students cousencelling லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
students cousencelling லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 அக்டோபர், 2013

சமூக குற்றவாளிகள் !!!

வணக்கம்,

சென்ற வாரத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய ஒரு துயர் செய்தி, தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் மூவர் தலைமை ஆசிரியரை வெட்டி கொன்றதுதான். இப்போதெல்லாம் இதுபோன்ற செய்திகள்தான், செய்தித்தாள்களையும் மற்ற செய்தி ஊடகங்களையும் அலங்கரிக்கின்றன.

சமீப காலமாக நம் நாட்டில் சிறார் மற்றும் இளம் குற்றவாளிகள் அதிகமாகியுள்ளார்கள். இது போன்ற குற்றங்களுக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்று அலசினால், அனைத்து  குற்றங்களுக்கும் சமூகமே முக்கிய காரணமாக விளங்குகிறது.

மேலோட்டமாக பார்த்தால் தவறு மாணவர்களின் / பிள்ளைகளின் மீது தான் இருக்க கூடும்  என்ற முடிவுக்கு வருவோம். ஆனால் நடக்கிற / நடக்கின்ற குற்றங்களை உன்னிப்பாக கவனித்து பார்த்தால், அதில் சமூக பிரச்சனை ஒன்று கண்டிப்பாக இருக்கும். இந்த சமூகமே ஒரு குற்றவாளியாக இருப்பது நமக்கு விளங்கும். சமூதாயம் என்பது வேறு யாரோ அல்ல. நான், நீங்கள், நம்மை சுற்றி உள்ளவர்கள்தான். நான் பார்த்து , படித்து தெரிந்து கொண்ட சில சம்பவங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

பள்ளி செல்லும் சிறுவர்கள் / கல்லூரி மாணவர்கள் ஆசிரியரை குத்தி கொல்வது, படிக்கிற வயதில் மது அருந்துதல், மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்து கொள்ளுதல், வீட்டை விட்டு ஓடுதல் என தினமும் நாம் செய்திகளில் படித்து கொண்டு தான் இருக்கிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வடபழனியில், ஒரு தனியார் பள்ளியில், பெண் ஆசிரியையை பள்ளி வளாகத்தில், பாத்ரூமில் கழுத்து நெரிக்கப்பட்டு மயக்க நிலையில் கிடந்தார். ஆசிரியை போடப்பட்ட நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. போலீசார் விசாரித்ததில் அதே பள்ளியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி தான் காரணம் என்றவுடன் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆசிரியையிடம் நகைகளை பிடுங்கும் போது அந்த மாணவி சொன்னது,"எங்க அக்கா நகை இல்லாமல் வாழாவெட்டியா இருக்கா? உனக்கு ஏதுக்குடி நகை? "என அடித்து பிடுங்கி இருக்கிறாள்.

இந்த செய்தி மாநகர் முழுவது பரவி, செய்தி ஊடகங்களுக்கு நல்ல விருந்தானது. ஒன்பதாம் வகுப்பு மாணவி கொள்ளைக்காரியாக மாறியது மாற்றியது, அவளது அக்காவை வாழாவெட்டியாக அனுப்பியவர்கள் தான்.


ஒரு பத்து வயது பள்ளி மாணவனை, ஒரு ஆசிரியர்  " நீ மட்டும் இந்த தடவை பாஸ் ஆகலைனா, உன் தோலை உரிச்சி தொங்க விட்டுருவேன்.. ஒரு நாள் முழுக்க கிரௌண்ட் -ல முட்டி போடணும்... " இப்படி மிரட்டினால், கண்டிப்பாக அந்த மாணவன், பயத்தினால் பரீட்சை பேப்பர் கொடுக்கும் நாளன்று வீட்டை விட்டு ஓடி தான் போவான். ஏனென்றால் அந்த பத்து வயது பையனுக்கு வீட்டை விட்டு ஓடுவது என்றால் என்ன என்று தெரியாது. அதன் பிறகு நாம் என்ன செய்வோம் என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். இதில் தப்பு வாத்தியாருடையதே! 

இது போன்ற ஒரு காரணமாகதான் தூத்துக்குடி கொலையும் இருக்கும் (என் அனுமானம் தான் .) அதனால் மாணவர்கள் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை. அவர்கள் செய்தது ஒரு அதிர்ச்சிகரமான, அபாயகரமான செயல்தான். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனாலும் அந்த கொலைக்கு தூண்டுதலாக, பின்னணியில்  மேலே சொன்னது போல ஏதேனும் ஒரு சமூக பிரச்சனை காரணமாக இருக்கலாம்.

