Monday, April 28, 2014

சிறுகதை - தண்ணீர் சிறுவன்

வணக்கம்,

ஒரு சாதாரண மாணவனின், கண்ணில் பட்ட நிகழ்வையே இங்கு சிறுகதையாக எழுதியுள்ளேன். படித்து விட்டு விமர்சனங்களை பகிரலாம்.

சிறுகதை - தண்ணீர் சிறுவன்
****************************************
அந்தி சாயும் வேளையில், அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது.  வெள்ளை அரண்மனை போல தோற்றமுள்ள அந்த கட்டிடத்தின் பின்புறத்தில், பெரிய மைதானத்தில் அலங்கார மேடை போடப்பட்டிருந்தது. வளாக நுழைவு வாயில் முதல் மேடை வரை மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வளைவுகள், தோரணங்கள், வசதியான நாற்காலிகள், வி.ஐ.பி. சீட்கள் என ஆடம்பரமாக இருந்தது. மேடையின் மீது நான்கைந்து குஷன் நாற்காலிகள் வரிசையாக போடப்பட்டு, அதற்கு முன் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலும், சில காகிதங்களும், டீப்பாயின் மீது வைக்கபட்டிருந்தது. மேடையின் வலது ஒரத்தில் ஒரு மைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரு பக்கமும் வோல்டாஸ் ஏசி ஆள் இல்லாமல் வெறுமனே ஓடி கொண்டிருந்தது.  மேடையில் நாற்காலிகளின் பின்புறம் "WELCOME TO JSD ENGINEERING COLLEGE - NATIONAL LEVEL SYMPOSIUM - DEPARTMENT OF INFORMATION TECHNOLOGY " என சிகப்பு துணியில், தங்க நிறத் தெர்மகோலில் எழுதி தொங்க விடப்பட்டிருந்தது.

மேடைக்கு கீழே மாணவர்களும், ஆசிரியர்களும் வரிசையாக நாற்காலியில் அமர்ந்திருந்தனர். அந்த செம்மண் பூமியில், லேசாக வந்த உப்பு காத்து எல்லோரையும் சுகமாக குளிரூட்டியது. லேசான சுரத்தில் ரேடியோவில் மேற்கத்திய இசை பாடிக்கொண்டிருந்தது. ராஜும், அருணும் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள். இருவரும் அன்று தான் அந்த கல்லூரிக்கு முதன் முறையாக வருகிறார்கள். காலையில் நடந்த போட்டிகளில், "பிக் டேட்டா அனாலிசிஸ் " தலைப்பில் பேப்பர் பிரசென்டேஷனில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசையும், மதியம் நடந்த பொது அறிவு போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசையும் பிடித்திருந்தனர். மாலையில் கல்லூரி தலைவர் கையால் பரிசளிக்கும் விழா நடைபெறும் என்று சொல்லப்பட்டதால், இருவரும் காத்திருந்தார்கள்.

"என்னடா இது!!! நாலரை மணிக்கு மேல ஆயிடிச்சு.. சேர்மன் இன்னும் வரவேயில்லை.. நாம கிளம்பலாம் வா...  "

"கொஞ்சம் வெயிட் பண்ணு அருண்..சர்ட்டிபிகேட் வாங்கினதும் நாம போய்டலாம்... சரியா !!! ", என்றான் ராஜ்.

"ஹ்ம்ம்..இங்கே வந்திருக்கவே கூடாது.... பேசாம வண்டலூர்ல மகரிஷி காலேஜுக்கு போயிருக்கனும்... வட பாயசத்தோட சப்பாடாம்.. சதீஷ் சொன்னான்."

"டேய்.. இங்கயும் வந்து மதியம் மீனு, கருவாடு, கறிக்குழம்புனு  நல்லா கொட்டிகிட்ட தானே ???" 

"பின்ன..அதுக்கு தானே வந்தேன்.."

"சாப்டாச்சுல.. எல்லாம் முடிஞ்சிடிச்சுல... கொஞ்சம் பொறு..."

"....ஹ்ம்ம் ................"

கூட்டத்தில் மாணவர்களும், மற்றவர்களும் அவர்களுக்கிடையே சலசலவென பேசி கொண்டே இருந்தனர். "Our Chairman is about to reach our campus. Students are requested to maintain silence and discipline" என்று ஒரு பீட்டர் விடும் பெண் குரல் அவ்வபோது மைக்கில் அறிவித்து கொண்டிருந்தது.

