திங்கள், 21 ஏப்ரல், 2014

வாங்க ஓட்டு போடுவோம் !

வணக்கம்,

தேர்தல் வந்தாச்சு. ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி எல்லோரும் பேசி கொண்டிருப்பது இந்த வாரம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை பற்றி தான். புதிதாய் ஓட்டு போட தயாராகும் கல்லூரி இளைஞன் /இளைஞிகள், அரசு அலுவலகங்கள், கார்ப்பரேட்  நிறுவனங்கள், தெருவோர பெட்டிக்கடைகள் என எல்லா இடங்களிலும் அரசியல் பேசும் நேரம் இது.

மத்தியில் இருபெரும் கட்சிகள் மோதுகின்றன. மாநிலத்தில் கூட்டணி கட்சியினரோடு சேர்ந்து கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக பிரச்சாரத்திலும், போட்டியிலும் அனல் பறக்கிறது. இரண்டு பெரும் கட்சிகள் இத்தேர்தலில் மோதும் போது, உடைபடுவது எதோ மக்களின்  மண்டையாக தான் இருக்கிறது. ஆளாளுக்கு பிரச்சார விளம்பரங்களையும், வாக்குறுதிகளையும் அள்ளி வீசி கொண்டு இருக்கின்றனர். நமக்கு தான் எதை கேட்பது என்று தெரியவில்லை.

இப்போது நடப்பது நாடாளுமன்ற தேர்தலா? அல்லது மாநிலங்களவை தேர்தலா? என்றே புரியவில்லை. நடக்கிற கூத்தை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. மாநிலத்தில் உள்ள எல்லா கட்சிகளுமே ஒரே மாதிரி நம்மை குழப்புகிறார்கள்.

vote for better India

"ஏமாந்தது போதும்! இம்முறை எங்களுக்கே வாக்களியுங்கள்  எங்ககளை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால், தடையில்லா மின்சாரம் தருவோம், விலைவாசியை குறைப்போம்; வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் ! .....செய்வீர்களா???? நீங்கள் செய்வீர்களா???? " என்று நம்மையே கேள்வி கேட்கிறார்கள். நாம் தானே சொன்னதை செய்வீர்களா? என்று கேட்க வேண்டும். எனக்கு புரியவில்லை.

மற்றொருவரோ, "அவர்கள் சொன்னதை இதுவரை செய்யவில்லை; நாங்கள் மறக்கவில்லை... அதை நீங்கள் மறப்பீர்களா??? மறப்பீர்களா??? " என்று அவர்களை நல்லவர்கள் போல காட்டி கொள்கிறார்கள். அவர்கள் குடும்ப பிரச்சனைகளை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை அறியாதவர் போலும்!

இன்னொருவர், "தெரிஞ்சிகோங்க மக்களே!!! இரண்டு கட்சிகளும் சரியில்லை; ஒரே ஊழல்; அராஜகம்; நம்மால நிம்மதியா இருக்க முடியல...ஏய் ! கொடியை கீழே இறக்குடா...  மறைக்குதுல்ல....எங்க விட்டேன்?... ஆங்...இந்த ஒரு முறை வாய்ப்பு கொடுங்க.. புரிஞ்கோங்க மக்களே!!!" என்று அவருக்கும் புரியாமல், நமக்கும் புரியாமல் பேசுகிறார் உளறுகிறார்.

தேர்தல் விளம்பரத்தில் இவர்களின் சொத்து பட்டியலை மாறி மாறி காட்டி, போட்டு கொடுத்து கொள்கிறார்கள். இதையெல்லாம் ஏன் சி.பி.ஐக்கும், வருமான வரி துறையினருக்கும், முன்னமே தெரியவில்லை என்றுதான் நம் மக்களின் பெரிய சந்தேகமாக இருக்கிறது.

நடக்கவிருப்பது நாடாளுமன்ற தேர்தல். எங்களை வெற்றி பெற செய்தால், எங்கள் வேட்பாளர் உங்களுடைய தொகுதிக்காக பாராளுமன்றத்தில் போய் பேசுவார் என்று சொல்லி ஓட்டு கேட்டால் சரி.  அதை விட்டுவிட்டு, மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் ! விலைவாசியை குறைப்போம்; மின்சாரம் தருவோம் என மாநிலங்களவை தேர்தல் போல பிரச்சாரம் செய்கிறார்கள். விதம் விதமாக நம் காதில் பூ சுற்றுகிறார்கள்.

