ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

போதை ஏறும் முன் ஒரு நிமிடம் யோசிக்கவும்...

வணக்கம்,

கடந்த வியாழனன்று (ஏப்ரல் 25) அலுவலகம் முடிந்து வீட்டுக்கு கிளம்ப தயாராகி கொண்டிருந்தேன். நண்பர்கள் சிலர் அலுவலகம் அருகில் உள்ள நாவலூர் பாரில் தண்ணி அடிக்க கிளம்பி கொண்டிருந்தனர். அதற்கு முந்தைய நாளும் சரக்கடிக்க கிளம்பி, எல்லா மது கடைகளும் மூடி இருந்ததால் (மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு) மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தனர். அதனால் இன்று கண்டிப்பாக மலையேறி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தனர். ஆனால் மீண்டும் அவர்களுக்கு எமாற்றமே மிஞ்சியது. மாமல்லபுரத்தில் ஒரு கட்சி பொதுகூட்டம். அங்கே சாதியை பற்றி வாய் கிழிய பேச போவதால், சுற்று வட்டாரத்தில் ஓ.எம்.ஆர் சாலையில் கிட்ட தட்ட 20 கி.மீ  தொலைவுக்கு எல்லா மது கடைகளையும் மூட சொல்லி உத்தரவு. ஆனாலும் தங்களது முயற்சியில் சற்றும் மனம் தளராத என் நண்பர்கள், நேரே கிண்டி வரை சென்று சரக்கு அடிக்கலாம் என்று முடிவு செய்து சென்றுவிட்டனர்.

இவர்களை நினைத்தபடியே நான் பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன். இந்த பதிவும் இவர்களை போலவர்களை பற்றிதான்.  மரியாதை  நிமித்தமாக நம்மவர்களுக்கு புனைப்பெயர்களை வைத்துள்ளேன். என் அலுவலக நண்பர்களான சேலம் கைப்புள்ள, திருச்செந்தூர் சாமி,  தூத்துக்குடி 'உத்தம' சீலர்,  பரமக்குடி தண்ணிவண்டி மற்றும் எல்லோரையும் வழிநடத்தி கொண்டு செல்லும் (சரக்கடிக்க தான் ) 'கருப்பு தங்கம்' கோவில்பட்டி பூலோக வாசி.

இவர்களும் எல்லா கார்ப்பரேட் கம்பனியிலும் வேலை செய்யும் பொறியாளர்கள் போலத்தான். பிறந்தது வேறு இடமானாலும், சென்னையை நோக்கி வேலைக்காக வந்தவர்கள். சம்பளம்  வாங்கிய முதல் நாளில், முதல் வாரத்தில் ,"ஐயோ!!! இப்போ நான் எதையாவது வாங்கியே தீர வேண்டுமே .. இந்த தெருவையாவது வாங்க வேண்டுமே!!! " என்று துடிப்பவர்கள். சம்பளத்தில் பாதி பணம்  தண்ணியடிக்கவே செலவாகிவிடும். பரமக்குடி தண்ணிவண்டியும், கோவில்பட்டி பூலோக வாசியும் காசு இருந்தால் வாரம் 7 நாளும், எட்டு முறையாவது சரக்கடிப்பவர்கள். திருச்செந்தூர் சாமி, எப்போவாவது ஒரு முறை. தூத்துக்குடி சீலர் உண்மையிலேயே உத்தமர் தான். ஒவ்வொருமுறை நண்பர்களுடன் பாருக்கு சென்றாலும், வெறும் சைடு டிஷும், மிரிண்டாவின் தங்கை மாசாவையும் மட்டுமே சுவைப்பவர். ( அட ! கூல் ட்ரிங்க்ஸ் தாங்க..)

சேலம் கைப்புள்ள, எல்லோரையும்  விட இளையவர் .வேலையில் இருந்தபடியே பகுதி நேரமாக பொறியியல் படிப்பவர். ஆரம்பத்தில் கட்டுப்பாடுடன் இருந்தாலும், சேர்க்கை சரியில்லாததால், வாரம் ஓரிரு முறை மட்டும் போதையுடன் காணப்படுவார்.  இவர்களிடம் காசு கொஞ்சம் கரைப்புரண்டால் உடனே சொல்வது," Join the Party with Bacardi"  (உயர் ரக ரம்மாம்!!! ).

