செவ்வாய், 14 மார்ச், 2023

உங்க ஊரில் எது பிரபலம் ?

வணக்கம், 

நம் எல்லாருடைய ஊரிலும் ஒவ்வொரு விஷயம் பிரபலமானதாக இருக்கும். அது விரும்பி சாப்பிடும் பொருளாகவோ, விவசாய பொருளாகவோ, உற்பத்தி செய்யும் பொருளாகவோ இருக்க வாய்ப்புண்டு. அத்தகைய பொருளின் தரம், விளையும்/உற்பத்தி செய்யும் எண்ணிக்கை பொறுத்து அப்பகுதிக்கு (கிராமம்/ஊர் /நகரம்/மாநிலம்) புவிசார் குறியீடு (Geographical Indication Tag) வழங்கப்படுகிறது. இந்தியாவில் புவிசார் குறியிடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்பு) 1999-ல் இயற்றப்பட்டு, 2003 -லிருந்து அளவில் இருந்து வருகிறது. இதனால் புவிசார் குறியீடு (GI Tag) பெற்றுள்ள ஊரை தவிர மற்ற பகுதியில் அந்த பொருளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில ஊர்களுக்கு, ஒன்றிற்கும் மேற்பட்ட புவிசார் குறியிடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம்.

 மாமல்லபுரம் கற்சிற்பங்கள் 
 காஞ்சிபுரம்  பட்டு புடவை 
 ஆரணி  பட்டு 
 வேலூர்  முள் கத்திரிக்காய்
 கள்ளக்குறிச்சி மர வேலைப்பாடு பொருட்கள் (Wood Carvings) 
 சேலம்  வெண்பட்டு,
கைத்தறி 
 கருப்பூர்  கலம்காரி ஓவியம் 
 ஈரோடு  மஞ்சள் 
 பவானி ஜமுக்காளம்
 கோவை கோரா பருத்தி புடவை,
வெட் கிரைண்டர் (Wet  Grinder)
 நீலகிரி     தேயிலை (Orthodox),
தோடா சித்திரத் தையல்  வேலை (Embroidery)
 திருச்சி ஈஸ்ட் இந்தியா தோல் பொருட்கள் (EI Leather)
 நாச்சியார்கோவில் குத்துவிளக்கு 
 தஞ்சாவூர்  தலையாட்டி பொம்மை,
தஞ்சாவூர் ஓவியம்,
கலைத்தட்டுகள்,
வீணை,
நெட்டி மாலை     
 நரசிங்கப்பேட்டை  நாதஸ்வரம் 
 திருபுவனம்  பட்டு புடவை 
 அரும்பாவூர்  மரசிற்பங்கள்,
மர வேலைபாட்டு பொருட்கள் (Wood Carvings)  
 மதுரை  மல்லி,
சுங்குடி சேலை  
 கொடைக்கானல்  மலைப்பூண்டு
 பழனி  பஞ்சாமிர்தம்
 சிறுமலை  மலை வாழைப்பழம் 
 ஸ்ரீவில்லிபுத்தூர்  பால்கோவா
 விருபாக்ஷா   மலை வாழைப்பழம்
 பத்தமடை  பாய்
 செட்டிநாடு  கோட்டான்
 நாகர்கோவில் கோவில் ஆபரணங்கள்
 திண்டுக்கல் பூட்டு,
ஈஸ்ட் இந்தியா தோல் பொருட்கள் (EI Leather)
 திருபுவனம்  பட்டுப்புடவை 
 கோவில்பட்டி  கடலைமிட்டாய் 
 காரைக்குடி  கண்டாங்கி சேலை 
 இராமநாதபுரம்   குண்டு மிளகாய் 
 கன்னியாகுமரி  கிராம்பு
 ஈத்தாமொழி   நெட்டை தென்னை 
 வில்லியனுர் (புதுச்சேரி) டெரகோட்டா 
 திருக்கானுர் (புதுச்சேரி) பேப்பர் வேலைப்பாட்டு பொருட்கள் (Paper Mache Artworks)
கேரளா, கர்நாடகா, 
தமிழ்நாடு  
மலபார் மிளகு 

மேலும் மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மேக்ரூன், பண்ருட்டி முந்திரி மற்றும் பலா, கம்பம் பன்னீர் திராட்சை, உடன்குடி கருப்பட்டி, ஆத்தங்குடி பளிங்கு ஓடுகள் (Tiles), டெல்டா சீராக சம்பா அரிசி, திருநெல்வேலி அல்வா, மார்த்தாண்டம் தேன் ஆகிய பொருட்களுக்கு GI குறியீட்டுக்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் அசோகா, ராஜபாளையம் பூட்டு, தஞ்சாவூர் மரக்குதிரை ஆகிய பொருட்களுக்கு GI குறியீட்டுக்கான அனுமதி கோரப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

