வணக்கம்,
குடும்ப சுற்றுலா செல்ல கோவில்கள், மலைவாச ஸ்தலங்கள், பீச் ரிசாட்டுக்கள் என பல இருக்க, இம்முறை நிஜாம் நகரான ஹைதராபாத்துக்கு செல்லலாம் என முடிவு செய்து குடும்ப படை பரிவாரங்களுடன் 10 பேர் கொண்ட குழுவாக கடந்த ஆகஸ்டில் கிளம்பினோம்.
தெலுங்கானாவின் தலைநகரம்; நிஜாம் மன்னர்கள் ஆண்ட பகுதி; 400 வருட பழமையானது; தெலுங்கு சினிமாவின் மையம் என மிக குறைந்த தகவல்கள் மட்டுமே நமக்கு ஹைதராபாத் பற்றி தெரிந்திருக்கும். தெரியாத மற்ற சில விஷயங்களையும், சுற்றிப்பார்க்கும் சில முக்கிய இடங்களை பற்றியும் சொல்கிறேன். படியுங்கள்...
வரலாறு -
எந்த ஊருக்கு போனாலும் அதன் வரலாறும் பெயர் காரணமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. தெலுங்கானா - மூன்று லிங்கங்கள் இப்பகுதியில் இருப்பதால் Trilinga Desha என்ற பெயரே பிற்காலத்தில் தெலுங்கானா என்று மருவியுள்ளது. ஹைதராபாத் நகரின் பெயர் காரணத்துக்கு பல காரணங்களை சொல்கிறார்கள். ஹைதராபாத்தின் பழைய பெயர் பாக்கியா நகர் என்றும், நகரின் மத்தியிலுள்ள பாக்கிய லட்சுமி அம்மன் பெயரால் இப்பெயர் பெற்றது என்றும் சொல்கிறார்கள். 'காலிப் அலி தாலிப்' என்னும் இஸ்லாமிய மன்னர் ஹயதார் (Haydar) என அழைக்கப்பட்டுள்ளார். haydar - lion ; abadh - land ; அதனால் இது சிங்கத்தின் நகரம் (haydar badh ) என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுவதுண்டு. 'முகமது குலி குதுப் ஷா' என்னும் முகலாய அரசனின் காதலி பாகிமதிக்கு 'ஹைதர் மெஹல்' என பெயிரிடப்பட்டு, பின்னர் அவர் பெயராலேயே ஹைதராபாத் என்னும் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.
கிட்ட தட்ட 400 வருடங்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்துள்ளதால் இங்கு இஸ்லாமிய மன்னர்களின் கோட்டைகளும், அரண்மனைகளும் மசூதிகளும் தான் பிரதானம். ஹைதராபாத் முத்துகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஹைதராபாத்துக்கு முத்து நகரம் (City of Pearls) என்ற பெயரும் உண்டு. 18ஆம் நூற்றாண்டு முதல் 20 நூற்றாண்டின் இடைப்பகுதி வரை ஆண்ட நிஜாம்கள் முத்தினால் செய்யப்பட்ட நகைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டதால் முத்துக்களை இராக் - பார்சாவிலிருந்து (Iraq-Barsa) வாங்கி குவிக்க தொடங்கினார்கள். இவர்களின் காலம் முதல், முத்து வாணிபம் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை செழிக்கிறது.
