ஞாயிறு, 31 மார்ச், 2013

இடஒதுக்கீடுக்கு இடம் இல்லை !!!

வணக்கம்,

"சாதிகள் இல்லையடி பாப்பா! " 
- பாரதி 

" சாதி இரண்டொழிய வேறில்லைசாற்றுங்கால் 
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி"    
ஒளவையார்

இவையெல்லாம் நாம் பள்ளிக்கூட வகுப்புக்களில் படித்ததோடு சரி.

சுதந்திர காற்று நம் நாட்டில் வீச தொடங்கிய நாள் முதல் இருப்பது இந்த சாதி/ மத பிரச்சனையும், சாதிவாரியிலான இடஒதுக்கீடும் தான். ஆரம்ப காலத்தில் இந்தியாவில் ஏற்றதாழ்வு அதிகமாக இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த வித சலுகைகளும், அடிப்படை வசதி வாய்ப்பும் கூட கிடைக்கவில்லை.எல்லா வகையிலும் உயர்ந்த சாதி மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது. நம் நாடு விடுதலை பெற்ற பின்னரும் இதே நிலைமை தான் நீடித்தது.

இதனால் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் உட்பட பல தலைவர்கள்  பிற்படுத்தபட்டோருக்குக்காக போராடினர். இதன் முலம் எல்லார்க்கும்  எல்லா சலுகைகளும்,வாய்ப்பும் கிடைக்கும் என எண்ணி, 'சாதிவாரியிலான இடஒதுக்கீடு ' என்ற சட்ட முறையை கொண்டு வந்தனர். அன்று முதல் இன்று வரை, கல்விப்படிப்பு, வேலைவாய்ப்பு, விளையாட்டு, அரசியல் என எல்லா துறைகளிலும் இடஒதுக்கீட்டில் எல்லா வாய்ப்புகளுமே உரிமைகளும் அளிக்கப்படுகிறது.

அன்றைய காலகட்டத்தில் பிற்படுத்தபட்டவருக்கு அங்கீகாரம் கிடைக்க இடஒதுக்கீடு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது.இன்றோ,நிலையே தலைகீழ். கிட்டத்தட்ட 50/60 ஆண்டுகளாக இந்த சட்ட முறையினால் பல நலிந்த பிரிவினரும், சாதியால் பிற்படுத்தபட்டவரும், நிறைய சலுகைகளும், வாய்ப்புகளும் பெற்றுள்ளனர். ஆனால் இப்போதும் இடஒதுக்கீடு  தேவையா என்ற கேள்வியே என் மனதில் எழுந்துள்ளது. மற்ற சாதியினருக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்பை  பிற்படுத்தபட்ட சாதியினரே பறித்து கொள்ளும் நிலை வந்துவிட்டது. திறமையை பார்க்காமல் சாதிப்பிரிவை  பார்த்து வாய்ப்பு தருவது என்பது எந்த வகையில் நியாயம்?

இது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். உதாரணமாக கல்வித்துறையை எடுத்து கொண்டால், உயர்ந்த சாதியை  சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளி படிப்பில் 90 விழுக்காடு எடுத்தபோதிலும், 80 விழுக்காடு எடுத்த பிற்படுத்தபட்ட சாதியை  சேர்ந்த மாணவருக்கே கல்லூரியில் முன்னுரிமை என்ற நிலை வந்து விட்டது.

அரசாங்க வேலைவாய்ப்புகளிலும்  இப்படி தான் நடக்கிறது. ஒரு அரசு நிறுவனத்திற்கு நூறு பேர் தேவை என்றால், ஒவ்வொரு சாதி பிரிவினருக்கும் தனித்தனி சதவிகிதத்தில் ஆட்கள் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். அரசியலிலும் இதே கதை தான்.

இந்த சாதிவாரியிலான இடஒதுக்கீடு ஏன் என்று கேட்டால், எல்லா சாதியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்தையே முன்வைக்கிறார்கள். இந்த சாதி ரீதியிலான அரசியலையே காட்டுகிறது. தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் சாதியை பார்த்து  இடஒதுக்கீடு என்பது தேவையில்லாதது.

