சனி, 30 மே, 2015

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

வணக்கம்,

வெங்கட் பிரபுவுடன் சூர்யா இணைந்துள்ள முதல் படம். இயக்குனருக்கு முந்தைய படமான 'பிரியாணியில்' காரம் இல்லாததாலும், சூர்யாவின் 'அஞ்சானை' கண்டு மக்களே அஞ்சியதாலும் இந்த படம் மாஸாக வரும் என்று அனைவரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளார்கள். சென்சாரில் 'யு' சான்றிதழ் கிடைத்த பின், வரிவிலக்குக்காக பெயர் மாற்றி வந்துள்ளான் இந்த 'மாசு என்கிற மாசிலாமணி'.

தமிழ் சினிமாவில் பேய் படங்களின் டிரெண்ட் தான் இப்போது டாப் வரிசையில் நிற்கிறது. இப்படம் 'சூப்பர் நேச்சுரல் காமெடி திரில்லர்' வகையறாவை சேர்ந்தது என்று சொல்லும் போதே தெரிந்து விட்டது, இதுவும் ஒரு மொக்கையான பேய் படமாக தான் இருக்கும் என்று. நான் நினைத்ததும் பொய்க்கவில்லை. இருந்தாலும் வெங்கட் பிரபு மீதுள்ள சிறு நம்பிக்கை, சூர்யாவின் நடிப்பு - இவை இரண்டிற்காகவாவது படத்தை பார்க்கலாம் என்று எண்ணி போன என்னை தமிழ்திரை ரசிகர்களுக்கு, வழக்கம் போல ப்பூ...பூ...பூச்சாண்டி காட்டியுள்ளான் இந்த மாசு.


கதையின் படி சூர்யாவுக்கு ஒரு விபத்தினால் ஆவிகளை, பேய்களை பார்க்கும் மற்றும் பேசும் சக்தி கிடைக்கிறது. முதலில் பயந்துவிட்டு, பின்னர் அவைகளுக்கு உதவுகிறார். உதவி கேட்டு வரும் பேய்களில் ஒரு பேய், இன்னொரு சூர்யா. அந்த பேய்க்கு இந்த சூர்யா உதவினாரா இல்லையா என்பது தான் மிச்ச சொச்ச கதை. கதையின் கரு புதிது என்று நினைக்கும் போது, அதே பழைய பழி வாங்கும் கதையை பேய் படம்  என்ற போர்வையில் சொல்லியிருக்கிறார்கள். முதல் பாதியில் மொக்கை போட்டுவிட்டு, இரண்டாம் பாதியில் கொஞ்சம் மாஸ் காட்டியிருக்கிறார்கள். 

இரண்டு சூர்யாகளின் இன்ட்ரோ சீன்களை மட்டும் மாஸாக காட்டிவிட்டு, போக போக தூசாகி போகிறார். இருவரில் இரண்டாம் சூர்யா கொஞ்சம் மாஸ் காட்டுகிறார். அவருடைய வசன உச்சரிப்பை பார்த்தால், ஈழ தமிழில் கதைப்பது போல இல்லை. மேலும் இவரின் ஹேர் ஸ்டைல், ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி போட்டது போல இருக்கிறது. எந்த படமென்று தான் யோசித்து கொண்டிருக்கிறேன்.
 
படத்துக்கு நயன்தாராவை கதாநாயகியாக போட்டதே வீண். நாலு சீன்களுக்கு வந்து போய்விடுகிறார். இயக்குனரின் முந்தைய படங்களை போல, இப்படத்திலும் சில கதாபாத்திரங்களில் 'சென்னை-28 கேங்' ஒரு காட்சிக்கு வந்து போகின்றனர். அதில் எனக்கு பிடித்த சீன், ஜெய்க்கு வரும் ஃப்ளாஷ்பேக் தான். நன்றாக லிங்க் பண்ணியிருக்கிறார் வெங்கட். காமெடிக்கு வழக்கம் போல அவர் தம்பி பிரேம்ஜி தான். இதிலும் படம் முழுக்க சூர்யாவுடன் வருகிறார். சூர்யா - நயன்தாரா காட்சிகளை விட சூர்யா - பிரேம்ஜி காட்சிகள் தான் அதிகம். பார்த்திபன் போன்ற மிக சிறந்த நடிகரை ஏன் இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என தெரியவில்லை.

