ஞாயிறு, 2 மே, 2021

புதிய விடியல் ஆரம்பம் !

வணக்கம்,

சின்ன இடைவெளி விட்டு மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். தேர்தல் முடிவை அலசும் என்னை போன்ற ஓர் சாமானியனின் அரசியல் பதிவு இது. 

இதுவரை வந்த ஓட்டு எண்ணிக்கை முடிவின் படி, திமுக கூட்டணி வெற்றி பெற்று விட்டது. எல்லா முடிவுகளும் அப்படிதான் சொல்கின்றன. ஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜ.க வுடன் கூட்டணி இருந்திருக்காது. இம்முறையும் அதிமுகவே வென்றிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜ.கவின் நடவடிக்கைகளும், செயல்பாடும் நம் மக்களை மேலும் கடுப்பாகி விட்டது. அதனால் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என அதிமுகவை சற்று ஒதுக்கி வைத்துள்ளனர். எதிர்பார்த்தபடி நட்சத்திர தொகுதியில்  யார் வெல்வார்கள் என மக்கள்  நினைத்தார்களோ அவரே வென்றுள்ளனர். சில இடங்களில் மாறுபட்டிருப்பது சற்றே வேதனைக்குரியது. 

இன்று காலை முதல் பெரும்பாலானோர் வீட்டில் தேர்தல் லைவ் செய்திகள் தான் ஓடி கொண்டிருக்கும். நேற்று வரை கொரோனா தா(க்)கம் கொண்ட டி.வி சேனல்கள், "போனால் போகட்டும் போடன்னு" இன்று மட்டும் கொரோனா செய்திகளுக்கு லீவு விட்டு விட்டார்கள். உயிரிழப்பு, நோய் தொற்று, மருத்துவனை சேர்க்கை, ஆக்சிஜன் பற்றாக்குறை என எல்லாவற்றுக்கும் பாஸ் (Pause) போட்டு வைத்துள்ளார்கள். நாளை முதல் மறுபடியும் லூப்பில் போட்டு ப்பிளே (Play) செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். சில சேனல்களில், நடுநடுவே விளம்பரம் போட்டு வழக்கத்தைவிட சற்று அதிகமாய் சம்பாதித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

புதிய விடியல் ஆரம்பம் !

சரி.. கட்சி நிலவரத்துக்கு வருவோம். அதிமுக ஏன் தோற்றது என நாலரை வருட பழைய புராண கதையை சொல்லி போரடிக்க விரும்பவில்லை. மக்கள் அதிருப்தி, நிர்வாக சீர்கேடு என்றெல்லாம் கூட  அளக்க தேவையில்லை. பா.ஜ.க வுடன் கூட்டணி என்ற ஒற்றை விஷயமே அவர்களை ஒதுக்குவதற்கு போதுமான காரணம் என எண்ணுகிறேன். பேரிடர் சமயத்தில் ஓடி ஓடி சென்று வேலை செய்தவரின் வெற்றி இழுபறியில் இருக்க, ராக்கெட் விஞ்ஞானியின் வெற்றியும், கொங்கு பக்கத்து வெற்றியும் சுலபமாகி இருப்பதை கண்டு மக்களின் மனநிலையை என்னவென்று சொல்ல தெரியாமல் முழி பிதுங்கி போயுள்ளேன்.

உலக நாயகன் கமலஹாசன் கட்சி ஆரம்பித்து, அதிரடியாக வலம் வந்து, கடைசி வரை ஜெயிப்பது போல வந்து கொண்டிருக்கிறார். நல்ல ஒரு போட்டியாளராக தான் களத்தில் இருந்திருக்கிறார். இன்னும் பெரிதாய் வந்திருக்கலாம்! ம்ம்ச்ச்... ஹ்ம்ம்.. 2006 தேர்தலில் விஜயகாந்த் ஒரு சீட்டுடன் சட்டசபைக்கு வந்து, பின்னர் 2011 தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாக உட்கார்ந்தார். அதேபோல ம.நீ.ம க்கும் நடந்திருக்கலாம் என சொல்லவில்லை... நடந்திருந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறேன். அதைவிட ஒரு சினிமா ரசிகனின் ஆசையாக, உலக நாயகனின் புரிபடாத கன்னி பேச்சை சட்டசபையில் கேட்பதற்கு பதிலாய், சேனாபதியின் கரகர குஜராத்தி பேச்சையும், விக்ரமின் மிரட்டலான விருந்தையும் காண என் கண்கள் விழைகிறது! (நடந்தால் நன்றாக இருக்கும்..)

