ஞாயிறு, 31 ஜூலை, 2016

பழைய மகாபலிபுரம் சாலையில்!

வணக்கம்,

ஓ.எம்.ஆர் சாலையில் தினசரி காணும் சில நிகழ்வுகளை தான் இங்கு பகிர்ந்துள்ளேன். 

சென்னை சாலைகளில் பயணிப்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. மற்ற ஊரை சேர்ந்தவர்கள், "சென்னை ரோட்ல எப்படி வண்டி ஓட்டுறீங்க?" என பலரும் கேட்பதை பார்த்திருக்கலாம். இங்கு சாலைகளில் வண்டி ஓட்டுவது என்பது கொஞ்சம் ரிஸ்க்கான ஒன்று தான். அதிலும் நான் தினமும் பயணம் செய்யும் ஓ.எம்.ஆர் சாலையை பற்றி சொல்லவே வேண்டாம்.  ஓ.எம்.ஆரை பற்றி ஏதாவது பதியலாம் என எண்ணி, இப்பதிவை எழுதுகிறேன். இச்சாலை அன்று எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கிறது என பார்ப்பவர்கள், வியப்பில் உச்சிக்கு சென்று விடுவார்கள்.

சென்னை மாநகரின் முக்கியமான சாலைகளில் ஒன்று ஓ.எம்.ஆர் (Old Mahabalipuram Road). அடையாறு மத்திய கைலாஷ் முதல் மகாபலிபுரம் வரை அது ஓ.எம்.ஆர் சாலை தான். இதற்கு ஐ.டி காரிடார் (IT Corridor) என்ற பெயரும் உண்டு. சென்னையிலிருந்து மகாபலிபுரம் மார்க்கமாக பாண்டிச்சேரி வரை போக, புறவழி சாலை, ஈ.சி.ஆர் சாலை, ஓ.எம்.ஆர் என இன்று பல சாலைகள் இருக்கிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இந்த (பழைய) மகாபலிபுரம் சாலை மட்டும் தான்.


ஆரம்பம் முதல் கடைசி வரை வெறும் செம்மண் சாலையாகத்தான் இருக்கும். இரு புறமும் சவுக்கு தோப்பும், பனைமரங்களும் தான் நிற்கும்; இரவில் தெருவிளக்கில்லாமல் அதுவும் பயமுறுத்தும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தான் பஸ் வசதி. அதுவும் வந்ததால் தான் உண்டு. சென்னை சிட்டிக்கு வெளியே இருந்த ஒரு சிறுசிறு குக்கிராமங்கள் தான் துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர், பாலவாக்கம் போன்றவையெல்லாம். இன்று பெரிய ஐ .டி கம்பெனிகளின் உறைவிடமாக இருக்கும் நாவலூர் மற்றும் சிறுசேரி, 20 ஆண்டுகளுக்கு முன் வெறும் சவுக்கு தோப்புகளாக தான் இருந்தனவாம். 1970-களில் அங்கே பிளாட் (வீடு) ஆயிரம் ரூபாய் என வாங்கியவர்கள், இன்று சில கோடிகளுக்கு அதிபதிகள். பழைய படங்களில் ஊருக்கு வெளியே பனங்காடு, செம்மண் ரோடு, மணல் மேடு, சவுக்கு தோப்பு என்று வருவதெல்லாம்  இந்த இடங்கள் தான் போலும்! கடல் அருகே இருப்பதால் விவாசாயம் நடந்திருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அப்படி இருந்த இடம் எப்படி மாறிவிட்டது இப்போது?


கூவம் நதி போல வளைந்து நெளிந்த நீளமான டிராஃபிக், அதில் நீந்தி கொண்டு செல்லும் வாகனங்கள், அதை முந்தி கொண்டு வேகமாக செல்லும் கம்பெனி பேருந்துகள், சீறி கொண்டு போகும் ரேஸர் பைக்குகள், வேதாளத்தை முதுகில் சுமந்து கொண்டு போகும் விக்ரமாதித்யனை போல பைக்கில் போகும் இளம் ஜோடிகள், சைடு ஸ்டாண்ட் போட்டுக்கொண்டே போகும் ஓவர்லோடான அரசு பேருந்துகள், இஷ்டத்துக்கு நின்று நின்று செல்லும் ஷேர் ஆட்டோக்கள்/வேன்கள், 'என் பாட்டன் போட்ட ரோடு இது' என குறுக்கே கடக்கும் சில ஐந்து அறிவு/பல ஆறறிவு ஜந்துக்கள், இக்கால வழிப்பறி கொள்ளையான டோல் கேட்கள், அசம்பாவி்தமாய் சில பெரிய, சிறிய விபத்துக்கள், டிசைன் டிசைனாக கண்ணாடியில் கட்டப்பட்டுள்ள ஐ.டி கம்பெனிகள் என சொல்லி கொண்டே போகலாம்...

