events in 2016 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
events in 2016 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 டிசம்பர், 2016

2016-ல் நடந்தவை !

வணக்கம்,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

வரப்போகும் 2017 ஆம் ஆண்டு, உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும், வளத்தையும் அள்ளி கொடுக்கட்டும் ! இந்த வருடத்தில் உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதற்குள் 2016 முடிந்தேவிட்டது. என் வலைப்பூவில் கடந்த வருடத்தில் வெறும் 13 பதிவுகளை மட்டுமே எழுதியுள்ளேன். குறைந்தது 50 பதிவுகளாவது எழுத வேண்டும் என எண்ணம். நேரமின்மையால் எழுதவில்லை என்று சொல்லிவிட முடியாது; நேரத்தை ஒதுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த ஆண்டாவது நிறைய, புதிய விஷயங்களை எழுத வேண்டும் என எண்ணி கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்!

events-in-2016

சென்ற 2016 வருடத்தில் நம் நாட்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை சற்று திரும்பி பார்த்து இங்கு பகிர்கிறேன்.

ஜனவரி-
8 ஆம் தேதி - கடந்த மூன்று ஆண்டுகளாக விதித்த ஜல்லிக்கட்டு தடையை மத்திய அரசு நீக்கியது. ஆனால் PETA மற்றும் விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததை கொண்டு, மீண்டும் உச்சநீதி மன்றம் 12 ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

பிப்ரவரி-
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணம் மகாமகம் திருவிழா நடந்தது. 20 லட்சம் மக்கள் புனித நீராடினர்.

மார்ச்-
8 முதல் ஏப்ரல் 23 வரை ICC உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. மேற்கிந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

29 ஆம் தேதி - பின்னணி பாடகி பி.சுசிலா 17,695 பாடல்களை பாடி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

27 ஆம் தேதி- விசாரணை படத்துக்கு 'சிறந்த படம்', 'சிறந்த துணை நடிகர்', 'சிறந்த எடிட்டிங் ' உள்ளிட்ட மூன்று துறைகளில் தேசிய விருது வழங்கப்பட்டது.

31 ஆம் தேதி- சென்னை வானிலை ஆய்வு இயக்குனர் ரமணன் பதவி ஓய்வு பெற்றார்.

மே-
தேர்தலுக்கு இருநாள் முன்னர், 3 கன்டெய்னர் லாரிகளில் சுமார் 570 கோடி ரூபாய் பணம் தேர்தல் ஆணையத்திடம் பிடிப்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு கூட இல்லாமல் சென்றதாக சொல்லப்பட்டது. மறுநாள் பாரத ஸ்டேட் வங்கி அது அவர்களுடைய பணம் என்று உரிமைகோரி வாங்கி சென்றனர். ஆனால் வங்கி பணமா? அரசியல்வாதிகளின் ஊழல் பணமா? என்ற மர்மம் இன்னும் தெரியவில்லை.

16 ஆம் தேதி -  தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது முடிந்தது. 232 தொகுதிகளில், மொத்தம் 74.26% வாக்குகள் பதிவாயின. கல்வியறிவு பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியில் 85%  சதவிகிதமும், மெத்த படித்த மென்மக்கள் இருக்கும் சென்னையில் மிக குறைவான 55% வாக்குகளும் பதிவாகியிருந்தது, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் (மட்டும்!) அதிகப்படியான பணம் பட்டுவாடா நடந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

19 ஆம் தேதி - யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக 136 தொகுதிகளை வென்று, பெரும்பான்மையான வெற்றி பெற்று செல்வி ஜெ.ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.

முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுகவிற்கும் அழைப்பு போக, தளபதி ஸ்டாலினும் வருகை தந்து கடைசி வரை விழாவை பார்த்து, வாழ்த்திவிட்டு சென்றிருக்கிறார்.

ஜூன்-
பிரிட்டிஷ் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது.

22 ஆம் தேதி- இஸ்ரோ PSLV-XL விண்கலத்தில் 20 செயற்கைகோள்களுடன் விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியது.

24 ஆம் தேதி- சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், காலை 630க்கு இன்போசிஸில் பணிபுரியும் ஸ்வாதி என்ற 24 வயது பெண் மர்ம மனிதரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்ட பகலில் இந்த பயங்கரம் நடந்ததால் மக்கள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

ஜூலை -
1 ஆம் தேதி- சுவாதி கொலை வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டான். அதனை தொடர்ந்து பல சர்ச்சைகளும், மரணம் பற்றிய செய்திகளும் வந்து கொண்டே இருந்தன.

