும் மூடி இருந்ததால் (மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு) மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தனர். அதனால் இன்று கண்டிப்பாக மலையேறி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தனர். ஆனால் மீண்டும் அவர்களுக்கு எமாற்றமே மிஞ்சியது. மாமல்லபுரத்தில் ஒரு கட்சி பொதுகூட்டம். அங்கே சாதியை பற்றி வாய் கிழிய பேச போவதால், சுற்று வட்டாரத்தில் ஓ.எம்.ஆர் சாலையில் கிட்ட தட்ட 20 கி.மீ  தொலைவுக்கு எல்லா மது கடைகளையும் மூட சொல்லி உத்தரவு. ஆனாலும் தங்களது முயற்சியில் சற்றும் மனம் தளராத என் நண்பர்கள், நேரே கிண்டி வரை சென்று சரக்கு அடிக்கலாம் என்று முடிவு செய்து சென்றுவிட்டனர்.

இவர்களை நினைத்தபடியே நான் பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன். இந்த பதிவும் இவர்களை போலவர்களை பற்றிதான்.  மரியாதை  நிமித்தமாக நம்மவர்களுக்கு புனைப்பெயர்களை வைத்துள்ளேன். என் அலுவலக நண்பர்களான சேலம் கைப்புள்ள, திருச்செந்தூர் சாமி,  தூத்துக்குடி 'உத்தம' சீலர்,  பரமக்குடி தண்ணிவண்டி மற்றும் எல்லோரையும் வழிநடத்தி கொண்டு செல்லும் (சரக்கடிக்க தான் ) 'கருப்பு தங்கம்' கோவில்பட்டி பூலோக வாசி.

இவர்களும் எல்லா கார்ப்பரேட் கம்பனியிலும் வேலை செய்யும் பொறியாளர்கள் போலத்தான். பிறந்தது வேறு இடமானாலும், சென்னையை நோக்கி வேலைக்காக வந்தவர்கள். சம்பளம்  வாங்கிய முதல் நாளில், முதல் வாரத்தில் ,"ஐயோ!!! இப்போ நான் எதையாவது வாங்கியே தீர வேண்டுமே .. இந்த தெருவையாவது வாங்க வேண்டுமே!!! " என்று துடிப்பவர்கள். சம்பளத்தில் பாதி பணம்  தண்ணியடிக்கவே செலவாகிவிடும். பரமக்குடி தண்ணிவண்டியும், கோவில்பட்டி பூலோக வாசியும் காசு இருந்தால் வாரம் 7 நாளும், எட்டு முறையாவது சரக்கடிப்பவர்கள். திருச்செந்தூர் சாமி, எப்போவாவது ஒரு முறை. தூத்துக்குடி சீலர் உண்மையிலேயே உத்தமர் தான். ஒவ்வொருமுறை நண்பர்களுடன் பாருக்கு சென்றாலும், வெறும் சைடு டிஷும், மிரிண்டாவின் தங்கை மாசாவையும் மட்டுமே சுவைப்பவர். ( அட ! கூல் ட்ரிங்க்ஸ் தாங்க..)

சேலம் கைப்புள்ள, எல்லோரையும்  விட இளையவர் .வேலையில் இருந்தபடியே பகுதி நேரமாக பொறியியல் படிப்பவர். ஆரம்பத்தில் கட்டுப்பாடுடன் இருந்தாலும், சேர்க்கை சரியில்லாததால், வாரம் ஓரிரு முறை மட்டும் போதையுடன் காணப்படுவார்.  இவர்களிடம் காசு கொஞ்சம் கரைப்புரண்டால் உடனே சொல்வது," Join the Party with Bacardi"  (உயர் ரக ரம்மாம்!!! ).

பகலில் வேலை நேரத்தில் கைப்புள்ள, செமஸ்டர் பரீட்சைக்கு படிக்க வேண்டிய பாடங்களை பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பார். நானும் இந்த ஒரு மாதம் மட்டும் தண்ணியடிக்காமல் இரு. ரூமிற்கு சென்று 2 மணி நேரமாவது படி. மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம் என கூறும் பொது, சரி..சரி..  என மண்டையை ஆட்டிவிட்டு, மாலையில்  "மச்சி..போலாமாடா??" என்று சக குடிமகன்கள் கேட்டவுடன், பேட்-மென் படத்தில் வருவது போல கண் மூடி திறப்பதற்குள் காணாமல் போய் விடுவார். நானும் வேறு வழி இல்லாமல், என் தலையில் அடித்து கொண்டு சென்று விடுவேன்.


