சில வருடங்களுக்கு முன், வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் மதுராந்தகம் அருகே நண்பரின் கார், மற்றொரு பெரிய வண்டி மீது மோதி அப்பளம் போல நொறுங்கியது. நொறுங்கிய வண்டியில் இருவர் (நண்பரும் ஒருவர்) படுகாயம், மற்றொருவர் உயிரிழந்தார். குடித்து விட்டு வண்டி ஓட்டியதால் ஏற்பட்ட விளைவு. சில நாட்களுக்கு முன் ECR சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கார், விபத்தில் சிக்கிய பைக்கில் வந்த இருவரை போலீஸ்காரர்கள் ஓரம்கட்டி நிறுத்தி வைத்து விசாரித்து கொண்டிருந்தனர். அதுவும் குடிபோதை பயணமே! இது போன்ற பல சம்பவங்களை நாம் செய்திகளிலும், தினசரி பயணத்தின் போதும் பார்த்திருப்போம்.
ஒவ்வொரு ஆண்டும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர் அல்லது காயமடைகின்றனர். இக்காலத்தில் சாலை விபத்துக்களுக்கு குடித்துவிட்டு வண்டி ஓட்டுதல் முக்கிய காரணமாகிவிட்டது. அது சட்டவிரோதமானது மட்டுமல்ல, பொறுப்பற்றது கூட. குடித்துவிட்டு வண்டி ஓட்டுதலால் ஏற்படக்கூடியவை பற்றி இணையத்தில் படித்து தெரிந்து கொண்டதை உங்களிடம் பகிர்கிறேன்.
நாம் சாலையில் போய் கொண்டிருக்கும் போது போலீசார் வழிமறித்து தேவையான ஆவணங்களையெல்லாம் பேப்பர்களையெல்லாம் சரிபார்த்த பின், குடித்திருக்கிறோமா இல்லையா என சோதிக்க ஒரு சிறிய மெஷின் ஒன்றை வைத்து கொண்டு அதில் நம்மை ஊத சொல்வார்கள். அதுதான் BreathAlyzer. மூச்சு காற்றில்/ சுவாசத்தில் உள்ள ஆல்கஹால் அளவை அளவிடும் சாதனம்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் வரம்பு BAC-ல் அளவிடப்படுகிறது. BAC (Blood Alchohol Content) என்பது உங்கள் இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவை குறிக்கும்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் அல்லது BAC வரம்புகள் ஒவ்வொரு நாடு மற்றும் அவற்றின் சட்டங்களை பொறுத்தது. இந்தியாவில் BAC வரம்பு 0.03%. அதாவது இரத்தத்தில் 100 மில்லியில் 0.03 கிராம் ஆல்கஹால் வரை இருக்கலாம். மூச்சு, இரத்தம், சிறுநீர் அல்லது உமிழ்நீர் சோதனை மூலம் BAC சரிபார்க்கப்படலாம். பெரும்பாலும் இது மூச்சு மற்றும் ப்ரீத் அலைசரில் அவர்கள் பயன்படுத்தும் கருவி மூலம் சோதிக்கப்படுகிறது. இரத்தப் பரிசோதனைகள் துல்லியமான மற்றும் நம்பகமான BAC கொடுக்கின்றன என்றாலும். BAC லிமிட்க்கு மேல் இருந்தால் அபராதம் அல்லது சிறை கண்டிப்பாக உண்டு. நீங்கள் எவ்வளவு குறைவாக குடித்திருந்தாலும், நீங்கள் ஒரு முறை குடித்தாலும் நீங்கள் வாகனம் ஓட்ட தகுதியற்றவர் என்ற பொறுப்புணர்வு நம்மிடையே நிச்சயம் வேண்டும்.
குடிபோதையில் அல்லது எந்த ஒரு போதையிலும் வாகனம் ஓட்டுவதும், இந்தியாவில் கிரிமினல் குற்றமாகும். இந்திய மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் பிரிவு 185ன் கீழ், போதையில் வாகனம் ஓட்டுவது குற்றமாகும். ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மூன்று ஆண்டுக்குள் அதே தவறை செய்பவருக்கு, 2 வருட சிறை தண்டனை அல்லது 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
சமீபத்தில் டில்லியில் நடந்த ஒரு கருத்துக்கணிப்பில், 30,000 பேரில் 81.2% பேர் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை ஓப்புக் கொள்கிறார்கள். 2022-ல் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது இந்தியாவில் சாலை இறப்புகளுக்கு/விபத்துகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளது. சட்ட வரம்புக்குக் கீழே இருந்தாலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது ஆபத்தானது. 0.01 சதவிகிதத்துக்கும் குறைவான BAC கொண்ட ஓட்டுநரின் திறன்களைக் குறைக்கும் பக்கவிளைவுகளை மதுவும் அதன் போதையும் ஏற்படுத்தலாம்.
- போதையால் மெதுவாகும் செயல்திறன் மற்றும் கவன குறைவு
- கண் பார்ப்பதை மனதோ/கையோ கேளாமல் ஒருங்கிணைக்க முடியாமல் தடுமாறுவது
- சாலையில் முன்னே போகும் வாகனம்/ ஆட்கள் பற்றிய தவறான முடிவு (wrong judgement)
- என்ன செய்கிறோம் என தெரியாதவாறு நினைவாற்றலை இழப்பது
- விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது
- வாழ்க்கையையே மாற்றும் விபத்துகளும் ஏற்படலாம்
- விபத்தினால் போதையில் ஓட்டுபவரே விபத்தில் சிக்க வாய்ப்புண்டு.
- போதையில் ஓட்டுபவரால் சாலையில் போவோரும், சாலையோரம் இருப்பவரும் மற்றவரும் விபத்தில் சிக்க வாய்ப்புண்டு
- போதையில் ஓட்டுபவரின் வாகனமோ அல்லது மற்றவருடைய வாகனமோ சேதமாக வாய்ப்புண்டு.
வெளியே சென்று மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும், மது அருந்தவும் திட்டமிட்டால், ஓட்டுனரோ அல்லது மது அருந்தாத வேறு ஒருவரோ வாகனத்தை ஓட்டும்படி செய்யலாம். அல்லது வாடகை வண்டி பதிவு செய்து போவது, அல்லது போதையில் பயணத்தையே தவிர்ப்பதும் சால சிறந்தது.
நன்றி!!!
பி. விமல் ராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Your Comment is sent for approval.