சனி, 20 அக்டோபர், 2018

ரயில் பயணங்களில்!

வணக்கம்,

எலெக்ட்ரிக் டிரெயின் பயணம் என்பது  இன்பமான, சுகமான ஒன்று தான். ஜன்னல் சீட், ரயில் போகும் வேகம், அதில் போகும் மக்கள், தின்பண்டம் விற்பவர்கள் என வேடிக்கை பார்த்து கொண்டே போகலாம். பெரும்பாலும் அந்த இன்பமும், சுகமும் ரயிலின் கூட்டத்தை பொறுத்து தான் இருக்கும். பீக் ஹவரில் பயணம் செய்பவர்களுக்கு அந்த பயணமொரு நரகமாக தான் அமையும்.

எல்லோரையும் போல ஒரு சாதாரண மனிதனின் ரயில் அனுபவங்களை தான் இங்கு படிக்க போகிறீர்கள். விஜய்க்கு எலெக்ட்ரிக் டிரெயின் பயணம் ஒன்றும் புதிதல்ல. தான் சேர்ந்திருந்த புது கம்பெனி சிட்டியை விட்டு கொஞ்சம் த...ள்ளி இருப்பதால், மீண்டும் சில நாட்களாக ரயிலில் போய் வரலானான்.

காலை டிபனை அவசரம் அவசரமாக முழுங்கி விட்டு, பைக்கை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள டூ-வீலர் ஸ்டாண்டில் போட்டுவிட்டு வேகமாக  நடந்தான். ஸ்டேஷனை நெருங்க நெருங்க அந்த ரயில்வே பெண்ணின் குரல் கேட்டதும் அவன் முகம் புன்னகை பூத்தது. 

'டிங்.. டாங்..டிங்... யாத்திரிய ருப்பியா ஜாந்தே..' என்ற கணீர் ஸ்பீக்கர் பெண்குரல், கல்லூரி காலங்களில் அவனுடன் ரயிலில் வந்த அருண், வம்சி, ஹுசேன், கார்த்திக், தியாகு  ஆகியோரின் பெயர்களையும், ஒரு ரூபாய் வாட்டர் பாக்கெட், மூன்று ரூபாய் காபி, ஏழு ரூபாய் போண்டா வடை,
புட்-போர்டு அடித்து கிழித்த ஷு என 11 ஆண்டுகள் முன் நடந்ததையெல்லாம்  நியாபகப்படுத்தியது.


electric-train-travel-tambaram-chengalpat

நடுவில் பல தடவை ரயிலில் பயணபட்டிருந்தாலும் என்னவோ தெரியவில்லை, இந்த நியாபகம் வந்து போனது. இதெல்லாம் இப்போ தேவையில்லை என நினைத்து கொண்டு வேகமாக படி ஏறினான். அங்கே புட்-ஒவர் ப்ரிட்ஜில் டிஜிட்டல் கடிகாரம் 0830 என காட்டிக்கொண்டிருந்தது. ரயில் பயணர்கள் பலரரும் எதிரெதிரே வந்து கொண்டும், போய் கொண்டும் இருந்தார்கள். சிலர் ப்ரிட்ஜில் ஓரமாக நின்று போன் பேசி கொண்டும், செல்போனை நோண்டி கொண்டும் இருந்தனர். செங்கல்பட்டு வண்டிக்காக எல்லோரும் காத்து கொண்டிருந்தனர். அவர்களுடன் இவனும் ஒரு ஓரமாக நின்று ரயில் வருகிறதா என தண்டவாளத்தை பார்த்து கொண்டே இருந்தான். அந்த காலை நேரத்தில் கதிரவன் மேகங்களுடன் கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தான். காற்று நன்றாக அடித்து அவன் தலை முடியை கலைத்து கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் செங்கல்பட்டு வண்டி 4ஆம் பிளாட்பாரத்திற்கு வந்து சேரும் என்ற ரயில் ஸ்பீக்கர் பெண்மணி சொன்னது தான் தாமதம். ரயிலுக்காக நின்ற அனைவரும் தடதடவென பிளாட்பாரத்தை நோக்கி ஓடினார்கள்.  வழக்கம் போல ரயில் கூட்டமாக தான் பிளாட்பாரமுக்கு வந்து சேர்ந்தது. ஓடிச்சென்று ஏறி ஓரமாக நின்று கொண்டான். ரயில் கிளம்ப சில நிமிடங்கள் ஆயின. அதுவரை மொபைலில் பேஸ்புக், வாட்ஸ்அப் போஸ்ட்களை பார்த்து ஸ்கிரால் செய்து கொண்டு இருந்தான்.

