ஞாயிறு, 24 மார்ச், 2013

புதிய விடியலை நோக்கி...

வணக்கம் !!!

சில தினங்களாக எல்லா ஊடகங்களிலும் முதன்மை செய்தியாக இருப்பது இலங்கை தமிழர்கள் பிரச்சனையும், தமிழக மாணவர்களின் போராட்டமும் தான். ஆளாளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் நானும் எனது கருத்துக்களை பகிர விரும்புகிறேன்.

2009-ல் இலங்கை அரசின் கொலைவெறி தாக்குதலால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெடிகுண்டு தாக்குதலில் பலியானார்கள். பலஆயிரம் பேர் காயங்களோடு இந்தியாவிற்கு அகதிகளாக வந்தனர். பல ஆயிரம் பேரை இலங்கைப்படையை சேர்ந்த வீரர்கள் வெறியர்கள், ஈழத்தமிழர்களை நிர்வாணபடுத்தி சித்திரவதை செய்து இரக்கமே இல்லாமல் கொன்று குவித்தனர். அதை நாமும் சேனல் 4 உதவியுடன் பல காணொளிகளை  நாமும் பார்த்துள்ளோம்.

இதைத்தவிர, அடிக்கடி இலங்கை கடற்படையினரால் நாகை, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி தாக்குதலும், அவர்தம் மீன்பிடி வலைகளை அறுத்தும்,சிறைபிடித்தும், அவர்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்தும் விடுகின்றனர்.


இவ்வளவு போர்க்குற்றங்களை செய்தபின் வீரன் வேலுபிள்ளை பிரபாகரனை சூழ்ச்சி செய்து கொன்று, போரில் வென்றுவிட்டதாக மார்தட்டி கொள்ளும் சிங்கள வெறியர்கள், போர் முடிந்த பின்பும் ஈழ மக்களை பெண்கள், குழந்தைகள், எனவும் பாராமல் சித்திரவதை செய்து கொன்று குவிக்கிறனர். 

இத்தகைய போர்க்குற்றங்களையும் அராஜகங்களையும்  நிறுத்தக்கோரி தமிழக மக்களும், தமிழ் அமைப்பினரும் தமிழக அரசும் பலவித போராட்டங்களை நடத்தியுள்ளனர். மேலும் ஐ.நா சபையின் வாயிலாகவும் இந்த கொடூர செயல்களை தடுக்க முயற்சித்து  ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்துள்ளனர். மத்திய அரசோ இதைப்பற்றி கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இலங்கை  உள்நாட்டு விஷயத்தில் நாம் ஓரளவு தான் தலையிட முடியும் என்றும், வெளியுறவு அமைச்சர் இலங்கையில் பேச்சுவார்த்தையில் உள்ளார் என்றும், திரும்ப திரும்ப ஒரே பதிலை தான் சொல்கின்றனர்.                                      

இவர்கள் தான் இப்படி என்றால், தமிழக அரசு இன்னும் மோசம். கடந்த ஆட்சியின்போது,  இலங்கை பிரச்னைக்கு  ஒரு தீர்வுக்கு வராவிட்டால் மத்திய அரசிடமிருந்து ஆதரவை  திரும்ப பெற்று கொள்வோம் என பூச்சாண்டி காட்டியதுடன் சரி. மக்கள் நம்புவார்கள் என எண்ணி ஒரு நாள் (3 மணி நேர) உண்ணாவிரத போராட்ட நாடகமும் நடத்தி, இவர்கள் சொன்னதால் இலங்கை அரசு போரை நிறுத்திவிட்டதாக சொல்லியும்  விளம்பரத்தை தேடி கொண்டனர். இப்போதுள்ள ஆட்சியிலும் பழிவாங்கும் படலத்தை தவிட வேறு எதுவும் இவர்கள் செய்ததாக தெரியவில்லை.

இந்த இனப்படுகொலைகள் கிட்டத்தட்ட 30/40 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருகிறது. பல பிரதமர்களும், முதலமைச்சர்களும் வந்து சென்றாலும் உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. இனப்படுகொலைகள் காரணமாக அவ்வபோது சில பேச்சாளர்களை இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார்கள் என கூறி கைது செய்தது தான் மிச்சம். எனக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் எந்த அரசும், (சில) அரசியல்வாதிகளும் ஆட்சியில் இருக்கும் போது இந்த பிரச்சனைகளை பற்றி குரல் கொடுக்க மாட்டர்கள். அனால்,அவர்களே எதிர்க்கட்சிகளாக மாறும்போது இனப்பற்று அதிகமாகி, அவர்களும்  தமிழினத்தை சேர்ந்தவர்கள் என தெரிந்து நாளோரு அறிக்கையும், மாதமொரு போராட்டமும் நடத்துகின்றனர். இவர்கள் யாரை
ஏமாற்றுகிறார்கள் ???            

