புதன், 15 மே, 2013

தன்னம்பிக்கையையும், தைரியமும் தான் தேவை !

வணக்கம்,

எல்லா வருடமும் மே மாதத்தில் வரும் முக்கியமான செய்திகளில் ஒன்று, பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தான். கடந்த வாரத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல இந்த வருடமும், மாணவிகளே அதிகமாக தேர்ச்சி  பெற்றுள்ளனர். ஆனாலும் இம்முறை ஜெய சூர்யா என்ற மாணவர் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். அதே போல தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மறு நாள் செய்திதாள்களில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சிப்பட்டியலைப் பற்றி  போட்டிருந்தனர். அதை படித்து கொண்டிருக்கும் போதே என் கண்ணில் பட்ட ஒரு செய்தித் தலைப்பு, "மாணவி தற்கொலை!"

செய்தியை  விரிவாக வாசித்தப் பின் எனக்கு பகீரென்றது. அந்த மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொள்ளவில்லை. பொதுத் தேர்வில் 1200 -க்கு 1000 த்துக்கும் மேல் மதிப்பெண் வாங்கியுள்ளாள். மருத்துவ படிப்புக்கு அந்த மதிப்பெண் போதாது என்பதால் அவளது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். அதே போல இன்னொரு மாணவனும் 900 த்துக்கும் மேல் மதிப்பெண் வாங்கியும், பொறியியல் படிப்பில் சேர மதிப்பெண் போதாது என்பதால் தற்கொலை செய்துள்ளான்.

தேர்வில் தோல்வி அடைந்தாலே தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனம் என்று சொல்லும் போது,  இவர்கள் ஏன் இப்படி செய்தார்கள்  என எனக்கு தெரியவில்லை.


இந்த தவறுகளுக்கு எல்லாம் காரணம்  என்ன என்று யோசித்து பார்க்கும் பார்க்கும் போது, ஆள்க்காட்டி விரல் சமூகத்தையே காட்டுகிறது. படிப்பும் , மதிப்பெண்ணும் தான் வாழ்க்கை என்று இன்றைய தலைமுறையினருக்கு, குறிப்பாக மாணவருக்கு காட்டியுள்ளது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை  நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து, படிப்பை (அதிக மதிப்பெண்) பெறுவது மட்டுமே, குறிக்கோளாக எண்ணுகின்றனர். +2 பொது தேர்வில் 90%  மேல் வாங்கி விட்டால், நல்ல  பொறியியல் கல்லூரியிலோ, மருத்துவ கல்லூரியிலோ இடம் கிடைத்து விடும். இதனால் இவர்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்று நினைத்து விடுகின்றனர்.

பெற்றோர்கள் நினைப்பதில் தவறேதும் இல்லை என்றாலும், பொது தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவதற்காக மாணவர்களை பிழிந்து, வாட்டி எடுத்து, பரீட்சை முடிவதற்குள் ஒரு வழியாக ஆக்கிவிடுகிறனர்.
இதில் பள்ளிக்கூடங்களும் சேர்ந்து கொண்டு, மாலை நேர வகுப்பு, இரவு நேர வகுப்பு, என பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை பெண்டு நிமிர்த்தி விடுகின்றனர். இவர்கள் இப்படி மன அழுத்ததுடன் படித்து, எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்றால், அவர்கள் தவறான முடிவுக்கு தான் போவார்கள்.  

இந்த பிரச்சனைகள் தீர, மாணவருக்கு சரியான கலந்தாய்வு உரையாடல் தேவை. கலந்தாய்வில், "பரீட்சை முடியும் வரை தொலைக்காட்சி பார்க்காதே!,  ஒரு நிமிடம்  கூட வீணாக்காதே! காலை முதல் மாலை வரை படிப்பு ! படிப்பு ! படிப்பு ! என வழக்கப்படுத்திக் கொள்." அது மட்டுமல்லாமல் எந்த கேள்விக்கு எவ்வளவு நேரம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற பழைய  பாட்டையே அவர்களுக்கு சொல்லாமல், அவர்களுக்கு பரீட்சைக்கு பயமில்லாமல் எழுதுவது பற்றியும், தன்னம்பிக்கையையும் வளர்க்க வேண்டும்.

பொறியியலும், மருத்துவமும் மட்டுமே படிப்பல்ல. அதை தவிர வேறு என்னஎன்ன படிப்புகள் இருக்கிறது என்று சொல்லித்தர வேண்டும்.
ஒருவேளை பரீட்சையில் தோல்வியடைந்தாலோ, மதிப்பெண் குறைவாக இருந்தாலோ, மனம் தளராமல், தைரியத்துடனும், மனோபலத்துடனும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும் என்பதை மாணவர்களுக்கு சொல்லி தர வேண்டும்.

வெறும் படிப்பையும் மதிப்பெண்ணையும் மட்டுமே குறிவைத்து மாணவர்களுக்கு போதிக்க கூடாது. இவ்வாறு செய்யாமல், அவர்களுக்கு தனி மனித ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் போதித்தால், எதிர்காலத்தில் இது போன்ற மாணவர்களின் தேவையில்லா உயிர்பலிகள் குறையும்.      


நன்றி !!!

-பி .விமல் ராஜ்