வணக்கம்,
பள்ளி படிப்பு முடித்து கல்லூரியில் சேரும் போது, பசங்க எல்லோரும் மனதில் பல கனவுகளோடு, ஆசைகளோடு வருவார்கள். காலேஜுல நிறைய நண்பர்கள், நண்பிகள் கிடைப்பார்கள், ஜாலியா சுதந்திரமா இருக்கலாம், நண்பர்களோட பேசலாம்ன்னு பல கனவுகளோட வருவாங்க. ஆனால் அவுங்க கனவையெல்லாம் தவிடு பொடியாக்குகிறது சில பொறியியல் கல்லூரிகள்.
ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி - நான் இந்த காலேஜுல தான் படிச்சேன். நாம படிச்ச கல்லூரியை எவனாவது தப்பா சொல்லிடான்னா பொதுவா எல்லோரும் சண்டைக்கு வருவாங்க. ஆனா, இங்க நிலைமையே வேற. காலேஜ பத்தி ஒரு தப்பான மெசேஜ் வந்ததும் 'என்ன ஒரு ஆனந்தம்' நம்ம மக்களுக்கு (Aluminis). கடந்த இரு வாரங்களாகவே சமூக வலைதளங்களில் பெரிதும் அடிப்படும் பெயராகவே இருக்கிறது எங்கள் கல்லூரி. கல்லூரியில் மாணவிகள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் என ஒரு பக்க நீள ரூல்ஸ் சர்குலரை சமூக தளங்களில் வெளியிட்டதே காரணம். அதை அங்கு படித்த மாணவர்கள் தான் கல்லூரியின் மீதுள்ள வெறுப்பு காரணமாக வெளியிட்டுனர் என்றாலும், அதிலுள்ள விதிகள் பெரும்பாலும் உண்மையாகவே அமலில் இருப்பது கசக்கும் உண்மை.
அதாகப்பட்டது, இவை தான் அந்த சட்டங்கள். காலேஜ பத்தி தெரியாதவங்க படிங்க..
1.) சாய்ராம் கல்லூரியில் படிக்கும் பெண்கள் லெகின்ஸ், ஜெகின்ஸ் போன்ற வகை பேண்ட்டெல்லாம் போட கூடாது.
2.) பாட்டியாலா, ஜன்னல், கண்ணாடி வைத்த டாப்ஸ், ஷார்ட் குர்தி போன்றவைகளுக்கும் தடை.
3.) பெரிய சைஸ் காது வளையம், ஜிமிக்கி வகையறாக்கள், ஃபான்சி மோதிரங்கள், ஹை-ஹீல்ஸ் செருப்புகள் , சிகை மற்றும் முக அலங்காரங்கள் போன்றவைக்கும் தடா தான்.
4.) துப்பட்டா கண்டிப்பாக மறைக்க வேண்டியதை மறைக்க வேண்டும். ( நானே லிஸ்டில் சேர்த்து கொண்டது. )
5.) கல்லூரியில் பிறந்த நாள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது. சாக்லேட், கேக், ஸ்நாக்ஸ் போன்ற ஐட்டங்கள் எல்லோருக்கும் பரிமாறிக் கொள்ள கூடாது.
6.) அனாவசியமாக காரிடாரில் நடக்க கூடாது. பக்கத்துக்கு கிளாசுக்கு சென்று லேப் கோட், நோட் புக்ஸ், கால்சி போன்றவை வாங்க கூடாது.
7.) செல்போன், சிம் கார்ட், பெண் டிரைவ் போன்றவைகளை உள்ளே கொண்டு வர கூடாது.
8.) கல்லூரி பேருந்தில் தான் பணம் கட்டி வர வேண்டும் (எவ்வளவு கிட்ட இருந்தாலும்). டூ-வீலர், ஃபோர் வீலர்கள் கொண்டு வர கூடாது.
9.) பெண்களும், ஆண்களும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட படிக்கட்டில் தான் ஏற/இறங்க வேண்டும்.
10.) மிக முக்கியமானது. இரு பாலரும் எதிர் பாலினத்தோடு எக்காரணத்துக் கொண்டும் பேச கூடாது.
11.) நான்-வேஜ் அயிட்டங்களை கல்லூரிக்குள் கொண்டு வர கூடாது.
12.) ஹாஸ்டல் பசங்க நினைத்த நேரத்தில் வீட்டுக்கு போக முடியாது. கேட்-பாஸ் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது.
11.) நான்-வேஜ் அயிட்டங்களை கல்லூரிக்குள் கொண்டு வர கூடாது.
12.) ஹாஸ்டல் பசங்க நினைத்த நேரத்தில் வீட்டுக்கு போக முடியாது. கேட்-பாஸ் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது.