பகலில் வேலை நேரத்தில் கைப்புள்ள, செமஸ்டர் பரீட்சைக்கு படிக்க வேண்டிய பாடங்களை பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பார். நானும் இந்த ஒரு மாதம் மட்டும் தண்ணியடிக்காமல் இரு. ரூமிற்கு சென்று 2 மணி நேரமாவது படி. மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம் என கூறும் பொது, சரி..சரி..  என மண்டையை ஆட்டிவிட்டு, மாலையில்  "மச்சி..போலாமாடா??" என்று சக குடிமகன்கள் கேட்டவுடன், பேட்-மென் படத்தில் வருவது போல கண் மூடி திறப்பதற்குள் காணாமல் போய் விடுவார். நானும் வேறு வழி இல்லாமல், என் தலையில் அடித்து கொண்டு சென்று விடுவேன்.


நான் இவர்களை, இங்கு அசிங்கபடுத்தவோ, அவமானபடுத்தவோ இந்த பதிவை  போடவில்லை. இந்த பாழாய் போன குடியினால்  இப்படி சீரழியிரார்களே என்ற வேதனை தான் எனக்கு. இவர்கள் மட்டுமல்ல, நம் நாட்டில் பல குடிமகன்களும், இந்த குடியால் அவர்களுடைய வேலைகளை சரியாக செய்ய முடியாமல் தவிக்கின்றனர். பணமும், உடலும் வீணாய் போகிறதே என்று  பலருக்கு புரியவில்லை. வெறும் சொற்ப போதைக்காகவா , நண்பர்களுடைய பலவந்தத்தாலையோ, அல்லது வேறு ஏதும் சொந்த பிரச்சனைக்காகவோ,  இல்லையென்றால்  வெறும் பகட்டுகாகவோ தான் இந்த குடிப்பழக்கம். ஹ்ம்ம்... படிப்பறிவில்லாதவருக்கு புத்திமதி சொல்லி புரிய வைக்கல்லாம். படித்தவருக்கு???

முன்பெல்லாம் குடிகாரர்களை ஒரு கேவலமாக பார்ப்பார்கள். ஆனால் இன்று, நான் குடிக்க/புகைக்க மாட்டேன் என்று சொன்னாலே, ஏதோ ஒரு வித்தியாசமான ஜந்துவை பார்ப்பது போல பார்க்கிறனர். இந்த பழக்கங்கள் இல்லாதவர்களிடம், " நீயெல்லாம் என்னத்துக்கு உயிரோட இருக்கே??? " என்று என்னிடம் கேட்டவர்களும் உண்டு.  

"குடி குடியைக் கெடுக்கும். குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது... " என்பதை வக்கணையாக படித்து விட்டு பாரில் உட்கார்ந்து கொண்டு 'ஒன்மொர்  லார்ஜ் 'கேட்கும் படித்த குடிமக்களுக்கு என்ன சொல்ல ????

இவர்களுக்கெல்லாம் எத்தனை தடவை முகேஷ்-க்கு நடந்ததை போட்டு காட்டினாலும் திருந்த மாட்டார்கள். முகேஷ் பற்றி தெரியாதவர்கள், அருகில் உள்ள திரையரங்கிற்கு சென்று படம் ஆரம்பிக்கும் முன்னால் போடப்படும் "புகை மற்றும் போதையினால்  உண்டாகும் தீங்கு" பற்றிய செய்தி சுருளை பாருங்கள், புரியும்.

"உன்னால் செய்ய முடிந்தை எல்லாம் நானும் செய்வேன். என் திருப்திக்காக/ சந்தோஷத்திற்காக தண்ணியடிக்கிறேன், உனக்கு என்னடா வந்தது????" என்று வரிந்து கட்டுபவர்களுக்கு என்னுடைய ஒரே பதில். என்னால் செய்ய முடிந்த ஒன்று, அது உங்களால் கண்டிப்பாக செய்ய முடியாது. இரத்தம் மற்றும் உடலுருப்பு தானம் செய்வது தான். ஊர் பேர் தெரியாதவனுக்கு நீங்கள் கொடுக்க வேண்டாம்.  மிகவும் வேண்டியவருக்கு கொடுக்க முடியாமல் போகும் போது தான் அதன் அருமை உங்களுக்கு புரியும். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் கண்ணும்,உடலுருப்பும்  வீணாக மண்ணுக்கோஅல்லது தீயிற்கோ தான் இரையாக போகிறது...

