சனி, 12 அக்டோபர், 2024

வேட்டையன் - விமர்சனம்

வணக்கம்,

போன வருடம் ஜெயிலரில் மெகா ஹிட் வெற்றி கொடுத்த சூப்பர் ஸ்டார், இந்த வருடம் வேட்டையன் படத்துக்காக களம் இறங்கியுள்ளார். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, துஷாரா, மஞ்சு வாரியர் என பெரிய லிஸ்ட் இருக்கிறது.  பான் இந்தியா படமாக்க முயற்சி செய்து, எல்லா மொழி நடிகர்களையும் நடிக்க வைத்துள்ளனர். ஆனால் கதைக்கு  அவ்வளவு அவசியமா? என்பது தான் பெரும் கேள்வி.

ஃபர்ஸ்ட் சிங்கிள் "மனசிலாயோ" பாடலை நம்மால் மனப்பாடம் செய்து பாட முடியவில்லையே தவிர செம்ம vibe.. செம்ம ஹிட்.. சமூக வலைதளங்களில் இன்றும் அந்த இசையும், ஸ்டெப்பும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ட்ரைலர் சுமாராக இருப்பது போல தான் எனக்கு தெரிந்தது. சூப்பர் போலீஸ் - என்கவுன்டர் - ஆக்சன் - பழிவாங்கல் என்பது போல தான் காட்டியிருந்தர்கள்.

Vettaiyan review

எது எப்படி இருந்தாலும் இயக்குநர் TJ ஞானவேல் படத்தில் ஏதாவது surprise element ஒளித்து வைத்திருப்பார் என நம்பி கொண்டு படம் செல்ல தயாரானேன். படம் பார்ப்பதற்குள் எந்த ஒரு விமர்சனமோ, முதல் பாதி விறுவிறு, இரண்டாம் பாதி சறுக்கல், படத்தின் முக்கிய சீன் ஸ்கிரீன் ஷாட் போன்ற எவ்வித spoiler கர்மதையும் பார்த்து தொலைக்க கூடாது என்று கவனமாய் scroll செய்து தள்ளி கொண்டிருந்தேன்.

கதை இது தான். கன்னியாகுமரியில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான அதியன் ரவுடிகளை விரட்டி வேட்டையாடுகிறார். சென்னையில் உள்ள பள்ளிகூட ஆசிரியை துஷாரா ஒரு பெரிய ஆன்லைன் கல்வி நிறுவனம் செய்த ஊழல்களை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வர முயல்கிறார்; அதனால் கொலையும் செய்யப்படுகிறார். போலீஸ் கொலையாளி (அசல் கோலார்) என ஒருவரை உருவகப்படுத்தி என்கவுன்டர் செய்ய முயல, அவர் தப்பிகிறார். அதை கண்டுபிடிக்க சூப்பர் ஸ்டார் வந்து, 48 மணி நேரத்தில்  சோலியை முடிக்கிறார். பின்னர் தான் அது தப்பான என்கவுன்டர் என்று தெரிகிறது. மனம் வருந்தி மீண்டும் சரியான  வில்லனை கண்டுபிடித்து, போலீசில் சிக்க வைத்து நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி தருகிறார்.

கடந்த சில படங்களாக மாஸ் கமர்சியல் மசாலாவாக மட்டுமே இருந்த ரஜினி படம், இம்முறை விறுவிறுப்பான ஆக்சனுடன் கல்வி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுவது, போலி என்கவுண்டர், எல்லோருக்கும் சமனான சட்டம், மனித உரிமை மீறல், சில பல சமூக கருத்துகளை கொண்ட படமாகவும் வந்துள்ளது. 

சூப்பர் ஸ்டார் எப்பவுமே மாஸ் தான். ஸ்கிரீன் பிரசென்ஸ், ஸ்டைல் லுக், clipon கூலிங் கிளாஸ், அந்த சிரிப்பு என எல்லாமே அட்டகாசம் தான். 😎 ஆனால் தலைவர் கெட்டப் தான் லேசாக ஜெயிலர் படத்தில் இருப்பது போலவே தெரிவது எனக்கு மட்டும் தானா என புரியவில்லை..🧐

சூப்பர் ஸ்டோர் கூடவே வரும் போலீஸ் கேரக்டர்களாக கிஷோர், ரித்திகா சிங் வந்து சிறப்பாக நடித்துள்ளனர். துஷாரா கொஞ்சமாகவே வந்தாலும் படம் முழுக்க பேசப்படுகிறார். 

அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதலில் வேட்டையனுக்கு எதிராய் பேசி, பின்பாதியில் நண்பனாக மாறுகிறார். 

பாகத் பாசில் சூப்பர் ஸ்டார் கூடவே வந்து அங்கங்கே காமெடிகள், சின்ன சின்ன முகபவனைகள் காட்டி கவர்கிறார். அவர் சுடப்பட்டு இறக்கும் போது, 'அடடா ' என நம்மை தவிப்புக்குள்ளக்கிறார்.

அதியன் மனைவியாக மஞ்சு வாரியர் 
வருகிறார். அவ்வளவுதான்! மாஸா சீன் வைக்கணுமென்னு அவருக்கென ஒரு சீன் வைத்துள்ளார். மற்றபடி அவருக்கு பெருசாய் நடிக்க வாய்ப்பில்லை. 

விஜய் டிவி ரக்ஷனும், அபிராமியும் இந்த படத்தில் எதற்கென தெரியவில்லை.

மெயின் வில்லனாக ராணா. வாட்டசாட்டமான பணக்கார கல்வி வியாபாரியாக, கோபத்துடன் மிரட்டி செல்கிறார். 

அனிருத் இசை இம்முறை ரொம்ப இரைச்சலாக இல்லை.. ஆனால் ஏதோ ஒண்ணு குறைச்சல் தான். 'மனசிலயோ' பாட்டை தவிர வேறு எதுவும் மனசில் ஒட்டவே வில்லை. வழக்கம் போல சூப்பர் ஸ்டார் பில்டப் பாட்டு ஒன்று ராப்-பில் பாடி கோரசில் கோவிந்தா போட்டுள்ளனர். "அடேய்..போதும் டா.. நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர் எப்பவுமே சூப்பர் ஸ்டார் தான்; எல்லா படத்திலேயும் சொல்லிட்டே இருக்க வேணாம்ன்னு" தான் சொல்ல தோன்றுகிறது. அடுத்த படத்திலும் இப்படி ஒரு பாட்டு கண்டிப்பா வச்சு தொலைப்பங்க.. ஹம்ம்..🤦

போன இரண்டு மூன்று படத்தில் கதையென பெரிதாய் என்னை ஏதும் கவர வில்லை. ஜெயிலர் கூட ஓகே ரகம் தான் என புலம்பி இருந்தேன். ஆனால் வேட்டையன் நன்றாக இருந்தது,  பிடித்திருந்தது என்பதை விட போரடிக்காமல் திருப்தியாகவே இருந்தது.

இம்முறை வச்ச குறி தப்பவில்லை!🦅


நன்றி!!!
பி. விமல் ராஜ்

புதன், 5 ஜூன், 2024

மீண்டும் மோடி !

வணக்கம்,

தேர்தல் திருவிழா முடிந்து, முடிவுகளும் வந்தாகிவிட்டது. பெரும்பாலானோர் வீட்டில் நேற்று காலை 8 மணிமுதல் பல்வேறு சேனல்களிலும், இணையதளம் வாயிலாகவும் ரிசல்ட்டை பார்த்துக்கொண்டே இருந்திருப்பார்கள். முடிவு என்னவோ தேர்தலுக்கு முன்னமே தெரிந்து விட்ட போதிலும், ஏதாவது மாற்றம், ஏற்ற/இறக்கம் வருமா என பலரும் ஓட்டு எண்ணிக்கையை பார்த்துக்கொண்டே இருந்தனர். டி.வி சேனல்களும் அவரர் கட்சி விருப்பு, வெறுப்புக்கு ஏற்றது போல இஷ்டத்துக்கு ஒரு நம்பரை காட்டி முன்னிலை என சொல்லி கொண்டிருந்தனர். ஒரு சேனலில் NDA 220+ ; INDIA- 250+ என்றும் மற்றொரு சேனலில் NDA 275+ ; INDIA- 180+ என்றும் வாதிட்டு கொண்டிருந்தனர். இவர்கள் சொல்வதையெல்லாம் பார்ப்பவன் தான் மடையன் !

