திங்கள், 28 ஆகஸ்ட், 2017

விவேகம் - தோசை சுடும் கதை!

வணக்கம்,

கடந்த இரு நாட்களாக இணையத்தில் நடக்கும் காரசாரமான விமர்சன கச்சேரியின் புனைவு பதிவு இது.

-- AK தோசை கடை --

என்ன சார் ... தோசை எப்படி இருக்கு ? செமையா இருக்குல்ல..

ஹ்ம்க்கும்... நல்லாவேயில்லை .. எனக்கு சுத்தமா புடிக்கல..

என்ன சார்..இப்படி சொல்றீங்க ??

ஆமா! புடிக்கலைனா.. புடிக்கலைன்னு தான் சொல்வாங்க...

மாவாட்டுன மாஸ்டர் ரொம்ப கஷ்டப்பட்டு மெனக்கெட்டிருக்கார் சார்..

தோசை நல்லா இல்லலைன்னா, நல்லா இல்லைன்னு தான் சொல்லுவாங்க.. அதுக்காக மாவாட்டுனவர் பாவம்.... ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணி செஞ்சார்..  தோசை சுட்டவர் தங்கமான மனுசன்.. பொசுக்குன்னு நல்லாயில்லைன் னு சொல்ல கூடாதுன்னா எப்படி???... வாட் இஸ் திஸ் ???

ஆமான்டா ! நீ அவுங்க சுட்ட தோசையை மட்டும் நல்லா இருக்குனு சொல்லுவடா ... ..

நல்லா இருந்தா சூப்பர்ன்னு சொல்ல போறேன்... இல்லன்னா இதே பதில் தான்... இதுக்கு முன்னாடி சுட்ட தோசையெல்லாம் மட்டும் என்ன அமிர்தம் மாறியா இருந்துச்சு.. எதோ கொடுத்த காசுக்கு மசால் தோசை, ரவா தோசை, ஸ்பெஷல் தோசை அப்படீன்னு சாப்பிட்டு வரோம்...  அரைச்ச மாவிலேயே அரைச்சு தோசை சுட்டாலோ, தோசை மாவு புளிக்கவில்லை என்றாலோ, கல்லில் ரொம்ப  கருக விட்டாலோ, பிச்சி பிச்சு தோசை இருந்தாலோ, வேகாம இருந்தாலோ, தொட்டுக்க சப்புன்னு இருந்தாலோ யாருக்கும் சாப்பிடவே புடிக்காது...

போடங்கு இவனே... பெருசா சொல்ல வந்துட்ட நீ ... தோசை சுடுவது எப்படின்னு உனக்கு தெரியுமா? நீ முதல்ல ஒழுங்கா சுட்டு காட்டு பாப்போம்.. 

அட லூசு பயலே.... எனக்கு தோசையெல்லாம் சுட தெரியாது...கொடுத்த காசுக்கு தோசை சாப்பிட்டுவிட்டு  நல்லா இருக்குதான்னு  இல்லையான்னு  சொல்வேன்... நல்லா இல்லைனா அடுத்த வாட்டி நல்லா சுடு...சுட்டு காட்டு.. அப்புறம் பேசு...

இது மாணிக்க விநாயகம் சுட்ட தோசைக்கு மட்டுமல்ல..  கில்லி வேலுக்கும், விருமாண்டிக்கும்.. அவ்வளவு ஏன் ??? ஆளானப்பட்ட ராஜா லிங்கேஸ்வரனுக்கும் கூட பொருந்தும்.. தோசை மோசமா இருந்தா மோசம்ன்னு தான் சொல்லுவாங்க...

சரி தான்டா.. அதுக்குன்னு கொஞ்சம் கூடவா பிடிக்கலை.. வெள்ளைக்காரன் ஸ்டைல தோசை சுட்டிருக்கோம் தெரியுமா? 

