திங்கள், 31 ஜூலை, 2023

பரோட்டா ஸ்பெஷல்!

வணக்கம்,

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு  உணவுக்கும் ஓர் முக்கிய இடம் உண்டு. பல உணவுகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்றாலும் அவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். நம் நாட்டில் உள்ள மக்களிடம் "உங்களுக்கு பிடித்த உணவு எது?" என்று கேட்டால் அது பெரும்பாலனவர்கள் பிரியாணியும் பரோட்டாவும் என்று தான் சொல்வார்கள். இவற்றின் பிறப்பும், வருகையும் பற்றி தான் இங்கு சுவைக்க போகிறோம்.

பிரியாணி (Biriyani) என்ற சொல்லுக்கு பார்ஸி மொழியில் 'வறுத்த /வறுக்கப்பட்ட உணவு ' என்று பொருள். பிரியாணி பிறந்த இடம் பெர்சியா (இப்போதைய ஈரான்). 14-ஆம் மற்றும் 15-ஆம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது மன்னர்களுக்காக சமைக்கப்பட்ட உணவு என்று சொல்லபடுகிறது. எனினும் பிரியாணி பிறந்த இடம் பெர்சியாவா அல்லது அரேபியாவா என்று இன்னும் சரியாக தெரியவில்லை. மேலும் ஷாஜகான் தன் ஆசை மனைவி மும்தாஜுன் அன்பு கட்டளையின் பெயரில் தம் போர் வீரர்களின் சீரான ஊட்டசத்துக்காக சமைக்கப்பட்ட / உருவாக்கபட்ட உணவு தான் பிரியாணி என்றும் சிலர் சொல்வதுண்டு. பிரியாணி பற்றி என் முந்தைய பதிவுகளில் பிரியாணி பிறந்த கதை என எழுதியுள்ளேன். அதனால் இதில் பிரியாணியின் தம்பி பரோட்டாவை பற்றி ருசிக்கலாம்.

பரோட்டா (Parotta) என்றாலே நம்மில் பலருக்குப் பிடித்த உணவு என்பது போல என்றாகிவிட்டது. சின்ன தள்ளுவண்டிக் கடைகளிருந்து பெரிய ஸ்டார் ஹோட்டல்கள் வரை எல்லா இடங்களிலும் பரோட்டாவிற்குத் தனி மவுசு உண்டு. கடையில் பரோட்டா போடுவதைப் பார்த்தாலே நமக்கு பசிக்க ஆரம்பித்து விடும். டீ, தோசை, பரோட்டா செய்பவர்களை மட்டும் தான் மாஸ்டர் என சொல்கிறார்கள். ஓட்டல் கிச்சனுக்கோ அல்லது ரோட்டோர ஸ்டாலிலோ பார்த்தால், சொன்ன பேச்சு கேட்காத பிள்ளையை அம்மா அப்பா அடிப்பது போல; கணவனை மனைவி அடிப்பது போல மாஸ்டர் பரோட்டாவை அடித்து துவைத்து கொண்டிருப்பார். மைதா மாவையும் தண்ணீரையும் விட்டுப் பிசைந்து, சாப்ட் ஆகும் வரை செம்மையாய் அடிஅடியென அடித்து, எண்ணெய் ஊற்றி, கொழுக் மொழுக் உருண்டையாக உருட்டி, வட்ட வட்டமாகத் தட்டி அடுக்கி விடுவார்கள். அடுத்து மாவை வட்டம் பெரிசாகும் வரை வீசியடிப்பது. பரோட்டா மாவை வீசியடித்தல் என்பதே ஒரு தனி கலை; அது கடைக்குக் கடை, மாஸ்டருக்கு மாஸ்டர் வேறுபடும். வீசி பறக்கவிட்ட பின்னர் மீண்டும் சுருள் சுருளாய் வைத்து, தலையில் ஒரே போடாய் போட்டு அதற்குரிய பெரிய இரும்பு கடாயில் வரிசையாய் அடுக்கி, எண்ணெய்யில் குளிப்பாட்டி வருத்து, பொரித்து எடுத்து,  வெந்தபின் பரோட்டாக்களில் நாளை தனியாய் அடுக்கி, கைதட்டுவது போல எல்லா பக்கமும் தட்டுதட்டி நம்ம தட்டுல வைக்கும் போது பாருங்க... ஸ்ஸ்ஸ்ப்ப்பப்பா.. அதன் சுவையோ சுவை தான் போங்க..  

