social issue லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
social issue லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 மார்ச், 2024

குடிபோதையில் பய(மர)ணம் !

வணக்கம், 

சில வருடங்களுக்கு முன், வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் மதுராந்தகம் அருகே நண்பரின் கார், மற்றொரு பெரிய வண்டி மீது மோதி அப்பளம் போல நொறுங்கியது. நொறுங்கிய வண்டியில் இருவர் (நண்பரும் ஒருவர்) படுகாயம், மற்றொருவர் உயிரிழந்தார். குடித்து விட்டு வண்டி ஓட்டியதால் ஏற்பட்ட விளைவு. சில நாட்களுக்கு முன் ECR சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கார், விபத்தில் சிக்கிய பைக்கில் வந்த இருவரை போலீஸ்காரர்கள் ஓரம்கட்டி நிறுத்தி வைத்து விசாரித்து கொண்டிருந்தனர். அதுவும் குடிபோதை பயணமே! இது போன்ற பல சம்பவங்களை நாம் செய்திகளிலும், தினசரி பயணத்தின் போதும் பார்த்திருப்போம்.


ஒவ்வொரு ஆண்டும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர் அல்லது காயமடைகின்றனர். இக்காலத்தில் சாலை விபத்துக்களுக்கு குடித்துவிட்டு வண்டி ஓட்டுதல் முக்கிய காரணமாகிவிட்டது. அது சட்டவிரோதமானது மட்டுமல்ல, பொறுப்பற்றது கூட. குடித்துவிட்டு வண்டி ஓட்டுதலால் ஏற்படக்கூடியவை பற்றி இணையத்தில் படித்து தெரிந்து கொண்டதை உங்களிடம் பகிர்கிறேன்.


Drunk-and-drive-effects

நாம் சாலையில் போய் கொண்டிருக்கும் போது போலீசார் வழிமறித்து தேவையான ஆவணங்களையெல்லாம் பேப்பர்களையெல்லாம் சரிபார்த்த பின்,  குடித்திருக்கிறோமா இல்லையா என சோதிக்க ஒரு சிறிய மெஷின் ஒன்றை வைத்து கொண்டு அதில் நம்மை ஊத சொல்வார்கள். அதுதான் BreathAlyzer. மூச்சு காற்றில்/ சுவாசத்தில் உள்ள ஆல்கஹால் அளவை அளவிடும் சாதனம். 

குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் வரம்பு BAC-ல் அளவிடப்படுகிறது. BAC (Blood Alchohol Content) என்பது உங்கள் இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவை குறிக்கும்.


குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் அல்லது BAC வரம்புகள் ஒவ்வொரு நாடு மற்றும் அவற்றின் சட்டங்களை பொறுத்தது. இந்தியாவில் BAC வரம்பு 0.03%. அதாவது இரத்தத்தில் 100 மில்லியில் 0.03 கிராம் ஆல்கஹால் வரை இருக்கலாம். மூச்சு, இரத்தம், சிறுநீர் அல்லது உமிழ்நீர் சோதனை மூலம் BAC சரிபார்க்கப்படலாம். பெரும்பாலும் இது மூச்சு மற்றும் ப்ரீத் அலைசரில் அவர்கள் பயன்படுத்தும் கருவி மூலம் சோதிக்கப்படுகிறது. இரத்தப் பரிசோதனைகள் துல்லியமான மற்றும் நம்பகமான BAC கொடுக்கின்றன என்றாலும். BAC லிமிட்க்கு மேல் இருந்தால் அபராதம் அல்லது சிறை கண்டிப்பாக உண்டு. நீங்கள் எவ்வளவு குறைவாக குடித்திருந்தாலும், நீங்கள் ஒரு முறை குடித்தாலும் நீங்கள் வாகனம் ஓட்ட தகுதியற்றவர் என்ற பொறுப்புணர்வு நம்மிடையே நிச்சயம் வேண்டும்.


குடிபோதையில் அல்லது எந்த ஒரு போதையிலும் வாகனம் ஓட்டுவதும், இந்தியாவில் கிரிமினல் குற்றமாகும். இந்திய மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் பிரிவு 185ன் கீழ், போதையில் வாகனம் ஓட்டுவது குற்றமாகும். ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மூன்று ஆண்டுக்குள் அதே தவறை செய்பவருக்கு, 2 வருட சிறை தண்டனை அல்லது 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.


சமீபத்தில் டில்லியில் நடந்த ஒரு கருத்துக்கணிப்பில், 30,000 பேரில் 81.2% பேர் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை ஓப்புக் கொள்கிறார்கள். 2022-ல் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது இந்தியாவில் சாலை இறப்புகளுக்கு/விபத்துகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளது. சட்ட வரம்புக்குக் கீழே இருந்தாலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது ஆபத்தானது. 0.01 சதவிகிதத்துக்கும் குறைவான BAC கொண்ட ஓட்டுநரின் திறன்களைக் குறைக்கும் பக்கவிளைவுகளை மதுவும் அதன் போதையும்  ஏற்படுத்தலாம்.  

  • போதையால் மெதுவாகும் செயல்திறன் மற்றும் கவன குறைவு 
  • கண் பார்ப்பதை மனதோ/கையோ கேளாமல் ஒருங்கிணைக்க முடியாமல் தடுமாறுவது
  • சாலையில் முன்னே போகும் வாகனம்/ ஆட்கள் பற்றிய தவறான முடிவு  (wrong judgement)
  • என்ன செய்கிறோம் என தெரியாதவாறு நினைவாற்றலை இழப்பது  
  • விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது
  • வாழ்க்கையையே மாற்றும் விபத்துகளும் ஏற்படலாம்
  • விபத்தினால் போதையில் ஓட்டுபவரே விபத்தில் சிக்க வாய்ப்புண்டு. 
  • போதையில் ஓட்டுபவரால் சாலையில் போவோரும், சாலையோரம் இருப்பவரும் மற்றவரும் விபத்தில் சிக்க வாய்ப்புண்டு 
  • போதையில் ஓட்டுபவரின் வாகனமோ அல்லது மற்றவருடைய வாகனமோ சேதமாக வாய்ப்புண்டு.

வெளியே சென்று மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும், மது அருந்தவும் திட்டமிட்டால், ஓட்டுனரோ அல்லது மது அருந்தாத வேறு ஒருவரோ வாகனத்தை ஓட்டும்படி செய்யலாம். அல்லது வாடகை வண்டி பதிவு செய்து போவது, அல்லது போதையில் பயணத்தையே தவிர்ப்பதும் சால சிறந்தது.



நன்றி!!!

பி. விமல் ராஜ்

வியாழன், 7 ஏப்ரல், 2022

தீண்டத்தகாத பாத்திரங்கள் !

வணக்கம் ,

ஒரு சின்ன இடைவேளை விட்டு மீண்டும் எழுதுகிறேன். பல நாட்களாக கிடப்பில் இருந்த ஒரு பதிவை தூசி தட்டியுள்ளேன். பதிவு மட்டுமல்ல; இதன் கருத்தும் தூசி தட்டப்பட வேண்டியவை தான். கருத்தை ஒரு குட்டி கதையிலிருந்து ஆரம்பிக்கிறேன்..

ஒரு வீட்டு சமையலறையில், ஞாயிற்றுகிழமை மாலை வேளையில்...

அலுமினிய கடாய் அக்கா: ஏண்டி! எப்பவும் ப்ரில் போட்டு விளக்கி வைச்ச புது பொண்ணு மாற்றி பளபளன்னு இருப்ப... இப்போ ஏன் மங்களா பிசுபிசுன்னு இருக்கே.. இன்னைக்கி உன்னை வீட்டு ஐயா விளக்கி வைச்சாரா??

சின்ன எவர்சில்வர் டமரா: ஹ்ம்.. போங்கக்கா.. மனசே சரியில்ல..

அலுமினிய கடாய் அக்கா: ஏன்?? என்னாச்சு??? 

சின்ன எவர்சில்வர் டமரா: அக்கா, நம்மை மட்டும் என் இப்படி ஒதுக்கி வச்சுருக்காங்க.? 

அலுமினிய கடாய் அக்கா: உன்கிட்ட முட்டை ஊத்தி அடிச்சு ஆம்லெட் போடறாங்க.. என்கிட்டே கறி வறுவல், இல்லன்னா கிரேவி செய்றாங்க.. நானும் நீயும் அசைவ சாப்பாடு சமைக்கிற பாத்திரங்கடி.. அதான் நம்மை தனியா வைச்சுருக்காங்க. கழுவி வைச்சாலும் ஒரு மூலையிலே போட்டு வைப்பாங்க.. நம்ம ரெண்டு பேர் மட்டுமா?? அலுமினிய பேசின் பெரியம்மா,  நம்ம பெரியக்கா மண்சட்டி கடாய்,  மீன் கரண்டி மாமா, எல்லாரும் தான்...

சின்ன எவர்சில்வர் டமரா: நம்ம எல்லாத்தயும் ஒரே கடையில தான வாங்குனாங்க.. எப்படி இருந்தாலும் மட்டன் சாப்ஸோ, அக்காரவடிசலோ எல்லாத்தையும் ஒரே தட்டுல போட்டு தான சாப்பிட போறாங்க??

அலுமினிய கடாய் அக்கா: அட..ஆமாண்டி..சரி தான்... சோறு போட்டு வெண்டைக்காய் சாம்பார், உருளை கிழங்கு வறுவல்ன்னு தட்டுல தான் சாப்பிடுவாங்க. ரசத்தை தட்டுல ஊத்தி உறிஞ்சி குடிப்பாங்க.. அதே தட்டுல தான் பிரியாணி போட்டு சாப்பிடுவாங்க, கறி குழம்பு ஊத்துவங்க, முட்டை பொடிமாஸ் செய்வாங்க.. அதிலேயே சாப்பிட்டுடுவாங்க.. தட்டை சாப்பிட்டுட்டு கழுவிடுவாங்கல்ல.. அதனாலதானோ ??

சின்ன எவர்சில்வர் டமரா: ங்கே... என்னது.. அப்ப மத்த பாத்திரத்தையெல்லாம் கழுவ மாட்டாங்களா ?? 

அலுமினிய கடாய் அக்கா: கழுவுவாங்.. ஏய்.. இப்படியெல்லாம் கிராஸ் கேள்வி கேட்டா எனக்கு பதில் தெரியாது பாத்துக்கோ..

ஆனாலும் கொஞ்சம் ஓவரா ஆச்சாரம் பாக்குறவங்க இப்படி தான் தனித்தனியா பிரிச்சு வைப்பாங்க.. 

சின்ன எவர்சில்வர் டமரா: அதுக்குன்னு மீன் சாப்பிட்ட/தொட்ட கையோட ரசம்/மோர் பாத்திரத்தை கூட தொடாம இருக்குறது.. அசைவம் சமைக்கிற பாத்திரத்துல, வேற எந்த பாத்திரத்தையும் கலக்காம இருக்கிறது எல்லாம் எப்படி சரியாகும்... நாமும் அவங்க வீட்டு பாத்திரம் தானே?!? சொந்த வீட்டுல, சொந்த பாத்திரத்தையே இப்படி பண்ணுனா.. ம்ம்ம்..  என்னக்கா பண்றது... 

அலுமினிய கடாய் அக்கா: சரி ..சரி .. விடு . ஒரு சிலரெல்லாம் இப்படி தான்... சபீனா போட்டு விளக்கி வைச்சா எல்லா விளக்கமாறும் பாத்திரமும் ஒண்ணு தான்னு இங்க பல பேர்க்கு தெரியல.. . இவுங்கெல்லாம் ஓட்டல்ல போனா என்ன பண்ணுவாங்க?? ஹஹா....ஹஹா..ஹஹா....ஹஹா...

சின்ன எவர்சில்வர் டமரா: ஆமா..ஆமா ..ஹா ..ஹஹா....ஹஹா..

புதன், 30 செப்டம்பர், 2020

சிவப்பு விளக்கு பகுதி

வணக்கம்,

காமாத்திபுரா - மும்பையில் விபச்சாரம் நடக்கும் ஒரு பகுதி. ஆம் திரைப்படங்களிலும், செய்திகளிலும் பார்க்கும் அதே சிவப்பு விளக்கு பகுதி தான். சோனாகாச்சி - இந்த பகுதியும் அதே வகையறா தான். கொல்கத்தாவில் இருக்கிறது.

நம் நாட்டில் சிவப்பு விளக்கு பகுதியை பற்றி தெரியாதவர்கள்/ கேள்விப்படாதவர்கள் யாருக்கும் இருக்க முடியாது. மும்பை, கொல்கத்தா  மட்டுமல்ல.. இன்னும் பல மாநிலங்களில், பல ஊர்களில் வெகு ஜோராக தொழில் நடந்து வருகிறது. ஆதிகாலம் முதல் பெண்கள்களை மதிக்கும், தெய்வமாக போற்றும் நம் நாட்டில், எப்படி இது போன்ற ஒரு முக்கிய நகரங்களில், ஒரு பகுதியே பலான சமாச்சாரங்கள் நடக்கும் முக்கிய இடமாக மாறியது? அதுவும் எப்படி சட்டப்பூர்வமான ஒரு தொழிலாக இருக்கிறது ?  இதற்கு 200 ஆண்டு கால வரலாறு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிக்கிறதா? இப்போதைக்கு ஆசியாவில் மிக பெரிய விபச்சார விடுதி /தொழில் நடக்கும் இடம் மும்பையிலும், கொல்கத்தாவிலும் தான் இருக்கிறது.