குடிபழக்கத்தினால் இறந்து விடுவார்கள், நோய் வாய்ப்பட்டு கிடப்பார்கள், குடும்பம் சீரழியும் என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள் .எனக்கு தெரிந்தவரை இந்த மேலான கருத்தை எந்த திரைபடங்களிலும் சொன்னதாக தெரியவில்லை. யாரவது எழுத்தாளர்கள் வேண்டுமானால் பதிவு செய்து இருக்கலாம்.

இந்த பதிவைப் படித்த பின் நீங்கள் சத்தியமாக திருந்தி விட மாட்டீர்கள்  என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும், என் மன நிம்மதிக்காகவும், யாரவது ஒருவர் இதை படித்து ஒரு நிமிடம் யோசித்துவிட்டு ,"ச்சே.. ஆமாம். நம்முடைய உடலுருப்பு யாருக்கும் கொடுக்க முடியாது இல்ல..." என நினைத்தாலே எனக்கு போதுமானது.

இதையெல்லாம் படித்து விட்டு என்னை கெட்ட வார்த்தையில் திட்டினாலும், சண்டையிட்டாலும் பரவில்லை. என் பயமெல்லாம்,  நம்மை பற்றி வலைப் பதிவில் வந்து விட்டது என்று கூறி சரக்கடிக்க என்னிடமே, Join the Party with Bacardi  என ட்ரீட் கேட்டால் என்ன செய்வது என்றுதான் யோசித்து கொண்டிருக்கிறேன்...


நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

தொலைக்காட்சி சேனல்கள் என்ன காட்டுகிறது ?

வணக்கம்,

நம்மில் பலருக்கு பொழுதுபோக்கு, தொலைக்காட்சி பார்ப்பது தான். அந்த தொலைக்காட்சி சேனல்களில் என்னென்ன காட்டுகிறார்கள் என்பதை பற்றி இங்கு பகிர்கிறேன். தொலைக்காட்சியில் நாம் பார்ப்பது செய்திகள், நெடுந்தொடர்கள், விளையாட்டு போட்டிகள், திரைப்படங்கள், நகைச்சுவை காட்சிகள் என பட்டியல் அவரவர் விருப்பதிற்கேற்ப நீள்கிறது. அதை பற்றி ஒவ்வொன்றாக இங்கு காண்போம். புதிதாக சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், என்னுடைய எண்ணங்களை உங்களிடம் கொட்டித் தீர்ப்பதற்க்காகவே பதிவு செய்கிறேன்.

தொலைக்காட்சி சேனல்கள் 90-களின் ஆரம்பம் வரை, அரசாங்கத்தையே நம்பியே இருந்தது. அதில் மக்களுக்கு பயன்படும் வகையில் அறிவியல் நிகழ்ச்சி , குழந்தைகளுக்கான நிகழ்ச்சி, மாணவருக்கான நிகழ்ச்சி என்று  ஒளிப்பரப்பினர். பின்னர் தான் தனியார் தொலைக்காட்சி சேனல்களின் வரவால் அவை ஒதுக்கப்பட்டன. இன்று பல தனியார் தொலைக்காட்சி சேனல்கள் , பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில், கண்டபடி நிகழ்சிகளை ஒளிப்பரப்புகின்றனர்.

முதலில் செய்திகள். நாட்டுநடப்பை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு தான் செய்திகள். ஒவ்வொரு சேனலிலும்  ஒவ்வொரு விதமாக செய்திகள் வாசிக்கும் போது எது உண்மை, எது பொய் என்று மக்களுக்கு தெரியவில்லை. இப்போதுதான் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி சேனல் இருக்கிறதே! ஒவ்வொன்றிலும் அவர்கள்கொள்கைக்கு தகுந்த படி செய்திகளை மாற்றி மாற்றி சொல்கின்றனர். ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது அந்த கட்சி தலைவர்/தலைவியின் புராணம் பாடும் செய்திகளும், அதுவே அவர்கள் எதிர்கட்சியாக இருந்தால், ஆளும்கட்சிக்கு அறிக்கை விடும் செய்திகள் தான் சொல்கின்றனர். இதை தான் எல்லா கட்சி சேனல்களும் செய்கிறது.

