வணக்கம்,
நம் நாட்டில் உள்ள சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானது, சமமானது என சொல்கிறோம். ஆனால் நம்மில் பலருக்கு அடிப்படை சட்டத்தின் அடிப்படை கூட தெரியாது. அன்றாட வாழ்வில் அது தேவை படவில்லை என எண்ணி, அதை பற்றி நாம் பெரிதும் கவலை பட்டதில்லை. நான் படித்து அறிந்து கொண்ட சில சட்டங்களையும், விதிகளையும் உங்களிடம் பகிர்கிறேன்.
சுதந்திரம் அடைந்த பின்னும் ஆங்கிலேயர் இயற்றி பின்பற்றி வந்த சட்டங்களை நம் நாடும் பின்பற்றி வந்தது. பின்னர் 1950-ல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் இந்திய அரசியலமைப்பு சட்டம் (Constitution Of India) இயற்றப்பட்டது. நமது நவீன இந்தியாவில் பல்வேறு வகையான சட்ட அமைப்புக்கள் உள்ளது. இந்தியா ஒரு கலப்பின சட்ட அமைப்பைக் கொண்டது. அதிலுள்ள சட்டங்கள் காலனித்துவ காலத்திலிருந்து மரபுரிமையாகப் பெற்ற சட்ட கட்டமைப்பிற்குள்ளும், ஆங்கிலேயர்களால் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல சட்டங்களும் இருக்கின்றன. 450 கட்டுரைகள், 12 அட்டவணைகள், 101 திருத்தங்கள் மற்றும் 117,369 சொற்கள் கொண்ட இந்திய அரசியலமைப்பு ஒரு நூற்றாண்டில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பாகும். ஒட்டு மொத்தமாக 1248 சட்டங்கள் உள்ளது.
இந்திய சட்டங்களின் அமைப்பு மூன்று வகையாக பிரிக்கலாம்.
- பொது சட்டம் (Common Law)
- குற்றவியல் சட்டம் (Criminal Law)
- சிவில் சட்டம் (Civil Law)
சட்டமன்றம் அல்லது அதிகாரபூர்வ சட்டங்களின் மூலம் நிறுவப்பட்ட விதிகள் மற்றும் சட்டங்களுக்கு மாறாக, நீதித்துறை முன்மாதிரிகளாலும், நீதிபதிகளாலும் விசாரிக்கப்பட்டு வழக்குகளின் முடிவிற்குப் பிறகு நீதிபதிகளால் நிறுவப்பட்ட சட்ட விதிமுறைகளின் தொகுப்பாக இருப்பது பொது சட்டம் என குறிப்பிடப்படுகிறது. இது ஒரு உலகளாவிய சட்டமாகும். உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இப்போது பொதுவான சட்ட அதிகார வரம்புகள் அல்லது அமைப்புகளில் வாழ்கின்றனர்.
குற்றவியல் சட்டம் (Criminal Law)
சமூகத்தில் உள்ள குற்றங்களை குறைக்க குற்றவியல் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொள்ளை, கொலை, கடத்தல், கற்பழிப்பு, மற்றும் பல உள்ளிட்ட சில குற்றங்கள் குற்றவியல் சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்படுகின்றது. இந்திய தண்டனைச் சட்டம் (IPC-Indian Penal Code), இந்திய சாட்சியச் சட்டம் (IEC-Indian Evidence Act), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure) ஆகியவை குற்றவியல் சட்டங்களாக இருக்கின்றன.
சிவில் சட்டம் (Civil Law)
குற்றமாகாத நடத்தையை அல்லது விஷயங்களை சீராக்கவும், சிவில் நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை சிவில் நடைமுறைச் சட்டம் (CPC-Civil Procedure Code ) நிர்வகிக்கிறது. தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளையும், சொத்து, மதம், குடும்ப சண்டைகள் அல்லது இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க சிவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. குடும்ப சட்டம் (Family Law), ஒப்பந்த சட்டம் (Contract Law), நிர்வாக சட்டம் (Administration Law), நிறுவன சட்டம் (Corporate Law), சட்டப்பூர்வ சட்டம் (Statutory Law) என உட்பிரிவுகள் இதில் இருக்கின்றது.
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில சட்டங்கள் சிலவற்றை பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்:
Article 1- ஒன்றியத்தின் பெயரும் ஆட்சி நிலவரையும்
(i) இந்தியா எனப்படும் பாரதம் மாநிலங்களின் (யூனியன்) ஒருங்கிணைப்பு ஆகும்.