காமாத்திபுரா வரலாறு-
1795 - பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துகீசியர்கள் அப்போதைய பம்பாய் மாகாணத்தில் சில பகுதிகளை ஆட்சி செய்து கொண்டிருந்த சமயம். ஏழு தீவுகளை (இப்போது மும்பை) ஒருங்கிணைக்க பாலம் கட்ட பல தொழிலாளர்களை அழைத்து வந்தனர். ஆந்திரா பகுதியிலிருந்து சில தெலுங்கு பேசும் 'காமாத்திஸ்' என்னும் கூலி வேலை செய்யும் மக்களை அழைத்து வந்து லால் பஜாரில் குடிவைக்கபட்டனர். அந்த இடமே பின்னாளில் காமாத்திபுரம்/காமாத்திபுரா ஆனது. பாலம் கட்டும் வேலை முடிந்ததும், சரியான வருமானம் இல்லாததாழும், ஏழ்மை நிலையாலும் அந்த ஊரில் உள்ள சில பெண்கள் தாங்களாகவே முன்வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் எண்ணிக்கை கம்மியாக தான் இருந்தது; பின்னர் மராட்டிய மண்ணில் பல ஊரிலிருந்து ஏழை பெண்கள்களும், குடும்ப பெண்களும் கடத்தி வரப்பட்டு, வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபட்டனர். இக்காலத்தில் கிழக்கு இந்திய கம்பெனி அதிகாரிகளும், ஆங்கிலேய சிப்பாய்களும் அவர்களுடைய இச்சைக்காக காமாத்திபுரம் வந்து போக, இது பாலியல் தொழிலுக்கான இடமாக மாறியது. ஆங்கிலேய அரசுக்கும் இதன் காப்பாளர்கள் மூலம் வரியும் வந்து கொண்டிருந்தது.

பின்னர் நேபாளம் , சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பெண்களும், மற்ற வெளிநாட்டு பெண்களும் ஒவ்வொரு தெருக்களில் குடியமர்த்தப்பட்டு பல மன்னர்களுக்கும், செல்வந்தர்களுக்கும், ஆங்கிலேய அரசு அதிகாரிகளுக்கும் பெண்கள் விருந்தாக்கபட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் தெருவெங்கும் எல்லா வீடுகளிலும் தொழிலில் இருந்ததால், இதை முறைசெய்ய பாலியல் பெண்களுக்கு அரசு அங்கீகாரம் கொடுத்து, உரிமம் வழங்கப்பட்டது. பெண்களை தேடி வருவோர்கள், எந்தெந்த வீடுகளில் உரிமம் எண்ணும், சிகப்பு விளக்கும் எரிகிறதோ, அது தான் வேசிகளின் வீடு/விடுதி. அந்த பகுதியில் பல வீடுகளில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருப்பதால், அப்பகுதி சிவப்பு விளக்கு பகுதி என பெயர் பெற்றது. இவர்களுடைய காம இச்சைக்காகவும், பேராசைக்காகவும் பல பெண்கள்  நாசமாக்கப்பட்டு, இக்கொடுமை இன்று வரை தெடர்ந்து வருகிறது. சிறு வயது பெண்கள் முதல் பருவ வயது பெண்கள் வரை பலர் இங்கு வலுக்கட்டாயமாகவும், தெரியாமல் கடத்தி கொண்டு இங்கு விடப்படுகிறார்கள். இங்கு பிறக்கும் (பெண்) குழந்தைகள் பருவமடைந்ததும் இதே தொழிலில் ஈடுபடுத்த பட்டனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னும், ஆங்கிலேய அரசிடமிருந்து அங்குள்ள பாலியல்  தரகுகளிடமும், தாதாகளிடமும் இவ்விடம் கைமாறியது. பெரிதாக எந்த மாற்றமும் இல்லாவிடில், தொழில் கனச்சிதமாக நடந்து கொண்டிருந்தது. ஆசியாவின் இரண்டாவது மிக பெரிய பாலியல் நகரமாக இருந்த காமாத்திபுரா,  1990 களின் ஆரம்பத்தில்  சில சமூக நல ஆர்வலர்களின் முயற்சியுடன், வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட பெண்கள் சிலர் மீட்கப்பட்டு மறுவாழ்வு தரப்பட்டது. மேலும் அக்காலத்தில் எய்ட்ஸ் நோயால் பல பெண்களும் ஆண்களும் பாதிக்கபட்டதால், ஆணுறை பற்றிய விழிப்புணர்வும், கலந்தாய்வும் நடத்தப்பட்டு பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, இந்த தொழிலிருந்து மீட்கப்பட்டனர்.    

சமீபத்திய கணக்கீட்டின்படி பல பெண்கள், பாலியல் தொழிலை விட்டு சாதாரண வாழ்க்கையில் வாழ ஆரம்பித்துவிட்டனர். இப்போது சொற்ப எண்ணிக்கையில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், இன்றும் இது போன்ற ஜல்சா காரியங்களுக்கு இவ்விடம் பெயர் பெற்று தான் விளங்குகிறது.

சோனாகாச்சி வரலாறு-
சோனா-தங்கம் ; காச்சி- மரம். சோனாகாச்சி என்பதற்கு பொன்னாலான மரம் என்று பொருள். வங்காளத்தில் முன்பொரு காலத்தில் ஒரு தாய் தன்னுடைய மகன் இறக்கும் வேளையில் 'நான் இறந்தும் மரமாக இருப்பேன்' என்று கூறியதை கொண்டு ஒரு மரம் நட்டு, மசூதியும் கட்டினாள். பின்னர் அந்த இடம் தான் சோனாகாச்சி என்று அழைக்கப்பட்டது.

மும்பை காமாத்திபுரம் போல இவ்விடம் பாலியல் நகரமாக எப்படி மாறியது என்பதற்கு சரியான தரவுகள் கிடைக்கவில்லை. ஆயினும் ஆசியாவில் மிக பெரிய பாலியல் நகரத்தில் சோனாகாச்சி முதல் இடத்தில் உள்ளது. 90-களின் ஆரம்பத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பின்னாளில் பலரின் உதவியுடன் பல பெண்கள் மீட்டெடுத்து சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  

ஏற்கனவே சொன்னது போல மும்பை, கொல்கத்தா மட்டுமல்லாமல், புதுடெல்லி, நாக்பூர், வாரணாசி,ஹைதராபாத் என பல முக்கிய நகரங்களில் பாலியல் நகரங்கள் இன்றும் இருக்கிறது. பாலியல் தொழில் (Prostitution) செய்வது இந்தியாவில் சட்டபூர்வமான தொழில் என்பது பலருக்கு தெரியாது. ஆனால், விடுதி அமைத்து தொழில் நடத்துவது, (பெண்) தரகு வேலை பார்ப்பது போன்றவை தான் சட்டத்துக்கு எதிரானவை.

இக்கொடுமைகளை எந்த அரசும் களையவோ, பாலியல் நகரங்களை தடை செய்யவோ முற்படவில்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம் ஆகும்.
 

நன்றி!!!
பி.விமல் ராஜ்  

ஞாயிறு, 17 நவம்பர், 2019

டார்க் நெட் என்னும் இருள் இணையம்!

வணக்கம்,

இந்த 2k கிட்ஸ் காலத்தில், ஸ்மார்ட் ∴போன் வந்த பிறகு இன்டர்நெட் பற்றி தெரியாதவர்கள் யாருமில்லை. எது வேண்டுமானாலும் படிக்க, தேட, வாங்க, ஆராய, பார்க்க, கேட்க  என இன்டர்நெட் பெரும் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும் ஒரு இருண்ட பக்கம் இருப்பது போல இன்டர்நெட்டுக்கும் இருக்கிறது. அதுதான் டார்க் நெட் (Dark Net) என்னும் இருள் இணையம்.

டார்க் நெட் என்பது இன்டர்நெட்டில் ஒரு சிறு பகுதி. பொதுவான பார்வையில் இல்லாமல், தேடலில் கிடைக்காத வலைத்தளங்கள். பெரும்பாலும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கான, மறைக்கப்பட்ட வலைத்தளங்கள் தான் டார்க்நெட்டில் இருக்கிறது.

ஒரு பெருங்கடலில் மேற்பகுதியில் தெரியும் பனிப்பாறை அளவுதான் நம்மால் சாதாரணமாக பார்க்க/தேட முடிந்த வலைத்தளங்கள் (கீழுள்ள படத்தை பார்க்கவும் ). இதனை சர்∴பெஸ் வெப் (Surface Web) என சொல்வார்கள். நம் கண்ணில் தெரியாமல், கடலுக்கடியிலும், ஆழ்கடலிலும்  இன்னும் பல இணையதளங்கள் முழுகியுள்ளது என நம்மில் பலருக்கு தெரியாது. இதனை டார்க் வெப் (Dark Web) அல்லது டார்க் நெட் (Dark Net) என சொல்வார்கள்.

Deep Web & Dark Net
Deep Web & Dark Net - click to enlarge 
(Surface Web) சர்∴பெஸ் வெப் அல்லது கிளியர் வெப் (Clear web) என்பது சாதாரண பொதுமக்களால் எளிதில் (search engine) சர்ச் என்ஜின்கள் மூலம் தேட கூடிய, பார்க்க கூடிய பக்கங்களை கொண்டது. இதற்கு Clear net , indexable web என்ற பெயருமுண்டு. WWW இல் ஒரு பகுதி. எல்லோருக்கும் தெரிந்த சர்ச் என்ஜின்கள் கூகிள், யாஹூ மற்றும் பிங் ஆகியன ஆகும். இதில் கூகிள் மூலம் தேடப்படுபவை 30 ட்ரில்லியன் வெப் பக்கங்கள் மட்டுமே ஆகும். இது இன்டர்நெட்டில் வெறும் 4% மட்டுமே ஆகும்.

இன்னும் புரிய வேண்டுமானால், நாம் தினசரி இன்டர்நெட்டில் உபயோகப் படுத்தும் கூகிள், யாஹூ, யூ ட்யூப், அமேசான், ∴பிளிப்கார்ட், டிவிட்டர், ∴பேஸ்புக், விக்கிப்பீடியா, பிளாக்ஸ்.. இன்னும் பல வெப் சைட்டுகள் சர்பெஸ் வெப்பில் இருப்பவை தான்.

(Deep Web) டீப்  வெப் என்பது சாதாரண தேடலில் மறைக்கப்பட்ட பக்கங்கள் தான். ரகசிய தகவல்களை கொண்ட வலைத்தளங்கள், அரசாங்க குறிப்புகள்/ தரவுகள் (databases), பல்கலைக்கழக தகவல்கள்/தரவுகள், வங்கியின் பணபரிமாற்ற தகவல்கள், தனியார் வலைத்தளங்கள் (web portals), பணம் கட்டி பயன்படுத்தும் சேவைகள் போன்ற வலைத்தளங்கள் டீப் வெப்பில் இருக்கிறது. உதாரணத்திற்கு நாம் சந்தா பணம் கட்டி பயன்படுத்தும் நெட்பிலிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற செயலிகளின் தகவல்கள் டீப் வெப்பில் தான் இருக்கிறது. அதுபோல சில அரசாங்க குறிப்புக்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய web portalகள் நாம் நேரடியாக கூகிளில் தேடி ஆராய/கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இவற்றுக்கென தனி IP address மூலம் நாம் நேரடியாக அன்றாடம் பயன்படுத்தும் பிரௌசர்கள் மூலம் அதற்கென உள்ள username, password மூலம் பயன்படுத்தலாம்.   

(Dark Net) டார்க் நெட் என்பது சாதாரண மற்ற வலைத்தளங்கள் போல பார்க்க பயன்படுத்த முடியாதது. Deep Web -ல் ஒரு சிறு பங்கு தான் டார்க்நெட். இதில் பெரும்பாலும் எல்லா வலைத்தளங்களும் மறைக்கப்பட்ட வலை தளங்களாக தான் இருக்கும்.

இந்த டார்க் நெட்டை உபயோகபடுத்த, நாம் தினசரி பயன்படுத்தும் பிரவுசர்கள் மூலம் உலவ முடியாது. எல்லா வலைத்தளங்களும்  encrypted செய்யப்பட்டிருக்கும். டார்க் நெட்டில் உலவ உதவும் சில பிரத்யோக encrypted பிரவுசர்கள் இருக்கிறது. அவை:
  • Tor browser
  • Subgraph OS
  • Firefox
  • Opera
  • Waterfox
  • I2P
  • Tails
  • Whonix
TOR browser

இதில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது டார் பிரவுசர் (Tor browser). நாம் எப்படி Chrome, Safari, IE, Firefox போன்ற பிரவுசர்களை பயன்படுத்தி நெட்டில் உலவுகிரோமோ அது போல, டார் பிரவுசர் மூலம் டார்க் நெட்டில் உலவுகிறார்கள். டார் பிரௌசரை Onion router என்று சொல்கிறார்கள். டார்க் நெட்டில் உள்ள வலைத்தளங்களின் டொமைன்கள் பெரும்பாலும்  .onion என்று இருக்கும். இது போன்ற வலைத்தளங்களை டார் மூலம் பயன்படுத்தலாம்.

இன்டர்நெட்டுக்கு நாம் பயன்படுத்தும் பிரௌசர்களின் மூலம் நாம் என்னென்ன தளங்களை பார்க்கிறோம் என்பதை கண்காணிக்க முடியும். ஆனால் டார் மூலம்  டார்க் நெட்டில் உலவும் போது எதையும் கண்காணிக்க முடியாது.

டார்க் நெட்டில் என்னென்ன செய்கிறார்கள் ? எந்த விதமான வலைத்தளங்கள் இருக்கிறது ?? சட்டவிரோதமான, சமூக விரோதமான, மனித தன்மையற்ற இருட்டில் நடக்கும் பல செயல்பாடுகள் இங்கு தான் நடக்கிறது. போதை மருந்து, ஆயுத கடத்தல், மனித கடத்தல்கள், சிறு குழந்தைகளின் ஆபாச படங்கள், கூலிப்படைகள், திருட்டு வீடியோ /ஆடியோ (புரியும்படியாக தமிழ் ராக்கர்ஸ்) , கணினி மென்பொருள் திருட்டுகள், பேங்க் திருட்டு மற்றும் மோசடிகள், கணினி மற்றும் இணையம் மூலம் கடக்கும் திருட்டுகள் என எல்லாமே டார்க் நெட்டில் தான்நடக்கிறது. இவ்வகை சைபர் திருடர்கள் டார்க் நெட்டில்  விற்க அல்லது  வியாபாரம் செய்ய பிட் காயின் (Bitcoin) போன்ற virtual currency மூலம் பணபரிமாற்றங்களை செய்து கொள்கின்றனர். அதனாலும் இவர்களை யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை.