எந்த செய்தியை காட்ட வேண்டுமோ அதை காட்டாமல், தேவையில்லா குப்பை செய்திகளையும், விளம்பரங்களையும் காட்டி அவர்கள் மதிப்பை அவர்களே குறைத்து கொள்கின்றனர். போலிச்சாமியாரின் சில்மிஷங்களை ரகசிய கேமராவில் பதிந்து, நொடிக்கு ஒரு முறை காட்டியும், அவர்கள் வாங்கி வெளியிட்டுள்ள திரைப்படம் திரையரங்கை விட்டே ஓடினாலும், 'வெற்றி நடைபோடுகிறது ' என்று விளம்பரம் செய்து அவர்களது  டி .ஆர்.பி. ரேட்டிங் -ஐ (T.R.P Rating) ஏற்றி கொள்கின்றனர்.  

நாட்டில் விண்கலம் புதிதாக விண்ணில் செலுத்தப்படும் போதும், நம் மாநிலத்தில் ஒருவர் உலக அளவில் விருது வாங்கினர் என்றோ, அறிய அறிவியல் கண்டுப்பிடிப்பை பற்றியோ அடிக்கடி போட்டுக்காட்டுவதில்லை.

அடுத்து தொலைக்காட்சி நெடுந்தொடர்ககளை  எடுத்து கொண்டால், அதற்கு திரைப்படங்களே பரவாயில்லை என்று கூறலாம். எல்லா தொடரிலும் நாயகனுக்கோ, நாயகிக்கோ ஒன்றுக்கும் மேற்பட்ட தாரங்கள் இருக்கும். அல்லது பெண்களே,பெண்களைப்பற்றி  தவறாக வஞ்சிப்பதும், சூழ்ச்சி செய்து குடும்பத்தை  குலைப்பதும் தான் நடக்கிறது. பக்தி தொடர்கள், மேன்மேலும் மக்களின் காதுகளில் பூ சுற்றி கொண்டே போகின்றனர். அந்த அளவுக்கு மூடநம்பிக்கைகளை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விதைக்கின்றனர்.

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சில விஞ்ஞான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பலாம். அது மாணவருக்கும், மற்றவருக்கும் பயன்படுமாறும் செய்யலாம். மொழியின் சிறப்பை அறியும் வகையில் புதிதாக விளையாட்டு போட்டிகளை நடத்தி ஒளிப்பரப்பலாம். சிறுவர் சிறுமியருக்காக இதிகாச புராணங்களையும்,சில நீதி கதைகளையும் பற்றி பொம்மை (கார்ட்டூன்) படம் போட்டு காட்டலாம். 

அடுத்து, சில நாட்களாக எல்லா சேனல்களிலும் பிரபலமாகி வரும், 'ரியாலிட்டி ஷோக்கள் ' (Reality Show).  சூப்பர் சிங்கர் , சூப்பர்  டான்சர் , சூப்பர் டைரக்டர் , சூப்பர் காமெடியன்  என  பல நிகழ்ச்சிகள் உள்ளது. இவை மக்களின் திறமைகளை வெளி கொண்டுவருவதை விட, சேனல்களுக்கு பணம் ஈட்டித்தான் தருகிறது. மக்களுக்கு பண மோகம் அதிகமாக இருப்பதை அறிந்து, முன்பெல்லாம் விளையாட்டு போட்டிகளில் ஆயிரக்கணக்கில் பரிசு தந்தவர்கள், இப்போது  லட்சங்களிலும் கோடிகளிலும் தான் புரள்கிறார்கள். பொதுமக்களை அழைத்து விளையாடாமல், பிரபலங்களை அழைத்து பரிசு பணத்தை வாரியிரைத்து ,விளம்பரம் செய்து வருவாயை பெருக்கி கொள்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் விட என்னை மிகவும் வெறுப்பெற்றுவது,
"குற்றங்களும் அதன் பின்னணியும், நடந்தது என்ன? " என்று உப்பு சப்பில்லாத விஷயத்தை பெரும் பீடிகையுடன் சொல்வது தான். கடைசி வரை சொல்ல வந்ததை சொல்லவே மாட்டார்கள். அதை விட,"உண்மையை சொல்லும் " ஓர் உன்னத (?!?) நிகழ்ச்சியில், குடும்ப பிரச்சனைகளை  இரு பிரிவினரும் பேசி, திட்டி, சண்டையிட்டு நம்மையும்  கடுப்பாக்கி வைப்பார்கள். அதில், பஞ்சாயத்தை தீர்க்க வரும் 'பெண் நாட்டமை', "அவன் உன் மனைவியை தள்ளிக்கொண்டு போய்விட்டானா??? பரவாயில்லை. நீ அவன் மனைவியுடன் இரு...   " என்ற தோணியில் மத்யத்சம் பேசுவது கொடுமையின் உச்சம். சில சமயங்களில் தாலியை (நிகழ்ச்சியிலேயே )கழட்டி தூக்கியெரிந்து விட்டு  சென்றும் உள்ளனர். பணம் படைத்தவர்களிடம்  இந்த மாதிரி பிரச்சனையே இல்லாதது போல, பெரும்பாலும் அடித்தட்டு மக்களை குறிவைத்தே இந்த நிகழ்ச்சிகள் நடத்தபடுகிறது.