Article 5- அரசமைப்பின் தொடக்கநிலையில் குடியுரிமை
இந்த சாசனம் துவக்கப்பட்ட நாளில் இந்தியாவில் தொடர்ந்து வாழும் ஒருவர்,
(அ) இந்திய நிலப்பகுதியில் பிறந்தார், அல்லது
(ஆ) அவருடைய பெற்றோர்களில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருப்பின்,
(இ) இந்த சாசனம் துவக்கப்படுவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பிருந்தே இந்தியாவில் வசித்து வரும் ஒவ்வொருவரும் இந்தியாவின் குடிமகன் ஆவார்.
Article 14- சட்டத்தின் முன்னர் சமன்மை
அரசு, இந்திய ஆட்சி நிலவரைக்குள் சட்டத்தின் முன்னர் சமன்மையையும், சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமன்மையையும் எவர் ஒருவருக்கும் மறுக்க கூடாது.
Article 15- மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்தல்
(i) அரசு எந்த ஒரு குடிமகனையும் மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் அல்லது வேறு காரணத்தின் பேரிலும் வேறுபடுத்தி பார்க்க கூடாது,
(ii) குடிமகன் எவரையும்,
(அ) எந்த ஒரு குடிமகனையும் மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் இவற்றை காரணம் காட்டி,
(ஆ) கடைகள், உணவு விடுதிகள், தாங்கும் விடுதிகள் கேளிக்கைக்கான பொது இடங்கள் இவற்றுக்குள் செல்வதையோ, அல்லது
(இ)கிணறு, குளம், பொது குளியலறைகள், ஆலைகள் இவற்றை பயன்படுத்துவதையோ கூடாது என்று குறைபாடு, கடப்பாடு அல்லது நிபந்தனை விதிக்க கூடாது.
Article 17- தீண்டாமை ஒழிக்கப்பட்டது. அதன் நடைமுறை வழக்கம் எந்த வகையிலும் இல்லாதபடிக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. தீண்டாமையின் விளைவாய் செயலாக்கப்படுகிற எந்த குறைபாடும் சட்டப்படி தண்டிக்க தக்கதாகும்.
Article 19- சுதந்திரமாய் செயல்படுவதற்கான உரிமை
(i) இந்தியா குடிமக்கள் அனைவருக்கும் -
(அ) சுதந்திரமாய் பேசவும் (எண்ணங்களை உணர்வுகளை) பேசவும், வெளிப்படுத்தவும்
(ஆ) ஆயுதமில்லாமல் அமைதியாய் கூடுவதற்கும்
(இ) சங்கங்கள் அமைப்புகள் இவற்றை உருவாக்குவதற்கும்
(ஈ) இந்தியாவிற்குள் தடையின்றி இங்கும் சென்று வரவும்
(உ) இந்திய நிலப்பகுதியில் எந்த ஒரு இடத்தில வாசிப்பதற்கும்
(ஊ) சொத்துக்களை தேடி கொள்ளவும், வைத்திருக்கவும் விற்கவும்
(எ) எந்த ஒரு பணியில் ஈடுபடுவதற்கும் எந்த ஒரு தொழில் அல்லது வர்த்தகம் செய்யவும் உரிமை உண்டு.
Article 22 - கைது செய்தல், காவல் வைத்தல் இவற்றிலிருந்து பாதுகாப்பு
(i) ஒருவர் எந்த காரணத்திற்காக கைது செய்ய படுகிறார் என்ற காரணத்தை தெரிவிக்கும் அவரை காவலில் வைக்க கூடாது. அவர் தாமுக்குடைய சட்ட ஆலோசகரை கலந்தாலோசிக்கவும், அவரை தமது பாதுகாப்பிற்கு பயன்படுத்தி கொள்ளவும் அவருக்குள்ள உரிமை மறுக்கப்பட கூடாது.
(ii) கைது செய்து காவலில் வாய்த்த ஒரு நபரை அவர் கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அருகிலுள்ள ஒரு குற்றவியல் நடுவரிடம் முன்னிலை படுத்த வேண்டும்.
Article 23 - மனிதரை வணிக பொருளாக்குதல், வலுக்கட்டாயமாக வேலை சுமத்துதல்
(i) மனிதரை வணிகமாக வைக்கும் தொழிலும் (human trafficking) , பிச்சையெடுக்க வைப்பதும், வற்புறுத்தி வேலை வாங்குவதும் தண்டிக்கத்தக்க குற்றமாகும்.