சாதி இடஒதுக்கீடுப்பற்றி  பல கிண்டல்,நையாண்டிகளும் இணையதளதிலும், சமூக வலைத்தளங்களிலும் உலா வருகின்றன . இந்நிலை நீடிக்குமாயின், கிழே படத்தில் உள்ளது போல் நம் நாட்டில் எதிர்காலத்தில் வந்தாலும் ஆச்சிர்யபடுவதற்க்கில்லை .நாம் நாட்டில் இன்றைய சூழலில் அனைத்து தரப்பினரும் கல்விபயின்று நல்ல வேலைக்கு சென்ற  போதிலும், ஒரு சில கிராமங்களில் இன்றும்  பிற்படுத்தபட்ட சாதியை சேர்ந்தவருக்கு சமமான /சரியான வசதியும், வாய்ப்பும், உரிமையும் கிடைப்பதில்லை என்பது மறைக்க முடியாத உண்மை.  இன்றளவிலும் சாதியை காட்டி கல்வியறிவு கூட கிட்டாத நிலையில் தான் நம் நாடு உள்ளது. இந்த சாதி கொடுமைகளை களைந்து, அவற்றை சீர் செய்ய சட்டங்களை கொண்டு வந்தாலே போதும், இடஒதுக்கீடு பற்றி பேசவே தேவை இல்லை. அரசு எல்லாருக்கும் எல்லா வசதியும், உ ரிமையும் திறமைக்கு ஏற்ப வாய்ப்பும் கிடைக்க வழி செய்து  கொடுத்தாலே தரமான, வளமான சமுதயம் அமையும்.
நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 

பி.கு : பதிவை படித்த பின் தங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டம் (comment) இடுமாறு கேட்டு கொள்கிறேன்.

ஞாயிறு, 24 மார்ச், 2013

புதிய விடியலை நோக்கி...

வணக்கம் !!!

சில தினங்களாக எல்லா ஊடகங்களிலும் முதன்மை செய்தியாக இருப்பது இலங்கை தமிழர்கள் பிரச்சனையும், தமிழக மாணவர்களின் போராட்டமும் தான். ஆளாளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் நானும் எனது கருத்துக்களை பகிர விரும்புகிறேன்.

2009-ல் இலங்கை அரசின் கொலைவெறி தாக்குதலால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெடிகுண்டு தாக்குதலில் பலியானார்கள். பலஆயிரம் பேர் காயங்களோடு இந்தியாவிற்கு அகதிகளாக வந்தனர். பல ஆயிரம் பேரை இலங்கைப்படையை சேர்ந்த வீரர்கள் வெறியர்கள், ஈழத்தமிழர்களை நிர்வாணபடுத்தி சித்திரவதை செய்து இரக்கமே இல்லாமல் கொன்று குவித்தனர். அதை நாமும் சேனல் 4 உதவியுடன் பல காணொளிகளை  நாமும் பார்த்துள்ளோம்.

இதைத்தவிர, அடிக்கடி இலங்கை கடற்படையினரால் நாகை, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி தாக்குதலும், அவர்தம் மீன்பிடி வலைகளை அறுத்தும்,சிறைபிடித்தும், அவர்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்தும் விடுகின்றனர்.


இவ்வளவு போர்க்குற்றங்களை செய்தபின் வீரன் வேலுபிள்ளை பிரபாகரனை சூழ்ச்சி செய்து கொன்று, போரில் வென்றுவிட்டதாக மார்தட்டி கொள்ளும் சிங்கள வெறியர்கள், போர் முடிந்த பின்பும் ஈழ மக்களை பெண்கள், குழந்தைகள், எனவும் பாராமல் சித்திரவதை செய்து கொன்று குவிக்கிறனர். 

இத்தகைய போர்க்குற்றங்களையும் அராஜகங்களையும்  நிறுத்தக்கோரி தமிழக மக்களும், தமிழ் அமைப்பினரும் தமிழக அரசும் பலவித போராட்டங்களை நடத்தியுள்ளனர். மேலும் ஐ.நா சபையின் வாயிலாகவும் இந்த கொடூர செயல்களை தடுக்க முயற்சித்து  ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்துள்ளனர். மத்திய அரசோ இதைப்பற்றி கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இலங்கை  உள்நாட்டு விஷயத்தில் நாம் ஓரளவு தான் தலையிட முடியும் என்றும், வெளியுறவு அமைச்சர் இலங்கையில் பேச்சுவார்த்தையில் உள்ளார் என்றும், திரும்ப திரும்ப ஒரே பதிலை தான் சொல்கின்றனர்.                                      

இவர்கள் தான் இப்படி என்றால், தமிழக அரசு இன்னும் மோசம். கடந்த ஆட்சியின்போது,  இலங்கை பிரச்னைக்கு  ஒரு தீர்வுக்கு வராவிட்டால் மத்திய அரசிடமிருந்து ஆதரவை  திரும்ப பெற்று கொள்வோம் என பூச்சாண்டி காட்டியதுடன் சரி. மக்கள் நம்புவார்கள் என எண்ணி ஒரு நாள் (3 மணி நேர) உண்ணாவிரத போராட்ட நாடகமும் நடத்தி, இவர்கள் சொன்னதால் இலங்கை அரசு போரை நிறுத்திவிட்டதாக சொல்லியும்  விளம்பரத்தை தேடி கொண்டனர். இப்போதுள்ள ஆட்சியிலும் பழிவாங்கும் படலத்தை தவிட வேறு எதுவும் இவர்கள் செய்ததாக தெரியவில்லை.