நன்றியுராற்றிவிட்டு பரிசளிக்க வேண்டிய ஜே.எஸ்.டி கல்லூரியின் தலைவர் இன்னும் வரவில்லை. அவருக்காகதான் அனைவரும் காத்து கொண்டிருந்தனர். சற்று நேரத்தில், தீடீரென எல்லோரும் எழுந்து நின்று நுழைவு வாயிலைப் பார்க்க ஆரம்பித்தார்கள். தூரத்தில் ஹாரன் சத்தத்தில் நான்கு இன்னோவா கார்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தது. இன்னோவா கார்களின் இடையில் ஒரு உயர் ரக, வெண் நிற, ஃபான்சி நம்பருடன் கூடிய ஆடி கார் ஒன்று, மைதானத்தின் வலப்பக்கத்திலிருந்து, இடப்பக்கத்தில் மேடையருகே வந்து நின்றது. இன்னோவா காரிலிருந்து சில டிப்டொப் ஆசாமிகள் வேகமாக இறங்கி வந்து, ஆடி காரின் கதவுகளை திறந்தனர். உள்ளிருந்து  எழுபது வயதுமிக்க ஒரு பெரியவர் வெள்ளை வேட்டி சட்டையுடன் புன்முறுவலோடு இறங்கி அனைவருக்கும் வணக்கம் வைத்தார். காரின் மறுபுறம், அவரது மனைவியும் இறங்கினார். பின் வந்த கருப்பு டொயோடா காரில் இரண்டு கல்லூரி நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

நிர்வாகிகளும், கல்லூரி தலைவர், மற்றும் அவரது மனைவியும் மேடையில் உள்ள நாற்காலிகளில் போய் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் கல்லூரி நிர்வாகிகள்,  கல்லூரியின் பெருமைகளையும், கல்லூரி தலைவரின் கல்வித்தொண்டு பற்றியும் புகழ்ந்து பேசினார்கள். "நமது கல்லூரி சேர்மன் திரு.ஜே.சிவதாஸ் அவர்கள் மிகவும் நல்லவர், பொது நலவாதியும் கூட.  ஏழை குடும்பத்தில் பிறந்து, உழைத்து முன்னேறி வாழ்வில் வெற்றி பெற்றுள்ளார். தான் படிக்காவிட்டாலும் ஊரில் உள்ள எல்லா ஏழை பிள்ளைகளும் படிக்க வேண்டுமென எண்ணி பள்ளிகூடங்கள், பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி என பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து, இன்று பல பிள்ளைகளை இலவசமாக படிக்க வைத்து கொண்டிருகிறார். இவர் சேவையை பாராட்டி, ஒரு தனியார் தொண்டு நிறுவனம் தலைவருக்கு 'கல்வி தந்தை ' என்ற பட்டதை கொடுத்துள்ளது. மற்ற கல்வி நிறுவனங்களை போல கல்வியை விற்காமல், ஓர் சமுதாய பணியாகவே செய்து வருகிறார். ஆயிரம் கோவில்களை கட்டுவதும், ஒரு ஏழைக்கு கல்வி கொடுப்பதும் ஒன்று என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னத மனிதர் நம் கல்லூரி தலைவர்."

மேலும் தலைவரை பற்றி பேசி கொண்டே இருந்தனர். அதன் பின் பேசிய கல்லூரி முதல்வர் நேஷனல் லெவல் சிம்போசியம் பற்றி விரிவாக பேசினார். கடைசியாக கல்லூரி தலைவர் சிவதாஸ் மாணவர்களின் ஒழுக்கம் பற்றியும், கல்லூரியின் தேர்ச்சி விகிதம் பற்றியும் பேசிவிட்டு, நேஷனல் லெவல் சிம்போசியம்  பற்றி சிறிது நேரம் உரையாற்றினார்; பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

பாராட்டுரையும், நன்றியுரையும் முடியவே ஆறரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. ராஜும் , அருணும் அக்கல்லூரி பேருந்திலேயே ஏறி வீட்டுக்கு புறப்பட்டனர். போகும் வழியில் ராஜ், கல்லூரி சேர்மன் பற்றி நிர்வாகிகள் பேசியதை நினைத்து கொண்டிருந்தான். எல்லா கல்லூரியிலும் இப்படி தான் போல என்று எண்ணி கொண்டான். ஒவ்வொரு முறையும் கல்லூரி தலைவரை 'கல்வி தந்தை' என்று குறிப்பிடும் போது, அன்று மதியம் கேன்டீனில் நடந்த சம்பவம் நிழலாய் நினைவில் வந்து போனது.