பாடல்களும் கூட அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. ஹாலிவுட் படமான தி சிக்ஸ்த் சென்ஸ் (The Sixth Sense) போன்ற நல்ல கதை கரு இருந்தும், இக்கதையில் திகிலோ, த்ரில்லோ ஒன்றும் இல்லை. அப்படி இருந்திருந்தால், படம் தாறுமாறாக மாஸாக இருந்திருக்கும். இயக்குனர் சூர்யாவை வைத்து ஜனரஞ்சக படமும் இல்லாமல், பேய் படமும் இல்லாமல் ஒரு மாதிரி வீணடித்து விட்டார்.

வெங்கட் பிரபு சிக்ஸர் அடிக்கிறேன் என்று சொல்லி, டொக் வைத்து டபுள்ஸ் எடுத்து இருக்கிறார். நல்ல வேலை தூக்கியடித்து அவுட்டாக வில்லை. மொத்தமாக படத்தில் கதை, திரைக்கதை, நாயகன், ஒலி, ஒளி என எதிலும் மாஸ் இல்லை.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 21 மே, 2015

அ....ஆஆஆ ... இங்க பேய் இருக்கு !

வணக்கம்,

பேய், ஆவி என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பேய் பற்றிய பயமும், பேய் கதைகளை பற்றியும், நாம் பல இடங்களில் கேட்டு கொண்டிருக்கிறோம். ஏற்கனவே என் முந்தைய பதிவில் (பேய் பயம்) இதை பற்றி எழுதியுள்ளேன். இப்பதிவில் பேய் இருக்கும் இடங்கள் அல்லது பேய் இருப்பதாக நம்பபடும் இடங்களை பற்றி பார்க்கலாம்.

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போல ஆள் அரவமில்லா இடத்திலோ, சுடுகாடு பக்கத்திலோ, பாழடைந்த வீட்டிலோ ஏதாவது ஒரு உருவத்தை எவனாவது ஒருவன் குருட்டாம் போக்கில் பார்த்து விட்டு பேய் இருக்கிறது என்று கதை கட்டி, புரளியை கிளப்பி விடும் சம்பவங்களும் உண்டு.

இணையத்தில் சென்னையில் உள்ள பேய் இருக்கும் இடங்கள் (haunted places) என்று தேடிய போது, எனக்கு கிடைத்த தகவல்கள் இதோ.

1. வால்மீகி நகர், திருமான்மியூர் :

சென்னையில் பேய் உலவும் இடம் என்று தேடினால் முதலில் வருவது இந்த இடம் தான். எண். F -2 ,#3, செர்வார்ட் சாலை,வால்மீகி நகர், திருவான்மியூர். இந்த விலாசத்தில் உள்ள வீட்டில் தான் பேய் இருக்கிறதாம். சுமார் 10 வருடங்களுக்குமுன், வீட்டு உரிமையாளரின் மகள் தூக்கு போட்டு இறந்து விட்டதாகவும், அதிலிருந்து வீடு பூட்டியே இருக்கிறது என்றும், அந்த வீட்டில் அப்பெண்ணின் ஆவி உலாவுகிறது என்றும் சொல்கின்றனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அவ்வபோது நடுநிசியில் பெண் அழுவது போலவும், அலறுவது போலவும் குரல் கேட்கிறதாம். அந்த வீட்டை கடந்து செல்லும் போது, இரும்பு கதவு தானாகவே திறந்து கொண்டு நம்மை வரவேற்கிறதாம். இதை எல்லாம் தெரிந்த பின்னும், 2008-ல் ஐந்து இளைஞர்கள் அந்த வீட்டில் குடியேறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட சில அசாதாரண நிகழ்வுகளால், வீட்டை விட்டு வெளியேறி  விட்டார்கள். இன்றும் அந்த வீடும், அதிலுள்ள மர்மமும் பூட்டியே இருக்கிறது.


