சீட்டுக்கட்டு பற்றி தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் நண்பர்கள் /உறவினர்கள் கூடும் இடத்திலும், திருமணம் மற்றும் விசேஷ நாட்களிலும், கிளப்களிலும் விளையாடப்படுகிறது. சில இடங்களில் பொழுது போக்காகவும், சில இடங்களில் சூதாட்டமாகவும் விளையாடப்படுகிறது. இந்த சீட்டாட்டத்திற்கு பெரிய வரலாறே உண்டு. நான் படித்து தெரிந்து கொண்டதை சொல்கிறேன். தொடர்ந்து படியுங்கள்.
9ஆம் நூற்றாண்டில் சீனாவின் டாங் (Tang dynasty) பேரரசின் காலத்தில் தான் முதன்முதலில் சீட்டு விளையாட்டு ஆரம்பிக்கபட்டுள்ளது. காய்ந்த இலையில் படம் வரைந்து அச்சு எடுக்கப்பட்டு விளையாடப்பட்டது. இதனை leaf game என குறிப்பிடுகின்றனர். அக்குறிப்பில் இந்த விளையாட்டை அரச குடும்பத்தினர் 868 பேர் சேர்ந்து விளையாடியதாக சொல்கின்றனர். பின்னர் பெர்சியா, அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளில் பல்வேறு மாற்றங்களுடன் விளையாடப்பட்டது. பின்னர் ஐரோப்பாவில் பெரும் மாற்றத்துடன் அட்டை வடிவில் அச்சடிக்கப்பட்டு விளையாடப்பட்டது. 13/14 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பெயின், இங்கிலாந்து, போர்த்துக்கல் வரை சென்று பின்னர் ஜப்பானுக்கும் பரவியது. ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் மொழி/ கலாச்சாரத்திற்கு ஏற்ற படங்களை வரைந்து அதற்கேற்ற விளையாட்டு சட்டங்களை சேர்த்து விளையாடியுள்ளனர்.
பின்னர் 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவிற்கு முகலாயர் மூலம் வந்துள்ளது. இங்கு இந்த சீட்டாட்டத்தை கஞ்சிஃபா (Ganjifa) என்று பெயரிட்டு விளையாடியுள்ளனர். கஞ்சிஃபா என்னும் சொல்லுக்கு 'புதையல்' என்னும் பொருள் தரும். இதை விளையாடி பொருள் ஈட்ட பயன்படுத்தியும் உள்ளனர்.
முதலில் அட்டையில் வரையப்பட்டு விளையாடப்பட்டன; பின்னர் பேப்பரில் அச்சடிக்கப்பட்டது; பின்னர் பிளாஸ்டிக் அட்டையில் மாறியது; அதன் பின்னர் அதற்கான அலங்கார அட்டை பெட்டியில் வைக்கப்பட்டு பல வெளிப்புற மாற்றங்களை கொண்டு மாறியுள்ளது சீட்டுக்கட்டுக்கள். கடந்த 20 ஆண்டுகளில் லேப்டாப், டெஸ்க்டாப்பில் solitaire/rummy விளையாடி, இப்போது online rummy வரை வந்துவிட்டது. இன்றளவும் மக்களிடையே விளையாடப்படும் ஒரு பொழுதுபோக்கு ஆட்டமாகவும் இருக்கிறது. மரத்துக்கடியிலோ, திண்ணையிலோ விளையாடினால் அது லோக்கல் விளையாட்டு; அதுவே உயர்தர ஓட்டலில்/கிளப்பில் விளையாடும் போது, அது பணக்கார மக்களின் சூதாட்டமாக ஆக மாறிவிடுகிறது. இந்த சீட்டுக்கட்டுகள் விளையாட மட்டுமல்லால், கார்டு மேஜிக் செய்யவும், கோபுரம் (வீடு) கட்டி விளையாடவும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சீட்டுக்கட்டுக்கள் இன்னும் பலவகையான பரிணாம வளர்ச்சிகளை அடைய காத்துக் கொண்டிருக்கிறது.
உங்களுக்கு சீட்டுக்கட்டில் என்னென்ன விளையாட்டுகள் தெரியும் என பின்னூட்டத்தில் சொல்லுங்கள்...
பி. விமல் ராஜ்