நான் இவர்களை, இங்கு அசிங்கபடுத்தவோ, அவமானபடுத்தவோ இந்த பதிவை  போடவில்லை. இந்த பாழாய் போன குடியினால்  இப்படி சீரழியிரார்களே என்ற வேதனை தான் எனக்கு. இவர்கள் மட்டுமல்ல, நம் நாட்டில் பல குடிமகன்களும், இந்த குடியால் அவர்களுடைய வேலைகளை சரியாக செய்ய முடியாமல் தவிக்கின்றனர். பணமும், உடலும் வீணாய் போகிறதே என்று  பலருக்கு புரியவில்லை. வெறும் சொற்ப போதைக்காகவா , நண்பர்களுடைய பலவந்தத்தாலையோ, அல்லது வேறு ஏதும் சொந்த பிரச்சனைக்காகவோ,  இல்லையென்றால்  வெறும் பகட்டுகாகவோ தான் இந்த குடிப்பழக்கம். ஹ்ம்ம்... படிப்பறிவில்லாதவருக்கு புத்திமதி சொல்லி புரிய வைக்கல்லாம். படித்தவருக்கு???

முன்பெல்லாம் குடிகாரர்களை ஒரு கேவலமாக பார்ப்பார்கள். ஆனால் இன்று, நான் குடிக்க/புகைக்க மாட்டேன் என்று சொன்னாலே, ஏதோ ஒரு வித்தியாசமான ஜந்துவை பார்ப்பது போல பார்க்கிறனர். இந்த பழக்கங்கள் இல்லாதவர்களிடம், " நீயெல்லாம் என்னத்துக்கு உயிரோட இருக்கே??? " என்று என்னிடம் கேட்டவர்களும் உண்டு.  

"குடி குடியைக் கெடுக்கும். குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது... " என்பதை வக்கணையாக படித்து விட்டு பாரில் உட்கார்ந்து கொண்டு 'ஒன்மொர்  லார்ஜ் 'கேட்கும் படித்த குடிமக்களுக்கு என்ன சொல்ல ????

இவர்களுக்கெல்லாம் எத்தனை தடவை முகேஷ்-க்கு நடந்ததை போட்டு காட்டினாலும் திருந்த மாட்டார்கள். முகேஷ் பற்றி தெரியாதவர்கள், அருகில் உள்ள திரையரங்கிற்கு சென்று படம் ஆரம்பிக்கும் முன்னால் போடப்படும் "புகை மற்றும் போதையினால்  உண்டாகும் தீங்கு" பற்றிய செய்தி சுருளை பாருங்கள், புரியும்.

"உன்னால் செய்ய முடிந்தை எல்லாம் நானும் செய்வேன். என் திருப்திக்காக/ சந்தோஷத்திற்காக தண்ணியடிக்கிறேன், உனக்கு என்னடா வந்தது????" என்று வரிந்து கட்டுபவர்களுக்கு என்னுடைய ஒரே பதில். என்னால் செய்ய முடிந்த ஒன்று, அது உங்களால் கண்டிப்பாக செய்ய முடியாது. இரத்தம் மற்றும் உடலுருப்பு தானம் செய்வது தான். ஊர் பேர் தெரியாதவனுக்கு நீங்கள் கொடுக்க வேண்டாம்.  மிகவும் வேண்டியவருக்கு கொடுக்க முடியாமல் போகும் போது தான் அதன் அருமை உங்களுக்கு புரியும். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் கண்ணும்,உடலுருப்பும்  வீணாக மண்ணுக்கோஅல்லது தீயிற்கோ தான் இரையாக போகிறது...

குடிபழக்கத்தினால் இறந்து விடுவார்கள், நோய் வாய்ப்பட்டு கிடப்பார்கள், குடும்பம் சீரழியும் என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள் .எனக்கு தெரிந்தவரை இந்த மேலான கருத்தை எந்த திரைபடங்களிலும் சொன்னதாக தெரியவில்லை. யாரவது எழுத்தாளர்கள் வேண்டுமானால் பதிவு செய்து இருக்கலாம்.

இந்த பதிவைப் படித்த பின் நீங்கள் சத்தியமாக திருந்தி விட மாட்டீர்கள்  என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும், என் மன நிம்மதிக்காகவும், யாரவது ஒருவர் இதை படித்து ஒரு நிமிடம் யோசித்துவிட்டு ,"ச்சே.. ஆமாம். நம்முடைய உடலுருப்பு யாருக்கும் கொடுக்க முடியாது இல்ல..." என நினைத்தாலே எனக்கு போதுமானது.