சில நேரங்களில் ஓ.எம்.ஆர் டிராஃபிக்கில் 5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க குறைந்தது 1 மணி நேரமாவது ஆகும். அதுவும் வெள்ளிகிழமை மாலை என்றால் சொல்லவே தேவையில்லை. காலை நேரங்களில் அலுவலகம் செல்வோர் பலரும் அக்கம் பக்கம் பாராமல் வண்டியை விருட்டென ஓட்டி கொண்டு செல்வார்கள். சிக்னல் என ஒன்று இருந்தலும், போலீஸ் இல்லாவிடில் யாரும் அதை மதிப்பதில்லை. ரேஸர் பைக் வைத்திருக்கும் கனவான்கள் வீலிங் செய்து கொண்டே சீறி பாய்வதை பல நேரங்களில் பார்க்கலாம். சிக்னல் போட்டபின் கியர் போடுவதற்குள் நம்மை ஓவர்டேக் செய்து கண் இமைக்கும் நேரத்தில் கண் காணா தூரத்தில் போய்விடுவார்கள். இந்த அதி வேக பயணம் பல நேரங்களில் அவர்களுக்கோ அல்லது மற்ற ஓட்டுனர்களுக்கோ வினையாய் வந்து முடியும். இம்மாதிரி சீறி வரும் காளைகளை 'போறான் பாரு பொறம்போக்கு' என்று பலரும் பட்டம் கொடுத்துவிட்டு போவார்கள்.


இப்போதுள்ள லேட்டஸ்ட் மாடல் பைக்குகளில் பின் சீட் ஒய்யாரமாக தூக்கி கொண்டு இருக்கிறது. அதில் பின்னல் உட்கார்ந்து பயணம் செய்யும் பலரும் உப்புமூட்டை தூக்கி கொண்டு போவது போலத்தான் இருக்கும். சிலர் நவீன ஜோடிகள் இவ்வாறு பயணம் செய்யும் போது எல்லார் கண்ணும் அவர்கள் மேல்தான் விழும். சில சமயங்களில் சில பல 'ஃபிரீ ஷோ' க்களையும் நாம் பார்க்க முடியும்.

அடுத்து அரசு பேருந்து. சொல்லவே வேண்டாம். நடிகர் விவேக் படத்தில் சொல்லியது போல, பீக் ஹவரில் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல், ஸ்டாப்பிலிருந்து பத்து அடி தள்ளி தான் நிற்கும். காலை மாலை இருவேளையும் நிரம்பி வழியும். நாலு ஸ்டாப் ஏறி இறக்குவதற்குள் கசக்கி பிழிந்து விடுவார்கள். நமக்கே கடுப்பாக இருக்கும் போது இதில் பெண்களின் நிலை கொஞ்சம் கவலைக்கிடம் தான். காசுள்ளர்வர்களுக்கு ஏ.சி.பஸ் உண்டு. ஷேர் ஆட்டோவும், வேன்களும் இவர்களுக்கு ஓ .எம்.ஆர் பயணங்களை ஈசியாக்குகின்றன.

ரோட்டில் குறுக்கே வரும் கால்நடைகளை நாம் திட்ட முடியாது. திட்டியும் பயனில்லை. அதை அங்கே மேயவிட்டு எங்கோ பராக்கு பார்த்து கொண்டிருக்கும் அந்த மாட்டுக்காரர்களை தான் உதைக்க வேண்டும்.
இதையெல்லாம் விட சில மக்களும், மாக்களை போல ரோட்டை கடக்க அங்கும் இங்கும் ஓடுவார்கள். 60 கி.மீ. வேகத்தில் வரும் வண்டி, இவர்கள் குறுக்கே பாய்வதை பார்த்து, சடன் பிரேக் அடித்து தட்டு தடுமாறி சறுக்கி விபத்துக்குள்ளாகும் இடங்கள் பல. இது போன்ற பல விபத்துக்கான காரணங்களை நாம் தினமும் ஓ.எம்.ஆரில் பார்க்கலாம்.        