அடுத்து 'கருத்து விவாதம்' நடக்கும் மேடை. முக்கிய பிரச்சனைகளை விட்டுவிட்டு ,நடிகை வீட்டை விட்டிவிட்டு ஓடியதையும், அழகிய பெண்களையும்,ஆண்களையும் வைத்து ஒப்பிடுவதும் தான் முக்கிய விவாதங்களா?  சில நேரங்களில், நல்ல தலைப்புகளையும் அவர்கள் தேர்ந்தெடுத்து கையாள்வதும் கட்டாயம் இங்கு பதிய வேண்டியது தான். 
     
திரைப்படங்களும், அடிக்கடி போடப்படும் நகைச்சுவை காட்சிகளும் தான் சிறிது நேரம் தொலைக்கட்சியில் பார்க்க முடிகிறது. சில போராட்டங்களுக்கு பின், தொலைகாட்சியில் போடப்படும் படங்களில் ஆபாச காட்சிக்களும், வன்முறை காட்சிகளும் , மது அருந்தும் காட்சிகளும் நீக்கபட்டு காண்பிக்கபடுகின்றன. பண்டிகை நாட்களில் ஒவ்வொரு சேனலிலும் 'இந்திய தொலைக்கட்சிகளில் முதன்முறையாக ' என்று போடும் போது நமக்கு தான் எதை பார்ப்பது என்று திணறல். இங்கே கூத்தாடிகள் இரண்டுபட்டால் மக்களுக்கு தான் கொண்டாட்டம். 

'தமிழை வளர்கிறோம் பேர்வழி'  என்ற பெயரில் உள்ள சேனல் , முழுக்க முழுக்க  தமிழ் கலாச்சாரத்துடனும், மக்களுக்கு பயனுறும் வகையிலும் நிகழ்சிகளை தமிழிலேயே  பேசி ஒளிப்பரப்புகிறது. இவர்களும் செய்திகளை அவர்கள் கட்சிக்கு சாதிக்கு ஆதரவாகவே ஒளிப்பரப்புகிறார்கள். இவர்களுடைய 'தலைவர் அய்யா' பேசும் பொது கூட்டங்களை ஒளிப்பரப்பும் நிகழ்ச்சியை பார்த்தாலே நாட்டில் சாதி வெறி சண்டைகள் வந்துவிடும்.


அரசாங்கம் நடத்தும் பொது வேலைநிறுத்ததின் போது, எல்லா வணிக நிறுவனமும், தனியார்/ அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் சேனல்களுக்கு மட்டும் அன்று விடுப்பு இல்லை. வழக்கமாக போடும் பழைய படங்களை போடாமல் 'விடுமுறை தின கொண்டாட்டம்' என்று நட்சத்திரங்களின் திரைபடங்களை போட்டு வருவாய் தேடி கொள்வார்கள். மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம், அவர்களுக்கு மட்டும் இல்லையா?!?!?!