2. டி' மாண்டி காலனி, ஆழ்வார்பேட்டை :

ஜான் டி' மாண்டி என்ற 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த போர்த்துகீசிய தொழிலதிபர் உருவாகிய காலனி  இது. அவரும் அங்கேயே தங்கி இருந்தாராம். இந்த காலனியில் இப்போது பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பூட்டியே இருக்கின்றனவாம். பல நிறுவனங்கள் அந்த வீடுகளை லீசுக்கு எடுத்து கொண்டதாகவும் சொல்கின்றனர். இரவில் அந்த வழியாக நடந்து யாராவது சென்றால், அவர்கள் பெயரை சொல்லி யாரோ அழைப்பது போலவும், சிரிப்பு சத்தமும் கேட்கிறதாம். இரவில் சாலையை  ஜான் டி'மாண்டி கடந்து செல்வதை அப்பகுதிவாசிகள்  சிலர் பார்த்துள்ளார்கள்.  பூட்டிய வீட்டில் இவருடைய ஆவி கதவை திறக்காமலே உள்ளே சென்றதையும் சிலர் பார்த்திருகிறார்கள். ஆள் அரவமற்ற தெருவும், விளக்கில்லாத சாலையும் பார்க்கும் போதே திகிலூட்டுகிறது. இந்த பேரை கொண்டு தமிழில் ஒரு திரைப்படமும் வரப்போகிறது


3. கரிக்காட்டு குப்பம், முட்டுக்காடு  :

கிழக்கு கடற்கரை சாலையில் 2004-ல் ஏற்பட்ட சுனாமியால் இந்த கரிக்காட்டு குப்பம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. அதில் வாழ்ந்த பலரும் இறந்து விட்டனர். மீதம் இருந்த சிலர், ஊரை விட்டே போய்விட்டனர். அந்த சம்பவத்தில் இறந்த ஒரு கிழவனும், இரண்டு குழந்தைகளும் இங்கு ஆவியாய் அலைகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள். அங்கு கோவில், பள்ளிக்கூடம், வீடுகள் என்று எல்லாம் இருந்தாலும் மக்கள் யாரும் இல்லாமல் ஒரு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது . அடிக்கடி கிழவனின் ஆவி நிழலாய் தெரிகிறது என அதை பார்த்த சிலர் சொல்கிறார்கள்.


4. பெசன்ட் அவன்யு சாலை, பெசன்ட் நகர் :

பெசன்ட் நகர் தியோசபிகல் அமைப்பு அமைந்துள்ள சாலையை ஒட்டி உள்ள தெரு தான் பெசன்ட் அவன்யு. பகலில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த சாலை, இரவில் பேய்கள் அலைகிறது என்று கூறுகிறார்கள். ஒரு கண்ணுக்கு தெரியாத உருவம், தனியாக வருபவர்களையெல்லாம் பளார் என்று அரைகிறதாம். இருட்டில் யாரும் அந்த பக்கம் போக வேண்டாம் என்று அப்பகுதி மக்கள் எச்சரிகிறார்கள்.


5. உடைந்த பாலம், அடையார் :

அடையாரில் கூவம் ஆற்றின் மீது கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட இந்த உடைந்த பாலத்தில் (ப்ரோக்கன் ப்ரிட்ஜ்) இரவு நேரங்களில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக சொல்கிறார்கள். பாலம் அருகே உள்ள ஆள்காட் குப்பத்தில் ஒரு பெண் அலறும் சத்தம் தினமும் கேட்பதாக சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன், ஒரு பெண் அப்பகுதியில் கொலை செய்யப்பட்டு இறந்து போனதாகவும், அவள் தான் தினமும் அலறுவதாகவும் கூறுகின்றனர்,


 6. சென்னை கிறுஸ்தவ கல்லூரி, கிழக்கு தாம்பரம் :

மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த கல்லூரியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் (chemsitry lab) எதோ வித்தியாசமான சப்தங்கள் கேட்பதாக மாணவர்கள் சொல்கிறார்கள். அந்த பாதை வழியாக போகும் போது பூட்டியிருக்கும் ஆய்வகத்தில் யாரோ பேசுவது போலவும், யாரோ புத்தகத்தை படித்து பாடம் நடத்துவது போலெல்லாம் சத்தம் வருகிறதாம். இது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக அக்கல்லூரியில் நம்பப்படும் ஒரு அமானுஷ்ய விஷயமாகும்.