இம்முறையும் பா.ஜ.க.வே வென்று, மீண்டும் மோடியே பிரதமராக போகிறார். இவர்களது பா.ஜ.க கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வென்றுள்ளது. இம்முறை எப்படியாவது தமிழ் நாட்டில் 10 இடமாவது வென்று விட வேண்டும் என்பதில் குறியாக இருந்த பா.ஜ.க, பல ராஜதந்திரங்கள் பயன்படுத்தியும், தமிழக சுற்று பயணம் வந்தும், ஸ்டார் வேட்பாளர்கள் நிறுத்தியும், திராவிட எதிர்ப்பு பிரச்சாரம் செய்தும் பார்த்துவிட்டது; குட்டி கரணம் அடிக்காத குறை ஒன்று தான். ஆனால் என்னதான் முட்டி மோதி(டி) யும் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாமல் போனதுதான் அந்தோ பரிதாபம்!


ஏன் பா.ஜ.கவால், மோடியால் தமிழ் நாட்டில் ஜெயிக்க முடியவில்லை.? ஏன் ஆர்.எஸ்.எஸ் / ஹிந்துத்வா தத்துவம் இங்கு எடுபடவில்லை.? என்ற கேள்விகளுக்கு இன்னும் புரியாமல் வடக்கில் பலர் சுற்றி கொண்டிருக்கின்றனர். 2019 தேர்தல் முடிவின் போதும் இதே போல ஒரு பதிவை பழைய பேப்பரில் எழுதி இருந்தேன். கிட்டத்தட்ட இதே content தான். 

தாமரை இங்கு மலராமல் போனதற்கு காரணம், தமிழ்நாட்டில் நாங்கள் ரொம்ப அறிவாளிகள், மெத்த படித்தவர்கள், இது பெரியார் மண் என்பதெல்லாம் இல்லை. அதற்கு காரணம் பா.ஜ.க. வே தான்!  

*) போன வாரம் வரையிலும் அவர்களின் பிரசாரத்தில் மத வெறுப்புணர்வு மட்டுமே மேலோங்கி இருந்தது. இந்துக்களின் நகைகளை பிடுங்கி இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார்கள்; நம் பணத்தை/உடைமைகளை எடுத்து அதிகம் பிள்ளைகளை பெறும் சமூகத்துக்கு (முஸ்லீம்) கொடுத்து விடுவார்கள். கோவில்களை பராமரிக்காமல் விட்டு, மசூதிகளை கட்டுவார்கள் என நீட்டி கொண்டே போகிறார்கள். 

*) பத்து ஆண்டு கால சாதனையாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதையே பெரிதாய் நினைக்கின்றனர். ஏதோ 30 வருடம் முன் இடித்து விட்டார்கள்; அசம்பாவிதம் நடந்து விட்டது; கலவரமும் நடந்து பலகாலம் ஆகி, வழக்கும் முடிந்துவிட்டது. ராமர் கோவில் கட்டி திறக்கும் முன், அங்கு நீதிமன்றம் குறிப்பிட்ட இடத்தில் ஒரு மசூதியும் கட்டி திறந்திருந்தால், கொஞ்சம் நல்ல பெயர் கிடைத்திருக்கும். ஆனால் அதை தான் இவர்கள் செய்யவில்லையே! ராமர் கோவில் திறப்பதையே பெரிய வைபவம் போல நாடெங்கும் விமர்சையாக கொண்டாடி மற்றவர்களை கடுப்பேற்றினார்கள்.  

*) வாரணாசியில் ஞானவாபியில் உள்ள மசூதியில் சிவலிங்கம் இருக்கிறது என பிரச்சனை கிளப்பி, இப்போது அங்கு மசூதி சுவற்றில் உள்ள இந்து சிலைகளுக்கு பூஜை செய்யலாம் என்று நீதிமன்றமும் சொல்லிவிட்டது. அடுத்து அவர்கள் கையில் எடுக்க போவது மதுரா ஷாஹி இடிகாஹ மசூதி (Shahi Idigah Masjid) என்று நினைக்கிறேன். போன மாதம் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மோடி 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்வதற்க்கு பதிலாய் 'ஜெய் ராதே கிருஷ்ணா' என்று மேடையில் முழங்கியுள்ளார். அது எங்கே போய் முடியுமோ என தெரியவில்லை. 

*) குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியரின் வெறுப்பை மேலும் சம்பாதித்து கொண்டது பா.ஜ.க. இதனால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்ற போதிலும், அண்டை நாட்டிலிருந்து வரும் எந்த ஒரு இஸ்லாமியருக்கும் அனுமதி கிடையாது என்ற மனமே வெறுப்பின் அடையாளம் தான்.   

*) அங்கங்கே ஒன்றிரெண்டு நல்ல திட்டங்களும் செயல்படுத்தபட்டுள்ளது என்பதையும் சொல்லியாக வேண்டும். 

*) வீடு கட்டி தரும் அல்லது வீடு கட்ட மானியம் தரும் திட்டமும் பலருக்கு உதவியுள்ளது. அந்த வங்கி மூலம் வழங்கபடுவதால் சரியான ஆவணங்கள் வைத்திருப்போருக்கு உதவி கிடைப்பதாக சொல்லப்படுகிறது. 

*) வட மாநிலங்களில் நகரங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் ஹைவே பல இடங்களில் அருமையாக போடப்பட்டுள்ளது. அது பெரிதாய் சொல்ல வேண்டிய விஷயம் தான். சில நகரங்களில் மேம்பாலங்கள், உட்கட்டமைப்பு போன்ற விஷயங்கள் செய்து கொடுத்துள்ளது.   

*) வடக்கில் இன்றும் சமையலுக்கு விறகு வெட்டி பயன்படுத்தும் மக்கள் பலர் இருக்கையில், இலவச கேஸ் சிலிண்டர் கொடுத்தது பல ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்துள்ளது. ஆனால் கேஸ் விலை தான் ஏகிறிவிட்டது. மானியமாக 200/300 ரூபாய் பணம் வங்கி கணக்கில் வரும் என சொல்லி, இப்போது 25 ரூபாய் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது (எனக்கு!); மற்றவர்களுக்கு எப்படி என தெரியவில்லை. 

*) விலைவாசி விண்ணுலகை விர்ரென எட்டி, சாதாரண மக்களுக்கு பெரும் சுமையாய் இருப்பது கொஞ்சம் கஷ்டமான ஒன்றுதான்.  

*) நாடு முழுவதும் வந்தே பாரத், புல்லட் ரயில் என அமல்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இத்திட்டம் காசு இருப்பவனுக்கு மகிழ்ச்சி ; நல்ல திட்டம்... மற்றவருக்கு?  

*) கருப்பு பணத்தை ஒழிக்க அமல் படுத்தப்பட்ட Demonetization-னால் பல நடுத்தர குடும்பங்கள்/மக்கள் ஓரிரு மாதங்கள் சில்லறைக்காக பெரிதும் கஷ்டப்பட்டனர். ஆனால் எந்த ஒரு பெரிய முதலைகளிடமும் கருப்பு பண புழுக்கம் ஒழிந்தது போல தெரியவில்லை. 

*) டிஜிட்டல் இந்தியாவால் பண வர்த்தகமெல்லாம் டிஜிட்டல் மயமாகி போனதால், எல்லாமே UPI transaction னாக மாறியுள்ளது. இஃது மற்ற நாடுகளில் இல்லாத நல்ல திட்டம் என்றே நினைத்து வந்த போதிலும், சில்லறை தட்டுப்பாடு யாருக்கும் தெரியாமல் நாடு முழுக்க பரவியிருப்பது மறுக்க முடியாத உண்மை. UPI transactionனால் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதே பலருக்கு தெரிவதில்லை. இதன் மூலம் வங்கிகள் பெருமளவு சம்பாதிப்பது தான் பெரும் உண்மை.    

*) கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஹிந்தி/சமஸ்கிருதத்தை நுழைக்க முயற்சி செய்து செய்து.. செய்து கொண்டே இருக்கிறார்கள். 

*) NEET ரத்து பற்றி தமிழ் நாட்டில் மட்டுமே பேசி கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்களில் பெரிதாய் எதிர்ப்பு கொடி காட்டியது போல தெரியவில்லை.

*) GST யால் பல சிறு வியாபாரிகள், வருடத்தில் சில லட்சங்கள் பணம் பண்ணும் வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் பல பெரு நிறுவனங்கள், பெரு வணிகர்கள் பெரிதாய் நட்டம் அடைவது போல தெரியவில்லை. Lower /middle class வியாபாரிகள் கறுப்புப்பணம் வைக்காமல்/சேர்க்காமல் இருக்கவே இந்த வரி. மற்றபடி பெரும் முதலாளிகள் சகஜமாய் ஏப்பம் விட்டு கொண்டு போகின்றனர். மேலும் நாம் கொடுக்கும் வரிக்கு ஏற்ற அளவு நற்திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என சொல்கிறார்கள்; அது எந்த அளவு உண்மை என எனக்கு தெரியவில்லை.

