feminism லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
feminism லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

Metoo பரிதாபங்கள்!

வணக்கம்,

#Metoo - கடந்த சில நாட்களாக அனைவரும் பரபரப்புடன் பேசுவது இதை பற்றிதான். போன வருடத்தின் நடுவில் இந்த இயக்கம் ஆரம்பித்து, மீண்டும் இந்த ஆண்டு சின்மயி மூலம் பிரபலம் அடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் சின்மையை தொடர்ந்து இன்னும் சில (சினிமா) பிரபலங்களும், பிற பெண்களும் #metoo என ஹாஷ்டாக் செய்து, தாங்களும் இம்மாதிரியான இக்கட்டான சூழலை கடந்துதான் வந்துள்ளோம் என சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பதிவுகளை படித்த பலரும் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சிலர் இந்த பிரபலங்கள் மீது பலத்த கேள்வி கணைகளை தொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

"பாலியல் தொல்லையோ, வற்புறுத்தலோ இவர்கள் அனுபவித்து இருக்கிறார்கள் எனில், ஏன் இத்தனை ஆண்டுகளாய் சொல்லவில்லை.? உடனே சொல்லவில்லை என்றாலும் சில நாட்களிலோ, சில மாதங்களிளோ, சில வருடத்திற்கு பிறகாவது சொல்லியிருக்கலாம். அப்போது வெளியிட்டால், வரும் வாய்ப்பு வராமல் போகும், வரப்போகும் ஆதாயம் கிட்டாமல் போகும் என்பதால் தாமதமாக இப்போது சொல்கின்றனர்.. எல்லாமே விளம்பரம் தான்! " மேலும், "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா? திரைத்துறையில் உள்ள பெண்கள் எல்லோரும் இப்படிதான்; யாரும் பத்தினிகள் இல்லை", என்றெல்லாம் சொல்கின்றனர்.

மேற்கண்ட கேள்விக்கெல்லாம் பதிலும் இல்லை; அதை நாம் ஆராய போவதும் இல்லை; அது நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையும் இல்லை. யாரெல்லாம் metoo என பகிர்கிறார்கள்?  படித்த, நாகரீக உலகில் வாழும் பெண்கள், பிரபலங்கள் என வெகு சிலர் மட்டுமே சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். மற்றவர்கள் ???

metoo india

நம் மக்களுக்கு பொதுவான ஒரு எண்ணம் உண்டு. இது போன்ற கொடுமைகளிலெல்லாம் நமக்கும், நம் வீட்டு பெண்களுக்கும் நடக்காது என்று எண்ணி, இதை பற்றி யோசிக்காமல் அல்லது விழிப்புணர்வு செய்யாமல் விட்டுவிடுவார்கள். நாட்டில் உள்ள எல்லா பெண்களும்  ஏதாவது ஒரு வகையில் இது போன்ற பிரச்சனையை தாண்டி தான் வந்திருக்க வேண்டும். அதுவும் வயது வரம்பின்றி பாதிக்கப்படுகின்றனர். வெறும் பாலியல் பலாத்காரமும், அதற்கு முற்படுவதும் மட்டுமே metoo-வில் சேராது.