  ----

 மதியம் கேன்டீனில் சாப்பிடும் போது -

"அருண் ! கருவாடு  நல்லா இருக்குல.!!! "

"ஆமா ..நல்லாயிருக்கு... ராஜ்.. அந்த வறுவலை  கொஞ்சம் கொ... "

"கிளிங் ! கிளாங் ! கிளிங் !.."

திடீரெனெ பாத்திரம் உருளும் சத்தத்துடன்,  பளார்!!!  பளார்!!! என அரை விழும் சத்தமும் கேட்டது. சத்தம் வரும் திசையில் பார்த்த போது....

" அறிவுகெட்ட எரும மாடு.. வேலை செய்யும் போது, புத்தி எங்கடா போவுது.. "

"இல்லண்ணே ..  தெரியாம தண்ணி ஜக்கை ரொம்ப சாய்ச்சிடென்.. அதன் கீழே கொட்டிடுச்... "

பளார்!!!  .... மீண்டும் ஒரு அரை.

"ஒழுங்கா வேலை செய்யலேனா , ஊர பாக்க போக வேண்டியதுதான்... தெரியும்ல என் சேதி... தோலை ஊறிச்சுருவேன். ஜாக்கிரதை.. !"

 "மம்ம்....சரிண்ணே..."

ஒற்றை கையால் கன்னத்தை பிடித்த படியே மீண்டும் கூலரிலிருந்து தண்ணீர் பிடித்து, பந்தியில் காலியான டம்ளர்களை நிரப்ப ஆரம்பித்தான் அந்த பன்னிரெண்டு வயது சிறுவன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

Monday, April 21, 2014

வாங்க ஓட்டு போடுவோம் !

வணக்கம்,

தேர்தல் வந்தாச்சு. ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி எல்லோரும் பேசி கொண்டிருப்பது இந்த வாரம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை பற்றி தான். புதிதாய் ஓட்டு போட தயாராகும் கல்லூரி இளைஞன் /இளைஞிகள், அரசு அலுவலகங்கள், கார்ப்பரேட்  நிறுவனங்கள், தெருவோர பெட்டிக்கடைகள் என எல்லா இடங்களிலும் அரசியல் பேசும் நேரம் இது.

மத்தியில் இருபெரும் கட்சிகள் மோதுகின்றன. மாநிலத்தில் கூட்டணி கட்சியினரோடு சேர்ந்து கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக பிரச்சாரத்திலும், போட்டியிலும் அனல் பறக்கிறது. இரண்டு பெரும் கட்சிகள் இத்தேர்தலில் மோதும் போது, உடைபடுவது எதோ மக்களின்  மண்டையாக தான் இருக்கிறது. ஆளாளுக்கு பிரச்சார விளம்பரங்களையும், வாக்குறுதிகளையும் அள்ளி வீசி கொண்டு இருக்கின்றனர். நமக்கு தான் எதை கேட்பது என்று தெரியவில்லை.

இப்போது நடப்பது நாடாளுமன்ற தேர்தலா? அல்லது மாநிலங்களவை தேர்தலா? என்றே புரியவில்லை. நடக்கிற கூத்தை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. மாநிலத்தில் உள்ள எல்லா கட்சிகளுமே ஒரே மாதிரி நம்மை குழப்புகிறார்கள்.

vote for better India

"ஏமாந்தது போதும்! இம்முறை எங்களுக்கே வாக்களியுங்கள்  எங்ககளை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால், தடையில்லா மின்சாரம் தருவோம், விலைவாசியை குறைப்போம்; வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் ! .....செய்வீர்களா???? நீங்கள் செய்வீர்களா???? " என்று நம்மையே கேள்வி கேட்கிறார்கள். நாம் தானே சொன்னதை செய்வீர்களா? என்று கேட்க வேண்டும். எனக்கு புரியவில்லை.

