ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தீர்ப்புகள் திருத்தபடலாம் - இன்று இவர் !!! நாளை ???

வணக்கம்,

நேற்று காலை பத்து மணிக்கு மெதுவாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஆரம்பித்த அறப்போராட்டங்கள், மதியத்தை தாண்டும் போது உச்சத்தை தொட்டது. பொதுமக்கள் பலரும் சரியான நேரத்தில் வீடு போய் சேர முடியவில்லை. வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை செய்பவர்களும், படிப்பவர்களும், அவர்களது குடும்பத்தினருக்கு ஒருவரை ஒருவர் போன் செய்து நிலைமையை விசாரித்து கொண்டனர். சிலர் வீட்டுக்கு கூட போகமுடியாமல், அருகில் உள்ள தெரிந்தவர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இப்போது  நிலைமை மெல்ல மெல்ல சீராகி கொண்டிருக்கிறது.

நேற்று நடந்த சம்பவம் ஒன்றும் புதிதல்ல. இதே போல் முன்னொரு முறையும் நடந்துள்ளது. அப்போது இதை விட பயங்கரமான கலவரங்களும், பேருந்து எரிப்புகளும் நடந்துள்ளது. பல சமயங்களில் இவ்வாறு பொது சொத்துகள் எரிந்து எலும்பு கூடாய் ஆனதை,  நாமும் கண் கூடாய் பார்த்துள்ளோம். அரசியல் பெரும் புள்ளிகள் கைதின் போது, இம்மாதிரி கடையடைப்பு, பொது சொத்து சேதம் செய்வது போன்ற சம்பவங்கள் நடப்பது நமக்கு சாதாரணமான செய்தி தான்.


சில வருடங்களுக்கு முன், ஆயிரக்கணக்கில் பட்டு புடவைகளும், கிலோ கணக்கில் தங்க வைரமும்,  ஆயிரக்கணக்காண ஏக்கரில் நிலமும்  ஊழலில் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். மலைகளை வளைத்து போட்ட வழக்கில் சிறைக்கு சென்று சில நாட்களில் குற்றமற்றவர் என்று வெளியே வந்தார். ஆனால் மீண்டும் அவர்களுக்கு வாய்பளித்து  இருமுறை அவர்களையே ஆட்சியை பிடிக்க வைத்துள்ளோம்.

இன்னொரு பக்கம், லட்சம் கோடிகளில் ஊழலும், பல நூறு கோடி கணக்கில் நில கொள்ளையும், மொத்த குடும்பத்துக்கும் அரசியலில் பதவி, அதிகாரம், வன்முறை என பல விஷயங்களை ஊடகம் மூலம் கேள்விபட்டிருந்தாலும், அவர்களையும் நாம் ஐந்து முறை தேர்ந்தெடுத்துள்ளோம். இதே போல அரசியல் புள்ளிகள் பலரும் செய்யாத தப்புக்கு சிறை சென்று வந்து அரியணையில் ஏறியுள்ளனர்.

"ஒவ்வொரு முறையும் யாரும் நம்மை ஏமாற்றவில்லை; நாம் தான் ஏமாளியாக இருந்து வருகிறோம். இங்கு இரு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியமைக்கிறது " என சிலர் புரட்சியாக பேசுவதுண்டு. உண்மையை சொல்லுங்கள் இந்த இரண்டு கட்சிகளை விட்டால் நாம் என்ன தெலுங்கு தேசத்திற்கா ஓட்டை போட முடியும் ???

மற்ற கூட்டணி கட்சிகளெல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்றும் சொல்ல முடியவில்லை. அரியணையில் ஏறாததால், அவர்களின் சாயம் இன்னும் வெளுக்கவில்லை. சாதி / மத போர்வையில் உள்ள கட்சிகளை பற்றி பேசவே தேவையில்லை.
 
தேர்தல் நேரத்தில் யார் நல்ல (நமக்கு தேவையானவற்றை ) வாக்குறுதிகளை தருகிறார்களோ, அவர்களை தான் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கிறோம். கண்டிப்பாக சொல்கிறேன். நேற்று நடந்த (அற) போராட்டங்கள் எல்லாவற்றையும் நாம் மறந்து போய்,  தீர்ப்புகள் திருத்தி  எழுதப்பட்டு, அடுத்தடுத்த தேர்தல்களில் மீண்டும் இவர்களையே நாம் தேர்ந்தெடுப்போம். அது தான் நம் நாட்டின் விதி !

இந்த விதியினை மற்ற யாரவது வருவார்களா என்று ஏங்கி காத்து கொண்டிருக்கும் பல்லாயிரகணக்கான மக்களில் நானும் ஒருவன்.நன்றி !!!

-பி .விமல் ராஜ்

4 Comments:

Unknown சொன்னது…

அறப்போராட்டம் ?????

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி !!!
ஆமாம் கரிகாலன் ..அப்படிதானே . தொலைக்கட்சிகளில் சொல்கிறார்கள்..

ப.கந்தசாமி சொன்னது…

நாட்டுக்குள் காட்டு ஆட்சி வந்துவிட்டது. அது திரும்பாது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

இதுதான் நாம் என்பதை சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.