இந்த ஏட்டில்லா விதிகளை பார்த்தாலே எவனுக்கும் படிக்கிற ஆசையே இருக்காது. என்ன தலை சுத்துதா???இது சும்மா டிரைலர் தான்மா. மெயின் பிச்சர் இனிமே தான்...
செமஸ்டரில் பெயிலானால், இரு அரியர்களுக்கு மேல் வைத்தால், பெற்றோரை அழைத்து வர வேண்டும். பையன் பெயிலானால் அம்மாவோ, அப்பாவோ தான் திட்டு வாங்க வேண்டும். "புள்ளைய காலேஜுல சேர்த்துவிட்டுட்டு, அப்படியே தண்ணி தெளிச்சி விட்டுவிடுவியா??" என ஒருமையில் அவர்களை திட்டுவார்கள். பலரை பலவந்தமாக நான்காம் அல்லது ஐந்தாம் செமஸ்டரில் கல்லூரியை விட்டு (டி .சி கொடுத்து ) அனுப்பியிருகிறார்கள்.
மேலும் ஃப்ளோர் சூப்பர்வைசர்கள் (FS) என்ற பெயரில் சில வெட்டி ஆபிசர்களை கல்லூரியில் நியமித்து கொண்டு, மாணவர்களை கண்காணிப்பார்கள். அவர்கள் முக்கிய பணியே பிள்ளை பிடிப்பதும், ஐ.டி கார்டு புடுங்குவதும் தான். அதாவது மேற்கண்ட தப்புகளை பண்ணும் மாணவ/மாணவியரை கையும் களவுமாக, ஆளும் ஐ.டியுமாக பிடித்து மேனேஜ்மென்ட்டில் கொடுப்பது தான்.
இன்னும் இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல, பசங்க பொண்ணுங்க கூடவும், பொண்ணுங்க பசங்க கூடவும் பேசவே கூடாது. அது மகா மகா தெய்வ குத்தம். மீறினால் ஐ.டி கார்டு அவுட். தர்ம அடிதான். லன்ச்சில் மற்றவரிடம் சாப்பாடு வாங்கி சாப்பிட்டாலோ, சத்தமாக பேசி சிரித்து கொண்டிருந்தாலோ ஐ.டி கார்டு பறிக்கப்படும். அவ்வபோது வகுப்புகளில் ரைட் (RAID ) நடக்கும். பேக்குகளை சோதனை செய்வார்கள். அதில் ஏதாவது (செல்போன், சி.டி.. ) சிக்கினால் ஐ.டி கார்டு பிடுங்கப்பட்டு ஆயிரக்கணக்கில் அபராதம்.
பஸ்ஸில் ஆண்களும், பெண்களும் தனித்தனியே தான் அமர வேண்டும். அங்கேயும் FS-க்கள் இருப்பார்கள். கான்டீனிலும் அதே கதை தான். கல்லூரியில் மதிய சாப்பாடு ரொம்ப சுமாராக தான் இருக்கும். அதைதான் முதலாம் ஆண்டு மாணவ மணிகள் பணம் கட்டி சாப்பிட்டு தொலைக்க வேண்டும். ஹாஸ்டல் பசங்க தான் ரொம்ப பாவம். நாலு வருடமும் அங்கே தான் சாப்பாடு. சில வேளைகளில் கரப்பான் பூச்சிகள், பல்லி விழுந்ததையும் போட்டிருக்கிறார்கள். "இவ்வளவு பெரிய அண்டாவுல நாலு இன்ச் பல்லி விழுந்தா யாரும் செத்துட மாட்டங்க.." அந்நியன் பட வசனம் இது. படம் வருவதற்கு முன்பே எங்க காலேஜுல இதை பாலு சொல்லிடாரு...
ஆங்!!! பாலு யாருன்னு உங்களுக்கு சொல்லவே இல்லைல.. அவரு தாங்க எங்க காலேஜ் ஆல் இன் ஆல். இவரை பார்க்க கிட்டத்தட்ட 'நான் கடவுள்' ராஜேந்திரன் போல இருப்பார். கருத்த கட்டுடல், நெற்றியில் லேசான செந்தூரம், மொட்டை தலையில் தொப்பி, கொஞ்சம் மிடுக்கான ஆள்தான். பிரின்சிபாலை கண்டு கூட பலர் பயபடமாட்டங்க. ஆனா இவர் பேர சொன்னா, ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடன்ட் முதல் ஃபைனல் இயர் ஸ்டுடன்ட் வரை எல்லோருக்கும் சிம்ம சொப்பனம். எல்லா FSக்கும், எல்லா டிபார்ட்மெண்ட் HOD க்கும் இவர் தான் DON. காலேஜ்/ மேனேஜ்மென்ட் /ஹாஸ்டல் அட்மின். சுருக்கமாக மேனேஜ்மென்ட்டின் அடியாள்.