இந்த இனப்படுகொலைகள் கிட்டத்தட்ட 30/40 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருகிறது. பல பிரதமர்களும், முதலமைச்சர்களும் வந்து சென்றாலும் உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. இனப்படுகொலைகள் காரணமாக அவ்வபோது சில பேச்சாளர்களை இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார்கள் என கூறி கைது செய்தது தான் மிச்சம். எனக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் எந்த அரசும், (சில) அரசியல்வாதிகளும் ஆட்சியில் இருக்கும் போது இந்த பிரச்சனைகளை பற்றி குரல் கொடுக்க மாட்டர்கள். அனால்,அவர்களே எதிர்க்கட்சிகளாக மாறும்போது இனப்பற்று அதிகமாகி, அவர்களும்  தமிழினத்தை சேர்ந்தவர்கள் என தெரிந்து நாளோரு அறிக்கையும், மாதமொரு போராட்டமும் நடத்துகின்றனர். இவர்கள் யாரை
ஏமாற்றுகிறார்கள் ???            

இலங்கை தமிழர் பிரச்சனை வெடிக்கும் போதெல்லாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு அமைப்பினரும், தனித்தனியே போராடி தங்கள் எதிர்ப்பை காட்டுகின்றனர். சினிமா துறையினரும் தனியே போராட்டம் நடத்தி அவர்களுடைய விளம்பரத்தை தேடி கொண்டனர். இவர்களால் இந்த பிரச்சனையை தீர்க்க முடியது என தெரிந்தும் தங்கள் தமிழ்பற்றை காட்டவும், மற்றவர் யாரும் தங்களை இனப்பற்று இல்லாதவர் என சொல்லிவிட கூடாது என்பதற்காகவும் இப்படி செய்கிறனர்.
  
ஆனால் இவற்றிற்கெல்லாம் விதிவிலக்காக இப்போது தமிழக மாணவர்களின் அறப்போராட்டம் எந்தவித சொந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி போராடுவது ,சற்றே மனதை நெகிழ செய்கிறது.

'பஸ் டே'  கொண்டாடும் போது இவர்கள் பண்ணாத அட்டூழியம் இல்லை. குறிப்பாக லயோலா, பச்சையப்பா மற்றும் நியூ கல்லூரி மாணவர்கள் தான். இவர்களை திட்டாத வாயே இல்லை எனவும் கூறலாம். ஆனால் இப்போது எட்டு பேருடன் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம், இன்று எட்டுத்திக்கும் பரவி எல்லா கல்லூரி மாணவ மாணவியரும் கலந்து கொள்ள செய்துள்ளது. மாணவ/மாணவியருடன் பொது மக்களும் அதற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

இது ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் ஒற்றுமையை காட்டுகிறது. எனக்கு என்னவோ எதிர்ப்பை காட்டவோ,கோரிக்கைகளை நிறைவேற்றவோ, தமிழகத்தில் போராடுவதை விட, டில்லியில் பெரிய "கை" களின்  வீட்டின் முன்னே அறப்போராட்டம் நடத்தினால் என்ன என்று தான் தோன்றுகிறது.அப்போது தான் ஒட்டுமொத்த நாட்டிற்க்கும் இந்த பிரச்சனைகள் தெரிய வரும். மற்ற மாநில/ மொழி  ஊடகங்களும் இதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வேறு இனமக்களுக்கும்  புரிய வைப்பார்கள்.

1969-ல்  மாணவர்களும், மற்ற தமிழ் அமைப்பினரும் மொழிப்போருக்காக போராடி  வெற்றியும் அடைந்தனர். அதுபோல இப்போது மாணவர்களின் கிளர்ச்சி பலரையும் தட்டி எழுப்பி உள்ளது. இதுவும் வெற்றி பெறும் என்று நம்புவோமாக!!!

எவ்வளவு தடைகள் வந்தாலும் இலங்கையில், தனி ஈழம் நாடு கிடைக்கும் வரையிலும்,போரில் எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு தக்க உதவியும் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை ஐ.நா சபை ஏற்று போர்க்குற்றவாளிகளை தண்டித்து ஈழமக்களுக்கு புதிய வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும். இனியாவது அவர்களுக்கு புதிய விடியல் மலரட்டும்...

மலரட்டும் தனி ஈழம் !!! வெல்லட்டும் தமிழினம் !!!  நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 

ஞாயிறு, 17 மார்ச், 2013

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா !!!