டேய்...  ஸ்டைல் ஓகேடா.. டேஸ்ட் ???? தட்டுல காட்டும் போது பீட்ஸா மாறிதான் இருத்துச்சு... சாப்பிட்டா தானே தெரியுது, அது வெறும் டெக்கரேட் பண்ண கலர்புல் பெசரட்டு-ன்னு..

கடைசியா என்ன தான் சொல்லுற நீ???

தோசை நல்லாவே இல்லைன்னு சொல்லல... கொஞ்சம் நல்லா வந்திருக்க வேண்டிய தோசை தான்.... ஓகே!  ஒரே ஒரு முறை மட்டும் சாப்பிட்டு பார்க்கலாம் ! போதுமா???

அதுதுதுதுதுதுது !!!!!!!

( பதிவின் கரு மட்டும், ஏதோ ஒரு பேஸ்புக் போராளியின் பதிவிலிருந்து சுட்டது.. )

vivegam-review

எனது பார்வையில் -

மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து படம் சொதப்பியதால், படத்தை பலரும் வசை மொழிகின்றனர். விவேகம் என பெயர் வைத்து விட்டு படுவேகமாய் ஓடுகிறது. அதன் வேகத்தில் நாமும் ஓடாவிட்டால் காட்சிகள் புரிய வாய்ப்பில்லை. ஹேக்கிங் , ஹாலோகிராம், ட்ராக்கிங் என டெக்னாலஜிகள் கதையில் புகுத்தியிருப்பது பலம். இருந்தாலும் அதை பற்றி விரிவாக சொல்லியிருக்க வேண்டியது இயக்குனரின் கடமை. உதாரணத்திற்கு இதே தல படமான ஆரம்பம் படத்தில் uplink, downlink, server hacking, thumb impression (கை நாட்டு) போன்ற டெக்னாலஜி சார்ந்த விஷயங்களை ஆடியன்ஸுக்கு புரிய வைக்க சில காட்சிகளையும், வசனங்களையும் வைத்திருப்பார்கள். அது போல விவேகத்திலும் வைத்திருந்தால் நலமாக இருந்திருக்கும்.

கமெர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்க தேவையில்லை என்ற எழுதப்படாத விதியிருந்தாலும், அதை ஓரளவு தான் ஒத்து கொள்ள முடியும். இன்ட்ரோ சீனில் டேமிலிருந்து குதிப்பது, கிளைமாக்ஸில் (காஜல்) பாடலுடன் வில்லனிடம் சண்டை போன்ற விஷயங்கள் கொஞ்சம் கடுப்படிக்கிறது. 'யார்?'  படத்தில் சோமயாஜீலு பாட, நளினி  சாமி வந்தது போல ஆடுவார். சேம் பிளட் இங்கேயும் வருது.

தல அஜித் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார். உண்மை தான்... ஆனால் அதை சிறுத்தை சிவா அதை வீணடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். தல -க்காக ஒருமுறை பார்க்க.......லாம்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா??

வணக்கம்,

" இன்ஜினியரிங் படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்.  வாழ்க்கையில் சீக்கிரம் செட்டில் ஆகிவிடலாம். " இது கடந்த பதினைந்து அல்லது இருபது வருடங்களாக, பரவலாக இந்திய பெற்றோர்களால் நம்ப படும் ஒரு அசாத்திய (மூட) நம்பிக்கை. பெண்ணோ/பையனோ பத்தாவது முடித்தது முதல், பிளஸ் 1 -ல் பஃர்ஸ்ட் அல்லது செகண்ட் குரூப் எடுத்து, பின்னர் பிளஸ் 2 பொது தேர்வில் நல்ல மார்க் வாங்கி ஜெயித்து, Maths Physics Chemistry -ல் குறைந்தபட்சம் கட்டாப்ஃ 150 மேல் எடுத்து, முட்டி மோதி கவுன்சிலிங் மூலமாகவோ, கோட்டா மூலமாகவோ எப்படியாவது இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் பிடித்து தம் பிள்ளைகளை வாழ்க்கையில் உயர்த்திவிட வேண்டும் என்பது பல பெற்றோர்களின் கனவு...ஆசை... எல்லாம்.