ஒரு முறை ரயிலில் பயணம் செய்பவர் கூட எண்ணற்ற மக்களையும், அவர்களின் பலவித செய்கைகளை பார்க்க முடியும். ரயில் கிளம்பியது. ஓடும் ரயிலில் பலதரப்பட்ட மக்களை பார்த்தான். உட்கார இடம் இல்லாததால் நின்றபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். ரயிலில் முக்கால்வாசி பேர் கல்லூரி மாணவ மாணவியர்களும், மகேந்திரா சிட்டியில் வேலை செய்பவர்களும் தான் என்று சொல்லியபடி அவர்களுடைய ஐடி கார்டு கழுத்தில் தொங்கி கொண்டிருந்தது. ஆண், பெண் என பாராமல் கூட்டம் அலைமோதியது. ஒரு சிலர் சாதாரண சட்டை/ புடவையுடன் கட்டை பை, பேக்குடன் இருந்தனர். அவர்களெல்லாம் பரனூர் தாண்டி செங்கல்பட்டு வரை போவார்கள் என எண்ணி கொண்டான். ரயிலில் உட்கார இடமில்லததால் ஓரமாக நின்று கொண்டான். முதல் வகுப்பிலும் கூட்டமாக தான் இருந்தது. பர்ஸ்ட் கிளாஸ் போகில கூட்டம் அவ்வளவாக இருக்காது என சொன்னவரை மனதுக்குள் திட்டி கொண்டான். ஒரு சில நேரத்தில் பர்ஸ்ட் கிளாஸ் காலியாக இருக்கும், சில நேரத்தில் புல் பாட்டில் பீரின் நுரை போல ததும்பி நிற்கும். 

பயணத்தின் போது பலரும், அவர்களது செல்போனை நொண்டியபடி இருந்தனர். சிலர் பாட்டு கேட்டு கொண்டும், படம் பார்த்துக் கொண்டும் வந்தனர்.  லேடிஸ் சீட்டில் உட்கா்ந்து இருந்த ஓர் நடுத்திர வயது பெண்மணி இட்டிலியும் பூண்டு தொகையலும் வைத்து தின்று கொண்டிருந்தாள். இன்னொரு மூலையில் சுடிதார் போட்ட கல்லூரி பெண் பருப்பு சாதமோ, சாம்பார் சாதமோ ஸ்பூனில் ஸ்டைலாக சாப்பிட்டு கொண்டிருந்தாள். விஜய்க்கு பின்னால் நின்று கொண்டிருந்த இரு ஆண்கள் (அநேகமாக ஒரே கம்பெனியில் வேலை செய்பவர்கள்) நாட்டு நடப்பு பற்றி சுவாரசியமாக பேசி கொண்டிருந்தனர். அவர்கள் சத்தமாக பேசிய போதிலும், என்ன பேசுகிறார்கள் என கவனித்தான். பெட்ரோல் விலை ஏற்றம், மோடி பாரினுக்கு போனது,  அமைச்சர்களின் அறிவாளிதனமான பேச்சு, குளோபல் வார்மிங், குளிர்கால மழை, 40 செ.மீ. மழை பற்றிய புரளி, பேங்க் லோன், ஆபிஸ் அக்கபோர், மேனேஜர் காண்டு, அப்ரைசல் என சகலமும் பற்றி பேசினார்கள். இது போன்ற மக்களின் பேச்சை கேட்டாலே கண்டிப்பாக ஏதாவது  தெரியாத ஒரு விஷயத்தை பேசி,  நமக்கு சொல்லாமல் சொல்லி விடுவார்கள்.  

அங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் மொபைல் போனில் முழுகி கிடந்ததை பார்த்தான். பலர் கழுத்தில் ஹெட்போன் தொங்கி கொண்டிருந்தது. வாட்ஸ்அப்பில் அரட்டை, பாட்டு, பேஸ்புக் மீமிஸ் என குனிந்த தலை நிமிராமல் பார்த்து கொண்டிருந்தார்கள். சிலர் படம் பார்த்து கொண்டும் இருந்தார்கள். ரயிலில் படம் பார்ப்பவர்கள், ஒரு படத்தை பிட்டு பிட்டாக ரெண்டு, மூன்று நாட்களில் பார்த்து விடுவார்களோ என நினைத்து கொண்டான்.