சில நாட்களுக்கு முன் திவ்ய பாரதி என்ற சமூக செயல்பாட்டாளர் ஒருவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் கோவை, ஈரோடு அருகே குக்கிராமத்தில் வசிக்கும் பெண்கள், பஞ்சாலையில் வேலை செய்து பிழைத்து வருகின்றனர். அதில் பெரும்பாலான பெண்கள் வீடு விட்டால் பஞ்சாலை, பஞ்சாலை விட்டால் வீடு என வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து வருபவர்கள். அவர்களுடன் பேசும் போது அவர்களில் சிலர், ஓடும் ரயிலை கூட பார்த்ததில்லை; சிலர் யானையை கூட பார்த்ததில்லை; ஓட்டலுக்கு போய் சாப்பிட்டதில்லை என சொல்லினார்களாம். இதுபோல சின்ன சின்ன விஷயங்களை கூட தெரிந்து வைத்திருக்காத/பார்த்திராத பெண்கள் (எல்லோரும்) கூட ஏதோ ஒரு விதத்தில் வீட்டிலோ, உறவினர் மூலமாகவோ, வேலை செய்யும் இடத்திலோ, பயணத்தின் போதோ பாலியல் சீண்டல்கள் அல்லது தொந்தரவுகளுக்கு ஆளாகி உள்ளனர். வேலை, குடும்ப சூழ்நிலை, வருமானம் போன்ற காரணங்களால் எல்லாவற்றையும் அடக்கி கொண்டு இன்றும் பணிக்கு போய் வருகின்றனர்.

இது போல கிராமங்களிலும், மலை காடுகளில் வாழும் பெண்களிடம் நடக்கும் பாலியல் சீண்டல்களும், பள்ளிக்கு செல்லும் பெண் பிள்ளைகளிடம் நடக்கும் தொந்திரவுகளும், நகரத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும், ஜன நெருக்கடியான இடத்தில் இடிபடும் பெண்களும், அல்லது அவர்கள் அனுபவிக்கபடும் கொடுமைகலெல்லாம் எந்த சமூக வலைதளங்களிலும் பதியப்படுவதில்லை.

சிலர் பயந்து போய் வீட்டில் சொல்லி விடுகிறார்கள். சிலர் சொன்னால் மீண்டும் வேலைக்கு போகவோ/பள்ளி கல்லூரிக்கு போகவோ விடமாட்டார்கள் என பயந்து தங்களுக்குள்ளேயே மறைத்து மறந்து விடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் குடும்ப சூழலும், சமுதாயமும் மட்டுமே காரணமாக இருக்கிறது.

பல நாட்களுக்கு முன் நடந்ததை இப்போது சொல்வதால் இப்போது என்ன பிரயோஜனம் என கேட்கிறார்கள். பிரயோஜனம் உண்டு! இனிமேல் வரும் பெண் சமூகத்திற்கும், மற்றவர்க்கும் இவர்களை பற்றி தெரிந்திருக்கும்.  பெண்களுக்கு தேவை தைரியமும், தன்நம்பிக்கையும் தான். உங்களுக்கு இது போன்ற அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டால், உடனே தைரியமாக எதிராளியை கண்டிக்க அல்லது தண்டிக்க வேண்டும். குறைந்தபட்சம் உங்கள் எதிர்ப்பை அழுத்தமாக காட்ட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு ஒரு பயம் ஏற்படும். பஸ்சில்/ரயிலில் இடிக்கும், கைவைக்கும் இடிமன்னர்களை, பள்ளி பெண்களிடம் சில்மிஷம் செய்யும் ஆட்டோ டிரைவர்கள், மாணவிகள் தங்களிடம் படிப்பதால், அதிக இடம் எடுத்து கொள்ளும் பள்ளி/ டியூஷன் ஆசிரியர்கள், அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களை வற்புறுத்தும், சீண்டும் கண்காணிப்பார்கள்/மேலாளர்கள், தனியே வரும் பெண்ணிடம் தவறாக நடக்க முயல்பவர்கள், என யாராக இருப்பினும் நீங்கள் ஒரு முறை எதிர்ப்பை காட்டிவிடுங்கள். சத்தம் போட்டு கண்டியுங்கள், முடிந்தால் தண்டியுங்கள். இப்படி நடந்தால் பெண்கள் எதிர்ப்பார்கள் என தெரியும் பொது இதுபோன்ற தவறை மீண்டும் செய்ய பயப்படுவார்கள் அல்லது யோசிப்பார்கள். மற்ற பெண்களுக்கு நடக்காமல் இருக்க வாய்ப்புண்டு.