Article 24- தொழிற்சாலையில் சிறார்களை பணியமர்த்த தடை
பதினான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தல்களை தொழிற்சாலையிலோ அல்லாது சுரங்கத்திலோ அல்லது வேறு அபாயகரமான வேலையில் பணியமர்த்த கூடாது,
Article 25- வழிபாட்டு சுதந்திரம்
பொது ஒழுங்கு, ஒழுக்க முறைமை மற்றும் உடல் மனநலம் ஆகியவற்றிற்கும் உடன்பட்டு தம் மனசாட்சியின் படி செயல்பட அனைவருக்கும் உரிமை உண்டு. ஒரு மதத்தை கொண்டாடவும், கடைபிடிக்கவும், பரப்பவும் அவர்கள் உரிமை உடையவராவார்.
Article 46-
அரசு பிற்படுத்தபட்ட மக்களிடையே குறிப்பாக பட்டியல் சாதியினர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) இவர்களின் கல்வி சார்ந்த பொருளாதார நாளங்களில் அக்கறை காட்டி உயர்த்துவதோடு அவர்களை சமூக அநீதியிலிருந்தும் அணைத்தது வகை சுரண்டல்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.
Police Act 1861-
ஒரு காவல் அதிகாரியானவர் எப்போதும் தன் கடமை உணர்வுடன் இருக்க வேண்டும். அவர் பொறுப்பில் இருக்கும்வரை எப்போதும் கடமையிலிருந்து ஓய்வு ( off duty) என்பதே இல்லை.
Maternity Benefit Act 1961, Section 4 -
வேலையில் இருக்கும் ஒரு கர்ப்பிணி பெண்ணை எப்போதும் பணி நீக்க முடியாது. ஒரு கர்ப்பிணி பெண் தன் கர்ப காலத்தில் பணிக்கு வர முடியாத காரணத்தை வைத்து, எந்த நிறுவனமும் / மேலாளரும்/முதலாளியும் அவர்களை வேலையை விட்டு அனுப்ப கூடாது.
Section 4(1) - எந்த ஒரு நிறுவனம் எந்த கர்ப்பிணி பெண்ணையும் பிரசவ தேதியிலிருந்து (குழந்தை பிறத்தல்/ கர்ப்பத்தின் முடிவு/கருச்சிதைவு) ஆறு வாரம் வரை வேலையில் பணியமர்த்த கூடாது.
Section 4(2) - எந்த ஒரு கர்ப்பிணி பெண்ணும் எந்த ஒரு நிறுவனத்திலும் பிரசவ தேதியிலிருந்து (குழந்தை பிறத்தல்/ கர்ப்பத்தின் முடிவு/கருச்சிதைவு) ஆறு வாரம் வரை எந்த வேலைக்கும் போகவோ/சேர கூடாது.
Section 4(3)- Section (6) க்கு எந்த ஒரு பாரபட்சமின்றி எந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கும் அவள் கேட்டு கொண்டதாலும், கட்டாயத்தாலும் Section 4 -ல் உள்ள காலத்தில் கடினமான வேலைகளையோ (நீண்ட நேரம் நிற்க வைத்தால் உட்பட்டு) செய்ய வைக்க கூடாது.
Gas Cylinder Rules, 2004, and Explosives Act, 1884.
வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்களுக்கு 40 லட்சம் வரை நுகர்வோர்களால் (பாதிக்கப்பட்டோர்கள்) சமையல் எரிவாயு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு பெற முடியும்.
தண்டனை சட்டங்கள் :
IPC 109-
குற்றத்திற்கு உடந்தை; குற்றவாளிக்கு உடந்தை யாக இருத்தல்
தண்டனை:குற்றத்திற்கேற்றவாறு சிறை அல்லது அபராதம்.
IPC 110-
மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை க்குரிய குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல்
தண்டனை:ஏழு ஆண்டு சிறை மற்றும் அபராதம்.
IPC 140-
தரைப்படை, வான்படை, கடற்படை வீரரால் பயன்படுத்தப்படும் உடை அல்லது பதக்கம் முதலியவை அணிந்து கொண்டு தாமும் அத்தகைய படையை சேர்ந்தவர் என நம்பிக்கை ஏற்படுத்துதால்
தண்டனை: மூன்று மாதம் சிறை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும்.
IPC 143-
சட்டவிரோதமான கும்பலில் உறுப்பினராக இருத்தல்.