வணக்கம், 

எல்லோர்க்கும் அவர்களுடைய சொந்த ஊரை பற்றி மற்றவருக்கு சொல்ல வேண்டும் என ஆசை உண்டு. எனக்கும் தான். அதை பற்றி தான் இங்கு பதிய போகிறேன். நான் பிறந்து வளர்ந்தெல்லாம் சிங்கார சென்னை என்றாலும் எனது அப்பா, தாத்தா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரு சிறு கிராமத்தில் தான். கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் நன்னிலத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சேங்கனூர் என்னும் குக்கிராமம்.  

ஊர் பேர் சொன்னவுடன் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு பிரபலம் இல்லை என்றாலும், எங்கள் ஊரில் உள்ள சோமநாத சுவாமி கோவில் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரச்சியத்தம்.  சேங்கனூரிலிருந்து சற்று தூரத்தில் உள்ள திருவாஞ்சியம் ஊரில் உள்ள சிவன் கோவிலும் மிகவும் பிரபலம். திருவாஞ்சியத்தில் சிவபெருமான் தான் மூலக்கடவுள் என்றாலும் எமதர்மராஜனுக்கு தனி சன்னதி இங்கு மட்டும் தான் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர்.   

சிறு வயது முதல் நகர வாழ்க்கையை பார்த்து வளர்ந்த நான், எங்க ஊருக்கு செல்வது என்பது மிகவும் பிடித்தமான விஷயம். பொதுவாக குலதெய்வ வழிபாட்டிற்காகவோ அல்லது எங்கள் வீட்டு சுட்டிகளுக்கு மொட்டையடித்து காது குத்தவோதான் ஊருக்கு செல்வோம் (எனக்கும் அங்குதான் !!!). முன்பெல்லாம் ஊருக்கு போகும் போது, சேங்கனூர் பேருந்து 
நிலையத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து போக மாட்டு வண்டி வரும். அதில் வைக்கோல் 'குஷனில்' உட்கார்ந்து கொண்டு வண்டி குலுங்க குலுங்க வீட்டுக்கு செல்வோம். ஆனால் இப்போதெல்லாம் நங்கள் வரும்முன் சித்தப்பாவின் கார் வந்துவிடுகிறது.

சினிமாவிலும்,கதைகளிலும் நான் பார்த்த கிராமங்களை போலவே, இங்கும், கண்ட இடமெல்லாம் பச்சை பசெலன வயல்வெளி,தண்ணீர் நிறைந்த குளம், வரிசையாக தென்னை மரங்கள், ஓட்டு வீடு, கூரையின் மீது மயில், வைக்கல்போர்,பெரிய கொல்லை, முங்கில் காடு, மாந்தோப்பு, ஒத்தை மரத்து பாலம்,மாட்டுவண்டி, டிராக்டர் , கதிரறுக்கும் இயந்திரம் என நகர வாழ்க்கையில் பார்த்திராத காட்சிகள். சிறு வயதில் என் தம்பி 
தங்கையருடன் வைக்கோல் போரிலும், மாட்டுவண்டியிலும்  ஏறி விளையாடிய நாட்களும் உண்டு.   

சேங்கனூரைப்  பற்றி மேலும் சொல்ல வேண்டுமானால், இங்குள்ள மக்கள்  மற்ற கிராமங்களை போல விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். பெரியார் காலத்தில் ,பெரும்பாலானோர் திராவிட கழகத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் இந்த ஊரில் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய இந்து பண்டிகைகளை விமர்சையாக கொண்டாடுவதில்லை என் சொல்கிறனர். இன்னும் சிலர், சில ஆண்டுகளுக்கு முன் தீபாவளியன்று ஊரில் உள்ள பெரிய வீட்டு பெரியவர் ஒருவர் இறந்ததால், அதிலிருந்து நம் ஊருக்கு தீபாவளி இல்லை என என் பாட்டி சொல்லி கேட்டதுண்டு. உழவர் திருநாளாம் பொங்கல் விழாவின் பொது மட்டும் ஊரே களைக்கட்டும். கோவிலில் விசேஷ பூஜை, பெரியவர்கள் முதல்  சிறியவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனியே விளையாட்டு போட்டிகள் என கொண்டாடி மகிழ்வர். 

மாட்டு பொங்கலின் போது காளைகளை அலங்கரித்து தெருக்களில் ஓட விடுவார்கள். அவ்வளவுதான் எங்க ஊர் ஜல்லிகட்டு. அதுமட்டுமல்ல மாட்டு பொங்கலன்று பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கினால், ஆசியோடு, பரிசாக பணமும் தருவார்கள் (எனக்கு இதுதான் ரொம்ப பிடித்தது!!!).சமீபத்தில் நாங்கள் குல தெய்வ வழிப்பாட்டிற்காக ஊருக்கு சென்றிருந்தோம். சுற்றி பார்க்கும் போது தங்களுடைய நிலத்தில் சவுக்குத்தோப்பு போட்டிருப்பதாக என் சித்தப்பா கூறினார். நேரில் சவுக்குத்தோப்பை பார்க்காத நான் அதை காண தயாரானேன். அந்த உச்சி வேலையிலும் வெயிலே தெரியாமல் ரம்மியமாக இருந்தது. தரையில் சவுக்கை மர இலைகள் கிழே விழுந்து தார்ப்பாய் போல விரிந்திருந்தது. நான் சுற்றி பார்க்கும் போதே என் தம்பி சவுக்குத்தோப்பை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து கொண்டிருந்தான். காற்று அடிக்கும் போது மரங்கள் ஆடுவது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. 

