வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

சிறுகதை - ரிஜிஸ்டர் நம்பர்


வணக்கம்,

வலைப்பதிவில் இது என்னுடைய முதல் முயற்சி... முதல் சிறுகதை...
படித்து விட்டு, உங்கள் மேலான விமர்சனங்களை பகிரவும் !!!

 ரிஜிஸ்டர்  நம்பர்
***************************

"நான் போயிட்டு வரேன் மா..." எனக் கூறிவிட்டு காலேஜுக்கு புறப்பட்டான் விஜய்.

"ம்ம்.. ஐ.டி கார்டு, பர்ஸ், ரயில் பாஸு  எல்லாம் எடுத்துகிட்டியா ???" - அவன் அம்மா.

"ஆங்... "

" சரி... பத்திரமா போயிட்டு வா.."

கிளம்பும் முன் பாண்ட் உள்-பக்கெட்டில், வீட்டில் டப்பாவிலிருந்து 'சுட்ட' நூறு ரூபாய் இருக்கிறதா என்று சரி பார்த்து கொண்டான்.

மனதில் நமுட்டு சிரிப்புடன், சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

"ஒன்பதரைக்கு ஒரு ஷோ ; அதைவிட்டா ஒரு மணிக்கு ஷோ.. அம்பதும், முப்பதும் ஒரு எண்பது.. அது ஒரு தொண்ணூறு, நூத்திஇருபது ... ஹ்ம்ம்.... இது போதும்", என மனதில் கணக்கு போட்டப்படியே சென்றுகொண்டிருந்தான்.

சைக்கிளை மீனம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள 'கல்யாண் சைக்கிள் ஸ்டாண்டில்'  போட்டு விட்டு, ஸ்டேஷன் உள்ள சென்று ரயில் ஏறினான்.

மீனம்பாக்கத்தில் ரயிலேறி தாம்பரத்தில் இறங்கி, 'ரோஜா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்' எதிரே அவனுடைய கல்லூரி பேருந்தில் தினசரி எட்டு மணிக்கு ஏறி கல்லூரி செல்வது அவன் வழக்கம்.

ஆனால் இன்று,  தினசரி அட்டவணையிலிருந்து சிறு மாற்றம். இன்று  காலேஜுக்கு போக அவனுக்கு மனசில்லை. 'கட்' அடித்துவிட்டு, தாம்பரம் எம்.ஆர். தியேட்டரில் "விருமாண்டி" படம்  பார்த்து விட்டு, மதியம் சாப்பாட்டுக்கு அங்கேயே பன்னோ, பப்ஃபோ எதோ ஒன்று தின்றுவிட்டு, அப்படியே ரயில் ஏறி தாம்பரம்- மவுண்ட் வரை மாறி மாறி போயிட்டு வந்து டயம் பாஸ் செய்துவிட்டு, வழக்கம் போல் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு போய் விடலாம் என திட்டம் திட்டி இருந்தான். இது அவனுக்கு புதுசு தான். இருந்தாலும், ஒரு சேஞ்சுக்கு முதல் தடவையாக காலேஜ் கட் அடித்து பார்க்கலாம் என்ற எண்ணம் தான் அவனுக்குள் ஓடியது.

ரயில்  பல்லாவரத்தை அடைந்த போது, எதோ யோசித்தவனாய், திடீரென  பிளாட் பாரத்தில் இறங்கி ஒரு ஓரமாக பெஞ்சில் உட்கார்ந்து கொண்டான்.

"மணி ஏழே முக்கால் தான் ஆகுது.. இன்னும் நெறைய டைம் இருக்கு. கொஞ்சம் கழிச்சி போகலாம் ." என எண்ணி கொஞ்ச நேரம் ரயில்வே பெஞ்சை தேய்த்தான்.

"இனிமே யாரவது லீவு போடணும்னா, முன்னாடியே ஆபிஸ் ரூம்ல பாலு சாருக்கு போன் பண்ணி சொல்லிடனும். இல்லேன்னா முப்பது ரூபாய் பைன். கம்பல்சரி!" - போன வாரம் வகுப்பில் வந்த சர்குலர் அவனுக்கு தீடீரென ஞாபகம் வந்தது.