7. சென்னை - புதுச்சேரி சாலை:

சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மர்மமான சில சம்பவங்கள் நடப்பதாக நம்பப்படுகிறது. காரிலோ, டூ-வீலரிலோ வந்து கொண்டிருக்கும் போதும், திடீரென ஒரு வெள்ளை உருவம் கடப்பதாகவும், வேகமாக எதிர்பக்கத்தில் வரும் வாகனம் திடீரென காணாமல் போவதும் மக்களை மேலும் திகிலூட்டுகிறது.


சென்னை மட்டுமல்ல. தமிழ் நாட்டில் பிற இடங்களிலும் இது போன்ற பேய் உலவும் இடங்கள் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

கொல்லிமலை, திருச்சி -  அடர் காட்டில் உள்ள அருவியும், மூலிகை வனமும் கொல்லிமலைக்கு பிரபலம். ஆனால் இந்த வனப்பகுதியில் பேய்கள் மற்றும் ரத்த காட்டேரிகளின் நடமாட்டமும் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் சொல்கிறனர். காட்டில் நடைபயணம் செய்பவர்கள் , அமானுஷ்ய உருவங்களை பார்த்துள்ளதாகவும் சொல்கின்றனர்.

சத்தியமங்கலம் வனப்பகுதி, சேலம் - புலிகள் மற்றும் யானைகளின் காப்பகமாக திகழ்கிறது சத்தியமங்கலம் வனப்பகுதி. 2004-ல் வீரப்பன் மறைவுக்கு பின், அந்த அந்த காட்டில் வித்தியாசமான அலறல் குரல்கள் கேட்கிறது என்று அப்பகுதி மலைவாழ் மக்கள் சொல்கிறார்கள். இரவில் இந்த அடர்ந்த காட்டில், ஆளில்லா லாந்தர் விளக்குகள் காற்றில் மிதந்து வருவதாகவும் சொல்கின்றனர்.

பெர்ன் ஹில்ஸ் விடுதி (Fern Hills Hotel) , ஊட்டி - சில காலங்களுக்கு முன் அந்த ஓட்டலில், சில அறைகளில் அமானுஷ்ய விஷயங்கள் நடந்தாக சொல்கிறார்கள். இரவில் அறையின் கதவுகள் தானாகவே திறந்து, மீண்டும் படார் என சத்தத்துடன் மூடிக்கொள்கிறதாம். ஒருமுறை ஊட்டியில் இந்தி சினிமா ஷூட்டிங்க்கு வந்த கதாநாயகி (பிபாஷா பாசு) தங்கிய அறையின் மேல் யாரோ கட்டில், மற்றும் நாற்காலிகளை நகர்த்தி கொண்டே இருப்பது போல சத்தம் கேட்டது. விடிந்த பின் ரிசப்ஷனில் கேட்டபோது, அந்த அறையின் மேல் எந்த ஒரு அறையும் கிடையாது என்று பதில் வந்துள்ளது. அதன் பின்னர் அவர்களும் அறையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். இப்போது அந்த ஓட்டல் மூடி கிடக்கிறது. 


இது போன்ற பல இடங்கள் இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் இருக்கிறது. பேயை நம்புபவர்கள் பயந்து கொண்டே இருக்கிறார்கள். பேய் கதைகளும் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. இதை படிக்க படிக்க உங்களுக்கு பயம் ஏற்படுகிறதோ இல்லையோ, இரவு நேரத்தில் இணையத்தை தேடி படித்து எழுதும் போது எனக்கு திகில் ஏறிக் கொண்டே போகிறது.

தகவல்கள், படங்கள்  - கூகிள், கோரா 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

செவ்வாய், 12 மே, 2015

அப்புறம் எதை தான் தின்றது ?

வணக்கம்,

நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று பலரும் மருந்தையே உணவாக உண்டு கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம், நாம் தினமும் உண்ணும் உணவே !

இப்போதெல்லாம் சமூக வலைதளங்களிலும், நாளிதழ்/வார இதழ்களிலும், நாம் வழக்கமாக உண்ணும் உணவில் கேடு விளைவிக்கும் நச்சு பொருட்கள் இருக்கிறது என்று பயமுறுத்துகின்றனர். அவர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்கள் தெரியுமா???