ஐதராபாத்தில் சுற்றி பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்கள்:
- சார்மினார்
- ஹுசைன் சாகர் ஏரி
- அம்பேத்கர் சிலை
- சௌமஹாலா பேலஸ்
- தெலுங்கானா தலைமை செயலகம்
- பிர்லா மந்திர்
- ராமானுஜர் சிலை
- ராமோஜி ராவ் பிலிம் சிட்டி
ஹைதராபாத் என்று சொன்னவுடன் நமக்கு நியாபகம் வரும் ஒரு இடம் சார்மினார் தான். இந்நகரின் முக்கிய அடையாளமும் விளங்குகிறது. கி.பி. 1591-ல் முகமது குலி குதுப் ஷா என்னும் முகலாய அரசன் சார்மினாரை காட்டியுள்ளார். Char- நான்கு; minar- தூண்கள்; நான்கு தூண்களை (4 Pillars) கொண்டது என்று பொருள். இதன் மேல் மாடியில் மசூதியும் உள்ளது. சதுர வடிவில் நான்கு மினாராக்களையும், பெரும் வளைவுகளையும் கொண்டுள்ள சார்மினார் பளிங்கு கற்கள், சுண்ணாம்பு கற்கள் ஆகியவற்றால் கட்டப்பட்டுள்ளது. நான்கு திசையிலிருந்தும் உள்ளே நுழைவது போல வடிவமைக்கப்பட்டது இதன் தனிசிறப்பு. 4 மாடிகளில் முதல் இரு மாடிகள் வரை சென்று பார்க்க முடியம். மாடிக்கு செல்ல சிறிய செங்குத்தான படிக்கட்டு பாதை வழியே மட்டுமே செல்ல முடியும். எங்களை முதல் மாடிவரை மட்டுமே அனுமதித்தார்கள். உள்புறமாக மாடியை சுற்றி வந்து நான்கு புறமும் பார்த்து ரசிக்கலாம். அங்கிருந்து பார்க்கும் போது நான்கு பிரதான தெருக்களும், பழைய ஹைதராபாத்தின் தோற்றமும் நன்றாகவே இருந்தது. இரவு நேரங்களில் மின்னொளியில் எல்லா கட்டிடங்களும் மின்னிக்கொண்டிருக்கும் காட்சி அற்புதமானது. சார்மினாரின் தென்மேற்கு வாசல் அருகே உள்ள 300 ஆண்டு பழமையான, கிரனைட் கற்களாலேயே செய்யப்பட்டுள்ள மெக்கா மசூதியின் (Meccah Masjid) தோற்றமும் முழுமையாக தெரிந்தது.
குடியரசு/சுதந்திர தின விழாக்காலங்களில் மூவர்ண விளக்குகளால் சார்மினார் அலங்கரிக்கப்படுவதுண்டு. சார்மினாரின் எதிரே எக்கச்சக்க பிளாட்பார கடைகளில் வளையல்கள், மணிகள், மாலைகள், கிளிப், பேக், செப்பல்கள் என போன்ற பெண்களின் பலவித அலங்கார பொருட்களும், பேன்ஸி ஆடைகளும் விற்கப்படுகிறது. பெரும்பாலும் சில்லறை விலையிலேயே இருப்பதால் போர் கணக்கில் கொட்டி விற்கப்படுகிறது. நல்லதாய் பார்த்து தேடி வாங்கி கொள்வது அவரவர் சாமர்த்தியம். நான்கு புரத்தில் உள்ள தெருக்களில் ஒன்றான Laad Bazaar ஒரு முக்கியமானதாகவும், பழமையான மார்க்கெட்டாகவும் விளங்குகிறது. லாட் பஜாரில் பல்வேறு நகைக்கடைகளும், துணிக்கடைகளும் இருக்கிறது. நகைக்கடைகளில் முத்து சார்ந்த நகைகளும், மற்ற கவரிங் நகைகளும், திருமணத்திற்கு தேவையான துணிமணிகளும் பெரிதும் விற்கப்படுகிறது.
சார்மினார் எதிரே ஓரு சிறிய பாக்கிய லட்சுமி கோவில் அம்மன் உள்ளது. அஃது ஒரு அங்கீகரிக்கப்படாத கோவில் கட்டுமானம் என இந்திய தொல்லியல் துறை கூறியுள்ளது. மேலும் அக்கோவில் 1962 வரை எந்த போட்டோவிலும் இடம்பெறவில்லை. 90களின் இடையில் கட்டப்பட்டுள்ளது என்று சர்ச்சையான கருத்தாகவே சொல்லப்படுகிறது.