இவர்கள் செய்யும் அக்கப்போரால் நம்மை போன்ற சாதாரண மக்களின் மனம் பெரிதும் மாசுபடுகிறது. டீ.வியிலோ/நேரிலோ யாரவது ஒருவரை காவி வேஷ்டி, சட்டை, பட்டை, ருத்திராட்ச கொட்டை என பார்த்தாலே, இவர் ஆர்.எஸ்.எஸ். ஆளாக இருப்பாரோ என்ற சந்தேகத்தை நமக்குள் வர வைக்கிறது. அதே போல ஏதாவது ஒரு ஐயர்/ஐயங்காரை பார்த்தால் கண்டிப்பாக பா.ஜ.க காரராக, ஆதரவாளராக தான் இருப்பார் என்ற judgemental thinking நம்மிடையே உருவாகிறது. உண்மையிலேயே அவர் பகுத்தறிவாளராக, நல்ல மனிதர்களாகவே இருந்தாலும், சமூக நீதிக்கு எதிராக இருப்பார், மற்றவர்களை மட்டம் தட்டிதான் பேசுவார் என்ற எண்ணமும் நமக்குள் வந்து தொலைகிறது. இப்படிபட்ட நினைப்பு நமக்குள் வருவதில்  நம் திராவிட கட்சிகளுக்கும் பெரும்பங்கு உண்டு என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. இதை பற்றி வேறு ஒரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இதெல்லாம் கூட பரவாயில்லை. இப்போதெல்லாம் ராமர் பற்றி பேசினாலோ, ராமரை வணங்கினாலோ, ரோட்டில் காரின் பின்னால் ஆஞ்சநேயர் படம் ஓட்டப்பட்டிருந்தாலோ.. ஒரு வேளை இருக்குமோ???🤔 என்ற மனக்கசப்பு/ எரிச்சல் வருவது எனோ தெரியவில்லை. அவ்வளவு ஏன்??!  கடவுள் (ராமர்) மேலேயே கோபம் வரும் அளவுக்கு செய்து விட்டார்கள் நம்ம அரசியல் வியா(வா)திகள். அது பொய்யான கோபமாக இருந்தாலும், அவ்வாறு வந்ததற்கு காரணம்  பா.ஜ.க.வின் நடத்தை தான்.

சரி... எது எப்படியோ.. மீண்டும் மோடியே நம் பிரதமர். இதிலிருந்து நாம் மீண்டு வர இன்னும் ஒரு ஐந்து வருடம் பொறுத்திருந்து பார்ப்போம்.


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

செவ்வாய், 26 மார்ச், 2024

குடிபோதையில் பய(மர)ணம் !

வணக்கம், 

சில வருடங்களுக்கு முன், வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் மதுராந்தகம் அருகே நண்பரின் கார், மற்றொரு பெரிய வண்டி மீது மோதி அப்பளம் போல நொறுங்கியது. நொறுங்கிய வண்டியில் இருவர் (நண்பரும் ஒருவர்) படுகாயம், மற்றொருவர் உயிரிழந்தார். குடித்து விட்டு வண்டி ஓட்டியதால் ஏற்பட்ட விளைவு. சில நாட்களுக்கு முன் ECR சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கார், விபத்தில் சிக்கிய பைக்கில் வந்த இருவரை போலீஸ்காரர்கள் ஓரம்கட்டி நிறுத்தி வைத்து விசாரித்து கொண்டிருந்தனர். அதுவும் குடிபோதை பயணமே! இது போன்ற பல சம்பவங்களை நாம் செய்திகளிலும், தினசரி பயணத்தின் போதும் பார்த்திருப்போம்.


ஒவ்வொரு ஆண்டும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர் அல்லது காயமடைகின்றனர். இக்காலத்தில் சாலை விபத்துக்களுக்கு குடித்துவிட்டு வண்டி ஓட்டுதல் முக்கிய காரணமாகிவிட்டது. அது சட்டவிரோதமானது மட்டுமல்ல, பொறுப்பற்றது கூட. குடித்துவிட்டு வண்டி ஓட்டுதலால் ஏற்படக்கூடியவை பற்றி இணையத்தில் படித்து தெரிந்து கொண்டதை உங்களிடம் பகிர்கிறேன்.


Drunk-and-drive-effects

நாம் சாலையில் போய் கொண்டிருக்கும் போது போலீசார் வழிமறித்து தேவையான ஆவணங்களையெல்லாம் பேப்பர்களையெல்லாம் சரிபார்த்த பின்,  குடித்திருக்கிறோமா இல்லையா என சோதிக்க ஒரு சிறிய மெஷின் ஒன்றை வைத்து கொண்டு அதில் நம்மை ஊத சொல்வார்கள். அதுதான் BreathAlyzer. மூச்சு காற்றில்/ சுவாசத்தில் உள்ள ஆல்கஹால் அளவை அளவிடும் சாதனம். 

குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் வரம்பு BAC-ல் அளவிடப்படுகிறது. BAC (Blood Alchohol Content) என்பது உங்கள் இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவை குறிக்கும்.


குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் அல்லது BAC வரம்புகள் ஒவ்வொரு நாடு மற்றும் அவற்றின் சட்டங்களை பொறுத்தது. இந்தியாவில் BAC வரம்பு 0.03%. அதாவது இரத்தத்தில் 100 மில்லியில் 0.03 கிராம் ஆல்கஹால் வரை இருக்கலாம். மூச்சு, இரத்தம், சிறுநீர் அல்லது உமிழ்நீர் சோதனை மூலம் BAC சரிபார்க்கப்படலாம். பெரும்பாலும் இது மூச்சு மற்றும் ப்ரீத் அலைசரில் அவர்கள் பயன்படுத்தும் கருவி மூலம் சோதிக்கப்படுகிறது. இரத்தப் பரிசோதனைகள் துல்லியமான மற்றும் நம்பகமான BAC கொடுக்கின்றன என்றாலும். BAC லிமிட்க்கு மேல் இருந்தால் அபராதம் அல்லது சிறை கண்டிப்பாக உண்டு. நீங்கள் எவ்வளவு குறைவாக குடித்திருந்தாலும், நீங்கள் ஒரு முறை குடித்தாலும் நீங்கள் வாகனம் ஓட்ட தகுதியற்றவர் என்ற பொறுப்புணர்வு நம்மிடையே நிச்சயம் வேண்டும்.


குடிபோதையில் அல்லது எந்த ஒரு போதையிலும் வாகனம் ஓட்டுவதும், இந்தியாவில் கிரிமினல் குற்றமாகும். இந்திய மோட்டார் வாகனச் சட்டம், 1988ன் பிரிவு 185ன் கீழ், போதையில் வாகனம் ஓட்டுவது குற்றமாகும். ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மூன்று ஆண்டுக்குள் அதே தவறை செய்பவருக்கு, 2 வருட சிறை தண்டனை அல்லது 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.


சமீபத்தில் டில்லியில் நடந்த ஒரு கருத்துக்கணிப்பில், 30,000 பேரில் 81.2% பேர் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை ஓப்புக் கொள்கிறார்கள். 2022-ல் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது இந்தியாவில் சாலை இறப்புகளுக்கு/விபத்துகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளது. சட்ட வரம்புக்குக் கீழே இருந்தாலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது ஆபத்தானது. 0.01 சதவிகிதத்துக்கும் குறைவான BAC கொண்ட ஓட்டுநரின் திறன்களைக் குறைக்கும் பக்கவிளைவுகளை மதுவும் அதன் போதையும்  ஏற்படுத்தலாம்.  

  • போதையால் மெதுவாகும் செயல்திறன் மற்றும் கவன குறைவு 
  • கண் பார்ப்பதை மனதோ/கையோ கேளாமல் ஒருங்கிணைக்க முடியாமல் தடுமாறுவது
  • சாலையில் முன்னே போகும் வாகனம்/ ஆட்கள் பற்றிய தவறான முடிவு  (wrong judgement)
  • என்ன செய்கிறோம் என தெரியாதவாறு நினைவாற்றலை இழப்பது  
  • விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது
  • வாழ்க்கையையே மாற்றும் விபத்துகளும் ஏற்படலாம்
  • விபத்தினால் போதையில் ஓட்டுபவரே விபத்தில் சிக்க வாய்ப்புண்டு. 
  • போதையில் ஓட்டுபவரால் சாலையில் போவோரும், சாலையோரம் இருப்பவரும் மற்றவரும் விபத்தில் சிக்க வாய்ப்புண்டு 
  • போதையில் ஓட்டுபவரின் வாகனமோ அல்லது மற்றவருடைய வாகனமோ சேதமாக வாய்ப்புண்டு.