GI-tags-tamilnadu

இந்த பொருட்களெல்லம் எப்போதிலிருந்து செய்ய ஆரம்பிக்கப்பட்டு, எப்படி பிரபலமானது என்பதை தேடி படித்து பார்த்ததில், பெரும்பாலானவை 14-20 நூற்றாண்டு வரை ஏற்பட்ட படையெடுப்பு காலங்களில் குடிபெயர்ந்த மற்ற மாநில (இன) மக்கள் அவர்களுடைய தொழிலை இங்கு செய்ய ஆரம்பித்து மற்றவருக்கும் பயிற்றுவித்தனர். அதுவே இன்றளவும் பெரும் தொழிலாகவும் பலருக்கு வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. அதில் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரத்தில் சங்ககாலம் தொட்டு பட்டுபுடவைகள் நெய்யப்பட்டு வருவதாக சொல்வதுண்டு. மேலும் விஜயநகர பேரரசின் காலத்தில் ஆந்திராவிலிருந்து சாலியர் மற்றும் தேவாங்கர் ஆகிய இரு பட்டு துணி நெய்யும் சாதியினரை அழைத்து வந்து, கோவிலிகளில் உள்ள சிற்பங்களை கண்டு நூலில் கலைவண்ணம் கொண்டு பட்டுபுடவை தறிக்கபட்டது என கூறப்படுகிறது.

ஆரணியில் பட்டு நெய்தல் தொழில் 12ஆம் நூற்றாண்டு தொட்டு நடந்து வருவதாகவும்  சொல்லப்படுகிறது. அப்பகுதியில் உள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக 17 கிராமங்களில் இந்த பட்டு உற்பத்தி செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். விஜயநகர பேராசின் வீழ்ச்சிக்கு பிறகு சௌராஷ்டிரா நெசவாளர்கள் மஹாராஷ்டிரத்திலிருந்து சிலர் ஆரணி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி என குடிபெயர்ந்து பட்டு நெய்யும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் என சொல்கிறார்கள். திருமலை நாயக்கர் காலத்தில் குடியமர்ந்த சௌராஷ்டிரா மக்கள் சேலத்து பட்டும், மதுரை சுங்குடி சேலையும் நெய்து வருகின்றனர். 

மாமல்லபுரத்தில் பல்லவ காலம் முதல் கற்சிற்பங்களுக்கும், கற்கோவில்களுக்கும், குடைவரை கோவில்களுக்கும் பிரசித்தம். அன்று தொட்டு இன்று வரை அந்த சிற்ப பாரம்பரியம் இங்குள்ள கலைஞர்களிடம் தொடர்கின்றது. இன்றும் பெரும்பாலான சிற்பக்கலைஞர்கள் உளியும், சுத்தியலும் கொண்டு தான் சிலை வடித்து கொண்டிருக்கிறார்கள்.

திப்பு சுல்தான் காலத்தில்தான் நகரின் நடுவே உள்ள கோட்டையை பாதுகாக்க திண்டுக்கல் பூட்டு தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து இன்று வரை பூட்டுகளும், அலமாரிகளும் செய்யப்படும் பெரும் தொழிலாக இருந்து வருகிறது. 

முந்தைய கேரளாவில் திருவாங்கூர்-கொச்சி மாகாணத்தில் உள்ள நாகர்கோவிலில் உள்ள கம்மாளர் என்ற சாதியினர் பித்தளையை உருக்கி விளக்குகள் செய்து வந்தனர். பின்னர் சரியானபடி வருவாய்  இல்லாததால் கும்பகோணத்திலும், பின்னர் நாச்சியார் கோவிலிலும் குடிபெயர்ந்து தொழிலை மற்ற மக்கள்களோடு சேர்ந்து இன்றளவும் செய்து வருகின்றனர்.  

தஞ்சையில் நாயக்கர் மற்றும் மராத்தியர் ஆட்சி காலத்தில் தங்க மூலம் பூசப்பட்ட தஞ்சாவூர் ஓவிய பாணிகள் வரைய ஆரம்பிக்கப்பட்டன. மேலும் 19ஆம் நூற்றாண்டில் சரபோஜி மன்னரின் காலத்தில் தலையாட்டி பொம்மைகள் செய்ய ஆரம்பிக்கப்பட்டு இன்றளவும் செய்யப்படுகின்றன. தஞ்சாவூர் வீணைக்கு வரலாறு புராண காலம் முதல் சொல்லப்படுகிறது. தியாகராஜ சுவாமிகளுக்கு நாரத முனிவர் ஆசி வழங்கி தரப்பட்டதாக சொல்லப்படுகிறது. பல வடிவங்களை உடைய வீணை, 17ஆம் நூற்றாண்டில் ரகுநாத நாயக்கர் காலத்தில் பொலிவு பெற்று இன்றளவும் புகழ் பெற்று விளங்குகிறது.

ஈஸ்ட் இந்தியா லெதர் (East India Leather) 1856 -ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு, அது சுதந்திரத்திற்கு பின்னரும் தொடர்கிறது. திண்டுக்கலிலும், திருச்சியிலும் தோல் பதனிடப்பட்டு தோல் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கோவையில் 1955-ல் P.சபாபதி என்பவர் வெட் கிரைண்டர்கள் செய்யும் தொழிலை ஆரம்பித்தார். பின்னர் 1963-ல் P.B. கிருஷ்ண மூர்த்தி என்பவர் லட்சுமி கிரைண்டர்ஸ் என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்து பின்னாளில் இப்பகுதிக்கே மூலதன தொழிலாய் மாறியது.    