இந்திய/ இன்டர்போல் சைபர் கிரைம் மற்றும் உளவுத்துறை  அதிகாரிகள் சேர்ந்து பல தொழில் நுட்ப உதவியுடன் இவ்வகை குற்றங்களையும், குற்றம் செய்பவரையும் பிடிக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். சிலரை கைது செய்து நடவடிக்கையும் எடுத்துள்ளனர். ஆனால் பலரை இன்னும் எந்த இடத்திலிருந்து (நாட்டிலிருந்து) குற்றங்களை செய்கிறார்கள் என்றே அறிந்து கொள்ள முடியவில்லை.

எல்லா தொழில்நுட்பத்திலும் வரமும் சாபமும் இருப்பது போல, இதிலும் ஒரு சாபக்கேடு இருக்கிறது. எங்கு சென்றாலும் இன்டர்நெட்டை பயன்படுத்தும்  நாம் தான் எச்சரிக்கையுடனும், சமூக அக்கறையுடனும் செயல்பட வேண்டும்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

Metoo பரிதாபங்கள்!

வணக்கம்,

#Metoo - கடந்த சில நாட்களாக அனைவரும் பரபரப்புடன் பேசுவது இதை பற்றிதான். போன வருடத்தின் நடுவில் இந்த இயக்கம் ஆரம்பித்து, மீண்டும் இந்த ஆண்டு சின்மயி மூலம் பிரபலம் அடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் சின்மையை தொடர்ந்து இன்னும் சில (சினிமா) பிரபலங்களும், பிற பெண்களும் #metoo என ஹாஷ்டாக் செய்து, தாங்களும் இம்மாதிரியான இக்கட்டான சூழலை கடந்துதான் வந்துள்ளோம் என சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பதிவுகளை படித்த பலரும் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சிலர் இந்த பிரபலங்கள் மீது பலத்த கேள்வி கணைகளை தொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

"பாலியல் தொல்லையோ, வற்புறுத்தலோ இவர்கள் அனுபவித்து இருக்கிறார்கள் எனில், ஏன் இத்தனை ஆண்டுகளாய் சொல்லவில்லை.? உடனே சொல்லவில்லை என்றாலும் சில நாட்களிலோ, சில மாதங்களிளோ, சில வருடத்திற்கு பிறகாவது சொல்லியிருக்கலாம். அப்போது வெளியிட்டால், வரும் வாய்ப்பு வராமல் போகும், வரப்போகும் ஆதாயம் கிட்டாமல் போகும் என்பதால் தாமதமாக இப்போது சொல்கின்றனர்.. எல்லாமே விளம்பரம் தான்! " மேலும், "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா? திரைத்துறையில் உள்ள பெண்கள் எல்லோரும் இப்படிதான்; யாரும் பத்தினிகள் இல்லை", என்றெல்லாம் சொல்கின்றனர்.

மேற்கண்ட கேள்விக்கெல்லாம் பதிலும் இல்லை; அதை நாம் ஆராய போவதும் இல்லை; அது நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையும் இல்லை. யாரெல்லாம் metoo என பகிர்கிறார்கள்?  படித்த, நாகரீக உலகில் வாழும் பெண்கள், பிரபலங்கள் என வெகு சிலர் மட்டுமே சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். மற்றவர்கள் ???

metoo india

நம் மக்களுக்கு பொதுவான ஒரு எண்ணம் உண்டு. இது போன்ற கொடுமைகளிலெல்லாம் நமக்கும், நம் வீட்டு பெண்களுக்கும் நடக்காது என்று எண்ணி, இதை பற்றி யோசிக்காமல் அல்லது விழிப்புணர்வு செய்யாமல் விட்டுவிடுவார்கள். நாட்டில் உள்ள எல்லா பெண்களும்  ஏதாவது ஒரு வகையில் இது போன்ற பிரச்சனையை தாண்டி தான் வந்திருக்க வேண்டும். அதுவும் வயது வரம்பின்றி பாதிக்கப்படுகின்றனர். வெறும் பாலியல் பலாத்காரமும், அதற்கு முற்படுவதும் மட்டுமே metoo-வில் சேராது.

சில நாட்களுக்கு முன் திவ்ய பாரதி என்ற சமூக செயல்பாட்டாளர் ஒருவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் கோவை, ஈரோடு அருகே குக்கிராமத்தில் வசிக்கும் பெண்கள், பஞ்சாலையில் வேலை செய்து பிழைத்து வருகின்றனர். அதில் பெரும்பாலான பெண்கள் வீடு விட்டால் பஞ்சாலை, பஞ்சாலை விட்டால் வீடு என வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து வருபவர்கள். அவர்களுடன் பேசும் போது அவர்களில் சிலர், ஓடும் ரயிலை கூட பார்த்ததில்லை; சிலர் யானையை கூட பார்த்ததில்லை; ஓட்டலுக்கு போய் சாப்பிட்டதில்லை என சொல்லினார்களாம். இதுபோல சின்ன சின்ன விஷயங்களை கூட தெரிந்து வைத்திருக்காத/பார்த்திராத பெண்கள் (எல்லோரும்) கூட ஏதோ ஒரு விதத்தில் வீட்டிலோ, உறவினர் மூலமாகவோ, வேலை செய்யும் இடத்திலோ, பயணத்தின் போதோ பாலியல் சீண்டல்கள் அல்லது தொந்தரவுகளுக்கு ஆளாகி உள்ளனர். வேலை, குடும்ப சூழ்நிலை, வருமானம் போன்ற காரணங்களால் எல்லாவற்றையும் அடக்கி கொண்டு இன்றும் பணிக்கு போய் வருகின்றனர்.

இது போல கிராமங்களிலும், மலை காடுகளில் வாழும் பெண்களிடம் நடக்கும் பாலியல் சீண்டல்களும், பள்ளிக்கு செல்லும் பெண் பிள்ளைகளிடம் நடக்கும் தொந்திரவுகளும், நகரத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும், ஜன நெருக்கடியான இடத்தில் இடிபடும் பெண்களும், அல்லது அவர்கள் அனுபவிக்கபடும் கொடுமைகலெல்லாம் எந்த சமூக வலைதளங்களிலும் பதியப்படுவதில்லை.

சிலர் பயந்து போய் வீட்டில் சொல்லி விடுகிறார்கள். சிலர் சொன்னால் மீண்டும் வேலைக்கு போகவோ/பள்ளி கல்லூரிக்கு போகவோ விடமாட்டார்கள் என பயந்து தங்களுக்குள்ளேயே மறைத்து மறந்து விடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் குடும்ப சூழலும், சமுதாயமும் மட்டுமே காரணமாக இருக்கிறது.

பல நாட்களுக்கு முன் நடந்ததை இப்போது சொல்வதால் இப்போது என்ன பிரயோஜனம் என கேட்கிறார்கள். பிரயோஜனம் உண்டு! இனிமேல் வரும் பெண் சமூகத்திற்கும், மற்றவர்க்கும் இவர்களை பற்றி தெரிந்திருக்கும்.  பெண்களுக்கு தேவை தைரியமும், தன்நம்பிக்கையும் தான். உங்களுக்கு இது போன்ற அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டால், உடனே தைரியமாக எதிராளியை கண்டிக்க அல்லது தண்டிக்க வேண்டும். குறைந்தபட்சம் உங்கள் எதிர்ப்பை அழுத்தமாக காட்ட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு ஒரு பயம் ஏற்படும். பஸ்சில்/ரயிலில் இடிக்கும், கைவைக்கும் இடிமன்னர்களை, பள்ளி பெண்களிடம் சில்மிஷம் செய்யும் ஆட்டோ டிரைவர்கள், மாணவிகள் தங்களிடம் படிப்பதால், அதிக இடம் எடுத்து கொள்ளும் பள்ளி/ டியூஷன் ஆசிரியர்கள், அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களை வற்புறுத்தும், சீண்டும் கண்காணிப்பார்கள்/மேலாளர்கள், தனியே வரும் பெண்ணிடம் தவறாக நடக்க முயல்பவர்கள், என யாராக இருப்பினும் நீங்கள் ஒரு முறை எதிர்ப்பை காட்டிவிடுங்கள். சத்தம் போட்டு கண்டியுங்கள், முடிந்தால் தண்டியுங்கள். இப்படி நடந்தால் பெண்கள் எதிர்ப்பார்கள் என தெரியும் பொது இதுபோன்ற தவறை மீண்டும் செய்ய பயப்படுவார்கள் அல்லது யோசிப்பார்கள். மற்ற பெண்களுக்கு நடக்காமல் இருக்க வாய்ப்புண்டு.

சமூகத்தில் இவையெல்லாம் நடக்காமலிருக்க, பெண்களை மதியுங்கள். முதலில் உங்கள் வீட்டு பெண்பிள்ளைகள் சொல்வதை முழுவதையும் கேளுங்கள்; பிறகு அவர்கள் சொல்வது தவறா? சரியா? என யோசியுங்கள். பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லுங்கள். 'குட் டச்', 'பேட் டச்' போன்றவற்றைச் பற்றி சொல்லி கொடுங்கள். நல்ல ஆரோக்கியமாக, வளமான பெண் சமுதாயத்தை உருவாக்குங்கள்!


நன்றி!!!
பி.விமல் ராஜ்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா??

வணக்கம்,

" இன்ஜினியரிங் படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்.  வாழ்க்கையில் சீக்கிரம் செட்டில் ஆகிவிடலாம். " இது கடந்த பதினைந்து அல்லது இருபது வருடங்களாக, பரவலாக இந்திய பெற்றோர்களால் நம்ப படும் ஒரு அசாத்திய (மூட) நம்பிக்கை. பெண்ணோ/பையனோ பத்தாவது முடித்தது முதல், பிளஸ் 1 -ல் பஃர்ஸ்ட் அல்லது செகண்ட் குரூப் எடுத்து, பின்னர் பிளஸ் 2 பொது தேர்வில் நல்ல மார்க் வாங்கி ஜெயித்து, Maths Physics Chemistry -ல் குறைந்தபட்சம் கட்டாப்ஃ 150 மேல் எடுத்து, முட்டி மோதி கவுன்சிலிங் மூலமாகவோ, கோட்டா மூலமாகவோ எப்படியாவது இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் பிடித்து தம் பிள்ளைகளை வாழ்க்கையில் உயர்த்திவிட வேண்டும் என்பது பல பெற்றோர்களின் கனவு...ஆசை... எல்லாம்.

அவர்கள் காலத்தில் இன்ஜினியர்களுக்கு நல்ல மதிப்பும், சம்பளமும் இருந்தது. இப்போது தெருவுக்கு 100 இன்ஜினியர்கள் இருக்கின்றனர். மேலும் 2000-த்தின் ஆரம்பத்தில் உலக மயமாக்கல், கணினி மயமாக்கல் என மென்பொருள் கம்பெனிகள் அடியெடுத்து வைத்த போது பி.எஸ்.சி /பி.ஈ. படித்தவர்கள் மற்ற துறையில் இருந்தவர்களை விட 5 மடங்கு அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்தனர். இரண்டாண்டில் வெளிநாட்டு பயணம், கை  நிறைய சம்பளம் என எண்ணங்களும் ஆசைகளும் வானளவு உயர்ந்தன. இது போல கம்ப்யூட்டர் படித்து பொறியாளரான பெரியாளான பல ஜாவா சுந்தரேசன்களை பார்த்து, நம்ம புள்ளையும் இப்படி சம்பாதிக்கும் என எண்ணி எல்லா பெற்றோரும் தங்களது மனதிலும், தமது பிள்ளைகளின் மனதிலும் இன்ஜினியரிங் கனவை விதைத்தனர்.

engineering-graduates-unemployment

"நான் தான் சரியா படிக்கல.. குமாஸ்தாவாகவே இருந்திட்டேன்.. என் புள்ளையாவது நல்லா படிச்சு, இன்ஜினியரா வந்து, நல்ல சம்பாதிக்கட்டுமே",  என்ற எண்ணம் தான்.  மேலும் +2 படிக்கும் மாணவர்களும், இன்ஜினியரிங் படிப்புக்கு நல்ல ஸ்கோப்.. படித்தவுடன் நல்ல சம்பளத்தில் வேலை என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. ஒருத்தருக்கும் இன்ஜினியரிங் படித்து அறிவை பெருகி கொள்ள வேண்டும்; நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்; புதிதாய் ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாமில்லை. அறிவுக்காக பொறியியல் படிப்பை எடுக்கும் பஞ்சவன் பாரிவேந்தனை போல மக்கள் மிக மிக குறைவே!

திருமண பத்திரிக்கையில் மணமகன்(ள்) பெயருடன் பி.ஈ /பி.டெக் என்று போட்டு கொள்ளவும், வரதட்சணையாக 50 பவுன் நகைக்காகவும், மாமனார் வீட்டில் கார் வாங்கி தர சொல்லவும் தான் பொறியியல் படிப்பு உபயோகமாக இருக்கிறது. ஏற்கனவே இதை பற்றி பொறியியல் படித்து என்ன பிரயோஜனம் ???  என்ற பதிவில் எழுதியுள்ளேன்.     

இப்போது பலரின் கேள்வியும் இதுதான்.. ஏன் இந்தியாவில் வேலை செய்யும் இன்ஜினியர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது? ஏன் இன்ஜினியரிங் படித்த பலருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை? இன்றைய உண்மை நிலை என்ன என்பதை பல பேருக்கு தெரிவதில்லை.

