ஞாயிறு, 21 மே, 2017

இந்திக்காரனும் மதராசியும்!

வணக்கம்,

பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா?

பணி நிமித்தமாக அல்லது படிப்பிற்காக தமிழ் நாட்டிற்கு பலதரப்பட்ட வயதினரும் வருகிறார்கள். இதில் பலர் இங்கயே தங்கி விடுகிறார்கள். அப்படி புதிதாய் சென்னை அல்லது தமிழகம் வருவோரிடம், தமிழ்நாடும் தமிழர்களையும் பற்றி கேட்டதற்கு என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

வட இந்தியர்களிடம் தமிழை பற்றியும், தமிழ்நாடு பற்றியும் கேட்டதற்கு:
 1. தமிழ் நாட்டில் வெயில் அதிகம். அதுவும் சென்னையில் ரொம்ப அதிகம்.
 2. உணவு பதார்த்தங்கள் காரமாக இருக்கும். உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. எல்லா ஓட்டல்களிலும் இட்லி, சாம்பார் வடை மட்டுமே பிரதானமாய் கிடைக்கும். வட இந்திய உணவு வகைகள் கிடைப்பது அரிது.
 3. தமிழர்கள் கருப்பாக, அழுக்காக தான் இருப்பார்கள்.   
 4. தமிழர்கள் எல்லோரும் மூன்று வேளையும் வாழையிலை போட்டு தான் சாப்பிடுவார்கள். 
 5. பெரும்பாலும் லுங்கி அல்லது வேஷ்டி தான் கட்டுவார்கள். 
 6. தமிழ் மக்கள் பெரும்பாலானோர் பிராமணர்கள். பலரும் நெற்றியில் (சிவலிங்கம் நெற்றியில் இருப்பது போல) திருநீறு வைத்திருப்பார்கள். 
 7. தமிழ்நாட்டில் யாருக்கும் இந்தி பேச தெரியாது. இந்தியை மொழியை எதிர்த்தவர்கள்; இன்றும் எதிர்ப்பவர்கள். எல்லோருமே தமிழ் மட்டும்தான் பேசுவார்கள்.
 8. தமிழ் மொழி பேச/கற்க மிகவும் கஷ்டமானது.
 9. அனைவரும் ரஜினிகாந்த், கமலஹாசன் ரசிகர்களாகவே இருப்பார்கள்.  
 10. தென் மாநிலங்களில் உள்ளவர்கள் எல்லோருமே மதராசிகள் தான்.
 11. மலையாளமும், தமிழும் கிட்டத்தட்ட ஒன்று.
 12. பிறமொழி பேசும் மக்களுக்கு தமிழர்கள் உதவ மாட்டார்கள். 
 13. ஆட்டோக்காரர்கள் வழிப்பறியாக பணம் வசூலிப்பார்கள்.
 14. தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் நீண்டகாலமாக  பிரச்சனை நடக்கிறது. அனைவரும் பிரபாகரன் ஆதரவாளர்கள்.
 15. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடம்.
அதே போல நாமும் வடநாட்டினரை பற்றி என்னன்ன நினைத்துள்ளோம் என்பதை ஒரு சிலரிடம் கேட்ட போது, இந்த பதில்களெல்லாம் வந்து விழுந்தது.
 1. வடஇந்தியாவில் எல்லா மாநிலத்தவரும் இந்தி மட்டுமே  பேசுவார்கள். இந்திக்காரர்கள் எல்லோருமே வட்டிக்கடை 'சேட்'.
 2. எல்லோருமே வெள்ளைவெள்ளேறென்று மைதாமாவு போல இருப்பார்கள். 
 3. இளைஞர்கள் பலர் மேற்கத்திய கலாச்சராத்தைதான் பின்பற்றுவார்கள். 
 4. மூன்று வேலையும் சப்பாத்தியையம், ரொட்டியையும்  மட்டுமே சாப்பிடுவார்கள். 
 5. அவர்கள் ஆங்கிலத்தையும், தாய்மொழியையும் கலப்படம் செய்து பேசுவார்கள். 
 6. திருமணத்திகாக பெரும் தொகையை செலவு செய்வார்கள்.
 7. எல்லோருமே பான் பீடா/ குட்கா போடுவார்கள்; பீடாவை வாயில் போட்டு குதப்பி, கண்ட இடங்களில் துப்பி கொள்வார்கள். 
 8. பெரும்பாலானோர் குடிப்பழக்கம் உடையவர்கள்.
 9. பீஹார், ஒரிசா ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர்   படிப்பில் பின்தங்கியவர்கள். 
south-indian-vs-north-indian

இது போல இன்னும் நிறைய இருக்கிறது. இதில் நாம் நினைப்பதும் சரி, மற்றவர்கள் நம்மைப்பற்றி நினைப்பதும் சரி, அனைத்துமே உண்மை கிடையாது. ஆனால் ஒரு சில விஷயங்கள் ஒத்து போகலாம்.

