ghost haunted places chennai tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ghost haunted places chennai tamilnadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 மே, 2015

அ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு !

வணக்கம்,

பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்டு கொண்டிருக்கிறோம். ஏற்கனவே என் முந்தைய பதிவில் (பேய் பயம்) இதை பற்றி எழுதியுள்ளேன். இப்பதிவில் பேய் இருக்கும் இடங்கள் அல்லது பேய் இருப்பதாக நம்பபடும் இடங்களை பற்றி பார்க்கலாம்.

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போல ஆள் அரவமில்லா இடத்திலோ, சுடுகாடு பக்கத்திலோ, பாழடைந்த வீட்டிலோ ஏதாவது ஒரு உருவத்தை எவனாவது ஒருவன் குருட்டாம் போக்கில் பார்த்து விட்டு பேய் இருக்கிறது என்று கதை கட்டி, புரளியை கிளப்பி விடும் சம்பவங்களும் உண்டு.

இணையத்தில் சென்னையில் உள்ள பேய் இருக்கும் இடங்கள் (haunted places) என்று தேடிய போது, எனக்கு கிடைத்த தகவல்கள் இதோ.

1. வால்மீகி நகர், திருமான்மியூர் :

சென்னையில் பேய் உலவும் இடம் என்று தேடினால் முதலில் வருவது இந்த இடம் தான். எண். F -2 ,#3, செர்வார்ட் சாலை,வால்மீகி நகர், திருவான்மியூர். இந்த விலாசத்தில் உள்ள வீட்டில் தான் பேய் இருக்கிறதாம். சுமார் 10 வருடங்களுக்குமுன், வீட்டு உரிமையாளரின் மகள் தூக்கு போட்டு இறந்து விட்டதாகவும், அதிலிருந்து வீடு பூட்டியே இருக்கிறது என்றும், அந்த வீட்டில் அப்பெண்ணின் ஆவி உலாவுகிறது என்றும் சொல்கின்றனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அவ்வபோது நடுநிசியில் பெண் அழுவது போலவும், அலறுவது போலவும் குரல் கேட்கிறதாம். அந்த வீட்டை கடந்து செல்லும் போது, இரும்பு கதவு தானாகவே திறந்து கொண்டு நம்மை வரவேற்கிறதாம். இதை எல்லாம் தெரிந்த பின்னும், 2008-ல் ஐந்து இளைஞர்கள் அந்த வீட்டில் குடியேறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட சில அசாதாரண நிகழ்வுகளால், வீட்டை விட்டு வெளியேறி  விட்டார்கள். இன்றும் அந்த வீடும், அதிலுள்ள மர்மமும் பூட்டியே இருக்கிறது.


2. டி' மாண்டி காலனி, ஆழ்வார்பேட்டை :

ஜான் டி' மாண்டி என்ற 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த போர்த்துகீசிய தொழிலதிபர் உருவாகிய காலனி  இது. அவரும் அங்கேயே தங்கி இருந்தாராம். இந்த காலனியில் இப்போது பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பூட்டியே இருக்கின்றனவாம். பல நிறுவனங்கள் அந்த வீடுகளை லீசுக்கு எடுத்து கொண்டதாகவும் சொல்கின்றனர். இரவில் அந்த வழியாக நடந்து யாராவது சென்றால், அவர்கள் பெயரை சொல்லி யாரோ அழைப்பது போலவும், சிரிப்பு சத்தமும் கேட்கிறதாம். இரவில் சாலையை  ஜான் டி'மாண்டி கடந்து செல்வதை அப்பகுதிவாசிகள்  சிலர் பார்த்துள்ளார்கள்.  பூட்டிய வீட்டில் இவருடைய ஆவி கதவை திறக்காமலே உள்ளே சென்றதையும் சிலர் பார்த்திருகிறார்கள். ஆள் அரவமற்ற தெருவும், விளக்கில்லாத சாலையும் பார்க்கும் போதே திகிலூட்டுகிறது. இந்த பேரை கொண்டு தமிழில் ஒரு திரைப்படமும் வரப்போகிறது


3. கரிக்காட்டு குப்பம், முட்டுக்காடு  :

கிழக்கு கடற்கரை சாலையில் 2004-ல் ஏற்பட்ட சுனாமியால் இந்த கரிக்காட்டு குப்பம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. அதில் வாழ்ந்த பலரும் இறந்து விட்டனர். மீதம் இருந்த சிலர், ஊரை விட்டே போய்விட்டனர். அந்த சம்பவத்தில் இறந்த ஒரு கிழவனும், இரண்டு குழந்தைகளும் இங்கு ஆவியாய் அலைகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். அங்கு கோவில், பள்ளிக்கூடம், வீடுகள் என்று எல்லாம் இருந்தாலும் மக்கள் யாரும் இல்லாமல் ஒரு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது . அடிக்கடி கிழவனின் ஆவி நிழலாய் தெரிகிறது என அதை பார்த்த சிலர் சொல்கிறார்கள்.


4. பெசன்ட் அவன்யு சாலை, பெசன்ட் நகர் :

பெசன்ட் நகர் தியோசபிகல் அமைப்பு அமைந்துள்ள சாலையை ஒட்டி உள்ள தெரு தான் பெசன்ட் அவன்யு. பகலில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த சாலை, இரவில் பேய்கள் அலைகிறது என்று கூறுகிறார்கள். ஒரு கண்ணுக்கு தெரியாத உருவம், தனியாக வருபவர்களையெல்லாம் பளார் என்று அரைகிறதாம். இருட்டில் யாரும் அந்த பக்கம் போக வேண்டாம் என்று அப்பகுதி மக்கள் எச்சரிகிறார்கள்.


