புதன், 17 ஜூன், 2015

காப்பியடிக்கப்பட்ட கதை !

வணக்கம்,

தமிழ் திரையுலகில் பெரும் பிரச்சனையாக பேசப்படுவதில் ஒன்று, கதை திருட்டு. இதை பற்றி அடிக்கடி நாம் வலையுலகத்திலும், செய்திகளிலும் கேள்விப்பட்டு வருகிறோம். சமீபமாக மட்டுமல்ல, பல வருடங்களாக இந்த பிரச்சனை ஓயாமல் தொடர்ந்து கொண்டே வருகிறது.

படம் எடுக்கும் போதோ அல்லது முடியும் தருவாயிலோ, "இது என்னுடைய கதை", என்று சிலர் ஆர்பாட்டம் செய்து வெளிவரும் படத்தை தடுத்து நிறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு போடுவார்கள். சிலர் தயாரிப்பாளரிடம் பணம் பறிக்கவும், இந்த உத்தியை பயன்படுத்துகின்றனர் என்று சொல்லுகின்றனர்.  ஊடகங்களும், சமூக வலைதளங்களும், இவையெல்லாம் பெரும்பாலும் படத்தை ஓட்ட படக்குழுவினரின் விளம்பர உத்தியே என்று சாடுகின்றனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, படம் வெளிவந்து முதல் நாள் முதல் காட்சி முடிவதுக்குள்ளேயே, இப்படம் "சின்கியா மின்கியா " என்ற கொரிய படத்தின் தழுவல் அல்லது அப்பட்ட காப்பி என்று சொல்லி இயக்குனரின் முகச்சாயலை டர்ரென்று கிழித்து விடுகின்றனர் நமது வலை மன்னர்கள்.

சில படங்கள் வெளியிடுவதற்கு முன்பே, இது ஒரு ரீமேக் என்று சொல்லிவிடுவார்கள். மீதம் உள்ள படங்கள் பெரும்பாலும் மற்ற மொழி படங்களின் தழுவல் தான். படத்தின் முதல் போஸ்டர் லுக், ட்ரைலர் வெளியிட்ட சில மணி நேரங்களில் இது எந்த மொழி படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று சொல்லிவிடுகின்றனர்.


ஒரு கதை காப்பியடிக்க படுவதுக்கும், தழுவலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நாவலையோ அல்லது வேறு மொழி படத்தையோ அப்படியே காட்சிக்கு காட்சி அதிலிருந்து திருடி, திரைக்கதை மாறாமல் அப்படியே எடுப்பது தான் காப்பி. இதுவே மற்ற மொழி படங்களிருந்து ஒரு சில காட்சிகளையோ அல்லது கதையின் கருவை மட்டுமே ஒரு தூண்டுகோலாக வைத்து கொண்டு, ரசிகர்களுக்கு ஏற்றவாறு படம் கொடுப்பது தழுவல்.

ஒரிரு காட்சியை வேறு ஒரு மொழி படத்திலிருந்து சுடுவதினால், யாருக்கும் எந்த ஒரு கஷ்டமோ, நஷ்டமோ ஏற்பட போவதில்லை.  ஒரு கொரிய அல்லது ஆங்கில மொழி படத்திலிருந்து ஒரு வங்கி கொள்ளை காட்சியோ, சண்டை காட்சியோ எடுத்து  நம் தமிழ் படங்களில் சேர்க்கபடுவதினால், அந்த வேற்று மொழி பட தயாரிப்பாளருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் வந்து சண்டை போட போவதும் இல்லை. நம் ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையை மாற்றி, திரையில் விருந்து படைக்கும் போது ஏன் பலரும் இது காப்பியடிக்கபட்டது என்று சொல்கிறனர் என்று புரியவில்லை.

கஜினி, அவ்வை சண்முகி, அருணாச்சலம், வெற்றி விழா போன்ற படங்கள் ஆங்கில படங்களின் கதை கருவை மட்டுமே கொண்டு தமிழில் வெற்றி நடைபோட்டவை. ஆனால் இது போன்ற படங்களை  'காப்பியடிக்கபட்ட படங்கள் ' என்று சொல்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை.


கதையை அப்படியே வரிக்கு வரி காப்பியடித்து படத்தில் காட்டுவது தான் தவறு. இது போன்ற அறிவு (கதை) திருட்டுக்கள் தான் திரையுலகில் நடந்தேறி வருகிறது. இன்னொரு புறம் யோசிக்கும் போது, இது போன்ற காப்பியடிக்கப்படும் படங்களில், ஒரிஜினல் கதாசிரியர் பெயரை போட்டு நன்றி தெரிவித்து கொண்டால், அதில் பெரும் தவறு இருப்பதில்லை. ஆனால் அப்படி செய்ய யாரும் உடன்படுவதில்லை.

திரை செய்திகளை தரும் தளங்களிலும், சமூக வலைதளங்களிலும் படம் வெளிவருவதற்குள், இந்த காட்சி இப்படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று போட்டோவுடன்  போட்டு காட்டி விடுவார்கள். மேலும் அந்த இயக்குநரை 'காப்பி மன்னன்' என்று திட்டியும் தீர்ப்பார்கள். இவர்களெல்லாம் ஒரிஜினல் கதையம்சம் கொண்ட படம் வந்தால், அதை வெள்ளி திரையில் மட்டுமே கண்டு ஓட வைப்பது போல, இது போன்ற தழுவல் திரைபடங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

சினிமா என்பது மக்கள் பார்த்து ரசிக்க மட்டுமே. ஒரிஜினல் கதையோ, காப்பியடிக்கப்பட்ட கதையோ எதுவாயினும் நம்மை இரண்டு மணி நேரம் ரசிக்க வைத்தாலே போதும். அதன் ரிஷி மூலம், நதி மூலம் ஆராய தேவையில்லை; அதற்கு அவசியமும் இல்லை என்பது என் கருத்து. உங்கள் எண்ணங்களை தாராளமாக பின்னூட்டத்தில் தெரியபடுத்தலாம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

8 Comments:

அசால்ட் ஆறுமுகம் சொன்னது…

Bourn Identiy வருவதுக்கு முன் வெளிவந்தது வெற்றி விழா. 1987 ல்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த எண்ணத்திற்கே நேரம் செலவழிப்பதில்லை...!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி அசால்ட் ஆறுமுகம் !
வெற்றி விழா வருவதற்கு முன், Bourn Identiy நாவல் வெளிவந்து விட்டது...

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன் !

ம.தி.சுதா சொன்னது…

எனக்கென்னவோ அப்படி செய்தால் அந்தந்த படங்களுக்குரிய பெயரை கௌரவமாக கொடுக்கலாமே.. என்பது தான் என் கருத்து...

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி mathi sutha !!!

jbs சொன்னது…

சினிமா என்பது மக்கள் பார்த்து ரசிக்க மட்டுமே. ஒரிஜினல் கதையோ, காப்பியடிக்கப்பட்ட கதையோ எதுவாயினும் நம்மை இரண்டு மணி நேரம் ரசிக்க வைத்தாலே போதும். அதன் ரிஷி மூலம், நதி மூலம் ஆராய தேவையில்லை; அதற்கு அவசியமும் இல்லை என்பது என் கருத்து. rajamjayabal

Keelakalangal Karan சொன்னது…

நல்ல பதிவு விமலராஜ். என்னுடைய பதிவும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்று போலதான்.