சனி, 29 மார்ச், 2014

மிருகமாய் மாறுகிறேன்...

வணக்கம்,

"சிரிக்க தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர் !
 சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்று பெயர்! "

இதை போல மற்றவர்களை பார்த்து சிரிக்க மட்டுமே தெரிந்த சில மிருகங்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். ஒரு பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது அலுவலகத்திலோ நண்பர்கள் கூட்டமாக நின்று பேசி கொண்டிருந்தால், அதில் கண்டிப்பாக ஒருவனை எல்லோரும் கட்டம்கட்டி, கிண்டல் செய்து, கலாய்த்து கொண்டிருப்பார்கள்.

பள்ளி, கல்லூரிகளில் நண்பர்களிடையே இது போன்ற கேலிப் பேச்சுகளும், கிண்டல்களும் சர்வசாதாரணம் தான். சில சமயம் இதன் மூலம் நல்ல நட்பும் வளர்வது உண்மைதான். ஆனால் அந்த கேலி பேச்சுக்கள் அடுத்தவர் மனதை புண்படுத்தும் என்பதை சற்று எண்ணி பார்க்க வேண்டும். போகிற போக்கில் கலாய்த்து விட்டு போவோர்களை பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஏதோ அவர்களுக்கு தான் பேச தெரியும் என்பது போல, ஒவ்வொரு முறை பேசும் போதும், ஒருவரை மட்டும் கட்டம் கட்டுவது என்னை பொறுத்தவரை ஒழுக்கமான செயல் இல்லை. சிலர் பேசும் போது,பேச்சில் நக்கலும், நையாண்டியும், எகத்தாளமும் துள்ளி  விளையாடும்.

நண்பன் தானே என்று விட்டுவிட தோன்றினாலும், சில சமயங்களில் அவர்கள் மீது வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் தான் மேலோங்கி நிற்கும். கேலிக்கு ஆளாகுபவர் படும் வேதனையை வெளியில் சொல்ல மாட்டார்கள்; சொல்லவும் முடியாது. கும்பலோடு கும்பலாக  நின்று சிரித்து விட்டு போக வேண்டியது தான். கூட்டத்தில் ஒருவரை கேலி செய்யும் போது, கேலி பேச்சுக்கு உட்படுபவர், எதுவும் செய்ய முடியாது. கோபப்பட்டு ஏதாவது பேசினாலோ அல்லது எதையாவது செய்தாலோ, அதை வைத்தே மீண்டும் கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் யாரும் விட மாட்டார்கள். இது பல இடங்களில் நடந்து ஓசைபடாமல் கொண்டு தான் இருக்கிறது.


இந்த பதிவு என்னுடைய கோபத்தையும், எரிச்சலையும் பதியும் பதிவு என்றே வைத்து கொள்ளலாம். என் கோபத்திலே கொஞ்சம் சுயநலமும் கலந்திருக்கிறது... ஆம். இதில் நானே நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன்; இன்னும் பட்டு கொண்டிருக்கிறேன். ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலும், பின்னர் அலுவலகம் வந்தும் என்னை சுற்றி வளைய வரும் இந்த கேலி பேச்சுக்கள் குறைந்த பாடில்லை. இவர்கள் என் போன்றோரை இப்படி தான் கண்டுபிடிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. "இவன் ரொம்ப நல்லவன்; கலாய்த்தால் ஒன்றும் செய்ய மாட்டான்..." என்று முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும் போல.

பள்ளி, படிக்கும் போது ரொம்ப கலாய்த்தால், என்ன சொல்வது எனத் தெரியாமல் பேந்த பேந்த முழித்துவிட்டு ஓடிவிடுவேன். பிறகு கல்லூரியிலும், இந்த கருமத்தை எல்லாம் கேட்டுக் கேட்டு மனம் பழகி விட்டது. நண்பர்களிடையே கூட்டம் ஆரம்பிக்கும் போது ஜாலியாக தான் இருக்கும். பிறகு தான் அவர்கள் ஜோலியை காட்டி நம்மை காலி செய்துவிடுவார்கள். இப்போதெல்லாம் லேசான கோபத்தை மட்டும் காட்டி விட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்து விடுவேன்.

