திங்கள், 10 நவம்பர், 2014

மூக்கை மூடிட்டு படிங்க !

வணக்கம்,

இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. கடந்த ஒன்றரை வருடங்களில், 50 பதிவுகளை எழுதிவிட்டேன் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. என் வலைப்பூவிற்கு வருகை தந்து, பின்னூட்டம் எழுதி, என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் பல!

50th-article

சரி... பதிவுக்குள்ளே வருவோம். நீங்க எல்லோரும் காலையில் எழுந்தவுடன், பல் துலக்கிவிட்டு என்ன செய்வீங்க? அடச்சீசீசீய்ய்ய் !!! இவன் என்ன விவஸ்தை இல்லாம கேள்வி கேக்குறானேன்னு தப்பா நினைக்காதிங்க. இந்த பதிவும் அதை பற்றியது தான். நீங்க ரொம்ப சுத்த பத்தம்-ன்னா கொஞ்சம் மூக்கை மூடிட்டு படிங்க.

இது ஒரு சாதாரண விஷயம் தானே. இதில் என்ன புதுசாய் சொல்ல போகிறான் என்று யோசிக்கிறீர்களா ? சொல்கிறேன் படியுங்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக கழிவறை தினம் (World Toilet Day) என்று ஒன்றை புதிதாய் கடந்த வருடம் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் 3 மில்லியன் மக்களுக்கு சுகாதாரமான கழிவறைகளை கட்டி தந்துள்ளது. மற்ற பணக்கார நாடுகளுக்கெல்லாம் உலக கழிவறை தினம் என்பது ஒரு கேலி கூத்தான செய்தி. ஆனால் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கும், அங்குள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் இது சாதாரண செய்தியாக இருப்பது இல்லை.


சில நாட்களுக்கு முன், ஓர் தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையை  படித்து அதிர்ச்சிக்குள்ளாகி விட்டேன்.

1.)  உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு பாதுகாப்பான, சுகாதாரமான தனி கழிப்பறை கிடையாது.

2.)  சுமார் 500,000 குழந்தைகள் பாதுகாப்பற்ற நீர் மற்றும் மோசமான
சுகாதாரமில்லாத கழிவறையால் வயிற்றுப்போக்கு, தொற்று வியாதி ஏற்பட்டு இறக்கின்றனர்.

3.)  உலகில் கழிப்பறைகளை விட மக்களிடையே செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இந்த அதிர்ச்சியூட்டும் விஷயங்களெல்லாம் பெரும்பாலும் நம் நாட்டிலும் நடக்கிறது. இந்தியாவில் ஏறத்தாழ 13% மக்கள் திறந்த வெளியில்தான் மலம் /சிறுநீர் கழிக்கிறார்கள். புறநகர் மற்றும் கிராம புறங்களில் உள்ள பல கழிவறைகள், சுத்தமில்லாததாகவும், வேலை செய்யாமல் செயலிழந்தும் இருப்பது வேதனைக்குரியது.  

உலக சுகாதார அமைப்பின் (World Health Organization ) கூற்றுபடி, இந்தியாவில் 636 மில்லியன் மக்கள் கழிப்பீடமின்றி வாழ்கிறார்கள். பெண்களுக்கு போதுமான அளவு கழிப்பறை வசதி இல்லாததால், சராசரியாக  13 மணிநேரம் தங்கள் இயற்கையின் உந்துதலை (அவசரத்தை) அடக்கி வைக்கின்றனர். இதன் மூலம் சிறுநீரக பாதிப்பு, சிறுநீர் தொற்று வியாதி என அவதிபடுகிறார்கள்.

இந்த கழிப்பீட வசதிகள் பெருநகரங்களிலும் பெரும்பாலும் இருப்பதில்லை. கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை கவலைக்கிடமாக தான் இருக்கிறது. அவரசத்திற்காக ஆண்கள் "திறந்தவெளி புல்வெளி கழகத்தில்" முடித்து கொள்கிறார்கள். பெண்கள் ??? 