Parotta-special

பரோட்டாவின் சுவை கூடுவது அதன் குருமா அல்லது சால்னாவில் தான். சிக்கனோ, மட்டனோ, பீஃப்போ வெறும் சால்னாவோ... பரோட்டாவை பிச்சி போட்டு, காரசாரமான குழம்பு போல எண்ணெய் மிதக்கும் சால்னாவை சிலபல கரண்டிகளை ஊற்றி ஊறவைத்து ருசிக்க ருசிக்க சாப்பிடும் போது நமக்கே தெரியாமல் ஒரு புடி பிடித்து விடுவோம்.

பரோட்டாவின் பிறப்பிடம் கேரளாதான் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பரோட்டா பிறந்து வட இலங்கையில். ஆங்கிலேயர் காலத்தில், இலங்கையிலிருந்து தமிழ் நாட்டில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வேலைக்காக பலர் வந்து சென்று கொண்டிருந்தனர். சீக்கிரம் கெட்டு போகாத உணவாகவும், கம்மியான செலவில் செய்து சாப்பிடவும் தான் ஆரம்பத்தில் பரோட்டா தயார் படுத்தபட்டது. வட இலங்கையில் தமிழர்கள் உருவாக்கிய உணவான பரோட்டா, தூத்துக்குடி வழியாக இந்தியா வந்தது. பிற்காலத்தில் 1970, 80களில் கேரளாவில் ஆரம்பிக்கபட்ட சில கடைகள் மற்றும் திரைப்படங்கள் வாயிலாக பரோட்டா மலையாள தேசத்தில் விருப்பமான உணவாகவும், தவிர்க்க முடியாத உணவாகவும் மாறிப் போனது. பின்னர் பர்மா, மலேசியாவிற்கு போன தமிழர்கள் வாயிலாக மீண்டும் தமிழகம் வந்து வெவ்வேறு வடிவில், சுவையில் வந்து நம் மனதை கொள்ளை கொண்டு வருகிறது.

தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான பரோட்டாக்கள் உண்டு. அதன் சுவையும் வகையாய் இருப்பதுண்டு. தென் பகுதியில்
ப்ரோட்டா (brotta) என்றும் சொல்லப்படுவதுண்டு. சில இடங்களில் பரோட்டா (parotta) என்றும், ரோட்டா (barotta) என்றும் சொல்வார்கள்.

 • விருதுநகர் பரோட்டா
 • தென்காசி பரோட்டா
 • குற்றாலம் பரோட்டா
 • மதுரை பன் பரோட்டா
 • தூத்துக்குடி பரோட்டா
 • கன்னியாகுமரி பரோட்டா
 • மலபார் பரோட்டா
 • கோழிக்கோடு பரோட்டா
 • சிலோன் பரோட்டா
 • காரைக்கால் லாப்பா பரோட்டா
 • காயின் பரோட்டா
 • வீச்சு பரோட்டா
 • செட் பரோட்டா

இது போக கிழி பரோட்டா, பொட்டலம் பரோட்டா, பரோட்டா பிரியாணி என புதுசு புதுசாய் என்னென்னமோ பரோட்டாவெல்லாம் வந்து கொண்டிருக்கிறது.
சில பரோட்டாகளில் உள்ளே stuff (முட்டை /சிக்கன்/மட்டன்/பீஃப்) வைத்து கொடுப்பார்கள். சிலது கைக்கு அடக்கமாக சிறியதாக இருக்கும்; சில பரோட்டாகள் பெரிதாக இருக்கும். இன்று தமிழகத்தில் மதுரையிலும், திருநெல்வேலியிலும் தான் பரோட்டா தரமானதாக இருக்கும் என நம்பிக்கை பரவலாக உண்டு.

கடையில் முந்தின நாள் மீந்த பரோட்டாவை மறுநாள் சுட வைத்து வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி போட்டு அகண்ட கடாயில் டங்.. டடங்..டங்க்.. டங்க்.. டடங்... என ஒலிஎழுப்பி தாளம் போட்டு, கொத்து பரோட்டா என புதிய ஐட்டதை கண்டுபிடித்த பெருமையும் மதுரையையே சாரும்.