பெரும்பாலும்  மற்றவரின் மனதை துன்புறுத்தும், கலாய்க்கும் செயல்கள், உளவியல் பிரச்சனையின் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். இது போன்ற செயல்களால் பாதிக்கப்படுபவர், மன உளைச்சலால் பெரிதும் பாதிக்கபடுகிறார்கள். சில சமயங்களில் உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவரின் மனதை புண்படுத்தி, அதில் சிரித்து இன்பம் கொள்ளும் இது போன்ற மனித மிருகங்களுக்கு என்றுதான் மற்றவரின் மனம் புரியுமோ எனத் தெரியவில்லை.

இதில் எனக்குள்ள வேதனை என்னவென்றால், இதுவரை கேலி பேச்சுக்களையும், மற்றவர்கள் என்னை பற்றி கலாய்ப்பதையும் மட்டுமே கேட்டு வந்த நான், இப்போது சில நாட்களாக நானும் ஒரு மனித மிருகமாக மாறி வருகிறேன் என்பதை மறுக்காமல் இருக்க முடியவில்லை. என்னை விட அப்பாவி நல்லவன் ஒருவன் என்னருகில் அலுவலகத்தில் இருக்கிறான். மற்றவர்கள்  அவனை கிண்டல் செய்வதை பார்த்ததிலிருந்து, நானும் கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாக மாறி வருகிறேன். கிண்டலின் வேதனையும், கேலி பேச்சின் வருத்ததையும் அறிந்த நான், ஏன் இப்படி செய்கிறேன் என எனக்கு புரியவில்லை. முன்னாட்களில் எனக்கு நேர்ந்ததை இப்போது நான் பதிலுக்கு பதில் செய்கிறேனா ? தெரியவில்லை... ஒரு வேளை இதுவும் நிபுணர்கள் சொன்ன உளவியல் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் தான் எனக்கு தோன்றுகிறது.

பெரும்பாலும் அடுத்தவன் செய்த தவறை சொல்லும் போதும், நம் தவறுகளை மறந்து விடுகிறோம். இதை படிக்கும் போது, "இவன், எவனிடமோ வசமா வாங்கி கட்டியிருக்கான். அதான் இப்படி எழுதுகிறான்..." என்று நீங்கள் மனதிற்குள் சொல்வது எனக்கு கேட்கிறது. உண்மை தான். நான் மட்டுமல்ல; என்னை போன்றோர் பலரும் இது போன்ற இன்னல்களில் சிக்கி தவிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் சேர்த்து தான் எழுதுகிறேன்.

மற்றவரை சிரிக்க வைக்க நீ கோமாளி ஆகலாம்.. ஆனால் எல்லோரும் உன்னுடன் சேர்ந்து சிரிக்க , மற்றொருவனை கோமாளியாக்காதே ! என்பதே என் தாழ்மையான கருத்து.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 22 மார்ச், 2014

சிறுகதை - நட்சத்திரம்

வணக்கம்,

இது எனது இரண்டாம் சிறுகதை. ஒரு நடுத்திர குடும்பத்தில் நடக்கும் சில அசாதாரண நிகழ்வுகளை பற்றியே இக்கதை எழுதப்பட்டுள்ளது. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...

சிறுகதை - நட்சத்திரம்
*******************************

"ரொம்ப சந்தோஷம், ஆண்ட்டி... உங்க பொண்ணு வள்ளி-க்கு முதல் பிரசவத்திலேயே பையன் பொறந்துட்டான். புள்ள நல்லா கொழு கொழுன்னு இருக்கான். முதல்ல போய் சுத்தி போடுங்க..."

"நிஜம் தான் சாந்தி.. பேரன் பிறந்தது சந்தோசம் தான் .. " என்றாள் பார்வதி.

"ஆங்..உங்க பேரனுக்கு பேரு வைச்சாச்சா ? என்ன நட்சத்திரம்? "

"ரோகிணி நட்சத்திரம்... பேரு விஜய் ஆனந்த் -னு வைச்சிருக்கோம்.."

"... ரோகிணியா ??? பகவான் கண்ணன் நட்சத்திரம்.. இவனுக்கு தான் இரண்டு மாமன்களாச்சே !..  "

"ஆம்மா...அந்த கூத்த ஏன் கேக்குற?  பிள்ளை பொறந்தவுடன், துணி சுத்தி, அப்புறம் எண்ணெயிலே என் இரண்டு புள்ளைங்க  ராமனையும், கிருஷ்ணனையும் முழிக்க வச்சு.. "

"சரி தான்.... "

"வேற வழி இல்ல.."

"உங்க கடைசி பொண்ணு லட்சுமி எப்படி படிக்கிறா?? "

"ம்ம்..நல்ல படிக்கிறா.. இந்த வருஷம் பிளஸ் 2.."