சரியான கழிப்பீடங்கள் வீட்டில் இருந்திருந்தால், கடந்த ஓர் ஆண்டில் 11,000 பெண்கள் பலாத்காரத்திலிருந்து தப்பித்திருப்பார்கள் என பி.பி.சியின் ஒரு கருத்தாய்வு கூறுகிறது.

இப்படிப்பட்ட ஒரு சுகாதாரமில்லாத , அடிப்படை வசதி கூட கிடைக்காத மக்கள் இருக்கும் நம் நாட்டில் தான் "மங்கல்யான் " வெற்றியையும், மற்ற தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றியும் பெருமை பேசி கொண்டிருக்கிறோம்.

தூய்மை இந்தியா திட்டம் (Clean India) மூலம் நம் தேசத்தை சுத்தமாக்குவோம் என்று நம் பாரத பிரதமர் சொல்லி கொண்டிருக்கிறார். அந்த திட்டத்தின் கீழ், தெருவுக்கு இரண்டு கழிப்பறைகளாவது கட்டி தந்தால் நாம் அனைவரும் சுகாதார காற்றை சுவாசிக்கலாம். நம் எதிர்கால தலைமுறைக்கு சுத்தத்தின் முக்கியத்துவத்தையும், சுகாதாரத்தின் அவசியத்தையும் சொல்லி கொடுப்போம்.

தகவல்கள்  - கூகிள் , World Toilet Day


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

12 கருத்துகள்:

  1. 50க்கு வாழ்த்துக்கள்...
    மிக நல்ல பகிர்வு...
    தொடர்ந்து எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் கழிப்பறை வசதி இன்றியமையாதாத விடயம் நிச்சயம் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. 50 பதிவு இன்னும் பல ஆயிரம் தாண்ட வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  4. இது ஒரு சாதாரண விசயம் அல்ல... மிகவும் முக்கியமான விசயம்...

    தொடர்க...

    பதிலளிநீக்கு
  5. @ 'பரிவை' சே.குமார், தனிமரம் ,திண்டுக்கல் தனபாலன், இராஜராஜேஸ்வரி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !!!!

    பதிலளிநீக்கு
  6. கல்லூரிக் காலத்தில் என்.எஸ்.எஸ் கேம்ப் சென்றிருந்த போது அந்த கிராமத்தில் இரண்டு மூன்று இடங்களில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டு இருந்தது. புத்தம் புதிதாக இருந்தது, ஆனால் கட்டி இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் புதிதாக இருந்தது என்பது தான் ஆச்சரியம்.

    என்ன என்று விசாரித்தால் இந்த ஊர் மக்கள் (பெண்கள் உட்பட) யாருக்கும் இங்கு போக விருப்பம் இல்லை. அதிகாலையில் ஆற்றுக்குப் போய் விடுகிறார்கள் என்று வருத்தபட்டார்கள்.

    உடனே எங்கள் முகாம் திட்டப் பணிகளில் ஒருமாற்றம், கழிப்பிடங்களை உபயோகிப்பதன் அவசியத்தை உணர்த்தி ஒரு பேரணி நிகழ்த்தினோம். இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் வெறும் கழிப்பிடம் கட்டிக் கொடுப்பதோடு விட்டுவிடாமல் அதன் அவசியத்தையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்..

    அப்புறம் ஐம்பதுக்கு வாழ்த்துகள் :-)

    பதிலளிநீக்கு
  7. 50 வது பதிவுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. ஐம்பதாவது பதிவு சமூக அக்கறையுடன்

    வாழ்த்துக்கள்
    தொடர்க ..

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கு நன்றி சீனு... நீங்கள் சொல்வது உண்மைதான்... சுகாதாரத்தின் அவசியத்தையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும்..

    பதிலளிநீக்கு
  10. @ மாடிப்படி மாது ,Mathu S:
    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !!!!

    பதிலளிநீக்கு
  11. Congratulations Vimal.Appreciate your Work.All the Very best for your future.Expecting more from you!!

    பதிலளிநீக்கு

Your Comment is sent for approval.