இதையெல்லாம் படித்து விட்டு என்னை கெட்ட வார்த்தையில் திட்டினாலும், சண்டையிட்டாலும் பரவில்லை. என் பயமெல்லாம்,  நம்மை பற்றி வலைப் பதிவில் வந்து விட்டது என்று கூறி சரக்கடிக்க என்னிடமே, Join the Party with Bacardi  என ட்ரீட் கேட்டால் என்ன செய்வது என்றுதான் யோசித்து கொண்டிருக்கிறேன்...


நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

9 Comments:

கலியபெருமாள் புதுச்சேரி சொன்னது…

இதுக்கு வேற பயங்கரமான விளக்கம்ளாம் கொடுப்பாங்க பாருங்க..நாளைக்கே செத்துட்டா என்னடா பன்னுவ..போகும்போது என்னத்த எடுத்துட்டுப்போகப்போற என்று மொக்கையான தத்துவமெல்லாம் சொல்வாங்க..அவ்ளோ தர்மசிந்தனை இருக்கறவங்க குடிக்கற காசுல ரெண்டு இல்லாத வீட்டு பிள்ளைகளைப் படிக்க வைக்கலாமே..இதையொட்டிய தலைப்பில் சென்றவாரம் நானும் ஒரு பதிவு எழுதியுள்ளேன் நண்பா..நன்றி.

Unknown சொன்னது…

சூப்பர் தல திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அது போல நாம சொன்னலாம் கேட்க மாட்டாங்க அவங்களா திருந்துனா தான் உண்டு

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி கலியபெருமாள்...

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி சக்கரகட்டி ..

SathyaPriyan சொன்னது…

உங்கள் பதிவின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. ஆனால் சக்கர கட்டி அவர்களின் பின்னூட்டம் தான் சற்று இடிக்கிறது.

1. குடிப்பவர்கள் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்ய முடியாது என்பது உண்மை இல்லை. அது தவறான கருத்து. எவ்வளவு குடித்திருந்தாலும் குருதியில் கலந்துள்ள ஆல்கஹால் 24 மணி நேரத்தில் வெளியேறி விடும்.

2. குடிப்பவர்களை திருடர்கள் போல சித்தரிப்பது மிகவும் அநியாயம். ஏதோ குடிக்காதவர்கள் எல்லோரும் யோக்கிய சீலர்கள் போன்றும் குடிப்பவர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் போலவும் இருக்கிறது அவரது பின்னூட்டமும் உங்கள் பதிவும். குடிக்காமல் அடுத்தவன் குடியை கெடுப்பவர்களுக்கு குடித்து விட்டு தனது குடியை கெடுத்து கொள்பவர்கள் எவ்வளவோ மேல்.

3. மற்ற அனைத்து உணவு பொருட்களை போலவே மதுவும் அளவு தெரிந்து கட்டுப்பாட்டுடன் அருந்தினால் அதனால் ஒரு பாதிப்பும் ஏற்படாது.

மற்றபடி 24 மணி நேரமும் குடியை பற்றியே சிந்தித்து, வருமானத்தின் பெரும் பங்கை அதற்கே செலவிட்டு, வாழ்வதே அதற்காகத்தான் என்பது போல வாழ்பவர்களை பற்றி மட்டுமே குறிப்பிடுகிறீர்கள் என்றால் உங்கள் பதிவுடன் முழுதும் ஒத்து போகிறேன்.

துளசி கோபால் சொன்னது…

என்ன செய்வது? ஆதங்கம்தான். இப்படிக் கெட்டுக் குட்டிச் சுவராப் போறாங்களேன்னு:(

அருமையான பதிவு.

கவியாழி சொன்னது…

உங்கள் அறிவுரையும் நன்று.வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

விழிப்புணர்வூட்டிப் போகும் பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

விமல் ராஜ் சொன்னது…

தங்கள் மேலான கருத்துக்கு நன்றி சத்ய பிரியன்!!!!!!!
//. எவ்வளவு குடித்திருந்தாலும் குருதியில் கலந்துள்ள ஆல்கஹால் 24 மணி நேரத்தில் வெளியேறி விடும்.
நீங்கள் சொல்வது சரிதானா என்று சொல்ல எனாகு தெரியவில்லை... இருந்தாலும் ஒத்துக் கொள்கிறேன்

நான் பொதுவாக குடிக்கும் நபர்களை பற்றி தான் சொல்கிறேன்!!

தொடர்ந்து வருகை தரவும்!!!!!