அப்ப சரி, நான் போய்ட்டு வரேன்... மறக்காம புள்ளைக்கு சுத்தி போடுங்க.. "

"சரி சாந்தி ... "

வள்ளிக்கு குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் ஆகிறது. அந்த ரயில்வே காலனியில், சாந்தி உட்பட பலரும் வந்து வள்ளியையும் அவள் குழந்தையையும் பார்த்து சென்று விட்டனர்.

மறுநாள் காலையில் லட்சுமி வாசல் தெளிக்க வரும் போது, வீட்டு வாசலில் கற்கள் சிதறியிருப்பதை கண்டாள். "இதை யாரு இங்க வந்து போட்டது?" என யோசித்து கொண்டே கோலம் போட்டு விட்டு, வீட்டுக்குள் சென்று அம்மாவிடம் கேட்டாள்.

"ஆமாண்டி, நானும் நேத்து காலையில கோலம் போடும் போது பார்த்தேன். சுத்தம் செஞ்சிட்டு போனேன். ஆனா, சாயங்காலம் மறுபடியும் ஒரே கல்லா கிடக்கு....அதுவும் நம்ம வீட்டுலையும், பக்கத்தில கோமதி வீட்டிலும் மட்டுந்தான்..."  என்றாள் பார்வதி.

பார்வதியும், லட்சுமியும் வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னார்கள். அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. கற்கள் யார் மீதும் விழுவதில்லை.  'தொம்' -ன்று கீழே விழுந்து சிதறுகிறது. இது இப்படியே கொஞ்ச நாட்களாய் நடந்து கொண்டிருந்தது.

இரண்டு நாள் கழித்து, கொல்லையில் குழந்தையை குளிப்பாட்டி கொண்டு இருந்தாள் வள்ளி. திடீரென எங்கிருந்தோ வேகமாக ஒரு கல் பறந்து வந்து வள்ளியின் பக்கத்தில் விழுந்து சிதறியது. 'வீல்' என அலறியபடி குழந்தையை தூக்கி கொண்டு ஓடினாள் வள்ளி.

சத்தம் கேட்டு ஓடி வந்த பார்வதி, "என்னம்மா ? என்னாச்சு ?? எங்கிருந்தும்மா கல்லு வந்துச்சு ?? "என்றாள் பதறியபடி.

"தெரியலம்மா..திடீருன்னு பக்கத்துல வந்து விழுந்துடுச்சி .."

"நல்லவேளை! புள்ள மேல விழல.. நெல்லுகடை மாரியம்மா! காப்பாத்திட்ட..  பூவாடைக்காரி ஆத்தா ! ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியலையே... எம் புள்ளைங்களை நீதான்ப்பா காப்பாத்தணும் பெருமாளே!!

"இனிமே குழந்தைய கொல்லையிலே வச்சி குளிப்பாட்டாத வள்ளி .."

"ம்ம்..சரிம்மா..."

இருவருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அடுத்தஅடுத்த நாட்களிலும் இப்படியே நடந்தது. எங்கிருந்தோ கற்கள் பறந்து வந்து அவர்கள் வீட்டிலும், பக்கத்து வீட்டிலும் விழுவதும், அவர்கள் பயத்துடன் இருப்பதுமாகவே இருந்தது.

வள்ளியின் அண்ணன்-தம்பிகள் கிருஷ்ணனும், ராமனும் அவர்களுடைய இளவட்ட நண்பன் முருகனுடன் சேர்ந்து  அவர்கள் வீட்டை சுற்றியுள்ள மாமரங்களிலும், அக்கம்பக்கத்து  கூரையிலும் ஏறி யார் கல்லெறிவது என்று உளவு வேலை பார்க்க ஆரம்பித்தனர். அவர்கள் பார்த்ததை அவர்களாலையே நம்ப முடியவில்லை. தெரு முனையிலிருக்கும் குப்பைத்தொட்டி பக்கத்தில் குவிந்து கிடந்த ரப்பீஸ் கற்கள் சடாரென்று தானே எழும்பி, கன நேரத்தில் அவர்கள் வீட்டு வாசலில் விழுந்து சிதறியது. ஒன்றல்ல..இரண்டல்ல.. குறிப்பிட்ட நிமிடத்திற்கு ஒருமுறை இப்படி தாமாகவே பறந்து வந்து விழுவதை கண்டார்கள். இதை பற்றி சொன்னவுடன் வீட்டில் எல்லோர்க்கும் பயம் அதிகமானது.