வடநாட்டில் பராத்தா (Paratha) என்ற உணவும் இங்கு பிரசித்தம். பராத்தா கோதுமை மாவில் செய்யப்படுவது. பெரும்பாலும் அப்படியே சுட்டு, வட்ட மண் குடுவையில் சுட்டு வைத்து சாப்பிடும் ஒரு உணவு பதார்த்தம். இதிலும் உருளை, பன்னீர் ,கோபி, நான்-வெஜ் என stuff செய்து தரப்படுகிறது. இந்த பராத்தாக்கள் அரபு தேசத்திலிருந்தும், முகலாய படையெடுப்பின் போதும் நம் நாட்டிற்குள் வந்திருக்கலாம் என சொல்கிறார்கள். வடநாட்டு பராத்தாவும், நம்ம ஊர் பரோட்டாவும் ஒன்றல்ல. பராத்தா சாப்பிட நன்றாகவே இருந்தாலும், நம்ம பரோட்டாவின் சுவையே வேறு ரகம். 

Parotta-comedy-tamil

என்னங்க.. படித்தவுடன் உங்களுக்கும் பரோட்டா சாப்பிட வேண்டும் என தோன்றுகிறதா? அப்புறம் என்ன.. தெரு முனையில் இருக்கும் கடைக்கு போய் பரோட்டா சாப்பிட்டுடலாம் வாங்க.! பரோட்டா சாப்பிட்டால் உடம்புக்கு கேடு, வயிறு வீணாய் போகும் என்றெல்லாம் சிலர் சொல்வார்கள். சில நேரத்தில் ஒவ்வாமை காரணமாக வயிறு கடாமுடா, கலகலவென சத்தம் போடும் தான். அதற்கு காரணம் மைதாவா அல்லது குழைத்து அடித்த சால்னாவா என தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஹ்ம்ம்... இதையெல்லாம் பார்த்தால் நம்மால் எந்த ஒரு சாப்பாட்டையும் ருசிக்க முடியாது! அவுங்க கிடக்குறாங்க; நீங்க கோட்டை அழிச்சிட்டு முதலிருந்து சாப்பிட ஆரம்பிங்க !!!   

ஒரு செட்டு பரோட்ட்டா பார்சல்ல்ல் !


நன்றி!!!
பி. விமல் ராஜ்

செவ்வாய், 18 ஜூலை, 2023

டிஜிட்டல் திருடர்கள்!

வணக்கம்,

பூஜ்ஜியமும் ஒண்ணும் வேகமாக சுழன்று கொண்டிருக்கும் நமது யுகத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறி கொண்டிருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங், உணவு அல்லது மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்வது, விடுமுறை நாட்களைத் திட்டமிடுவது மற்றும் மாதந்தோறும் கட்டவேண்டிய பில்கள் வரை, பெரும்பாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் நம் வாழ்க்கையை எளிதாக்கப்படுகிறது. இதனால் பல இடங்களில் நன்மையையும் தீமையும் சேர்ந்தே வருகிறது. திருடர்கள் முன்பெல்லாம் வீடு புகுந்து திருடுதல், வழிப்பறி, வங்கி கொள்ளை என தங்கள் கைவரிசையை காட்டி வந்தனர். காலம் மாறும் போது திருடர்களும் நம்மை விட பன்மடங்கு வேகமாக அப்டேட் ஆகி கொண்டே இருக்கின்றனர். இது போன்ற டிஜிட்டல் திருடர்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

Digital-scammers

டிஜிட்டல் மயத்தால் ஏற்படும் நன்மைகள் பல  இருக்கின்றது. பாதுகாப்பானது, நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை,
உடனடி மற்றும் வசதியான கட்டண முறை, புதிய தொழில்நுட்பங்களுக்கு வழிகாட்டுதல், மேம்படுத்தப்பட்ட வேகம் மற்றும் சரியான நேரத்தில் பணம் விநியோகம்/பரிமாற்றம் என சொல்லிக்கொண்டே போகலாம். எந்த ஒரு தொழில்நுட்பம் புதிதாய் வரும் போதும், அதை தவறான வழியில் பயன்படுத்தி ஏமாற்றுவோரும், ஏமாறப்படுபவரும் இருந்து கொண்டே இருக்கின்றனர். 