பள்ளி / கல்லூரி மாணவர்கள் மது அருந்துகிறார்கள் / புகைபிடிகிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறார்கள். தப்பு தான். தெருவுக்கு தெரு மது கடைகளும், பெட்டி கடையில் புகை, பாக்கு போன்ற போதை வஸ்துகளும்  இருக்கும் போது, அதுவும் மதுக்கடையை அரசே ஏற்று நடத்தும் போது அவர்கள் எப்படி குடிக்காமல், புகைக்காமல் இருப்பார்கள் ? பார்க்கும் முக்கால்வாசி திரைப்படங்களில் குடியையும், புகையையும் காட்டும் போது பதின்பருவ வயது கெட்டு போகதான் சொல்லும்.

வசதி படைத்த பெற்றோர் சிலர், தங்கள் பிள்ளைகளுக்கு பாக்கெட் மணியாக அதிகம் பணம் கொடுக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொள்ளட்டும் என்று படிக்கிற பசங்களுக்கு சில நூறு ரூபாய்களை  கொடுப்பது, பிள்ளைகள் வாழ்க்கையை பெற்றோர்களே கெடுப்பது போல தான்.

அதே போல ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு எதற்கு செல்போன்? அதுவும் பத்தாயிரம், பதினைந்தாயிரத்தில்.. காசு இருக்கிறதே என பிள்ளைகளுக்கு செலவு செய்வது தவறில்லை. ஆனால் படிக்கிற வயதில் இது தேவையா?? என்று  தான் நாம் பார்க்க வேண்டும். அளவுக்கு மிஞ்சி இருந்தால், அவர்கள் ஒரு நிலைக்கு மேல் தவறான வழிக்குதான் போவார்கள்.

இன்னொரு கூத்து இது. பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை தனியார் பள்ளிகளும், பெற்றோர்களும் கசக்கி, பிழிந்து அவர்களை தேர்வில் அதிக மதிப்பெண் பெற பாடாய் படுத்துகிறார்கள். அவர்களும் படித்துவிட்டு நல்ல மதிப்பெண் வரவில்லை என்றாலோ, தேர்வில் தோல்வி அடைந்தாலோ தற்கொலை முயற்சி போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை பற்றி ஏற்கனவே தன்னம்பிக்கையையும், தைரியமும் தான் தேவை   என்ற பதிவில் எழுதியிருந்தேன்.

இவர்கள் மட்டுமல்ல. இவர்களை போல வளரும் பதின்பருவ வயதுடைய பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல நட்பும், தன்னம்பிக்கை வளர்த்தல், கலந்தாய்வு தான் அவசியம் தேவை.

கலந்தாய்வுக்கு மருத்துவரை தான் பார்க்க வேண்டும் என்றில்லை. பெற்றோரோ அல்லது ஆசிரியரோ அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். நண்பர்களை போல நடத்த வேண்டும். அந்த வயதில் கிடைக்க வேண்டிய நட்பு, பாசம், ஏக்கம், மகிழ்ச்சி கிடைக்காவிடில் அவர்கள் தவறான பாதையில் தான் தள்ளபடுவார்கள். 

பெற்றவரும், மற்றவரும் பதின்பருவ மாணவர்களுக்கு அறிவுரைகளை வாரி வாரி வழங்குவார்கள். அதெல்லாம் அவர்கள் காதில் ஏறாது. குழந்தை பருவத்தில், அவர்கள் ஏன் அழுகிறார்கள், ஏன் அடம் பிடிக்கிறார்கள் என பெற்றோர்கள் தெரிந்து கொண்டு விடுவார்கள். ஆனால், இந்த இரண்டும்கெட்டான் வயது பிள்ளைகளிடம் ஏற்படும்  மாற்றங்களை அவர்கள் சொன்னாலோழிய யாரும் கண்டுபிடிக்க முடியாது.