இரவு பொழுதெல்லாம் கூரையின் மீது கற்கள் விழும் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. அது மட்டுமல்லாமல் தெருநாய்கள் அவர்கள் வீட்டையே நோக்கி குரைப்பது போல எண்ணினார்கள்.

குழந்தை விஜய் இராகு காலத்தில் பிறந்துள்ளதால், அது வேறு எல்லோருக்கும் சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது . இது எதாவது பேய் பிசாசு வேலையா, அல்லது பிள்ளை பிறந்த நேரம் சரியில்லையா, என்னவென்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. வீட்டின் பின்புறத்தில் ஆந்தை அலறும் சத்தம் கொஞ்சம் அதிகமாக கேட்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

அவர்கள் வீட்டருகே உள்ள பள்ளிகூட திடலில் நடக்கும் சுவிசேஷ கூட்டத்தில் பார்வதி கலந்து கொண்டு, பாதிரியார் ஆசிர்வதித்த நீரை கொண்டு வந்து வீட்டில் தெளித்தாள். ரெங்கநாதருக்கு துளசிமாலை சாத்துவதாக வேண்டிக்கொண்டாள். 
 
அந்த பொன்மலைபட்டி ரயில்வே குவாட்டர்ஸ் முழுவதும், கல் விழும் சேதி காட்டுத் தீயன பரவியது. அந்த ஏரியா போஸ்ட் மேன் வந்து, "என்னக்கா, உங்க வீட்ல கல்லு விழுதாமே, அப்படியா????" என்று கேட்கும் அளவுக்கு பிரபலம் ஆகிவிட்டது.

நாளுக்கு நாள் எல்லோருக்கும் பயம் அதிகமாகி கொண்டிருந்தது. பார்வதிக்கு இருப்பு கொள்ளவில்லை. இது இப்படியே போனால் சரிவராது என முடிவு செய்து, வள்ளிக்கும், குழந்தைக்கும் பக்கத்தில் இருக்கும் நதிர்-ஷா தர்காவில் மந்திரித்து பாத்தியா ஓதிவிட்டு, அப்படியே வீட்டில் எல்லோருக்கும் மந்திரித்த தாயத்து வாங்கி வந்து கட்டிக்க சொன்னாள். எந்த சாமியானாலும் பரவாயில்லை, பிரச்னை சரியானால் தேவலை என்ற எண்ணமே அவள் மனதில் மேலோங்கி இருந்தது.

கல் விழுந்த கோமதி வீட்டிலும் தர்காவில் மந்திரித்த தாயத்து வாங்கி கட்டி கொண்டதாக கேள்விப்பட்டனர். 

இரண்டு மூன்று வாரங்கள் சென்றது. நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. கற்கள் விழுவது படிப்படியாக குறைவது போல தெரிந்தது. பார்வதி வீட்டில் பயம் லேசாக நீங்க தொடங்கியது.

ஓரிரு நாட்கள் கழித்து, கடைத்தெருவுக்கு போய் வரும் போது, பக்கத்துக்கு வீடு காலியாக இருப்பதை கண்டாள். கோமதி வீட்டில் இரவோடு இரவாக காலி செய்து விட்டு போய் விட்டனர்.

வரும் வழியில் சாந்தியை பார்த்தாள் பார்வதி . சாந்திக்கு கோமதியின் வீட்டில் நல்ல பழக்கம். சாந்தியிடம் விசாரித்ததில், "கோமதியின் கணவருக்கு, அவர் தம்பியே சூன்யம் வச்சிட்டார் போல....அதான் கல் விழுந்திருக்கிறது. கோமதியின் கணவர் கிருத்திகை நட்சத்திரமாம். அந்த நட்சத்திரத்திற்கு பக்கத்து  நட்சத்திரத்தில் உள்ளவர்களையும் அது பாதிக்குமாம்..  உங்க பேரன் தான் ரோகிணி நட்சத்திரமாச்சே....  அதான்  உங்க வீட்லயும் கல் விழுந்திருக்கு... அவங்க கோவில்ல, தர்காவில போய் ஏதோ பூஜை, மந்திரம்மெல்லாம் பண்ணிட்டு இப்போ ஊரை விட்டே போய்ட்டாங்க..."  என்று கூறி முடித்தாள்.