ஏன் இந்தியாவில் வேலை செய்யும் இன்ஜினியர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது?  காரணம் வேறென்ன??? அவர்கள் தேவைக்கு அதிக அளவில் இருப்பதால் தான்.

இந்தியாவில் கிட்டத்தட்ட  10 லட்சம் டாக்டர்களும், 12 லட்சம் வக்கீல்களும், 2 லட்சம் ஆடிட்டர்களும்  இருக்கின்றனர். இன்ஜினியர்கள் எண்ணிக்கை மட்டும் கோடிக்கும் மேல்! 120 கோடி ஜனத்தொகைக்கு மேல் இருக்கும் பாரத தேசத்தில் வெறும் 8 லட்சம் மருத்துவர்களே இருக்கின்றனர். அதனால் டாக்டர்கள் சொற்பமாய் இருந்து, வியாதிகளும், நோய்களும் அதிகமாகி போனதால் மருத்துவர்களுக்கு சம்பளம் அதிகம் தரப்படுகிறது. இது போல பணம் உள்ளவர்கள், அதை என்ன செய்ய வேண்டும்? எதில் முதலீடு செய்யவேண்டும்? என சொல்ல சி.எ  (CA) படித்தவர்கள் தேவை. ஆகவே அவர்களுக்கும் அதிக சம்பளம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 552 பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. அதில் ஒரு வருடத்திற்கு 5 லட்சம் மாணவர்கள் படித்து முடித்து வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3345 பொறியியல் கல்லூரிகள்  (2015-16) இருக்கிறது. அதில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் மாணவர்கள் படித்து முடித்து வருகின்றனர். இதன்படி கடந்த 15 ஆண்டில் எத்தனை பேர் படித்து முடித்திருப்பார்கள் என நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.

நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் சுற்றுலாத்துறை, ஹோட்டல் நிர்வாகம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறை, நிதி நிர்வாகம், வர்த்தகம் மற்றும் வணிகம், நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் கல்வித்துறை (மாணவர்களுக்கு பயிற்றுவிப்பவர்களை தவிர), நாட்டின் முதுகெலும்பான விவசாயம் என எதிலுமே இன்ஜினியரிங் படித்தவர்கள் தேவைபடுவதில்லை. இப்படி இருந்தால் எப்படி எல்லோருக்கும் வேலை கிடைக்கும் ??? வருடந்தோறும் பல வேலை இல்லா பட்டதாரிகளை உருவாக்கி கொண்டே தான் இருக்கிறார்கள். நாமும் பல ரகுவரன் பி.டெக்-களையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

Core கம்பெனிகள் என்று சொல்லப்படும் தயாரிப்பு தொழில்துறை ( manufacturing companies ) நிறுவனங்கள் முன்னாளில் நிறைய இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்தியாவில் இத்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP ) 17%  மட்டுமே! அதனால் அவர்கள் ஆட்சேர்ப்பையும் குறைத்து விட்டனர்.

எல்லோரும் எல்லா விஷயத்திலும் அமெரிக்காவை உதாரணமாக சொல்வார்கள். நானும் அதையே எடுத்து கொள்கிறேன். அமெரிக்காவில் அவர்களுடைய பதினெட்டு டிரில்லியன் டாலர்கள் ($ 18 trillion ) பொருளாதாரத்திற்கு ஒரு வருடத்தில் 1 லட்சம் இன்ஜினியர்கள் தான் உருவாக்கப்படுகிறார்கள். நம் நாட்டின் பொருளாதாரம் வெறும் இரண்டு டிரில்லியன் டாலர்கள் ($ 2 trillion ) மட்டுமே! 15 லட்சம் இன்ஜினியர்களை உருவாக்கி கொண்டிருக்கிறோம். விளக்கை சுற்றும் புற்றீசல்களாக, மக்கள் இன்ஜினியரிங் சேர முக்கிய காரணம்: வாய்ப்பையும் பணத்தையும் அள்ளி கொட்டும் ஐ.டி கம்பெனிகள். நாட்டின் பொருளாதாரத்தில் ஐ.டி மற்றும் பி.பி.ஓ கம்பெனிகளின் பங்கு வெறும் 9% மட்டுமே! அதனால் தான் இங்கு இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் திரும்பும் பக்கமெல்லாம் கல்லூரிகளை திறந்து வைத்து, படித்தவுடன் வேலை, கை நிறைய சம்பளம் என கூவி கூவி அழைக்கின்றனர். பல கல்லூரிகளில் போதிய வசதிகளும், சரியான ஆசிரியர்களும் இல்லாததால் நல்லதொரு பொறியாளர்களை உருவாக்க முடியவில்லை.  அடுத்து பாடத்திட்டம். நம் பொறியியல் பாடத்திட்டங்கள் எல்லாம் மனப்பாடம் செய்து எழுதும் முறையிலேயே இருக்கிறது. செய்முறை மூலம் படிப்பது/சொல்ல தருவது மிக குறைவு. இப்படி இருந்தால் பெயரளவில் தான் நாம் பொறியாளர் என்று சொல்லி கொள்ள முடியும். நம் மீதும் தவறு இருக்கிறது. ஒரு காலத்தில் யாரை பார்த்தாலும் பி.எ. படிக்கிறேன் என்று சொன்னார்கள்; பின்னர் டிப்ளோமோ (பெரும்பாலும் டி.எம்.இ ) படிப்பை எல்லோரும் படித்தார்கள்; பின்னர் பி.காம் பிடித்தார்கள்; அதன் பின் தான் இன்ஜினியரிங் வலையில் விழுந்தார்கள். அடுத்தவர்கள் படிக்கிறார்கள், நாமும் படிப்போம்/பிடிக்க வைப்போம் என்று எண்ணாமல் மாணவரின் திறன் பார்த்து, ஈடுபாடு அறிந்து கல்லூரி படிப்பில் சேர்க்க வேண்டும்.

மேலும் மாணவர்களும், இன்றைய போட்டியான உலகில் முறையாக முயற்சி செய்து, உழைத்து, இன்ஜினியரிங் படிக்கும் போதே அவர்களுடைய  திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். பலர் பொறியியல் பட்டதாரிகள் படித்து முடித்த பின்னரும், சமூக திறன்களையும், மென் திறன்களையும் வளர்த்து கொள்ளாமல் இருக்கின்றனர். படித்து முடித்த இன்ஜினியர்கள் பலருக்கு வேலை கிடைக்காமல் போக இதுவும் ஒரு மிக பெரிய காரணம் என்று பன்னாட்டு நிறுவனங்களின் மனிதவள மேலாளர்கள் சொல்கின்றனர். சரியாய் படிக்காமல், திறன்களை வளர்த்து கொள்ளாமல் இன்ஜினியரிங் படித்த பலரும் தங்கள் படிப்புக்கு கொஞ்சமும் சம்மதம் இல்லாத இடத்தில வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

அப்போ இன்ஜினியரிங் படித்து ஒருவருக்கு கூட சரியான வேலை கிடைக்கவில்லையா ? யாரும் வீடு வாசல் கார், ஃபாரின் என செட்டில் ஆகவில்லையா?? என கேட்பது புரிகிறது. செட்டில் ஆகிறார்கள்.. நூற்றில் 40 பேர்தான். படித்து முடித்த உடனேவோ, சில காலம் கழித்தோ நல்ல வேளையில் செட்டில் ஆகி விடுகின்றனர். மீதம் உள்ள 60% சரியான வேலை இல்லாமல், சம்பந்தமில்லாத வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி கொண்டிருக்கின்றனர்.

தரமில்லாத பொறியியல் கல்லூரிகளை தடுத்தல்; பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல்; மாணவரின் ஈடுபாடு அறிந்து கல்லூரியில் சேர்த்தால் போன்ற பிரச்சனைகள் சரி செய்தாலே போதும், நம் நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைந்து விடும். இதை தவிர வேறு ஏதாவது உங்களுக்கு கருத்துக்கள் தோன்றினால் பின்னூட்டத்தில் பதிலளிக்கலாம்.

தகவல் - Quora, Google 

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

செவ்வாய், 18 ஜூலை, 2017

பற்றி எரிகிறது வீரம் !

வணக்கம்,
இது எனது வெற்றிகரமான 100வது பதிவு! இந்த நாலரை வருடத்தில் இப்போது தான் செஞ்சுரியே போட முடிகிறது. இத்தனை நாட்களாய் என் பதிவுகளை பொறுமையாய் படித்து, கருத்தளித்து, எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் !!!

100th-post-pazhaiyapaper

எனது நூறாவது பதிவில் ஏதாவது ஒரு சமூக பிரச்சனையை பற்றி எழுத வேண்டும் என தோணியது. அதன் விளைவே இப்பதிவு. இப்போதெல்லாம் செய்திகளில், ஒரு முக்கிய செய்தி ஒன்று அடிக்கடி வருகிறது. இளைஞர் தீக்குளிப்பு! முதியவர் தீக்குளிக்க முயற்சி! பெண் தீக்குளித்து இறப்பு! 

தீக்குளித்தல் - ஒருவர் தாமாகவே நெருப்பில் பாய்ந்து உயிரை மாய்த்து கொள்வது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. விரக்தியின் விளிம்புக்கு சென்ற பின் முடிவெடுக்கும் அசாதாரண முடிவு. கொள்கை, லட்சியதிற்காக இப்படி இறப்பவர்களை, பெரும்பாலும் வீரமகனாகவே மாற்றி விடுவது நம் நாட்டின் மரபு.

"என் தலைவருக்கு நியாயம் கிடைக்காவிட்டால், நான் இங்கேயே தீக்குளிப்பேன்" என்ற அரசியல் அல்லக்கைகளின் வசனத்தை பல படங்களில் நாம் கேட்டிருப்போம். இது வெறும் வசனம் மட்டுமல்ல. இது போன்ற சம்பவங்கள், பல இடங்களில் இன்றும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

இது இன்றோ, நேற்றோ ஆரம்பித்தல்ல. சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே துணிச்சல் மிக்க வீர செயல்கள் என சொல்லப்படும் தீக்குளிப்பு சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

வருடம் 1965 ஆம் ஆண்டு. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியால், சென்னை மாகாணமெங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்து, பல இடங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த சமயம்.

திருச்சி கீழப்பழுவூரை சேர்ந்த 27 வயது இளைஞர் இந்தி எதிர்ப்பு போராட்டதிற்காக தீக்குளித்து இறந்தார். இறக்கும் முன், "தமிழ் மொழியை காக்க நான் தீக்குளிக்க போகிறேன்" என கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்டிருக்கிறார். மொழிக்காக உயிரை விட்டதால், இவரை மொழி தியாகியாக்கி, அவர் மரணத்தை வீர மரணம் ஆகிவிட்டனர். நம் தமிழக வரலாற்றில் அச்சில் பதிந்த முதல் தீக்குளிப்பு (வீர) மரணம்.  அதன் பிறகு ஓரிரு ஆண்டுகளில் கோடம்பாக்கம் சிவலிங்கம் (21), விருகம்பாக்கம் அரங்கநாதன்(33), அய்யம்பாளயம் வீரப்பன் (26), சத்தியமங்கலம் முத்து (21).மாயவரம் சாரங்கப்பாணி (20),  கீரனூர் முத்து (21) என இந்தி திணிப்புக்காகவும், இந்தி எதிர்ப்புக்காகவும் பலர் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். இவர்கள் இறப்புக்கு பின் இவர்களை மொழிக்காக உயிர்விட்ட வீர மகன்களாகவும், தியாகிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர்.


தீக்குளித்து இறந்தவர்களுக்கு, இறந்த பின் வீரர் அல்லது போராளி அல்லது வீரமரணம் என போற்றப்பட்டு, அவர்களது குடும்பத்துக்கு உதவி பணமும், மற்ற சலுகைகளும் கொடுக்கபட்டது. பின்னாளில் இதுவே ஒரு ட்ரெண்டாகி போனது வருத்தத்திற்குரியது.

அதன் பின்னர் 1968 ஆம் ஆண்டில், அறிஞர் அண்ணா இறந்த போதும் பலர் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டனர். 1972-ல் எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து விலக்கிய போது இருவர் தீக்குளித்து இறந்தனர். 1981-ல் கலைஞர் கைதுக்காக 21 பேர் உயிரை மாய்த்து கொண்டனர். அதில் பெரும்பாலானோர் தீக்குளித்து இறந்து போயினர்.பின் 1987-ல் எம்.ஜி.ஆர் இறந்த செய்தி கேட்டு 31 பேர் தீக்குளித்தனர். இவர்கள் அனைவருக்கும் தீக்குளித்தற்காக / உயிரை தியாகம் செய்ததற்காக சன்மானமும், வீரர்கள் என புகழாரம் சூட்டப்பட்டு கொண்டும் இருந்தது.

அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு முத்துக்குமார் (26), இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து தீக்குளித்து இறந்தார். அது பெரும் செய்தியாகி அவர் சாவை வீர மரணமாக கருதி, இன்றும் வருடந்தோறும் நினைவேந்தல் கூட்டம் நடந்து வருகிறது. 2011-ல் செங்கோடி (20) ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நால்வருக்கும் நியாயம் கிடைக்க வேண்டி தீக்குளித்துள்ளார். 2016-ல் விக்னேஷ் (26) காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைத்திட தீக்குளித்துள்ளார். இது போல தமிழ் நாட்டில் அரசியலில் நடந்த மாற்றத்தால் ஏற்படும் மக்கள் பிரச்னைக்காக பலரும் தீக்குளித்தும், பிற வழியிலும்  உயிரை மாய்த்துள்ளனர். கடைசியாக 2016-ல் ஜெயலலிதா இறந்தபின் சிலர் தீக்குளித்துள்ளனர்.