சில ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு சில டிஜிட்டல் /சைபர் மோசடிகளை பற்றி பார்க்கலாம்.

 • UPI Scams
 • Card OTP Scams
 • Phishing Emails/Msgs
 • Fraudulent Apps 

UPI (Unified Payments Interface) பற்றி நம்மில் பலருக்கு தெரியும். வங்கி கணக்குகள் மூலமாக பணம் செலுத்தாமல், மொபைல் நம்பர் மூலம் வேகமாகவும், எளிதாகவும், பாதுகாப்புடனும் பண பரிவர்த்தனை செய்ய தொடங்கப்பட்ட ஓர் தொழில்நுட்பம் ஆகும். 2022-ல் நாளொன்றுக்கு 24-36 கோடி வரை பண பரிவர்த்தனை இந்தியாவில் நடக்கிறது. அரசாங்க தரவுகளின்படி, 2021-22 ஆம் ஆண்டில் 84,000 UPI Scams மோசடி வழக்குகள் இருந்தன. மேலும் 2020-21ல், 77,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் மத்திய நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2022-23 ஆம் ஆண்டில் நம் நாட்டில் 95,000 க்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனை மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே வருடதில் இதுபோன்ற UPI Scams வழக்குகள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறது.
   
1.) மோசடி செய்யும் UPI Scammerகள், பாதிக்கப்பட்டவர்களை தங்கள் தொலைபேசியில் remote access மென்பொருளை ஏதேனும் ஒரு காரணத்திற்காக பதிவிறக்கம் செய்யச் சொல்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர் அவர்களின் வார்த்தைகளுக்கு விழுந்தவுடன், சைபர் ஹாக்கர்கள் தங்கள் மொபைலிலிருந்து கட்டுப்பாட்டை எடுத்து கொண்டு, அவர்களின் மின்-வாலட்டை (e-wallet) குறிவைத்து காலி செய்துவிடுகிறார்கள்.

2.) Customer Care Executiveகளாக காட்டிக் கொள்ளும் சில மோசடியாளர்கள், KYC-ஐ முடிக்கவில்லை அல்லது அவர்களின் ஆதார் அல்லது பான் விவரங்களைப் புதுப்பிக்கவில்லை எனக்கூறி, அவர்களின் UPI wallet-ஐ block ஆகாமல் தடுப்பதாக சொல்லி மக்களை அச்சுறுத்துவதை பணம் பறிக்கின்றனர்.

3.) இது போன்ற மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் பொதுவான முறைகளில் ஒன்று, UPI-ல் தவறாக பணம் அனுப்பிவிட்டோம். அதை திருப்பி அனுப்ப இந்த லிங்க் -ஐ கிளிக் செய்து அனுப்புங்கள் என கூறியும், அல்லது உங்களுக்கு வரும் ஒரு OTPஐ சொல்லுங்கள் என கூறி மொத்த பணத்தையும் திருடிவிடுகின்றனர்.

4.) மற்றொரு முறை, போலியான QR code களை அனுப்பி பாதிக்கப்பட்டோர் scan செய்து PIN number ஐ போட்டவுடன் பணத்தை திருடிவிடிகின்றனர். கடைக்காரர்களின் QR போலவே போலியான வேறொன்றை பிரிண்ட் செய்து கடையில் அவர்களுக்கு தெரியாமல் வைத்து விடுவார்கள். பின்னர் கடைக்காரர் கண்டுபிடிக்கும் வரை அந்த பணத்தை திருடிக்கொண்டு சென்றுவிடுவார்கள். 