இலங்கை தமிழர் பிரச்சனை வெடிக்கும் போதெல்லாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு அமைப்பினரும், தனித்தனியே போராடி தங்கள் எதிர்ப்பை காட்டுகின்றனர். சினிமா துறையினரும் தனியே போராட்டம் நடத்தி அவர்களுடைய விளம்பரத்தை தேடி கொண்டனர். இவர்களால் இந்த பிரச்சனையை தீர்க்க முடியது என தெரிந்தும் தங்கள் தமிழ்பற்றை காட்டவும், மற்றவர் யாரும் தங்களை இனப்பற்று இல்லாதவர் என சொல்லிவிட கூடாது என்பதற்காகவும் இப்படி செய்கிறனர்.
  
ஆனால் இவற்றிற்கெல்லாம் விதிவிலக்காக இப்போது தமிழக மாணவர்களின் அறப்போராட்டம் எந்தவித சொந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி போராடுவது ,சற்றே மனதை நெகிழ செய்கிறது.

'பஸ் டே'  கொண்டாடும் போது இவர்கள் பண்ணாத அட்டூழியம் இல்லை. குறிப்பாக லயோலா, பச்சையப்பா மற்றும் நியூ கல்லூரி மாணவர்கள் தான். இவர்களை திட்டாத வாயே இல்லை எனவும் கூறலாம். ஆனால் இப்போது எட்டு பேருடன் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம், இன்று எட்டுத்திக்கும் பரவி எல்லா கல்லூரி மாணவ மாணவியரும் கலந்து கொள்ள செய்துள்ளது. மாணவ/மாணவியருடன் பொது மக்களும் அதற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

இது ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் ஒற்றுமையை காட்டுகிறது. எனக்கு என்னவோ எதிர்ப்பை காட்டவோ,கோரிக்கைகளை நிறைவேற்றவோ, தமிழகத்தில் போராடுவதை விட, டில்லியில் பெரிய "கை" களின்  வீட்டின் முன்னே அறப்போராட்டம் நடத்தினால் என்ன என்று தான் தோன்றுகிறது.அப்போது தான் ஒட்டுமொத்த நாட்டிற்க்கும் இந்த பிரச்சனைகள் தெரிய வரும். மற்ற மாநில/ மொழி  ஊடகங்களும் இதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வேறு இனமக்களுக்கும்  புரிய வைப்பார்கள்.

1969-ல்  மாணவர்களும், மற்ற தமிழ் அமைப்பினரும் மொழிப்போருக்காக போராடி  வெற்றியும் அடைந்தனர். அதுபோல இப்போது மாணவர்களின் கிளர்ச்சி பலரையும் தட்டி எழுப்பி உள்ளது. இதுவும் வெற்றி பெறும் என்று நம்புவோமாக!!!

எவ்வளவு தடைகள் வந்தாலும் இலங்கையில், தனி ஈழம் நாடு கிடைக்கும் வரையிலும்,போரில் எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு தக்க உதவியும் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை ஐ.நா சபை ஏற்று போர்க்குற்றவாளிகளை தண்டித்து ஈழமக்களுக்கு புதிய வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும். இனியாவது அவர்களுக்கு புதிய விடியல் மலரட்டும்...

மலரட்டும் தனி ஈழம் !!! வெல்லட்டும் தமிழினம் !!!  



நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 

2 கருத்துகள்:

  1. இந்த ஒற்றுமை எந்த ஒரு சக்தியாலும் குலையாமல், வெற்றி பெற வேண்டும்... பெறும்... எதற்கும் ஒரு விடிவு காலம் உண்டு...

    பதிலளிநீக்கு
  2. இந்த போராட்டம் மட்டும் அல்ல...எல்லா போரட்டங்களிலும் சுயநல ஆதாயம் தேடும் இவர்களை போன்றோர் இருக்க தான் செய்கிறார்கள்...

    போராட்டம் வெற்றி பெற்றவுடன் பெருமையா போஸ்டர் ஒட்டிக்கணும் ல...அதுக்காக தான் இதெல்லாம்..

    ஐ.நா சபைக்கு சென்று ஒரு கடிதம் குடுத்துட்டு வந்ததுக்கு போட்ட போஸ்டர் எல்லாம் இன்னும் என் கண்களில் நிற்கின்றன..

    இங்கு நடிகர்கள் மட்டும் நடிப்பதில்லை...மக்களின் பிரதிநிதிகளும் நடிக்கதான் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

Your Comment is sent for approval.