தம் உயிரே ஆனாலும் அதை மாய்த்து கொ(ல்லு)ள்ளும்  உரிமை யாருக்கும் கிடையாது. இறந்தவர்கள் பலரும் 20 முதல் 30 வயதுடையவர்கள் தான். இந்த வீர மரணங்களுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும் ???  நொடி பொழுதில் வந்த முடிவா?  கொள்கை வெறியா? இல்லையெனில் அரசியல் பின்னணியா? என யாருக்கும் இதுவரை தெளிவாக தெரியவில்லை.

இவர்கள் அனைவரும் அவர்தம் சொந்த முடிவின் பெயரிலும், கொள்கைக்கவும், தாமாகவே முன் வந்து இருந்ததாகவே எடுத்து கொள்வோம். அது ஓர் தவறான மனநிலையை தான் குறிக்கிறது. இவர்கள் இறப்பை வீர மரணம் என்றும், இறந்த பின் அவர் குடும்பத்துக்கு பொருளும் பணம் கொடுப்பது இச்செயலை அரசியல்வாதிகளே ஊக்கப்படுத்துல் போலாகும். கிட்டத்தட்ட அவர்களின் தீக்குளிப்பை வீரச்செயல் என்றே போற்றப்பட்டு அவர்களை மாவீரர்களாக்கி வருகின்றனர். ஒருவர் தீக்குளிக்க முற்பட்டால், அவரை தடுத்து கண்டிக்க/தண்டிக்க வேண்டும். அதை விடுத்து அவரை நாயகனாக்கினால், பின்னாளில் வருவோரெல்லாம் அவரை ஒரு முன் மாதிரியாக எடுத்து கொண்டு, அதை பின்பற்றி கொண்டு ,தம்மை தாமே பற்ற வைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஹ்ம்ம்..  அதை தான் செய்கிறார்கள்.

நான் இவர்களின் மரணத்தையோ, கொள்கையையோ தவறாக விமர்சிக்கவில்லை. இளம் வயதில் இறப்புக்கு பின், இவர்கள் குடும்பத்தின் நிலை என்னவாகும்? இது போன்ற கொள்கைப்பிடிப்பும், வீர மரணமும்  ஏன் வசதியில் பின் தங்கிய மக்களுக்கே வருகிறது? இறந்தவர்களில் ஒருவர் கூட வசதி படைத்தவர்களோ/ அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் சொந்தமோ இல்லை. எதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 2000 பேர் தீக்குளித்து இறக்கின்றனர். தமிழ் நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதும், இது போல நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கையில் விரக்தி, பரிட்சையில் தோல்வி, திருமணம் வாழ்வு கசந்து போகுதல், வன்கொடுமை, அரசியல், மொழி, சாதியம் என காரணங்கள் வெவ்வேறு இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். எந்த ஒரு பிரச்சனைக்கும் உயிரை மாய்த்து கொள்வது தீர்வல்ல. அதை எப்போது அரசும், அரசியல்வாதிகளும் மற்ற மக்களும் புரிந்து கொள்வார்கள் என தெரியவில்லை.

தகவல்கள்- The Hindu, Sify News, Tamil Tribune

நன்றி !!!
-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 11 ஜூன், 2017

ஆதியோகியும், தியானலிங்கமும் !

வணக்கம்,

கடந்த வாரம் உறவினர் வீட்டு திருமணதிற்காக கோவை செல்ல வேண்டியிருந்தது. இவ்வளவு தூரம் போகிறோமே, ஈஷா தியான லிங்கத்தையும், ஆதியோகி சிலையையும் பார்க்கலாமே என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. எனக்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள தூரம், இந்தியா பர்மாவை பூமி பந்தை சுற்றி வந்து தொடும் தூரம்தான். இருப்பினும் அப்படி என்ன தான் இருக்கிறது அந்த சிலையில் என்ற ஆவலில் எனது செட்டு மக்களுடன் பயணப்பட்டேன்.

பகல் நேரத்தில் சூரியன் சுட்டெரித்தாலும், சென்னையை போல வெயில் அவ்வளவாக தெரியவில்லை. சீதோஷ்ணம் இதமாக தான் இருந்தது. இரவில் லேசாக குளிரவும் செய்தது. கிளம்பும் போது மணி 3. போகும் வழியெல்லாம் மலைகள்.கோவையை சுற்றிலும் மலைகளும் காடுகளும் தான். மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகை ரசிக்க, அழகே அழகு. மேகத்தை முட்டும் மலைகளும், மலையின் உச்சியில் சூரிய ஒளியும், வழியெல்லாம் பச்சை பசேலென மரங்களும்...அப்பப்பா... பார்க்கவே அருமையாக இருந்தது. அழகை ரசித்து கொண்டே வந்தோம்.

போகும் இடம் வழி தெரியாததால் ஓர் இடத்தில வழி கேட்டோம். அவர் சொன்ன அடையாளப்படியும், கூகுளை மேப்ஸ் படியும் நாங்கள் பேரூர் ஏரியை கடந்து செல்ல வேண்டும். அந்த இடம் வந்ததும், இங்கு ஒரு ஏரி இருக்க வேண்டுமே என யோசித்தோம்... வெறும் மண் மேடும் புதர்களும்தான் இருந்தது. ஏரிக்கான அடையாளம் ஒரு சொட்டு கூட இல்லை. போகிற வழியில் இன்னொரு ஆறு (நொய்யல் ஆறு என நினைக்கிறேன்), அங்கு 10/15 லாரிக்கார்கள் அவள் மேலாடையை அழித்து, உள்ளாடையை உருவி கதற கதற கற்பழித்து கொண்டிருந்தார்கள். 'தசாவதாரம் ' படத்தில் கமல்-அசின் மணல் மாபியாவை பார்ப்பது போல, நாங்களும் லாரிகள் மணலை அள்ளி புழுதியை கிளப்பி கொண்டு பறந்துகொண்டிருந்ததை பார்த்தோம். உச்சு கொட்டிய படியே இவற்றையெல்லாம் கடந்தோம். போகும் வழியெல்லாம் ஈஷா 11 கி.மீ., காருண்யா கல்லூரிகள் 10 கி,மீ., பூண்டி 5 கீ.மீ, வெள்ளயங்கிரி 8 கி,மீ. என அறிவிப்பு பலகைகள் இருந்தன.

ஈஷா தியான ஆசிரம வளாகத்தில்தான் ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆதியோகி சிலை இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம் (அனுமதி இலவசம் தான்). பூலுவம்பட்டி காடுகள். மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ, இயற்கை அன்னையின் மலைகளின் மடியில் அமைந்துள்ளது ஈஷா ஆசிரமம். நுழைவு வாயிலே கருங்கற்களினால் செய்யப்பட்டது போல, பார்க்க கலைநயத்தோடு இருந்தது. சில கிலோ மீட்டர் தூரம் சிமெண்ட் பிளாட்∴பாரம் போடப்பட்டிருந்தது. கார் பார்க்கிங்கில் விதம் விதமான கார்கள். குறைந்தது 200 கார்கள், வேன்களாவது இருக்கும். உள்ளே வரும் வழியிலிருந்த ஆதி யோகியை பார்க்க முடிந்தது. வெட்ட வெளியில் வெகு தூரத்தில் ஒரு கரும் சிலை. நல்ல ஒரு தலைநோக்கு தொலைநோக்கு பார்வை, இந்த இடத்தை உருவாக்கி வடிவமைத்தவருக்கு!

காரை விட்டு இறங்கி உள்ளே சென்றோம். சத்குரு பற்றியும், இந்த இடத்தை பற்றியும் தவறாக ஏதும் பேச வேண்டாம்; மீறி பேசினால் நம்மையும் Anti-Indian என முத்திரை குத்தி விடுவார்கள் என எள்ளி நகைத்தபடியே நடந்து சென்றோம். சுற்றிலும் மலைகள், கண்ணுக்கு எட்டியவரை காடுகள், ஒட்டடை குச்சி போல ஒரே உயரத்தில் வளர்ந்து நிற்கும் பாக்கு மற்றும் தென்னை மரங்கள், ஆளையே தூக்கி செல்லும் அளவுக்கு சில்லென காற்று, கல்யாண வீட்டிற்கு வந்தவர்களை ஆதி யோகியே "வாங்க! வாங்க!" என வரவேற்பதுபோல, எங்கோ மலைத்தொடரில் பெய்யும் மழை சாரல் காற்றில் பறந்து வந்து எங்கள் மேல் தெளித்தது. பார்க்கவும், உணரவும் மிகவும் ரம்மியமாக இருந்தது.

அருகில் செல்ல செல்ல ஆதி யோகியின் உயரம் தெரிய ஆரம்பித்தது. 112 அடி உயரம். அம்மாடியோவ்!!! பெரிய்ய்ய்ய சிலை தான்.  யோகாவில் சொல்லப்படும் மோட்சத்திற்கான 112 வழிகளை குறிக்கும் பொருட்டும், மனித உடலில் உள்ள 112 சக்ரங்களை குறிக்கவும் 112 அடி சிலையாம். 2 வருடங்களாக சிலையை வடிவமைத்து, எட்டு மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டதாம். சிலைக்கு கீழிருந்து பார்த்தால், லேசாக கண் திறந்திருப்பது போல இருக்கிறது. காதில் வளையம்; வெள்ளை துணி கொண்டு கட்டியிருந்தார்கள். அதுவே அந்தரத்தில், காற்றில் ஆடி கொண்டிருந்தது. கழுத்தில் பாம்பு தலையின் உருவம் மட்டும். நாங்கள் பார்க்கும் போது வெற்று கழுத்து (போட்டோவில் மாலைகளுடன் பார்த்ததாக நியாபகம்). பரந்து விரிந்த மார்பு. (56"...?!!? ஹம்ம்கூம்.... இல்லை.. அதை விட பெரிசு...) கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ள சிலை (#WorldLargestBust). உலகளவில் அதிக மார்பளவு கொண்ட சிலை என பெயர் பெற்றுள்ளது. சிலையை சுற்றி அரையடி இடைவெளியில் வளைந்து நெளிந்த சூலங்களை வேலியாக வைத்துள்ளனர். முதலில் இது கற்சிலையாக இருக்குமோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால் வேலியை தாண்டி சிலையை தட்டி பார்த்தால், இரும்பால் செய்யப்பட்டது போல "டொங்..டொங்.. " என சத்தம் கேட்கிறது. உள்ளே வெற்று இடமாக (hollow) காலியாக இருக்கிறது. இராம நாராயணன் படத்தில் வருவது போல, இரும்பில் ஒரு மெகா சைஸ் பிரம்மாண்ட செட் போட்டு வைத்துள்ளனர். மேலும் சிலையின் ஒரு பக்கத்தில் கதவு போல ஒரு வழி இருந்தது. சிலைக்கு உள்ளே போகவும், மேலே செல்லவும் படிக்கட்டுகள் இருக்கிறதா என தெரியவில்லை. மேலும் உள்ளே ..... (எல்லாமே என் யூகம் தான்!)

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

adiyogi

சிலையின் அருகே சிறு மண்டபம்.  அங்குள்ள சிறு லிங்கதை சுற்றி வந்து, கங்கை நீரை வாங்கி ஊற்றுகின்றனர். அவ்வளவு தான் ஆதியோகி !

என்னதான் நாம் உருகி உருகி ரசித்தாலும், இவ்வளவு பெரிய காட்டை அழித்து, இயற்கையை அழித்து, இந்த ஆதியோகி சிலையை நிறுவியுள்ளார்கள் என நினைக்கும் போது வயிற்றெரிச்சல் தான் வருகிறது. மேலும் இந்த இடமானது யானைகள் கடக்கும் இடம் என சொல்கின்றனர். இது கிட்டத்தட்ட மரத்தை வெட்டிவிட்டு மரச்சாமாண்கள் செய்து அழகு பார்ப்பது போல தான்.

அடுத்து ஈஷா தியான லிங்கம். ஆதியோகி சிலையிலிருந்து 10 நிமிட நடைப்பயணத்தில் இருக்கிறது ஈஷா தியான மண்டபம். தலைக்கு 10 ரூபாயில் மாட்டு வண்டி பயணமும் உண்டு. இயற்கையை ரசித்தபடி நடந்தே சென்றோம். இன்னும் முழுமையாக கமர்ஷியலுக்கு வரவில்லை ஆதியோகி. அதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதை ஆங்காங்கே போடப்பட்டுள்ள சிறு சிறு ஸ்டால்கள் சொல்கிறது.

மண்டபம் உள்ளே போகும்முன் செருப்பு, கைப்பை, கைபேசி போன்றவற்றை ஒரு இடத்தில் டோக்கன் போட்டு வைத்துவிட சொல்கின்றனர். ஈஷா மண்டபம் - ஒரு கோவில் போல பெரும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. உள்ளே சூரிய குண்டம், சந்திர குண்டம் என புனித நீராடும் இடங்கள் இருக்கிறது. சூரிய குண்டம் என்பது செயற்கை அருவி போல ஒன்றை செய்து, 30அடி ஆழத்தில் உள்ள குளத்தில் புனித நீர் விழுகிறது. குளத்தின் நடுவில் லிங்கம் இருக்கிறது. உள்ளே சென்று லிங்கத்தை தொட்டு வணங்கலாம். அதில் ஆண்கள் மட்டும் புனித நீராடலாம். சந்திர குண்டம் என்பது பெண்களுக்கானது. அதில் பெண்கள் மட்டுமே போக/நீராட முடியும். ஆங்காங்கே ஈஷா யோகா பற்றியும், தியான லிங்கம் பற்றியும் LED டி.விக்களில் ஆவணபடங்கள் ஓடுகிறது. இதை தாண்டி உள்ளே சென்றால், தியான லிங்கத்தை நோக்கி சுமார் 15 அடி உயரமுள்ள நந்தி நம்மை வரவேற்று நிற்கிறது.

