ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

லைக் போட்டால் குண்டாஸ் பாயுமா?

வணக்கம்,

கருத்து சுதந்திரம் என்பது நம் உரிமை. நம்முடைய கருத்தை நாம் எங்கு வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம். ஆனால் அது ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக் போன்றவற்றில் நம் கருத்துரிமையை நேர்பட பதிவு செய்வது என்பது கொஞ்சம் கடினமாகி வருகிறது. மற்றவரின் மனதையோ / நம்பிக்கையையோ/உணர்வையோ புண்படுத்தாமல் நம் கருத்தை பகிரலாம். சில அரசியல் பதிவுகள், மதம் சார்ந்த பதிவுகளை எழுதும் போது பெற்றோரும், உறவினர்களும் படிக்கும் போது பெரிய முட்டு கட்டைகளை போடுகின்றனர்.

"இது மாதிரி அரசியல் பத்தியெல்லாம் எழுதாதே! பின்னால ஏதாவது  நமக்கு பிரச்சனை ஆகிடும். நமக்கு இதெல்லாம் வேண்டாம்பா.. " என குறுக்கே நிற்கிறார்கள். என்னதான் நாம் பல சமாதானங்கள் சொன்னாலும், அவர்கள் ஒப்பு கொள்வதாய் இல்லை.

எனக்கு மட்டுமல்ல. கண்டிப்பாக பல பதிவர்களுக்கும், இதே போன்ற முட்டு கட்டைகளை சந்தித்திருக்ககூடும் . எல்லோரும் நமக்கு ஏதும் பிரச்சனை வந்து விட கூடாது என்று தான் சொல்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால் நாம் ஒண்ணும் இல்லாதது, பொல்லாதது  எல்லாம் எழுத போவதில்லையே!!! நம் கண்முன்னே பார்த்தது, செய்திதாள்களில் படித்ததை மட்டுமே தான் ஃபேஸ்புக் மற்றும் வலைப்பதிவுகளில் நினைவு கூர்ந்துள்ளோம். சில சமயம், அப்போதைய நாட்டு நடப்புகளையும், சில சம்பவங்களையும் தொகுத்து எழுதுகிறோம். இதில் தப்பேதும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.

எல்லாரும் சமூக வலைதளங்களில் அரசியல் வேண்டாம் என்று மறுக்க ஒரே காரணத்தை தான் சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன், மகாராஷ்டிரத்தில், சிவசேனாவின் தலைவர் பால் தாக்ரேவின் இறுதி சடங்கின் போது இரு மும்பை பெண்கள் கைது செய்யப்பட்டதை மனதில் கொண்டு தான் அஞ்சுகிறார்கள். "இந்த பந்த்/ கடையடைபெல்லாம் பயத்துக்காக தானே தவிர மரியாதைகல்ல.. " என்ற ரீதியில் போட்ட ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸே கைதுக்கு காரணமாம். கொசுறாக இதை லைக் பண்ண ஒரு மற்றொரு பெண்ணும் சேர்ந்து கைது செய்யப்பட்டாள்.


அன்று முதல் அரசியல் சம்பந்தமுள்ள எந்த ஒரு பதிவும் எவராலும் தைரியமாக போட முடியவில்லை. இருந்தாலும் நம் பதிவர்கள் விடுவதாய் இல்லை. பதிவை படிப்பவர்களுக்கு, இப்படியெல்லாம் அரசியலை பற்றி எழுதியிருக்கிறாரே என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.

மும்பை கைதை முன்வைப்பவர்களுக்கு ஒரு சில சேதிகள்-

1.) அந்த பெண் ஸ்டேடஸ் போட்டது, ஃபேஸ்புக்கில். அவளுடைய நண்பர்கள் மட்டுமே அதை பார்க்க முடியும். மற்றும் அவள் பதிவை லைக் செய்த பெண்ணின் நண்பர்கள் பார்க்க முடியும். இப்படியிருக்க இது எப்படி சிவசேனா தொண்டர்களுக்கு செய்தி போய் சேர்ந்தது என தெரியவில்லை.

2.) சிவசேனா தொண்டர்களுக்கு சிலர் அப்பெண்ணின் உறவினர் ஒருவரின் மருத்துவமனையை அடித்து உடைத்துள்ளனர். ஏன் பெண்ணின் வீட்டுக்கு செல்லாமல், உறவினர்  மருத்துவமனைக்கு சென்றார்கள் என தெரியவில்லை.

3.) போலிஸே நேரடியாக வந்து கைது செய்தது என்றாலும், சைபர் கிரைம் மூலம் இருவரையும் கண்டுபிடிக்கும் அளவுக்கு பால் தாக்ரே ஒன்றும் முதலமைச்சரோ, மந்திரியோ கிடையாது. மராட்டியத்தில் அவர் ஓர்  பெரிய அரசியல் தலைவர் என்றே ஒப்பு கொண்டாலும், சைபர் கிரைம் வைத்து உடனே கைது செய்யும் அளவுக்கு அந்த பெண்களும் தீவிரவாதிகள் இல்லை; இவரும் மகாத்மா இல்லை.

4.) அந்த இரு பெண்கள் கைதாகி பின் விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவர்களை கைது செய்த போலிஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கபட்டதாம். அப்படியென்றால் அவர்கள் யார் சொல்லி அப்பெண்களை கைது செய்தனர்? இதன் பின்னால் இருக்கும் அரசியல் பின்னணி என்ன? அந்த பெண்களும் இதற்கு உடந்தையா??  என பல கேள்விகள் நமக்குள் எழுந்து கொண்டே போகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, சில நாட்களுக்கு பின் தமிழத்தில், சைபர் கிரைம் வகையான குற்றங்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்தார் நம் (மக்களின்) முதலமைச்சர். அவ்வளவுதான் ! உடனே ஊடகங்கள் சில, மும்பை பெண்கள் லைக் போட்ட சம்பவத்தையும், முதல்வரின் புது சட்டத்தையும் ஒன்றாய் சேர்த்து , இனிமேல் அரசுக்கு எதிராக ஃபேஸ்புக் பதிவு போட்டாலோ, லைக் போட்டாலோ குண்டாஸ் பாய்ந்து விடும் என்று எழுதி விட்டனர். இதை படித்த பின்னர் எந்த பெற்றோர்/உறவினர்/நண்பராவது நம்மை அரசியல் பதிவு போட விடுவார்களா?  

முன்பே சொன்னது போல, எந்த ஒரு கருத்தும் மற்றவரை புன்படுத்தாதவரை தவறில்லை. அரசியலை பற்றி பதிவு போட்டால் உடனே கைது செய்து விடுவார்கள் என்ற எண்ணம் தவறு. அதற்காக எதையும் எழுதலாம் என்றும் அர்த்தமில்லை.

சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் எல்லாவற்றையும் அரசாங்கத்தால் கண்காணித்து கொண்டிருக்க  முடியாது. அது சாத்தியமானதும் இல்லை. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் ஸ்டேடஸ்களும், ஆயிரக்கணக்கானோர் லைக் மற்றும் கமென்ட்டுகளும் போடுகிறார்கள். இதில் யார் ஸ்டேடஸ் போடுவது, யார் லைக் போடுவது என்றெல்லாம் தினமும் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்த பக்கம் நின்றால் தவறில்லை. கோட்டை லேசாக தாண்டினால் .. தண்டனை தான்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்