அடுத்தது எங்கள் குலதெய்வ கோவில். கோவில் என்றவுடன் அடுக்கு கோபுரமும்,கலசமும், பெரிய தூண்களும் இருக்கும் 
என்றோ,அல்லது  வெட்டவெளியில் ஆறடி உயரத்தில் வீச்சரிவாளோடு நிற்கும் காவல் தெய்வமோ என்று எண்ணி விட வேண்டாம். ஊருக்கு வெளியே, வயல்களுக்கு நடுவே  சிறிய திட்டு,அதில் ஒரு சிறு அம்மன் கோவிலும், அதனருகே அலுமினிய கூரையின் கிழ் ஒரு முழு செங்கல் அளவுள்ள கருங்கல்லை முக்கால்வாசி மண்ணில் புதைத்து,வெள்ளை துணியால் சுற்றி, சந்தனம்,குங்குமம் வைத்து இது தான்  நம்ம குலசாமி வீரன் என்று சொல்லுவர். ஒவ்வொரு முறையும் பூஜை போடும் போது , கிடவோ/கோழி கறியோ வைத்து கும்பிடுவார்கள் என நினைப்பேன். ஆனால் அதெல்லாம் நமக்கு பழக்கம் இல்லை என கூறி வெறும் மாவிளக்கும், பொட்டுகடலையும் வைத்து படைத்தது விடுவார்கள்.


வீரன் கோவில் 
என்னதான் விழுந்து விழுந்து வர்ணித்தாலும் இரண்டு நாட்களுக்கு மேல் அங்கு இருந்தால் நமக்கு பொழுது போகவே மாட்டேன்கிறது. என்ன இருந்தாலும் சென்னையிலேயே இருந்து விட்டு கிராமத்திற்கு சென்றால் இரண்டு,முன்று நாட்களுக்கு மேல் இருக்க நமக்கு தறி கொடுக்காது.     

மீண்டும் வரும் பொங்கலுக்கு ஊருக்கு போக வேண்டும் என அப்பா சொல்லி வருகிறார். கால நேரம் சரியாக இருந்து ஜனவரியில் ஊருக்கு போனால், பொங்கல் கொண்டாட்டத்தை பற்றி விவரமாக எழுதுகிறேன்.  

நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 

வியாழன், 14 மார்ச், 2013

சமமான கல்வியால் உயரும் சமுதாயம்


வணக்கம் !!!

ஓர் நல்ல சமுதாயம் வளர நல்ல சிந்தனையும், கல்வியறிவும் தேவை. அந்த கல்வி மக்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டியது மிகமிக அவசியம். அப்படி கிடைத்தால் தான் நாட்டிற்கு நல்ல வருங்காலத்தை உருவாக்க முடியும். இப்போதுள்ள கல்விமுறைப்படி அனைவருக்கும் சமமான கல்வியறிவு கிடைக்கிறதா ??????? அதை பற்றி இந்த பதிவில் பார்க்காலம்.

பண்டைய காலம் முதல் 200 ஆண்டுகள் முன்னால் வரை நம் முன்னோர்கள், கல்வி பயில குருகுலத்திற்கு சென்றார்கள். குருகுலம் என்பது ஆசிரியர் வீடாகவோ, கோவிலாகவோ, பொது மண்டபமாகவோ, குளக்கரையிலோ இருந்தது. குருகுலத்திலும் செல்வந்தர் வீட்டு பிள்ளைகளும், ஏழை பிள்ளைகளும் தனித்தனியே கல்வி பயின்றனர். குருகுலத்தில் பாடம் மட்டும் இல்லாமல் வீரம், சரித்திரம்,கலாச்சாரம் ஆகிய அனைத்தும் போதிக்கப்பட்டது. பெரும்பாலும் ஆண்பிள்ளைக்களுக்கே குருகுலத்தில் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டது.


பிறகு, ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் தாமஸ் பாபிங்டன் மெக்காலே என்பவரால் 1830-ல் நவீன கல்வி முறையில் தான் ஆங்கில வழி கல்வி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. கணிதம், அறிவியல் போன்ற பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தபட்டன.  இதில் தான் பள்ளிக்கு சென்று கல்வி பயிலும் முறை வந்தது. முதலில் இந்த முறை நன்றாக இருந்த போதிலும், காலப்போக்கில் கல்வி பணம் கொழிக்கும் தொழிலாக மாறியது தான் வருத்தமான விஷயம்.