சமூகத்தில் இவையெல்லாம் நடக்காமலிருக்க, பெண்களை மதியுங்கள். முதலில் உங்கள் வீட்டு பெண்பிள்ளைகள் சொல்வதை முழுவதையும் கேளுங்கள்; பிறகு அவர்கள் சொல்வது தவறா? சரியா? என யோசியுங்கள். பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லுங்கள். 'குட் டச்', 'பேட் டச்' போன்றவற்றைச் பற்றி சொல்லி கொடுங்கள். நல்ல ஆரோக்கியமாக, வளமான பெண் சமுதாயத்தை உருவாக்குங்கள்!


நன்றி!!!
பி.விமல் ராஜ்

புதன், 21 டிசம்பர், 2016

இறைவி வேசியானது எப்படி?

வணக்கம்,

நம் நாட்டு கலாச்சாரத்தில் பெண்களுக்கு முக்கிய இடம் உண்டு. பெண்களை முன்னிலை படுத்திதான் பல விஷயங்கள் நடந்துள்ளது. பெண் தெய்வங்கள், நதிகளுக்கு பெண்களின் பெயர் என பெண்களுக்கு பல விதத்தில் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழக வரலாற்றில் பெண்களுக்கு மிக முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றல்ல, நேற்றல்ல, கடந்த நூற்றாண்டிலல்ல... சங்ககாலம் முதல் பெண்களுக்கு சமூகத்தில் மிகுந்த மரியாதை தரப்பட்டுள்ளது.

பெண்கள் நாடாளவும், அரசபையில் முக்கிய இடத்திலும், கல்வியிலும், வீரத்திலும், வீட்டை பேணி காப்பதிலும் முன்னிலை பெற்றுள்ளனர். இது போக, சங்ககாலம் முதல் தேவரடியாரும் தேவதாசிகளும் நம் நாட்டில் இருத்துள்ளனர். இணையத்தில் பெண்களின் சிறப்பு, சங்ககாலத்தில் பெண்கள் மற்றும் இன்னபிற நூல்களின் குறிப்பை கொண்டு இணையத்தில் தேடி படித்ததை இங்கு பகிர்கிறேன்.

devaradiyaar-temple dancers
கோப்பு படம்
திரைப்படங்களிலும், நாடகங்களிலும் கோவில்களில் நடனமாடும் பெண்களை தேவதாசி குறிப்பிடுவது வழக்கம். இப்பெண்கள் நடனமாடி (பெரும்பாலும் பரதம், குச்சிப்புடி) விபச்சாரம் செய்பவர்களாகவும், சிலர் பரம்பரை பரம்பரையாய் தேவதாசிகளாக இருப்பதையும் கேட்டிருப்போம். இக்குல பெண்கள் இழி பெண்களாகவே காட்டப்பட்டுள்ளனர்.

உண்மையில் தேவதாசி என்பது இழிகுல வம்சமோ அல்லது பாலியல் தொழில் செய்பவர்களோ அல்ல.

தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005) கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்;

கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார். இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

சங்ககால பெண்களின் நிலை:

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். விஜயநகர பேரரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள் 

சோழர்  காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்தது என்பதை சொல்லவா வேண்டும்!

ஆனால் காலப்போக்கில் நிலைமை தலைகீழ் ஆனது! பின்னர் 15-16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில், பெண்கள்களின் உரிமைகள் பறிக்கபடுகின்றன. வரதட்சணை கேட்டு வாங்கும் பழக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. தேவரடியாரான மதிப்புமிக்க பெண்கள் கோவில்களுக்குள் சென்று சேவை/ பூசை செய்ய தடை செய்யப்படுகிறது. பெண்களுக்கு இவ்வளவு அதிகாரம் ஏன் என்ற கேள்வி சில ஆதிக்க சாதி மக்களிடம் எழ, உரிமைகளும் உடமைகளும் பறிக்கப்படுகிறது. கோவில்களில் நடனமாடும் தேவரடியாரை சில சிற்றரசுகளும், செல்வந்தர்களும் அவர்களுக்காக தனியே ஆட அழைக்க, அவர்கள் ராஜதாசி ஆனார்கள். பின்னர் கோவிலில் நடனமாடும் பெண்களை எல்லோரும் தேவதாசிகளாக்கபட்டு, நாடு முழுவது மெல்ல மெல்ல தேவரடியார் இனம் தேவதாசிகளாக மா(ற்)றப்பட்டது.

