வெள்ளி, 29 ஏப்ரல், 2016

வலிமைமிகு இந்திய ராணுவம் !

வணக்கம், 

வளரும் நாடான நமது இந்தியா, எவ்வளவு சக்தி வாய்ந்தது என நம்மில் பலருக்கு தெரியவில்லை. இந்திய ராணுவத்தின் பலம் பற்றி இணையத்தில் படித்ததை இங்கு பகிர்ந்துள்ளேன்.

1.) உலகில் மூன்றாம் பெரிய ராணுவம், இந்திய ராணுவம் தான் (அமெரிக்கா, சீனாவை அடுத்து).

2.)  உலகின் மிக உயரமான போர்க்களமான (Siachen) சியாச்சின் (கடல் மட்டத்திலிருந்து  5000 மீட்டர் மேல் ) இமாலய பகுதியில், இந்திய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.

3.) உலகின் மிக பெரிய தன்னார்வ ராணுவ காலாட்படை இந்தியாவில் உள்ளது.

4.) இந்திய ராணுவம் உயரமான மலைப்பகுதிகளிலும், பனிபிரதேசங்களிலும் போர்புரிந்து மிக சிறந்த போர் வீரர்களாக திகழ்கின்றனர்.

5.) இந்திய ராணுவம் 1970 களிலும், 1997 களிலும் அணு ஆயுத சோதனையை உலக நாடுகளுக்கு தெரியாமல் சாமர்த்தியமாக செய்துள்ளது. அமெரிக்க சி.ஐ.எ க்கு தெரியாமல் சோதனை நடத்தியது அவர்களுக்கு பெரும் இழுக்கு.

6.) இந்திய அரசின் மற்ற நிறுவனங்கள், அரசு துறைகளை போல இந்திய ராணுவத்தில் சாதி/மத/மற்ற இட ஒதுக்கீடுகள் எதுவும் கிடையாது.

7.) 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த லோங்வாலா போரில் (Battle of Longewala), வெறும் இரு ராணுவ வீரர்கள் மட்டுமே வீரமரணம் அடைந்தனர். ஒரே ஒரு டாங்கர் மட்டுமே வீழ்த்தபட்டது.

8.) ஆசியாவிலேயே மிக பெரிய கடற்படை கேரளாவில் உள்ள எழிமலா கடற்படை.

9.) உலகின்  மிக பெரிய குதிரை படை இந்திய ராணுவத்தில் உள்ளது.

10.) இந்தியாவை தவிர தஜகஸ்தானிலும், பூட்டானிலும் இந்திய ராணுவ தளம் அமைக்கப்பட்டுள்ளது.


indian-army-facts

11.) 1982-ல் இந்திய ராணுவம் உலகின் உயரமான இடத்தில உள்ள பெய்லி பாலத்தை (Bailey bridge), இமாலயத்தில் டிரஸ் மற்றும் சுரு நதிகளுக்கிடையே கட்டியுள்ளனர்.

12.) 1971-ல்  பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உட்பட 93,000 வீரர்கள், இந்திய ராணுவத்திடம் சரணடைந்து போரை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

13.) 2013-ல் நடந்த ஆபரேஷன் ரகாத் Operation Rahat (உத்தர்கண்ட் வெள்ளம்), உலகத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய பொதுமக்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும். கிட்டத்தட்ட 1,000,000 மக்கள் 12 நாட்களில் வெளியேற்றப்பட்டனர்

14.) 1990-ல் ஈராக் (சதாம் ஹுசேன் ) குவைத்தை ஆக்கிரமித்த போது, இந்திய வான் படை 1,70,000 இந்தியர்களை வெளியேற்றி கொண்டு வந்தது.

15.) இந்தியா-ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உருவாக்க பட்ட பிரம்மோஸ் (Brahmos) ஏவுகணை உலகின் அதி சக்தி வாய்ந்த, வேகமான ஏவுகணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

16.) அக்னி-V (Agni-V ) மற்றும் பிரித்வி (Prithivi)அதி துல்லியமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைளாக இருக்கிறது.

17.) ராணுவத்தின் உயரிய விருதான பரம் வீர் சக்ரா, இது வரை 21 முறை மட்டுமே வழங்கபட்டுள்ளது. அதிலும் பெரும்பாலும் இறந்த பின்னர்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

18.) நாடு முழுவதும் 53 கண்டோன்மெண்டுகளும்,  9 இராணுவத் தளங்களையும் நமது இந்திய ராணுவம் கொண்டுள்ளது.