ஹுசைன் சாகர் ஏரி -
கி.பி. 1563-ல் இப்ராஹிம் குலி குதுப் ஷா என்னும் அரசனால் ஹார்டின் வடிவத்தில் உருவாக்கப்பட்டது ஹுசைன் சாகர் ஏரி. ஏரியின் மத்தியில் ஒற்றைக் வெண்ணிற கிரானைட் கல்லால் செய்யப்பட்ட புத்தர் சிலை 1992-ல் நிறுவப்பட்டுள்ளது. இதன் உயரம் 18மீட்டர் (58 அடி) ஆகும். சிலையின் பீடத்தில் புத்தரின் உருவங்கள் செதுக்கப்ட்டுள்ளன. பெரும்பலும் சினிமாக்களில் ஹைதராபாத்தை காட்டும் போதும் இந்த புத்தர் சிலையை தான் காட்டுவார்கள். இந்த ஏரியை சுற்றி என்.டி.ஆர் கார்ட்ன், லும்பினி பார்க், சஞ்சீவய்யா பார்க், ஜல விஹார் (தீம் பார்க்) என பல கேளிக்கை பார்க்குக்குகள் இருக்கிறது. லும்பினி பார்க்கில் ராட்டினம், வாட்டர் பவுடன், லேசர் ஷோ, போட்டிங் என வேடிக்கை அம்சங்கள் பல் உண்டு. போட்டிங் செல்ல 50, 100 முதல் 700, 1000 ரூபாய் வரையில் பேக்கேஜ் இருக்கிறது. நங்கள் போகும் போது மலை நேரம் ஆகிவிட்டமையால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஒரு பேக்கேஜில் பார்க்கிலிருந்து ஏரியில் உள்ள புத்தர் சிலை வரை சென்று சில நிமிடங்கள் விட்டுவிடுவார்கள்; பின்னர் மீதும் கரைக்கே கூட்டிவந்து விடுவார்கள். பயணம் நேரம் எதோ 30 நிமிடம் தான் இருக்கும். ஆனால் படகு பயணமும் அனுபவமும் மிகவும் அருமையானதாக இருந்தது. இரவில் விளக்கொளியில் வெண்ணிற புத்தர் சிலை வர்ணங்களில் ஜொலித்தது. சஞ்சீவய்யா பார்க்கில் உள்ள மிக பெரிய தேசிய கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருப்பது, படகில் பயணம் செய்யும் போதும் கரையில் இருக்கும் போதும் தெளிவாகவே தெரிந்தது.
அம்பேத்கார் சிலை -
125 அடி உயரமுள்ள சிலை 2023 ஆம் ஆண்டு பாபாசாகிப் அம்பேத்காரின் 132ஆம் பிறந்தநாளின் போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். பாராளுமன்றம் போன்ற பீட அமைப்பில் நின்ற 125அடி வெண்கல சிலையில், ஒரு கையில் இந்திய அரசியலமைப்பு புத்தகம் ஏந்தி, மறுக்கையில் ஆள்காட்டி விரலை காட்டியடி படி நிற்கிறார். சீரழிக்கு கீழே உள்ள வட்ட கட்டிடத்தில், பெரிய நூலகமும், மியூசியமும், காணொளி காட்சி அரங்கமும் இருக்கிறது. ஆனால் நாங்கள் சென்றிருந்த போது எங்களுக்கு உள்ளே செல்ல அனுமதிக்க கிடைக்க வில்லை.
சமீபத்தில் திறக்கப்பட்ட தெலுங்கானாவின் புதிய தலைமை செயலகம் ஏரிக்கரை அருகே பிரமாண்ட மாளிகை போல கட்டப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கானா அமர் ஜோதி என்ற பெயரில் பெரிய அகல் விளக்கு போன்ற ஒரு கட்டமைப்பு கட்டப்பட்டு வருகிறது. அது மறைந்த வீரர்களுக்கான நினைவகம் என்று சொல்லப்படுகிறது.
(Tank Bund road / Lake view road) ஏரி கரை சாலையிலிருந்து அம்பேத்கர் சிலை, ஏரியில் நடுவே உள்ள புத்தர் சிலை, சஞ்சீவய்யா பார்க்கில் உள்ள பெரிய கொடி கம்பம், தெலுங்கானா தலைமை செயலகம் என எல்லாமே கண்ணிற்கு புலப்படும். அதே சாலையில் அம்மாநில அரசியல் தலைவர்கள், தெலுங்கு தேச புலவர்கள், மன்னர்கள் என பலரின் சிலைகளும் வரிசையாய் (நம் மெரினா காமராஜர் சாலை போல) வைக்கப்பட்டுள்ளது.