முக்கால் மணி நேரம் கழித்து எதோ யோசித்தவனாய், ரயிலேறி தாம்பரதிற்கு கிளம்பி  சென்றான். தாம்பரம் ஸ்டேஷனுக்கு வெளியே ஒரு பி.சி.ஓ -வில், ஐ.டி கார்டு பார்த்து காலேஜ் அட்மினுக்கு டயல் செய்ததான்.

" ஹலோ! பாலு சாரா ! என்னோடைய பையன் பேரு விஜய் ஆனந்த். அவனுக்கு உடம்பு சரியில்லை. அதனால இன்னக்கி காலேஜ் வர மட்டான் சார்."

"நீங்க யார் பேசுறது???"

"நான் விஜயோட பாஃதர் பேசுறேன்  சார்."

"ஹ்ம்ம்.. உங்க பையன் எந்த டிபார்ட்மெண்ட் ? "

"ஐ.டி. செகண்ட் இயர் சார்."

"எந்த செக்க்ஷன்? "

"..அஅஅ...து  தெரியலையே.."

"ஏங்க ! உங்க பையன் எந்த செக்க்ஷன்கூடவா தெரியாம இருப்பீங்க ??? "

"வந்து.. அ..அவன்.. ஐ.டி. 'பி' செக்க்ஷன் சார்.."

"ம்ம்ம்.. உங்க பையன் ரிஜிஸ்டர்  நம்பர் சொல்லுங்க.."

"4...1...9...0...3...2...0...5...0...7..4.. "

"5...0.... ????? "

"....5074 சார்."

"ம்க்கும்...  எந்த பாரான்ட்சு- க்கு சார் பையனோட ரிஜிஸ்டர்  நம்பர் இவ்வளவு மனப்பாடமாக தெரியும்..?"

"என்னது சார்.?!?!? "

"ம்ம்ம்....சொல்லுங்க..."

" ........................................  "

"நீங்க யார் பேசுறதுனு சொன்னீங்க ??? "

"விஜய்....... பாஃதர் சார்....."

"சொல்லுங்க சார் ... எந்த பாரான்ட்சு- க்கு சார் பையனோட ரிஜிஸ்டர்  நம்பர் மனப்பாடமாக தெரியும் ?"

"ஆங்... போன் பண்ணா, என் ரிஜிஸ்டர்  நம்பர் கேப்பாங்கனு என் பையன் சொன்னான் சார்..."

"பொய் சொல்லாதீங்க.. நீங்க ஸ்டுடெண்ட் தான் பேசுறீங்கன்னு நல்லா தெரியுது."

"இல்ல சார்.. அது வந்து......"

"ஒண்ணும் சொல்ல வேணாம். நீங்க நாளைக்கு காலேஜ் வாங்க. பார்த்துக்குறேன்... "

போன் துண்டிக்கப்பட்டது. யாரோ அவனை பளார்... பளார்... என செவிட்டில் அறைவது போல இருந்தது.

தலையில் அடித்து கொண்டு, செய்வதறியாது ஒரு பத்து  நிமிஷம் பி.சி.ஓ வாசலிலே நின்றான். இப்போதுஅவனுக்கு சினிமாவுக்கு போவதில் எண்ணம் செல்லவில்லை. வேறு வழியின்றி வீட்டுக்கு போக முடிவு எடுத்து, மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான்.

*****

புதன், 19 பிப்ரவரி, 2014

என் தேசம்! என் மக்கள்! நான் !

வணக்கம்,

என் தேசத்தில் படித்தால் வேலை கிடைக்காது - ஆனால்
நடித்தால் நாடே கிடைக்கும்.

என் தேசத்தில் வீட்டில் கொள்ளையடித்தால் ஆயுள் தண்டனை கொடுப்பார்கள் - ஆனால் லட்சம் கோடி ஊழல் செய்தவனை மூன்று ஆண்டுகளில் விடுவித்து விடுவார்கள்.