*) நாம் தினமும் உண்ணும் அரிசியில் அதிக விளைச்சலுக்காக பூச்சி மருந்து கலந்த ரசாயன உரம் போடப்படுகிறதாம். அதை நாம் சாப்பிடும் போது, கேன்சர் போன்ற வியாதிகள் வருகிறது என்று கூறுகிறார்கள் வேளாண்  விஞ்ஞானிகள்.

*) நம் சாப்பாட்டில் சேர்க்கும் காய்கறிகளும் இதிலிருந்து தப்பவில்லை. அதிலும் பூச்சி மருந்து தெளிக்கப்படுகிறது. காய்கறிகள் பெரியதாக வளர ஆக்சிடாக்சின் (Oxytoxin) என்ற ஒரு வகையான வேதிபொருள் தெளிக்கபடுகிறது. விளைச்சலுக்கு பிறகு, சந்தையில் விற்கும் வரை ப்ரெஷான காய்கறியாக இருப்பதற்காகவும்,  தர்பூசணி, மாம்பழம் போன்ற பழங்களில் சுவை கூடவும், சீக்கிரம் பழுக்கவும் எத்திரோசின்- பி (Ethyrosin -B) என்ற ரசாயன வேதிபொருள் ஊசி மூலம் ஏற்றபடுகிறது. ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் பிரஷ்ஷாக இருக்க மெழுகு தடவி வைக்கப்படுகிறது. பெங்களூர் பி.டி. கத்திரிக்காய் பற்றி நீங்களே கேள்விபட்டிருப்பீர்கள். அதுவும் பூச்சி மருந்து கலந்த காய்கறிதான். இவை தான் குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்கெட்களில் பெரும்பாலும் அடுக்கி வைக்கப்படுகிறது. இதை உண்பதாலும் கேன்சர், வயிற்று உபாதைகள் வரும் என்று சொல்கின்றனர்.


*) வடக்கில் பெரும்பாலும் உண்ணக்கூடிய கோதுமை வகை உணவிலும் வேதி பொருட்கள் அதிகமாக கலக்கப்படுகிறது. கோதுமையிலுள்ள ஆல்டிரின் (Aldrin) என்ற நச்சு வேதிபொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட 21,890 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் கூறியுள்ளது. மேலும் இவற்றை உட்கொள்வதால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

*) சரி, மேற்கத்திய உணவு வகைகளையாவது உண்ணலாம் என்று பார்த்தால், அது இதை விட மோசமாக இருக்கிறது. நாம் விருப்பி உண்ணும் பீட்சாவிலும், பர்கரிலும் E-361 என்னும்  கொழுப்பு சத்து சேர்க்கபடுகிறதாம். பீட்சாவின் அட்டை டப்பியில் polyfluoroalkyl/ perfluoroalkyl-  PFC என்னும் நச்சு பொருள் கொண்டு செய்யபடுவதால், அதனாலும், உடற்கேடு வர வாய்ப்புள்ளது. குழந்தைகள் அதிகம் உண்ணும் நூடுல்ஸ் வகையான உணவுகளில், சுவைக்காக மெழுகு சேர்க்கப்படுகிறது. அதை தின்பதால் அல்சர், கேன்சர் போன்ற வியாதிகள் வருகிறது. நாம் சுவைத்து உண்ணும் KFC சிக்கனில், பல நச்சு பொருட்கள் கலக்கபடுவதால், குழந்தைகளுக்கு முளை காய்ச்சால் மற்றும் புற்று நோய் வர வாய்ப்புள்ளதாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவ நிறுவனம் கூறியுள்ளது.