சௌமஹாலா பேலஸ் -
1720-1948 ஆம் ஆண்டு வரை ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை இது. 1880-ல் கட்டி முடிக்கபட்ட இந்த அரண்மனை, இப்போது அருங்காட்சியகமாக இருக்கிறது. நிஜாம்கள் பயன்படுத்திய மார்பில் சிம்மாசனம் மிக பெரிய தர்பார் மண்டபத்தின் நடுவே வீற்றிருக்கிறது. இதை தவிர போர் கருவிகள், ஆயுதங்கள், பீங்கான் பொருட்கள், விலை உயர்ந்த பொருட்கள் உடைகள், இரும்பு மற்றும் மர பெட்டகங்கள், பெரிய ஓவியங்கள், வரலாற்று புகைப்படங்கள், என எல்லாமே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் பின் புறத்தில் தோட்டமும், நிஜாம் பயன்படுத்திய Napier, Ford Tourer, Fiat என ஆடம்பர பழங்கால கார்களும், கோச் வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் மஞ்சள் நிற 1912 Rolls Royce Silver Ghost தான் பெரிய highlight! நம் வாழ்நாளில் அது போன்ற கார்களை பார்த்திருக்கவே மாட்டோம்.
பிர்லா மந்திர் -
பிர்லா குழுமத்தால் கட்டப்பட்ட பல கோவில்களில் இதுவும் ஒன்று. ஹுசைன் சாகர் ஏரி கரை சாலையருகே சிறிய மலை குன்றின் மீது முழுக்க முழுக்க வெள்ளை நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்ட வெங்கடாசலபதி பெருமாள் கோவில் இது. மலை மேலே செல்ல வண்டியிலோ அல்லது பொடி நடையாக குறுக்கு வழியிலும் செல்லலாம். மேலே கோவிலுக்குள் நுழைய மொபைல் போன், கேமரா, பேக் என எதுவும் எடுத்து போக கூடாது. படியேறி உள்ளே கோவிலில் ஆஞ்சனேயர் சந்நிதி, சிவன், பார்வதி, பிரம்மா, சரஸ்வதி என எல்லா தெய்வத்துக்கும் தனி சந்நிதி உண்டு. 11 அடியில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாளை சன்னதியில் தரிசிக்கலாம். கோவில் மேல் தளத்திலிருந்து பார்த்தால் ஒரு பக்கம் நகரின் அழகிய கட்டிடங்களும், மலைகளும் தெரியும். மறுபக்கம் ஹுசைன் சாகர் ஏரியின் முழுமையும், அம்பேத்கர் சிலையும், தலைமை செயலகமும் தெரியும். அங்கிருந்து பார்க்கும் போது தெரியும் ஐதராபாத்தின் நகரின் அழகே அழகு !
ராமானுஜர் சிலை -
ஹைதராபாத்திலிருந்து 35கி.மீ தூரத்தில் பயணத்தில் உள்ளது வைணவ துறவியான ராமானுஜர் சிலை. சாலையிலிருந்து பார்க்கும் போது தூரத்திலிருந்து பார்க்கும் போதே பிரமாண்ட ராமானுஜர் சிலை தெரிகிறது. அமர்ந்த கோலத்தில் கைகூப்பி வணங்குவது போல அமைக்கப்பட்டுள்ளது. இதனை Statue of Equality என சொல்கிறார்கள். 2022-ல் பாரத பிரதமர் நரந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கபட்டுள்ளது. 216 அடி உயரமுள்ள இந்த பஞ்சலோக சிலை, 700 டன் எடையும் ,1000 கோடி ரூபாய் பொருட்செலவிலும் கட்டப்பட்டுள்ளது. இது உலகிலேயே உயரமான உட்கார்ந்திருக்கும் சிலை (Tallest Sitting Statue) என சொல்லப்படுகிறது. சிலைக்கு கீழே முதல் தளத்தில் சிறிய ராமானுஜர் கோவிலும், தரை தளத்தில் 108 திவ்யதேசங்களில் உள்ள பெருமாள் திருஉருவச்சிலைகள் தனித்தனி சந்நிதிகளாக இருக்கிறது. 108 சன்னைதிகளையும் பார்த்துவிட்டு அப்படியே படியேறி ராமானுஜர் சிலைக்கு அருகே செல்லலாம். சமய ஈடுபாடு கொண்டவர்களுக்கும், பக்திமான்களுக்கும் ஒரு சிறந்த புனித யாத்திரை மையமாக இருக்கிறது. சந்நிதிக்கு போகும் முன்னமே நம் மொபைல் போன், கேமரா போன்றவற்றை வாங்கி வைத்து கொள்கின்றனர். பெரும் பார்க்கிங் வசதியும், கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்படுக்கிறது.
ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி -
தென்னக சினிமாக்களின் உறைவிடமாக மட்டுமில்லாமல், ஹைதராபாத் நகரின் மற்றொரு பொழுதுபோக்கு அடையாளமாக மாறி கொண்டிருக்கிறது ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி. ஹைதராபாத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஃபிலிம் சிட்டி 1996-ல் ஆரம்பிக்கப்பட்டது. 1666 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஃபிலிம் சிட்டியில் நிரந்திரமாக போடப்பட்ட சினிமா செட்டுக்களான ரயில் நிலையம், விமான நிலையம், மருத்துவமனை, சென்ட்ரல் ஜெயில், போலிஸ் ஸ்டேஷன், மலைக்கோவில், ஓட்டல்கள், பெரிய பங்களா வீடுகள், ஃபாரின் லொகேஷன் தெருக்கள், அடுக்குமாடி அபார்ட்மெண்ட்கள், மீடியா கட்டிடங்கள், மைசூர் பிருந்தாவன் தோட்டம், ராஜஸ்தான் மாளிகை என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மேலும் புராண / இதிகாச படங்கள் காட்சிகள் எடுக்க தனி செட்டுகள் (movie set) இருக்கிறது.
சினிமாவில் green matt எப்படி காட்சிகள் படம்பிடிக்க படிக்கிறது, அதற்கு sound effects எப்படி சேர்க்கிறார்கள், எப்படி படமாக்கப்படுகிறது எனபதை தனித்தனியாக காட்டுகின்றனர். மேலும் பல நாடுகளின், சினிமா படங்களின் கதாப்பாத்திரங்களை காட்டும் வகையில் மினி டூர் காட்டப்படுகின்றன. அருமையான சண்டை மற்றும் சாகசங்கள் செய்யும் 'Western Stunt Show' ஒன்றும் காட்டப்படுகிறது. இதை தவிர ராமோஜி ராவ் சிட்டியின் highlight ஆக இருப்பது பாகுபலி செட் தான். பாகுபலி படத்தின் படப்பிடிப்பின் போது பயன்படுத்திய சில செட் பிராபர்ட்டிகளை காட்சிக்கு வைத்துள்ளனர். மகிழ்மதி சிம்மாசனம், கோட்டை சுவர் சுற்றிலும் மகிழ்மதியின் மஞ்சள் கொடி, பெரிய யானை சிலைகள், குதிரைகள் இழுத்து செல்லும் பிரமிட் போன்ற அமைப்பு, பாகுபலி கட்டி இழுக்கும் பெரிய தேர், போர் முரசு, அடங்காத காட்டெருமை, போரின் போது ராணா வரும் விசித்திர தேர், பெரும் கற்களையும் அம்புகளையும் எறியும் போர் கருவிகள், பல்வாள் தேவனின் (ராணா) பிரமாண்ட சிலை என திரையில் நாம் பார்த்து வியந்ததை, நேரில் காட்டி நம்மை திகைப்புக்கு உள்ளாகிருக்கிறார்கள். ஒவ்வொரு செட்டுக்கு அருகே நின்று நாம் போட்டோ போஸ் கொடுக்க வேண்டுமாயின் குறைந்தது 30 பேராவது நிற்கிறார்கள். நாம் frame set பண்ணி angle பார்ப்பதற்குள் photo bombing செய்வதுதான் கொஞ்சம் கடுப்பாக இருந்தது.