என் தேசத்தில் கொலை பாதகம் செய்தால் ஆயுள் தண்டனை கொடுப்பார்கள் - ஆனால் பிரதமரை கொல்ல உதவினால் 20 வருடங்களில் விடுதலை செய்யபடுவார்கள்.



என் தேசத்தில் ஒரு மணி நேரம் வரிசையில் நின்று ஓட்டு போட தயங்குவார்கள்- ஆனால் ஐந்து மணி நேரம் வரிசையில் நின்று இலவச தொலைக்காட்சி, விலையில்லா கிரைண்டர், மிக்சி வாங்குவார்கள்.

என் தேசத்தில் தேர்தலில் யாரை தேர்ந்த்தெடுக்க வேண்டும் என்று யோசிக்க மாட்டார்கள்- ஆனால் சூப்பர் சிங்கரில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று யோசிப்பார்கள்.

என் தேசத்தில் ஒவ்வொரு வனத்தையும் செல்வமாக பார்ப்பார்கள்-ஆனால் அந்த வனங்களை அழித்து கட்டிடம் கட்டுவார்கள்.

என் தேசத்தில் விவசாயத்தை நாட்டின் முதுகெலும்பு என சொல்வார்கள் - ஆனால் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்றுவிடும்படி செய்வார்கள்.

என் தேசத்தில் இன ஓற்றுமை பற்றி பெருமையாக பேசுவார்கள்-ஆனால் ஒரே மொழி பேசும் மக்களின் தேசத்தை இரண்டாக பிரிப்பார்கள்.

என் தேசத்தில் மத ஒற்றுமை பற்றி மேடையில் பேசுவார்கள் -ஆனால்
அடுத்த மதத்து கோவிலை இடிப்பார்கள்.

என் தேசத்தில் அரசியல் சரியில்லை, அரசியல்வாதிகள் சரியில்லை என குறை கூறுவார்கள்- ஆனால் காசு வாங்கி ஓட்டை விற்று, கர்மவீரர் போன்றோரை தோற்க்கடிப்பார்கள்.

என் தேசத்தில் கருத்து சுதந்திரம் பற்றி வாய்கிழிய பேசுவார்கள் - ஆனால்
ஃபேஸ்புக்கில் லைக் போட்டால் உள்ளே தள்ளி விடுவார்கள்.

என் தேசத்தில் ஜனநாயகம் பற்றி பெருமைப்பட பேசுவார்கள் - ஆனால்
ஒரே குடும்பத்தினரிடம் தலைமை ஆட்சியை ஒப்படைப்பார்கள்.

என் தேசத்தில் பெண்ணியம் பற்றி பக்கம் பக்கமாக பேசுவார்கள்- ஆனால்
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு எனப் பேர் வாங்கி கொடுப்பார்கள்.

என் தேசத்தில் சாதி மத பேதம் இல்லாமல் ஒன்றுபடுவோம் என சொல்வார்கள்- ஆனால் படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் முதலில்
சாதிக்கு தான் முன்னுரிமை தருவார்கள்.

என் தேசத்தில் காவல் துறை லஞ்சம் வாங்குகிறார்கள் என குறை சொல்வார்கள்- ஆனால் முந்நூறு ரூபாய் ஃபைன் கட்ட வேண்டிய இடத்தில், போக்கு காட்டி நூறு ரூபாய் அன்பளிப்பு கொடுத்து தப்பிப்பார்கள்.

என் தேசத்தில் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள் என குறை சொல்வார்கள்- ஆனால் பத்தாவது படிக்கும் பெண்ணுக்கு காசு கொடுத்து டிரைவிங் லைசென்ஸ் எடுத்து கொடுப்பார்கள்.

என் தேசத்தில் சினிமாவில் அரைத்ததையே அரைக்கிறார்கள் என விமர்சிப்பார்கள்- ஆனால் நல்ல படங்களை வீட்டில் டவுன்லோட் செய்து பார்ப்பார்கள்.
 