22 ஆம் தேதி- சென்னை தாம்பரம் IAF விமான நிலையத்திலிருந்து கிளம்பிய An-32 ரக விமானம் அந்தமான் செல்லும் வழியில் வங்க கடலை கடக்கும் போது தொலைந்து போனது. அதில் பயணம் செய்த 29 வீரர்களும் இறந்திருக்கலாம் என சொல்லப்பட்டது. மிக பெரிய தேடலுக்கு பின்னும் விமானமும், அதிலுள்ள ராணுவ வீரர்களும் என்ன ஆனார்கள் என இன்னும் தெரியவில்லை.

ஆகஸ்ட்-
3 ஆம் தேதி - GST (Goods and Services Tax) சட்டம் பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டது.

5 ஆம் தேதி - பிரேசில் நாட்டிலுள்ள ரியோவில் 5 முதல் 21 வரை 4 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் கோடைகால ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. 11,544 வீரர்கள் கலந்து கொண்ட ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 15 போட்டிகளில் 117 பேர் கலந்து கொண்டனர். இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பதக்கத்தை வென்றுள்ளது. பி.வி.சிந்து பாட்மிட்டனில் வெள்ளி பதக்கத்தையும், சஷி மாலிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர். மேலும் பாரா ஒலிம்பிக் என்று சொல்லப்படும் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ் நாட்டின் மாரியப்பன் தங்கவேலு மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தேவேந்திர ஜஜாரியா தங்க பதக்கத்தை வென்றுள்ளனர்.

வழக்கம்போல இம்முறையும் போட்டியாளர்களுக்கு போதிய வசதி கொடுக்காதது, வெற்றி பெற்ற பின் அவர்களுக்கு தகுந்த மரியாதையும் பரிசும் தராதது போன்ற சர்ச்சைகளும் இருந்தது.

10 ஆம் தேதி- சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் ரிசர்வ் பாங்கின் பணம் 5.75 கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டது. ஓடும் ரயிலில் கூரையை பெயர்த்து வந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டுக்காக அர்ப்பணிக்கபட்டது.

அவ்வப்போது தமிழக கர்நாடகாவிற்கிடையே வரும் காவிரி நீர்பங்கிடுதல்
பிரச்சனை இந்த ஆண்டும் தலைவிரித்து ஆடியது. இரு பக்கமும் எதிர்ப்பு கொஞ்சம் பலமாக இருந்தது. கர்நாடகாவில் 40 கே.பி.என். சொகுசு பஸ்கள் எரிப்பு, தமிழர்களை தாக்குதல், கடையை உடைத்தல், அப்பாவிகளை தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இரு மாநிலத்திலும் எதிர்ப்பும், வேலைநிறுத்தமும் நடந்தது. தமிழகத்தில் வன்முறை சம்பவம் ஏதும் நடக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

22 ஆம் தேதி- உலக நாயகன் கமலஹாசனுக்கு 'செவாலியே' பட்டம் பிரான்ஸ் அரசால் வழங்கப்பட்டது.

31 ஆம் தேதி- தமிழக ஆளுநர் ரோசையா ஓய்வு பெற்றார். அவருக்கு பதில் மகாராஷ்ட்ரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பேற்றார்.

செப்டம்பர்-
1 ஆம் தேதி - ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்பு நிறுவனத்தை தொடங்கினார்  முகேஷ் அம்பானி. இலவச ஜியோ சிம், அதில் அளவில்லாத போன் கால்கள், இன்டர்நெட் என சலுகைகளை வாரி வழங்கியது. பொது மக்கள் பலரும் ஜியோ சிம்முக்காக நெடும் வரிசையில் நின்று வாங்கினார்கள்.

2 ஆம் தேதி-  அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கலை எதிர்த்து நாடு முழுவதும் 15 கோடி மக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வரலாற்றில் இது ஒரு மாபெரும் வேலை நிறுத்தமாக பேசப்பட்டது.

4 ஆம் தேதி- ரிசர்வ் பாங்க் கவர்னர் ரகுராம் ராஜன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து உர்ஜித் படேல் புதிய கவர்னராக பதியேற்றார்.

18 ஆம் தேதி- சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் சிறையில் சுவிட்ச்-போர்ட் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டான். அவன் தற்கொலையுடன் சுவாதி கொலை மரணமும் மறைந்து போனது.

22 ஆம் தேதி- தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவால் அப்பல்லோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டதாகவும், ஏற்கனவே இறந்து விட்டார் என்றும் பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன.