மற்றொருவரோ, "அவர்கள் சொன்னதை இதுவரை செய்யவில்லை; நாங்கள் மறக்கவில்லை... அதை நீங்கள் மறப்பீர்களா??? மறப்பீர்களா??? " என்று அவர்களை நல்லவர்கள் போல காட்டி கொள்கிறார்கள். அவர்கள் குடும்ப பிரச்சனைகளை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை அறியாதவர் போலும்!

இன்னொருவர், "தெரிஞ்சிகோங்க மக்களே!!! இரண்டு கட்சிகளும் சரியில்லை; ஒரே ஊழல்; அராஜகம்; நம்மால நிம்மதியா இருக்க முடியல...ஏய் ! கொடியை கீழே இறக்குடா...  மறைக்குதுல்ல....எங்க விட்டேன்?... ஆங்...இந்த ஒரு முறை வாய்ப்பு கொடுங்க.. புரிஞ்கோங்க மக்களே!!!" என்று அவருக்கும் புரியாமல், நமக்கும் புரியாமல் பேசுகிறார் உளறுகிறார்.

தேர்தல் விளம்பரத்தில் இவர்களின் சொத்து பட்டியலை மாறி மாறி காட்டி, போட்டு கொடுத்து கொள்கிறார்கள். இதையெல்லாம் ஏன் சி.பி.ஐக்கும், வருமான வரி துறையினருக்கும், முன்னமே தெரியவில்லை என்றுதான் நம் மக்களின் பெரிய சந்தேகமாக இருக்கிறது.

நடக்கவிருப்பது நாடாளுமன்ற தேர்தல். எங்களை வெற்றி பெற செய்தால், எங்கள் வேட்பாளர் உங்களுடைய தொகுதிக்காக பாராளுமன்றத்தில் போய் பேசுவார் என்று சொல்லி ஓட்டு கேட்டால் சரி.  அதை விட்டுவிட்டு, மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் ! விலைவாசியை குறைப்போம்; மின்சாரம் தருவோம் என மாநிலங்களவை தேர்தல் போல பிரச்சாரம் செய்கிறார்கள். விதம் விதமாக நம் காதில் பூ சுற்றுகிறார்கள்.

தேசிய கட்சிகளும் சாதாரணமாக விடவில்லை. நாங்கள் செய்த பத்தாண்டு சாதனைகளை தொடர வழி செய்யுங்கள் என்று வாய் கூசாமல் புளுகுகிறார்கள். மற்றொருவரோ, அவரின் சாதனையை பட்டியல் போடவே நேரம் இல்லாமல் இருக்கிறார். அந்த சாதனை பட்டியலில் சில வேதனை பட்டியல்கள் மறைந்து விடுகிறது. ஆனால், இவரை தான் இந்தியாவின் எதிர்கால ஒளி விளக்கு, வழிகாட்டி என்று எல்லோரும் நம்புகிறார்கள். ஹ்ம்ம்....நம்பி தானே ஆகணும்... வேற வழி ?

அற வழியில் ஊழலை எதிர்கிறேன் என்று கட்சி ஆரம்பித்தவர்; முதல் அடியை சரியாக எடுத்து வைத்து விட்டார். ஆனால், அதன் பின் சரியாக அடியேடுத்து வைப்பாரா என குழப்புகிறார். இரும்பெரும் கட்சிகளை தாக்கு பிடிப்பாரா என்றும் தெரியவில்லை.

மக்கள் யாரும் யோசிக்கவே மாட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள். யாரும் செய்திதாள்கள் படிப்பதில்லை; செய்திகள் கேட்பதில்லை என்று அரசியல்வாதிகளின் நினைப்பு. ஆனால் அதுவும் கிட்டதிட்ட உண்மைதான். ஆம். நம் பாரத தேசத்திற்கென்றே பொதுவான வியாதி ஒன்றுள்ளது.

மறதி- நம் நாட்டின் தேசிய வியாதி. இந்த வியாதி இருக்கும் வரை நம்மால் எந்த ஒரு நல்ல தெளிவான முடிவையும் (ஆட்சியையும்) எடுக்க முடியாது. நம் மக்கள், போன ஆட்சியில் நடந்ததை இந்த ஆட்சியில் மறந்து விடுவார்கள்; இந்த ஆட்சியில் நடப்பதை அடுத்த ஆட்சியில் மறந்து விடுவார்கள். யார் அப்போதைக்கு நல்லது செய்கின்றார்கள் என்று மட்டுமே சிலர் பார்கின்றனர்.