பதினொன்று முதல் பத்தொன்பது வயது வரை பதின்பருவ வயதில் பள்ளியிலும், கல்லூரியிலும் மாணவர்களுக்கு ஏட்டு கல்வி மட்டுமே போதித்தல் போதாது. அவர்களை திட்டியோ, மிரட்டியோ,அல்லது அடித்து  பணிய வைப்பது அவர்கள மேலும் காயப்படுத்தும். "அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்"; "அடிபடாத மாடு படியாது"; "பிள்ளைகளை அடித்து வளர்த்தல் தான் நல்வழி படுத்த முடியும்" என்று பழமொழிகள் இருந்தாலும், அதை நானும் ஒத்து கொள்கிறேன். பிள்ளைகளை திருத்த கொஞ்சம் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம் தான். கண்டிப்பு ஓரளவு தான் இருக்க வேண்டும். மீறினால் ஆபத்து தான். அவர்களை நல்வழிபடுத்த அவ்வபோது உளவியல் கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்களுக்கு ஒரு நல்ல கலந்தாய்வும், பெற்றோர்-பிள்ளைகளின் ஆரோக்கியமான உரையாடல்களும், பிள்ளைகளை மனதளவில் புரிதல் மட்டுமே ஒரு நல்ல எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 14 ஜூலை, 2013

ஏட்டில்லாத விதிகள் !!!

வணக்கம்,

இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர், முகநூலில் (பேஸ்புக்கில்) தற்போது கல்லூரிகளால் கட்டாயமாக்கப்படும் ஒரு புதிய வழக்கத்தை பற்றி பகிர்ந்திருந்தார். கல்லூரிகளில் மாணவ/மாணவியர் எதிர் பாலினத்தவரோடு பேச / பழக கூடாது என்பதுதான். இதைப்பற்றியே பதிவு போடலாமே என எண்ணி இங்கு பகிர்கிறேன்.

ஒரு மாணவனோ /மாணவியோ ஒரு கல்லூரியில் சேரும் போது, அவர்களுக்கு போடப்படும் முதல் விதி, ஆண்/ பெண் இருவரும் எக்காரணதிற் கொண்டும் பேசி கொள்ள கூடாது. பள்ளி, கல்லூரிகளில் தான் மாணவர்கள் நல்ல ஒழுக்கத்தையும், ஆண்/ பெண் நட்பையும், கருத்துரையாடல் திறமையும் வளர்த்து கொள்ள முடியும். ஆனால் இப்போது கல்லூரிகள் மாணவியர் எந்த ஒரு சக மாணவரோடும், மாணவர் சக மாணவியோடும் பேச கூடாது என்ற 'உயர்ந்த சமூக கொள்கையை' (?!?!?) கடைப்பிடித்து வருகிறது . இதை பற்றி பல சமூக ஆர்வலர்களும், மனிதவள மேம்பாட்டு துறையினரும் எதிர்ப்பு குரல் கொடுத்து கொண்டிருந்தாலும், கல்லூரிகள் அவர்கள் நினைத்ததை நடத்தி கொண்டு தான் இருக்கின்றனர். இவை பெரும்பாலும் தொழில்முறை கல்லூரிகளில் தான், இந்த ஏட்டில்லா சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. ஒரு சில பள்ளிகளிலும் இது அமலில் இருப்பது  வருந்ததக்கது.


ஒரு சில கல்லூரிகளில், இவ்விதியை உணவகங்களிலும் (Canteen) மற்றும் பேருந்துகளிலும் செயல்படுத்துகின்றனர்.  சில கல்லூரி பேருந்துகளில் வலது மற்றும் இடது  (முன்/பின்) என தனியாக கயிறுகள் அல்லது க்ரில்கள் மூலம் பிரித்து மாணவ / மாணவிகளை உட்கார செய்வர். சில நேரங்களில் ஓட்டுனர்கள் ஒற்றர்களாகவும் இருப்பர். ஆண்/பெண் பேசுவதை பழகுவதை கண்டுபிடித்து தண்டிக்கவே ஒரு தனிப்படையே (அவர்கள் தான் SQUAD !)  செயல்படும். சாதாரணமாக படிப்பு பற்றி பேசினாலே, என்ன ஏது  என விசாரித்தும், ஐ.டி கார்டை பிடுங்கி கொண்டும் அபராதம் கட்ட சொல்வார்கள். சில நேரங்களில் "ஆபிஸ் -ரூம்  ட்ரீட்மென்ட்களும்" நடைபெறும். (நான் படித்த கல்லூரியிலும் இதே நிலை தான் !!!)
 
படிக்கிற வயதில் மாணவர்கள் தவறான வழியில் போக கூடாது  என்பதற்காக கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் இத்தகைய கண்டிப்பு மாணவர்களில் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடும்.

