வியாழன், 22 டிசம்பர், 2022

பயோமிமிக்கிரி - காப்பியடித்த இன்ஜினியர்கள் !

வணக்கம், 

பள்ளி தேர்வில் மாணவர்கள் காப்பியடித்து மாட்டி கொண்டதை பற்றி அறிந்திருப்போம்; கல்லூரி பரீட்சையில் காப்பியடித்து பெயிலாய் போனவர்களை பற்றியும் நாம் கேட்டிருப்போம்; பெரிய நிறுவனங்களில் உள்ள இன்ஜினியர்கள் அவர்களுடைய போட்டி நிறுவனங்களில் உள்ள தயாரிப்பை காப்பியடித்து, சிறு சிறு மாற்றங்கள் செய்து வெளியிடுவார்கள். அவர்களை பற்றியெல்லாம் இந்த பதிவு இல்லை. இயற்கையை காப்பியடித்த இன்ஜினியர்கள் பலர் இருக்கின்றனர். அந்த இயற்கையையும், காப்பியடிக்கப்பட்ட விஷயத்தையும் பற்றி தான் பார்க்க போகிறோம்.

இயற்கையே அறிவியலின் பிறப்பிடம் என்பதை யாரும் ஒத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. பல விஞ்ஞான மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் புதிதுபுதிதாய் வந்து கொண்டே இருக்கின்றன. பெரும்பாலானவை இயற்கையை சார்ந்தோ அல்லது அதன் உதவியை கொண்டு தான் கண்டுபிடிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு கண்டுபிடிப்புகளுக்கு பின்னும் ஒரு இயற்கையின் ஊன்றுகோல் உண்டு. அதை காப்பியடித்து தான் பல ஆராய்ச்சிகளும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் நடக்கின்றன. காப்பியடித்தல் பல சொல்லிவிட முடியாது; இயற்கையை அடிப்படையை கொண்டு கண்டுபிடிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். சிக்கலான மனிதப் பிரச்சனைகளை அறிவியல் ரீதியாக தீர்க்க உயிரினங்கள் மற்றும் இயற்கையின் மாதிரிகள், அதன் செயல்பாடுகள் மற்றும் பரிணாம வளர்ச்சிகளை கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து அவற்றிற்கு ஏற்றார் போல் சரி செய்து தீர்வு காண்பது Biomimicry (உயிரினையாக்கம்) என சொல்லப்படுகிறது.

இயற்கை அதிசயத்தை எடுத்துக்காட்டாய் கொண்டு, பயோமிமிக்கிரி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் பல இருக்கின்றது. அவற்றுள் சிலவற்றை பகிர்கிறேன்.  

Biomimicry examples
Biomimicry examples - click to zoom

ஜார்ஜ் மெஸ்ட்ரால் என்னும் சுவிஸர்லாந்து இன்ஜினியர் ஒருவர், தன் நாயின் மேல் ஒட்டியுள்ள burr என்னும் ஒரு வித பழத்தை (சிறய கொட்டை போல இருக்கும்) மைக்ரோஸ்கோப்பில் ஆராய்ந்து பார்த்து, அதன் மேல்பகுதியில் சிறு சிறு கொக்கி போல இருப்பதை கண்டார். அதுதான் அவருடைய நாயின் தோலில் ஒட்டி கொண்டிருந்தை உத்வேகமாய் கொண்டு வெல்க்ரோ (velcro) என்னும் சாதனைத்தை கண்டுபிடித்தார். அதை வைத்து தான் இப்போது நாம் கட்டிக்கோ, ஒட்டிக்கோ வேஷ்டியும், செருப்பில் வெல்க்ரோ வைத்தும் போட்டுக்கொண்டிருக்கிறோம்.

கீய்க்கோ(Geeko) என்னும் ஒரு வகை பல்லிகள் சுவரிலோ, மரத்திலோ எப்படி கீழே விழாமல் ஏறுகிறது என்பதை ஆராய்ந்தவர்கள், அதன் கால் பாதங்களில் ஒருவகை ரசாயன பிசின் இருப்பதை கண்டு, சுவற்றில்/ பார்சலில் ஒட்டும் டேப்க்கள், காயத்திற்கு ஓட்டும் பாண்ட் எய்ட்கள், கண்ணாடி கட்டிடங்களில் ஏறும் சாதனங்கள் என பலவற்றை கண்டுபிடித்துள்ளனர்.  