எந்த தேர்தலானாலும், சாதியையும் , மதத்தையும் மட்டுமே வைத்து ஓட்டு போடுபவர்களும், பணம் வாங்கி கொண்டு ஓட்டை விற்பவர்களும் இருக்கும் வரை நாம் தகுதியான அரசை எதிர்பார்க்க முடியாது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு வீட்டில் இருந்தபடியே ஓட்டு போடாமல் இருக்கும் சில சோம்பேறிகளும் திருந்த வேண்டும். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில், வெறும் 58% வாக்குகள் தான் பதிவாகி இருந்தது என புள்ளிவிவரம் கூறுகிறது (தவறாக இருப்பின் திருத்தலாம்). பாரதத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க, ஆள் காட்டி விரலை கூட தூக்க முடியாத ஜென்மங்கள் அரசியலை பற்றியோ, நாட்டை பற்றியோ குறை கூற தகுதியிள்ளாதவர்கள்.

யாருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள், ஓட்டு எந்திரத்தில் கடைசி பொத்தானை அழுத்தி யாருக்கும் என் வாக்கு இல்லை (NOTA - None Of The Above) என்று பதியலாம்.    

ஒவ்வொரு ஓட்டும், ஒவ்வொரு குடிமகனின் கடமை, தன்மானம், பொறுப்பு, எல்லாமே. இதை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். நம்முடைய இந்த நிலையெல்லாம் மாறி, எப்போது தகுதியான வேட்பாளரை ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தேடுகின்றோமோ, அன்று தான் ஓரு சிறந்த தலைமை மத்தியிலும், மாநிலத்திலும் அமையும்; புதிய பாரதமும் உருவாகும்.

வாருங்கள் ! தகுதியான வாக்காளர்களை தேர்ந்தெடுப்போம்; நம் கடமையை செவ்வனே செய்வோம் ! வாழ்க பாரதம் !


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


Wednesday, April 16, 2014

ஜாக்கிரதை ! திருடர்கள் v2.014

வணக்கம், 

அறிவியல் வளர்ச்சி பெருகி வரும் இந்நவீன உலகில் இ-மெயில், இன்டர்நெட் மூலம் ஏமாற்றுவது /திருடுவது தான் இப்போதைய லேடஸ்ட் பேஷன். முன்பெல்லாம் வீடு/கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்பது, பாங்க் கொள்ளை, வழிப்பறி என்று நடந்து கொண்டிருந்தது. இப்போதும் இந்த குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாக மென்பொருள், இணையம் மூலம் கொள்ளையடிப்பது பெருகி வருகிறது.

தொழில்நுட்பம் மேலோங்கி நிற்கும் மேல் நாடுகளில் மட்டும் தான் இவை நடக்கிறது என்று எண்ணி கொண்டிருக்கின்றனர். அது தவறு. நம் நாட்டிலும் இது போன்ற குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ஆன்லைன் திருட்டு, இணையம் மூலம் வங்கி கணக்கு கொள்ளை போன்ற 'டெக்னிகல் திருட்டுகளை' பற்றி விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.

இந்நூற்றாண்டின் ஆரம்பம் முதல், உலக மக்களின் கணினி மற்றும் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தொழில்நுட்பம் வளர்வதால், உலகம் சுருங்கி கொண்டே வருகிறது. இதன் பின்னணியில் பல குற்றங்களும், தவறுகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கணினி, இணையம், மென்பொருட்கள், வன்பொருட்கள், கைபேசி,வலைத்தளம் மூலம் நடப்பவையே இணைய குற்றங்கள் (Cyber Crime) என்று சொல்லபடுகிறது. இக்குற்றங்களில் பலவகை உள்ளது.