மனதிலே பாரம் சற்று இறங்கியவளாய் நெல்லுகடையாளையும், மற்ற தெய்வங்களையும் வேண்டிவிட்டு,  நிம்மதியுடன் வீட்டுக்கு சென்றாள் பார்வதி.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


சனி, 15 மார்ச், 2014

கொஞ்சம் சிரிங்க பாஸ்....

வணக்கம்,

இப்பதிவு முழுக்க முழுக்க உங்களை சிரிக்க வைக்க மட்டுமே. இணையத்திலும், முகநூலிலும் அலசி உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இந்த துணுக்குகளை ஏற்கனவே எங்கோ படித்த மாதிரி தெரிந்தாலும், மீண்டும் ஒரு முறை படித்து, கொஞ்ச நேரம் சிரித்து மனதை லேசாக்குங்கள்....


சிரிப்பு 1:

அமெரிக்காவில் திருடர்களை கண்டுபிடிக்க ஒரு மெஷின் கண்டு பிடிச்சிருக்காங்க...

அந்த மெஷின் இங்கிலாந்து ல 30 நிமிஷத்துல 70 திருடர்களை  கண்டுபிடிச்சிருக்கு!

ஸ்பெயின் நாட்டுல 30 நிமிஷத்துல 150 திருடர்களை கண்டுபிடிச்சிருக்கு !

இந்தியாவில 15 நிமிஷத்துல
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அந்த மெஷினையே காணோம் !

:-) :-)
----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 2:

மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:

பாலு : டேய் ! இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.

வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை; வெளியே சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.

பாலு : அப்படியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை; ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்..

*
*
*

சோமு: போச்சு! போச்சு !! நாம தப்பிக்கவே முடியாது

பாலு & வேலு:
ஏன்!!!!!!

சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்...வெளிய சுவரே இல்ல.. நாம ஏறி குதிக்கவும் முடியாது.... சுவர ஓட்ட போட்டும் தப்பிக்க முடியாது....

பாலு: சரி விடுடா .....முதல்ல அவங்க சுவர கட்டட்டும்... நாம அப்புறமா தப்பிச்சு போலாம்.!!!??...

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 3:

கிளைடர் ப்ளைட் கிளப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு, பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.

"வாங்க சார்..! வாங்க !! பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க!  விமானம்
திடீர்னு விபத்துல சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் சார்….!"

ஒரு பயணி நின்றார்.

"பாராசூட் என்ன விலை?"

"இரண்டாயிரம் ரூபாய் சார்.."

"சரி…வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து
குதிக்கும்போது அது ஒரு வேளை விரியலைன்னா ….?"

”பணம் வாபஸ் ஸார்...”

"............?!?!?!........"

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 4:

குட்டி பையன் தீபக் : என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?

ஆசிரியை : ஆமாம்...

குட்டி பையன் தீபக் : அப்படின்னா, என் அம்மா அப்பாவை வரச்சொல்லி உங்கள் வீட்டில் பேசச் சொல்லட்டுமா?

ஆசிரியை : டேய் முட்டாள்... அஞ்சாம் கிளாஸ் படிக்கும் போதே இப்படியா?? உன் மனசுல என்ன நினைச்சிகிட்டிருக்க?

குட்டி பையன் தீபக் : ஹேய்யா.... நான் டியூசனுக்கு வர்றதைப் பற்றி சொன்னேன்.

கிறுக்கு பயபுள்ள எப்ப பார்த்தாலும் நம்மளயே நினைச்சிகிட்டு இருக்கா!

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 5:

இரவு தூங்கும் முன் ஒரு தந்தை - மகள் உரையாடல் ...

"ஏன் அப்பா கொசு ராத்திரில மட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?"

"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."

"கொசுக்கு வீடு எங்கேப்பா?"

"அதுக்கு வீடே இல்லை..."

"ஏம்பா வீடே இல்லை?"

"அது ரொம்பச் சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."

நான் ரொம்ப சின்னப் பிள்ளைதானே... எனக்கு வீடு இருக்கே."

"இது அப்பா உனக்கு கட்டித் தந்தது."

"அப்போ கொசுவுக்கு அப்பா, அம்மா இல்லையா அப்பா?"

"அந்த அப்பா, அம்மா கொசுவும் ரொம்பச் சின்னதா இருக்கும்ல. அதான் அதுக்கு வீடு இல்ல.."

"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வெச்சது?"

"கடவுள்."

"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா?"

"கடிக்காது."

"ஏம்பா கடிக்காது?"

"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்."

"கடவுள் நல்லவராப்பா?"

"ரொம்ப நல்லவர்."