1914-ல் தேவ் சிங் என்னும் ராஜபுத்திரர் ஸ்ரீவில்லிபுதிரில் ஆண்டாள் கோவிலருகே லாலா ஸ்வீட்ஸ் என்ற கடையில் கோவிலிருந்து வரும் பிரசாதம் பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து பால்கோவா செய்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். பின்னர் 1970-ல் ஏற்பட்ட வெண்மை புரட்சிக்கு பிறகு பால் கூட்டுறவு சங்கமும், உள்ளூர் பால் உற்பத்தியாளர்களும் சேர்ந்து பால்கோவா செய்யும் தொழிலை ஆரம்பித்து இன்று வரை செய்து வருகின்றனர்.
  
நாகர்கோவிலில் கோவில் ஆபரணங்கள் செய்யும் தொழில் கிட்டத்தட்ட 9ஆம் நூற்றாண்டு முதல் செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இன்றளவும் 350 குடும்பங்கள் பாரம்பரிய முறையில் நகைகள் செய்து வருகிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக பத்தமடையில் பாய் பின்னும் தொழில் நடந்து வருகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் முளைத்திருக்கும் கோரை புற்களை கொண்டு பாய் தயாரிக்கும் முறை இருந்து வருகிறது. இதை கோரைப்பள்ளர் என்ற சமுகமே இதை செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பின்னர் 16/17 நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட எல்லோரும் இஸ்லாமிய மதம் தழுவியதாக சொல்லப்படுகிறது. சிலர் பத்தமடையில் சயீத் கலீபா மீரான் என்ற லப்பை இன இஸ்லாமிய மத போதகரால் கோரைப்புல்லில் பாய் தயாரிக்கும் தொழில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நூற்றாண்டுகளாக பட்டு பாய்கள் செய்யும் தொழில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

1940-ல் பொன்னம்பல நாடார் என்பவர் கோவில்பட்டியில் அவரது மளிகை கடையில் வெல்லம் மற்றும் கடலை சேர்ந்து மிட்டாய் செய்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். இன்று பல இடங்களில் இதே பாணியில் கடலை மிட்டாய்கள் சுவையுடன் செய்யப்படுகிறது. இக்கடலைமிட்டாய்க்கு தாமிரபரணி ஆற்று தண்ணீரின் சுவையும் ஒரு காரணம் என்று சொல்கின்றனர்.     

இது போல இன்னும் பல பிரபமலமான பொருட்கள் நம் பாரம்பரியத்துக்கும், திறமைக்கும், உழைப்புக்கும், நம் தமிழ்நாட்டின் பெருமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தகவல்கள் - கூகிள், விக்கிபீடியா, Geographical Indication Registry   


நன்றி !!!
பி. விமல் ராஜ் 

திங்கள், 27 பிப்ரவரி, 2023

இதை மட்டும் தப்பி தவறி கூட கூகிளில் தேடிடாதீங்க!

வணக்கம், 

நமக்கு ஏதாவது சந்தேகம் அல்லது எதை பற்றியாவது தெரிந்து கொள்ளவோ கூகிளின் உதவியை உடனே நாடுவோம். அவனின்றி இணையத்தில் ஓர் அசைவும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். கூகிளிடம் எதை பற்றி கேட்டாலும் பதில்களை பக்கம் பக்கமாக காட்டிவிடும். ஆனால் கூகிளிடம் கேட்க கூடாத கேள்விகள் நிறைய இருக்கிறது. 

ஒரு நாளைக்கு மூன்றரை பில்லியன் தேடல்கள் (Google Search) கூகுளில் தேடப்படுகின்றன. கூகிள் சர்ச் இன்ஜினில் நாம் எதை தேடுகிறோமோ அதை பற்றிய இணைய தளங்கள், படங்கள், லிங்க்ளை நமக்கு எடுத்து கொடுக்கும். அப்படி நாம் தேடுகிற, பார்க்கிற எல்லாமே எதோ ஒரு இடத்தில், சர்வரில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். தேடலின் போது ஒரு சில 'keywords' அல்லது அது சம்பந்தமாக விஷயங்களை தேடினால், அதுவே உங்களுக்கு பெரும் ஆபத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் சட்டமும் காவல்துறையும் பாய்ந்து வந்து உங்களை பிடித்து உள்ளே தள்ளிவிடவும் வாய்ப்புள்ளது. அந்த தேடலுக்கு பிறகு உங்களையே மற்றவர்கள் தேட வேண்டிய நிலை வந்தாலும் வரலாம். அது என்னன்ன வார்த்தைகள், எதை பற்றியெல்லாம் தேடக்கூடாது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.    

Donot-use-Google-search-for-these-keywords

பாம் தயாரிப்பது பற்றி (How to make Bomb) கண்டிப்பாக தேட கூடாது. வெடிபொருட்கள் பற்றியோ வெடிகுண்டு பற்றியோ தயாரிக்கும் முறை, விளக்கம், உபயோகிக்கும் முறை பற்றியெல்லாம் தேடினால் உங்கள் கதை அன்றோடு முடிந்தது. பல வெளிநாட்டு/உள்நாட்டு அரசாங்க பாதுகாப்பு நிறுவனங்கள் உலகளாவிய சைபர் வெளியில் நோட்டமிட்டு கொண்டே இருக்கும். விளையாட்டாய் தேடினால் கூட பல விபரீத முடிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேச பாதுகாப்பு சட்டம் பாய்தல், உடனடி சிறைவாசம் என உங்களை குற்றமற்றவர் என நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்புண்டு.

பல நாடுகளின் ரகசிய இடங்களான (Undisclosed Secret Locations) ராணுவ தளவாடங்கள், சிறைச்சாலைகள், அணுமின் நிலையங்கள், ஆராய்ச்சி கூடங்கள்,  பிரச்னைக்குரிய நாட்டு எல்லைகள், அரசர்/அதிபர் மாளிகைகள், அரசு கட்டிடங்கள் போன்றவை கூகுளை தளத்திலோ, கூகுளை மேப்ஸிலோ தேடக்கூடாது. ஏற்கனவே இந்த இடங்களெல்லாம் கூகிள் மேப்ஸ்களில் தெளிவாக இல்லாமல் blur-ல் இருக்கும். அதையும் மீறி தேடி பார்த்தால், அந்தந்த  நாட்டு ராணுவம் மூலம் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைச்சேதம் நிச்சயம்.        

அதேபோல தீவிரவாத இயக்கங்கள் (Terrorist Organisations) மற்றும் தடைசெய்யப்பட்ட  இயக்கங்களில் சேருவது அல்லது அதை பற்றிதேடி படித்தால், அரசாங்கத்தின் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு, கண்காணிப்பட்டு கடும் நடவடிக்கையும் சிறை தண்டனையும் உண்டு.   

சிறார் ஆபாச படங்கள்/காட்சிகள் (Child Pornography) பற்றிய இணையதளங்கள், விடீயோக்கள், புகைப்படங்களை பற்றி தேட கூடாது. ஆபாச வெப்சைட்களும், ஆபாச விடீயோக்களும் கோடிக்கணக்கில் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அதுவே தவறு என்று இருக்கும் போது சிறு குழந்தைகளின் ஆபாச வீடியோ மற்றும் வெப்சைட்கள் தேடுபவர்களை உடனடியாக பாரபட்சமின்றி  கைது செய்யப்படுவார்கள். பல நாடுகளில் இந்த சட்டம் உண்டு. இந்தியாவிலும் இக்குற்றத்திற்கு POSCO சட்டம் பாய்ந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். 

கருக்கலைப்பு (Abortion) மற்றும் அதை பற்றிய விவரங்களை இணையத்தில் தேடுதல் பெரும் குற்றமாகும். கருவுற்ற பெண்கள் மீதான குற்றம், குழந்தை இறப்பு விகிதம் குறைக்கவும் ஆகிய குற்றங்களை குறைக்கவே கருக்கலைப்பு பற்றி தேடினாலும் தக்க நடவடிக்கையும் தண்டனையும் எடுக்க வாய்ப்புண்டு. 

பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்ட (Sharing Victim Photo/Identity) அல்லது முயற்சிக்கப்பட்ட அல்லது அதனால் பாதிக்கப்பட்டவரின் படத்தையோ, விடீயோவைவோ கூகிளிலோ அல்லது வேறு வடிவிலான இணையத்தில் உலவ விடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். அதேபோல ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரின் புகைப்படம், வீடியோ அல்லது அந்தரங்க செய்திகளை இணையத்தில் பரவ விடுதல் சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்.

திரைப்படங்களையும், புத்தகங்களையும் (Piracy) உரிமையாளர் அனுமதியின்றி இணையத்தில் பதிவேற்றம் அல்லது பதிவிறக்கம் செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். குறைந்தபட்சம் 3 வருடம் மற்றும் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

உடலில் ஏற்படும் உள்ள பிரச்சனைக்கு அல்லது கோளாறுக்கு தயவு செய்து கூகுளில் காரணம் தேட வேண்டாம். ஒரு வாரமாய் தீராத ஒற்றை தலைவலி.. என்ன காரணம் என கூகுளில் தேடினால், ஏதோ ஒரு லிங்கில் உங்களுக்கு brain tumor அல்லது வேறு ஏதாவது தீரா வியாதியாய் இருக்கலாம்; அதற்கான மருத்துவ வழிகள் அல்லது மருத்துவரை அணுகுங்கள் என காண்பித்து நம்மை குழப்பி, பயமுறுத்தி விடுவார்கள். முடிந்தவரை அருகில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்.   

வங்கிகளில் இணைய வழி சேவையை (Online Banking) பயன்படுத்தும் போதும், வங்கி இணையதளங்கள் போகும் போது நேரடியாக பிரௌசரில் https://www.bankname.com என டைப்  செய்து, உள்ளே சென்று லாகின் செய்யவும். கூகுளில் தேடினால் சில சமயம் போலியான வங்கி தளங்கள் (fake bank websites) முன்னிறுத்தப்பட்டு, அதில் லாகின் செய்யும் பட்சத்தில், உங்கள் பணம் பறிபோக வாய்ப்பிருக்கிறது. அதே போல ஏதேனும் ஒரு சேவை மைய நம்பரை தெரிந்து கொள்ள கூகிளின் உதவியை நாடுவோம். சில நேரத்தில் போலி தளங்களில் உள்ள fake customer care எண்களே காட்டப்பட்டிருக்கும். அதில் டயல் செய்து பேசினால், உங்கள் தகவல்கள் திருடப்பட்டு பின்னர் பணதிற்காகவோ அல்லது வேறு ஏதேனும் முறையில் குற்றம் நடக்கவோ வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.