devadasi-in-south-india-wiki

தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர் திராவிடரின் கூற்றுப்படி பொதுமகளிர்.

தேவதாசிகள்  கோயிலுக்கு 'நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்' ஆனார்கள். இவர்கள் கோயிலின் பேரால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். 'தாசி' எனும் சொல், 'அடிமை' என்ற பொருள் கொண்டது. 'அடியார்' என்பதோ, 'ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்' என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது. 

அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்த தேவரடியார்களை தேவதாசிகளாக மாற்றி பொருளுக்காக விபசாரம் செய்ய வைத்தனர். அதன் பின்னும் தேவரடியாரான பெண்கள் சிலர் கோவில்களில் நடனமாடி (பரதம்) பிழைத்து வந்தனர். பரதநாட்டியத்திற்கு தேவிடியா கச்சேரி என்ற பெயரும் உண்டு என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். பின்னர் ஆங்கிலேய ஆட்சிக்கால ஆரம்பத்தில் கோவில்களில் கலைகள் அவ்வளவாக வளரவில்லை; வளரவும் விடவில்லை. அதனால் தேவரடியாரை அப்போதிருந்த ஜமீன்தார்கள் மற்றும் சிற்றரசுகள் முழு நேர தேவதாசிகளாக்கினர். பெண்கள் பருவம் அடைந்ததும் பொட்டுகட்டி விட்டு, 'நித்திய சுமங்கலியாக' மாற்றி, அவர்களை தேவதாசிகளாகவே மாற்றிவிட்டனர். அதை ஒரு சடங்காகவே மாற்றி அவர்கள் பரம்பரையே வேசிகளாக மாற்றிவிட்டனர்.

இப்படி தான் தேவரடியாள் என்ற பெயர் பின்னாளில் தேவிடியாள் என்ற வசைமொழி பெயரானது போலும்! 

தமிழ் நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் தேவதாசிகள் இருந்தனர். ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா என் பல பெண்கள் இவ்வம்சத்தில் இருந்தனர்.  இவர்கள் அனைவருமே கோவிலில் பணிபுரியும் குலத்தை சேர்ந்தவர்கள்தான். நாளடைவில் இவர்களை தாசிகளாகியது நமது சமூகம். பின்னர் 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசிய பெண்கள் மேம்பாட்டு ஆணையமும், சமூக புரட்சியாளர்களான ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், தந்தை பெரியார் போன்றோர் எதிர்த்து போராடி, இந்திய அரசு தேவதாசி முறையை ஒழித்துவிட்டது. இன்று இந்தியா முழுவதும்  தேவதாசிகளே இல்லை என சொல்லப்படுகிறது,

கடந்த கால வரலாற்றில் இப்படிதான் பெண்கள் போற்றப்பட்டும், தூற்றப்பட்டும் இருக்கிறார்கள். இனியாவது பெண்மையை மதிப்போம்;
பெண்ணினத்தை காப்போம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 8 மார்ச், 2014

உங்க வீட்ல பெண்களே இல்லையா ???

வணக்கம்,

இன்று பெண்கள் தினமாம். எல்லோரையும் போல நானும் பேருக்கு ஃபேஸ்புக்கில் "மகளிர் தின வாழ்த்துக்கள்" என  ஸ்டேடஸ் போட்டுவிட்டேன். என்னதான் பெண்களைப் படிக்க வைத்தாலும், "இதுங்க எல்லாம் வேலைக்குப் போய் என்ன பண்ண போகுதுங்க?" என்று பெற்றோர் சிலரும் , "மாலை ஆறு மணிக்கு மேல் பெண்கள் ஏன் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள் ? " என்று ஒரு மாநில முதல்வரே கேட்கும் சமூக லட்சணத்தில் தான் இப்போது நாம் வாழ்கின்றோம்.