தியான மண்டபதிற்கு உள்ளே செல்லும் போதே அமைதி காக்க சொல்கின்றனர். பெண்கள் காலிலுள்ள கொலுசைகூட கழட்ட சொல்கின்றனர். அதாவது அமைதியை அவர்களே உருவாக்குகின்றனர். அங்கு வேலை சேவகம் செய்பவர்கள் எல்லோருமே வெள்ளை நிற சீருடை அணிந்துள்ளனர். எல்லோருமே நுனி நாக்கு ஆங்கிலமும், இந்தியும் பேசுகின்றனர். புதிதாய் வருபவர்களை, அப்படியே கோழியை அமுக்குவது போல 'லபக்கென' அமுக்க தயாராய் இருக்கிறார்கள். நாங்கள் கொஞ்சம் உஷாராய் நகர்ந்து கொண்டோம்.
dhyanalingam entrancee


dhyanalingam

தியான மண்டபம் உள்ளே பெரும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. உள்ளே கருப்பு நிற கிரானைட் கல்லில் லிங்க பைரவி திருவுருவ சிலையும், பதாஞ்சலி சித்தர் சிலையும் இருந்தது. பதாஞ்சலி சித்தர் சிலையருகே,  ஒரு பெண் வெள்ளை சீருடையில் தலைவிரி கோலமாய் கீழே தரையில் அமர்ந்து, தலைகுனிந்து தியானத்தில் அமர்ந்திருந்தாள். அமைதியான ஒரு இடத்தில திடீரென ஒரு உருவத்தை, ஒரு பெண்ணை அங்கு பார்த்ததும் உடன் வந்திருந்தவர்கள் பயந்தே போயினர். உள்ளே சென்றோம். தூரத்தில் புகைமட்டத்தில் கருவறை போன்ற தியான மண்டபத்தில், தியான லிங்கம் தெரிந்தது. பக்கவாட்டில் உள்ள பிரகாரம் போன்று அமைக்கப்பட்டுள்ள இடத்தில், மக்கள் சிலர் உட்கார்ந்து தியானித்து கொண்டிருந்தனர். அதில் சில வெளிநாட்டு மக்களும்  இருந்தனர். எங்களையும் உட்கார சொன்னார்கள். நேரமின்மை மற்றும் சீக்கிரம் போக வேண்டும் என்கிற காரணத்தால் திரும்பி விட்டோம். தியான மண்டபத்திலுள்ளே 18 அடி உயரமுள்ள தியானலிங்கமும், அந்த இடத்தின் அமைதியும் மனதை உலுக்கி எடுக்கும் என இதற்கு முன் போனவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை... சரி லிங்கத்தை தூரத்திலிருந்து பார்த்து விட்டோம் என்ற நிறைவுடன் வீடு திருப்பினோம்.


 நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 21 டிசம்பர், 2016

இறைவி வேசியானது எப்படி?

வணக்கம்,

நம் நாட்டு கலாச்சாரத்தில் பெண்களுக்கு முக்கிய இடம் உண்டு. பெண்களை முன்னிலை படுத்திதான் பல விஷயங்கள் நடந்துள்ளது. பெண் தெய்வங்கள், நதிகளுக்கு பெண்களின் பெயர் என பெண்களுக்கு பல விதத்தில் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழக வரலாற்றில் பெண்களுக்கு மிக முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றல்ல, நேற்றல்ல, கடந்த நூற்றாண்டிலல்ல... சங்ககாலம் முதல் பெண்களுக்கு சமூகத்தில் மிகுந்த மரியாதை தரப்பட்டுள்ளது.

பெண்கள் நாடாளவும், அரசபையில் முக்கிய இடத்திலும், கல்வியிலும், வீரத்திலும், வீட்டை பேணி காப்பதிலும் முன்னிலை பெற்றுள்ளனர். இது போக, சங்ககாலம் முதல் தேவரடியாரும் தேவதாசிகளும் நம் நாட்டில் இருத்துள்ளனர். இணையத்தில் பெண்களின் சிறப்பு, சங்ககாலத்தில் பெண்கள் மற்றும் இன்னபிற நூல்களின் குறிப்பை கொண்டு இணையத்தில் தேடி படித்ததை இங்கு பகிர்கிறேன்.

devaradiyaar-temple dancers
கோப்பு படம்
திரைப்படங்களிலும், நாடகங்களிலும் கோவில்களில் நடனமாடும் பெண்களை தேவதாசி குறிப்பிடுவது வழக்கம். இப்பெண்கள் நடனமாடி (பெரும்பாலும் பரதம், குச்சிப்புடி) விபச்சாரம் செய்பவர்களாகவும், சிலர் பரம்பரை பரம்பரையாய் தேவதாசிகளாக இருப்பதையும் கேட்டிருப்போம். இக்குல பெண்கள் இழி பெண்களாகவே காட்டப்பட்டுள்ளனர்.

உண்மையில் தேவதாசி என்பது இழிகுல வம்சமோ அல்லது பாலியல் தொழில் செய்பவர்களோ அல்ல.

தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005) கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்;

கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார். இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

சங்ககால பெண்களின் நிலை:

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். விஜயநகர பேரரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள் 

சோழர்  காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்தது என்பதை சொல்லவா வேண்டும்!

ஆனால் காலப்போக்கில் நிலைமை தலைகீழ் ஆனது! பின்னர் 15-16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில், பெண்கள்களின் உரிமைகள் பறிக்கபடுகின்றன. வரதட்சணை கேட்டு வாங்கும் பழக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. தேவரடியாரான மதிப்புமிக்க பெண்கள் கோவில்களுக்குள் சென்று சேவை/ பூசை செய்ய தடை செய்யப்படுகிறது. பெண்களுக்கு இவ்வளவு அதிகாரம் ஏன் என்ற கேள்வி சில ஆதிக்க சாதி மக்களிடம் எழ, உரிமைகளும் உடமைகளும் பறிக்கப்படுகிறது. கோவில்களில் நடனமாடும் தேவரடியாரை சில சிற்றரசுகளும், செல்வந்தர்களும் அவர்களுக்காக தனியே ஆட அழைக்க, அவர்கள் ராஜதாசி ஆனார்கள். பின்னர் கோவிலில் நடனமாடும் பெண்களை எல்லோரும் தேவதாசிகளாக்கபட்டு, நாடு முழுவது மெல்ல மெல்ல தேவரடியார் இனம் தேவதாசிகளாக மா(ற்)றப்பட்டது.

devadasi-in-south-india-wiki

தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர் திராவிடரின் கூற்றுப்படி பொதுமகளிர்.

தேவதாசிகள்  கோயிலுக்கு 'நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்' ஆனார்கள். இவர்கள் கோயிலின் பேரால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். 'தாசி' எனும் சொல், 'அடிமை' என்ற பொருள் கொண்டது. 'அடியார்' என்பதோ, 'ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்' என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது. 

அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்த தேவரடியார்களை தேவதாசிகளாக மாற்றி பொருளுக்காக விபசாரம் செய்ய வைத்தனர். அதன் பின்னும் தேவரடியாரான பெண்கள் சிலர் கோவில்களில் நடனமாடி (பரதம்) பிழைத்து வந்தனர். பரதநாட்டியத்திற்கு தேவிடியா கச்சேரி என்ற பெயரும் உண்டு என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். பின்னர் ஆங்கிலேய ஆட்சிக்கால ஆரம்பத்தில் கோவில்களில் கலைகள் அவ்வளவாக வளரவில்லை; வளரவும் விடவில்லை. அதனால் தேவரடியாரை அப்போதிருந்த ஜமீன்தார்கள் மற்றும் சிற்றரசுகள் முழு நேர தேவதாசிகளாக்கினர். பெண்கள் பருவம் அடைந்ததும் பொட்டுகட்டி விட்டு, 'நித்திய சுமங்கலியாக' மாற்றி, அவர்களை தேவதாசிகளாகவே மாற்றிவிட்டனர். அதை ஒரு சடங்காகவே மாற்றி அவர்கள் பரம்பரையே வேசிகளாக மாற்றிவிட்டனர்.

இப்படி தான் தேவரடியாள் என்ற பெயர் பின்னாளில் தேவிடியாள் என்ற வசைமொழி பெயரானது போலும்! 

தமிழ் நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் தேவதாசிகள் இருந்தனர். ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா என் பல பெண்கள் இவ்வம்சத்தில் இருந்தனர்.  இவர்கள் அனைவருமே கோவிலில் பணிபுரியும் குலத்தை சேர்ந்தவர்கள்தான். நாளடைவில் இவர்களை தாசிகளாகியது நமது சமூகம். பின்னர் 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசிய பெண்கள் மேம்பாட்டு ஆணையமும், சமூக புரட்சியாளர்களான ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், தந்தை பெரியார் போன்றோர் எதிர்த்து போராடி, இந்திய அரசு தேவதாசி முறையை ஒழித்துவிட்டது. இன்று இந்தியா முழுவதும்  தேவதாசிகளே இல்லை என சொல்லப்படுகிறது,

கடந்த கால வரலாற்றில் இப்படிதான் பெண்கள் போற்றப்பட்டும், தூற்றப்பட்டும் இருக்கிறார்கள். இனியாவது பெண்மையை மதிப்போம்;
பெண்ணினத்தை காப்போம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

புதன், 9 நவம்பர், 2016

செல்லாத ரூபாய்கள்!

வணக்கம்,

நேற்று (08-11-2016) இரவு எட்டு மணி வாக்கில் பிரதமர் மோடி அவர்கள் நாட்டுக்கு மக்களுக்கு அளித்து கொண்டிருந்த உரையில், "இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது..", என்றுஅறிவித்து கொண்டிருந்தார். மேலும் 31 டிசம்பருக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்றும், கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த திடீர் அறிவிப்பு என்று கூறியுள்ளார். இன்று ஒரு நாள் வங்கிகளும், இன்றும் நாளையும் (09/11 & 10/11) ATM மெஷின்கள் இயங்காது. இதனால் பொது மக்களின் சிரமத்திற்கு வருத்தம் என்றும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகபடுத்தப்பட்டு, வங்கிகள் மூலம் புழக்கத்தில் விட போவதாகவும் கூறினார்.

ban-1000rs-500rs-currency

மத்திய அரசின் இந்த திடீர் முடிவை கண்டு அனைவரும் சற்று அதிர்ச்சிக்கு உள்ளானாலும், இது கருப்பு பணத்தை ஒழிக்கவும், நாட்டின் முன்னேற்றதிற்காக என்று வரும் போது பலரும் வரவேற்று மோடியை பாராட்டி வருகின்றனர்.

அரசின் இந்த அறிவிப்பை கேட்டவுடன் பொதுமக்கள் பலரும் தங்களிடம் உள்ள 500, 1000 நோட்டுகளை எடுத்து கொண்டு வங்கிகளில் தானியங்கி மெஷின் மூலம் டெபாசிட் செய்ய ஆரம்பித்தனர். மேலும் இரு நாட்களுக்கு ATM  மற்றும் வங்கிகள் செயல்படாததால் , எல்லோரும் பணத்தை ATM-லிருந்து 400 ரூபாய்களாக பல முறை போட்டு எடுத்தனர். எல்லா வங்கி வாசலிலும் கூட்டம்... ஒவ்வொன்றிலும் குறைந்தது 20 பேராவது நின்றனர். பல ATM-கள் செயலிழந்து போயின. மெஷினில் பணம் தீர்ந்து போனது... மக்கள் யாரை பார்த்தாலும் இதையே பேசி கொண்டிருந்தனர். ஊரே நேற்றிரவு பரபரப்புடன் காணப்பட்டது. முக்கியமாக இந்த மூன்று நாட்களில் திருமணம் அல்லது சுபகாரியம் வைத்தவர்கள், வெளியூர் சென்றவர்களின்  நிலை படு திண்டாட்டம் தான்.

இது பெரும் பணக்காரர்களையோ, அரசியல் புள்ளிகளையோ ஒன்றும் பாதிக்காது. நடுத்தர வர்க்கமும், மேல்தட்டு நடுத்தர வர்க்கமும் credit அல்லது debit கார்டு வைத்து சமாளித்து கொள்வார்கள். அன்றாட தேவைகளுக்கு கடைக்கும், கூலிக்கும் அல்லல்படுகிறவர்கள் தான் பெரிதும் கஷ்டபடுவார்கள். இன்று வேலை செய்தால்தான் காசு, சாப்பாடு என்று பிழைப்பு நடத்துவோர்க்கு, மிகவும் கஷ்டம். ஆட்டோ/டாக்சி ஓட்டுபவர், சிறு வியாபாரம் செய்யும் முதலாளி, தினசரி கூலி தொழிலாளி என பாடுபடுவது இவர்கள் தான்.

new-currency-notes-details

எல்லா டி.வி சானல்களிலும் இரவு விவாத மேடை நிகழ்ச்சிக்காக "ஹிலாரி - டிரம்ப் "-ன் தலைப்பே இருந்திருக்கும். ஆனால் பிரதமரின் இந்த உத்தரவால், எல்லோரும் போட்டி போட்டு கொண்டு இதை பற்றியே பேசி பேசி மக்களை பெரிதும் பாடுபடுத்தினர். பொது ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பலரின் கேள்வி இதுதான். இந்த திடீர் உத்தரவால் பொது மக்களின் பாதிப்பு தவிர என்னென நன்மைகள் ??? இதன் மூலம் எப்படி கருப்பு பணம் வெளியே வரும் ?, என்று கேள்வி எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.

தீவிரவாதிகளும், சில சமூக விரோதிகளும் கள்ள நோட்டுக்களை நாட்டில் அவ்வப்போது பரப்பி விடுகின்றனர். பழைய 500/1000 ரூபாய் செல்லாது என அறிவித்தால், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்கள் எல்லாம் செல்லாமல் போய்விடும். மேலும் இந்த புது நோட்டுக்கள் கள்ளதனமாக அச்சடிக்க முடியாதவாறு தயாரிக்க பட்டுள்ளதாக சொல்கின்றனர். இதன் மூலம் அடுத்த வாரம்... ஏன்?? இன்று முதலே யாரிடமும்  500/1000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருக்காது. மத்திய அரசின் நிர்வாகத்திற்கு முதல் மகுடம் இது.