உலகின் வேகமான ரயில் என்று சொல்லப்படும் ஜப்பானின் ஷின்காசன் புல்லெட் ரயில் குகைப்பாதைக்குள்ளே சென்று வெளியே வரும்போது பலத்த ப்பூபூ...பூம் என்ற சத்தத்துடன் வருவது பெரும் பிரச்சனையாக இருந்தது. அதை சரி செய்ய மரம்கொத்தி பறவையை (பறவையின் அலகு) எடுத்துக்காட்டாய் கொண்டு கூரான இன்ஜின் முகப்புடன் மாற்றியமைக்கப்பட்டது புல்லட் ரயில். சிறிய மரம்கொத்தி பறவை எப்படி காற்றை கிழித்து கொண்டு போகிறதோ, அதே போல காற்றை கிழித்து கொண்டு குறைந்த அளவில் மின்சார பயன்பாட்டோடும், குகைபாதையிலிருந்து பெரும் சப்தமில்லாமலும் புல்லட் ரயில் சென்றது. இதனால் அந்த சிக்கலும் தீர்ந்தது.

கரையான் புற்றுகள் இயற்கை பேரதிசியம் என்று தான் சொல்ல வேண்டும். வெளியே என்ன வெப்பநிலை/ சீதோஷ்ணமாக இருந்தலும் கரையான் புற்றுக்குள் எப்பொதும் ஒரே அளவு சமமான வெப்ப நிலையியே  இருக்கும். இதை ஆராய்ந்து அறிந்த விஞ்ஞானிகள், அதன் புகைபோக்கி  போலுள்ள நீளமான மண்கூடு தான் இதற்கு கரணம் என அறிந்தார்கள். அதை அடிப்படையாய் கொண்டு மிக் பியர்ஸ் என்னும் கட்டுமான பொறியாளர், ஜிம்பாபே நாட்டில் ஹராரே என்னும் நகரில் Eastgate Centre என்னும் மிக பெரிய கட்டிடத்தை கரையான் புற்றுகள் கட்டியுள்ள அதே தொழில்நுட்பத்தை கொண்டு கட்டினார். அந்த கட்டிடத்தில் இயற்கையாகவே காற்றோட்டமும், வெளிச்சமும் இருப்பதால் மற்ற கட்டிடங்களை காட்டிலும் குறைவான மின்சாரமும், குளிரூட்டலும் தேவைப்பட்டது. 

Humpback Whale என்று சொல்லப்படும் ஒருவகை திமிங்கலத்தின் வளைந்து நெளிந்த துடுப்பும், வாலும் தான் அதனை வேகமாக கடலிலும், அலைகளுக்கு நடுவிலும் நீந்தி செல்ல உதவுகிறது. அதை அடிப்படையாய் கொண்டு தான் windmill bladeகள் தயாரிக்கபடுகிறது. அவ்வளவு உயரத்திலும், வேகமாய் அடிக்கும் காற்றை கிழித்து கொண்டு சுழலும் காற்றாலை தகடுகள் திமிங்கலத்தின் பயோமிமிக்கிரி தான்.   

பறவைகள் பறக்கும் போது இறக்கைகளை மேல்நோக்கி தூக்கி, பின் அழுத்தம் கொடுத்து எம்பி மேலே பறக்கும். அதை அடிப்படையாய் கொண்டு தான் இன்றைய விமானத்தின் இறக்கைகள் உருவாக்கப்பட்டன. புறாக்களின் பறக்கும் திறனை ஆராய்ந்து அதனை அடிப்படையாய் கொண்டு தான் விமானம் உருவாக்கப்பட்டதாக ரைட் சகோதரர்கள் கூறியுள்ளனர். மேலும் 1500களில் லியோனார்டோ டா வின்சி (Leonardo Da Vinc) கிளைடர் விமானத்தின் மாதிரியை வரையும் முன், பறவைகளின் இறக்கை, பறக்கும் திறன், ஆகியவற்றை நன்கு படித்து ஆராய்ந்த பின் செயல்படுத்தினார்.  

இது மட்டுமல்ல.. ஆக்டோபஸ் தோலினை அடிப்படையாய் கொண்டு கேமபிளாக் (Camaflogue) உடை தயாரித்தது; சுறா மீனின் செதில்களை அடிப்படையாய் கொண்டு நீச்சல் உடை கண்டுபிடித்தது; தாமரை இலையில் நீர் ஏப்படி ஓட்டுவதில்லையோ, அதை கொண்டு வாட்டர் ப்ரூப் பெயிண்ட் கண்டுபிடித்தது என இன்னும் நிறைய இருக்கிறது. இதை தவிர நம் எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கு பல செயல்பாடுகளை/ வடிவங்களை இயற்கை மறைத்து வைத்துள்ளது. அதை நாம் தான் தேடி எடுத்து வெளிக்கொணர வேண்டும்.


நன்றி!!
பி.விமல் ராஜ்