அவர்கள் காலத்தில் இன்ஜினியர்களுக்கு நல்ல மதிப்பும், சம்பளமும் இருந்தது. இப்போது தெருவுக்கு 100 இன்ஜினியர்கள் இருக்கின்றனர். மேலும் 2000-த்தின் ஆரம்பத்தில் உலக மயமாக்கல், கணினி மயமாக்கல் என மென்பொருள் கம்பெனிகள் அடியெடுத்து வைத்த போது பி.எஸ்.சி /பி.ஈ. படித்தவர்கள் மற்ற துறையில் இருந்தவர்களை விட 5 மடங்கு அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்தனர். இரண்டாண்டில் வெளிநாட்டு பயணம், கை  நிறைய சம்பளம் என எண்ணங்களும் ஆசைகளும் வானளவு உயர்ந்தன. இது போல கம்ப்யூட்டர் படித்து பொறியாளரான பெரியாளான பல ஜாவா சுந்தரேசன்களை பார்த்து, நம்ம புள்ளையும் இப்படி சம்பாதிக்கும் என எண்ணி எல்லா பெற்றோரும் தங்களது மனதிலும், தமது பிள்ளைகளின் மனதிலும் இன்ஜினியரிங் கனவை விதைத்தனர்.

engineering-graduates-unemployment

"நான் தான் சரியா படிக்கல.. குமாஸ்தாவாகவே இருந்திட்டேன்.. என் புள்ளையாவது நல்லா படிச்சு, இன்ஜினியரா வந்து, நல்ல சம்பாதிக்கட்டுமே",  என்ற எண்ணம் தான்.  மேலும் +2 படிக்கும் மாணவர்களும், இன்ஜினியரிங் படிப்புக்கு நல்ல ஸ்கோப்.. படித்தவுடன் நல்ல சம்பளத்தில் வேலை என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. ஒருத்தருக்கும் இன்ஜினியரிங் படித்து அறிவை பெருகி கொள்ள வேண்டும்; நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்; புதிதாய் ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாமில்லை. அறிவுக்காக பொறியியல் படிப்பை எடுக்கும் பஞ்சவன் பாரிவேந்தனை போல மக்கள் மிக மிக குறைவே!

திருமண பத்திரிக்கையில் மணமகன்(ள்) பெயருடன் பி.ஈ /பி.டெக் என்று போட்டு கொள்ளவும், வரதட்சணையாக 50 பவுன் நகைக்காகவும், மாமனார் வீட்டில் கார் வாங்கி தர சொல்லவும் தான் பொறியியல் படிப்பு உபயோகமாக இருக்கிறது. ஏற்கனவே இதை பற்றி பொறியியல் படித்து என்ன பிரயோஜனம் ???  என்ற பதிவில் எழுதியுள்ளேன்.     

இப்போது பலரின் கேள்வியும் இதுதான்.. ஏன் இந்தியாவில் வேலை செய்யும் இன்ஜினியர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது? ஏன் இன்ஜினியரிங் படித்த பலருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை? இன்றைய உண்மை நிலை என்ன என்பதை பல பேருக்கு தெரிவதில்லை.

ஏன் இந்தியாவில் வேலை செய்யும் இன்ஜினியர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது?  காரணம் வேறென்ன??? அவர்கள் தேவைக்கு அதிக அளவில் இருப்பதால் தான்.