1.) ஹாக்கிங்  (Hacking)
2.) பதிப்புரிமை மீறுதல்  (Copyrights Infringement)
3.) சைபர் ஸ்டாகிங் (Cyber Stalking)
4.) ஐ.டி. திருட்டு (ID Theft)
5.) தீங்கிழைக்கும் மென்பொருள் பரப்புதல் (Malicious Software)

ஹாக்கிங் (Hacking): ஒரு தனிப்பட்ட நபர்/ தனியார் அமைப்பு/ அரசு அமைப்பு, அவரது தனிப்பட்ட அல்லது முக்கிய தகவல்களை அவர் அனுமதியின்றி அணுகி, இணையம் வழியாக திருட முயல்வது ஹாக்கிங் எனப்படும். இதில் குற்றவாளி அவன் இருந்த இடத்திலிருந்தே, வேறு ஒருவரின் கணினிக்குள் அனுமதில்லாமல் நுழைந்து, தகவல்களை திருடுவது வழக்கம். ஒரு இணைய தளத்தின் சர்வரை (Server) தாக்கி, ஹேக் (hack) செய்து அவற்றில் உள்ள தகவல்களை அழித்து / திருடுவது வெப்சைட் ஹாக்கிங் எனப்படும்.சமீபத்தில், ஜெயா டி.வியின் இணையதளம் ஹாக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

அரசு/ தனியார் அமைப்பே தங்கள் தகவல்களின் பாதுகாப்பிற்காக செயல்படுத்தி கொள்வது எத்திகல் ஹாக்கிங் (Ethical Hacking). இது கிட்டத்தட்ட  நம் பாதுகாப்பிற்காக நாமே போட்டுக்கொள்ளும் ஒரு பாதுகாப்பு வளையம் போல தான்.

பதிப்புரிமை மீறுதல்  (Copyrights Infringement): ஒரு தனி நபர்/நிறுவனத்திற்கு சொந்தமானவற்றை அவர் அனுமதியின்றி உபயோகிப்பது, விற்பது, போன்றவையே பதிப்புரிமை மீறுதல் ஆகும். காப்புரிமையும் மீறுவதும் இதே போலதான். தகவல்கள், கோப்புகள், புகைப்படம், காணொளி, மென்பொருட்கள், புதிய கண்டுபிடிப்புகள் என உரிமையாளரிடம் தக்க அனுமதியின்றி பயன்படுத்துவது /விற்பது/ மாற்றுவது சட்டப்படி தண்டனைக்குரியதாகும். பொதுவாக நாம் கேள்விப்படும் திருட்டு பட டி.வி.டி, திருட்டு (activation key இல்லாத) மென்பொருட்கள், போன்றவை இவ்வகை குற்றத்தையே சாரும்.

சைபர் ஸ்டாகிங் (Cyber Stalking): இணையம் மூலம் மின்னஞ்சல்கள், படங்கள்/ காணொளிகள், தவறான தகவல்களை உருவாக்கி மற்றவர்களை துன்புறுத்துவது சைபர் ஸ்டாகிங் என்று சொல்வார்கள். வலைதளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆபாச படம் வெளியிடுவது, ஆபாசமாய் விமர்சிப்பது, தவறான/பொய்யான  செய்திகளை பரப்புவது, சமூக தளங்களில் போலி ஐ.டி வைத்து மோசடி செய்வது போன்றவை இதன் கீழ் வரும். பெரும்பாலும் பதின்பருவ பெண்களும், ஆண்களும் தான் இதில் பலியாகிறார்கள். இது போன்ற குற்றங்களை செய்யும் வக்கிர குணம் படைத்தவர்களுக்கு அரசு கடும் தண்டனைகளை வழங்கி வருகிறது.

ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரை புகைப்படமோ/காணொளியோ  எடுத்து, அவருக்கு விருப்பமில்லாமல் எஸ்.எம்.எஸ் அல்லது கால் செய்து தொந்தரவு செய்வதும் இவ்வகை சைபர் குற்றங்களின் கீழ் பதிவாகும்.

ஐ.டி. திருட்டு (ID Theft):  இணையம் மூலமாக பணம்/பங்குகளை மோசடி செய்வது அல்லது திருடுவது ஐ.டி திருட்டு ஆகும். தனி நபர் /  நிறுவனத்தின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர் அனுமதி இன்றி இன்னொரு கணக்கிற்கு மாற்றுவது / திருடுவது; போலியான கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் தயார் செய்து கொள்ளையடிப்பது; போலியான இ-மெயில் அனுப்பி உங்களுக்கு $500,000,000,000 பரிசாக விழுந்துள்ளது என்று கூறி பணம் பெற முயற்சிப்பது போன்றவை ஐ.டி. திருட்டு என்று கூறுவார்கள். இது போன்று இ-மெயில்/எஸ்.எம்.எஸ் மூலம் திருடுவது  பிஷிங் (phishing)  என்றும்  சொல்வார்கள்.