என் தேசத்தில் முன்னால் ஜனாதிபதியை அவமதித்தால் விட்டு விடுவார்கள்-ஆனால் சினிமாவில் ஒரு மத தீவிரவாதியை  காட்டினால் படத்தை தடை செய்ய கோருவார்கள்.

என் தேசத்தில் சமூக கருத்துகளையும், தேச பற்றினையும், நல ஒழுக்கதினையும் பற்றி நிறைய பதிவு செய்வார்கள் -ஆனால் அதை அவர்கள் மனதில் பதிய வைக்காமல், சமூக வலைதளங்களிலும், இணைய தளத்திலும் மட்டும் பதிந்து விடுவார்கள்... நம்மை போல!!!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


சனி, 1 பிப்ரவரி, 2014

இது ஹாலிவுட் கடலை மிட்டாய் !

வணக்கம்,

கிரானோலா பார்-னா (Granola Bar) என்னனு உங்களுக்குத் தெரியுமா ??? அதை தான் ஹாலிவுட் கடலை மிட்டாய் என்று சொன்னேன். நீங்க கேள்விப்பட்டதே இல்லையா ??? அப்படியென்றல் முதலில் இதை படிக்கவும்...

இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பூரி, பஜ்ஜி, போண்டா, சாம்பார், ரசம், வடை, பாயாசம், மோர் என சப்பு கொட்டி சாப்பிட்டு வந்த நம் மக்களுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்னால் மற்ற மாநிலத்துச் சாப்பாடெல்லாம் எப்படி இருக்கும் என ருசிக்க ஆசை வந்தது. அதிலிருந்து வர ஆரம்பித்தது தான் மற்ற உணவு முறைகள் எல்லாம். அதன்பின் தான் முகலாயர் வழி வந்த பிரியாணி, பரோட்டா, வடக்கில் பிரபலமான பேல் பூரி, பானி பூரி, ஃபப், சமோசா போன்ற சாட் அயிட்டங்கள் தென்னகத்தில் பல ஓட்டல்களிலும், வீதியோர சிற்றுண்டி விடுதியிலும் வலம் வந்தன.

பிறகு நம்ம தெருக்களில் ஆந்திரா மெஸ் ஆதிக்கத்தில், காரமான சாப்பாடும், பெசரட்டும், கோங்குரா சட்னியும் கலைகட்டியது. பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் பரிமாறப்படும் வடஇந்திய தாலிகளும் ஹைவே தாபாக்களில் கிடைக்க ஆரம்பித்தது.

பின்னர் ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ், பாஸ்தா எனச் சீன தேசத்து ஃபாஸ்ட் ஃபுட் உணவு சமாச்சாரங்கள் நம்ம மக்களின் பிடித்தமான உணவாக மாறியது. அதன்பின், சென்னை போன்ற பெருநகரங்களில் ஐ.டி கலாச்சாரம் ஆரம்பித்த போது, வெள்ளைக்காரன் வெண்ணெயையும், பன்னீரையும் வெறும் மைதாமாவில் தடவி, கொஞ்சம் தக்காளி நறுக்கி போட்டு, ருசி சேர்த்து பீட்சாவையும், பர்கரையும் ஊரெங்கும் நிறுவி நம் நாக்கை வசப்படுத்தினான்.

மேற்கண்ட சாப்பாட்டு அயிட்டங்கள் எல்லாம் எப்படி,என்னனு உங்களுக்கே தெரிந்திருக்கும். அந்த வரிசையில் வரும் மேற்கத்திய நாட்டின் இன்னமொரு (சிற்றுண்டி பண்டம்) சிற்றிடை உணவு தான் கிரானோலா பார் (Granola Bar).
 

கிரானோலா என்பது அமெரிக்க நகரங்களில் சாப்பிட்டப்படும் காலை நேர சிற்றுண்டி உணவு. ஓட்ஸ், பருப்புகள், அவல், தேன் ஆகியனவை நன்றாக வேக வைத்து, மொருமொருவென முறுவலாக்கி தின்னப்படும் ஒரு சத்தான உணவு பொருள். சில சமயத்தில் உலர்ந்த திராட்சைகளும், பேரீச்சம் பழங்களும் சேர்ப்பதுண்டு.

நாம் வெளியில் செல்லும் போது இட்லி, பூரி, பிரட்-ஜாம், கட்டுச் சாதம் -ன்னு எப்படி எடுத்துக்கொண்டு போகிறோமோ, அதுபோல அமெரிக்கா போன்ற நாடுகளில் தொலைதூர வெளியூர் பயணம் செய்பவர்கள், நீண்ட நடைபயணம் அல்லது முகாம் செல்பவர்கள், இதை எடுத்துக் கொண்டு செல்வார்கள். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், வேலை பளு காரணமாகக் காலை சிற்றுண்டி, மதிய சாப்பாடை துறப்பவர்கள், துறக்க நினைப்பவர்கள் கிரானோலாவை விரும்பி உண்பார்கள். பெரும்பாலும் இது பட்டி (bar) வடிவிலே வருகிறது. இதைப் பார்க்க கொஞ்சம் பெரிய சைஸ் கடலை மிட்டாய் போலத் தான் இருக்கும். மேலும் ஒரு பட்டியில் (bar -ல்) 90 முதல் 100 கலோரிகளே இருப்பதால், இரண்டு அல்லது மூன்று பட்டிகளைச் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும் போலும். கலோரி பார்த்து ஓட்ஸ், கேலாக்கஸ் (Kellogg’s) சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.


கிரானோலா பெரும்பாலும் தயிர், தேன், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், பால், அவுரி நெல்லிகள் (blue berries) மற்றப் பொருட்களுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இது கேக் அல்லது இனிப்புகள் செய்ய உபயோகப்படுகிறதாம். கிரானோலா பாரில் சேர்க்கப்படும் (flax seeds) ஆளி விதை உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் தகவலுக்கு விக்கிபீடியா.

Nature Valley என்ற அமெரிக்கத் தின்பண்ட தயாரிப்பு நிறுவனம் கிரானோலா பாரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், புதுத் தில்லி ஆகிய நகரங்களில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை வர்த்தகக் கடைகளில் விற்க முடிவு செய்துள்ளது. கூடிய விரைவில், வேலை ரொம்ப அதிகம், சாப்பிட நேரமில்லை போன்று காரணம் சொல்பவர்களுக்கு நல்ல ஒரு மாற்று வந்து விட்டது எனச் சொல்லலாம். 180 கிராம் கிரானோலா பாரின் விலை 30 முதல் 60 ரூபாய்கள் வரை இருக்கிறதாம். போகப் போகக் விலை இன்னும் குறையலாம். பதப்படுத்தாத சத்துள்ள பொருள்கள் இதில் சேர்க்கபட்டுள்ளதால், இதை எல்லா வயதினரும் சாப்பிடலாம் என்று சொல்லபடுகிறது. கிரானோலா பாரில் சோடியம், தேன் மற்றும் பருப்பு வகைகள் அதிகம் சேர்த்துள்ளதால், நீரிழிவு நோய் (சுகர்) உள்ளவர்கள் தங்கள் மருத்துவரை கலந்தாலோசித்துவிட்டுச் சாப்பிடலாம் எனவும் கூறுகிறார்கள்.

எப்போதும் சமூகம், வரலாறு, அரசியல் போன்ற தலைப்புகளில் பதிவு எழுதி வருபவன், இன்று ஒரு அமெரிக்கத் தின்பண்டத்திற்கு மார்கெட்டிங் பண்ணுகிறானே என்று எண்ணிவிட வேண்டாம். கடந்த வாரத்தில், அலுவலகத்தில் நண்பர் ஒருவர் கிரானோலா பார் வாங்கிக் கொடுத்தார். சாப்பிட்டு விட்டு பிடித்துப் போகவே, அதைப் பற்றி என்ன, ஏதுன்னு இணையத்தில் அலசி உங்களிடம் பகிர்ந்துள்ளேன். பதிவை ருசித்துவிட்டு எப்படி இருந்தது பின்னூட்டத்தில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்