இன்றைய நவீன உலகில், பல பழமைவாத விஷயங்களை தகர்த்து வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறோம். ஆனாலும் சில பொறியியல் கல்லூரிகளில் ஒழுக்கம் என்ற பெயரில் (மாணவ/மாணவியர்) பெண்களுடன் ஆண்களும், ஆண்களுடன் பெண்களும் பேச கூடாது என்ற விதியை போட்டுள்ளனர். காரணம் என்னவென்று கேட்டால், இதனால் தனி மனித ஒழுக்கம் மேம்படும் என்றும், கல்லூரி காதல் போன்ற கசமுசாக்களுக்கு முடிவு கட்டும் என்றும் சொல்லி பெருமைப்படுகின்றனர்.

இத்தகைய 'பலத்த சட்டங்கள் ' மூலம் பெற்றோர்கள் புன்முறுவல் பூக்கின்றனர் என்பதாலும், அவர்தம் பிள்ளைகள் தவறான வழிக்கு போகமாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும், இவை இன்னும் நடைமுறையிலேயே இருக்கிறது. ஆனால் இதன் மூலம் இளைய சமூகத்தினரிடம், சமூக திறன்கள் குறைந்து வருகின்றது என்பதே நிதர்சன உண்மை. 

இன்றைய 'கார்ப்பரேட்' உலகத்தில், அலுவலகங்களில் உடன் வேலை செய்யும்  எதிர் பாலினத்தவரோடு பேசி, பழகி வேலை செய்யும் நிலையில் தானுள்ளது. இதில் சில ஆண்கள் / பெண்கள்  எதிர் பாலினத்தவரோடு சகஜமாக பேச முடிவதில்லை. இந்த பிரச்சனை எல்லாருக்கும் ஏற்படுவது இல்லை. ஆனால் பலர், கல்லூரிகளில் போடப்பட்டுள்ள இத்தகைய விதியினால் அலுவலகங்களில் பாதிக்கபடுகின்றனர். உளவியலாளர்கள் இது தொழில்முறை மற்றும் சமூக திறன்ககளை பாதிக்கிறது என கூறுகின்றனர். மனிதவள மேலாளர்களும், பொறியியல் கல்லூரியில்  நன்றாக படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து, அலுவலகங்களில் சேரும்  போது, மற்றவரிடம் பேச/பழக கூச்சபடுகின்றனர். இதனால் அவர்களுடைய தொழில்முறை வாழ்க்கை பெரிதும் பாதிக்கபடுகிறது.

இன்னும் சிலரோ,மாணவர்கள் பள்ளியிலும்,கல்லூரியிலும் எதிர் பாலினத்தவரோடு பேசாமல் இருந்து விட்டு, அலுவலகங்களில் சேரும் போது இரு பாலினத்தவரும் 'காய்ந்த மாடு கம்பில் பாய்வது போல'  பேசி, பழகி, இணைந்து காதலா அல்லது வெறும் ஈர்ப்பா எனத் தெரியாமல் தடுமாறுகின்றனர். பெண்கள் பள்ளியில்/கல்லூரியில் படித்த பெரும்பாலான (எல்லோரும் அல்ல !) பெண்களுக்கு ஆண் நண்பர்கள் (பாய் பிரண்டு ) இருப்பதற்கும் காரணம் இதுதான்.

எதிர் பாலினத்தவரோடு நல்ல ஆரோக்கியமான உறவு இல்லாத போது, அவர்களிடம் பேசும் போது குற்ற உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்கு அடித்தளம் இல்லை என பலரும் தெரிவிக்கின்றனர். இது எப்போது கல்வியாளர்களுக்கு புரியுமோ என்பது தான் தெரியவில்லை.  

நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

புதன், 15 மே, 2013

தன்னம்பிக்கையையும், தைரியமும் தான் தேவை !

வணக்கம்,

எல்லா வருடமும் மே மாதத்தில் வரும் முக்கியமான செய்திகளில் ஒன்று, பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தான். கடந்த வாரத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல இந்த வருடமும், மாணவிகளே அதிகமாக தேர்ச்சி  பெற்றுள்ளனர். ஆனாலும் இம்முறை ஜெய சூர்யா என்ற மாணவர் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். அதே போல தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மறு நாள் செய்திதாள்களில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சிப்பட்டியலைப் பற்றி  போட்டிருந்தனர். அதை படித்து கொண்டிருக்கும் போதே என் கண்ணில் பட்ட ஒரு செய்தித் தலைப்பு, "மாணவி தற்கொலை!"