தேசிய கட்சிகளும் சாதாரணமாக விடவில்லை. நாங்கள் செய்த பத்தாண்டு சாதனைகளை தொடர வழி செய்யுங்கள் என்று வாய் கூசாமல் புளுகுகிறார்கள். மற்றொருவரோ, அவரின் சாதனையை பட்டியல் போடவே நேரம் இல்லாமல் இருக்கிறார். அந்த சாதனை பட்டியலில் சில வேதனை பட்டியல்கள் மறைந்து விடுகிறது. ஆனால், இவரை தான் இந்தியாவின் எதிர்கால ஒளி விளக்கு, வழிகாட்டி என்று எல்லோரும் நம்புகிறார்கள். ஹ்ம்ம்....நம்பி தானே ஆகணும்... வேற வழி ?

அற வழியில் ஊழலை எதிர்கிறேன் என்று கட்சி ஆரம்பித்தவர்; முதல் அடியை சரியாக எடுத்து வைத்து விட்டார். ஆனால், அதன் பின் சரியாக அடியேடுத்து வைப்பாரா என குழப்புகிறார். இரும்பெரும் கட்சிகளை தாக்கு பிடிப்பாரா என்றும் தெரியவில்லை.

மக்கள் யாரும் யோசிக்கவே மாட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள். யாரும் செய்திதாள்கள் படிப்பதில்லை; செய்திகள் கேட்பதில்லை என்று அரசியல்வாதிகளின் நினைப்பு. ஆனால் அதுவும் கிட்டதிட்ட உண்மைதான். ஆம். நம் பாரத தேசத்திற்கென்றே பொதுவான வியாதி ஒன்றுள்ளது.

மறதி- நம் நாட்டின் தேசிய வியாதி. இந்த வியாதி இருக்கும் வரை நம்மால் எந்த ஒரு நல்ல தெளிவான முடிவையும் (ஆட்சியையும்) எடுக்க முடியாது. நம் மக்கள், போன ஆட்சியில் நடந்ததை இந்த ஆட்சியில் மறந்து விடுவார்கள்; இந்த ஆட்சியில் நடப்பதை அடுத்த ஆட்சியில் மறந்து விடுவார்கள். யார் அப்போதைக்கு நல்லது செய்கின்றார்கள் என்று மட்டுமே சிலர் பார்கின்றனர்.

எந்த தேர்தலானாலும், சாதியையும் , மதத்தையும் மட்டுமே வைத்து ஓட்டு போடுபவர்களும், பணம் வாங்கி கொண்டு ஓட்டை விற்பவர்களும் இருக்கும் வரை நாம் தகுதியான அரசை எதிர்பார்க்க முடியாது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு வீட்டில் இருந்தபடியே ஓட்டு போடாமல் இருக்கும் சில சோம்பேறிகளும் திருந்த வேண்டும். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில், வெறும் 58% வாக்குகள் தான் பதிவாகி இருந்தது என புள்ளிவிவரம் கூறுகிறது (தவறாக இருப்பின் திருத்தலாம்). பாரதத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க, ஆள் காட்டி விரலை கூட தூக்க முடியாத ஜென்மங்கள் அரசியலை பற்றியோ, நாட்டை பற்றியோ குறை கூற தகுதியிள்ளாதவர்கள்.

யாருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள், ஓட்டு எந்திரத்தில் கடைசி பொத்தானை அழுத்தி யாருக்கும் என் வாக்கு இல்லை (NOTA - None Of The Above) என்று பதியலாம்.    

ஒவ்வொரு ஓட்டும், ஒவ்வொரு குடிமகனின் கடமை, தன்மானம், பொறுப்பு, எல்லாமே. இதை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். நம்முடைய இந்த நிலையெல்லாம் மாறி, எப்போது தகுதியான வேட்பாளரை ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தேடுகின்றோமோ, அன்று தான் ஓரு சிறந்த தலைமை மத்தியிலும், மாநிலத்திலும் அமையும்; புதிய பாரதமும் உருவாகும்.

வாருங்கள் ! தகுதியான வாக்காளர்களை தேர்ந்தெடுப்போம்; நம் கடமையை செவ்வனே செய்வோம் ! வாழ்க பாரதம் !


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

3 Comments:

Unknown சொன்னது…

ஜெயிக்கிற பக்கமே சாய்வோம் என்று நினைக்காமல் ,துட்டுக்கு விசுவாசமாய் வோட்டு போடாமல் இருந்தாலே போதும் ,நல்ல மாற்றம் வரும் !

விமல் ராஜ் சொன்னது…

சரியாக சொன்னீர்கள், பகவான்ஜி !
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி !

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்

சாதனை என்றவா் தந்தவை, நீங்காத
வேதனை என்றே விளம்பு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு