வியாழன், 20 ஏப்ரல், 2023

மாறிய பண்பாட்டு அசைவுகள் !

வணக்கம்,

தமிழரின் பண்பாடு மிக தொன்மையானது. சங்க காலத்துக்கும் மிக முந்தையது. தமிழரின் இலக்கியம், கல்வெட்டுக்கள், தொல்பொருள் அகழ்வாராய்வுகள், அவர்கள் பயன்படுத்தி வந்த பல்வகைப் மட்பாண்டங்கள், செங்கல் கட்டமைப்புகள், பண்டைய எழுத்து முறை, அகழ்ந்தெடுக்கப்பட்ட செயற்கைப் பொருட்கள், குகைகள் மற்றும் மட்பாண்டங்களில் காணப்படும் எழுத்து வடிவங்கள், ஆற்றுப்படுகைகளில் கிடைத்த நாணயங்கள், அரசர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள், ஆகியன சங்க கால மக்களின் வாழ்க்கை ஒழுக்கத்தினை அறிய உதவும் சான்றுகளாக இருந்தன. தமிழ் மொழிக்கு எவ்வளவு புகழ் உள்ளதோ அதுபோன்று தமிழரின் பண்பாடுகளு அத்தகைய சிறப்பும், புகழும் நிலைத்து இருக்கிறது.

தமிழர் பண்பாடு என்பது கலை, இலக்கியம், உணவு, உடை, பழக்கவழக்கம், வழிபாட்டு முறை என அனைத்தும் கலந்தது. தொன்ம குடிகளாய் இருந்த நாம், அன்று போல இன்றும் அதே பாரம்பரிய பண்பாட்டில் தான் வாழ்கின்றோமா என்றால் 'இல்லை' என்பதே அதற்கு உண்மையான பதிலாகும். காலத்திற்கு ஏற்றார் போல கொஞ்சம் கொஞ்சமாக நம் பண்பாடும், வழக்காற்றாலும் மாறிக்கொண்டே வந்துள்ளது. பன்முக கலாச்சாரங்கள் கலக்கும் போது இத்தகைய மாற்றங்களை தடுக்க வாய்ப்பில்லை. அதனை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

tamilar-panpaattu-maatrangal

உணவு :
தமிழரின் உணவு என்பது மண் சார்ந்த வாழ்வியலோடும், பண்பாட்டோடு கலந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புவியியல் நிலைமைகளை அறிந்து உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற உணவு வகைகளை உண்டு வாழ்ந்துள்ளனர் தமிழர்கள். ஒரு குறிப்பிட்ட மக்களுடைய பண்பாட்டை, தொன்மையை அறிய அவர்தம் உணவு பழக்க வழக்கங்களை கவனிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. இதைப்பற்றி ஏற்கனவே முந்தைய பதிவில் எழுதியுள்ளேன் (நீரும் சோறும் - தமிழர் பண்பாடு !).

உடை:
"உண்பது நாழி உடுப்பவை இரண்டே" என்று புறநானூற்றில் சொல்லப்படுவது போல பண்டைய தமிழர்கள் மேலாடை, கீழாடை என இரு வகையான ஆடைகளுடனிருந்தமையால் பெண்களும் அவ்வாறே இருந்திருப்பார்கள். பருவகால மாற்றத்தின் போது உடைகள் வேறுபட்டிருக்கலாம். அரச குலத்தவர் மட்டுமே கணுக்கால் அளவு துணி உடுத்தியிருப்பதும், மற்றவர்கள் முழங்கால் வரை கட்டப்பட்ட அரையாடையினையே உடுத்தியிருப்பதும் இயல்பாக ஒன்றாக இருந்துள்ளது. சிலப்பதிகாரத்திற்கு முந்தைய காலங்களில் பெண்கள் மேலாடை அணித்துள்ளதாக ஏதும் குறிப்பில்லை. 9ஆம் நூற்றாண்டு முன்னர் கோவில்களில் வடித்த பெண் சிற்பங்கள் பெரும்பாலும் மார்பு கச்சை இல்லாமல் இருப்பதாய் கொண்டு அக்காலத்தில் பெண்கள் மேலாடை அணியாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதாகவும் சொல்கின்றனர்.

'புடைவை' என்னும் சொல் ஆண்களும் பெண்களும் அணிந்து கொள்ளும் நீண்ட துணியினையே குறிக்கும். திருநாவுக்கரசர் தமது பாடலில் 'வெண்புடைவை மெய் சூழ்ந்து' என சமண துறைகளில் உடையை சொல்கிறார். 15ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் விஜயநகர பேராசின் ஆட்சியில் தான் புடவை 14,16,18 முழ சேலைகள் கட்டும் வழக்கம் வந்தது. சாதிப்படி நிலைக்கு ஏற்றார் போல புடவை தலைப்பை இடது/வலது தோல் மாற்றி கட்டும் வழக்கமும் உருவானது. ஆண்கள் அணியும் மேல் சட்டையும், அரைக்கால் / முழுக்கால் சட்டையும் நவாப்புகளும், ஆங்கிலேயரும் வந்த பின்னரே இப்பழக்கம் வந்துள்ளது .

பண்டிகை:
தமிழர்களின் தனிபெரும் திருவிழாவாக இருப்பது தைப்பொங்கல் திருநாள் ஆகும். தை மாதத்தில் உழவர் மக்கள் அறுவடை காலத்தில் கொண்டாப்படும் ஓர் முக்கிய பண்டிகையாக இருக்கிறது. சமய எல்லையினை கடந்து அனைவரும் கொண்டாடும் ஒரு விழாவாகவும் இருக்கிறது. பிறப்பு, இறப்பு போன்ற தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா இது. பொங்கல் திருவிழாவின் போது திருவிளக்கின் முன் படையலில் கரும்பும், காய்கறிகளும், கிழங்கு வகைகளும் முக்கிய இடத்தை பிடித்திருப்பதை பார்க்கலாம். கிழங்கு வகைகளில் சேனை கிழங்கு, கருணை, சிறுக்கிழங்கு, பனங்கிழங்கு போன்றவற்றை படைப்பார்கள்.

பொங்கல் போலவே பெரிதும் கொண்டாடப்படும் மற்றொரு பண்டிகை சிறுவீட்டு பொங்கலாகும். மார்கழி மாதம் முழுவதும் வைகறை பொழுதில் எழுந்து, வாசலில் நீர் தெளித்து, கோலமிட்டு, சாண உருண்டைகளில் பூ (பீர்க்கம், பூசணி, செம்பருத்தி) சொருகி வைக்கும் வழக்கம் இருந்த்துள்ளது. இவ்வாறு வாசலில் பூ வைக்கும் வீடுகள் பெண் பிள்ளைகளை கொண்டிருக்கும். மார்கழி மாதம் பெளர்ணமி அன்று தொடங்கி, தை மாதம் பெளர்ணமி அன்றுதான் ஆண்டாளின் நோன்பு முடிவடைகிறது. தைப்பூச தினதிற்கு முன்பே, அப்பெண் பிள்ளைகள் களிமண்ணில் சிறு வீடுகட்டி, பொங்கல் இட்டு , தனக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைய பெண் குழந்தைகள் இறைவனை வழிபட்டிருக்கிறார்கள். இப்போன்ற சிறு வீட்டு பொங்கல் இந்திராவும் தென் மாவட்டங்களில் நடந்து வருகிறது. தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், மாசிக்களரி என்னும் சிவராத்திரி , சித்திரை பிறப்பு, வைசாசி விசாகம், ஆடி பதினெட்டாம்பெருக்கு ஆகிய பண்டிகைகள் தமிழ்நாட்டில் சைவமும் சமணமும் தழைத்தோங்குவற்கு முன்பே தமிழர்களால் கொண்டாடப்பட்டவை ஆகும்.

இன்று பெரும் தமிழர் பண்டிகை போல கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை தமிழரின் பாரம்பரிய பண்டிகை அல்ல. ஆரிய படையெடுப்பிற்கு பின்னர், புராண கதைகளில் வரும் கண்ணன் நரகாசுரனை அழித்த நாள் என கொண்டாடப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் இராமன் ராவணனை கொன்று அயோத்தி திரும்பிய நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டைய காலத்தில் சமண மாதத்தில் 24ஆம் தீர்த்தங்கரர் இறந்த நாளில் விளக்கேற்றி கொண்டாடப்பட்டு வந்தது; அதை மழுங்கடித்து திசை திருப்பவே நரகாசுரன் இறந்த நாளில் பட்டாசு வெடித்து, விளக்கேற்றி கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது.

தாலி கட்டுதல்:
இப்போதைய தமிழர் திருமண விழாவின் போது மணமகன் மணமகளுக்கு தாலி கட்டும் நிகழ்வு ஓர் முக்கிய அம்சமாக விளங்குகிறது. தாலி கட்டுதலை மையமாய் வைத்து பல சடங்குகளும், சம்பிரதாயங்களும் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறன்றன. தொன்ம காலங்களிலும், சங்க இலக்கிய நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றிலும் தாலியை பற்றி குறிப்பு ஏதும் இல்லை. இதன் மூலம் பண்டைய காலத்தில் தாலி காட்டும் வழக்கம் இருந்ததில்லை என்பதாக அறியமுடிகிறது.

தாலி என்பது காதணி, மூக்கணி, விரலணி போல கழுத்தில் அணியும் ஒரு அணிகலன்களாக அணிந்துள்ளனர். மேலும் தீயவை அண்டாமலிருக்க இடுப்பில் அரைஞாண் கயிறு, தாயத்து, நாய் காசு, அரசிலை, மணி போன்றவற்றை கட்டியுள்ளதாக குறிப்புள்ளது. மேலும் வீரத்தின் அடையாளமாக ஆண்கள் புலிப்பல்லை கயரிலோ/சங்கிலியிலோ கோர்த்து போட்டுக்கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது.

தாலி என்னும் சொல்லின் வேர் அறியபடவில்லை. ஆயினும் ஒரு சிலரின் கருத்துக்கள் படி, தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்ததுள்ளதாக சொல்கின்றனர். தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருளாகும். பனை ஓலைத் தாலி, அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து தாலியாய் ஆக்கினர். பொன்னாலான தாலியில் ஒவ்வொரு சமூகத்திற்கு ஏற்றாப்போல உருவத்தில் மாறுபடும். அது சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வை குறிக்கும் விதமாகவும் இருக்கிறது. உணவு சேகரிக்கும் வழக்கம் உடைய சிலர் கழுத்தில் தாலிக்கு பதிலாக காரை கயிறை காட்டுவார்கள். கழுத்தில் இருக்கும் காரை எலும்புடன் ஒட்டி இருப்பதால் அது 'காரை கயிறு' என்ற பெயர்பெற்றது. 7ஆம் நூற்றாண்டில் ஆண்டாள் திருமண சேவையை பற்றி பாடும் போதும் எல்லா அணிகலன் பற்றியும் சடங்குகள் பற்றியும் பாடியுள்ளார். ஆனால் அதிலும் தாலியை பற்றி பாடலோ/குறிப்போ ஏதுமில்லை. கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றில் தாலி கட்டுதலோ, தாலி என்ற சொல்லோ வழக்கில் இல்லை. இதை பல தமிழ் ஆய்வாளர்களும் புலவர்களும் உறுதியாக சொல்லியுள்ளனர். அதன் பின் தான் திருமணங்களில் தாலிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அதனை புனிதமான மங்கள பொருளாக மாற்றியுள்ளனர்.

