சனி, 4 ஜூலை, 2015

பாபநாசம் - விமர்சனம்

வணக்கம்,

ஏற்கனவே மலையாளத்தில் வெளியான 'திருஷ்யம்' படத்தைச் சமீபத்தில் தான் பார்த்துத் தொலைத்தேன். பாபநாசம் பட டிரைலரில் காட்சியும், வசனமும் பார்த்த போதே தெரிந்து விட்டது, தமிழில் கொஞ்சம் கூட மாற்றவில்லை என்று. ஹ்ம்ம்...எப்படியிருந்தால் நமக்கென்ன ? நமக்குத் தேவை உலக நாயகனின் நடிப்பு பசியை வெள்ளி திரையில் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.

சாதாரணக் குடும்பத்தில் ஓர் எதிர்பாராத அசம்பாவிதம் நடந்து விடுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதே திருஷ்யம் (மலையாளம், தெலுங்கு & வர போகும் ஹிந்தி ) மற்றும் பாபநாசம் படத்தின் கதை.


கமல்ஹாசனின் நடிப்புக்கு தான் வயசாகவில்லையே தவிர, அவர் முகத்தில் கொஞ்சம் வயது முதிர்வு தெரியதான் செய்கிறது. இருந்தாலும், கருப்புச் சட்டையில் வெள்ளை தோலுமாய்த் திராட்சை நிற கண்களை உருட்டி பார்க்கும் போது, அவர் கருவிழியில் இன்னும் ஆயிரம் கதாபாத்திரங்களை நடிக்கத் தயாராய் இருக்கிறார் என்பது நமக்குத் தெரிய வரும்.


சுயம்புலிங்கமாக நெல்லை தமிழ் பேசி அசத்தியுள்ளார் கமல். அசல் நெல்லைகாரனே தோற்றான் போங்க! ஒவ்வொரு சீனிலும் கமலின் நடிப்பு உச்சத்தைத் தொடுகிறது. பிணத்தைத் தோண்டி எடுத்த பின்பு, எல்லாரும் ஒரு முறை அதிர்ச்சியும் ஆச்சிர்யத்துடனும் கமலை திரும்பி பார்க்க, 'உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது போங்கடா' என்று ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்..ச்சே...சான்ஸே இல்ல. அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. அதெல்லாம் சரி, ஏன் இவ்வளவு 'அவுட்டேட்டடான' கெளதமி ஆண்ட்டியை ஹீரோயினாகத் தேர்வு செய்தார் கமல் என்று தான் புரியவில்லை. இருப்பினும் மலையாளத்தில் மீனா செய்த வேலையைத் தமிழில் நன்றாகச் செய்து இருக்கிறார்.

கமல் - கெளதமியின் மகள்களாக (படத்தில்!) நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் இருவரும் அழகாக நடித்துக் கொடுத்திருகின்றனர். நிவேதா ஏன் இன்னும் நம் தமிழ் தயாரிப்பளர்கள் கண்ணில் படவில்லை என்பது வியப்பின் வியப்பு. மற்றபடி, எம்.எஸ்.பாஸ்கர், கலாபவன் மணி, போலிஸ் அதிகாரியாக வரும் பெண்மணி என எல்லோரும் சரியான அளவில் தங்களது பணியைக் குறையில்லாமல் செய்துள்ளனர்.

ஜிப்ரானை தன் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாற்றிவிட்டார் கமல். அதனால் தான் எல்லாப் படப் பாடல்களும் கமலின் பெயர் சொல்வது போல இருக்கிறது. இதிலும் 'கோட்டிக்காரா ' பாடல் பார்க்க, கேட்க ரம்மியமாக இருக்கிறது.

மற்ற மொழியில் திருஷ்யதை பார்க்காதவர்களுக்கும், கதையின் கிளைமேக்ஸ் சஸ்பென்ஸ் தெரியாதவர்களுக்கும் இந்தப் படம் கண்டிப்பாகச் சிறந்த பொழுதுபோக்காக அமையும். மற்றவர்கள் உலக நாயகனின் நடிப்பு ஆளுமையைப் பார்த்துப் புளங்காகிதம் அடைவார்கள்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

2 கருத்துகள்:

Your Comment is sent for approval.