திங்கள், 23 அக்டோபர், 2017

பண்டிகைகளில் ஏன் இந்த வேறுபாடு?

வணக்கம்,

தீபாவளி முடிந்து ஒரு வாரம் ஆகி விட்டது. தீபாவளியும், அதன் கொண்டாட்டங்களும் பற்றிய பதிவு இது. போன வாரமே பதிவிட்டிருக்க வேண்டும். பணி காரணமாக மறந்துவிட்டேன். ஆதலால் இன்று பதிவிடுகிறேன்.

இந்தியா முழுவதும் மக்கள் பல்வேறு வகையான பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். அதில்  தீபாவளியும் ஒன்று. ஒவ்வொருவரும் அவரவர் சம்பிரதாய நம்பிக்கைக்கு தகுந்தவாறு வேறு வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

சீக்கிய மதத்தில் பந்தி சோர் திவாஸ் (Bandi Chhor Divas) என்ற பெயரில், சீக்கியரின் குருவான குரு ஹர்கோபிந்த் சிங்கும், அவருடன் 52 இந்து அரசர்களும்  சிறையிலிருந்து முகலாய மன்னரால் விடுவிக்கப்பட்ட நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. சமண மதத்தில் வர்த்தமனா மஹாவீரர் முக்தியடைந்த நாளாக தீபாவாளி கொண்டாப்படுகிறது. புத்தமதத்தில் சில பிரிவினர், லட்சுமி மற்றும் விஷ்ணு கடவுள்களை வணங்குவதன் மூலம் தீபாவாளி கொண்டாடுகின்றனர்.

இதெல்லாம் கூட பரவாயில்லை, மற்ற மதங்கள் என கொள்ளலாம். இந்து மதத்தில், ஒவ்வொரு பிரிவினரும், ஒவ்வொரு மாநில மக்களும், அவர்தம் நம்பிக்கைக்கேற்ப கொண்டாடி வருகின்றனர்.

வடஇந்தியாவில் ராமர் ராவணனை வதம் செய்து சீதையுடன் அயோத்தி திரும்பும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அவர்களின் வருகையை கொண்டாடும் வகையில் ஊரெங்கும் தீபமெற்றி, பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். சிலர் பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் கழித்து வருகின்ற நாளை தீபாவளி என சொல்கின்றனர்.

சிலர் இந்து கடவுளின் செல்வத்தின் அதிபதியான திருமகளை (லட்சுமி தேவியை) வணங்குகின்றனர். பாற்கடலை கடைந்தன் மூலம் லட்சுமி பிறந்து, தீபாவளி நாளன்று விஷ்ணுவை மணக்கிறார் என்று சொல்கின்றனர்.

deepavali-festival-india

தீபாவளியன்று அசாம், ஒரிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் லட்சமிக்கு பதிலாய் காளியை (காளி பூஜை) வழிபடுவார்கள். உத்தர பிரதேசத்தில் பிரிஜ் பகுதியில் தீபாவளியை கிருஷ்ணனுக்கு கோவர்த்தன பூஜை என்ற பெயரில் கொண்டாடுவார்கள்.

மார்வாரிகளின் புத்தாண்டாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.  தீபாவளிக்கு அடுத்த நாள் குஜராத்திகளின் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அன்று தான் அவர்கள் புது கணக்கு ஆரம்பிப்பார்கள்.

ஆந்திராவில் தீபாவளி இரு நாட்களாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் நரக சதுர்த்தசி என்றும், மறுநாள் தீபாவளி அமாவாசை எனவும் கொண்டாடப்படுகிறது. அதே போல கர்நாடகாவிலும் ஐந்து நாட்களுக்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது. கேரளாவிலும் இருநாட்கள் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் நரகாசுரனை வதைத்த திருநாளாக தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு அடுத்த நாள் சிலர் காரடையார் நோன்பு எடுப்பார்கள். தென்னிந்தியா முழுவதும் நரகாசுரனை வதைத்த திருநாளாக தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் தீபாவளி இரு நாட்களாகவும், சில இடங்களில் 5 நாட்களுக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பண்டிகையின் பெயர் ஒன்றுதான். வழிபடும்/கொண்டாடும் முறை வேறுபட்டிருக்கலாம். ஆனால் கொண்டாடப்படும் காரணங்களே எப்படி வேறுபடும் என புரியவில்லை. அதுவும் ஒரே தேசத்தில், ஒரே மதத்தில் ?!?!

அடுத்து தமிழர் பண்டிகைக்கு வருவோம். கார்த்திகை தீபம். தமிழ் நாட்டில் மட்டும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நாளில் (பெரிய கார்த்திகை என சொல்வார்கள்) கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் நாளில் தமிழகமெங்கும் மக்கள் வீடுகளில் தீபமேற்றி கொண்டாடுவர்.  அன்று முதல் மூன்று நாட்களுக்கு தீபம் ஏற்றி வழிபடுவார்கள். ஆனால் வைணவ பிராமண பிரிவினர், அதற்கு அடுத்த நாள் தான் தீபம் ஏற்றுவார்கள். அது எப்படி பொதுவான பண்டிகை கூட ஓவ்வொரு சமூகத்திற்கும், அதன் உட்பிரிவுக்கும் மாறுகிறது என தெரியவில்லை.

அதே போல விநாயகர் சதுர்த்தி நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆனால் வைணவ பிரிவினரில் சிலர் விநாயகர் சதுர்த்தியை பெரிதாக கொண்டாட/வழிபடுவதில்லை. சைவ பிரிவினர் சிவராத்திரி கொண்டாடுவது போல வைணவர்கள் கொண்டாடுவதில்லை. அதற்கு பதில் வைகுண்ட ஏகாதேசி கொண்டாடுகின்றனர்.

பிராமணர் (சைவம்/வைணவம்) அல்லாதோர் பெரும்பாலும் நவராத்திரி (கொலு வைத்தல்) கொண்டாடுவதில்லை. கிருஷ்ண ஜெயந்தியும் எல்லா இந்து சமூக மக்களும் கொண்டாடுவதில்லை. ஏன் இந்த பாகுபாடு? எல்லா இந்துக்களும், எல்லா கடவுள்களையும் வணங்குகின்றனர். யார் இந்த கோட்பாடுகளை இயற்றியது? ராமானுஜர் காலம் தொட்டே வைணவ-சைவ கலாச்சார வேற்றுமை இருந்து வருவதை நாம் அறிவோம். ஆனால் பண்டிகைகளுக்குள் ஏன் இந்த சம்பிரதாய வேறுபாடு? எந்த காலத்தில் இது ஆரம்பிக்கப்பட்டது? இல்லையெனில் என் புரிதல் தவறானதா? யாராவது புரிய வையுங்களேன்!

தகவல்: கோரா, விக்கிபீடியா 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்