வெளியே சென்று மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும், மது அருந்தவும் திட்டமிட்டால், ஓட்டுனரோ அல்லது மது அருந்தாத வேறு ஒருவரோ வாகனத்தை ஓட்டும்படி செய்யலாம். அல்லது வாடகை வண்டி பதிவு செய்து போவது, அல்லது போதையில் பயணத்தையே தவிர்ப்பதும் சால சிறந்தது.



நன்றி!!!

பி. விமல் ராஜ்

வியாழன், 29 பிப்ரவரி, 2024

பௌத்தமும் சமணமும் !

வணக்கம், 

பண்டைய காலத்தில் சைவமும் வைணவமும் தமிழ்நாட்டில் முழுமையாய் செழுமை பெறும் முன்பே, பௌத்தமும் சமணமும் தழைத்தோங்கி இருந்துள்ளது. சங்ககாலத்தில் சைவத்துக்கும் வைணவத்துக்கும் இணையாய் பௌத்தமும் சமணமும் நடைமுறையில் இருந்துள்ளது என்பதற்கு பல சான்றுகள் இருப்பதாக சொல்கின்றனர்.


பௌத்தமும் சமணமும் நம் நாட்டின் மிக பழமையான சமயங்களில் ஒன்று. பௌத்தம் கி.மு 400-500-ல் கவுதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்டது. சமணம் அதற்கும் முன்னரே 24-ஆம் தீர்த்தங்கரர் மகாவீரரால் கி.மு.900-600-ல் தோற்றுவிக்கப்பட்டது. 


நம் நாட்டின் கலாச்சாரம், பழக்கவழக்கத்தில் உள்ள பல விஷயங்கள் புத்த, சமண மதத்தையொட்டி தழுவி பின்பற்றப்பட்டுள்ளது என பல மானுடவியல் ஆர்வலர்கள் சொல்கின்றனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.


Buddhism-Jainism-tamilnadu


பள்ளிக்கூடம் - பள்ளியறை என்பது 'படுக்கையறையை' குறிக்கும். 'பள்ளி கொள்ளுதல்' என்னும் சொல்லுக்கு 'உறங்குதல்' என்று அர்த்தம். ஆனால் அது ஏன் கல்வி கற்கும் இடத்திற்கு சொல்கிறார்கள் என தெரியுமா? சங்க காலத்தில் (கிமு 2ஆம் நூற்றாண்டு முதல்) சமணர்கள் ஊருக்கு வெளியே மலைகளை குடைந்து படுக்கைகள் அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். அங்கு சென்று தான் ஊரில் உள்ள சிறுவர்/சிறுமியர் கற்படுகையில் அமர்ந்து கல்விப்பாடம் கற்று கொண்டிருந்தனர். சமணர்கள் பள்ளி கொள்ளும் இடத்தில் சென்று கல்வி கற்று கொண்டதால் அது பள்ளிக்கூடம் என இன்றளவும் அழைக்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் விரதமிருந்து காவியுடை தரித்த துறவிகளுக்கு உணவிடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அமாவாசை, பௌர்ணமி எனப்படும் காருவா, வெள்ளுவா நாளில், பௌத்த துறவிகள் கூடி சங்க கூட்டம் நடத்துவார்கள். இதனை இலங்கையில் 'போயா தினம்' என இன்றும் கொண்டாடுகின்றனர். 


சைவ வைணவ வைதீக சமயத்தில், துறவு கொள்பவர்கள் காவியுடை உடுத்துவது வழக்கம். முதன் முதலில் செந்துவராடையை அணிந்து துறவு கொண்டது பௌத்த துறவிகளே ஆகும். அதை பின்பற்றி தான் மற்ற சமயங்கள் துறவர்கள் செவ்வாடையை உடுத்தும் வழக்கம் பின்பற்றப்பட்டது.


முருகனுக்கும், பெருமாளுக்கும் வேண்டிக்கொண்டு தலைமுடியை மொட்டையடிக்கும் பழக்கம் நம்மிடையே பலகாலமாக இருந்து வருகிறது. மொட்டையடிப்பது என்பது புத்த மத துறவறத்தில் உள்ள ஓர் முக்கிய விடயமாகவும். பௌத்த துறவிகள் வைத்திருக்க கூடிய 8 பொருட்களில் மழிக்கும் கத்தியும் ஓர் முக்கியமானதாகும். அதுவே பின்னாளில் இந்து சமயங்களில் பின்பற்றப்பட்டு வேண்டுதலுக்காக மொட்டையடிக்கப்படுகிறது.


தமிழர்கள் பரவலாக ஏற்று கொண்டிருக்கும் பட்டிமன்றம் என்ற கலை வடிவம் பௌத்த மதத்திலிருந்து வந்தது. பௌத்த துறவிகள் பிற மதவாதிகளுடன் வாதம் செய்து புத்த மதத்தை பரப்புவது வழக்கமாக்கி கொண்டிருத்தனர். அவர்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அவ்வூரில் அரச மரத்தின் ஒரு கிளையை நட்டு வைத்துவிட்டு பிற சமயவாதிகளை வாதிட அழைப்பார்கள். அக்காலத்தில் பட்டிமண்டபம் என்பது சமய கருத்துக்களை வாதிடும் இடம் என்று சங்க கால நூல்களில் காட்டப்படுகின்றன. புத்தர் ஞானம் பெற்ற இடம் போதி மரம் என அறியப்படுகிறது. போதிமரம் என்பது அரசமரமே ஆகும். அது புத்த மதத்தினரின் புனித சின்னமாகவும். ஞானத்தின் குறியீடாகவும் கருதப்படுகிறது. இன்றளவும் மக்கள் அரச மரத்தை சுற்றும் வழக்கம் கொண்டுள்ளதையும் பார்க்களாம்.


சமண மதத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான வர்த்தமனா மகாவீரரின் முக்தியடைந்த நாளை சமணர்கள் விளக்கேற்றி விழாவாக கொண்டாடியுள்ளனர். அதுவே சமய மாற்றத்தின் போது தீபாவளியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.


இந்த மதங்கள் வளராமல் போக போல காரணங்கள் உண்டு. கி.மு 3 நூற்றாண்டு முதல் கி.பி. 6 நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் பலரால் போற்றி வளர்க்கபட்ட புத்த, சமண மதங்கள் பின்னர் 7 நூற்றாண்டுக்கு பின்னர் சரிவடைய தொடங்கியது. அக்காலத்தில் சைவமும் வைணவமும் பல தமிழ் துறவிகளாலும், மன்னர்களாலும் வளர்க்கப்பட்டது. சில நேரத்தில் சமய பற்று, சமய வெறியாகி போய் மாற்று சமயத்தின் மீது பலமான விவாதமும், வன்முறையும் கையாளப்பட்டுளது. சைவர்கள் சமணர்களை கழுவேற்றி கொன்றதாக வரலாறுகள் உண்டு. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பௌத்தமும் சமணமும் மறைய தொடங்கியது.


சமண மதம் மறைய தொடங்கியதில் மற்றொரு காரணம், அதில் கடைப்பிடிக்கபடும் கடுமையான நெறிமுறைகள் தான். துறவு மேற்கொள்பவர்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக இருக்க வேண்டும்; தலையை மழித்து மொட்டையடித்து கொள்ள வேண்டும்; எட்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்ண வேண்டும்; அதுவும் பிச்சையெடுத்து உண்ண வேண்டும் என்ற கடுமையான நெறிமுறைகள் மதத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைத்தன. இவ்விரண்டு மதங்களும் ஏழாம் நாற்றாண்டு வரை செழித்து வளர்ந்துள்ளதை பல புத்த மடாலயங்கள், புத்த விகாரங்கள், சமணர் படுக்கைகள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். இதிலிருந்து தமிழ் மக்களிடையே இவ்விரு மதங்களும் ஒன்றோடு ஒன்றாக பின்னி இணைந்திருந்தன என்பதையும் அறியமுடிகிறது.


தகவல்கள்: சமண பௌத்த கட்டுரைகள் - தொ.பரமசிவம் 


நன்றி!!!

பி. விமல் ராஜ்

புதன், 14 பிப்ரவரி, 2024

உலக அதிசயம் தாஜ் மஹால் !