இது ஒரு சிறந்த விடுமுறை இடமாகவும், ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், பொழுதுபோக்கு மையமாகவும் விளங்குகிறது. இதில் இயற்கை மற்றும் செயற்கையான பூங்காக்கள், சிறிய பறவைகள்/வண்ணத்துப்பூச்சிகளின் சரணாலயம், குழந்தைகள் விளையாட்டு மண்டலங்கள் (கொடை ராட்டினம், சறுக்குமரம்..), செயற்கை நீர்வீழ்ச்சிகள், அழகிய ஃபௌவுன்டன்கள் என பொழுதுபோக்கும் அம்சங்கள் பல இருக்கிறது. உட்கார்ந்து இளைப்பாற இடமும், தண்ணீர் டாங்கிகளும், கழிவறைகளை இருக்கிறது. சைவ/அசைவ உணவகங்கள் நான்கு, ஐந்து இருக்கிறது. அசைவத்தில் பெரிதாய் ஒன்றும் வெரைய்ட்டி இல்லை. சைவத்துக்கு போவது நன்று! ஃபிலிம் சிட்டிக்குள்ளே எல்லா இடத்துக்கும் செல்ல வின்டேஜ் பஸ் வசதியும் உண்டு. ஒவ்வொரு பஸ்ஸிலும் ஒரு வழிகாட்டி ஒருவர் பார்க்க போகும் இடங்களையம், பக்கவாட்டில் இருக்கும் இடங்களையும் பற்றி சொல்லி கொண்டே வருவார். பெரும்பாலும் இங்குள்ள ஊழியர்கள் ஹிந்தியில் தான் பேசுகிறார்கள். ஹிந்தி புரியாதோர் தோராயமாக தான் புரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. காலையில் சென்றால் மாலை 6 மணிக்கு தான் முடிக்க முடியும். அப்போதும் ஓரிரெண்டு இடங்களை விட்டுவிடவேண்டியதாய் இருக்கும். இவ்வளவையும் சுற்றி பார்க்க, டிக்கெட் விலைதான் ராக்கெட் போல சொய்ங்ங்ங்... என ஏறி நிற்கிறது. ரூபாய் 1500, 2000, 2500 என பேக்கஜ் வாரியாய் இருக்கிறது. காலை 0945க்கு திறப்பு விழா நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு, மாலை 0545க்கு மூடு விழா நடக்கிறது. அதுமட்டுமல்லால் எந்த ஷோ எப்பொது பார்க்க வேண்டும், எந்த ஈவென்ட், எங்கு, எத்தனை மணிக்குள் போக வேண்டும் என்பதை தெளிவாய் தெரிந்து கொண்டு ஃபிலிம் சிட்டி டூரை ஆரம்பிக்க வேண்டும். டிக்கெட் கவுண்டரிலேயே ஒரு மேப்புடன் சேர்ந்த broucher கொடுத்து விடுகிறார்கள். அதை கவனமாக படித்து, அதன்படி சென்றால் எல்லா நிகழ்ச்சிகளையும், பொழுதுபோக்குகளையும் செட்டுகளையும் பார்த்து, வியந்து, மகிழ்ந்து களைப்புடன் திரும்பலாம்.
நேரமின்மையால் கோல்கொண்டா கோட்டை, பிர்லா அறிவியல் அருங்காட்சியகம், நிஜாம் மியுசியம், சலார்ஜுங் மியுசியம் என பல நல்ல இடங்களை பார்க்க முடியவில்லை. ஹைதராபாத் டூர் அழைத்து சென்ற organsier ஒருவரின் (சொந்தக்காரர்தான்!😉) நச்சரிப்பின் பெயரில் பர்னிச்சர்கள், அலங்கார பொருட்கள், பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் பிரமாண்ட IKEA கடையில் சிலபல ஆயிரங்களை கார்டில் தேய்த்துவிட்டு வந்து சேர்ந்தோம்.
ஹைதராபாதில் ஜூன் -அக்டோபர் மழை பெய்யும் காலமானாலும், மழையினால் எந்த பாதிப்பும் இல்லாமல் சுற்றிப்பார்க்க முடிந்தது. மிதமான வானிலையும், குளிர்ச்சியாகவும் இருக்க அக்டோபர் - பிப்ரவரி காலத்தில் சென்று ஹைதராபாதின் பேரழகையும், பெருமையும் பார்த்து என்ஜாய் செய்யண்டி !😁
ஏமிரா? ஹைதராபாத் பர்யாதனக்கு சித்தாமா? ரண்டி... வெல்தாமா ??
நன்றி !!!
பி. விமல் ராஜ்