வியாழன், 7 ஏப்ரல், 2022

தீண்டத்தகாத பாத்திரங்கள் !

வணக்கம் ,

ஒரு சின்ன இடைவேளை விட்டு மீண்டும் எழுதுகிறேன். பல நாட்களாக கிடப்பில் இருந்த ஒரு பதிவை தூசி தட்டியுள்ளேன். பதிவு மட்டுமல்ல; இதன் கருத்தும் தூசி தட்டப்பட வேண்டியவை தான். கருத்தை ஒரு குட்டி கதையிலிருந்து ஆரம்பிக்கிறேன்..

ஒரு வீட்டு சமையலறையில், ஞாயிற்றுகிழமை மாலை வேளையில்...

அலுமினிய கடாய் அக்கா: ஏண்டி! எப்பவும் ப்ரில் போட்டு விளக்கி வைச்ச புது பொண்ணு மாற்றி பளபளன்னு இருப்ப... இப்போ ஏன் மங்களா பிசுபிசுன்னு இருக்கே.. இன்னைக்கி உன்னை வீட்டு ஐயா விளக்கி வைச்சாரா??

சின்ன எவர்சில்வர் டமரா: ஹ்ம்.. போங்கக்கா.. மனசே சரியில்ல..

அலுமினிய கடாய் அக்கா: ஏன்?? என்னாச்சு??? 

சின்ன எவர்சில்வர் டமரா: அக்கா, நம்மை மட்டும் என் இப்படி ஒதுக்கி வச்சுருக்காங்க.? 

அலுமினிய கடாய் அக்கா: உன்கிட்ட முட்டை ஊத்தி அடிச்சு ஆம்லெட் போடறாங்க.. என்கிட்டே கறி வறுவல், இல்லன்னா கிரேவி செய்றாங்க.. நானும் நீயும் அசைவ சாப்பாடு சமைக்கிற பாத்திரங்கடி.. அதான் நம்மை தனியா வைச்சுருக்காங்க. கழுவி வைச்சாலும் ஒரு மூலையிலே போட்டு வைப்பாங்க.. நம்ம ரெண்டு பேர் மட்டுமா?? அலுமினிய பேசின் பெரியம்மா,  நம்ம பெரியக்கா மண்சட்டி கடாய்,  மீன் கரண்டி மாமா, எல்லாரும் தான்...

சின்ன எவர்சில்வர் டமரா: நம்ம எல்லாத்தயும் ஒரே கடையில தான வாங்குனாங்க.. எப்படி இருந்தாலும் மட்டன் சாப்ஸோ, அக்காரவடிசலோ எல்லாத்தையும் ஒரே தட்டுல போட்டு தான சாப்பிட போறாங்க??

அலுமினிய கடாய் அக்கா: அட..ஆமாண்டி..சரி தான்... சோறு போட்டு வெண்டைக்காய் சாம்பார், உருளை கிழங்கு வறுவல்ன்னு தட்டுல தான் சாப்பிடுவாங்க. ரசத்தை தட்டுல ஊத்தி உறிஞ்சி குடிப்பாங்க.. அதே தட்டுல தான் பிரியாணி போட்டு சாப்பிடுவாங்க, கறி குழம்பு ஊத்துவங்க, முட்டை பொடிமாஸ் செய்வாங்க.. அதிலேயே சாப்பிட்டுடுவாங்க.. தட்டை சாப்பிட்டுட்டு கழுவிடுவாங்கல்ல.. அதனாலதானோ ??

சின்ன எவர்சில்வர் டமரா: ங்கே... என்னது.. அப்ப மத்த பாத்திரத்தையெல்லாம் கழுவ மாட்டாங்களா ?? 

அலுமினிய கடாய் அக்கா: கழுவுவாங்.. ஏய்.. இப்படியெல்லாம் கிராஸ் கேள்வி கேட்டா எனக்கு பதில் தெரியாது பாத்துக்கோ..

ஆனாலும் கொஞ்சம் ஓவரா ஆச்சாரம் பாக்குறவங்க இப்படி தான் தனித்தனியா பிரிச்சு வைப்பாங்க.. 