இன்று காலை என் வீட்டில்,

"அம்மா! இன்னக்கி மகளிர் தினமாம். உனக்காக நான் என்ன செய்யணும் ? " - என்று கேட்டேன்.

"நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்பா... கடைக்குப் போய் அரை லிட்டர் பாலும், ரெண்டு சிப்ஸ் பாக்கேட்டும் வாங்கி வா.. அது போதும்.. "

"ம்ம்ம் ..போம்மா..அப்புறம் போறேன்... "

எனக் கூறிவிட்டு மீண்டும் என் வேலையைத் தொடந்தேன். மேற்கூறிய உரையாடல் போல உங்கள் வீட்டிலும், கணவன்-மனைவி ,
சகோதரி-சகோதரன், தாய்-மகன்களுக்கிடையே கண்டிப்பாக இது போன்று நடந்திருக்கக் கூடும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பெரும்பாலும் இவர்களைப் போலவர்கள் தான் (என்னையும் சேர்த்து) வீட்டில் இருக்கும் பெண்களைச் சட்டை கூடச் செய்யாமல், மகளிர் தின வாழ்த்து ஸ்டேடஸ் போடுகின்றனர்.

இன்று பலரும் பெண்கள் தின வாழ்த்து செய்தியுடன், சாதனை பெண்மணிகளின் புகைப்படத்தையும், அவர்களின் சாதனைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ஏன், இவர்கள் வீட்டிலெல்லாம்  பெண்களே இல்லையா??? இவர்கள் வீட்டில் அம்மா, மனைவி , சகோதரிகளேல்லாம் பொது வாழ்வில் சாதனை புரிந்தவர்கள் இல்லையென்றாலும், நம் கண் முன் கஷ்டப்பட்டு, படிக்க வைத்து, அரவணைத்து, அன்பு காட்டியவர்கள் அனைவரும் சாதனை பெண்கள் தானே ! பொது வாழ்வில் சாதனை செய்தவர்களைப் பார்த்து பெருமைப்பட வேண்டாம் எனச் சொல்லவில்லை. முதலில் நம் வீட்டுப் பெண்களுக்கு மரியாதை தருவோம் ; ஆதரிப்போம். பிறகு மற்றவரை பாராட்டல்லாம்...
 
womens_day_celebration_rangoli
பெண்கள் தினம் - மகிழ்ச்சியான பெண்கள் (அம்மா போட்ட கோலம்)
என்னைப் பொறுத்தவரை கல்பனா சாவ்லா, கிரண் பேடி, பெப்சி இந்திரா நூயி, பி.டி.உஷா, சாய்னா நேஹ்வால்,  நாட்டின் இன்ன பிற அரசியல் தலைவிகள் யாவரும் சாதனை பெண்மணிகள் தான் !!! வாழ்வில் பல போராட்டங்களைச் சந்தித்து வென்றவர்கள் தான். ஆனால் இவர்களை எல்லாம் விட, என் கண்ணுக்குச் சாதனை பெண்களாகத் தெரிவது எங்கள் வீட்டுப் பெண்மணிகள் தான்! எனது அன்னையும், பாட்டியும், அக்கா, தங்கையரும் மற்றும் பெண் நண்பர்களும் தான் எனக்குச் சாதனை பெண்டீராகத் தெரிகின்றனர்.

இது போன்ற தினங்களெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் நாம் கொண்டாடுவதில்லை. இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், சன் தொலைக்காட்சிகளில், தீபாவளி, பொங்கலன்று போடுவது போல "அன்னையர் தின சிறப்புத் திரைப்படம்", "மகளிர் தின சிறப்புத் திரைப்படம் " என்று ஆரம்பித்தலால், அதிலிருந்து இத்தினங்கள் மறுக்க முடியாத விழாவாகி விட்டது.