Fake-websites-in-google-search

மேலும் மொபைல் ஆப்ஸ் மற்றும் மற்ற desktop softwareகளை பதிவிறக்கம் செய்யும் போது கூகுள்  ப்பிளே அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து (Google Play /Apple Store) செயலியை பயன்படுத்தவும். மற்ற தளங்களில் பதிவிறக்கம் செய்யும் போது வைரஸால் பாதிக்கப்படலாம்; அல்லது தகவல்கள் திருடப்படலாம்.

யாரும் இதையெல்லாம் வேண்டுமென்றே செய்து மாட்டிக்கொள்ள மாட்டார்கள். தேடி படிக்கச் வேண்டும் என்ற ஆவலில், எல்லாவற்றையும் கூகுளில் தேட, பார்க்க கூடாது. ஒரு சில விஷயங்களை இணையத்தில் தேடும் போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.  

நன்றி !!!
பி. விமல் ராஜ் 
 

சனி, 11 பிப்ரவரி, 2023

தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் வடக்கர்கள்!

வணக்கம், 

சமூக வலைத்தளங்களில் வடக்கன்ஸ் பற்றிய மீம்ஸ் என்றால் மிகவும் பிரபலம். அவர்களை கேலி, கிண்டல் செய்வதற்கும் இன்டர்நெட்டில் பல வீடியோக்கள் உலவி கொண்டிருக்கின்றன. அவர்களும் அதற்கு ஏற்றார் போல தான் நடந்து கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. பான்பராக் போட்டு கண்ட இடங்களில் துப்புவது, ரயிலில் தகுந்த டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது, ஒரு சிலர் திருட்டு/கொள்ளை என ஈடுபடுவது என வடக்கர்களுக்கும் அவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளும் நம்மில் பலருக்கு எரிச்சலை தான் தருகிறது. 

கடந்த சில வருடங்களாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலைக்காக கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் கட்டிட வேலை, சாலை செப்பனிடும் வேலை, தச்சு வேலை, பிளம்பர், லோடு மென் என தினக்கூலிகளாகவே பலர் வருகின்றனர். அவர்களுடைய மாநிலங்களில் சரியான வேலைவாய்ப்பும், தொழில் செய்வதற்கான கட்டமைப்பும் இல்லாததே இதற்கு பெரும் காரணமாகும். மேலும் வேலைக்கு ஏற்ற சரியான சம்பளமும் கிடைப்பதில்லை. ஆனால் நம் மாநிலத்தில் வேலைக்கு தகுந்த கூலியும், தங்குவதற்கு, சாப்பாட்டிற்கு என அதற்கான வசதிவாய்ப்புகள் சுலபமாகவே கிடைப்பதால் பலர் இங்கு வேலைக்கு வந்து விடுகின்றனர்.

இங்குள்ள தமிழர்களுக்கு (வேலையாட்களுக்கு) கொடுக்கப்படும் சம்பளத்தை/கூலியை விட குறைவாக வடக்கர்கள் பெறுவதால் பெரும்பாலும் முதலாளிகள் கூட வடமாநிலத்தவரையே வேலைக்கு வைக்கிறார்கள். இதனால் பல தமிழர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர் என பலரும் குறை சொல்லி வருகின்றனர். 

north-indian-labourers-tamilnadu

என்னை பொறுத்தவரை இது பெரிய தவறு போல தெரியவில்லை. எல்லா இடங்களிலும் வழக்கமாக நடப்பது தான். (மா) நிலம் என்பது நாட்டில் உள்ள எல்லோருக்கும் பொதுவானது. அது இவர்கள் மட்டுமே தான் வேலை செய்ய வேண்டும்; இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரவேண்டும் என்ற சட்டமெல்லாம் இதுவரை மாநிலங்களுக்கிடையே கிடையாது. 1950, 60களில் நம் தமிழ் நாட்டிலிருந்து பலர் கூலி வேலைக்காகவும், பிழைப்பை தேடியும் வெளிமாநிலங்களுக்கு சென்றனர். தில்லி, மும்பை, பெங்களூர், ஐதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு வேலைக்கு சென்று குடியமர்ந்தனர். அப்போதும் அங்குள்ள மாநிலத்தவர் சிலருக்கு வேலைவாய்ப்பு பறிபோனது. சில இடங்களில் கலவரம், தமிழர்கள் மீது தாக்குதல் போன்றவை இதே வாழ்வாதாரம் காரணத்திற்காக நடத்ததேறியுள்ளதை யாராலும் மறக்க முடியாது. அப்போது நாம் கொதித்து எழுந்தோம்; இந்தியா முழுக்க யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். அதற்கு உரிமை உண்டு என முழங்கியுள்ளோம். இப்போது அதே தவறை நாமும் செய்ய ஆயுத்தமாய் இருக்கிறோம். இன்னும் அவர்களை போல அடித்து விரட்டவில்லை; ஆனால் இது போன்ற வெறுப்பு பதிவுகள்/செய்திகள் தொடருமாயின் விரைவில் நடக்க வாய்ப்புண்டு என்பதில் வியப்பில்லை. அஃது நடக்காமல் இருப்பதே நலம். அதுவே என் எண்ணமும் கூட!