இந்தியாவில் கிட்டத்தட்ட  10 லட்சம் டாக்டர்களும், 12 லட்சம் வக்கீல்களும், 2 லட்சம் ஆடிட்டர்களும்  இருக்கின்றனர். இன்ஜினியர்கள் எண்ணிக்கை மட்டும் கோடிக்கும் மேல்! 120 கோடி ஜனத்தொகைக்கு மேல் இருக்கும் பாரத தேசத்தில் வெறும் 8 லட்சம் மருத்துவர்களே இருக்கின்றனர். அதனால் டாக்டர்கள் சொற்பமாய் இருந்து, வியாதிகளும், நோய்களும் அதிகமாகி போனதால் மருத்துவர்களுக்கு சம்பளம் அதிகம் தரப்படுகிறது. இது போல பணம் உள்ளவர்கள், அதை என்ன செய்ய வேண்டும்? எதில் முதலீடு செய்யவேண்டும்? என சொல்ல சி.எ  (CA) படித்தவர்கள் தேவை. ஆகவே அவர்களுக்கும் அதிக சம்பளம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 552 பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. அதில் ஒரு வருடத்திற்கு 5 லட்சம் மாணவர்கள் படித்து முடித்து வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3345 பொறியியல் கல்லூரிகள்  (2015-16) இருக்கிறது. அதில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் மாணவர்கள் படித்து முடித்து வருகின்றனர். இதன்படி கடந்த 15 ஆண்டில் எத்தனை பேர் படித்து முடித்திருப்பார்கள் என நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.

நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் சுற்றுலாத்துறை, ஹோட்டல் நிர்வாகம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறை, நிதி நிர்வாகம், வர்த்தகம் மற்றும் வணிகம், நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் கல்வித்துறை (மாணவர்களுக்கு பயிற்றுவிப்பவர்களை தவிர), நாட்டின் முதுகெலும்பான விவசாயம் என எதிலுமே இன்ஜினியரிங் படித்தவர்கள் தேவைபடுவதில்லை. இப்படி இருந்தால் எப்படி எல்லோருக்கும் வேலை கிடைக்கும் ??? வருடந்தோறும் பல வேலை இல்லா பட்டதாரிகளை உருவாக்கி கொண்டே தான் இருக்கிறார்கள். நாமும் பல ரகுவரன் பி.டெக்-களையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

Core கம்பெனிகள் என்று சொல்லப்படும் தயாரிப்பு தொழில்துறை ( manufacturing companies ) நிறுவனங்கள் முன்னாளில் நிறைய இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்தியாவில் இத்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP ) 17%  மட்டுமே! அதனால் அவர்கள் ஆட்சேர்ப்பையும் குறைத்து விட்டனர்.