5. உடைந்த பாலம், அடையார் :

அடையாரில் கூவம் ஆற்றின் மீது கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட இந்த உடைந்த பாலத்தில் (ப்ரோக்கன் ப்ரிட்ஜ்) இரவு நேரங்களில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக சொல்கிறார்கள். பாலம் அருகே உள்ள ஆள்காட் குப்பத்தில் ஒரு பெண் அலறும் சத்தம் தினமும் கேட்பதாக சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன், ஒரு பெண் அப்பகுதியில் கொலை செய்யப்பட்டு இறந்து போனதாகவும், அவள் தான் தினமும் அலறுவதாகவும் கூறுகின்றனர்,


 6. சென்னை கிறுஸ்தவ கல்லூரி, கிழக்கு தாம்பரம் :

மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த கல்லூரியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் (chemsitry lab) எதோ வித்தியாசமான சப்தங்கள் கேட்பதாக மாணவர்கள் சொல்கிறார்கள். அந்த பாதை வழியாக போகும் போது பூட்டியிருக்கும் ஆய்வகத்தில் யாரோ பேசுவது போலவும், யாரோ புத்தகத்தை படித்து பாடம் நடத்துவது போலெல்லாம் சத்தம் வருகிறதாம். இது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக அக்கல்லூரியில் நம்பப்படும் ஒரு அமானுஷ்ய விஷயமாகும்.


7. சென்னை - புதுச்சேரி சாலை:

சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மர்மமான சில சம்பவங்கள் நடப்பதாக நம்பப்படுகிறது. காரிலோ, டூ-வீலரிலோ வந்து கொண்டிருக்கும் போதும், திடீரென ஒரு வெள்ளை உருவம் கடப்பதாகவும், வேகமாக எதிர்பக்கத்தில் வரும் வாகனம் திடீரென காணாமல் போவதும் மக்களை மேலும் திகிலூட்டுகிறது.


சென்னை மட்டுமல்ல. தமிழ் நாட்டில் பிற இடங்களிலும் இது போன்ற பேய் உலவும் இடங்கள் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

கொல்லிமலை, திருச்சி -  அடர் காட்டில் உள்ள அருவியும், மூலிகை வனமும் கொல்லிமலைக்கு பிரபலம். ஆனால் இந்த வனப்பகுதியில் பேய்கள் மற்றும் ரத்த காட்டேரிகளின் நடமாட்டமும் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் சொல்கிறனர். காட்டில் நடைபயணம் செய்பவர்கள் , அமானுஷ்ய உருவங்களை பார்த்துள்ளதாகவும் சொல்கின்றனர்.

சத்தியமங்கலம் வனப்பகுதி, சேலம் - புலிகள் மற்றும் யானைகளின் காப்பகமாக திகழ்கிறது சத்தியமங்கலம் வனப்பகுதி. 2004-ல் வீரப்பன் மறைவுக்கு பின், அந்த அந்த காட்டில் வித்தியாசமான அலறல் குரல்கள் கேட்கிறது என்று அப்பகுதி மலைவாழ் மக்கள் சொல்கிறார்கள். இரவில் இந்த அடர்ந்த காட்டில், ஆளில்லா லாந்தர் விளக்குகள் காற்றில் மிதந்து வருவதாகவும் சொல்கின்றனர்.

பெர்ன் ஹில்ஸ் விடுதி (Fern Hills Hotel) , ஊட்டி - சில காலங்களுக்கு முன் அந்த ஓட்டலில், சில அறைகளில் அமானுஷ்ய விஷயங்கள் நடந்தாக சொல்கிறார்கள். இரவில் அறையின் கதவுகள் தானாகவே திறந்து, மீண்டும் படார் என சத்தத்துடன் மூடிக்கொள்கிறதாம். ஒருமுறை ஊட்டியில் இந்தி சினிமா ஷூட்டிங்க்கு வந்த கதாநாயகி (பிபாஷா பாசு) தங்கிய அறையின் மேல் யாரோ கட்டில், மற்றும் நாற்காலிகளை நகர்த்தி கொண்டே இருப்பது போல சத்தம் கேட்டது. விடிந்த பின் ரிசப்ஷனில் கேட்டபோது, அந்த அறையின் மேல் எந்த ஒரு அறையும் கிடையாது என்று பதில் வந்துள்ளது. அதன் பின்னர் அவர்களும் அறையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். இப்போது அந்த ஓட்டல் மூடி கிடக்கிறது. 


இது போன்ற பல இடங்கள் இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இருக்கிறது. பேயை நம்புபவர்கள் பயந்து கொண்டே இருக்கிறார்கள். பேய் கதைகளும் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. இதை படிக்க படிக்க உங்களுக்கு பயம் ஏற்படுகிறதோ இல்லையோ, இரவு நேரத்தில் இணையத்தை தேடி படித்து எழுதும் போது எனக்கு திகில் ஏறிக் கொண்டே போகிறது.

தகவல்கள், படங்கள்  - கூகிள், கோரா 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்