தத்தம் மாநிலங்களில்/மண்ணில் அவரர் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று கோருவது நியாயமான ஒன்று தான். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் வேற்று மாநிலத்தவரை யாரையும் பணிசெய்ய அனுமதிக்க மாட்டோம் என்பது எவ்வகையான மனநிலை எனபது தெரியவில்லை. குறைந்த வருமானத்தில் வேலை செய்பவர்கள், தங்கள் வருமானத்திற்காக எந்த மாநிலமாயினும் (தமிழ்நாடாயினும்), அவர்கள் விருப்பத்திற்கேற்ப எங்கு சென்றும் சட்டத்துக்கு உட்பட்டு, அந்தந்த மாநில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணிசெய்ய முடியும். யாராலும் தடுத்து விட முடியாது. இதை ஒரேடியாக நிறுத்தவும் முடியாது. வேண்டுமானால் மாநில அரசு சில விதிமுறைகளை போட்டு கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். 

ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் வீட்டு கட்டிட வேலைக்கு ஆள் தேவை. நன்கு தெரிந்த நபர் மூலம் தமிழர் ஒருவரும் மற்றும் வடமாநில நபர் ஒருவரும் வேலைக்கு வருகிறார்கள். இருவருமே நல்ல திறமையான, நம்பிக்கையான ஆட்கள். தமிழருக்கு 5000 ரூபாய் சம்பளம் தரவேண்டும்; வடமாநிலத்தவருக்கு 3000 ரூபாய் தந்தால் போதும். நீங்கள் யாருக்கு வேலை போட்டு கொடுப்பீர்கள்? 2000 ரூபாய் அதிகமானாலும் பரவாயில்லை என தமிழருக்கு கொடுப்பீர்களா? அல்லது வடமாநிலத்தவருக்கா? இதைத்தான் ஓட்டல் முதலாளிகளும், பட்டறை முதலாளிகளும், கட்டிட மேஸ்திரிகளும் செய்து கொண்டிருக்கின்றனர். இன்னும் கூட ஒரு குற்றசாட்டு உண்டு. தமிழ் வேலையாட்கள் திறமைனவர்கள் தான்; நல்ல உழைப்பாளிகள் தான். ஆனால் சில சமயத்தில் வேலைக்கு சரியாக வருவதில்லை; வந்தாலும் அதிக நேர இடைவேளை விடுதல், திருவிழா, குடும்ப விசேஷம், பண்டிகை என 10 நாட்களாவது விடுப்பு எடுத்து விடுகின்றனர். வடமாநிலத்தவரோ விடுப்பு இல்லாமல் குறைந்த சம்பளத்தில் வேலையை முடித்து தந்து விடுகிறார்கள். விடுப்பு இல்லாமல், எந்த விசேஷத்துக்கும் போகாமல், குறைந்த சம்பளத்துக்கே எல்லோரும் (நானும், நீங்களும் உட்பட) வேலை செய்ய முடியாது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் முதலாளிகளின் (லாப) பார்வையில் வடமாநிலத்தவரையே தேர்ந்தேடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.

இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. ஏன் எல்லா அமெரிக்க அதிபர்களும் தேர்தல் பிரசாரத்தின் போது Say No to India / Say No to Banglore என்று சொல்கின்றனர்? நாளுக்கு நாள் ஆன்சைட் போகும் இந்தியர்களின் எண்ணிக்கை ஏன் அதிகமாகிறது? அங்குள்ள ஜார்ஜ், பெஞ்சமின், ஆபிரகாம், மேரி போன்றோருக்கு கிடைக்க வேண்டிய வேலை நம்மவூர் ரமேஷ், சுரேஷ், அஜய், விஜய், படேல், சிங் போன்றோருக்கு ஏன் கிடைக்கிறது? இந்தியர்களால் பல அமெரிக்க குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது. அமெரிக்கர்களுக்கு சம்பளம், விடுப்பு, மற்ற சலுகைகள் என எல்லாம் முழுமையாக தர வேண்டும்; ஆனால் நம்மாட்களுக்கோ கொடுத்ததை வாங்கி கொண்டு திவ்யமாக வேலைசெய்து வெள்ளை முதலாளிகளிடம் நல்ல பெயர் வாங்கி கொள்வார்கள்! கிட்டத்தட்ட இது தான் இங்கும் நடந்து வருகிறது. நம் மக்கள் வெளி மாநிலத்திலோ/வெளி நாட்டிற்கோ சென்று வேலை செய்து சம்பாரிப்பது போல, அவர்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். அவ்வப்போது இதுபோல வரும் சில புகைச்சலைகளை உடனே மண்ணை போட்டு மூடி விட வேண்டும். இல்லாவிடில் அது அரசியல் மற்றும் ஊடக வியாதிகளால் ஊதி ஊதி நெருப்பாக மாறி, பெரும் இழப்பை தரும்.      


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

புதன், 25 ஜனவரி, 2023

தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை !

வணக்கம்,

சங்ககால இலக்கிய பாடல்களில் காதல், வீரம், பாசம், அன்பு, கோபம், கருணை என பல சுவைகள் உள்ளது. அதில் நகைச்சுவை என்பது இன்றியமையாதது ஆகும். நமது தமிழ் இலக்கியங்களில் கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி என நகைச்சுவை கலந்து ஒரு செய்தியையோ, கருத்தையோ சொல்வது சர்வசாதாரண ஓன்று. அவற்றுள் சிலவற்றை படித்து ரசிக்கலாம்.


nagaichivai-tamil-illakiyam

நந்திக்கலம்பகம் என்னும் இலக்கியத்தில், தலைவன் (ஆண் - பொதுவாக கணவன்) ஒருவன் பரத்தையர் (வேசி) வீட்டுக்கு செல்கிறான். கூடவே பாணன் (அரசவையில் பாட்டு/இலக்கியம் பாடுபவர்) ஒருவனையும் அழைத்து செல்கிறான். தலைவன் பரத்தையுடன் மகிழ்வுற்று இருக்கும் போது, பாணன் இரவு முழுவதும் வீட்டுக்கு வெளியே நின்று பாடிக்கொண்டிருக்கிறான். மறுநாள் காலையில் தலைவியிடம் (பெண் - மனைவி) சேதி சொல்ல தலைவன் வீட்டுக்கு வரும் பாணன், தலைவிடம் நான் பாடியதை கேட்டீரா என கேட்கிறான். அதற்கு தலைவியும் மனதில் கோபமும் எரிச்சலும் கொண்டு, கிண்டலும் நையாண்டியுடனும் இப்பாடலை சொல்கிறாள்.


" ஈட்டுபுகழ் நந்தி பாண நீ எங்கையர் தம்
வீட்டிலிருந்து பாட விடிவளவும்கேட்டிருந்தோம்
பேயென்றாள் அன்னை பிறர் நரியென்றார் தோழி
நாயென்றாள் நீ என்றேன் நான்
".


பொருள் - புகழ் ஈட்டிய நந்திவர்மன் அரசவையில் பாடும் பாணனே! நீ என் தங்கையர் (பரத்தை ஆனாலும், கணவனுடன் இருப்பதால் தங்கை என சொல்கிறாள்) வீட்டில் இரவு முழுவதும் பாடியதை விடியும்வரை கேட்டோம். பேய் அலறுகிறது என்றால் என் அன்னை, மற்றவர்கள் நரி என்றார்கள், என் தோழி அது நாய் என்று சொல்ல; நான் நீ என்று சொன்னேன்! பாணன் பேசுவது பிடிக்காவிடிலும் அதை பாடலில் நயமாக கிண்டலும் கேலியுடனும் பாடியது இதன் சிறப்பாகும்.


திருக்குறள் நூலில் வள்ளுவர் கயவர் (தீயவர்), பேதையர் (முட்டாள்) ஆகியோரின் நட்பு, எண்ணம் பற்றி நயமாக சொல்லியுள்ளார்.


"தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்" (குறள்
: 1073)


பொருள் - தேவர்களும் கயவர்களும் ஒப்பானவர்கள். ஏனெனில் இருவரும் மனம்போன போக்கில் தாம் விரும்பியதை செய்வார்கள்கயவர்கள் எதையும் யோசிக்காமல், தாம் நினைத்த தீயதை செய்து கொள்வார்கள் என்று சொல்கிறார்.


"நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்" (குறள் 1072)


பொருள் - பேதையர்கள் (முட்டாள்கள்) நட்பு கொள்வது இனிமையானது தான். ஏனெனில் அவர்களை பிரிந்து செல்லும் போது பெரும் வருத்தமோ கஷ்டமோ இருக்காது என முட்டாள்களை கிண்டல் செய்து பாடியுள்ளார்.


கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். (குறள்: 403)


கல்லாதவரும் நல்லவர்களே! எப்போது வரை என கேட்டல் அவர்கள் கற்றறிந்தவர்கள் முன் ஏதும் பேசதவரை என்று அவர்களில் கல்லாமையை பற்றி கூறி நகைத்துள்ளார்.


சிலேடை என்னும் இலக்கிய பாடல்களில், கவி காளமேகபுலவர் தம்மை மதிக்காத திருமலைராயன் அரசவையில் உள்ள 64 புலவர்களை நகைத்து கவி
ப்பாடியுள்ளார். அந்த 64 புலவர்களும் தங்களை கவிராஜன் என சொல்லி கொண்டனர். 


வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே - சாலப்
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்
கவிராயர் என்றிருந்தக் கால். 


பொருள் -  கவிகளின் அரசர் என்று சொல்லும் புலவர்களே! உங்களுடைய வால்  எங்கே ? நீண்ட வயிறு எங்கே? முன்னங்கால்கள் எங்கே? உள்ளோடிய கண்கள் எங்கே?  என கிண்டலும் கேலியுடனும் பாடியுள்ளார். கவிராஜன் என்னும் சொல்லுக்கு 'கவிகளின் அரசன்' மற்றும் 'குரங்கு' என இரு பொருள்படும். இவ்வாறு புலவர்களை குரங்குக்கு ஒப்பாக கேலி செய்துள்ளார்.