எல்லோரும் எல்லா விஷயத்திலும் அமெரிக்காவை உதாரணமாக சொல்வார்கள். நானும் அதையே எடுத்து கொள்கிறேன். அமெரிக்காவில் அவர்களுடைய பதினெட்டு டிரில்லியன் டாலர்கள் ($ 18 trillion ) பொருளாதாரத்திற்கு ஒரு வருடத்தில் 1 லட்சம் இன்ஜினியர்கள் தான் உருவாக்கப்படுகிறார்கள். நம் நாட்டின் பொருளாதாரம் வெறும் இரண்டு டிரில்லியன் டாலர்கள் ($ 2 trillion ) மட்டுமே! 15 லட்சம் இன்ஜினியர்களை உருவாக்கி கொண்டிருக்கிறோம். விளக்கை சுற்றும் புற்றீசல்களாக, மக்கள் இன்ஜினியரிங் சேர முக்கிய காரணம்: வாய்ப்பையும் பணத்தையும் அள்ளி கொட்டும் ஐ.டி கம்பெனிகள். நாட்டின் பொருளாதாரத்தில் ஐ.டி மற்றும் பி.பி.ஓ கம்பெனிகளின் பங்கு வெறும் 9% மட்டுமே! அதனால் தான் இங்கு இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் திரும்பும் பக்கமெல்லாம் கல்லூரிகளை திறந்து வைத்து, படித்தவுடன் வேலை, கை நிறைய சம்பளம் என கூவி கூவி அழைக்கின்றனர். பல கல்லூரிகளில் போதிய வசதிகளும், சரியான ஆசிரியர்களும் இல்லாததால் நல்லதொரு பொறியாளர்களை உருவாக்க முடியவில்லை.  அடுத்து பாடத்திட்டம். நம் பொறியியல் பாடத்திட்டங்கள் எல்லாம் மனப்பாடம் செய்து எழுதும் முறையிலேயே இருக்கிறது. செய்முறை மூலம் படிப்பது/சொல்ல தருவது மிக குறைவு. இப்படி இருந்தால் பெயரளவில் தான் நாம் பொறியாளர் என்று சொல்லி கொள்ள முடியும். நம் மீதும் தவறு இருக்கிறது. ஒரு காலத்தில் யாரை பார்த்தாலும் பி.எ. படிக்கிறேன் என்று சொன்னார்கள்; பின்னர் டிப்ளோமோ (பெரும்பாலும் டி.எம்.இ ) படிப்பை எல்லோரும் படித்தார்கள்; பின்னர் பி.காம் பிடித்தார்கள்; அதன் பின் தான் இன்ஜினியரிங் வலையில் விழுந்தார்கள். அடுத்தவர்கள் படிக்கிறார்கள், நாமும் படிப்போம்/பிடிக்க வைப்போம் என்று எண்ணாமல் மாணவரின் திறன் பார்த்து, ஈடுபாடு அறிந்து கல்லூரி படிப்பில் சேர்க்க வேண்டும்.

மேலும் மாணவர்களும், இன்றைய போட்டியான உலகில் முறையாக முயற்சி செய்து, உழைத்து, இன்ஜினியரிங் படிக்கும் போதே அவர்களுடைய  திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். பலர் பொறியியல் பட்டதாரிகள் படித்து முடித்த பின்னரும், சமூக திறன்களையும், மென் திறன்களையும் வளர்த்து கொள்ளாமல் இருக்கின்றனர். படித்து முடித்த இன்ஜினியர்கள் பலருக்கு வேலை கிடைக்காமல் போக இதுவும் ஒரு மிக பெரிய காரணம் என்று பன்னாட்டு நிறுவனங்களின் மனிதவள மேலாளர்கள் சொல்கின்றனர். சரியாய் படிக்காமல், திறன்களை வளர்த்து கொள்ளாமல் இன்ஜினியரிங் படித்த பலரும் தங்கள் படிப்புக்கு கொஞ்சமும் சம்மதம் இல்லாத இடத்தில வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

அப்போ இன்ஜினியரிங் படித்து ஒருவருக்கு கூட சரியான வேலை கிடைக்கவில்லையா ? யாரும் வீடு வாசல் கார், ஃபாரின் என செட்டில் ஆகவில்லையா?? என கேட்பது புரிகிறது. செட்டில் ஆகிறார்கள்.. நூற்றில் 40 பேர்தான். படித்து முடித்த உடனேவோ, சில காலம் கழித்தோ நல்ல வேளையில் செட்டில் ஆகி விடுகின்றனர். மீதம் உள்ள 60% சரியான வேலை இல்லாமல், சம்பந்தமில்லாத வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி கொண்டிருக்கின்றனர்.

தரமில்லாத பொறியியல் கல்லூரிகளை தடுத்தல்; பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல்; மாணவரின் ஈடுபாடு அறிந்து கல்லூரியில் சேர்த்தால் போன்ற பிரச்சனைகள் சரி செய்தாலே போதும், நம் நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைந்து விடும். இதை தவிர வேறு ஏதாவது உங்களுக்கு கருத்துக்கள் தோன்றினால் பின்னூட்டத்தில் பதிலளிக்கலாம்.

தகவல் - Quora, Google 

நன்றி !!!

-பி .விமல் ராஜ்