நம் நாட்டைத் தாய் நாடு என்று சொல்லுகிறோம்; பேசும் மொழியைத் தாய் மொழி என்று கூறுகிறோம் ; நதிகளைப் பெண்களின் பெயரால் அழைக்கிறோம்; இயற்கையை அன்னை என்று சொல்கிறோம்; தமக்கைகளுக்காக ரக்ஷா பந்தன் கொண்டாடுகிறோம்;ஆவதும் பெண்ணாலே ! அழிவதும் பெண்ணாலே என்று பாடுகிறோம்; பெண் பாதுகாப்புக்கு பல சட்ட திருத்தங்களைக் கொண்டு வருகிறோம்;இவை அனைத்தும் இருந்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும், கொடுமைகளும் இன்னும் நம் நாட்டில் நடந்தேறிகொண்டு தான் இருக்கிறது. அக்கொடுமைகளை முழுமையாகச் சரி செய்ய முடியவில்லை என்றாலும், நிலைமையை ஓரளவு சீர் செய்துவிட்டு நாம் மகளிர் தினத்தை கொண்டாடுவோம்.

அனைவரும் பெண்மையைப் போற்றுவோம் ! பெண்ணித்தை காப்போம் !!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


ஞாயிறு, 8 டிசம்பர், 2013

கெட்ட வார்த்தை - த்தா... இத படிங்கடா முதல்ல !

வணக்கம்,

இந்த பதிவில் சில தகாத வார்த்தைகளை பற்றி பகிர்ந்துள்ளேன். விருப்பமில்லாதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்ளபடுகிறார்கள்.

அன்று முதல் இன்று வரை, ஒருவர் எதாவது தவறு செய்தாலோ அல்லது முறையில்லாமல் நமக்கு எதிராய் செய்தாலோ அவரை திட்டுவதற்கு, அவருடைய பிறப்பையோ, உறவையோ, சாதியையோ வைத்து கெட்ட வார்த்தையில் திட்டுவது ஒரு சிலரிடம் பழக்கமாகி விட்டது.

நம்முடைய கோபம் உச்சம் அடையும் போது, அதை வெளிக்காட்டி கொள்ள வருபவைதான் இந்த கெட்ட வார்த்தைகள். சிலரின் கோபம்  சாதாரண வார்த்தைகளில் அறிவுகெட்ட நாயே, பேயே, முண்டம், பொறுக்கி என திட்டி விட்டு அடங்கி விடும். ஆனால் சிலரின் கோபம், கொச்சை கொச்சையாய் எதிராளியை திட்டி தீர்த்தால் தான் அடங்கும்.


யாரும் அவர்தம் பெற்றோர் மூலமாகவோ, பள்ளிகூட பாடம் மூலமாகவோ கெட்ட வார்த்தைகளை கற்று கொள்வதில்லை. பதின்பருவ வயது ஆரம்பிக்கும் போது பிள்ளைகள் தன் உடன் படிக்கும் சிறார்களோடு/ சிறுமிகளோடு சேர்ந்து கற்று கொண்டு விடுகின்றனர். அவர்களுக்கு வேறு யாரோ சொல்லி தந்து விடுகின்றனர். பள்ளி செல்லாச் சிறார்களும் அவர்கள் வயதுடையவரிடமிருந்து கற்று கொள்கின்றனர். சுற்றத்தாரும், உடன் இருப்பவரும், ஊடகங்களும் வார்த்தைகளை எப்படி உபயோகிகின்றனர் என்பதை வைத்தே இளைய சமுதாயம் வளர்கிறது.