தகவல்: scoopwhoop, quora, mensxp



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 16 ஏப்ரல், 2016

படித்த முட்டாள்கள்!

வணக்கம்,

சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு.

நாம் அன்றாட (காலைக்) கடனை முடித்துவிட்டு, துடைத்து கொள்ளும் பழக்கம் இந்தியன் ஸ்டைல் கக்கூஸ் டாய்லெட்டில் இல்லை தான் என்றாலும், இப்போதைய நவீன வாழ்வில் இயல்பான ஒன்றாய் மாறி கொண்டிருக்கிறது.

மதிய வேளையில் ரெஸ்ட் ரூமில் இருந்த urinal யாவும் ரிப்பேர் / கிளீனிங்கில் இருக்கவே, உள்ளே சென்றேன். உள்ள இருந்த பேசினில் டாய்லெட் பேப்பர்கள் கசக்கி போடப்பட்டு ∴ப்ளஷ் செய்த தண்ணீர் வெளியேற முடியாமல் அந்த பேசினை அடைத்து கொண்டிருந்தன. அன்று மட்டுமல்ல. கடந்த இரு வாரங்களில் இதை  நான்காம் முறை பார்க்கிறேன். போன முறை ஹவுஸ் கீப்பிங் அலுவலர் ஒருவர் ஒரு கை கொள்ளாத அளவு டாய்லெட் பேப்பர்களை எடுத்து சென்றார். நான் அவரை பார்ப்பதை அவர் பார்த்துவிட்டு, "தினமும் இப்படி தான் சார் எடுத்து போடறேன்.." என்று வலியுடன் சொன்னார்.

கழிவறை சுத்தம் செய்வது அவர்கள் வேலை தான். ஆனால், பேசினில் கைவிட்டு நாம் துடைத்து கசக்கி எறிந்த பேப்பர்களை எடுக்க வேண்டும் என்ற தலையெழுத்தா அவர்களுக்கு? பின்னர் அதே கைகளில் தான் அவர்கள் சாப்பாடும் சாப்பிட வேண்டும்.. ச்சே... என்ன ஒரு கொடுமை..

dont garbage toilet basins

இது ஏதோ படிப்பறிவில்லாத மக்கள் 'இருக்கும்' இடம் என்றாலும் பரவாயில்லை என சொல்லி சொல்லலாம். இது மெத்த படித்த ஐ.டி பணியாளர்கள் 'இருக்கும்' கார்ப்பரேட் அலுவலகம். நீங்கள் யாராவது கழுவும் கையில் சாப்பிடுவீர்களா? யோசியுங்கள். பிறகு ஏன் சிலர் ரெஸ்ட் ரூமில் உள்ள டாய்லெட் பேசினில், துடைத்து எறிந்த பேப்பர்களை உள்ளே போடுகின்றனர் எனத் தெரியவில்லை. துடைத்து விட்டு அருகில் உள்ள குப்பை தொட்டியில் போடாமல் (அலுப்பு போல !), உட்கார்ந்திருக்கும் பேசினில் போடும் அறிவிலிகளுக்கு என்ன வார்த்தை சொல்லித் திட்ட ?

அலுவலகத்தில் சேரும் போது, நிர்வாக மேலாளர் இதை பற்றி சொன்னார். நானும், "என்னடா இது பாத்ரூம் போனா தண்ணி ஊத்துன்னு.. குப்பையில போடுன்னு .." சொல்கிறார்களே என நினைத்தேன். ஆனால் இந்த கொடுமையெல்லாம் பார்க்கும் போது தான் அவர்கள் சொல்வது சரிதான் என தோன்றுகிறது.

இது கார்ப்பரேட் கம்பெனிகளில் மட்டுமல்ல. சினிமா தியேட்டர்கள், மால்கள், பெரிய ஓட்டல்கள் என பல பொது இடங்களில் இது போன்ற கேவலங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

உச்சா இருந்துட்டு தண்ணி ஊத்து.. கழுவிட்டு பேப்பரை குப்பை தொட்டியில் போடு என சின்ன பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கலாம்... இந்த படித்த முட்டாள்களுக்கு !?!?!!?


நன்றி !!!

-பி .விமல் ராஜ்