இது பொதுவாக எல்லா வடமாநிலத்தவரும் தமிழ்நாட்டை பற்றியும், தமிழ் மக்களை பற்றி நினைக்கும் விஷயங்கள்தான். இவை எல்லாமே நம் சினிமாக்களில் மிகைப்படுத்தப்பட்டு காட்டப்படுபவை. இன்னும் சில, மக்களின் மேம்போக்கான எண்ணங்களின் பிரதிபலிப்பு தான் இவை.

தமிழ் படங்களில் மலையாளிகளை டீக்கடை சேட்டன்களாகவும், அவர்கள் வீட்டு பெண்களை இன்றும் முண்டு கட்டி, துண்டு போர்த்திய பெண்களாய் காட்டுவதும், தெலுங்கர்களை பின் குடுமி வைத்து நெற்றியில் பெரிய நாமம் போட்டவர்களாகவும், பெண் துப்புரவு தொழிலாளர்களளை தெலுங்கு பேசுபவர்களாகவே காட்டுவதும், படித்த இந்தி பேசுபவர்களை உயர் தட்டு மக்களாகவும், படிக்காத இந்தி மக்களை அடியாட்கள் போல காட்டுவதும் உண்டு. இன்னும் ஒரே மாதிரியாக (stereotypical) மற்ற மாநில மக்களை காட்டுவது மக்களின் ஒருவித தவறான கண்ணோட்டதையே குறிக்கிறது.

புரியும்படி சொல்ல வேண்டுமானால், இப்போதுள்ள தலைமுறைக்கு தொலைக்காட்சிகளும் திரைப்படங்களும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவே காட்டி மிகைப்படுத்தி வைத்துள்ளது போல, இவர்கள் (வேற்று மாநிலத்தவர்கள்) இப்படித்தான் என்று நம் மனதில் பதிய வைத்துவிடுகிறார்கள்.

இந்தியில் பாலிவுட் பாதுஷாவின் படத்தில், தமிழ் மக்கள் எப்படியெல்லாம் இருக்கமாட்டார்களோ அப்படி தான் காட்டுவார். நூடுல்ஸில் தயிர் ஊற்றி சாப்பிடுவது, இளநீரில் லசி கலந்து சாப்பிடுவது, தமிழ்நாடு ஆண்கள் பட்டையான தங்க பர்டாரில் வெள்ளை வேட்டியணிந்து (கேரளா ஸ்டைலில்) அங்கவஸ்த்திரம் போட்டிருப்பார்கள், சிலோனுக்கு பெட்ரோல் கடத்துவதால் கடலில் சுட்டு கொள்ளப்படுகிறார்கள் என காட்டியுள்ளார். இன்னும் சில படங்களில் ஆங்கிலத்தை தப்பாகதான் பேசுவார்கள், யாருக்குமே இந்தியில் பேச/பதில் சொல்ல தெரியாது என பல செயற்கையான விஷயங்களை நம் செய்வது போல சொல்லியிருப்பார்கள். 

சினிமாக்கள் மூலமாகத்தான் நாம் பல விஷயங்களையும், மற்ற கலாச்சாரங்களையும் பற்றி தெரிந்து கொள்கிறோம். அதை சொல்லும் போதும், காட்சிப்படுத்தும் போதும் எதார்த்தத்தை காட்டினாலே போதும். அதை தமிழ் சமூகமும், மற்ற சமூகமும் திரையில் சரியாக செய்தாலே, நமக்குள் வடக்கு தெற்கு என்ற கலாச்சார இடைவெளி இல்லமல் போகும். இதை தவிர உங்களுக்கு வேறு ஏதாவது கருத்துக்கள் தோன்றினால் பின்னூட்டத்தில் பதியலாம்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்