ஞாயிறு, 31 ஜூலை, 2016

பழைய மகாபலிபுரம் சாலையில்!

வணக்கம்,

ஓ.எம்.ஆர் சாலையில் தினசரி காணும் சில நிகழ்வுகளை தான் இங்கு பகிர்ந்துள்ளேன். 

சென்னை சாலைகளில் பயணிப்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. மற்ற ஊரை சேர்ந்தவர்கள், "சென்னை ரோட்ல எப்படி வண்டி ஓட்டுறீங்க?" என பலரும் கேட்பதை பார்த்திருக்கலாம். இங்கு சாலைகளில் வண்டி ஓட்டுவது என்பது கொஞ்சம் ரிஸ்க்கான ஒன்று தான். அதிலும் நான் தினமும் பயணம் செய்யும் ஓ.எம்.ஆர் சாலையை பற்றி சொல்லவே வேண்டாம்.  ஓ.எம்.ஆரை பற்றி ஏதாவது பதியலாம் என எண்ணி, இப்பதிவை எழுதுகிறேன். இச்சாலை அன்று எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது என பார்ப்பவர்கள், வியப்பில் உச்சிக்கு சென்று விடுவார்கள்.

சென்னை மாநகரின் முக்கியமான சாலைகளில் ஒன்று ஓ.எம்.ஆர் (Old Mahabalipuram Road). அடையாறு மத்திய கைலாஷ் முதல் மகாபலிபுரம் வரை அது ஓ.எம்.ஆர் சாலை தான். இதற்கு ஐ.டி காரிடார் (IT Corridor) என்ற பெயரும் உண்டு. சென்னையிலிருந்து மகாபலிபுரம் மார்க்கமாக பாண்டிச்சேரி வரை போக, புறவழி சாலை, ஈ.சி.ஆர் சாலை, ஓ.எம்.ஆர் என இன்று பல சாலைகள் இருக்கிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இந்த (பழைய) மகாபலிபுரம் சாலை மட்டும் தான்.


ஆரம்பம் முதல் கடைசி வரை வெறும் செம்மண் சாலையாகத்தான் இருக்கும். இரு புறமும் சவுக்கு தோப்பும், பனைமரங்களும் தான் நிற்கும்; இரவில் தெருவிளக்கில்லாமல் அதுவும் பயமுறுத்தும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தான் பஸ் வசதி. அதுவும் வந்ததால் தான் உண்டு. சென்னை சிட்டிக்கு வெளியே இருந்த ஒரு சிறுசிறு குக்கிராமங்கள் தான் துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர், பாலவாக்கம் போன்றவையெல்லாம். இன்று பெரிய ஐ .டி கம்பெனிகளின் உறைவிடமாக இருக்கும் நாவலூர் மற்றும் சிறுசேரி, 20 ஆண்டுகளுக்கு முன் வெறும் சவுக்கு தோப்புகளாக தான் இருந்தனவாம். 1970-களில் அங்கே பிளாட் (வீடு) ஆயிரம் ரூபாய் என வாங்கியவர்கள், இன்று சில கோடிகளுக்கு அதிபதிகள். பழைய படங்களில் ஊருக்கு வெளியே பனங்காடு, செம்மண் ரோடு, மணல் மேடு, சவுக்கு தோப்பு என்று வருவதெல்லாம்  இந்த இடங்கள் தான் போலும்! கடல் அருகே இருப்பதால் விவாசாயம் நடந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அப்படி இருந்த இடம் எப்படி மாறிவிட்டது இப்போது?


கூவம் நதி போல வளைந்து நெளிந்த நீளமான டிராஃபிக், அதில் நீந்தி கொண்டு செல்லும் வாகனங்கள், அதை முந்தி கொண்டு வேகமாக செல்லும் கம்பெனி பேருந்துகள், சீறி கொண்டு போகும் ரேஸர் பைக்குகள், வேதாளத்தை முதுகில் சுமந்து கொண்டு போகும் விக்ரமாதித்யனை போல பைக்கில் போகும் இளம் ஜோடிகள், சைடு ஸ்டாண்ட் போட்டுக்கொண்டே போகும் ஓவர்லோடான அரசு பேருந்துகள், இஷ்டத்துக்கு நின்று நின்று செல்லும் ஷேர் ஆட்டோக்கள்/வேன்கள், 'என் பாட்டன் போட்ட ரோடு இது' என குறுக்கே கடக்கும் சில ஐந்து அறிவு/பல ஆறறிவு ஜந்துக்கள், இக்கால வழிப்பறி கொள்ளையான டோல் கேட்கள், அசம்பாவி்தமாய் சில பெரிய, சிறிய விபத்துக்கள், டிசைன் டிசைனாக கண்ணாடியில் கட்டப்பட்டுள்ள ஐ.டி கம்பெனிகள் என சொல்லி கொண்டே போகலாம்...

சில நேரங்களில் ஓ.எம்.ஆர் டிராஃபிக்கில் 5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க குறைந்தது 1 மணி நேரமாவது ஆகும். அதுவும் வெள்ளிகிழமை மாலை என்றால் சொல்லவே தேவையில்லை. காலை நேரங்களில் அலுவலகம் செல்வோர் பலரும் அக்கம் பக்கம் பாராமல் வண்டியை விருட்டென ஓட்டி கொண்டு செல்வார்கள். சிக்னல் என ஒன்று இருந்தலும், போலீஸ் இல்லாவிடில் யாரும் அதை மதிப்பதில்லை. ரேஸர் பைக் வைத்திருக்கும் கனவான்கள் வீலிங் செய்து கொண்டே சீறி பாய்வதை பல நேரங்களில் பார்க்கலாம். சிக்னல் போட்டபின் கியர் போடுவதற்குள் நம்மை ஓவர்டேக் செய்து கண் இமைக்கும் நேரத்தில் கண் காணா தூரத்தில் போய்விடுவார்கள். இந்த அதி வேக பயணம் பல நேரங்களில் அவர்களுக்கோ அல்லது மற்ற ஓட்டுனர்களுக்கோ வினையாய் வந்து முடியும். இம்மாதிரி சீறி வரும் காளைகளை 'போறான் பாரு பொறம்போக்கு' என்று பலரும் பட்டம் கொடுத்துவிட்டு போவார்கள்.