சீட்டில் உட்கார்ந்திருந்த ஓர் பெண், போனில் பலமாக பேசி சண்டை போட்டு கொண்டிருந்தாள். கண்டிப்பாக கணவனுடன் தான் பேசி கொண்டிருப்பாள் என நினைத்து கொண்டான். இன்னொரு பக்கம் சிலர் ஹெட் போனில் பேசி என கொண்டிருந்தார்கள்.  

கல்லூரி காளையார்கள் சிலர் (பெரும்பாலும் முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டு) புட்-போர்டில் தொங்கியபடி பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு  ஸ்டேஷனைலும் இறங்கி இறங்கி ஏறி கொண்டிருந்தார்கள். அருகில் நின்று கொண்டிருந்த 60வயது மிக்க பெரியவர் ஒருவர், "ஏம்பா.. உள்ளே வந்து நில்லுங்களேன்.. கிழே விழுந்து அடி பட போகுது.. "என்று அதட்டும் தோரணையில் கூற, அதை ஒருவரும் பொருட்படுத்தியது போலவே தெரியவில்லை.  "போன வாரம் ஒரு ஆள் தவறி விழுந்து ஸ்பாட்லேயே காலி. அதனால அன்னைக்கு டிரெயின் 1 மணி நேரம் லேட் வெற.. இவனுங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது." என அருகில் நிற்பவரிடம் பொருமி கொண்டார். அவர் ஏதாவது ரிட்டயர்டு ரயில்வே காரராக இருப்பார் போல என்று நினைத்து கொண்டான் விஜய்.

டிப்-டாப் ஆசாமி ஒருவர் சீட்டில் கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்து, ஏதோ ஆங்கில நாவல் ஒன்றை படித்து கொண்டிருந்தனர். பொண்ணொறுதி சீட்டில் சப்பறை தட்டையாக சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளருகில் உட்கார்ந்து இருப்பவர்கள், கொஞ்சம் கஷ்டப்பட்டு நுனி சீட்டில் ஒண்டி கொண்டிருந்தார்கள்.

புளி முட்டை மாதிரி இருந்த அந்த கம்பார்ட்மெண்டில் அடுத்த அடுத்த ஸ்டேஷனில் இன்னும் புளிகள் எறின. ஒவ்வொரு ஸ்டேஷனலிலும் மக்கள் ஏறும் போது, "அதான் இடமிருக்குல.. உள்ளே போங்களேன்.."என கூற, போக போக மேலும் கூட்டம் நசநசத்தது.

விஜய்க்கு இடம் இல்லாததால் மேலே இருந்த கம்பியை பிடித்து தொங்கியபடி நின்று கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு (கொஞ்சம் கலையான) பச்சை சுடிதார் பெண், அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டு வந்தாள். முதலில் இவனுக்கு காரணம் புரியவில்லை. பிறகு தான் புரிந்தது, ரயில் ஓட்ட அசைவில் அந்த பெண் மீது இடித்து விட்டான் போலும். சூதானமாக தள்ளி நின்று கொண்டான்.. தள்ளி நின்றவன் சும்மா இல்லாமல், அந்த பெண் பார்க்க கொஞ்சம் நன்றாக  இருக்கிறாள் என்பதற்காக அவள் எந்த கம்பெனி என தெரிந்து கொள்ள மெல்ல முன்பக்கம் ஐடி கார்டை எட்டி பார்க்க, அதையும் அந்த பெண் பார்த்து விட்டாள். சடாரென அருந்ததி அனுஷ்கா போல அவள் கண்களை உருட்டி முறைக்க, விஜய் "ஆகா, இது என்னடா புது சோதனை என நினைத்து கொண்டு தள்ளி வந்து விட்டான்.. அப்போதும் அப்பெண்ணின் ஐடி கார்டு டாகில் காட்டான்குளத்தூர் என போட்டிருப்பதை பார்க்காமல் இல்லை.

