சனி, 1 டிசம்பர், 2018

2.O - விமர்சனம்

வணக்கம்,

எந்திரன் படம் வெளியாகி 8 வருடங்கள் ஆன போதிலும் இன்னும் இதன் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை. 2.0 படம் மூன்று வருடங்களுக்கு மேல் எடுத்து ஒரு வருடமாக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் செய்து இப்போது தான் ரிலீசாகியுள்ளது.


போன வருடத்தில் திருட்டுத்தனமாக வந்த டீஸர் வீடியோவிலிருந்தே கதை ஓரளவுக்கு புரிந்தது. சமீபத்தில் வந்த டீஸர் மற்றும் டிரெய்லரும், படத்தின் கதையை கிராபிக்ஸ் மற்றும் பிரமாண்டம் மூலம் தெளிவுபடுத்தின. சூப்பர் ஸ்டாரின் முந்தைய படங்களான கபாலியும், காலாவும் எதிர்பார்த்த அளவு (ஓட) இல்லை. 2.0 வாவது மற்ற நடுநிலைவாதிகளிடமிருந்து, என்னை போன்ற சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களை காப்பாற்றட்டும் என நினைத்து கொண்டிருந்தேன்.



2.0 movie review

டீசர் பார்த்ததிலிருந்து, படத்தில் சூப்பர் ஸ்டாரை விட அக்ஷய் குமாருக்கு தான் வெயிட்டான வேடம் போல தெரிந்தது. அவருடைய வித்தியாசமான கெட்டப், செல்போன்கள் பறத்தல், செல்போனிலேயே உருவான பறவை பெரிய சைஸ் பறவை, சிட்டி 2.0 reloaded கெட்டப், போஸ்டர்கள், ரஜினியின் பல அவதாரங்கள், எமி ஜாக்சன், இயக்குனர் ஷங்கர், 650 கோடி பட்ஜெட்... என காட்டியது எல்லாமே அசந்து போய் வியக்கும் வண்ணம் பிரமாண்டமான ஹைப்புகள் தான்.


படத்தில் கதை இதுதான். செல்போன்களால், செல்போன் டவர்களால் பல பறவை இனங்கள் அழிகின்றன. அதனால் பறவைகள் மீது அன்பு கொண்ட ஒரு முதியவர் (பட்சி ராஜன்) போராடுகிறார். டவர்களில் உள்ள high frequency-யையம், செல்போன் உபயோகிப்பதையும் குறைக்க சொல்கிறார். அரசு மூலம், கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம், மக்கள் மூலமாகவும் முயற்சி செய்கிறார். பலனில்லை. இறந்துவிடுகிறார். இறந்து எப்படி செல்போன்கள் மூலமாகவே பழி வாங்குகிறார் /எதிர்க்கிறார், அதை நம் விஞ்ஞானி வசீகரன் மற்றும் சிட்டி ரோபோவும் எப்படி அடக்குகின்றனர் என்பதே கதை. 

எந்திரன் படத்தில் Andro-humanoid Robo, Neural Schema, Zigbee protocol, Augmented reality, Magnetic mode, Human terminator, Red chip, Transformer type Giant Robot என காட்டியது தமிழ் இந்திய படங்களுக்கே புதுசு. ஆனால் 2.0 வில் எல்லாமே முதல் பார்ட்டில் பார்த்தது தான் பெரும்பாலும் இருக்கிறது. ஐந்தாம் விசை (Fifth Force), ஆரா (aura), Positive, Negative energy என புதிதாக சொல்ல முயற்சித்து இருக்கிறார்கள். பாண்டஸி மற்றும் சயின்ஸ் பிக்ஷன் படங்களில் லாஜிக் பார்க்க கூடாது என்பது மட்டும் வைத்து கொண்டு, படம் முழுக்க கிராபிக்ஸ் செய்து விளையாடிருக்கிறார்கள்.

படத்தின் முக்கிய பலம் விசுவால்ஸ் மற்றும் கிராபிக்ஸ். செல்போன்கள் பறப்பது, எல்லாம் சேர்ந்து ராஜாளி பறவை போல மாறுவது, அக்ஷய் குமாரின் மேக்கப், தலைவரின் கெட்டப் எல்லாமே பக்கா தூள். ஆனால் அது மட்டுமே பலமாக இருப்பதுதான்  வருத்தம். சூப்பர் ஸ்டாருக்கு பில்டப், மாஸ் டயலாக், மாஸ் சீன் என ஒன்றுமே இல்லை. எந்திரனில் வருவது போல சிட்டி ரோபோவுக்கு சில நக்கல் வசனம் வைக்க நினைத்து சொதப்பி 
இருக்கிறார்கள். சஸ்பென்ஸ் எலிமெண்ட்டாக குட்டி ரோபோ 3.0 (microbots). அட ராமா! என நானே தலையை சொரிந்து கொண்டேன். 