இப்போதுள்ள லேட்டஸ்ட் மாடல் பைக்குகளில் பின் சீட் ஒய்யாரமாக தூக்கி கொண்டு இருக்கிறது. அதில் பின்னல் உட்கார்ந்து பயணம் செய்யும் பலரும் உப்புமூட்டை தூக்கி கொண்டு போவது போலத்தான் இருக்கும். சிலர் நவீன ஜோடிகள் இவ்வாறு பயணம் செய்யும் போது எல்லார் கண்ணும் அவர்கள் மேல்தான் விழும். சில சமயங்களில் சில பல 'ஃபிரீ ஷோ' க்களையும் நாம் பார்க்க முடியும்.

அடுத்து அரசு பேருந்து. சொல்லவே வேண்டாம். நடிகர் விவேக் படத்தில் சொல்லியது போல, பீக் ஹவரில் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல், ஸ்டாப்பிலிருந்து பத்து அடி தள்ளி தான் நிற்கும். காலை மாலை இருவேளையும் நிரம்பி வழியும். நாலு ஸ்டாப் ஏறி இறக்குவதற்குள் கசக்கி பிழிந்து விடுவார்கள். நமக்கே கடுப்பாக இருக்கும் போது இதில் பெண்களின் நிலை கொஞ்சம் கவலைக்கிடம் தான். காசுள்ளர்வர்களுக்கு ஏ.சி.பஸ் உண்டு. ஷேர் ஆட்டோவும், வேன்களும் இவர்களுக்கு ஓ .எம்.ஆர் பயணங்களை ஈசியாக்குகின்றன.

ரோட்டில் குறுக்கே வரும் கால்நடைகளை நாம் திட்ட முடியாது. திட்டியும் பயனில்லை. அதை அங்கே மேயவிட்டு எங்கோ பராக்கு பார்த்து கொண்டிருக்கும் அந்த மாட்டுக்காரர்களை தான் உதைக்க வேண்டும்.
இதையெல்லாம் விட சில மக்களும், மாக்களை போல ரோட்டை கடக்க அங்கும் இங்கும் ஓடுவார்கள். 60 கி.மீ. வேகத்தில் வரும் வண்டி, இவர்கள் குறுக்கே பாய்வதை பார்த்து, சடன் பிரேக் அடித்து தட்டு தடுமாறி சறுக்கி விபத்துக்குள்ளாகும் இடங்கள் பல. இது போன்ற பல விபத்துக்கான காரணங்களை நாம் தினமும் ஓ.எம்.ஆரில் பார்க்கலாம்.        

இதை தவிர வேறு சில விஷயங்களும் ஓ .எம்.ஆரில் இருக்கிறது. பல ஐ.டி. கம்பெனிகள் இருப்பதால் பலதரப்பட்ட மக்களை அங்கே நாம் தினமும் பார்க்க முடியும். சோழிங்கநல்லூர் தாண்டியது முதல் கேளம்பாக்கம் வரை பல ஹாஸ்டல்களும், பேயிங் கெஸ்ட் ஹவுஸ்களும் உண்டு. அவரர் வசதிக்கேற்ப பேச்சுலர் வீடுகளும், மேன்ஷன்கள் இருக்கிறது.  இவர்கள் எல்லாம் சாப்பிட ஓட்டல் இருக்கிறதா? என கேட்காதீர்கள். ஓ .எம்.ஆரில் தடுக்கி விழுந்தால் ஓட்டல், மெஸ், ரெஸ்ட்டாரண்ட் தான். தமிழ் நாடு, ஆந்திரா, வட இந்தியா, சைனீஸ் என பல வகையான உணவுகளும், உணவகங்களும் இங்கு உண்டு. அதை பற்றி விரிவாக வேறொரு பதிவில் எழுதுகிறேன்.

இதற்கு மேல் என்ன சொல்ல என்ன தெரியவில்லை. இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது. உங்களுக்கு வேறு ஏதாவது தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் பகிரலாம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

6 Comments:

Unknown சொன்னது…

60 வயதில் 30-40 கிமீ வேகத்தில் செல்லும் பெரியவர்கள், கிரீன் சிக்னல் விழுந்தது கூட தெரியாமல் காருக்குல் தூங்கும் night shift டிரைவர்கள் குறிப்பாக டைடல் பார்க் சிக்னலை கடக்க இயலாத பாதசாரிகள்

Krishna's Journey சொன்னது…

Your Tamil (Tamizh) writing is too good Vimal...வேதாளத்தை முதுகில் சுமந்து கொண்டு போகும் விக்ரமாதித்யனை போல பைக்கில் போகும் இளம் ஜோடிகள் nice imagination :)

Keep writing your posts are absorbing!

விமல் ராஜ் சொன்னது…

@Krishna Journey & Mathan Yesu:
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!!

Umamaheswari சொன்னது…

வாழ்த்துக்கள்..

Keep up the good work !!!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும் கருத்தும் மிக்க நன்றி உமா !

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.