*) குழந்தைகள் அடிக்கடி கொறிக்கும் சாக்லேட், பிஸ்கட்கள், சிப்ஸ் வகையறாக்களில் ஒரு வகையான போதை தரும் வேதி பொருட்கள் சேர்க்கப்படுவதால், அதனாலும், மன நோய் மற்றும் புற்று நோய் வர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

இப்படி எல்லா உணவு பண்டங்களிலும் வேதி/நச்சு பொருட்கள் இருந்தால் நாம் எதை தான் தின்பது என்று தெரியவில்லை. இயற்கை விவசாயத்தில் அதிக விளைச்சல் கொடுப்பதில்லை என்பதாலும், மக்கள் பல தர பட்ட உணவுகளை உண்கிறார்கள் என்பதாலும் இவ்வாறு கலப்படம் செய்யபடுகிறது. இது கிட்ட தட்ட விஷத்தை நாமே உட்கொள்வது போல தான் இருக்கிறது.நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 4 மே, 2015

உத்தம வில்லன் - விமர்சனம்

வணக்கம்,

உலக நாயகனின் படம் என்றாலே எதிர்பார்ப்பு கூடிவிடும். படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரே பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் ட்ரைலரும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த, சில பல இன்னல்களுக்கு பிறகு படம் இப்போது வெளியாகியுள்ளது.

மிரட்டலான 'இரண்ய நாடகம் ' பாடல் ப்ரோமோவை பார்த்த பின் உலக நாயகனின் நடிப்பு தாகத்தை வெள்ளி தரையில் பார்த்தே தீர வேண்டும் என்று எண்ணி கொண்டிருந்தேன். படத்தை "காமெடி-டிராமா" என்ற வகையறாவில் சேர்க்கப்பட்டதால் கமலின் முந்தய படங்களான பஞ்ச தந்திரம், காதலா! காதலா! போல இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இம்முறை நம்மை சற்று ஏமாற்றி இருக்கிறார் இந்த வில்லன்.


படத்தில் நாயகனின் நிஜ வாழ்க்கை கதையும், அதனுள்ளே இன்னொரு சினிமா கதையும் காண்பிக்கிறார்கள். உச்சபட்ச நட்சத்திர நடிகரின் கதையும், அவர் நடிக்கும் படத்தில் உள்ள உத்தமனின் கதையும் மாறி மாறி காட்டுகிறார்கள். 

அறுபத்தைந்து வயதிலும் கமல் முதல் பாடலுக்கு ஆடும் நடனம் நம்மை ரசிக்கதான் வைக்கிறது. உலக நாயகனின் நடிப்பு அருமை, அபாரம் என்று ஒற்றை வரியில் சொல்லி விட முடியாது. கமலின் நடிப்புக்கு நிகர் அவரே! ஜெயராம் கமலிடம் அவருடைய பெண்ணின் புகைப்படங்களை காட்டும் போது, வேதனையும் அழுகையும் கமல் வண்ண சாயம் பூசாமலேயே முகத்தில் காட்டியிருப்பார். 'பக்கும் பக பக ' பாடல் ஜிப்ரானின் இசை என்று கர்ஜித்து சொல்கிறது. 'என் உதிரத்தின் விதை' பாடல் மட்டும், அலங்காரம் மற்றும் காட்சியமைப்புக்காகவும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.

இந்த கதைக்கு இயக்குனர் இமயம் தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. வேறு யாராவது குணசித்திர நடிகரே நடித்திருக்கலாம். கே.பி யை இந்த படத்தில் நடிக்க வைத்து வீணடித்திருக்கிறார் கமல். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அண்ட்ரியா, பார்வதி போன்ற பாத்திரங்களில் அவ்வளவாக பலம் இல்லை. நாயகியாக பூஜா குமார் கொஞ்சம் ஓவராகவே நடித்திருக்கிறார் என்று தான் நினைக்க தோன்றுகிறது.

கதையில் வரும் உத்தமன் கமல், தெய்யம் கலைஞராக ஆரம்பிக்கும் போது ஏதோ பெருசாக சொல்ல போவதாக நினைக்க வைத்து, இடையில் சில மொக்கை காமெடிகளை சேர்த்து, கடைசியில் இரண்ய நாடகத்தில் சுபம் போட்டிருக்கிறார்கள். நாசர் மற்றும் அவரது மந்திரி கோஷ்ட்டிகளை வைத்து சிரிப்பே வாராத காமெடிகளை கோர்த்து கதை நகர்த்துகிறார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த்.

மொத்தத்தில் கமலுக்காகவும் மற்றும் திரைக்கதைக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். கடைசியில் வில்லனை காமெடியன் ஆக்கிவிட்டார்கள்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்