வணக்கம்,

உலக அதிசயமான தாஜ் மஹால் காதல் சின்னமாகவும், இந்தியாவின் கலை மற்றும் புராதான சின்னமாகவும் விளங்குகிறது. அது உண்மையிலேயே அந்த அளவுக்கு மதிப்பானதா, இல்லை வெறும் கட்டமைக்கப்பட்ட ஒன்றா என்ற சந்தேகம் எனக்குள் ரொம்ப நாளாய் இருந்தது.


அதை நிவர்த்தி செய்து கொள்ள இம்முறை விடுமுறைக்கு புது தில்லி - ஆக்ரா செல்ல கடந்த ஜனவரியில் திட்டமிட்டிருந்தோம். எனக்கு தில்லி ஏற்கனவே சென்றிருந்த அனுபவம் இருந்திருந்த போதிலும் ஆர்வம் என்னவோ குறையவில்லை. ஏற்கனவே டெல்லி போன கதை பற்றி பழைய பேப்பரில் எழுதியுள்ளேன். போனமுறை கனவான தாஜ் மஹால் பயணம், இம்முறை எனது மும்தாஜூடன் சேர்ந்து சென்று நினைவாக்கி விட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்😁.


Taj Mahal Visit

தாஜ்மஹால் ஷாஜஹானின் ஆசை மனைவி மும்தாஜ்க்காக கட்டப்பட்டது; முழுக்க முழுக்க பளிங்கு கற்களால், ஆக்ராவில் யமுனை நதி கரையில் கட்டப்பட்டுள்ளது. 1632ல் ஆரம்பிக்கப்பட்டு முழுமையாய் 1658ல் கட்டி முடிக்கப்பட்டது என எல்லாமே நமக்கு தெரிந்த கதை தான். அதை பற்றியெல்லாம் இங்கு விவரிக்க போவதில்லை.

 

தில்லி/புது தில்லி முழுவதும் சுற்றி பார்க்க, மார்க்கெட் ஷாப்பிங் என மூன்று நாட்கள் போதுமானது. பொதுவாய் வட இந்திய பயணத்திற்கு நவம்பர் - மார்ச் காலங்களில் செல்வது சாலச்சிறந்தது. நவம்பர், டிசம்பர் குளிர்காலத்தின் பீக்; கடும் குளிர் கொண்டு எல்லாம் விரைத்து போகும். ஜனவரி முதல் பிப்ரவரி பாதிவரை குளிர் (08-20℃) இருக்கும்; பகல், இரவு என இரு வேளையிலும் குளிர் அள்ளும்; காலை பத்து மணிக்கு சூரியன் மேகத்திலிருந்து எட்டிப்பார்க்காவிட்டால் வெறும் பனிமூட்டமாக தான் இருக்கும். பிப்ரவரி - மார்ச் நேரங்களில் லேசாக வியர்வை பூக்கும்; பகல் நேரத்தில் ஃபேன் கண்டிப்பாக போட வேண்டி வரும். ஏப்ரல்-மே மாதமெல்லாம் வெயில் (45-50℃ வரை) மண்டையை பிளக்கும். நம்ம ஊரை விட இரு மடங்கு ஜாஸ்தி!


தாஜ் மஹாலை பார்க்க ஒரு வாரம் முன்னலேயே ஆன்-லைனில் டிக்கெட் போட்டுவிட முடியும். தில்லி மற்றும் ஆக்ராவில் உள்ள எல்லா புராதான நினைவு சின்னங்களுக்கும் ஒரே இணையதளத்தில் (https://asi.payumoney.com/) டிக்கெட் எடுத்து விட முடியும். நாம் அங்கு போய் சேரும் நேரம் சரியாய் தெரியாலிருக்கும் பட்சத்தில், சில நேரத்தில் ஆன்-லைனில் டிக்கெட் எடுப்பதை விட நேரில் சென்று எடுப்பது உத்தமம்.


தில்லியிலிருந்து ஆக்ரா சாலை வழி பயணம் சுமார் மூன்றரை முதல் நான்கு மணி நேரம் தான். ஆனால் காலை வேளையில் பனி மூட்டத்தில் செல்ல நான்கரை முதல் ஐந்து மணி நேரம் வரை ஆகும். அதிகாலை ஆறரை மணிக்கு கிளம்பினாலும் 11/12 மணிக்கு தான் ஆக்ரா போய் சேர முடியும். யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவேயில் வண்டி 60-70 தாண்ட முடியாது. டிராபிக், பனி என பொறுமையாய் தான் போகமுடியும். ஹைவே எங்கும் பார்க்கிங் லைட்டில் கண் சிமிட்டியபடி எல்லா வண்டிகளும் சென்று கொண்டிருக்கும். ஆனால் அந்த எட்டு வழி சாலை வெண்ணெய் போல அருமையாக இருப்பதால் பயணத்தில் பெரிய கஷ்டம் தெரியவில்லை, ஆக்ராவினுள் நுழையும் வரை! ஆக்ரா நகருக்குள் சாலைகள் சற்று சுமாராகவும், கட்டிடங்கள் ஓரளவுக்கு தான் இருந்தது. Typical tier 3 வடஇந்திய நகரம் என பார்த்தவுடனே தெரிந்துவிடும்.    


தாஜ் மஹால் அருகே தனியார் மற்றும் வாடகை கார்கள் (பெட்ரோல்/டீசல்) செல்ல தடை. குறிப்பிட்ட தூரத்திற்கு பின் பேட்டரி ஆட்டோவில் (1 கி .மீ) தான் செல்ல வேண்டும். பாறை கற்களினால் போடப்பட்ட சாலை; மேடுபள்ளத்தில் குலுங்கி குலுங்கி போக வேண்டி வரும். பக்கவாட்டில் உள்ள எலும்புக்கூடான செங்கல் கட்டிடங்கள், சிறு சிறு கடைகள், குடிசை வீடுகள், இடிந்த பழைய கட்டிடங்கள், தெருவோரம் ஓடும் சாக்கடைகள், புளிச்..புளிச்.. என துப்பிய பான் கரைகள், என போகும் பாதையே படாவதியாய் இருக்கும். ஆட்டோ டிரைவர் நம்மை நாம் தாஜ் மஹாலுக்கு தான் கூட்டி போகிறாரா?  இல்லை வேறு எங்காவதா போகிறாரா என சந்தேகம் வருமளவுக்கு இருந்தது. அடப்பாவிகளா!! எவ்வளவு பெரிய புராதன, பிரபலமான சுற்றுலா தளம் இது... ஊரையும், போகும் வழியையும் இப்படியா பராமரிப்பது..?? எதிர்கட்சிகாரன் வெள்ளைக்காரன் பார்த்தா நம்மை பத்தி என்ன நினைப்பான்.. ?? 🙄🙄 ஹம்மம்.. இப்பல்ல.. 40/50 வருஷமாகவே இப்படி தான் இருக்கிறது போலும்!


குலுங்கி, குலுக்கி கொண்டே போய் தாஜ் மஹால் நுழைவு வாசல் வரை கூடி கொண்டு போய் விட்டுவிட்டார் ஆட்டோவாலா. அங்குள்ள கடைகளில் (ஆன்-லைன்) டிக்கெட் எடுத்துக்கொண்டோ, அல்லது கவுண்டரில் வரிசையில் நின்று 50 ரூபாய்க்கு என்ட்ரி டிக்கெட் எடுத்துக்கொண்டோ கிழக்கு வாசல் (east gate) வழியாய் உள்ளே செல்லலாம். அதே போல மேற்கு வாசல் (west gate) வழியாகவும் டிக்கெட் எடுத்து உள்ளே நுழைய முடியும். பெரும்பாலும் இரு வாசலிலும் பாட்டரி வண்டிகள், ஆட்டோக்கள், Golf cart வண்டிகள் என வரிசைகட்டி நிற்கும். இங்கு நாம் பார்க்கும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் தான். அனைவரிடமும் ஒரு DSLR காமிராவும், tripodம் கண்டிப்பாக இருக்கும். நம்மூர் மக்களும் கணிசமாக தான் இருந்தனர்.


பின்னர் அங்கிருந்து Darwaza என்று அழைக்கப்படும் மெயின் நுழைவு வாயிலை அடையலாம். செந்நிற சலவை கல்லை கொண்டு கட்டப்பட்டுள்ள வாயிலின் மேலே 22 சிறு சிறு குவிமாடங்கள் (dome) கொண்டுள்ளது அஃது தாஜ்மஹாலை கட்டிமுடிக்க 22 ஆண்டுகளை ஆனதை குறிக்கின்றனது என்று கைடு ஒருவர் சொன்னார்.   