இன்றைய சூழலில் தமிழகத்தில் கல்வியறிவு 80.33 சதவிகிதத்ததில் உள்ளது. எல்லா ஆட்சியிலும் உள்ள நலத்திட்டங்களில் இலவச கல்வியும், அனைவருக்கும் கல்வியும் கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்கும் போதே
மாநிலம் முழுவதும் சமமான கல்வி கிடைப்பதில்லை.

இப்போதுள்ள கல்விமுறைப்படி, அதாவது மும்முறை தேர்வு முறையின் படியோ  அல்லது சமச்சீர் கல்வியின்படியோ (கடந்த ஆட்சியில்) அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும் என்றால் அது சரியல்ல. தமிழகத்தில் மட்டும் மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), தமிழ்நாடு மாநில கல்வி வாரியம் (ஸ்டேட் போர்டு), தமிழ்நாடு மேல் நிலை கல்வி வாரியம் (மெட்ரிக்குலேசன் ), ஆங்கிலோ இந்தியன்  கல்வி வாரியம்  என  வாரியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி திட்டங்களின் முலம் கல்வி கற்கும் மாணாக்கருக்கு சமமான கல்வி கிடைப்பதி. எப்படி என கேட்டல், உதாரணத்திற்கு ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவனின் பாடத்திட்டமும், தனியார் பள்ளியில் (மெட்ரிக்குலேசன் மாணவனின் பாடத்திட்டமும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலும் அரசு/ அரசு உதவி பெரும் பள்ளியில், மெட்ரிக்குலேசன்  பாடத்திட்டங்களை விட உள்ளடக்கம் குறைவாகவே இருக்கிறது. அதே போல் மெட்ரிக்குலேசன்  பாடத்திட்டத்தில் இருப்பதை விட சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் உள்ளடக்கம்அதிகமாக இருக்கிறது. இதுதான்  சமமான பாடத்திட்டமா ??? இதில் படித்த/ படிக்கும் மாணவருக்கு எப்படி  சமமான  கல்வியறிவு கிடைக்கும் ???

என் கருத்துப்படி இதற்கெல்லாம் ஒரு வழி என்ன என்று கேட்டால், அரசே எல்லா கல்வி நிறுவனங்ககளையும் எடுத்து நடத்த வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல், பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாநிலத்தில் உள்ள எல்லா   பள்ளிகளிலும் சமமான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவையெல்லாம் உடனடியாக நடைமுறைக்கு  வராது என்று அறிந்த போதும்,வந்தால் நன்றாக இருக்கும் என்பதே என் கருத்து. ஏனென்றால் முக்கால்வாசி கல்வி நிலையங்கள் சிலஅரசியல்வாதிகளிடமும், பண முதலைகளிடமும் தான் உள்ளது.  நடைமுறைக்கு வந்தால் பலருக்கு ஆசிரியர் பணி வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே பள்ளிநிறுவனங்களை நடத்துபவரும்,அதில் பணிபுரியும் ஆசிரியருக்கும் மாற்று வழியை அரசு  செய்ய வேண்டும். அவர்களுக்கு என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை என்றாலும், சமமான கல்விக்கு இது ஓர் நல்ல ஆரம்பமாக அமையும்.நன்றி !!!

-பி .விமல் ராஜ்


சனி, 9 மார்ச், 2013

மரண தண்டனை - ஏன் கூடாது ?

வணக்கம் !!!

என் சொந்த கருத்துகளையே இந்த கட்டூரையில் நான் பதிவு செய்கிறேன். தனி நபரையோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ, அல்லது அவர்களது கருத்துகளையோ புண்படுத்துமேயானால், என்னை மன்னிக்கவும்!

இக்காலகட்டத்தில் நம் நாட்டில் உள்ள சமூக பிரச்சனைகளில் மிக முக்கியமானது தூக்கு / மரண தண்டனையை ரத்து செய்வதுதான். அதை பற்றி தான் இங்கே பதியவிருக்கிறேன்.

மரணம் எல்லோருடைய வாழ்கையிலும் நிகழும் ஒர் சம்பவம். மரண தண்டனை கொலை/ கற்பழிப்பு போன்ற பாதக செயல்களை செய்யும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் கொடுக்கப்படும்  உச்சபட்ச தண்டனையாகும். இது அனைவருக்கும் தெரிந்ததே !!!