ஐ.டி கார்டு பறிகொடுப்பவர்கள் எல்லாருமே இவரிடம் தான் விசாரணைக்கு வருவார்கள். முடி கொஞ்சம் அதிகமாக வளர்த்திருந்தால், தலை மயிரை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி நாளை முடி வெட்டவில்லை என்றால், நானே கன்னா பின்னான்னு வெட்டி விடுவேன் என்று எச்சரிக்கை செய்வார். பல ஆபாச வார்த்தைகளை மாணவரிடம் உபயோகபடுத்துவார். பலருக்கு ஆபிஸ் ரூம் ட்ரீட்மென்ட்களும் நடந்தள்ளது.
இவ்வளவு கட்டுப்பாடு இருந்த போதும், சில காதல் புறாக்களும், சில பல டேட்டிங் சமாச்சாரங்களும் கல்லூரிக்குள் இருக்கத்தான் செய்தன. சட்டங்கள் ஒரு புறம் இருந்தாலும், அவ்வப்போது வெளியே தெரியாமல் இருபாலரும் பேசி கொண்டு தான் இருகிறார்கள். கண்ணால் பேசிக்கொண்டும், வகுப்பில் பிட்டு பேப்பரில் தகவல் பரிமாறிகொண்டும் இருந்தனர்; இருகின்றார்கள். மாட்டிகிட்டா மவனே(ளே) காலி தான்.. இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு வேண்டிகிடக்கு!
இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல.. தமிழ்நாட்டில் இந்த ஒரு கல்லூரி மட்டுமல்ல. இன்னும் பல கல்லூரிகள் (பத்தில் ஐந்து) இப்படி தான் சத்தமில்லாமல் இயங்கி கொண்டு இருக்கிறது. எல்லா கல்லூரிகளிலும் இது போன்ற பட்டாசு பாலுக்களும், செயின் ஜெயபால்களும், பிச்சுவா பீட்டரும் இருக்க தான் செய்கின்றனர்.
இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள்? என்று யோசித்து பார்த்தால், நமக்கு இவர்கள் செய்வது சரி என்று ஒரு விதத்தில் படும். (சேம் சைடு கோல் அல்ல..முழுசா படிங்க..) ஏன்னா நம்ம பசங்கள கொஞ்சம் ஃபிரியா விட்டா, அப்புறம் கையில பிடிக்க முடியாது. அதான் இந்த கெடுபிடி. இப்படி காலம்காலமாக ஆண்-பெண் பேசாமை என சட்டம் போட்டு அடிமை படுத்துகிறார்களே, ஏன் எந்த பெற்றோரும் கேள்வி கேட்பதில்லை என யோசித்தால் புரியும். காரணம் என்ன.? கல்லூரிகளில் இத்தகைய 'பலத்த சட்டங்கள் ' மூலம் பெற்றோர்கள் புன்முறுவல் பூக்கின்றனர் என்பதாலும், அவர்தம் பிள்ளைகள் தவறான வழிக்கு போகமாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும், இந்த விதிகள் யாவும் இன்னும் நடைமுறையிலேயே இருக்கிறது.
இதை பதிவு செய்வதன் மூலம் எங்கள் கல்லூரிக்கு வந்து உங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம் என்றோ, இது ஒரு மட்டமான கல்லூரி என்றோ சொல்லவில்லை. நல்ல கல்லூரி தான். நன்றாக படித்தால் நல்ல படிப்பும் வேலையும் கிடைக்கும் தான். நாங்க படிச்ச காலேஜ எங்களுக்கு பிடிக்கலன்னு சொல்லல. ரொம்ப பிடிக்கும், ஆனா உங்க காலேஜ் ருல்லஸ் தான் பிடிக்கல. நாங்கள் பட்ட சில பல கஷ்டங்களை உங்கள் பிள்ளைகளோ, இனி வரும் மாணாக்கரோ பட கூடாது என்பது தான் எங்களது (Aluminis) நோக்கம். யாரவது ஒருவர் இந்த சட்டங்களை தகர்க்க வழி செய்வார் என நம்புகிறோம். வளரும் இளைய சமுதாயத்தை சுதந்திரமாக வாழ விடுங்கள்!
நன்றி !!!
-பி .விமல் ராஜ்
உங்கள் கருத்தை ஏற்கிறேன்..வலைப்பதிவர் விழாவிற்கு உங்களை அன்புடன் விழாக்குழு சார்பாக வரவேற்கின்றோம்..
பதிலளிநீக்குசார் பெற்றோர்கள் லட்ச கணக்கில் பணம் புரட்டி கட்டி படிக்கவைதத்து நாளை நமக்கு சம்பாத்தியம் பண்ணி கொடுப்பார்கள் என்றுதான் காலேஜுக்கு அனுப்புகிறார்கள்.இது அர்களுக்கு தெரியவாணாமா.
பதிலளிநீக்கு