ஞாயிறு, 18 நவம்பர், 2018

காசு,பணம் சேர்த்து வைக்கலாமா ?

வணக்கம், 

பொதுவாக யாருடைய பயோடேட்டாவிலோ அல்லது அவர்களை பற்றி சொல்லும் போதோ hobby (பொழுதுபோக்கு) என ஏதேனும் ஒன்றிரண்டை சொல்வார்கள். பெரும்பாலும் புத்தகம் படித்தல், பாட்டு கேட்டல், கிரிக்கெட், ஃபுட் பால், இணைய அலசல், சமூக வலைதளத்தில் அரட்டை, தபால்தலை சேகரித்தல் என பல சொல்வார்கள். அதுபோன்ற  பொழுதுபோக்கில் நாணவியல் என சொல்லப்படும் நாணயம்/ ரூபாய் நோட்டு சேகரித்தல் (Coin and Currency Collections - Numismatics) முக்கிய ஒன்றாகும். அதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

indian currencies

நாணவியலில் வெறும் காகித நோட்டுகளையும் காசையும் சேர்த்து வைப்பது பெரிய விஷயமில்லை. அதன் சிறப்பு மற்றும் பிற தகவல்களையும் தெரிந்து வைத்திருப்பது முக்கியம். வெறும் உலோகங்களையும் காகித்தையும் சேர்ப்பது பயனற்றது. நோட்டை பற்றியும் நாணயங்களை பற்றியும் என்னன்ன விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

Coin and Currencies சேகரிக்கும் போது நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்:

1) முதலில் அது எந்த காலத்தில் புழக்கத்தில் இருந்தது என தெரிந்து கொள்ள வேண்டும்.

2) எந்த ஆண்டு அச்சடிக்கபட்டது, எந்த அச்சகத்தில் அச்சடிக்கபட்டது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். எப்படி நாணயங்களை/நோட்டை  கையாள வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

3.) நோட்டை எந்த ரிசர்வ் பாங்க் கவர்னர் கையெழுத்திட்டு உள்ளார் என தெரிந்து கொள்ள வேண்டும். அவரின் பதவி காலம் எத்தனை வருடங்கள்/மாதங்கள்/நாட்கள் போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

4) நாணயம் எந்த உலோகத்தால் ஆனது, அதன் அளவு மற்றும் இடை ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

5) சில நாணயங்களுக்கு பின்னால் ஏதோ ஒரு நிகழ்வை பற்றியோ அல்லது ஒரு பிரபலரின் (ஏதேனும் ஒரு துறை)  உருவமோ அச்சடிக்கப்பட்டிருக்கும். அதன் காரணமும் வரலாறும் அறிந்திருக்க வேண்டும்.

6) நோட்டின் பின்னால் என்னன்ன வரையப்பட்டுள்ளது, அந்த இடம் எங்கிருக்கிறது, அதன் சிறப்பு என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும்.

7) புழக்கத்தில் இல்லாத சில நாணயங்கள், சில முக்கிய நிகழ்வை குறிக்கும் வண்ணம் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதையும் அறிந்திருக்க வேண்டும்.

8) அந்த நாணயம்/ நோட்டு  இன்னும் புழக்கத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

மேற்கண்ட அனைத்துமே நாம் எளிதில் இணையத்திலேயே தெரிந்து கொள்ளலாம். புத்தகம் வாங்கி படித்தும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இணையத்தில் இன்னும் பல பதிவுகளும், குறிப்புகளும் இலவசமாக கிடைக்கும். தெளிவாக படம் போட்டு புரிய வைத்திருப்பார்கள். 

ஒரு சிலர் இதை பெரும் பணம் ஈட்டும் தொழிலாகவே எண்ணுகின்றனர். சில ஆயிரங்களுக்கு வாங்கி பல லட்சங்களுக்கு விற்கின்றனர். இந்தியாவில் நடக்கும் எல்லா நாணயவியல் கண்காட்சிக்கும் பல சேகரிப்பாளர்கள் வந்து அவர்களுடைய நாணயங்களையும், நோட்டுகளையும் காட்சிப்படுத்தி விற்று விடுகின்றனர். இதையே சிலர் தொழிலாக செய்கின்றனர். உள்நாட்டு பணம் மட்டுமில்லாமல், பல வெளிநாட்டு நாணயங்களையும், நோட்டுகளையும் சேர்த்து வைக்கின்றனர். 