இது போன்ற UPI தொடர்பான மோசடியில் சிக்காமல் தடுக்க:
*) எதிர்பாராத / தெரியாதவரிடமிருந்து வரும் பணப் பரிமாற்றங்களில் சந்தேகம் கொண்டு கவனமாய் இருங்கள்.
*) உங்களுக்கு வரும் UPI, PIN அல்லது எந்த ஒரு OTP யையும் யாருக்கும் சொல்ல வேண்டாம்.
*) பணம் செலுத்தும் போதுதான் உங்களுடைய PIN / OTP மொபைலில் போட வேண்டி வரும்; பணம் பெறப்படும் போது PIN / OTP உங்களுக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது; யாருக்கும் தரவும் வேண்டாம்.

Credit/Debit Card Scams -
கிரெடிட் அல்லது கிரெடிட் கார்டுகளை வைத்தும் பல மோசடிகள் நடந்து வருகின்றது.
1) பெரிய வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் பெயரை சொல்லி குறைந்த வட்டியில் கிரெடிட் கார்டு தருவதாக போனில் பேசி ஆசை காட்டுவார்கள். வலையில் விழுந்த பின்னர்,  உங்களுடைய தனிப்பட்ட தகவல்களையும், (ஆதார், பான் நம்பர்) வங்கி கணக்குகள், PIN என கேட்டு பணம் முழுவதையும் திருடிவிடுவார்கள்.
2.) அதேபோல போனில் தொடர்பு கொண்டு, உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டில் உள்ள அங்கீகரிக்கப்படாத அல்லது மோசடியான கட்டணங்கள் குறித்து உங்களை எச்சரிப்பது போல கூறி ஒரு 3 இலக்க OTP அனுப்புவார்கள். அதை அவர்களிடம் பகிர்ந்தவுடன் பெரும் தொகையோ அல்லது மொத்த பணமும் காலி.
3.) தொண்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாக சொல்லி நன்கொடை தர சொல்லி, உங்களுடைய கிரெடிட் அல்லது கிரெடிட் கார்டு தகவல்களை கேட்டு பெறுவார்கள். அல்லது உங்கள் போனில் ஒரு லிங்க் அனுப்பி, அதில் வங்கி/கார்டு தகவல்களை பதிய சொல்லி பணத்தை அமுக்கி விடுவார்கள்.
4.) Skimmer ஸ்கிம்மர் போன்ற கருவிகளை ATM மெஷினில் பொருத்தி, உங்களுடைய கார்டு நம்பர் மற்றும் PIN நம்பர்களை திருடி, பின் மொத்தமாக பணத்தை எடுத்து விடுவார்கள். சில சமயங்களில் POS மெஷின் (card swiping machine) பொருத்தி,  உங்கள் கார்டு swipe ஆகும் போது அதிலுள்ள magnetic strip மூலம் உங்கள் முக்கிய தகவல்களை திருடி பின்னர் பணத்தை எடுத்து விடுகின்றனர்.
5.) Card Cracking - சமீப காலமாக அதிகமாக செய்யப்படும் ஒரு மோசடி. கார்டு கிராக்கிங்கின் முக்கிய சாராம்சம் என்னவென்றால், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரின் கணக்கில் போலி காசோலைகள் அல்லது போலி பில்களை டெபாசிட் செய்கிறார்கள். பின்னர், மோசடி செய்பவர்கள் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் திரும்பப் பெறுகிறார்கள். நிதி நிறுவனம் சிக்கலைக் கண்டுபிடிக்கும் நேரத்திற்குள், மோசடி செய்பவர்கள் சிட்டாய் பறந்துவிடுகிறார்கள்.

இது போன்ற Card தொடர்பான மோசடியில் சிக்காமல் தடுக்க:
*) சம்பந்தமில்லாமல் வரும் போன் கால்களில் நம் தகவல்களை கொடுக்க கூடாது.
*) கம்பெனி / வங்கி பெயரை சொல்லி OTP/PIN அல்லது மற்ற தகவல்களை கேட்டாலோ, கொடுக்காமல், போன் காலை துண்டிப்பது நல்லது.
*) சுலபமான PIN நம்பரை வைக்க கூடாது. PIN நம்பரை கார்டுக்கு பின்னல் எழுதி வைக்கவும் கூடாது.