29 ஆம் தேதி- முதன் முதலாக இந்திய ராணுவம் எல்லையை கடந்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர் (Surgical strike India). வரலாற்றில் இது முக்கிய நிகழ்வாக கருதப்பட்டு, அனைவராலும் பாராட்டப்பட்டது.

அக்டோபர்-
5 ஆம் தேதி - ஐ.நாவின் பொது செயலாளர் பான்கி  மூன் ஓய்வு பெற்றார். ஐ.நாவின் புதிய செயலாளராக அன்டோனியா கட்டாரஸ் தேர்வானார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு பலத்த போட்டி இருந்து வந்தது. இம்முறை அமெரிக்காவின் பெரும் செந்வந்தரான டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் அதிபரின் மனைவியான ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் பெண்களை தவறாக பேசியது, மேடையில் அநாகரீகமாக நடந்து கொண்டது என பல புகார்கள் அவர் மீது இருந்தது. பலரும் ஹிலாரி கிளின்டனே வெற்றி பெறுவார் சென்று நினைத்தனர்.

நவம்பர்-
8 ஆம் தேதி- யாரும் எதிர்பாராவிதமாக தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று 45 -ஆவது அமெரிக்க ஜனாதிபதி ஆனார்.

மேலும் அதிர்ச்சியாக நம் பாரத பிரதமர் 8ஆம் தேதி இரவு 8:30க்கு திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, மேலும் 31 டிசம்பருக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றி கொள்ளலாம். புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகபடுத்தப்பட்டு, வங்கிகள் மூலம் புழக்கத்தில் விட போவதாகவும் கூறினார். கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ள பணத்தை தடுக்கவும் தான் இந்த அறிவிப்பு என்று பிரதமர் அறிவித்தார்.

ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் மேல் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க முடியாது, வாரத்திற்கு 20,000 ரூபாய் தான் எடுக்க முடியும் என்று அறிக்கையில் சொல்லப்பட்டது. அதன் பிறகு பல ஆணைகளும், சட்டங்களும் கொண்டுவரப்பட்டு இன்று வரை இழுபறி நிலையில் தான் உள்ளது.

மேலும் மோடி அவர்களால், மக்கள் வீட்டில் தங்கம் வைத்து கொள்வதிலும் அதிரடி சட்டம் கொண்டுவரப்பட்டது.

மத்திய அரசின் இந்த திடீர் முடிவை கண்டு அனைவரும் சற்று அதிர்ச்சிக்கு உள்ளானாலும், இது கருப்பு பணத்தை ஒழிக்கவும், நாட்டின் முன்னேற்றதிற்காக என்று வரும் போது பலரும் வரவேற்றும், சிலர் எதிர்த்தும் வருகின்றனர். முதலில் பாராட்டிய பலரும் பின்னாளில் அதிருப்தியை காட்டியும் வருகின்றனர்.

20 ஆம் தேதி- இண்டோர் - பாட்னா விரைவு வண்டி கான்பூர் அருகே தடம் புரண்டது. இதில் 150க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.

டிசம்பர்- 
4 ஆம் தேதி - மருத்துவமனையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக கவலைக்கிடமாக இருக்கிறார் என்று தகவல் பரவியது.

5 ஆம் தேதி - முதல்வர் உடல்நல குறைவால் இரவு 11:30க்கு மரணமடைந்ததார் என அதிகாரபூர்வ அறிவிப்பு அரசிடமிருந்து வந்தது. அன்றே ஓ.பன்னீர் செல்வம் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். மறுநாள் டிசம்பர் 6ஆம் தேதி மறந்த முதல்வரின் பூதவுடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதியருகே அடக்கம் செய்யப்பட்டது. பொதுமக்கள் பலரும் அவர் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு போயினர்.

7 ஆம் தேதி- பழம் பெயரம் நடிகரும், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், ஜெயலலிதாவின் நண்பருமான சோ ராமசாமி உடல்நல குறைவால் இறந்தார்.

12 ஆம் தேதி- வர்தா புயல் சென்னையை மையமாக கொண்டு, மணிக்கு 120-160 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. சென்னை மற்றும் பிற வட மாநில மாவட்டங்கள் இந்த வரலாறு காணாத புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டன. 38 பேர் இறந்துள்ளனர். 1000 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டது. ஒரு லட்சத்திற்கும் மேலான மரங்கள் வேரோடு சாய்ந்தன. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஐந்து நாட்கள் வரை மின்சாரம், செல்போன், இன்டர்நெட் என ஏதுவுமே இயங்கவில்லை.

ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகம் இருக்கிறது என்று தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. சசிகலா அதிமுகவின் அடுத்த பொது செயலாளராக வரவிருப்பதாக செய்திகள் வந்தன. இதற்கு மக்கள் பலரும் ஊடகங்களிலும், சமூக தளங்களிலும் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மம், மந்திரிகளின் மனமாற்றம், முதல்வர் பன்னீர் செல்வத்தின் போக்கு, இவையெல்லாம் வைத்து பார்க்கும் போது, இவர்களுக்கு பின்னால் பா.ஜ.கவும், மோடியும் இருக்கலாம் என பலரும் சொல்லி வந்தனர்.

15 ஆம் தேதி- உச்ச நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சொல்லி உத்தரவு.

கருணாநிதி உடல்நல குறைவால் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் குணமாகி வீடு திரும்பினார். இம்முறையும் கருணாநிதி இறந்தது விட்டார் என புரளியை சிலர் கிளப்பி விட்டிருக்கின்றனர்.

21 ஆம் தேதி- தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டிலும், தலைமை செயலகம் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடந்தது.

22 ஆம் தேதி- ராம்மோகன் ராவ் பதவி பறிக்கப்பட்டு, புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டார்.

31 ஆம் தேதி- கட்சியில் ஒரு மனதாக முடிவெடுத்து, சசிகலா அதிமுகவின் பொது செயலாளராக பொறுப்பேற்றார்.

இவ்வளவுதாங்க 2016... இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 2016-ல் என்ன நடக்கும் என்று யூகித்து பதிவு எழுதியிருந்தேன். அதில் சில நடந்துள்ளது; பல நிகழ்வுகள் யாரும் எதிர்பாராதவாறு நடந்து கொண்டிருக்கிறது. எது எப்படியோ வரும் 2017 எல்லோருக்கும் நல்லபடியாகவே அமைந்தால் நல்லதே!

happy-new-year-2017

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

2016-ல் என்ன நடக்கும்?

வணக்கம்,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டின் தொடக்கம் முதல் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வளமும் கிடைத்து வாழட்டும்.

இப்பதிவில் 2016 ஆம் ஆண்டில் என்னன்ன முக்கிய நிகழ்வுகள் நடக்கும், எதை பற்றியெல்லாம் மக்கள் பெரிதாக பேசுவார்கள் என்பதை தான் எழுதியுள்ளேன். கொஞ்சம் இணையத்தில் படித்தது, சிலது என் யூகங்கள் என கலந்து எழுதியுள்ளேன்.

2016 events india

அரசியல்-
2016-ல் தமிழ் நாட்டில் நடக்கவிருக்கும் ஒரு முக்கிய நிகழ்வு, மாநில சட்டமன்ற தேர்தல். கடந்த ஆண்டின் இறுதி முதலே, பல கூட்டணி பற்றிய செய்திகளும், பிரச்சாரங்களும் ஆரம்பித்த வண்ணம் இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க, இம்முறை என்னன்ன இலவசம் தந்து ஏமாற்ற போகிறார்கள்? என்ன அறிக்கைகள் தர போகிறார்கள் என தெரியும்.

திராவிட கட்சிகளே வேண்டாம்; இந்த இரு கட்சிகளை தவிர வேறு புதிய அணி தான் தேவை என்ற எண்ணம் தான், மக்களின் மனதில் உள்ளது. நம் தமிழகம் இனிமேல் நல்ல முன்னேற்ற பாதையில் போகதான் எல்லோர்க்கும் விருப்பம். என்ன விருப்பப்பட்டு என்ன?? அதெல்லாம் நடக்கவா போகிறது?? பார்ப்போம் தேர்தல் 2016 வரை !

TN Election 2016

கடந்த வருட கடைசியில் பெய்த கனமழை, தள்ளி போன அரையாண்டு பரீட்சை என வந்து நிற்க, வரும் மே மாதத்துக்குள் எல்லா பரீட்சைகளையும் முடித்து, தேர்தலை நடத்த பார்ப்பார்கள். பாவம் பள்ளி பிள்ளைகளும், ஆசிரியர்களும்!

#India wants to know!
அரசியல் பேட்டிகள், தேர்தல் பிரச்சாரம், அரசியல் எழுச்சி நடைபயணம், வாக்கு சேகரிப்பு, தொகுதி பணம் பட்டுவாடா என சில பல காமெடிகளும், போட்டோ, வீடியோ மீம்ஸ்களும் தான் அடுத்த நான்கு ஐந்து மாதங்களுக்கு நம் சமூக வலைத்தளங்களை நிரப்ப போகின்றன. #அவதானிப்பு 

சினிமா-
இந்த ஆண்டில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவர வரிசையாக நிற்கிறது. லிஸ்டில் முதலில் சூப்பர் ஸ்டாரின் கபாலி, உலக நாயகனின் விஸ்வரூபம் II, இளைய தளபதியின் தெறி, தல நடிக்கும் பெயரிடபடாத படம், தனுஷ் நடிக்கும், வடசென்னை, வெடி, ரயில், சூர்யாவின் 24, சிங்கம் 3 (S3)... இன்னும் பல.