மேலும் சில குறிப்புகள்: 

UNC- UnCirculated. அதாவது அதிகம் புழக்கத்தில் அல்லது புழக்கத்தில் இல்லாத நோட்டு/நாணயம்.

உங்களிடம் உள்ள ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் தனிப்பட்ட எண்கள்  இருக்கும். அதன் பின்னால் சற்று மங்கலாக ஒரு எழுத்து அச்சிடப்பட்டிருக்கும்.  அவை அந்த நோட்டு எந்த அச்சகத்தில்  அச்சிடப்பட்டது என்பதை குறிக்கும். 

Plain, A,B,C,D - மைசூர், கர்நாடகம்
E,F,G,H,K - திவாஸ், மத்திய பிரதேசம்  
L,M,N,P,Q -  சல்போனி, மேற்கு வங்காளம் 
R,S,T,U,V -  நாசிக், மகாராஷ்டிரம் 



சில நோட்டுக்களில் எழுத்து ஏதும் இல்லாமல் இருக்கும்.அதுவும் மைசூரில் அச்சிடப்பட்டுள்ளது. I, J, O, X, Y, Z ஆகிய எழுத்துக்கள் நோட்டில் அச்சிடப்பட்டு இருக்காது.

நோட்டில் உள்ள எண் வரிசைக்கு நடுவில் * ஒன்று இருக்கும். அது 2006க்கு  பிறகு தவறாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கு மாற்றாக வெளியிடப்படுகின்றது.



சில நோட்டில் உள்ள எண்கள் எல்லாமே ஒரே எண்ணாக இருக்கும்.  சிலது ஃபேன்ஸி எண்களாக இருக்கும். உதாரணத்திற்கு 12A 123456/ 98J 111111. அது போன்ற நோட்டுகள் rare /collectible items ஆக இருக்கும். சில நோட்டுகளின் எண்களில் 786 இருந்தால் அதுவும்  rare /collectible items தான்.
இன்னும் நிறைய இருக்கிறது. இது போல பல விஷயங்களை நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

நீங்களும் நாணவியலாளர் ஆக வேண்டுமெனில், கீழ்கண்ட சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

1) முதலில் நாணயங்களையும் நோட்டுகளையும் சேர்க்க/ சேர்த்து வைக்க விருப்பம் இருக்க வேண்டும். அவன் செய்கிறான், இவன் வைத்திருக்கிறான் என நாமும் சேர்க்க ஆரம்பிக்க கூடாது.

2) மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். சேர்க்க ஆரம்பித்த ஒரே மாதத்திலேயே/வருடத்திலேயே எல்லாம் தெரிந்து, எல்லாம் கிடைத்து விடாது.

3) நாணயங்களையும், நோட்டுகளையும் (Coins and currencies) பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்க வேண்டும். முக்கியமாக அதன் மதிப்பு தெரிந்திருக்க வேண்டும்.

4) மற்ற நாணவியலாளருடன் தொடர்பு கொண்டு நாணயங்களையும், அதனை பற்றிய அறிவையும் பரிமாறிக் கொள்ள வேண்டும். 

5) நாணயங்களையும், நோட்டுகளையும் எப்படி பாதுகாத்து வைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான்! நீங்களும் நாணவியலாளர் ஆகிவிடீர்கள். நீங்களும் சேர்த்து வைத்து, வரலாற்றை அறிந்து கொண்டு இன்பமாகுங்கள்!


நன்றி!!!
பி. விமல் ராஜ்

7 கருத்துகள்:

  1. ஒரு நோட்டுக்குள்ள இவ்ளோ விசயம் இருக்கா.....

    பதிலளிநீக்கு

Your Comment is sent for approval.