Phishing Emails/Msgs -
உங்கள் மெயில் ஐடிகளுக்கு வரும் வேண்டாத சில ஸ்பேம்களே இவை. பெரும்பாலும் மக்களை ஆசைகாட்டி வலையில் சிக்க வைக்கும் சங்கதிகளாக தான் இருக்கும். 'உங்களுக்கு லாட்டரியில் 100 கோடி பணம் பரிசு', ' பம்பர் குலுக்கலில் உங்களுக்கு வெளிநாட்டிலிருந்த்து 50 லட்சம் டாலர்கள் பரிசு', 'உங்களுக்கு 5 லட்சம் மதிப்புள்ள கிரெடிட் கார்டு dispatch செய்யப்பட்டுள்ளது', 'உங்கள் ஆதார்/பான்/ பாங்க் கணக்கு தேதி காலாவதியாகி விட்டது'.. இது போன்ற மெயில்களில் வரும் லிங்கை கிளிக் செய்தாலோ, கேட்கப்பட்டுள்ள முக்கிய தகவல்களை கொடுத்தாலோ.. அவ்ளோதான்! பெரும்பாலும் இவை  நம் தகவல்களை திருடி பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்களாகவே இருக்கும்.        

*) இது போன்ற Phishing Mails தொடர்பான மோசடியில் சிக்காமல் தடுக்க, இவ்வகை மெயில்களை தொடாமல், திறக்காமல் இருப்பது நல்லது.

Fraudulent Apps-
மோசடி செய்பவர்கள் டேட்டிங் வலைத்தளங்கள், சமூக வலைத்தளங்கள், டேட்டிங் ஆப்ஸ் (dating apps) போன்றவற்றை கொண்டு அரட்டை அறைகளைப் (private chat rooms) பயன்படுத்தி தனிப்பட்ட விவரங்கள் சேகரித்து அல்லது மக்களிடமிருந்து மிரட்டியும் பணத்தைப் பெறுகிறார்கள். சமீபகாலத்தில் அதிகப்படியான வரும் ஸ்கேம்களில் ஒன்று லோன் ஆப்ஸ் (loan apps). அரசின் அங்கீகரிக்கப்படாத சில மோசடி நபர்கள்/நிறுவனங்கள் மக்களுக்கு உடனடி கடன் வசதி தருவதாய் சொல்லி தகவல்களை பெற்றுவிடுகின்றன. பின்னர் பெரும் வட்டிபோட்டு அதிக பணத்தை திருப்பி கேட்கின்றனர்; அல்லது அவர்களுடைய மொபைல் போனை ஹேக் செய்து, அந்தரங்க போட்டோக்கள் , விடீயோக்களை அனுமதியில்லாமல் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர். அடுத்தது பெட்டிங் ஆப்ஸ்கள் (bettings apps) மக்களை பெரிதும் ஏமாற்றி பணம் பறித்து கொண்டு இருக்கின்றனர். இவர்கள் ஏமாற்றவில்லை என்றாலும் ஆன்லைனில் சூதாடி பெரும் பணமெல்லாம் ஜெயிக்க முடியாது. நம்முடைய பணஆசையை முதலீடாக கொண்டு பெரும் பணம் ஈட்டுகிறார்கள்.  

இது போன்ற Apps தொடர்பான மோசடியில் சிக்காமல் தடுக்க: அங்கீகரிக்க படாத ஆப்ஸ் களை மொபைலில் நிறுவல் இருப்பது நல்லது. மேலும் எந்த ஒரு ஆப்பை நிறுவும் போது அதனுடைய terms and conditions படித்து, மொபைலில் எதற்கு permission கொடுக்க வேண்டுமோ அதற்கு மட்டுமே கொடுத்தால் நலம்.

இது போன்று பல எண்ணிலடங்கா பணம் டிஜிட்டல் உலகத்தில் கொள்ளை போய் கொண்டே இருக்கிறது. நம்முடைய கவனமும், சரியான விழிப்புணர்வுமே இது போன்ற மோசடிகளிடமிருந்து நாம் தப்பிக்க பெரும் துணையாக இருக்கும்.

Cybercrime Complaint Number – 155260.
National Cyber Crime Reporting Portal (Helpline Number -1930)
https://cybercrime.gov.in

சைபர் திருடர்களை பற்றிய முந்தைய பதிவு: http://www.pazhaiyapaper.com/2014/04/cyber-crime.html


நன்றி !!!
பி.விமல் ராஜ்