சாதாரணமாக மாத சம்பளம் வாங்கும் நடுத்திர மக்கள் பலரும் வருமான வரி கட்டி விடுகின்றனர். அவரவர் அலுவலகங்களில் வருமான வரி பிடித்து செய்யபடுகிறது.  சிறு /பெரு கடை முதலாளிகள், சின்ன சின்ன தொழிலதிபர்கள், வட்டிக்குவிட்டு வாங்குபவர்கள், சினிமாகாரர்கள், அதிக லஞ்சம் வாங்கி பணம் சேர்ந்தவர்கள், ஊர் பணத்தில் காசு பார்த்தவர்கள் என கணக்கில் காட்டாமல்,  பணத்தை  மூட்டை மூட்டையாய் வைத்துள்ளவர்களுகெல்லாம் இந்த சேதி பெரிய இடியாக விழுந்து இருக்கும். இந்த பணத்தை இவர்கள் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று அரசிடம் கணக்கு காட்டி, பாதி போக மீதியை  வெள்ளையாக்கி எடுத்து செல்லலாம்; இல்லையெனில் ஒட்டு மொத்தமாக குப்பையிலோ, நெருப்பிலோ போட்டு விடலாம். இதன் மூலம் நாட்டில் கருப்பு பணத்தின் புழக்கம் கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.

பெரும் பணம் படைத்த செல்வந்தர்கள், சீமான்கள், கோடிகளில் புரள்பவர்கள் எல்லாம் தங்கள் கணக்கில் வரா பணத்தை நகை, ஆபரணம், விலை மதிப்பில்லா கற்கள், பச்சை பாண்டு பேப்பர்கள், 5 ஸ்டார் ஹோட்டல்கள், பெரிய மால்கள், பினாமி, விவசாய நிலம், ரியல் எஸ்டேட், கம்பெனி ஷேர்கள், வெளிநாட்டு பணம், வெளிநாட்டு வங்கியில் பணம், என சேர்த்து வைத்துள்ளார்கள். இவர்களை என்ன செய்ய போகிறது் என அரசும், அரசாங்கமும் தான் முடிவு செய்ய வேண்டும்.

இவர்களிடமிருந்து கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர வேறு ஏதாவது புது தடாலடி சட்டம் போடுவார்கள் என நம்புவோமாக!!!! இந்த ஒரு உத்தரவில், இந்தியாவை வல்லரசாக மாற்றிவிட முடியாது. ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு இதை முதல் அடியாக, தைரியமான முடிவாக எடுத்து கொள்ளலாம். எப்படியோ! நாடு வளமாக இருப்பின் மகிழ்ச்சி! 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது !

வணக்கம்,

தலைப்பை பார்த்தவுடன் இது எதை பற்றிய பதிவு என தெரிந்திருக்கும். ஆம்! இது ஒலிம்பிக் சீசன். அதான் இப்படி ஒரு பதிவு. 

இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றது; பளு தூக்குதலில் சதிஷ் சிவலிங்கம்; ஜிம்னாஸ்டிக்ஸில் 58 வருடங்களுக்கு பின் தேர்வான திபா கர்மாக்கர்; பாட்மிட்டனில் சாய்னா நெய்வால்; துப்பாக்கி சுடுதலில் முன்னாள் தங்கமகன் அபினவ் பிந்திரா; மொத்தத்தில் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பாக 120 வீரர்கள், 15 போட்டிகளில் விளையாட உள்ளனர் என்ற செய்தியை கேட்ட இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ந்திருப்பார்கள்.


இம்முறையாவது தங்கப் பதக்க பட்டியலில் நாம் வருவோமா? என பலரும் ஏங்கி கொண்டிருக்கின்றனர். கடந்த 2012 ஒலிம்பிக்ஸில் 6 பதக்கங்களை  
( 2 வெள்ளி, 4 வெண்கலம் ) வென்றது இந்தியா. அதையே நாம் கொண்டாடி மகிழ்ந்தோம். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை (அதிக போட்டிகளில்) கடந்த முறை தான் பெற்றிருப்போம் என நினைக்கிறேன்.

இம்முறையும் இப்படி நடக்க வாய்ப்புண்டா என பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்க, எல்லா போட்டிகளிலும் நம் வீரர்/வீராங்கனைகள் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டு கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி நம்மை அடையும் போது மனம் சற்று ஏமாற்றமடைகிறது. அவர்கள் என்னதான் பயிற்சியும், விடா முயற்சியும் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேவை ஊக்கமும் ஆதரவும் தான். அதை அரசாங்கமும், இந்திய விளையாட்டு துறையும், இந்திய ஒலிம்பிக் தேர்வு துறையும் தான் தர வேண்டும்.

இப்போதைக்கு ஆரம்பித்த பன்னிரெண்டு நாட்களில், ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்று, இந்தியாவின் பெயரை பதக்கப் பட்டியலில் சேர்த்துள்ளார். பாட்மிட்டன் போட்டியில் பி.வி.சிந்து இறுதி சுற்றுக்கு தேர்வாகி, மேலும் ஒரு பதக்கத்துக்கு (குறைந்தது வெள்ளி) அடி போட்டுள்ளார்.

டுட்டி சந்த் என்ற இந்திய தடகள வீராங்கனை, "போட்டி வீரர்களை 'எக்கனாமி கிளாசில்' பயணம் செய்யவிட்டு விட்டு, இந்திய ஒலிம்பிக் அதிகாரிகளும், பயிற்சியாளர்களும் மற்ற மேலாளர்களும் 'பிசினஸ் கிளாசில்' பயணம் செய்கிறார்கள். 36 மணி நேர பயணத்தில் ஓய்வில்லாமல், சரியான தூக்கமில்லாமல் இப்படி நடத்தினால், எப்படி வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும் ??" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  இணைப்பு - http://goo.gl/yXdqrN

இதை தவிர சில நாட்களாக கின்னஸ் சாதனை புரிந்த நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் இப்போது என்ன செய்கிறார் என்ற பதிவு சமூக தளங்களை சுற்றி வருகிறது. இணைப்பு - http://goo.gl/sdOA2Z

indian-olympics

நம் நாட்டில் நல்ல குடிமக்களை உருவாக்குகின்றனரோ இல்லையோ, எல்லா ஆசிரியரும், பெற்றோரும் தம் பிள்ளைகளை இன்ஜினீயராக்க, டாக்டராக்க தான் விரும்புகின்றனர். இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, கிராமத்துக்கு கிராமம் எவ்வளவோ விளையாட்டு வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு வீரரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் சமூகமும் அவர்களை ஊக்கப்படுத்தி ஆதரவு தர வேண்டும். இதில் அரசாங்கத்தின் பங்கு பெரியது. இட ஒதுக்கீடு, லஞ்சம், ஊழல் இருக்கும் விளையாட்டு துறையில் எப்படி தரமான வீரர்கள் இருப்பார்கள்? எப்படி பதக்கம் வெல்வார்கள்?


இந்த வீடியோவில் 01:09 - 02:10 வரை பாருங்க... சினிமா வசனமானாலும் இது தான் உண்மை.

இதையெல்லாம் பார்க்கும் போதும், இப்படியெல்லாம் நடக்கும் போதும், இந்தியாவிற்கு எப்படி பதக்கம் கிடைக்கும் என்ற எண்ணமே எல்லார் மனதிலும் தோன்றுகிறது.


இந்தியாவிற்காக விளையாடிய / விளையாட போகும் எல்லா வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் எனது கோடான கோடி நன்றிகளும், வாழ்த்துக்களும் !!! 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 16 ஏப்ரல், 2016

படித்த முட்டாள்கள்!

வணக்கம்,

சில வாரங்களுக்கு முன், நான் பார்த்த காட்சி என்னை வேதனைக்குள்ளாகி, வெறுப்படையவும் வைத்துள்ளது. அந்த கோபத்தின் அடையாளமே இந்த பதிவு.

நாம் அன்றாட (காலைக்) கடனை முடித்துவிட்டு, துடைத்து கொள்ளும் பழக்கம் இந்தியன் ஸ்டைல் கக்கூஸ் டாய்லெட்டில் இல்லை தான் என்றாலும், இப்போதைய நவீன வாழ்வில் இயல்பான ஒன்றாய் மாறி கொண்டிருக்கிறது.

மதிய வேளையில் ரெஸ்ட் ரூமில் இருந்த urinal யாவும் ரிப்பேர் / கிளீனிங்கில் இருக்கவே, உள்ளே சென்றேன். உள்ள இருந்த பேசினில் டாய்லெட் பேப்பர்கள் கசக்கி போடப்பட்டு ∴ப்ளஷ் செய்த தண்ணீர் வெளியேற முடியாமல் அந்த பேசினை அடைத்து கொண்டிருந்தன. அன்று மட்டுமல்ல. கடந்த இரு வாரங்களில் இதை  நான்காம் முறை பார்க்கிறேன். போன முறை ஹவுஸ் கீப்பிங் அலுவலர் ஒருவர் ஒரு கை கொள்ளாத அளவு டாய்லெட் பேப்பர்களை எடுத்து சென்றார். நான் அவரை பார்ப்பதை அவர் பார்த்துவிட்டு, "தினமும் இப்படி தான் சார் எடுத்து போடறேன்.." என்று வலியுடன் சொன்னார்.

கழிவறை சுத்தம் செய்வது அவர்கள் வேலை தான். ஆனால், பேசினில் கைவிட்டு நாம் துடைத்து கசக்கி எறிந்த பேப்பர்களை எடுக்க வேண்டும் என்ற தலையெழுத்தா அவர்களுக்கு? பின்னர் அதே கைகளில் தான் அவர்கள் சாப்பாடும் சாப்பிட வேண்டும்.. ச்சே... என்ன ஒரு கொடுமை..

dont garbage toilet basins

இது ஏதோ படிப்பறிவில்லாத மக்கள் 'இருக்கும்' இடம் என்றாலும் பரவாயில்லை என சொல்லி சொல்லலாம். இது மெத்த படித்த ஐ.டி பணியாளர்கள் 'இருக்கும்' கார்ப்பரேட் அலுவலகம். நீங்கள் யாராவது கழுவும் கையில் சாப்பிடுவீர்களா? யோசியுங்கள். பிறகு ஏன் சிலர் ரெஸ்ட் ரூமில் உள்ள டாய்லெட் பேசினில், துடைத்து எறிந்த பேப்பர்களை உள்ளே போடுகின்றனர் எனத் தெரியவில்லை. துடைத்து விட்டு அருகில் உள்ள குப்பை தொட்டியில் போடாமல் (அலுப்பு போல !), உட்கார்ந்திருக்கும் பேசினில் போடும் அறிவிலிகளுக்கு என்ன வார்த்தை சொல்லித் திட்ட ?

அலுவலகத்தில் சேரும் போது, நிர்வாக மேலாளர் இதை பற்றி சொன்னார். நானும், "என்னடா இது பாத்ரூம் போனா தண்ணி ஊத்துன்னு.. குப்பையில போடுன்னு .." சொல்கிறார்களே என நினைத்தேன். ஆனால் இந்த கொடுமையெல்லாம் பார்க்கும் போது தான் அவர்கள் சொல்வது சரிதான் என தோன்றுகிறது.

இது கார்ப்பரேட் கம்பெனிகளில் மட்டுமல்ல. சினிமா தியேட்டர்கள், மால்கள், பெரிய ஓட்டல்கள் என பல பொது இடங்களில் இது போன்ற கேவலங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

உச்சா இருந்துட்டு தண்ணி ஊத்து.. கழுவிட்டு பேப்பரை குப்பை தொட்டியில் போடு என சின்ன பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கலாம்... இந்த படித்த முட்டாள்களுக்கு !?!?!!?


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 1 அக்டோபர், 2015

கல்லூரி கட்ட பஞ்சாயத்துக்கள் - திணறும் மாணவ / மாணவிகள் !

வணக்கம்,

பள்ளி படிப்பு முடித்து கல்லூரியில் சேரும் போது, பசங்க எல்லோரும் மனதில் பல கனவுகளோடு, ஆசைகளோடு வருவார்கள். காலேஜுல நிறைய நண்பர்கள், நண்பிகள்  கிடைப்பார்கள், ஜாலியா சுதந்திரமா இருக்கலாம், நண்பர்களோட பேசலாம்ன்னு பல கனவுகளோட வருவாங்க. ஆனால் அவுங்க கனவையெல்லாம் தவிடு பொடியாக்குகிறது சில பொறியியல் கல்லூரிகள்.

ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி - நான் இந்த காலேஜுல தான் படிச்சேன். நாம படிச்ச கல்லூரியை எவனாவது தப்பா சொல்லிடான்னா பொதுவா எல்லோரும் சண்டைக்கு வருவாங்க. ஆனா, இங்க நிலைமையே வேற. காலேஜ பத்தி ஒரு தப்பான மெசேஜ் வந்ததும் 'என்ன ஒரு ஆனந்தம்' நம்ம மக்களுக்கு (Aluminis). கடந்த இரு வாரங்களாகவே சமூக வலைதளங்களில் பெரிதும் அடிப்படும் பெயராகவே இருக்கிறது எங்கள் கல்லூரி. கல்லூரியில் மாணவிகள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் என ஒரு பக்க நீள ரூல்ஸ் சர்குலரை சமூக தளங்களில் வெளியிட்டதே காரணம். அதை அங்கு படித்த மாணவர்கள் தான் கல்லூரியின் மீதுள்ள வெறுப்பு காரணமாக வெளியிட்டுனர் என்றாலும், அதிலுள்ள விதிகள் பெரும்பாலும் உண்மையாகவே அமலில் இருப்பது கசக்கும் உண்மை.