விளையாட்டு - எவனோ ஒருவன் விளையாடி சம்பாதிப்பதை , தேசத்திற்காக என கூறி விளையாட்டே கதி என்று உள்ளவர்களும் உண்டு. கிரிக்கெட் மட்டும் என்ன இந்தியவின் பண்டைய காலத்து விளையாட்டா?? அதை பெரிதாக காட்டி, விளம்பரம் செய்து கோடிகளில் புரளும் வியாபாரமாக மாற்றியது தொலைகாட்சிகள் தான். தேசிய விளையாட்டை நேரடியாக ஒளிப்பரப்பமல், விளம்பரம் செய்யாமல், அந்நிய தேசத்து மட்டை விளையாட்டை மட்டும் காட்டுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. இதனால் கிரிக்கெட்    பார்ப்பது/ ஊக்குவிப்பதோ தப்பு என்று  சொல்லவில்லை. அதை போல எல்லா விளையாட்டையும்  ஊக்குவித்தால் நல்லது என்பது என் கருத்து.    

இவ்வளவு சொத்தை சொல்கிறேனே என்பதற்காக,  இந்த தனியார் தொலைக்காட்சி சேனல்களையெல்லாம் வணிக ரதியாக பணமே சம்பாதிக்க கூடாது என்று சொல்லவில்லை. அவர்களும் வியாபாரிகள் தானே! மக்களுக்கு உதவுவது போலவும், மொழியை வளர்ப்பது போலவும் , சில பல நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பினால்  நன்றாக இருக்கும் என்பதே என் வாதம்.     

நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பொறியியல் படித்து என்ன பிரயோஜனம் ???

வணக்கம்,

நாள் : ஏப்ரல் 5. காலை 8:30 மணி. அலுவலக பேருந்தில் எப்போதும் போல தூங்கி கொண்டே பயணித்து கொண்டிருந்தேன். தீடீரென முழிப்பு வர, தனியார் பண்பலை வரிசையில் (FM) ஒரு முக்கிய தலைப்பை பற்றி பேசி கொண்டிருந்ததை கேட்டேன். தலைப்பு என்னவென்று பார்த்தால், நாட்டில் பல தரமில்லாத பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது பற்றி தான். அட ! இதை கேட்டவுடன் இதை பற்றியே ஒரு பதிவு போடலாமே என்று எண்ணம் தோன்றியது. பாதி தூக்கத்தில், தொகுப்பாளர் ' அஜய் விக்னேஷ்' பேசியதையும், என்னுடைய சில கருத்துகளையும் உங்களிடம் பகிர்கிறேன்.

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வெறும் 231 சுயநிதி கல்லூரிகள் தான் இருந்தது. ஆனால் இன்றோ, 570 சுயநிதி கல்லூரிகளும் 37 பல்கலைகழங்களும் இருக்கின்றது. இந்த ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட  தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நூறுக்கும்  மேற்பட்ட கல்லூரிகள் அனுமதி கோரிக் காத்துள்ளன. பொறியியல் கல்லூரி மட்டுமல்லாமல் புதிதாய் முளைக்கும் சில கலைக்கல்லூரிகளும் இதே நிலைமையில் தான் உள்ளது.

இதில் பெரும்பாலான கல்லூரிகள் தரமானதாக இருப்பதில்லை. போதிய வசதிகள் கிடையாது. திறமையான விரியுரையாளர்கள் கிடையாது. வசதியுள்ள ஆய்வகங்கள் இருப்பதில்லை. இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் கல்லூரிக்கு அருகில் உள்ள சுற்றுவட்டாரத்திலிருந்து வருகின்றனர். சிலர் பல்கலைகழக ஆலோசனைப்படி வந்து சேர்கின்றனர். அவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் பெயரளவில் மட்டும் பொறியியல் படித்தவர்களாக இருகின்றனர். 15/ 20 ஆண்டுகளுக்கு முன்னால் பொறியியல் மாணவர் என்றாலோ, அல்லது அரசு/தனியார் நிறுவனத்தில் பொறியியலாளர்  என்றாலோ தனி மதிப்பு தான். என் மகள்/மகன் பி.ஈ (B.E)  படிக்கிறாள்(ன்) என பெற்றோர்கள் பெருமையுடன் சொல்வார்கள்.