மெயின் நுழைவு வாயில் வழியே உள்ளே செல்லும் போதே கொஞ்சம் கொஞ்சமாக தாஜ் மஹாலின் அழகை பார்க்க முடிகிறது. வாயிலை அடுத்து உள்ளே வரும் போது முழு பளிங்கு மாளிகையின் பிரமாண்டமும் நம் கண்ணில் ஒளிர்விடுகிறது. வாயில் முதல் தாஜ் மஹால் வரை வானிற குளம் அமைக்கப்பட்டுள்ளது; அதில் பவுண்டைனும் (fountain) அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இரு புறமும், முன்பும் பின்பும் பெரிய புற்கள், மரங்கள் நடப்பட்டு, பெர்சிய முறைப்படி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சார் பாக் (Char Bagh) என்று சொல்லுவார்கள்.


Click play for Taj Mahal photos

தாஜ் மஹாலின் ஒரு பக்கத்தில் மசூதியும், மறுபக்கம் கெஸ்ட் அவுஸ்ம் (assembly hall என்றும் சொல்கின்றனர்) கட்டப்பட்டுள்ளது. இம்மசூதியில் ஒவ்வொரு வெள்ளியும் உள்ளூர் பொதுமக்கள் நமாஸ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்; அதனால் வெள்ளியன்று மட்டும் சுற்றுலா பயணிகள் தாஜ் மஹாலுக்கு செல்ல அனுமதி இல்லை.


தாஜ் மஹால் இந்திய பொருட்களை மட்டுமல்லாமல் ஆசியாவில் பல்வேறு நாட்டிலிருந்து பொருட்களை கொண்டும் கட்டியுள்ளனர். ஆயிரம் யானைகள், 22,000 கட்டிட தொழிலாளர்கள், எம்பிராய்டரி வல்லுநர்கள், என பலர் வேலை செய்துள்ளனர். தாஜ் மஹால் கட்டடத்தின் வெளியே பெர்சிய மொழியில் குரான் எழுத்துக்களும் வடிக்கப்பட்டுள்ளன. ஒளி ஊடுருவக்கூடிய அந்த வெள்ளை பளிங்கு ராஜஸ்தானின் மக்ரானா பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் பகுதியிலிருந்து (japser) ஜாஸ்பர், சீனாவிலிருந்து ஜேட் மற்றும் கிரிஸ்டல் (jade & crystal), டர்க்கைஸ் (turquoise) திபெத்திலிருந்தும், லேபிஸ் லாசுலி (labis lazulli) ஆப்கானிஸ்தானிலிருந்தும், நீலக்கல் (sapphire) இலங்கையிலிருந்தும், கார்னிலியன் அரேபியாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், 28 வகையான விலைமதிப்பற்ற கற்கள் வெள்ளை பளிங்கு சுவற்றிலும் உள்பகுதியிலும் பதிக்கப்பட்டுள்ளன.🔷💎💠


வெளிப்புற சுவற்றில் பூச்செடிகள் போலவும், பல வண்ண நிறங்களில் அலங்கார மலர் வடிவமைப்பும் அமைக்கப்பட்டுள்ளன. 240 அடி உயரமுள்ள தாஜ் மஹாலின் உச்சியில் வெங்காய வடிய குவிமாடத்தில் மேல் முகலாயர்களின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இஸ்லாமிய மசூதிகளில் உள்ள மினார்கள் (தூண்கள்) போலவே இங்கும் தாஜ் மஹாலை சுற்றி நான்கு மினார்கள் (தூண்கள்) கட்டப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் 180 அடி அளவு உயரம் இருக்கும். இந்த 4 மினார்களும் சற்று சாய்வாகவே கட்டப்பட்டுள்ளது. ஏதேனும் இயற்கை பேரிடர்கள் ஏற்படுமாயின், இந்த மினார்கள் தாஜ் மஹாலின் மேல் விழாதவாறு கட்டப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.


தாஜ் மஹாலின் mausoleum (அடக்கம் செய்யப்பட்டுள்ள மசூதி) உள்ளே செல்ல இருநூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி கொள்ள  செல்லலாம். முன்கூட்டியே ஆன்-லைனில் கூட எடுத்து கொண்டும் செல்லலாம். உள்ளே அழுக்காகாமல் 👣இருக்க, நம் செருப்பு/ஷூ மேல் கவர் அணிந்து கொண்டுதான் போக வேண்டும். அதுவும் அங்கேயே தரப்படுகிறது. முசோலியம் உள்ளேயும் முழுக்க பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. சுவரெங்கும் அழகிய வேலைப்பாடுகளும், உள் குவிமாடத்தில் பிரமாண்ட வண்ணமயமான பூ மற்றும் அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஷாஜகானின் சமாதி சற்று பெரியதாகவும் மற்றும் மும்தாஜின் சமாதி சிறியதாகவும் முசோலியம் நடுவே வீற்றிருக்கிறது. ஆனால் அது போலியான சமாதி என்றும், அவர்களின் உண்மையான சமாதி முசோலியம் கீழே பாதாளத்தில் புதைக்கபட்டுள்ளது. அதற்குள் செல்ல படிக்கட்டுகள் இருக்கிறது; பாதாள அறைக்கு செல்லும் பாதை இரும்பு கேட் போட்டு மறைக்கப்பட்டுள்ளதை நம்மால் பார்க்கமுடிகிறது. 


அப்படியே இரு சமாதிகளை ஒரு முறை சுற்றி வந்து பின்பக்கமாக மசூதியின் பின்பக்கம் வந்து விடலாம். தாஜ் மஹாலின் இரு பக்கவாட்டிலும் சற்றே காலியாய் இருப்பதால் பலர் அங்கு இன்று போட்டோவும் செல்பியும் எடுத்து கொண்டிருந்தனர். தாஜ் மஹாலின் பின்பக்கத்திலிருந்து யமுனை நதியின் அழகை கண்டு ரசிக்கலாம்; ஆனால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. நதி அசுத்தமாகவும் சற்றே வறண்டுபோய் ஆங்காகே மணற்திட்டுகளாய் இருந்தது. நதிக்கரைக்கு அந்த பக்கம் மேதாப் பாக் Mehtab bagh என்னும் ஒரு முகலாய தோட்டம் இருக்கிறது. மேலும் அங்கு இடிந்த, தரைமட்டமான நிலையில் ஒரு கட்டிடதின் அடையளவும் இருக்கிறது. அது ஷாஜஹான் தனக்காக கட்டிக்கொண்ட சமாதி என்றும், அஃது கருமை நிற சலவை கற்களால் கட்ட திட்டமிட்டு, பின்னர் ஷாஜகானின் மகன் அவ்ரங்கசீப் அவர் தந்தையை கைது செய்ததால் இத்திட்டம் கைவிடப்பட்டது என சொல்கின்றனர். 


பிறகு இன்னொரு விஷயம். தாஜ் மஹால் பார்க்கிங்கில் இறங்கியது முதல் முசோலியம் உள்ளே செல்லும் வரை கைடுகளும் போட்டோஃகிராப்பர்களும் நம்மை மொய்த்து கொண்டே இருப்பார்கள். கைடுகள் சொல்வதில் எது உண்மை, எது சும்மாச்சிக்கும் அடித்து விடுகிறார்கள் என தெரியாமல் நம்மையே தலை சொரிய வைக்கிறார்கள். வெளிநாட்டினருக்கும், விவரம் தெரியாத சில நம்மூர் மக்களுக்கும் கைடுகள் சொல்வது தான் வரலாறு. எங்களுக்கும் ஒரு கைடு வந்து ஆத்து ஆத்து என ஆற்றிகொண்டிருந்தார். நாமே தனியே சென்று தெரிந்து கொள்வது சாலச்சிறந்தது. போட்டோஃகிராபர்கள் வகைதொகை இல்லாமல் நிமிடம் பேரம் பேசி கொண்டடே பின் தொடர்வார்கள். ஒருவரிடம் வேண்டாம் என்று சொன்னாலும், அடுத்து இன்னொருவர், அதற்கடுத்து இன்னொருவர் என ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருப்பார்கள். அதுதான் நமக்கு சற்று நச்சரிப்பாக இருந்தது. மேலும் இவ்விடத்தில் அவர்களுக்கு மட்டுமே சில இடங்கள் (viewpointகள்) தெரியும். அங்கிருந்து போட்டோ எடுத்தால் (அவ்வளவாக) கூட்டம் இல்லாமல் நம்மை மட்டுமே வைத்து போட்டோ எடுத்து கொடுப்பார்கள். தாஜ் மஹாலின் முன் புறத்தில் நீச்சல் குளத்துக்கு முன் சிறு மார்பில் பலகை போடப்பட்டிருக்கும் (போட்டோக்காக தான் !) அதற்கென பெரும் போட்டியும் வரிசையும் இருக்கும். அவையெல்லாம் வேண்டாம் என எங்களை நாங்களே எடுத்து கொள்கிறோம் என எடுத்து கொண்டாலும் சரி. (ஸ்மைல் ப்ளீஸ் 📸)