இதை தவிர வேறு சில விஷயங்களும் ஓ .எம்.ஆரில் இருக்கிறது. பல ஐ.டி. கம்பெனிகள் இருப்பதால் பலதரப்பட்ட மக்களை அங்கே நாம் தினமும் பார்க்க முடியும். சோழிங்கநல்லூர் தாண்டியது முதல் கேளம்பாக்கம் வரை பல ஹாஸ்டல்களும், பேயிங் கெஸ்ட் ஹவுஸ்களும் உண்டு. அவரர் வசதிக்கேற்ப பேச்சுலர் வீடுகளும், மேன்ஷன்கள் இருக்கிறது.  இவர்கள் எல்லாம் சாப்பிட ஓட்டல் இருக்கிறதா? என கேட்காதீர்கள். ஓ .எம்.ஆரில் தடுக்கி விழுந்தால் ஓட்டல், மெஸ், ரெஸ்ட்டாரண்ட் தான். தமிழ் நாடு, ஆந்திரா, வட இந்தியா, சைனீஸ் என பல வகையான உணவுகளும், உணவகங்களும் இங்கு உண்டு. அதை பற்றி விரிவாக வேறொரு பதிவில் எழுதுகிறேன்.

இதற்கு மேல் என்ன சொல்ல என்ன தெரியவில்லை. இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது. உங்களுக்கு வேறு ஏதாவது தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் பகிரலாம்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 25 ஜூலை, 2016

கபாலி - விமர்சனம்

வணக்கம்,

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் என்ற செய்தி வந்த உடனையே சற்று மகிழ்ந்தேன். ஏனென்றால் இதுவரை தலைவர் பெரிய இயக்குனர்களுடன் (குழுவுடன்) சேர்ந்து எடுத்த பல படங்கள் ஒரே சாயலில் இருந்ததால், இப்படத்தில் தலைவரை ரஞ்சித் கண்டிப்பாக வித்தியாசமாக, செம மாஸாக காட்டுவார் என ரசிக பெருமக்கள் எல்லோருக்கும் தெரியும். எதிர்பார்த்தபடியே first look போஸ்டர் வந்து அனைவரையும் பேச வைத்தது.

kabali-movie-first-lookposter

பின்னர் மூன்று மாதம் கழித்து மே தினத்தன்று டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வருவதற்கு இருநாள் முன்னரே மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர் நம் வலை மன்னர்கள். கண்டிப்பாக இது எல்லா டீசர் ரெக்கார்டையும் முறியடிக்கும் என சொல்லி வந்தனர். சொல்லி வைத்து அடித்தது போல டீசர் ரிலீசாகி ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் ஹிட்ஸ்,  24 மணி நேரத்தில் 50 லட்சம் ஹிட்ஸ் என இதுவரை 2.5 கோடி ஹிட்ஸ்களையும், 4 லட்சம் லைக்ஸ்களையும் தாண்டி போய் கொண்டிருகிறது. யூ-ட்யூப்பில் பல சாதனைகளை முறியடித்துள்ளது கபாலி டீசர். அடுத்த சில நாட்களில் வெளிவந்த டீசரும் ஹிட்டடிக்க, கபாலி ஜுரம் அனைவரையும் பற்றி கொள்ள ஆரம்பித்தது. எங்கு காணினும் #நெருப்புடா #கபாலிடா என சமுக வலைத்தளங்களில் 'டெக்' செய்து கொண்டாடி வருகின்றனர்.

டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே எல்லா சர்வரும் அம்பேலாகி போனது. சிலர் எப்போதும் போல டிக்கெட் அதிக விலை, ரஜினி என்ன செய்தார் என வழக்கமான கேனத்தனமான கேள்வி கணைகளை கேட்டு கொண்டும் இருக்கிறார்கள்.


படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏர் ஏசியா, முத்தூட் பைனான்ஸ், ஏர்டெல் என பல கார்ப்பரேட் கம்பெனிகள் கபாலி குழுவுடன் கைகோர்த்து கொண்டன. தலைவரின் படத்துக்குண்டான அனைத்து ஹைப்புகளும் ஒன்றுசேர நடந்துவிட்டது. சரி... எப்பாடாவது பட்டாவது இம்முறை கண்டிப்பாக முதல் நாள் முதல் காட்சி பார்த்தே தீர வேண்டும் என்று  உறுதியுடன் இருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் ஆன்லைனில் டிக்கெட்டுக்காக தவமாய் தவமிருந்தும்.. ம்மச்ச்... கிடைக்கவில்லை.. திங்கட் கிழமை தான் கிடைத்தது. படம் பார்க்கும் வரை கதை தெரிந்து விட கூடாதே என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, ரிலீசன்று முதல் நாள் முதல் காட்சியை பார்த்த சில புண்ணியவா(வியா)திகள், படம் அந்த அளவுக்கு இல்லை என கதையை இலைமறைவாய் சொல்லி தொலைந்தனர். சமூக வலைத்தளங்களில் 'ரஜினிக்கு இந்த படமும் படம் அவ்ளோதான்!' என எள்ளி நகையாடினர். என்னதான் நெகட்டிவ் விமர்சனம்  பார்த்தாலும், கேட்டாலும் தலைவரை வெள்ளித்திரையில் தரிசித்தே வேண்டும் என முடிவுடன் இன்று படம் பார்த்தேன். #மகிழ்ச்சி

படத்துக்கு இவ்வளவு பில்டப் போதும் என நினைக்கிறன். சரி! விமர்சனத்துக்கு வருவோம். இப்படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்று படஷூட்டிங் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டதால், எல்லோரும் இதை பாட்ஷா, தளபதி ரேஞ்சுக்கு நினைத்து ஹைப் கொடுத்து விட்டார்கள். தலைவர் படம் என்றாலே தெறிக்கும் மாஸ் காட்சிகள், பன்ஞ்சு டயலாக்குகள், ஸ்டைல் பறக்கும் ரஜினி கிம்மிக்ஸ்கள் என வழக்கமான பார்முலாவையே பார்த்து லயித்து விட்டார்கள் போலும். அதனால் தான் கபாலியை கரித்து கொட்டுகிறார்கள்.

kabali-review

மலேசிய வாழ் தமிழர் ஒருவர் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக, தொழிலாளர்களுக்காக போராடி மனைவி மக்களை பிரிந்து, 25 ஆண்டுகள் சிறைவாசம் செல்கிறார். பின்னர் மீண்டு வந்து எப்படி குடும்பத்துடன் சேர்ந்தார், எப்படி எதிரிகளை துவம்சம் செய்கிறார் என்பதே கபாலியின் கதை.

உண்மையிலேயே சூப்பர் ஸ்டாருக்கு இது வித்தியாசமான படம். வழக்கமான தன் மசாலா பாணியை விட்டு, 60 வயது மலேசிய டானாக 'சால்ட் அண்ட் பெப்பர்' கெட்டப்பில் நடித்துள்ளார். பல இடங்களில் நடிப்பை கண்களாலேயே வெளிக்காட்டியுள்ளார். குறிப்பாக முதல் பாதியில் மனைவி, மகளின் நியாபகம் வரும் போதும், அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என பதறும் போதும் முதிர்ச்சியான நடிப்பை காட்டியுள்ளார். தலைவரின் ஸ்டைல், நடிப்பு, மிடுக்கு, நடை, பாவனை, தோரணை என எதுவுமே மாறவில்லை.

படத்தின் இன்ட்ரோ சீனில் கோட் சூட், கூலிங் கிளாஸ் என ஸ்டைலாக நடப்பதும், பிளாஷ்பேக்கீல் 80-களில் வந்த சூப்பர் ஸ்டாரின் கெட்டப்பும் அதிரடியாய் இருக்கிறது. பழைய தமிழ் படங்களை பார்த்தவர்கள், கபாலி என்ற பெயரை கேட்டவுடன் நம்பியார் பட அடியாள் பாத்திரம் தான் எல்லோருக்கும் நியாபகம் வரும். அந்த எண்ண பிரதிபலிப்பை மாற்ற இந்த மிரட்டலான வசனத்தை ரஞ்சித் வைத்துள்ளார் போலும். “தமிழ் படங்கள்ல இங்க மரு வச்சுகிட்டு, மீச முறுக்கிகிட்டு, லுங்கி கட்டிகிட்டு, நம்பியார் ‘ஏ! கபாலி’ அப்படின்னு சொன்னவுடனே குனிஞ்சு ‘சொல்லுங்க எஜமான்’ அப்படி வந்து நிப்பானே, அந்த மாதிரி கபாலின்னு நெனச்சியாடா?…… கபாலிடா…” என சூப்பர் ஸ்டார் வசனம் பேசும் போது, ரசிக்காத ரசிகன் ஒருவனும் இல்லை.

