புதன், 7 டிசம்பர், 2022

பூமர்களின் வாரிசுகள் யார்?

வணக்கம்,  

சில நாட்களாய் சமூக வலைத்தளங்களில் பூம்.. பூம்.. பூமர்... பூமர் அங்கிள் என பலரை பரிகாசம் செய்வதை பார்த்திருப்போம். பொதுவாய் இன்றைய தலைமுறையினருக்கு ஏதாவது அட்வைஸ் கொடுத்தாலோ அல்லது நாங்கெல்லாம் அப்படி இருந்தோம்... இப்படி இருந்தோம் என கதையடிக்க ஆரம்பித்தாலோ அவர்களை பூமர் அங்கிள்/ஆன்ட்டி என சொல்லி விடுவார்கள். இந்த பூமர் என்ற வார்த்தையை நாமும் பல இடங்களில் உபயோகப்படுத்தியிருப்போம். எங்கிருந்து இந்த வார்த்தை வந்தது? இதன் அர்த்தம் என்ன என்பதை சற்று விரிவாக பகிர்கிறேன். 

Generation Gap என்ற வார்த்தையிலிருந்து வருவோம். இந்த வார்த்தையையும் பல இடங்களில் இதை சொல்லியிருப்போம். நமது முந்தைய/பிந்தைய தலைமுறைகளில் யாரேனும் நம்முடைய கருத்து, பழக்கவழக்கம், இசை, ரசனை, கலாச்சாரம் ஆகியவற்றில் முரண்பாடு இருப்பதையே தலைமுறை இடைவெளி என்று சொல்வார்கள். போன தலைமுறையும், இந்த தலைமுறையிலும் நிறைய வேறுபாடுகள்/இடைவெளி உண்டு. உறவு முறைகளில் பெரிய முரண்கள் எப்போதும் உண்டு. உலகமெங்கும் 19ஆம் நூற்றாண்டு வரை தாய் தந்தையர் அல்லது முன்னோர்கள் என்ன சொன்னார்களோ அதே கருத்தை அப்படியே பெரும்பாலும் ஏற்று கொண்டார்கள். பெரிய மாற்று கருத்துக்கள் இல்லை. ஆனால் 19 நூற்றாண்டு முதல் உலகம் பல மாற்றங்களுக்கு உட்பட்டு தலைமுறைகளுக்கிடையே பல தர்க்கமான கருத்துக்களை கொண்டுள்ளது. 1960களில் மேற்கத்திய ஆய்வாளர்கள் மக்களை/ தலைமுறைகளை பிரித்து வகைப்படுத்தி (categorization) காட்ட நினைத்தார்கள். 

generations

The Lost Generation - 1880 முதல் 1900க்குள் பிறந்தவர்கள். முதலாம் உலகப்போரில் (1914-1918) தங்களுடைய ஆரம்ப முதிர்வயது (adulthood)-ல் இருந்தவர்களை குறிப்பிடுவார்கள். 

The Greatest Generation - 1901 முதல் 1925க்குள் பிறந்தவர்கள். இரண்டாம் உலகப்போரின் (1939-1945) போது வாலிப பருவத்தில் இருந்து போரிட்டவர்கள். பல துயரங்கள், பேரிடர்களை சந்தித்தவர்கள்.

The Silent Generation - 1926லிருந்து 1945க்குள் பிறந்தவர்கள். 

Baby Boomers - 1945லிருந்து 1964க்குள் பிறந்தவர்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின் பிறந்தவர்கள். எப்படி 2020-ல் கொரோனா முழுஅடைப்பில் உலகின் பிறப்பு விகிதம் அதிகமானதோ, அதே போல இரண்டாம் உலகப்போரில் கலந்து கொண்டு, போர் முடிந்த பின் வீடு திரும்பிய வீரர்களுக்கு பிறந்த குழந்தைகள்தான் இந்த பேபி பூமர்ஸ். இவர்களை தான் நாம் பூமர்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம்.

Generation X (Gen X) - 1965 முதல் 1980வரை பிறந்தவர்கள். இவர்களுடைய காலத்தில் பல கண்டுபிடிப்புக்கள், ஆராய்ச்சிகள், அறிவியல் முன்னேற்றங்கள் நடந்துள்ளது.

Generation Y (Gen Y/ Millennials) - 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள். இவர்களுடைய வாலிப பிராயத்தில் நூற்றாண்டின் மாற்றத்தை பார்த்தவர்கள் என்பதால் இவர்களை Millennials என்றும் கூறுவார்கள். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் 80's Kids & 90's Kids(இவர்கள் தான் பூமர்களின் வாரிசுகள் 😁)

Generation Z  (Gen Z / Zoomers) - 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள். பெரும்பாலானோர் பிறக்கும் போதே கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல், யுடியூப் என எல்லாவற்றையும் பார்த்து கொண்டே பிறந்தவர்கள். 2K Kids!

Generation Alpha (Gen Alpha) - 2012 முதல் 2025 வரை பிறந்தவர்கள் அல்லது பிறப்பவர்கள். 

நான் Millennials - 90ஸ் கிட்ஸ்... நீங்க??? 😉

இந்த வகைப்பாடுகள் ஒவ்வொரு நாடுகளிலும் சிறியளவு மாற்றங்களோடு இருக்கும். இந்தியாவில் 1920 முதல் 1940கள் வரை பிறந்தவர்கள் பெரும்பாலும் தேசியவாதிகளாகவும், பாரம்பரிய வழியில் நடப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். 1945 முதல் 1965 வரை பிறந்தவர்கள் இந்தியன் பூமர்கள் என சிலர் அழைக்கின்றனர். இவர்கள் காலத்தில் தான் இந்தியா சுதந்திரத்திற்கு பின் பல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கண்டுள்ளது. கடும் பஞ்சம், பசுமை புரட்சி, தொழில் புரட்சி, 1977 அவசர நிலை, அணுசக்தி/மின்னணு வளர்ச்சி என பல சம்பவங்களை கண்டுள்ளனர்.

பெரும்பாலும் பெரு நிறுவனங்கள், அரசு துறைகள் தங்களுடைய வாடிக்கையாளர்களையம், நுகர்வோர்களையும் (audience/ consumers/ customers) கண்டறியவே இத்தகைய தலைமுறைகளின் வகைப்பாடுககளை உபயோகப்படுத்துகிறது.

இந்த generationsகளை தமிழில் தலைமுறைகள் என சொல்வார்கள். பல தலைமுறைகள் ஒரு பரம்பரையாக பார்க்கப்படுகிறது. நாங்க பரம்பரை பரம்பரையாய் இதை செய்து வருகிறோம்; பாரம்பரியமிக்க பரம்பரை நாங்கள் என சொல்லி கேட்டிருப்பீர்கள். அந்த பரம்பரை எண்ணற்ற சொல்லுக்கு அர்த்தம். அது நம்முடைய ஏழாம் தலைமுறையை குறிக்கிறது. 

நாம் - முதல் தலைமுறை
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
பரன் + பரை - ஏழாம் தலைமுறை,
பரன் + பரை = பரம்பரை.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை. இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

4 Comments:

சிவபார்கவி சொன்னது…

Excellent ☺️

விமல் ராஜ் சொன்னது…

கருத்துக்கு நன்றி சிவபார்கவி!

Nanjil Siva சொன்னது…

ஆஹா... தெரியாமலேயே இருந்த பல விசயங்களை பட்டியல்போட்டு தெரியவைத்து விட்டீர்கள்... நன்றி...
https://www.scientificjudgment.com/

விமல் ராஜ் சொன்னது…

கருத்துக்கு நன்றி நாஞ்சில் சிவா!