  

தாஜ் மஹாலை முழுக்க சுற்றி பார்த்து, ரசித்து, சிலாகித்து, போட்டோ எடுத்து முடித்து திரும்ப கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரமாவது தேவைப்படும். அதுவும் கூட்டத்தை பொறுத்தது. கூட்டத்தை தவிர்க்க காலை எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் சென்றுவிடுவது நல்லது என அரசு தொல்லியல் துறை இணையதளத்திலும் மற்றவர்களும் சொல்கின்றனர். ஆனால் 8 மணிக்கு போக வேண்டுமாயின், அதிகாலை நான்கு/ஐந்து மணிக்கு தில்லியிலிருந்து கிளம்பியாக வேண்டும். உங்கள் பயணத்தையும் சௌரியதையும் கொண்டு முடிவு செய்யுங்கள்.


தாஜ் மஹாலுக்கு பின் ஆக்ரா கோட்டை பார்த்துவிட்டு, மாலை நேரத்தில் mehtab bagh சென்று அங்கிருந்து தாஜ் மஹாலின் அழகை panoramic viewவில் கண்டு ரசிக்கலாம். அது மேலே சொன்னதை விட பேரழகான ரம்மியமான காட்சியாக இருக்கும். தோட்டத்தில் பூக்கள் பூத்துள்ள காலத்தில் சென்றிருந்தால், நம் கண்ணுக்குத் மனதுகும் இன்னும் போனஸாக இருக்கும். இரவு அறைக்கு வந்த பின்னும் தாஜ் மஹால் என் கண்களை விட்டு மறையவே இல்லை.  உண்மையிலேயே தாஜ் மஹால் நம் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையெனும் பார்த்துவிட வேண்டிய ஒரு இடம் தான். காதல் மாளிகை, காதல் அடையாளம், காதலின் புனிதம் என்பதற்காகெல்லம் இல்லை; அப்படி ஒரு அற்புதமான கலைநய பேரழகை யாரும் பார்க்காமல் விட்டுவிட கூடாது என்பதற்காக தான். நீங்களும் ஒரு உங்கள் மும்தாஜுடன் தாஜ் மஹாலுக்கு சென்று மகிழுங்கள்! 😉🤩



நன்றி!!!

பி. விமல் ராஜ்

வெள்ளி, 26 ஜனவரி, 2024

கொன்றால் பாவம், தின்றால் போச்சு!

வணக்கம்,

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டில் எல்லோருக்கும், எல்லா வளமும் மகிழ்ச்சியும் பெற்றிட வாழ்த்துக்கள்!

2024-ன் முதல் பதிவில் உணவை பற்றி எழுதலாம் என எண்ணியுள்ளேன். நாம் பெரும்பாலும் அசைவ ஓட்டல்களுக்கு செல்லும் போது அங்கு 'ஹலால்' (Halal) என்று ஆங்கிலத்திலும், உருதுவிலும் எழுதி ஓட்டப்பட்டிருக்கும். நானும் பலமுறை பார்த்திருக்கிறேன். முன்பெல்லாம் அதற்கு சரியான அர்த்தம் தெரிந்திருக்கவில்லை. சில காலம் பின்னர் அந்த ஹலால் ஸ்டிக்கர் இருந்தால் மட்டுமே முஸ்லீம் மக்கள் சாப்பிட வருவார்கள் என தெரிந்து கொண்டேன். சில நாட்கள் முன்பு மாமிச உணவு, ஹலால் சர்ச்சைகள் எழுந்த போது தான் ஹலால் போல மற்ற மதங்களிலும் உணவு முறைகள் இருக்கிறது என தெரிந்து கொண்டேன். இணையத்தில் அதை பற்றி படித்ததை உங்களிடம் பகிர்கிறேன்.

Halal-koscher-jhatka-foods

உணவும் மதமும் எப்போதுமே பிரிக்க முடியாத ஒன்று. ஓவ்வொரு மதமும் அந்தந்த மக்கள் எதை சாப்பிட வேண்டும், எதையெல்லம் சாப்பிட கூடாது என்று சில வழிமுறைகளை வைத்துள்ளது. நம் உணவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்றாலும், சில நேரத்தில் அப்படி இருப்பதில்லை. நமக்கு தெரிந்ததெல்லாம் சைவம் (Vegeterian), அசைவம் (Non-Vegeterian), சமீபமாக வீகன் (Vegan). அவ்வுளவுதான். 


உணவு முறைகளில் என்னென்ன மத கட்டுப்பாடுகள் இருக்கிறது என்பதை பார்க்கலாம். 

  • ஹலால் (Halal)
  • கோஷர் (Koscher)
  • ஜட்கா (Jhatka) 

முதலில் ஹலால் பற்றி வருவோம். 'ஹலால்' (Halal) என்னும் அரபி சொல்லுக்கு அனுமதிக்கப்பட்டது என்று அர்த்தம். இஸ்லாம் மதத்தின் போதனைப்படி எவையெல்லாம் அனுமதிக்கபட்டுள்ளதோ, எப்படியெல்லாம் நடக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் 'ஹலால்' என்று சொல்வார்கள். அனுமதிக்கப்படாததை 'ஹராம்' (Haraam) என சொல்வார்கள். 


இஸ்லாமிய சட்டம் எந்த உணவு உட்கொள்ளத்தக்கவை மற்றும் எவை உட்கொள்ளத் கூடாது என்று வகுத்துள்ளது. உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையினையும் வகுத்துள்ளது. அம்முறை தபிஹாஹ் (Dabihah) எனப்படுகின்றது. இஸ்லாமிய சட்டப்படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். தபிஹாஹ் பின்பற்ற சில விதிகலும் இருக்கிறது:


*) கூரான கத்தி/இறைச்சி வெட்டும் ஆயுதம் கொண்டு கழுத்து, உணவுக் குழாய் மற்றும் கழுத்து நரம்பின் மேல்பகுதியில் கீறப்பட்டு, தண்டுவடம் பகுதியை வெட்டாமல் தலையை மட்டும் துண்டிக்க வேண்டும்.

*) இறைச்சியை வெட்டும் போது காபாவின் திசையை நோக்கி வெட்ட வேண்டும்.

*) மேலும் பிஸ்மில்லா அல்லா-ஒ-அக்பர் என்ற இஸ்லாமிய பிரார்த்தனையை சொல்லி வெட்ட வேண்டும். 

*) ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கால்நடையும் வெட்டும் போது பிரார்த்தனை சொல்லி கால்நடைகளை வெட்ட வேண்டும்.

*) இரத்தம் அல்லது இரத்தம் சார்ந்த உணவுகளை உண்ண கூடாது.

*) மற்ற மிருகங்களால் கொல்லபடாமல், அதுவாய் இறந்த விலங்காய் இருத்தல் வேண்டும்.

*) பன்றி இறைச்சி உண்ண கூடாது.

*) ஆல்கஹால் மற்றும் போதை தரும் பொருட்கள் கூடாது.

*) அதே போல சமைக்க பயன்படுத்தும் பொருட்கள், சுத்தமாகவும் இருக்க வேண்டும்; தபிஹாஹ் இல்லாமல் தயாரிக்கப்பட்ட உணவ பொருளை பயன்படுத்தவோ சேர்க்கவோ கூடாது.