நாயகியாக ராதிகா ஆப்தே. குடும்பப்பாங்கான மனைவியாக முகத்தில் பல பாவனைகளை கொடுத்து அசத்துகிறார். சிரித்து, பேசி, அழுது நம்மை கவர்கிறார். சூப்பர் ஸ்டாரின் மகளாய், ரிவால்வர் ரீட்டாவாக தன்ஷிகா. எப்போதும் கையில் துப்பாக்கியுடன் எதிரிகளையும் நடிப்பையும் சுட்டுத்தள்ளிவிடுகிறார்.

மேலும் தினேஷ், ஜான் விஜய், அன்பரசன், ரித்விகா என இயக்குனரின் முந்தைய படமான 'மெட்ராஸ்' பட நடிகர்கள் குழு இதிலும் நடித்துள்ளனர். இதில் மட்டும் சற்று மாற்றம் செய்திருக்கலாம். கனமான நடிகர்கள் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். வில்லனாக தாய்வான் நடிகர் வின்ஸ்டன் சோ. அவரது முகம் போலவே நடிப்பும், கதாபாத்திரமும் கொஞ்சம் சப்பையாகவே இருக்கிறது. கிஷோர், நாசர் போன்றோர் நடித்துவிட்டு போய்வுள்ளனர்.

சூப்பர் ஸ்டாரை வைத்து இப்படி பட்ட ஒரு படம் எடுத்ததற்கு இயக்குனர் ரஞ்சித்தை பாராட்டியே ஆக வேண்டும். கேங்ஸ்டர் படம் என்றாலே வெறும் துப்பாக்கி சூடு, ரத்தம் தெறிக்க கேங் வார், அடிதடி சண்டை, போலீஸ் என்கவுண்டர் என வழக்கமாக எடுக்காமல்,  தாதாவின் குடும்ப வாழ்க்கையும் காட்டி  இமோஷனல் டிராமாவாக எடுத்துள்ளார். மெட்ராஸ் படம் போல இதிலும் நுண்ணியமாய் சாதி / இன அரசியலை புகுத்தியிருப்பது மிக நன்று. ஆனால் படத்தை இன்னும் கொஞ்சம் வேகமாக நகர்த்தியிருக்கலாம். சூப்பர் ஸ்டாரின் கமர்ஷியல் மசாலா இல்லாமால் நடிப்பும், உணர்ச்சியும் சேர்ந்து இருப்பதால், திரைக்கதையும் காட்சியும் சற்று மெதுவாய் தான் நகர்கிறது. இருப்பினும் தொய்வு வரும் போதெல்லாம் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை காட்டி நிமிர செய்து விடுகிறார். இருப்பினும் கிளைமாக்ஸ் காட்சியை காட்டாமல் end credit போட்டது இயக்குனரின் புத்திசாலித்தனத்தையும், பயத்தையும் குறிக்கிறது. அதுவரை நமக்கு மகிழ்ச்சி!

படத்தில் தலைவரின் BGM-ல் அதிர்கிறது திரையரங்கம். பாடல்களில் #நெருப்புடா, நெருங்குடா பாடலும்,  #உலகம் ஒருவனுக்கா பாடலும் தலைவரின் புகழையும், மாஸையும் கூட்டுகிறது. #வீர துறந்திரா பாடல் ஒரு முறை கேட்கலாம் போல உள்ளது. ஒளிப்பதிவாளர் முரளி காமிராவில் மலேசியாவைவும், ரஜினி அடிப்பட்டபின் தங்கியுள்ள இடமும், வீட்டை காட்டிய விதமும் தனி அழகுதான்!

சூப்பர் ஸ்டாரின் பன்ஞ்சு வசனம், மற்ற சில மசாலா வகையறாக்கள் இல்லாததால் படம் பார்க்கும் போது அலுப்பு தட்டுகிறது. மற்றபடி இணையத்திலும் சமூக தளங்களிலும் சொல்வது போல படம் ரொம்ப மோசமெல்லாம் இல்லை. தலைவரின் நடிப்பு, ஸ்டைலுக்காக ஒரு முறை தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.

கபாலி - ரசிகர்களுக்கு மகிழ்ச்சி!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்