இதை தவிர தெலுங்கில் பாகுபலி 2, ஹிந்தியில் ஷாருக் கானின் ஃபேன், ஹாலிவுட்டில் Captain America-A Civil War, Batman Vs Superman, X-Men Apocalypse, Popeye The Sailor, Alice in Wonderland, The Jungle Book, Kung Fu Panda 3, Finding Dory என 2016-ல் பார்க்க வேண்டிய படங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

#Behind the scenes
எப்போதும் போல எதிர்பார்ப்புள்ள பெரிய பட்ஜெட் படங்கள் மக்களிடம் எடுபடாமல், சில சின்ன பட்ஜெட் படங்கள் வந்து திடீர் வெற்றியை தரும். வழக்கம் போல இந்த ஆண்டும் ஹாரர் + மொக்கை காமெடி தான் தமிழ் சினிமாவின் டிரெண்ட் என விமர்சகர்கள் பேசுவார்கள். #கடுப்பு

விளையாட்டு-
இந்த ஆண்டு மார்ச்சில் ICC World Cup Twenty-20 நடக்க இருக்கிறது. அதில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் இல்லாததால் நம் கிரிகெட் ரசிகர்கள் கொஞ்சம் சோர்ந்து போயிருப்பார்கள். அதனால் Twenty-20யில் மக்களின் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் எல்லா மேட்ச்சிலும் பெட்டிங், சூது என எல்லாமே இருக்கும்.

cricket gambling

ஆகஸ்ட்-செப்டம்பரில் பிரேசிலில் 2016 ஒலிம்பிக்ஸ் போட்டி நடக்கவிருக்கிறது. போன முறை 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் ஆறு வெண்கல பதக்கங்களை வென்று, 55 ஆவது இடத்தில் நாம் இருந்தோம். ஒரு தங்க பதக்கம் கூட பெறவில்லை. இம்முறையாவது இந்தியா தங்கம் வெல்லுமா? என்ற ஆர்வம் எல்லார் மனதிலும் இருக்கும்.

#Fourth Umpire
ஒலிம்பிக்கில் வென்ற (ஒரு வேலை தங்கம் வென்றால்!) புது வீரரை, எதாவது ஒரு கார்ப்பரெட் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொள்ளும்.  எனக்கு ஏற்கனவே sports-ல் ஆர்வம் கிடையாது. இதில் லீ, ஜீவா, ஆடாம ஜெயிச்சோமடா, பூலோகம் போன்ற படங்களை பார்க்கும் போது சுத்தமாக விளையாட்டை பார்க்க பிடிக்கவில்லை. காசு.. பணம்.. துட்டு.. மணி.. மணி..!

ஆன்மிகம்-
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணம் மகாமகம் கும்பமேளா பெருவிழா , 2016 பிப்ரவரியில் நடக்க இருக்கிறது. அத்தனூண்டு ஊரே அல்லோல பட போகிறது.

#Special Darshan 
பக்தாக்கள் அனைவரும் பத்திரமாய் முழுக்கு போட்டுவிட்டு வீடு போனால் சரி.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்தியாவுக்கு எதாவது நல்லது செய்வார்; நல்லதொரு முன்னேற்றத்தை கொண்டு வருவார் என இந்த ஆண்டும் நம்புவோமாக. இன்னும் இதை தவிர அமெரிக்க அதிபர் தேர்தல், இங்கிலாந்து பிரதமர் தேர்தல்களும் இந்த ஆண்டில் வரும். நம்ம மக்களும், ஏதோ அமெரிக்க ஐரோப்பிய குடிகள் பல, புது அதிபர்களுக்கு வாழ்த்து செய்தி போடுவாங்க.

ஹ்ம்ம்...வேற என்ன... மத்தபடி எல்லாம் வழக்கம் போல நடப்பது தான் நடக்கும். எல்லா கூத்தையும் பார்க்க தானே போகிறோம்.

கடைசி வரி - எல்லாவற்றையும் விட எல்லாருடைய வாழ்த்துகளுடனும் ஆசியுடனும், இந்த 2016 ஆண்டின் ஆரம்பத்தில் அடியேன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க போகிறேன். #மகிழ்ச்சி 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்