ஆனால் இப்போது ஊருக்கு 10 சுயநிதி கல்லூரிகளை திறந்து வைத்து, அதுவும் ஓர் கலைகல்லூரி படிப்பை போல ஆக்கிவிட்டனர். இந்த கல்லூரிகளில் படித்து விட்டு வருடந்தோறும் 10 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வருகின்றனர். அதில் ஒரு சிலர் மட்டும் வேலை வாய்ப்பு பெற்று தப்பிவிடுகின்றனர். முக்கால்வாசி பேர் தரமான பொறியியல் கல்வி  இல்லாததாலும், சரியான உரையாடல் திறன் இல்லதாதலும் (BPO) பி.பி.ஒ-விலும் மற்ற சிறிய நிறுவனங்களிலும் தங்கள் படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலையில் போய் சேர்கின்றனர். ( ஹ்ம்ம்! ஒரு சிலர் நல்ல கல்லூரியில் சேர்ந்தும், சரியாக படிக்கத்தால் சரியான வேலையின்றி இருக்கின்றனர் !!!)

அதுமட்டுமல்லாமல் இப்போதெல்லாம் எந்த வேலைக்கும் எந்த கல்வித்தகுதியும் (பட்டப்படிப்பும்) பரவாயில்லை என்ற  நிலை வந்துவிட்டது.


எனக்கு தெரிந்த வரை மருத்துவ மாணவர்கள் மட்டும் தான் படிப்புக்கு பிறகு, அவர்தம் துறையில் போய் வேலை செய்கின்றனர். பொறியியல் படித்த மாணவரும், கலைகல்லூரி மாணவரும் சேர்ந்தே எல்லா வேலைவாய்ப்புக்கும் வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரே  அளவு சம்பளமும் சிலர் வாங்குகின்றனர். அதில் பெரிதாக  தப்பு ஏதும் இல்லை என எல்லோருக்கும் தெரியும் . ஒரு வளமான சமுதாயம் வளர இந்த நிலை தேவைதான். எல்லா பொறியியல் மாணவருக்குமுள்ள வாதம் என்னவென்றால், எல்லா வித பட்டதாரிகளும்  ஒன்றாக வேலை செய்து சம்பளமும் வாங்க, நாம் மட்டும் ஏன் கஷ்டப்பட்டு கடன் வாங்கி,  நான்கு வருடம் படிக்க வேண்டும்? நாம் மட்டும் ஏன் அதிகமாக கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும்? பேசாமல், நாமும் இளங்கலையோ (B.A), அறிவியல் இளங்கலையோ(B.Sc)  படித்து விட்டு தபால் முலமாக ஒரு முதுகலை படிப்பை படித்து இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. என் வீட்டில் "நீயெல்லாம் இன்ஜினியரிங் படித்து என்ன பிரயோஜனம் ??? " என்று திட்டுவது ஞாபகம் வருகிறது.

திருமண பத்திரிக்கையில் மணமகன்(ள்) பெயருடன் பி.ஈ /பி.டெக் என்று போட்டு கொள்ளவும், வரதட்சணையாக 50 பவுன் நகைக்காகவும் ,மாமனார் வீட்டில் கார் வாங்கி தர சொல்லவும் தான் பொறியியல் படிப்பு உபயோகமாக இருக்கிறது.

நாம் எவ்வளவோ பொருமினாலும் சில பொறியியல் படித்த மாணவர்கள், உயர்ந்த நிறுவனத்தில் லகரங்களில் சம்பளம் வாங்குவதை யாராலும் ஓப்பு கொள்ளாமல் இருக்க முடியாது. 

இதையெல்லாம் பண்பலையில் கேட்டு கொண்திருந்த நண்பர் ,
"போதும் பா!, -(FM) எஃப். எம் - ஐ  நிறுத்த சொல்லுங்க. காலங்காத்தாலேயே வெறுப்பபேத்துறது போல இருக்கு .. " என்று நொந்து கொண்டார் .

தலைப்பு முழுசாக முடியும் முன், அலுவலகம் வந்ததால், பேருந்தில் உள்ள அனைவருக்கும் நமூட்டு சிரிப்புடன் இறங்கி சென்றோம். 
      

நன்றி !!!    

-பி .விமல் ராஜ்