ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஜனநாயகமும் பணநாயகமும் !

வணக்கம்,

எப்போ வரும்? எப்போ வரும்? என மக்கள் எதிர்பார்த்த ஆர்.கே நகர் இடை தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்து, இன்று முடிவுகள் வெளிவந்துள்ளது. எதிர்பாரா விதமாக சுயேச்சை வேட்பாளர் நாகராஜ சோழன் டி.டி.வி. தினகரன் முன்னணியில் வந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி  பெற்றுள்ளார். குக்கர் விசில் சத்தம் காதை  பிளக்கிறது என தொலைக்காட்சியில் மணிக்கு ஒருமுறை சொல்லி கொண்டே இருக்கின்றார்கள்.

எல்லா தேர்தலையும் போல இந்த தேர்தலிலும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. ஓட்டுக்கு பணம் வாங்குவது சரியா? தவறா? என்ற விவாதம் போய் கொண்டிருக்கையில், பலர் ஓட்டுக்கு காசுவாங்கி கொண்டும்,  ஓட்டுக்கு காசு கொடுத்து கொண்டும் தான் இருக்கின்றனர்.

cash-for-vote

ஓட்டுக்கு காசு கொடுப்பதை நமது அரசியல்வாதிகள் மக்களுக்கு நன்கு பழக்கி விட்டு விட்டனர். 2009-ல் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க ஓட்டுக்கு பணம் கொடுத்து "திருமங்கலம் பார்முலாவை" ஆரம்பித்து  வைத்தனர் என சொல்லுகின்றனர். ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது காலம் காலமாக நமது நாட்டில் நடந்து கொண்டு தான் வருகிறது. சில எம்.ஜி.ஆர்  படங்களில் ஓட்டுக்கு பணம்/பொருள் கொடுப்பது பற்றி சோ அவர்களின் வசனம் இருக்கும். அதுபோல "வீட்டுக்கு ஒரு எவர்சில்வர் குடமும், பணமும் கொடுத்து ஓட்டு கேட்டிருக்கிறோம்", என்ற வசனம் அமைதிப்படை படத்தில் வரும். இதிலிருந்தே ஓட்டுக்கு பணம் தரும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக இருப்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. முன்பெல்லாம்  ஒரு ஓட்டுக்கு பாட்டில் சாராயம் மற்றும் ஐம்பது, நூறு என தந்து கொண்டிருந்தனர். திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பிறகு ஐம்பது, நூறுக்கு பதிலாக ஐந்தாயிரம், பத்தாயிரம் என கொடுக்கின்றனர். தேர்தல் மார்க்கெட்டிலும் விலைவாசி சரமாரியாக ஏறிப்போனது தான் இங்கு பிரச்சனை.  
                   
மக்கள் ஏன் வாங்குகின்றனர்? அவர்கள் கொடுக்கின்றனர்; அதனால்  வாங்குகிறார்கள். தேர்தலுக்கு பின் எப்படியிருந்தாலும் யாரும் ஒன்றும் செய்யப்போவதில்லை. அதனால் முன்னாலேயே காசை வாங்கி விடுவோம் என்று எண்ணி தான் காசாகவோ, பொருளாகவோ வாங்குகின்றனர். காசை வாங்கி கொண்டு தமக்கு விருப்பமான கட்சிக்கு தான் ஓட்டு போடுகின்றனர். ஓட்டு போடுவது  நமது உரிமை; சரியான தலைவரை தேர்ந்தெடுப்பது நம் கடமை; ஓட்டுக்கு பணம் வாங்குவது சட்டப்படி தவறு தான். இவையனைத்தும் இருந்தும் மக்கள் ஏன் பணம் வாங்குகிறார்கள்?

சில மேல் தட்டு வர்க்க மக்களும் , நடுத்தர வர்க்க மக்களும், நமக்கு வரும் பணத்தை ஏன் விடவேண்டும் என்று எண்ணுகின்றனர். நாம் பணம் வேண்டாம் என சொன்னால் அதை நம் பெயரில் வேறு ஒருவன் வாங்கிக்கொள்வான்; அல்லது கட்சிக்காரனே 'லபக்' கிவிடுவான். வலிய வருவதை ஏன் விடவேண்டும் என்று எண்ணி எல்லா கட்சிகளிடமும் கேட்டு வாங்கி கொள்கின்றனர்.  அதே போல கடைநிலை வர்க்க மக்களுக்கு வருமானமோ மிக குறைவு. ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் கிடைக்கும் போது, நான்கு/ஐந்து பேர் கொண்ட குடிசை /கூரை /ஓட்டு வீட்டில்/  வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருப்போர்களுக்கு ஐம்பதாயிரம் வரை கிடைக்க வாய்ப்புண்டு. இது அவர்களுக்கு மிக பெரிய தொகை. இதை விட்டு உரிமையை காப்பாற்றுங்கள் என யார் கூறினாலும் கேட்கமாட்டார்கள்.  எல்லா வித மக்களுக்கும் பணம் முக்கிய தேவை.  அது கிடைக்கும் போது, அதுவும் பொறுப்பில்லாத, ஊழல் மலிந்து கிடக்கும் நம் நாட்டில் யாரும்  பணத்தை விட்டுவிட்டு ஜனநாயகம், கடமை, உரிமை, பொறுப்பு என யாரும் யோசிக்க மாட்டார்கள். இது தான் இன்றைய ஜனநாயக அரசியலின்  உண்மை  நிலை.

இந்த நிலை எப்பொழுது மாறும் என அவ்வளவு எளிதில் சொல்லிவிட  முடியாது. பொதுமக்கள் மீது தான் தவறு; அவர்கள் தான்  திருந்த வேண்டும் என பழியை முழுவதும் அவர்கள் மேல் போட்டு விட முடியாது. அவர்கள் தேவையை முதலில் முழுவதும் பூர்த்தி செய்ய வேண்டும். காசு வேண்டாம் என மக்கள் சொல்வது போல ஆட்சியையும் அரசும் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே பணநாயகம் இல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடைபெறும். "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது." பொதுமக்கள், அரசியல்வாதிகள் என எல்லோருக்கும் இந்த பாடல் வரி பொருந்தும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்
  

1 Comments:

கலியபெருமாள் புதுச்சேரி சொன்னது…

இவனுங்கள திருத்தவே முடியாதுன்னாதான் வெளிநாட்டுக்குப் போயிடறாங்க...அம்பியாகவும் வாழமுடியவில்லை..எல்லோராலும் அந்நியனாகவும் முடிவதில்லை.