கல்லூரி மாணவர்கள் என்றால் பெண்களை கிண்டல் செய்பவர்கள் என்றும், வார்த்தைக்கு வார்த்தை ..த்தா .. ங்கொம்மா.. என்று முற்சேர்க்கையிட்டு (Prefix) பேசுவார்கள் என்று தான் திரையில் காண்பிக்கப்படுகிறது. அதை பார்த்துவிட்டு வரும் நம்மவர்களும், பெரும்பாலும் அப்படி தான் பேசுகின்றனர்.  

திரைப்படங்களில் வரும் வெகுஜன கதாநாயகர்கள் தகாத வார்த்தைகளை திரையில் உபயோகிக்கின்றனர். திரையில் வெளியிடப்பட்டு, சில நாட்களுக்கு பிறகு தொலைகாட்சியில் காட்டும் போது அந்த வசனத்தை மட்டும் வாயசைக்க வைத்து விடுகின்றனர். ஒரு சில சினிமா வசன உதாரணகள்...

திஸ் இஸ் மை ஃபக்கிங் கேம் ! - THIS IS MY FUCKING GAME !

ஏய் பாடு ! கம்மினாட்டி! அவனை ஏன்டா அடிச்ச  ?

..த்தா ! ...போடறா அவன....

நீங்கல்லாம் லவ் பண்ணி ,கல்யாணம் செஞ்சு மயிறையா புடுங்க போறீங்க? 

.த்தா .. தேவிடியா பசங்களா.. இதுக்கு தாண்டா நான் சட்டை போடறது... வேலையை பாருங்கடா ...

ஒம்மாள ! உனக்கு எப்படிடா தெரியும் ? 

மேற்கண்ட வசனங்கள் எல்லாம் வெற்றிகரமாக வெள்ளி திரையில் வந்தவை. உணர்வுபூர்வமான காட்சிகளுக்காக இது மாதிரி வசனங்களை திரையில் உலவ விடபடுகின்றன. பத்து / பதினைந்து  வருடங்களுக்கு முன்னால், படங்களில் இது போன்ற வசனங்கள் அவ்வளவாக வந்ததில்லை. அப்படியே வந்தாலும் ஒன்று, இரண்டு என மூன்றாம் தர படங்களில் மட்டுமே வரும்.

இந்த பதிவு வேறு யாரையோ பற்றி சொல்வது போல இருந்தாலும், நம்மில் பலருக்கு இந்த கெட்டப்பழக்கம் உண்டு. கொஞ்சம் வெட்கி தலைகுனியும் செயலாக இருந்தாலும்; மறுக்க முடியாத ஒன்று. 

பெரும்பாலும் கெட்ட வார்த்தைகள் பெண்களை இழிவு செய்வது போலவும், மனித உடல் பாகத்தினை குறிக்கும்படி தான் இருக்கிறது. அவன் தாயை, தமக்கையை, மனைவியை கொச்சை வார்த்தைகளால் திட்டி தீர்க்கபடுகிறது.

தகாத வார்த்தைகளை உபயோகிப்பவன், திட்டு வாங்குபவர் மன நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்து பார்ப்பதில்லை. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.  நாட்டில் உலவும் பாலியல் வறட்சியின் காரணமாக தான் இது போன்ற கெட்ட வார்த்தைகள் வாயிலிருந்து வந்து விழுகின்றது என ஆர்வலர்கள் சொல்கின்றனர்.

நம் பாரத தாய் திருநாடு பெண்களின் பெருமை பேசும் ஒரு தேசம். நாம் பெண்களின் பெருமையையும், அடிப்படை மனித மரியாதையையும் போற்றி பாதுகாக்காவிட்டலும் பரவில்லை; குறைந்தது மதிக்கவாவது கற்று கொள்ள வேண்டும்.

பின் குறிப்பு: இப்பதிவு நண்பர் ராஜ்மோகனின்  "ரேடியோ மோகன்"  வலைப்பூவில் ஏச்சு வார்த்தைகள்   பதிவை  தழுவி எழுதப்பட்டது.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்