சின்ன எவர்சில்வர் டமரா: அதுக்குன்னு மீன் சாப்பிட்ட/தொட்ட கையோட ரசம்/மோர் பாத்திரத்தை கூட தொடாம இருக்குறது.. அசைவம் சமைக்கிற பாத்திரத்துல, வேற எந்த பாத்திரத்தையும் கலக்காம இருக்கிறது எல்லாம் எப்படி சரியாகும்... நாமும் அவங்க வீட்டு பாத்திரம் தானே?!? சொந்த வீட்டுல, சொந்த பாத்திரத்தையே இப்படி பண்ணுனா.. ம்ம்ம்..  என்னக்கா பண்றது... 

அலுமினிய கடாய் அக்கா: சரி ..சரி .. விடு . ஒரு சிலரெல்லாம் இப்படி தான்... சபீனா போட்டு விளக்கி வைச்சா எல்லா விளக்கமாறும் பாத்திரமும் ஒண்ணு தான்னு இங்க பல பேர்க்கு தெரியல.. . இவுங்கெல்லாம் ஓட்டல்ல போனா என்ன பண்ணுவாங்க?? ஹஹா....ஹஹா..ஹஹா....ஹஹா...

சின்ன எவர்சில்வர் டமரா: ஆமா..ஆமா ..ஹா ..ஹஹா....ஹஹா..

untouchability-casteism

இது போல பல தீண்டதகாத பாத்திரங்களும், அவர்கள் படும் துன்பங்களும், இந்த மண்ணில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பரபரப்புடன் வந்து ம(றை)றந்து போன சில செய்த செய்திதுளிகள் :

-->  ராஜஸ்தானில் தாழ்த்தபட்ட இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் குடும்பம் ஊரில் இருக்க கூடாது என ஆதிக்க சாதி மக்கள் மிரட்டி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக தனி ஆளாக நின்று சாதி கொடுமைக்கு எதிராக ஒரு பெண் போராடி கொண்டிருக்கிறாள். 

-->  உத்தர பிரதேசத்தில் பள்ளியில் தலித் மாணவர்கள் மூவரை கழிவறை சுத்தம் செய்ய சொல்லி அங்குள்ள ஆசிரியர்கூறியுள்ளார்.

-->  தன்னுடைய வண்டியை தொட்டதற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை சாகும் வரை அடித்து துன்புறுத்தி இருக்கிறார் கர்நாடகாவில் உள்ள ஒரு மாமனிதர்.

-->  சேரி மக்கள் ஊருக்குள் வர கூடாதென ஒரு பெரிய தீண்டாமை மதில்சுவர் கட்டி தனிமை படுத்தியுள்ளனர் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிராம மேன்மக்கள்.

-->  இன்னும் கூட கிராமங்களிலும் நகரங்களிலும் பல வீடுகளில் வீட்டு வேலை செய்வோர் பின்வாசல் வழியாக வந்து வேலை செய்துவிட்டு, மிச்சம் மீதி இருப்பதை அவர்களுக்கென ஒதுக்கி வைத்த  பாத்திரத்தில் வயிற்றை நிரப்பி விட்டு தான் போகின்றனர்.

இது போல நாடெங்கும் தீண்டத்தகாத பாத்திரங்கள் கறைபடிந்த வாழ்க்கையோடு இருக்கின்றன. சமூக இடைவெளியும், ஓதுக்கி வைத்தாலும் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் கண்டுபிடிக்க பட்டதல்ல. நம்மவர்கள் பல நூற்றாண்டுகளாக அடித்தட்டு மக்களிடம் கடைப்பிடித்து வருகிறார்கள். தீண்டாமையும், சாதிய பாகுபாடும் ஒருவகை தீராத பெருந்தொற்றுதான். விரைவில் இதற்கான மருந்தும் எல்லோருக்கும் கிடைக்கட்டும். 


நன்றி!!!

பி. விமல் ராஜ் 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!