தண்டனை: ஆறு மாதம் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
IPC 144-
சட்டவிரோதமான ஆயுதங்களை கைக்கொண்டிருக்கும் கும்பலில் உறுப்பினராக இருத்தல்.
தண்டனை: 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
IPC 153(அ)-
வழிபடும் இடத்தில் வகுப்புகளிடையே பகைமையை வளர்த்தல்.
தண்டனை: 3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
IPC 163-
பொது ஊழியர்கள் ஒரு கடமையை நிறைவேற்ற ஊதியத்தைத் தவிர கையூட்டு பெறுதல்
தண்டனை: ஒர் ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
IPC 171-
பொது ஊழியருடைய சீருடை அல்லது அடையாள அட்டை ஆகியவற்றை பொது ஊழியர் அல்லாதவர் ஏமாற்றும் எண்ணத்தில் அணிதல்.
தண்டனை: 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
IPC 212 -
மரண தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவருக்கு புகலிடம் அளித்தல்.
தண்டனை: 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்
IPC 231/232/233/234-
போலி நாணயத்தை உண்டாகுதல்; இந்திய நாணயங்களை போலியாக செய்தல்; போலி நாணயம் செய்வதற்கான கருவிகளை செய்தல் அல்லது விற்பனை செய்தல்; போலி இந்திய நாணயங்களைச் செய்வதற்கான கருவிகளைச் செய்தல் அல்லது விற்பனை செய்தல்
தண்டனை: 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம்.
IPC 274/275 -
மருந்துப் பொருட்களில் கலப்படம்; கலப்படம் செய்யப்பட்ட மருந்துகளை விற்றல்
தண்டனை: 6 மாதம் சிறை மற்றும் அபராதம்.
IPC 292/293-
இருபது வயத்துக்கு குறைவாக உள்ளவரிடம் ஆபாசமான பொருளை (புத்தகம், புகைப்படம், எழுத்து, துண்டுப்பிரசுரம், படம் வரைதல் மற்றும் ஓவியம்) விற்றல் / வாடகைக்கு கொடுத்தல்/விநியோகிப்பதல்/காட்சிப்படுத்துதல்
தண்டனை: 3 மாதங்கள் வரை சிறை அல்லது 2000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும்.
IPC 294(B)-
பொது இடத்தில் எந்த ஒரு ஆபாசச் செயலைப் புரிதல்/ ஆபாசமாக பேசுதல்/பாடுதல்/ஆபாச வாசகத்தை உச்சரித்தல்
தண்டனை: 3 மாதங்கள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
IPC 302-
கொலைக்குற்றம் புரிந்தவனுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும்.
தண்டனை: மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை
IPC 306-
ஒருவரை தற்கொலைக்கு தூண்டுதல்.
தண்டனை: பத்தாண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலத்திற்கான விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம்.
IPC 307-
கொலை முயற்சி செய்தல்
தண்டனை: பத்தாண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு காலத்திற்கான விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மேலும் அபராதம் விதிக்கப்படலாம்;
IPC 341-
தவறான திசை, இடம், போக்கில் வழி நடத்துதல்
தண்டனை: ஒரு மாதம் சிறை அல்லது 500 ரூபாய் அபராதம்.
IPC 376-
பாலியல் வன்புணர்வு / கற்பழிப்புக்கான தண்டனை சட்டம்.
தண்டனை: ஏழு ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை அல்லது ஆயுட்கால சிறை மற்றும் அபராதம். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர் ஈடுபட்டவரின் மனைவியோ/அல்லது 12 வயதுக்கு கீழ் இல்லமல் இருந்தால் இரண்டாண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம்.
IPC 420-
ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்து விநியோகத்தை தூண்டுதல்.
தண்டனை: 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து.
IPC 454 -
வலிந்து வீடு புகுந்ததற்கான குற்றத்திற்குத் தண்டனை
தண்டனை: 3 ஆண்டு சிறை அல்லது அபராதம்.
புத்தகத்திலும் இணையத்திலும் படித்ததை வைத்து, மிக சில சட்டங்களை பற்றி மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன். மேலும் விரிவான தகவல்களுக்கு:
- இந்திய தண்டனை சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்ற படிவங்கள் - சோ.சேசசலம்
- இந்திய அரசியல் அமைப்பு சட்டம் - சி.எஸ். தேவ்நாத்
நன்றி!!!
பி. விமல் ராஜ்