செய்தியை  விரிவாக வாசித்தப் பின் எனக்கு பகீரென்றது. அந்த மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொள்ளவில்லை. பொதுத் தேர்வில் 1200 -க்கு 1000 த்துக்கும் மேல் மதிப்பெண் வாங்கியுள்ளாள். மருத்துவ படிப்புக்கு அந்த மதிப்பெண் போதாது என்பதால் அவளது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். அதே போல இன்னொரு மாணவனும் 900 த்துக்கும் மேல் மதிப்பெண் வாங்கியும், பொறியியல் படிப்பில் சேர மதிப்பெண் போதாது என்பதால் தற்கொலை செய்துள்ளான்.

தேர்வில் தோல்வி அடைந்தாலே தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனம் என்று சொல்லும் போது,  இவர்கள் ஏன் இப்படி செய்தார்கள்  என எனக்கு தெரியவில்லை.


இந்த தவறுகளுக்கு எல்லாம் காரணம்  என்ன என்று யோசித்து பார்க்கும் பார்க்கும் போது, ஆள்க்காட்டி விரல் சமூகத்தையே காட்டுகிறது. படிப்பும் , மதிப்பெண்ணும் தான் வாழ்க்கை என்று இன்றைய தலைமுறையினருக்கு, குறிப்பாக மாணவருக்கு காட்டியுள்ளது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை  நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து, படிப்பை (அதிக மதிப்பெண்) பெறுவது மட்டுமே, குறிக்கோளாக எண்ணுகின்றனர். +2 பொது தேர்வில் 90%  மேல் வாங்கி விட்டால், நல்ல  பொறியியல் கல்லூரியிலோ, மருத்துவ கல்லூரியிலோ இடம் கிடைத்து விடும். இதனால் இவர்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்று நினைத்து விடுகின்றனர்.

பெற்றோர்கள் நினைப்பதில் தவறேதும் இல்லை என்றாலும், பொது தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவதற்காக மாணவர்களை பிழிந்து, வாட்டி எடுத்து, பரீட்சை முடிவதற்குள் ஒரு வழியாக ஆக்கிவிடுகிறனர்.
இதில் பள்ளிக்கூடங்களும் சேர்ந்து கொண்டு, மாலை நேர வகுப்பு, இரவு நேர வகுப்பு, என பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை பெண்டு நிமிர்த்தி விடுகின்றனர். இவர்கள் இப்படி மன அழுத்ததுடன் படித்து, எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்றால், அவர்கள் தவறான முடிவுக்கு தான் போவார்கள்.  

இந்த பிரச்சனைகள் தீர, மாணவருக்கு சரியான கலந்தாய்வு உரையாடல் தேவை. கலந்தாய்வில், "பரீட்சை முடியும் வரை தொலைக்காட்சி பார்க்காதே!,  ஒரு நிமிடம்  கூட வீணாக்காதே! காலை முதல் மாலை வரை படிப்பு ! படிப்பு ! படிப்பு ! என வழக்கப்படுத்திக் கொள்." அது மட்டுமல்லாமல் எந்த கேள்விக்கு எவ்வளவு நேரம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற பழைய  பாட்டையே அவர்களுக்கு சொல்லாமல், அவர்களுக்கு பரீட்சைக்கு பயமில்லாமல் எழுதுவது பற்றியும், தன்னம்பிக்கையையும் வளர்க்க வேண்டும்.

பொறியியலும், மருத்துவமும் மட்டுமே படிப்பல்ல. அதை தவிர வேறு என்னஎன்ன படிப்புகள் இருக்கிறது என்று சொல்லித்தர வேண்டும்.
ஒருவேளை பரீட்சையில் தோல்வியடைந்தாலோ, மதிப்பெண் குறைவாக இருந்தாலோ, மனம் தளராமல், தைரியத்துடனும், மனோபலத்துடனும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும் என்பதை மாணவர்களுக்கு சொல்லி தர வேண்டும்.

வெறும் படிப்பையும் மதிப்பெண்ணையும் மட்டுமே குறிவைத்து மாணவர்களுக்கு போதிக்க கூடாது. இவ்வாறு செய்யாமல், அவர்களுக்கு தனி மனித ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் போதித்தால், எதிர்காலத்தில் இது போன்ற மாணவர்களின் தேவையில்லா உயிர்பலிகள் குறையும்.      


நன்றி !!!

-பி .விமல் ராஜ்