மரண தண்டனை கிட்டதட்ட 58  நாடுகளில் இன்னும் வழக்கில் உள்ளது. 97 நாடுகளில் மரண  தண்டனையை தடை செய்துவிட்டனர். மீதம் உள்ள நாடுகளில் முழுமையாக தடை செய்யாமல்,போர் குற்றவாளிகளுக்கும், வேறு சில குற்றங்களுக்காகவும் வழங்கபடுகிறது.( தகவல்: விக்கிபீடியா )


சமூக ஊடகங்களும் ,மற்ற ஊடகங்களும், மக்கள் நல சங்கங்களும் மரணதண்டனையை அறவே ரத்து செய்ய கோரி வருகின்றனர். அவர்கள் வைக்கும் முக்கியமான வாதம்,  மரண தண்டனை அறமற்றது, மனிதாபிமானமில்லாத  செயல் என்பதுதான் அது.

"  கொலைக்கு தண்டனை கொலையாகாது ! "
"  தண்டனை அடைந்தவர் குடும்பத்தினர் என்ன செய்வார்கள் ? "
"  மரணதண்டனை நிடுநிலைமையான தீர்பல்ல ! "

எல்லாரும் சொல்வது போல இந்த கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை. இது போன்ற வாசகங்கள் கேட்க நன்றாக தான் இருக்கும். ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது. இவையெல்லாம் ஒரு விதத்தில் ஏற்று கொள்ளும்படி இருந்தாலும், இந்த குற்றங்களுக்கு எல்லாம் என்ன தீர்வு?

கொலை பாதகம் செய்தால் உச்ச தண்டனை வழங்கப்படும் என்ற பயஉணர்வு இருந்தால் தான்  மக்களிடையே குற்றங்கள் குறையும். அதுவே இல்லை என்றால் குற்றங்கள் குறையாது. மரணதண்டனை அமலில் இருக்கும் போதே இத்தனை  கொலைகளும், கற்பழிப்புகளும் நடக்கும் போது, தண்டனையே ரத்தாகிவிட்டால் ?!?!

சிறைசாலை என்பது ஒருவன் தான் செய்த தவறை உணர வைக்கும் இடமாகவோ, திருந்த ஓர் வாய்ப்பாகவோ இருக்கலாம் என்றும் சொல்பவர்கள் உண்டு. ஆவேசபட்டோ, தெரியாமலோ, தவறு செய்பவர்களுக்கு மரண தண்டனைல்லாமல் வெறும் சிறை தண்டனை மட்டும் வழங்கபடலாம். அதுவும் சரியான தண்டனையாக இருக்குமா என எனக்கு தெரியவில்லை...

சர்வ சாதாரணமாக  கொலை செய்பவனிடம் திருந்த வாய்ப்பு கொடுப்பது
என்பது ஏற்க கூடியதாக இல்லை. உதாரணமாக, தர்மபுரியில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்து வழக்கிலும், நொய்டாவில் நூற்றிருக்கும் மேற்பட்ட சிறு குழந்தைகளை கொன்று, அவர்களுடைய உறுப்புகளை விற்ற வழக்கிலும், சமீபமாக தில்லியில் மாணவியை அலங்கோல படுத்திய வழக்கிலும், குற்றம் சாட்டப்பட்ட / குற்றவாளிகளை மன்னிகவோ, திருந்த ஓர் வாய்போ, அல்லது 10/ 20 ஆண்டு கால சிறைதண்டனையோ ஒரு சரியான தீர்ப்பாக இருக்காது , இருக்கவும் முடியாது. அவர்களுக்கெல்லாம் அரபு நாடுகளை போல தண்டனைகளை வழங்கப்பட வேண்டும்.

என் கருத்தில் கொஞ்சம் வன்மம் இருப்பது போல தெரிந்தாலும், அதை என்னைபோல ஒரு சாதாரணனின் மனம் ஏற்க மறுக்கிறது. நாம் எவ்வளவு தான் பேசினாலும், சமூக ஊடகங்களில் பகிர்ந்தாலும், அரசாங்கமும் நீதிமன்றமும் இதை பற்றி முடிவு எடுக்காதவரையில் ஒரு பயனும் இல்லை. அவர்கள் போராடுகிறார்கள், இவர்கள் வாதடுகிறார்கள்  என குழப்பாமல் ஒரு நடுநிலைமையான தீர்பே இதற்கு சரியான முடிவு.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


செவ்வாய், 5 மார்ச், 2013

எனது வலைப்பயணம்


வணக்கம் !!!


எனக்கு எப்படி வலைப்பதிவு (blog) ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது என்பதை உங்களிடம் பகிர்கிறேன்.  கல்லூரி பருவம் முதல் (Web Designing) வெப் டிசைனிங், (blog) பிளாக் ஆகிய விஷயங்களில்  மிகுந்த  ஈடுபாடு.பெரிதாக இல்லாவிட்டாலும் கூட ,சாதாரண HTML பைல் ஒன்றை எழுதி அதற்கு இணைப்பு (link) கொடுத்து மகிழ்வேன். என்ன பதிவை போடுவது , எதை பத்தி எழுதுவது  என தெரியாமல் பிளாக்/ வலைத்தளம் உருவாக்கும் ஆசையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன்.