அடுத்து நம்ம தம்பிகளின் அன்பு அண்ணன்/ தமிழ் சமூகத்தின் இனமான, வீரமான, தலைவன் செந்தமிழன் சீமான். இம்முறையும் ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.  2011, 2016 தேர்தலில் ஏன் தோற்றீர்கள் என கேட்டதற்கு, எங்கள் வாக்காளர்கள் இன்னும் ஓட்டு போடும் வயதுக்கு வரவில்லை சொல்லி  கொண்டிருந்தனர். இந்த முறையும் அவர்கள் வாக்காளர்கள் வயசுக்கு வரவில்லை போல. அடுத்த முறையாவது... ஹ்ம்ம் வேண்டாம் விடுங்க... ஆனால் ஒரு விஷயத்தில் இவரை பாராட்டலாம்; கூட்டணி இல்லை என்று சொல்லி தனியே நின்று கெத்து காட்டி நிற்கிறார். தமிழ் தேசிய ஆட்சியில் அதிபர் சீமான் என்கிற கனவுலகில் இருந்த இவர் தம்பிகள் மீண்டு வர சில நாட்கள் ஆகும். வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும் தான்; ஆனா ஓவரா பேசுற வாய் .........  இம்முறையும் ஓட்டை பிரிக்கும் இவர்கள் தொழிலை செவ்வனே செய்துள்ளார்கள். இல்லாவிட்டால் இன்னும் சில தொகுதிகளில் தி.மு.க வென்றிருக்கும். 

அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என காத்திருந்து பின்வாசல் வழியாக வாளேந்தி வந்த ஆர்.எஸ்.எஸ்./ பா.ஜ.க. / இந்துத்துவா கட்சிகள், சற்றே பலமான அடியுடன் யோசித்து கொண்டிருப்பார்கள். தற்போது 4 தொகுதிகளை கைப்பற்றி நிற்கின்றனர். அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருந்தாலும் திமுக தில்லுடன் மோத சமாளிக்க வேண்டும்.   

10 வருடங்களுக்கு பிறகு தி.மு.க ஆட்சிக்கு வருகிறது. வாழ்த்துக்கள்! இன்னும் கொஞ்ச காலங்களில் விழபோகும் பேரடியை யோசிக்காமல் ஊரெங்கும் உடன்பிறப்புக்கள் மகிழ்ச்சி பொங்க வெற்றி களியாட்டதில் இருக்கின்றார்கள். ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளை விட, எக்கச்சக்க இடியாப்ப சிக்கலில் நாடும், மாநிலமும் இருக்கிறது. சற்றே உண்மையை சொல்ல வேண்டுமானால், நம் டோப்பாவை கழட்டிவிட்டு மண்டையை சொரியும் அளவுக்கு பிரச்சனைகள் இருக்கிறது. அதை சரிவர கவனித்து, மத்தியில் சமாளித்து ஆட்சி நடத்த வேண்டும். ஏற்கனவே மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை அல்லது மிகவும் சொற்பமாக நிதியை ஒதுக்குகிறார்கள் என சொல்லி  கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் இழுபறியாக இல்லாமல், இருபுறமும் அவதானித்து, சரியான முடிவுகளை எடுப்பது நல்லது. கத்தி மேல் நடக்க போகும் தளபதியின் ஆட்சி எப்படி இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இதிலிருந்து ஒன்று தெளிவாய் தெரிகிறது. மூன்றாம் அணி என யார், எப்பொது வந்தாலும் இந்த இரு பெரும் கட்சிகளை தாண்டி வ(ள)ர முடியவில்லை. மதிமுக, மநகூ, நாதக, மநீம.. என யார் வந்தாலும் மக்கள் முடிவு வேறு விதமாக தான் இருக்கிறது. 

எனக்கு இதில் ஒரே ஒரு அல்ப சந்தோஷம். அப்பாடா! நல்ல வேளை!! ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை... எத்தனை பேர் வாயில் புகுந்து புறப்பட வேண்டியதோ.. மயிரிழையில் தப்பித்தார் தலைவர்! ஹி..ஹி ஹி.. :-) 

தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க. கூட்டணியை கூட்டி அள்ளி குப்பையில் போட்டுவிட்டார்கள் அந்த மாநில மக்கள். நம்மை விட சேட்டன்களும், பெங்காளிகளும் ரோஷகாரங்க போல... 

ஒரு வழியாக விடியல் வந்துவிட்டது. கட்சிக்கா, மக்களுக்கா, யாருக்கென தான் தெரியவில்லை. இனிமேலாவது நம்ம தமிழ் நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி! 

"வெற்றி நடை போடும் தமிழகமே" பாடலின் வேறொரு வெர்ஷனை 2026-ல் கேட்கலாம், தயாராகுங்கள்! 


நன்றி!!!

பி. விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

4 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பாசிச வலையில் சிக்காமல், அடிமையாகாமல் இருந்தாலே போதும்...

முத்துகிருஷ்ணன் சொன்னது…

எழுத்தில் இன்னும் பலம் தேவை.

விமல் ராஜ் சொன்னது…

அதுதான் சரி! வருகைக்கு நன்றி!

விமல் ராஜ் சொன்னது…

இன்னும் முயற்சிக்கிறேன் !