பொத்தேரி வந்தவுடன் கல்லூரி மக்கள் அனைவரும் இறங்கி விட்டனர்.பச்சை சுடிதாரும் தான். கிட்டத்தட்ட கம்பார்ட்மெண்ட்டே காலியானது. ஜன்னலோரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரம் போனை நோண்டிவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான். பரனூர் வந்தவுடன் முக்கால்வாசி டிரெயின்னும் காலியானது. வேகமாக இறங்கி ஆபிஸ் பஸ்சை நோக்கி போனான் விஜய்.
*****
மாலை நேரம்- அலுவலக வேலை முடிந்ததும் பரனூரில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தான். பலர் ஸ்டேஷனில் விற்று கொண்டிருந்த சிப்ஸ், கடலை, முறுக்கு ஆகிய வற்றை வாங்கி கொண்டு இருந்தனர். விஜய்யும் அவ்வபோது வாங்கி சாப்பிடுவான். ரயில் வருகிறதா என பார்த்து கொண்டே இருக்கும் போது ரயில் வந்து விட்டது. பிளாட்பாரத்தில் கூட்டம் இருந்த போதிலும், வண்டி காலியாய் வரவே, இவனுக்கு உட்கார இடம் கிடைத்தது.  இரண்டு ஸ்டேஷன் போயிருக்கும், விஜய் அருகே ஒரு பெண் வந்து "எக்ஸ்கியூஸ் மீ, இது லேடிஸ் சீட்" என்றாள். நிமிர்ந்து பார்த்தான். ஒரு நவ நாகரீக பெண் ஒருத்தி, முகம் முழுவதும் மூடி, முதுகில் பேக்பெக்கும், கையில் லஞ்ச்பெக்கும் வைத்திருந்தாள். வேறு சீட் இல்லாததால் விஜய்யை எழுந்திரிக்க சொன்னாள். இதை சற்றும் எதிர்பாராத விஜய், "partition க்கு அந்த பக்கம் தானே லேடிஸ் கம்பார்ட்மெண்ட். இது ஃபர்ஸ்ட் கிளாஸ் தானே!" என கேட்டான். "இது ஃபர்ஸ்ட் கிளாஸ் தான். நீங்க உட்கார்ந்து இருப்பது ஃபர்ஸ்ட் கிளாஸ்ல லேடிஸ் சீட்" என்றாள். அப்புறம் தான் தான் உட்கார்ந்து இருப்பது லேடிஸ் சீட் என அறிந்து எழுந்து கொண்டான். பக்கத்தில் நின்று கொண்டிருந்த யாரோ ஒரு சக பயணி, " நீங்க ஏன் அவ சொன்னதும் எந்திருசீங்க? என கேட்க " அட விடுங்க ஜி.. இப்போ சண்டை போட மூட் இல்லை.. அப்படியே சண்டை போட்டாலும் நமக்கு ஒருத்தரும் சப்போர்ட் பண்ண மாட்டங்க.. அதான்.." என்றான். "இதுல தான் சமஉரிமை பாப்பாங்க... இது மாறி ஒண்ணு ரெண்டு பொண்ணுங்களாள  எல்லோருக்கும் கெட்ட பேரு.." என்று அந்த பயணியும் கடிந்து கொண்டார்.

சிறிது நேரம் போனது. வாசலருகே நின்று கொண்டு போனை பார்த்துகொண்டு வந்திருந்தான் விஜய். திடீரென "ஏய்!!ஏய்!! என பலத்த குரல் ஒன்று கேட்க,  யாரோ என்னவோ தவறி விழுந்து விட்டார்கள் என பயந்து பலரும் வெளியே பார்த்தனர். யாரோ ஒரு திருடன் ஓரமாய் நின்று கொண்டிருந்த நபரிடம் செல்போனை பிடுங்கி கொண்டு ரயிலை விட்டு இறங்கி ஓடியுள்ளான்.. போனை பறி கொடுத்தவர், சிறிதும் எதிர்பாராததால் அவரும் அலறி கொண்டே ஓடும் வண்டியிலிருந்து இறங்கி அவனை விரட்டினார்.  விரட்டி சென்றவர் திருடனிடமிருந்து போனை புடிங்கி கொண்டு மீண்டும் ரயிலேர முயற்சிக்க, ரயில்வே கார்டு வேண்டாம் அடுத்த ரயிலில் வாருங்கள் என கைகாட்டினார். ஸ்டேஷனிலிருந்து ரயில் நின்று கிளம்பிய நேரம் என்பதால் சற்று மெதுவாக போனது. இருவருக்கும் அடிபடவில்லை.

இதை பார்த்த விஜய் தன் போனை எடுத்து மீண்டும் பாக்கெட்டில் வைத்து கொண்டு வேறு இடத்தில் உட்கார்ந்து கொண்டான். பின்னர் தாம்பரம் ரயில் நிலையம் வந்தவுடன் இறங்கி வேகமாக வண்டியை எடுக்க போகலானான்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!