2.0-tamil movie

எமி ஜாக்சன் அசிஸ்டென்ட் ரோபோவாக வந்து போயிருக்கிறார். அவ்வுளவுதான். மற்றபடி மயில்சாமி, ப்ரொபஸர் போராவின் மகனாக சுந்தன்சு பாண்டே, தொலைத்தொடர்பு அமைச்சர், ஐசரி கணேஷ் என எல்லோரும் வந்து போயிருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாருடன் மோதும் அளவுக்கு ஒரு வெயிட்டான கதாபாத்திரம் வில்லனாக இருக்க வேண்டும். பக்ஷி ராஜனாக, அக்ஷய் குமாருக்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறது. சில நேரமே வந்து நன்றாக நடித்துவிட்டு போயிருக்கிறார். ஆனால் பெரிதாக எதுவும் கிளிக் ஆகவில்லை.

கிராஃபிக்ஸ் மூலம் எல்லா சீனுமே தாறுமாறு பண்ணியிருகிறார்கள். அதை பாராட்டியே தீர வேண்டும். பல இடங்களில் மிரட்டி இருக்கிறார்கள். ஆனால் விஷுவல்சோடு, திரைகதைக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கதை எங்கடா இருக்குன்னு கேக்குறீங்களா?? சினிமா ரஜினி ரசிகனா படம் பாருங்க, புரியும்..

எந்திரனில் பாடல்கள் தீம் மியூசிக்காகவும், மெலடியாக கேட்கவும் நன்றாக இருக்கும். 2.O-வில் "ராஜாளி..." பாட்டு சண்டை நடக்கும் போது நடுவில் வந்து போகிறது. படம் முடியும் போது கடைசியில் 'எந்திர லோகத்து சுந்தரியே..' பாடல் வருகிறது. ஏன் வருகிறது என தெரியவில்லை. கிராபிக்ஸ்க்கு மட்டுமே அந்த பாடல். ஒரு வரி கூட புரியவில்லை; கேட்கவும் முடியவில்லை. 3டி ஓரளவுக்கு ஓகே என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் படத்தில் நேட்டிவிட்டி மிஸ்ஸிங். எந்திரனில் அம்மா அப்பா செண்டிமெண்ட், காமெடி அசிஸ்டென்ட், பிரசவம் பார்த்தல், ட்ராபிக் போலீஸ் லஞ்சம், சேரி திருவிழாவில் சண்டை, எலக்ட்ரிக் ட்ரெயின் சண்டை, வசீகரன்- சனா திருமணம், கத்திப்பாரா போன்ற பிரிட்ஜில் சண்டை என கொஞ்சமாவது இந்தியன் நேட்டிவிட்டி இருக்கும். ஆனால் 2.0 வில் தேடியும் கிடைக்கவில்லை. வசீகரனின் லேப், லண்டன் ரோபோ நாயகி, செல்போன் கடைகள், மினிஸ்டர் கூட்டம் நடக்கும் கட்டிடம், புட்பால் மைதானம், பக்ஷி ராஜன் வீடு என எல்லாமே செட் மயம்.

கடைசியில் உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல; மத்த உயிரினங்களுக்குத்தான். நம் டெக்னாலஜி வளர்ச்சி, அவைகளை அழிக்க கூடாது என்ற சமூக கருத்தை சொருகியிருக்கிறார்கள். இயக்குனர் ஷங்கர் இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் வெறும் கண்கட்டி விதை மூலம் மக்களை மயக்கி விடலாம் என நம்பியிருக்க போகிறாரோ தெரியவில்லை. வெறும் கிராபிக்ஸ், சூப்பர் ஸ்டார்க்காக வேண்டுமாயின் ஒரு முறை பார்க்கலாம்! dot.



நன்றி!!!
பி. விமல் ராஜ்

5 கருத்துகள்:

  1. உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல; மத்த உயிரினங்களுக்குத்தான்.என்பதை சீமான் சுமார் 8 வருடங்களாக சொல்லிக்கொண்டு வருகிறார்.... சீமான் சொன்னதை யார் கேட்கிறார்கள்?....

    .

    பதிலளிநீக்கு

Your Comment is sent for approval.