கல்லூரி படிப்புக்கு பிறகு, ஒரு தனியார் Call Center-ல் இரவு நேர வேலையில்  (நைட் ஷிப்ட் )  வேலை  செய்யும் பொது பிரபாகரன் என்பவர் தன்னுடைய தன் வலைப்பதிவு முலம் டீம் லீடர் முதல் மேனேஜர் வரை அனைவரையும் கவர்ந்துழுத்திருந்தார். அவருடைய பதிவுகளில் முக்கால்வாசி சினிமா விமர்சனங்களும், சில எதார்த்த சம்பவங்களும் ,ஒரு சில நல்ல கருத்துகளும்(!?!?!?) இருக்கும். நானும் அவருடைய  வலைப்பதிவின் ரசிகனானேன். அவரை பார்த்து எனக்கும் வலைப்பதிவு ஆரம்பிக்கும் ஆசை மீண்டும்  எட்டி பார்த்தது.

பிறகு அந்த கால் சென்டரை  விட்டு , வேறு சிறு கம்பெனியில்  வேலை 
செய்யும் போது , ஒரு வலைபதிவை  எப்படி நிரப்புவது என்பதை அறிந்து  கொண்டேன் . நாம் சொந்தமாக வலைப்பதிவு கட்டுரை (blog article) எழுத தெரியாவிட்டாலும் மற்ற வலைப்பதிவிலிருந்து காப்பி- பேஸ்ட் செய்யலாம் என அறிந்தேன். அட ! இது நல்ல யோசனையாக இருக்கவே முதலில் எனக்கு பரிச்சியமான Wordpress-ஐ தேர்ந்தெடுத்தேன். 


ஆரம்பத்தில் இணையதில் ஏதாவது ஒன்று எழுத வேண்டும் என ஆசை இருந்ததால் முதலில் சினிமாவை  பற்றி எழுதலாம் என்று நினைத்தேன் (நமக்கு தெரிந்தது அது தானே !! ஹ்ம்ம் ...கழுதை கெட்டால் குட்டி சுவர்!!! ).

அடுத்து தினசரி செய்தி வெளியிடும் வலை பதிவு எழுத  எண்ணினேன்.  நீண்ட யோசனைக்கு பிறகு எல்லாம் கலந்த ஒரு வலைபதிவை  ஆரம்பிக்க முடிவு செய்து "Vimal's Webworld" என்ற பெயரில் ஒன்றை கடந்த வருடம் ஜனவரி 6ஆம்  தேதி, ஆரம்பித்தேன்.  சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் வலைபதிவுகளை பகிர்ந்தேன். பார்பவர்களை  எல்லாம் அதற்கு லைக் போட சொன்னேன்.( ஹி..ஹி !!!எல்லாம் ஒரு விளம்பரம் தான் !!!)

 ஆரம்பித்த ஓரிரு வாரங்களில் என் வலை பதிவை தொழில்நுட்ப  வலைபதிவு என ஒரு சக வலைபதிவர் அவருடைய வலைப்பதிவில் போட, என் மனமோ ஆனந்த கூத்தாடியது. (ஏய் !!ஏய்!! நான் தான் !!நான் தான் !!நான் தான் !!). அதன் பிறகு என் வலைபதிவை தொழில்நுட்ப  வலைபதிவாக மற்றினேன். ஆறு மாதத்தில் 100 வலைப்பதிவு கட்டுரைகளை எழுதினேன். என்னோடைய  நாளடைவில் நேரமின்மை காரணமாகவும், நல்ல கட்டுரைகள்  கிடைக்காததலும் சிறிது மாதங்களுக்கு பதிவு ஏதும் போடவில்லை. 

மீண்டும் சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப பதிவுகளை போட ஆரம்பிதேன். அப்போதுதான் எனக்கு என்னமொரு வலைப்பதிவை ஆரம்பிக்க எண்ணம் தோன்றியது. நல்ல கவர்ச்சியான தலைப்பு வேண்டுமென யோசித்து,  பழைய பேப்பர்  என்ற ஒன்றை தொடங்கினேன். இதிலாவது  சொந்த கருத்துகளையும் (??!?!!) , கட்டூரைகளையும் போட வேண்டுமென எண்ணம் உள்ளது. இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என முழுமனதுடன்  இந்த பழைய பேப்பர் -ஐ   ஆரம்பிக்கிறேன்...

நன்றி !!!

-பி .விமல் ராஜ்