"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"

"அது அப்படித்தான். நீ தூங்கு."

"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"

"அதுக்குப் பசிக்குது. வாயை மூடிட்டுத் தூங்குடா செல்லம்."

"ஒரே ஒரு கேள்விப்பா? "

"கேட்டுத் தொலை..."

"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"

"அதுக்குப் பல்லே இல்லை..."

"பிறகு எப்படிக் கடிக்கும்?"

"அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாயை மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்."

"பேயைக் கொசு கடிக்குமாப்பா?"

'இப்ப நீ வாயை மூடிட்டுத் தூங்கப்போறியா இல்லையா?"

"நாம தூங்கும்போது வாயும் தூங்குமாப்பா..?"

"..............?!?!?!?!?!?!............."


----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 6:

இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ????

கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக

வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சனை?”

“அடுப்படியில பிரச்சனை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்...”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”

இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.

“வேற எதுக்காக அவர் விவாகரத்து கேட்கிறார் ???” என்று அலறி விட்டு இருமினார்.

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 7:

"ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?"

"எப்போ?"

"ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி..."

"ஓ, அதுவா சார் என் வீட்டுகாரர் தான் கூப்பிட்டார், இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கார்?"

"யாரு பேசுறதுன்னு தெரியலயே?"

"நான் அவரோட மனைவி.. என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனா என் ஹஸ்பன்ட்டுக்கு தான் சார் உங்களைத் தெரியும்."

"இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பேர் என்ன?"

"ஃபோன் என் மாமனார் பேர்ல தான் இருக்கு. ஆனா ஃபோன் பண்ணினது என் ஹஸ்பன்ட்"
"சரி என்ன விஷயமா ஃபோன் பண்ணினார்"

"அதை சொல்லத்தான் உங்கள பார்க்க வந்துட்டு இருக்கார்.."

"சரி எங்கே வர்றாரு?"

"ஆமா எங்க வீட்லேர்ந்து தான் வர்றாரு"

"ரொம்ப சந்தோஷம் இதுக்கு மேல என்னால முடியாது ..ஃபோனை வெச்சிடறேன் ..அவர் வரட்டும் பார்த்துக்கறேன்..."

ரூம்லேர்ந்து அவர் "ஏண்டி, யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தே?"

"தெரியாம ஒரு ராங்க் கால் பண்ணிட்டேன்...அந்த நம்பர்லேர்ந்து தான்
ஒருத்தர் கூப்பிட்டாரு..  ச்சும்ம்மா பேசிட்டு இருந்தேன் மாமா ......"

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 8:

"என்ன பாலாஜி ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??"

"அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "

"உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "

"கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி...  "

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 9:

ரொம்ப நாள் கழிச்சி உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்... வெறும் டீ மட்டும் தானா மச்சி ??

வேற என்ன வேணும் ???

கடிச்சிக்க ஏதாவது ??

நாய் இருக்கு..அவுத்து விடவா??

??????
 
----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 10:

தீபக் ஒரு நேர்முக தேர்வுக்காக அலுவலகம் செல்கிறான். எப்படியாவது இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்பது அவன் எண்ணம். அலுவலக தேர்வு அறையில்...

மேலாளர்: நான் கேக்குற கேள்விக்கெல்லாம் எதிர்மறையான பதிலை சொல்லணும்..

தீபக்: சரி சார்.. முயற்சி பண்றேன்..

மேலாளர்:  இரவு?

தீபக்:பகல்...

மேலாளர்: புதுமை?

தீபக்:
பழமை..

மேலாளர்:
வறுமை?

தீபக்:
செழுமை..

மேலாளர்:  
வெரி குட்... கரெக்டா சொல்றியே !

தீபக்:
வெரி பேட்...தப்பா சொல்றியே...
 
மேலாளர்:  
ஆங்... ம்ம்ம்...  ஆக்கல்?

தீபக்: 
அழித்தல்...

மேலாளர்:
அழகு?

தீபக்:
ஆபத்து..

மேலாளர்:
தப்பு..

தீபக்:
சரி....

மேலாளர்:
இல்ல தம்பி..நீங்க சொல்றது தப்பு..

தீபக்:
ஆமா அண்ணே ! நான் சொல்றது சரி..
 
மேலாளர்:
ப்ச்.... நீங்க கிளம்பலாம்..

தீபக்:
நீங்க இருக்கலாம்...

மேலாளர்:
போதும்..வெளியே போப்பா !!! 