பெரும்பாலும் வங்கி கணக்குகளை ஹாக் செய்து , அவருடைய வங்கி , கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு நம்பர்கள் போன்றவற்றை  பாஸ்வோர்ட், பின் நம்பருடன் திருடி தவறாக பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது. ஏ.டி எம் மற்றும் கிரெடிட் கார்டுகளை வணிக இடங்களில் (swipe) தேய்க்கும் போது கவனமாக செயல்பட வேண்டும். ஸ்கிம்மர் (Skimmer ) என்று சொல்லப்படும் ஓர் இயந்திரத்தின் உதவியுடன் நம் கார்டுகளின் தகவல்களை பிரதி எடுத்து கொண்டு, பின்னர் உபயோகிக்க முடியும். நாம் செய்யாத செலவுக்கு பின்னால் பணம் கட்ட வேண்டி வரும்.  இதுவும் ஓர் வகை நூதன சைபர் வகை திருட்டு தான்.

வைரஸ் பரப்புதல் (Malicious Software): இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒரு கணினிக்கோ / கணினி குழுமதிற்கோ தீங்கு செய்யும் வைரஸ்களை/ மென்பொருளை அனுப்பி அவர்களின் மொத்த தகவல்களையும் அழிப்பதே இதன் வேலை. வைரஸ்களை ட்ரோஜன், வோர்ம் என்று பலவாறு பிரித்து சொல்வார்கள்.   

இது போன்ற குற்றங்களை தடுக்க நாம் சற்று விழிப்புடன் செயல்பட வேண்டும். இதோ எனக்கு தெரிந்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பகிர்ந்துள்ளேன்.

1.) சமூக வலைதளங்களிலும், சாட் (Chat room ) ரூம்களிலும் முன்பின் தெரியாதவரிடம் நட்பு பரிமாறி கொள்வதோ அல்லது சொந்த விஷயங்களை பரிமாறி கொள்வதோ கூடாது.

2.) வங்கி கணக்கின் தகவல்களை (பாஸ்வோர்ட், பின் நம்பர் ) கண்டிப்பாக வெளி நபருடன் பகிர கூடாது.

3.) கிரெடிட்/ டெபிட் கார்டுகளின் பின் நம்பர்களை அந்த அட்டையிலேயே எழுத கூடாது.

4.) இ-மெயிலில் வங்கி கணக்கின் முக்கிய தகவகல்ளை (பாஸ்வோர்ட், பின் நம்பர், செக்குரிட்டி கேள்வி ) தர கூடாது.

5.) உங்களுக்கு 50 ஆயிரம் கோடி பரிசு என்று மெயில் வந்தால் உடனே பல்லிலித்து கொண்டு, வங்கி கணக்குகளை தகவல்களை தர கூடாது.

6.) ஆன்லைன் பாங்கிங் போது , பண பரிவர்த்தனை முடிந்தவுடன் உடனே லாக் அவுட் செய்து விட வேண்டும்.

7.) பாங்கிங் பாஸ்வோர்ட்/ பின் நம்பர் முதலியவற்றை எல்லோரும் ஊகிக்கும் படியாக வைத்தல் கூடாது (0000,1111,1234, password123, asdf123...) .

இவ்வகை குற்றங்களை எளிதில் அழிக்க முடியாது. பெருகி வரும் தொழில்நுட்பம், விஞ்ஞானம், மக்களின் தேவை போன்றவற்றின் காரணமாக சைபர் குற்றங்கள் நடந்து வருகின்றன. மேற்கண்டவை எல்லாம் வெறும் முன்னெச்சரிக்கை மட்டுமே. எப்போதும் கவனமாக இருத்தல் நமக்கு பலமே.

மேலும் தகவலுக்கு http://cybercrimeindia.org


சைபர் கிரைம் தொலைப்பேசி எண்கள் :

Address: (Chennai )
Asst. Commissioner of Police,
Cyber Crime Cell,
Vepery,
Chennai-600 007.
Phone: 04423452348 / 04423452350
E-mail id: cybercrimechn@yahoo.com

Address: (For Rest of Tamil Nadu)
A-Wing, III rd Floor,
Rajaji Bhawan, Besant Nagar,
Chennai-600090
Phone: 044-24461959/ 24468889 /24463888
E-mail id: hobeochn@cbi.gov.inநன்றி !!!

-பி .விமல் ராஜ்