இன்னோரு சந்தர்ப்பத்தில், காளமேக புலவர் தாகத்திற்காக ஒரு பெண்மணியிடம் மோர் வாங்கி குடித்துள்ளார். மோரை குடித்துவிட்டு பின்வரும் பாடலை பாடியுள்ளார்.


கார் என்று பேர் படைத்தாய் ககனத்துரும்போது
நீர் என்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வீழ்ந்ததன் பின்
வார் சடை மென்கூந்தல் பால் ஆய்சியர்கை வந்ததன் பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.


பொருள் - ஆகாயத்தில் இருக்கும் போது மேகம் என்னும் பெயர் பெற்றாய்; தரையில் மழையாய் வரும் போது நீர் என்று அழைக்கப்பட்டாய்; கச்சை யணிந்த இந்த ஆயர்குல ஆச்சியிடம் இருக்கும் போது மோர் என்று அழைக்கப்படுகிறாய் ; ஆகவே மூன்று பேர்களையும் நீ பெருகிறாய் என்ன கிண்டலுடன் பாடியுள்ளார். இதன் பொருள் வேறொன்றும் இல்லை. மோர் தண்ணீரை போல இருக்கிறதாம். அதைத்தான் இப்படி சொல்கிறார்.


புறநானூறு பாடல்களில் அதியமானின் போர் தூதாக வந்த அவ்வையாரை தொண்டைமான் மன்னன் அவருடைய படைக்கெட்டிலுக்கு அழைத்து சென்று காண்பித்தான். அவனுடைய ஆயுதசாலையில் உள்ள படைக்கலன்கள் எல்லாம் புத்தம் புதிதாக பளபளவென இருந்தது. நீண்ட கூரான வேலும், ஈட்டியும், வளைந்த வில்லும்கூரான அம்பும் குவிந்து வைக்கப்பட்டிருந்தன. தொண்டைமான் தன் ஆயுத கிடங்கில் ஆயுதங்கள் ஒழுங்காக அடுக்கி வைத்துள்ளதை பெருமைகளாய் சொல்லி வந்தான். அதை கண்டா அவ்வையார் கீழே வரும் பாடலை பாடினார்.     


இவ்வே , பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி செய் அணிந்து
கடியுடை வியன்நகர் அவ்வே , அவ்வே
பகைவர் குத்திக் கொடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில் !


பொருள் - இங்கே (தொண்டைமான் ஆயுத கிடங்கில்) உன் ஆயுதங்கள் மயில்தோகையால் அலங்கரிக்கப்பட்டு , பீலி மலர்கள் பூண்டு பளபளப்புடன் இருக்கின்றன. உன் ஆயுதசாலையை சுற்றி காவல் இருக்கிறது; உன் படைக்கலன்கள் ஒருமுறையேனும் போரை கண்டதாய் தெரியவில்லை.  மினுமினுப்புடன் அப்படியே இருக்கிறது. ஆனால் அங்கு (அதியமான் ஆயுத கிடங்கில்) ஆயுதங்கள் முனை மழுங்கி, கூரில்லாமல், உடைந்து செப்பமிட வேண்டியதாய் இருக்கிறது. அவனுக்கு ஆயுதங்களை உபயோகிக்கவே தெரியும், அழகு பார்க்க தெரியாது என்று கூறினார்.  
அதாவது நீ பளபளப்புடன் பத்திரமாய் வைத்துள்ளாய்; ஆனால் அவன் பல போர்களை கலந்து கொண்டு, வென்று ஆயுதங்கள் முனைமழுங்கி எப்போதும் போரிட தயாராய் இருக்கிறான் என அவ்வையார் சாமர்த்தியமாக பேசி போர் நடக்காமல் தடுக்கிறார். 


பாரதிதாசன் தம்முடைய இருண்ட வீடு என்னும் படைப்பில் வரும் ஒரு பாடல்:


பிட்டுக் காரி தட்டினாள் கதவையே

திட்டென்று கதவைத் திறந்தான் பெரியவன்

பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்

பெட்டி மீதில் இட்டுட் கார்ந்தான்

ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான்

நாவில் இடுகையில், நடுவயிறு வலித்தது

வெளிக்குப் போக வேண்டுமென் றுணர்ந்தான்

வடையின் சுவையோ விடேன்விடேன் என்றது

கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான்.

மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்

வில்லம்பு போல மிக விரை வாக

நடுவிற் கிடந்த நாயை மிதித்துப்

படபட வென்று பானையைத் தள்ளிக்

கன்றின் கயிற்றால் கால்தடுக் குற்று

நின்ற பசுவின் நெற்றியில் மோதி

இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப்

புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு!


பொருள் - வடைக்கும் பிட்டுக்கும் ஆசைப்பட்ட ஒருவன், அதை தின்று வயறு கோளாறாகி கொல்லைக்கு ஓடிய செய்தியை நகைச்சுவையாய் கூறியுள்ளார்.


இது போல இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது. ஒருவருக்கு பாடம் புகட்டவோ அல்லது கிண்டலுடன் தம் கருத்தை சொல்லவோ நம் தமிழ் இலக்கியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குரியதாகும். வேறு ஏதேனும் நகைச்சுவை கலந்த பாடல் இலக்கியங்கள் உங்களுக்கு தெரியுமாயின், பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!


நன்றி!!!
பி. விமல் ராஜ்