தீபக்: 
வேணும்..உள்ளே வாப்பா !!!

மேலாளர்:
நிறுத்துடா ...

தீபக்: 
ஆரம்பிடா..

மேலாளர்:
ஐயோ கடவுளே !!! என்ன காப்பாத்து !!

தீபக்:
ஆஹா பிசாசே!! இவனை கொல்லு ...

மேலாளர்:
யு ஆர் ரிஜக்டட் ...

தீபக்:
ஐ ஆம்  செலக்டட் !

மேலாளர்:
?!?!?!..போதும் நீ செலக்டட் தான்.. ஆர்டர் வீடு தேடி வரும்..இப்போ நீ போப்பா..

தீபக்:
ரொம்ப தேங்க்ஸ் சார்.. :-)

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 11:

ஒரு சர்தாஜி ஜோக்...

நியூயார்க்கில் மாநகரில், ஒரு சர்தார்ஜியும் , அமெரிக்கரும் சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர்.

அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.

அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து சர்தார்ஜியிடம் காட்டி,
"நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?" என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல், "உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா?" என்று சவால் வேறு விட்டார் சர்தார்ஜியிடம்.

விடுவாரா நம்ம சர்தார்ஜி... "உள்ள வா... உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு",  சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.

விற்பனை கவுன்டரில் இருந்தவரிடம் சென்ற சர்தார்ஜி, அவனிடம் கேட்டார், ஒரு மேகிக் காட்டுறேன் பார்க்கிறியா?..

கடைக்காரரும் சரியென்று தலையாட்ட, கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார். பிறகு 3 வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த கடைக்காரரை  ஏறிட்டுப் பார்த்தார்.

கவுன்டரில் இருந்தவர், " எல்லாம் சரி. இதில் மேஜிக் எங்கே இருக்கிறது?."
சர்தார்ஜி அமைதியாக பதில் அளித்தார், " என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு... நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்...'

#சப்பாத்தி சாப்பிட்டாலும் நம்ம ஆளு மூளைக்காரந்தாண்டா...

----------------------------------------------------------------------------------------------------------

 சிரிப்பு 12:

"இருட்டு நகரம்" என்று அழைக்கப்பட்ட நகரத்தில் அந்த லைப்ரரி இருக்கிறது.

அந்த லைப்ரரியில் இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன.

அதில், இரண்டாவது புத்தகத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே உண்டு.

அந்தப் பக்கம் இரண்டு Column களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு Columnல் ஆப்பிரிக்க யானையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது.

இன்னொரு Columnல் Fluffy வகை பூனைகளின் படம் அச்சிடப் பட்டிருக்கிறது.

இதிலிருந்து என்னத் தெரிகிறது?

.
.
.
.
..
.
.
.
யானைக்கு ஒரு COLUMN வந்தால், பூனைக்கு ஒரு COLUMN வரும்.

 ----------------------------------------------------------------------------------------------------------
 
 கொஞ்சம் இன்டர்நெட் ஜோக்ஸ் ....








நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 8 மார்ச், 2014

உங்க வீட்ல பெண்களே இல்லையா ???

வணக்கம்,

இன்று பெண்கள் தினமாம். எல்லோரையும் போல நானும் பேருக்கு ஃபேஸ்புக்கில் "மகளிர் தின வாழ்த்துக்கள்" என  ஸ்டேடஸ் போட்டுவிட்டேன். என்னதான் பெண்களைப் படிக்க வைத்தாலும், "இதுங்க எல்லாம் வேலைக்குப் போய் என்ன பண்ண போகுதுங்க?" என்று பெற்றோர் சிலரும் , "மாலை ஆறு மணிக்கு மேல் பெண்கள் ஏன் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள் ? " என்று ஒரு மாநில முதல்வரே கேட்கும் சமூக லட்சணத்தில் தான் இப்போது நாம் வாழ்கின்றோம்.

இன்று காலை என் வீட்டில்,

"அம்மா! இன்னக்கி மகளிர் தினமாம். உனக்காக நான் என்ன செய்யணும் ? " - என்று கேட்டேன்.

"நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்பா... கடைக்குப் போய் அரை லிட்டர் பாலும், ரெண்டு சிப்ஸ் பாக்கேட்டும் வாங்கி வா.. அது போதும்.. "

"ம்ம்ம் ..போம்மா..அப்புறம் போறேன்... "

எனக் கூறிவிட்டு மீண்டும் என் வேலையைத் தொடந்தேன். மேற்கூறிய உரையாடல் போல உங்கள் வீட்டிலும், கணவன்-மனைவி ,
சகோதரி-சகோதரன், தாய்-மகன்களுக்கிடையே கண்டிப்பாக இது போன்று நடந்திருக்கக் கூடும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பெரும்பாலும் இவர்களைப் போலவர்கள் தான் (என்னையும் சேர்த்து) வீட்டில் இருக்கும் பெண்களைச் சட்டை கூடச் செய்யாமல், மகளிர் தின வாழ்த்து ஸ்டேடஸ் போடுகின்றனர்.

இன்று பலரும் பெண்கள் தின வாழ்த்து செய்தியுடன், சாதனை பெண்மணிகளின் புகைப்படத்தையும், அவர்களின் சாதனைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ஏன், இவர்கள் வீட்டிலெல்லாம்  பெண்களே இல்லையா??? இவர்கள் வீட்டில் அம்மா, மனைவி , சகோதரிகளேல்லாம் பொது வாழ்வில் சாதனை புரிந்தவர்கள் இல்லையென்றாலும், நம் கண் முன் கஷ்டப்பட்டு, படிக்க வைத்து, அரவணைத்து, அன்பு காட்டியவர்கள் அனைவரும் சாதனை பெண்கள் தானே ! பொது வாழ்வில் சாதனை செய்தவர்களைப் பார்த்து பெருமைப்பட வேண்டாம் எனச் சொல்லவில்லை. முதலில் நம் வீட்டுப் பெண்களுக்கு மரியாதை தருவோம் ; ஆதரிப்போம். பிறகு மற்றவரை பாராட்டல்லாம்...
 
womens_day_celebration_rangoli
பெண்கள் தினம் - மகிழ்ச்சியான பெண்கள் (அம்மா போட்ட கோலம்)
என்னைப் பொறுத்தவரை கல்பனா சாவ்லா, கிரண் பேடி, பெப்சி இந்திரா நூயி, பி.டி.உஷா, சாய்னா நேஹ்வால்,  நாட்டின் இன்ன பிற அரசியல் தலைவிகள் யாவரும் சாதனை பெண்மணிகள் தான் !!! வாழ்வில் பல போராட்டங்களைச் சந்தித்து வென்றவர்கள் தான். ஆனால் இவர்களை எல்லாம் விட, என் கண்ணுக்குச் சாதனை பெண்களாகத் தெரிவது எங்கள் வீட்டுப் பெண்மணிகள் தான்! எனது அன்னையும், பாட்டியும், அக்கா, தங்கையரும் மற்றும் பெண் நண்பர்களும் தான் எனக்குச் சாதனை பெண்டீராகத் தெரிகின்றனர்.

இது போன்ற தினங்களெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் நாம் கொண்டாடுவதில்லை. இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், சன் தொலைக்காட்சிகளில், தீபாவளி, பொங்கலன்று போடுவது போல "அன்னையர் தின சிறப்புத் திரைப்படம்", "மகளிர் தின சிறப்புத் திரைப்படம் " என்று ஆரம்பித்தலால், அதிலிருந்து இத்தினங்கள் மறுக்க முடியாத விழாவாகி விட்டது.

நம் நாட்டைத் தாய் நாடு என்று சொல்லுகிறோம்; பேசும் மொழியைத் தாய் மொழி என்று கூறுகிறோம் ; நதிகளைப் பெண்களின் பெயரால் அழைக்கிறோம்; இயற்கையை அன்னை என்று சொல்கிறோம்; தமக்கைகளுக்காக ரக்ஷா பந்தன் கொண்டாடுகிறோம்;ஆவதும் பெண்ணாலே ! அழிவதும் பெண்ணாலே என்று பாடுகிறோம்; பெண் பாதுகாப்புக்கு பல சட்ட திருத்தங்களைக் கொண்டு வருகிறோம்;இவை அனைத்தும் இருந்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும், கொடுமைகளும் இன்னும் நம் நாட்டில் நடந்தேறிகொண்டு தான் இருக்கிறது. அக்கொடுமைகளை முழுமையாகச் சரி செய்ய முடியவில்லை என்றாலும், நிலைமையை ஓரளவு சீர் செய்துவிட்டு நாம் மகளிர் தினத்தை கொண்டாடுவோம்.

அனைவரும் பெண்மையைப் போற்றுவோம் ! பெண்ணித்தை காப்போம் !!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்