விலங்குகளை இறைச்சிக்காக கொல்லும் போது குறைந்த துன்பத்தில் உயிர் பிரிவதற்காகவும், அல்லாவின் பெயரை சொல்லி அவருக்காக பலியிடபடுகிறது என்று உறுதி செய்யவும் தான் இத்தகைய விதிகள் பின்பற்றப்படுகிறது. உலகில் உள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் இதனை விடாது கடைப்பிடித்து வருகின்றனர். இறைச்சி பொருட்கள் மட்டுமல்ல மற்ற சைவ பொருட்களான காய்கறிகள், தானியங்கள், பால், எண்ணெய் பொருட்கள், இனிப்பு/மிட்டாய் பொருட்களிலும் ஹலால் சமாச்சாரம் வியாபாரம் இருக்கிறது. உலகளாவிய ஹலால் சந்தை 2023-ல் 2500 பில்லியன் டாலர் அளவு எட்டியுள்ளது. இந்த ஹலாலை சுற்றிய சந்தை அடுத்த 10 வருடத்திற்குள் 5800 பில்லியன் டாலர் அளவுக்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


கோஷர் (Koscher) உணவு முறை என்பது யூதர்கள் பயன்படுத்தும் முறை ஆகும். யூதர்களின் புனித நூலில் இதனை காஷுருட் உணவு சட்டங்கள் மூலம் கடவுளால் சொல்லப்பட்டது என சொல்கிறார்கள். எந்தெந்த உணவுகளை உண்ண வேண்டும், அவற்றை எவ்வாறு தயாரிப்பது மற்றும் எவ்வாறு சேர்த்து சமைப்பது போன்ற விதிகளை உடையது. அனைத்து யூதர்களும் கோஷர் உணவை உண்பதன் மூலம் காஷுருட் விதிகளை கடைபிடிப்பதில்லை. கோஷர் என்னும் சொல்லுக்கு Fit என்று அர்த்தம். அதாவது யூதர்கள் உணவு உண்ண ஏற்ற முறை என்று பொருள் வரும். இதிலும் சில கோஷர் உணவுவிற்கான விதிமுறைகள் இருக்கிறது.


*) பாலும், இறைச்சியும் சேர்த்து சாப்பிடவோ, சமைக்கவோ கூடாது.

*) பழைய உணவை உண்ண கூடாது. சில நேரத்தில் மீன் உணவு மட்டும் விதிவிலக்கு 

*) வைன் குடித்தல் யூதர்களின் உணவில் முக்கிய ஒன்று. அந்த வைனும் கோஷர் விதிப்படி செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட முறையில் இருக்க வேண்டும்.

*) ஷோகேட் (shochet ) என்பவர் யூத சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட முறையில் கால்நடைகள் கொல்வதற்கு தகுதியானவர் என்று அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்ட நபர். அவர் மட்டுமே இறைச்சியை குறிப்பிட்ட முறையில் வெட்ட வேண்டும்.

*) மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி, வான்கோழி, வாத்து, மான் இறைச்சி போன்ற கோஷர் கோஷர் உணவில் அனுமதிக்கப்பட்டவை ஆகும்.

*) இறைச்சி உண்ணும் பறவைகள், வவ்வால் போன்றவற்றை உன்ன கூடாது. முயல், ஒட்டகம், பன்றி மற்றும் ஹைராக்ஸ் ஆகிய 4 விலங்குகளை உண்ண கூடாது.

*) மற்ற மிருகங்களால் இறந்த விலங்கை  உண்ண கூடாது.

*) கடல் சிப்பிகள், இறால் போன்றவற்றை உண்ண கூடாது.

*)  இந்த வழிகாட்டுதளின்படி, இறைச்சிக்காக வெட்டும் போது விலங்குகள் தொண்டையின் குறுக்கே துல்லியமான ஆழத்தில் வெட்டப்பட்டு, கழுத்து நரம்புகள், வேகஸ் நரம்புகள், மூச்சுக்குழாய் மற்றும் உணவுக்குழாய் ஆகிய இரண்டையும் துண்டித்து வெட்ட வேண்டும். இப்படி வெட்டும் போது, இரத்தம் கசியாமல் இறப்பதன் மூலம் அதிக துன்பம் இல்லாமல் விலங்கு உடனடியாக இறந்துவிடுவதை இது உறுதி செய்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த முறையை ஷேச்சித்தா (Shechita) என்று சொல்வார்கள். ஒரே முறை பிரார்த்தனை செய்து பல கால்நடைகளை வெட்டலாம்.

*) சில அனுமதிக்கப்பட்ட விலங்குகளின் முன்பகுதியை மட்டுமே மக்கள் உண்ண முடியும்.

*) இரத்தத்தின் அனைத்து தடயங்களையும் அகற்றுவதற்கு  சாப்பிடுவதற்கு முன் இறைச்சியை ஊறவைக்க வேண்டும்.


பழமைவாத மரபுவழி (ஆச்சாரமான) மத கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் யூதர்கள் மற்ற சைவ உணவுகளையும், டப்பாவில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவுகளையும் கோஷர் குறியீடுயில்லாமல் வாங்குவதில்லை. 2023-ல் கோஷர் உணவு சந்தையின் உலகளாவிய சந்தை மதிப்பு 42 பில்லியன் டாலர்களாம். இன்னும் பத்து ஆண்டுகளில் 72 பில்லியன் டாலர்களாக மாறும் என ஆய்வுகள் சொல்கிறது. 


ஜட்கா (Jhatka) என்பது சீக்கிய மதத்தினரும், இந்து மதத்தினரும் பின்பற்றப்படும் உணவு முறை ஆகும். ஜட்கா என்னும் சொல் சமஸ்கிருத சொல்லான ஜதிதி (Jhatiti) என்னும் சொல்லிலிருந்து வந்துள்ளது. அதற்கு 'உடனடியாக, விரைவாக' என்று பொருள் வரும்.


கால்நடையை இறைச்சிக்காக வெட்ட, கூரான வாள்/கத்தி/கோடாரி கொண்டு ஒரே வெட்டில் தலையை துண்டாக்க செய்ய வேண்டும். இதன் மூலம் உடனடியாக அதிக துன்பமில்லாமல் கால்நடையின் உயிர் பிரியும் என்பதான நம்பிக்கை. மேலும் வெட்டும் முன் விலங்கு வெட்டப்பட போகிறோம் என விலங்கு பயப்படாமல் இருத்தல் வேண்டும். சீக்கிய மதபாரம்பரியத்தின் படி, ஆயுதத்தால் ஒரே வெட்டில் கொல்லப்பட்ட விலங்குகளிடமிருந்து பெறப்படும் இறைச்சி மட்டுமே மனித உணவுக்கு ஏற்றது என குரு கோவிந்த் சிங் கூறியுள்ளார். இந்து மதத்திலும் இதே முறை கடைபிடிக்கப்படுகிறது.


இதே போல கிருஸ்துவ மதத்திலும் புதிய ஏற்பாட்டில் உணவுக் கட்டுப்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன: சிலைகளுக்குப் பலியிடப்பட்ட உணவு, இரத்தம், கழுத்தை நெரிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான்.


இந்தியாவில் இஸ்லாமிருடைய இறைச்சி கடையில் ஹலால் முத்திரையுடன் இருக்கும். மற்ற மதத்தினர் நடத்தும் கடையில் அவர்கள் என்ன முறை கடைபிடிக்கிறார்கள் என பெரும்பாலும் தெரியாது. நாடு முழுவதும் எல்லா அசைவ ஓட்டல்களிலும், நட்சத்திர ஓட்டல்களிலும், Thalapakatti, KFC, McD போன்ற பெரும் வணிக உணகத்திலும் ஹலால் உணவே கிடைக்கிறது. அதன் stickerகளை எங்கும் பார்க்க முடிகிறது. சில நாட்களுக்கு முன், இந்து அமைப்புகள் எங்களுக்கும் ஏன் அல்லாவின் பெயரை சொல்லி வெட்டப்படும் ஹலால் உணவு திணிக்க படுகிறது என கேள்வி எழுப்ப ஆரம்பித்து சர்ச்சையாக்கினர். பெரும்பாலான இடங்களில் ஹலால் மட்டுமே கிடைத்த போதிலும் இப்போது ஜட்கா மற்றும் கோஷர் மாமிசங்களும் ஆங்காங்கே கிடைக்கின்றன. இந்த மத கோட்பாடுகள் எல்லாம் உணவில் திணிக்கப்படுவது வியாபாரத்திற்கு தான் ஒழிய வேறேதும் இல்லை.


ஒவ்வொரு மதத்திலும் இது போன்ற உணவு பழக்க வழக்கங்கள் கட்டாயமாக பின்பற்ற சொல்லப்பட்டுள்ளன. அதை பின்பற்றாதோர் பாவம் செய்தவர்களாக மதம் சொல்கிறது. எம்மதமாயினும் யார்யாருக்கு என்ன விருப்பமோ அதை அவர்கள் அதை உட்கொள்ளலாம்; என்னை பொறுத்தவரையில் கொன்றால் பாவம் தின்றால் போச்சு. அவ்ளோதான்.! அப்புறம் என்னங்க... வர ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்ல என்ன ஸ்பெஷல்? சிக்கனா?? மட்டனா?? மீனா?? Beaf ஆ?? பின்னோட்டதில் சொல்லுங்க...



நன்றி!!!

பி. விமல் ராஜ்