அதாகப்பட்டது, இவை தான் அந்த சட்டங்கள். காலேஜ பத்தி தெரியாதவங்க படிங்க..

1.) சாய்ராம் கல்லூரியில் படிக்கும் பெண்கள் லெகின்ஸ், ஜெகின்ஸ் போன்ற வகை பேண்ட்டெல்லாம் போட கூடாது.

2.) பாட்டியாலா, ஜன்னல், கண்ணாடி  வைத்த டாப்ஸ், ஷார்ட் குர்தி போன்றவைகளுக்கும் தடை.

3.) பெரிய சைஸ் காது வளையம், ஜிமிக்கி வகையறாக்கள், ஃபான்சி மோதிரங்கள், ஹை-ஹீல்ஸ் செருப்புகள் , சிகை மற்றும் முக அலங்காரங்கள் போன்றவைக்கும் தடா தான்.

4.) துப்பட்டா கண்டிப்பாக மறைக்க வேண்டியதை மறைக்க வேண்டும். ( நானே லிஸ்டில் சேர்த்து கொண்டது. )

5.) கல்லூரியில் பிறந்த நாள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் கூடாது. சாக்லேட், கேக், ஸ்நாக்ஸ் போன்ற ஐட்டங்கள் எல்லோருக்கும் பரிமாறிக் கொள்ள கூடாது.

6.) அனாவசியமாக காரிடாரில் நடக்க கூடாது. பக்கத்துக்கு கிளாசுக்கு சென்று லேப் கோட், நோட் புக்ஸ், கால்சி  போன்றவை வாங்க கூடாது.

7.) செல்போன், சிம் கார்ட், பெண் டிரைவ் போன்றவைகளை உள்ளே கொண்டு வர கூடாது.

8.) கல்லூரி பேருந்தில் தான் பணம் கட்டி வர வேண்டும் (எவ்வளவு கிட்ட இருந்தாலும்). டூ-வீலர், ஃபோர் வீலர்கள் கொண்டு வர கூடாது.

9.) பெண்களும், ஆண்களும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட படிக்கட்டில் தான் ஏற/இறங்க வேண்டும்.

10.) மிக முக்கியமானது. இரு பாலரும் எதிர் பாலினத்தோடு எக்காரணத்துக் கொண்டும் பேச கூடாது.

11.) நான்-வேஜ் அயிட்டங்களை கல்லூரிக்குள் கொண்டு வர கூடாது.

12.) ஹாஸ்டல் பசங்க நினைத்த நேரத்தில் வீட்டுக்கு போக முடியாது. கேட்-பாஸ் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது.

இந்த ஏட்டில்லா  விதிகளை பார்த்தாலே எவனுக்கும் படிக்கிற ஆசையே இருக்காது. என்ன தலை சுத்துதா???இது சும்மா டிரைலர் தான்மா. மெயின் பிச்சர் இனிமே தான்...

செமஸ்டரில் பெயிலானால், இரு அரியர்களுக்கு மேல் வைத்தால், பெற்றோரை அழைத்து வர வேண்டும். பையன் பெயிலானால் அம்மாவோ, அப்பாவோ தான் திட்டு வாங்க வேண்டும். "புள்ளைய காலேஜுல சேர்த்துவிட்டுட்டு, அப்படியே தண்ணி தெளிச்சி விட்டுவிடுவியா??" என ஒருமையில் அவர்களை திட்டுவார்கள். பலரை பலவந்தமாக நான்காம் அல்லது ஐந்தாம் செமஸ்டரில் கல்லூரியை விட்டு (டி .சி கொடுத்து ) அனுப்பியிருகிறார்கள். 

மேலும் ஃப்ளோர் சூப்பர்வைசர்கள் (FS) என்ற பெயரில் சில வெட்டி ஆபிசர்களை  கல்லூரியில் நியமித்து கொண்டு, மாணவர்களை கண்காணிப்பார்கள். அவர்கள் முக்கிய பணியே பிள்ளை பிடிப்பதும், ஐ.டி கார்டு புடுங்குவதும் தான். அதாவது மேற்கண்ட தப்புகளை பண்ணும் மாணவ/மாணவியரை கையும் களவுமாக, ஆளும் ஐ.டியுமாக பிடித்து மேனேஜ்மென்ட்டில் கொடுப்பது  தான். 

இன்னும் இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல, பசங்க பொண்ணுங்க கூடவும், பொண்ணுங்க பசங்க கூடவும் பேசவே கூடாது. அது மகா மகா தெய்வ குத்தம். மீறினால் ஐ.டி கார்டு அவுட். தர்ம அடிதான். லன்ச்சில் மற்றவரிடம் சாப்பாடு வாங்கி சாப்பிட்டாலோ,  சத்தமாக பேசி சிரித்து கொண்டிருந்தாலோ  ஐ.டி கார்டு பறிக்கப்படும். அவ்வபோது வகுப்புகளில் ரைட் (RAID ) நடக்கும். பேக்குகளை சோதனை செய்வார்கள். அதில் ஏதாவது (செல்போன், சி.டி.. ) சிக்கினால் ஐ.டி கார்டு பிடுங்கப்பட்டு ஆயிரக்கணக்கில் அபராதம். 

பஸ்ஸில் ஆண்களும், பெண்களும் தனித்தனியே தான் அமர வேண்டும். அங்கேயும் FS-க்கள் இருப்பார்கள். கான்டீனிலும் அதே கதை தான். கல்லூரியில் மதிய சாப்பாடு ரொம்ப சுமாராக தான் இருக்கும். அதைதான் முதலாம் ஆண்டு மாணவ மணிகள் பணம் கட்டி சாப்பிட்டு தொலைக்க வேண்டும். ஹாஸ்டல் பசங்க தான் ரொம்ப பாவம். நாலு வருடமும் அங்கே தான் சாப்பாடு.  சில வேளைகளில் கரப்பான் பூச்சிகள், பல்லி விழுந்ததையும் போட்டிருக்கிறார்கள். "இவ்வளவு பெரிய அண்டாவுல நாலு இன்ச் பல்லி விழுந்தா யாரும் செத்துட மாட்டங்க.." அந்நியன் பட வசனம் இது.  படம் வருவதற்கு முன்பே எங்க காலேஜுல இதை பாலு சொல்லிடாரு...

ஆங்!!! பாலு யாருன்னு உங்களுக்கு சொல்லவே இல்லைல.. அவரு தாங்க எங்க காலேஜ் ஆல் இன் ஆல். இவரை பார்க்க கிட்டத்தட்ட 'நான் கடவுள்' ராஜேந்திரன் போல இருப்பார். கருத்த கட்டுடல், நெற்றியில் லேசான செந்தூரம், மொட்டை தலையில் தொப்பி, கொஞ்சம் மிடுக்கான ஆள்தான். பிரின்சிபாலை கண்டு கூட பலர் பயபடமாட்டங்க. ஆனா இவர் பேர சொன்னா, ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடன்ட் முதல்  ஃபைனல் இயர் ஸ்டுடன்ட் வரை எல்லோருக்கும் சிம்ம சொப்பனம். எல்லா FSக்கும், எல்லா டிபார்ட்மெண்ட் HOD க்கும் இவர் தான் DON. காலேஜ்/ மேனேஜ்மென்ட் /ஹாஸ்டல் அட்மின். சுருக்கமாக மேனேஜ்மென்ட்டின் அடியாள்.


ஐ.டி கார்டு பறிகொடுப்பவர்கள் எல்லாருமே இவரிடம் தான் விசாரணைக்கு வருவார்கள். முடி கொஞ்சம் அதிகமாக வளர்த்திருந்தால், தலை மயிரை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டி நாளை முடி வெட்டவில்லை என்றால், நானே கன்னா பின்னான்னு வெட்டி விடுவேன் என்று எச்சரிக்கை செய்வார். பல ஆபாச வார்த்தைகளை மாணவரிடம் உபயோகபடுத்துவார். பலருக்கு ஆபிஸ் ரூம் ட்ரீட்மென்ட்களும் நடந்தள்ளது.

இவ்வளவு கட்டுப்பாடு இருந்த போதும், சில காதல் புறாக்களும், சில பல டேட்டிங் சமாச்சாரங்களும் கல்லூரிக்குள் இருக்கத்தான் செய்தன. சட்டங்கள் ஒரு புறம் இருந்தாலும், அவ்வப்போது வெளியே தெரியாமல் இருபாலரும் பேசி கொண்டு தான் இருகிறார்கள்.  கண்ணால் பேசிக்கொண்டும், வகுப்பில் பிட்டு பேப்பரில் தகவல் பரிமாறிகொண்டும் இருந்தனர்; இருகின்றார்கள். மாட்டிகிட்டா மவனே(ளே) காலி தான்.. இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு வேண்டிகிடக்கு! 

இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல.. தமிழ்நாட்டில் இந்த ஒரு கல்லூரி மட்டுமல்ல. இன்னும் பல கல்லூரிகள் (பத்தில் ஐந்து) இப்படி தான் சத்தமில்லாமல் இயங்கி கொண்டு இருக்கிறது. எல்லா கல்லூரிகளிலும் இது போன்ற பட்டாசு பாலுக்களும், செயின் ஜெயபால்களும், பிச்சுவா பீட்டரும் இருக்க தான் செய்கின்றனர். 

இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள்? என்று யோசித்து பார்த்தால், நமக்கு இவர்கள் செய்வது சரி என்று ஒரு விதத்தில் படும். (சேம் சைடு கோல் அல்ல..முழுசா படிங்க..) ஏன்னா நம்ம பசங்கள கொஞ்சம் ஃபிரியா விட்டா, அப்புறம் கையில பிடிக்க முடியாது. அதான் இந்த கெடுபிடி. இப்படி காலம்காலமாக ஆண்-பெண் பேசாமை என சட்டம் போட்டு அடிமை படுத்துகிறார்களே, ஏன் எந்த பெற்றோரும் கேள்வி கேட்பதில்லை என யோசித்தால் புரியும். காரணம் என்ன.? கல்லூரிகளில் இத்தகைய 'பலத்த சட்டங்கள் ' மூலம் பெற்றோர்கள் புன்முறுவல் பூக்கின்றனர் என்பதாலும், அவர்தம் பிள்ளைகள் தவறான வழிக்கு போகமாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும், இந்த விதிகள் யாவும் இன்னும் நடைமுறையிலேயே இருக்கிறது. 

இவையாவும் மாணவ சமுதாயத்தின் உரிமை பறிக்கும் செயல் மட்டுமல்ல. அவர்களின்  சமூக திறன்களை குறைத்து கொண்டு வருகின்றது என்பதே உண்மை. இன்றைய கார்ப்பரேட் உலகத்தில், அலுவலகங்களில் உடன் வேலை செய்யும் எதிர் பாலினத்தவரோடு பேசி, பழகி வேலை செய்யும் நிலையில் தானுள்ளது. இதில் சில ஆண்கள் / பெண்கள்  எதிர் பாலினத்தவரோடு சகஜமாக பேச முடிவதில்லை. இந்த பிரச்சனை எல்லாருக்கும் ஏற்படுவது இல்லை. ஆனால் பலர், கல்லூரிகளில் போடப்பட்டுள்ள இத்தகைய விதியினால் அலுவலகங்களில் பாதிக்கபடுகின்றனர். உளவியலாளர்கள் இது தொழில்முறை மற்றும் சமூக திறன்ககளை பாதிக்கிறது என கூறுகின்றனர். மனிதவள மேலாளர்களும், பொறியியல் கல்லூரியில் நன்றாக படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து, அலுவலகங்களில் சேரும் போது, மற்றவரிடம் பேச/பழக கூச்சபடுகின்றனர். இதனால் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கை பெரிதும் பாதிக்கபடுகிறது. இதை பற்றி ஏற்கனவே என் பதிவில்  எழுதியிருக்கிறேன்.

கல்லூரியில் ஒழுக்கத்தையும் நல்ல பழக்க வழக்கங்களையும் கற்று கொள்ள வேண்டியது தான். கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டியதுதான். ஆனால் இத்தகைய சர்வாதிகார கண்டிப்புக்கள், அராஜகங்கள் தேவையில்லாதது. இது போன்ற கட்டாய சட்டத்தினால் ஒழுக்கத்தை கொண்டு வர முடியாது. வெறுப்பை தான் சம்பாதிக்க முடியும். இதை எப்போது எல்லா கல்லூரிகளும், பெற்றோர்களும் புரிந்து கொள்ள போகிறார்களோ தெரியவில்லை. அதுவரை லட்சம் பேர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலும், எத்தனை முறை ஸ்ட்ரைக் பண்ணாலும் ஒன்றுமே நடக்காது, எதுவும் மாறாது.

இதை பதிவு செய்வதன் மூலம் எங்கள் கல்லூரிக்கு வந்து உங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம் என்றோ, இது ஒரு மட்டமான கல்லூரி என்றோ சொல்லவில்லை. நல்ல கல்லூரி தான். நன்றாக படித்தால் நல்ல படிப்பும் வேலையும் கிடைக்கும் தான்.  நாங்க படிச்ச காலேஜ எங்களுக்கு பிடிக்கலன்னு சொல்லல. ரொம்ப பிடிக்கும், ஆனா உங்க காலேஜ் ருல்லஸ் தான் பிடிக்கல. நாங்கள் பட்ட சில பல கஷ்டங்களை  உங்கள் பிள்ளைகளோ, இனி வரும் மாணாக்கரோ பட கூடாது என்பது தான் எங்களது (Aluminis) நோக்கம். யாரவது ஒருவர் இந்த சட்டங்களை தகர்க்க வழி செய்வார் என நம்புகிறோம். வளரும் இளைய சமுதாயத்தை சுதந்திரமாக வாழ விடுங்கள்!

நன்றி !!!

-பி .விமல் ராஜ்