கோவில் வழிபாடு:
பெரு தெய்வ வழிபாடு என்பது சைவ வைணவ முறையில் வழிபடப்படும் தெய்வங்களான சிவன், பார்வதி, திருமால், லட்சமி, கண்ணன், நவகிரகங்கள் ஆகியன ஆகும். பண்டைய தமிழர்கள் சிறுதெய்வ வழிபாட்டு முறையே பெரிதும் பின்பற்றினார்கள். சிறுதெய்வ வழிபாடு என்பது நாட்டார் தெய்வங்களை வழிபடும் முறையாகும். இந்த சிறுதெய்வ வழிபாட்டில் வீட்டுத்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனதெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு மற்றும் வெகுசனத் தெய்வ வழிபாடு எனப் பல வகைகள் காணப்படுகின்றன. ஐயனார், கருப்பு சாமி, சுடலைமாடன், மதுரை வீரன், மாரியம்மன், பேச்சியம்மன் போன்ற சிறு தெய்வங்கள் காவல் தெய்வங்களாகவும் இருக்கின்றன. இந்த தெய்வ வழிபாட்டு முறையில் பொதுவான இலக்கணங்களோ, வரைமுறைகளோ வகுக்கப்படவில்லை. அவை காலம்காலமாக முன்னோர்களால் செய்யப்படுகின்றன சடங்குகளை அடிப்படையாக வைத்து பின்பற்றப்படுகின்றன. இந்த தெய்வங்களின் வழிபாடானது நாட்டார் மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும், அவர்கள் முன்னோர்கள் கற்றுத் தந்த முறைப்படியும் நடக்கிறது. சிறுதெய்வ வழிபாட்டின் போது கண்டிப்பாக படையல் (பலி) கொடுக்கும் வழக்கம் இருக்கும். சில சிறுதெய்வங்களுக்கு படையலில் பொங்கலும், உளுந்து சுண்டலும், பானகமும் படைக்கப்படுகிறது. வேறு சில தெய்வங்களுக்கு ஆடு, கோழி, கிடாய், பன்றி என படையலாக வைக்கப்படுகிறது. சில காவல் தெய்வங்களுக்கு சுருட்டு, கள் என படைக்கப்படுவதையும் காண முடிகிறது.

பண்டைய காலத்தில் இப்போது உள்ளது போல கோவில் பூசைக்கு பார்ப்பனர்கள் உபயோகப்படுத்த படவில்லை. குருமார்கள் என்று சொல்லப்படுபவர்களே கோவிலில் பூசாரிகளாகவும், பூசை செய்பவர்களாகவும் இருந்துள்ளனர். இந்த குருமார்கள் சாதி அடுக்கில் உயர்ந்தவர்களாக இருக்கவில்லை. மாறாக சடங்கு செய்யும் அந்தந்த சாதியினருக்கு தங்கள் சமூக படிநிலையில் கீழ்பட்டவர்களாகவே இருந்துள்ளனர். பறையர், மருத்துவர் (நாவிதர், குடிமகன்) ,வண்ணார் , வள்ளுவர், வேளார் (மண்பாண்டம் செய்வோர்), பண்டாரம் (நந்தவனம் வைத்து பூத்தொடுப்பவர்) ஆகிய சாதிகளை சேர்ந்தோர் குருமார்களாக இருந்துள்ளனர். சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை பழனி, இராமேஸ்வரம் ஆகிய கோவில்களில் பண்டாரம் என்போர் குருமார்களாக இருந்து கோவிலுக்கு சேவகம் செய்துள்ளனர். ஆனால் நாயாக்கர் காலத்தில் இவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டு அவை பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்போதுள்ள நமது பண்பாடு எவ்வளவு மாறுதலுக்கு பின்னர் நாம் பின்பற்றிவருகிறோம் என்பதை இதன் மூலம் அறியலாம். இதைத்தவிர நாமறியா பண்பாட்டு தொன்மங்கள் பல இருக்கிறது. முன்பே சொன்னது போல சில நூற்றாண்டுகளில் படையெடுப்புகள், இனக்குழுக்களின் வருகை, சாதி/மதங்களின் குறுக்கீடுகள் என வரும் பொழுது, இது போல பல பண்பாட்டு மடை மாற்றங்களும், மாற்று கலாசாரமும் கலப்பது இயல்பான ஒன்றே ஆகும். இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பிறகு என்னன்ன மாற்றங்கள் வரும் மிகவும் என்பதை காலமே முடிவு செய்யும்.

தகவல்கள்:
பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவம்
மானுட வாசிப்பு - தொ.ப.வின் தெறிப்புகள் - தயாளன், ஏ.சண்முகநாதன்

நன்றி!!!
பி. விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!