வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

செயற்கை நுண்ணறிவு (AI) - வருங்காலத்தின் ஆரம்பம்

வணக்கம்,

இந்த உலகம் தோன்றிய காலம் முதல், பல கண்டுபிடிப்புகள், தத்துவ விதிகள், விஞ்ஞான வளர்ச்சிகள் என மாறி கொண்டே இருக்கிறது. புதுப்புது செயல்கள் நடந்து கொண்டே இருக்கிறது. நம் உலகமானது இயந்திரமயமாக்களிலும், கணினி துறையிலும், செயற்கை நுண்ணறிவிலும் (AI - 
Artificial Intelligence) நம் கற்பனைக்கடங்கா எல்லையை நோக்கி போய் கொண்டிருக்கிறது. அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தொழில்நுட்பத்தை பற்றிய கொஞ்சம் பெரிய பதிவு தான். பொறுமையான படிக்கவும்.

யுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari)இஸ்ரேலிய வரலாற்றாய்வாளர், தத்துவவாதி மற்றும் புத்தக எழுத்தாளர். அவர் எழுதிய 21 Lessons for 21st Century  என்னும் புத்தகத்தில் வருங்காலதில் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும், வேலைவாய்ப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பற்றியும் விவரித்துள்ளார்.

ஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன் படங்களில் வருவது போல எல்லா தொழில்நுட்பங்களும் ஒரு நாள் மனிதனை மீறி செயல்பட ஆரம்பிக்கும் அதுவே நாம் வாழும் பூவுலகின் அழிவுகாலத்தின் ஆரம்பம் என சொல்லியிருப்பார்கள். அதை நாமும் கைகொட்டி ரசித்து விட்டு மறந்து விடுவோம். ஆனால் இது நூறு சதவிகிதம் உண்மையில்லை என்று வைத்து கொண்டாலும், 80% நடப்பதற்கு  வாய்ப்புண்டு என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்த AI யினாலும், டெக்னாலஜியாலும் நம்மில் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் பறிபோக வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள்.



artificial-intelligence-future-jobs-lost-in-2050

அதெப்படி இருக்கிற வேலை போகும்? பின்னர் அந்த வேலையை யார் செய்வார்கள் என்ற கேள்விக்கு சில பதில்கள். 20 வருடங்களுக்கு முன் இருந்த உலகளவில் இருந்த பல தொழில்களும், வேலைகளும்/வேலைவாய்ப்புக்களும் இப்போது இல்லை. உதாரணமாக, 

1.) STD - PCO  கடைகள்
2.) இன்டர்நெட் பிரௌசிங் சென்டர்கள்.
3.) போட்டோ பிலிம்களை கழுவி, பிரிண்ட் போடும்  ஸ்டூடியோக்கள்.
4.) சுற்றுலா தளத்தில் போட்டோ எடுப்பவர்கள்.
5.) வீடியோ- ஆடியோ காஸட் / சி.டி -  டி.வி.டி கடைகள்.
6.) வாழ்த்து அட்டை துயாரிப்பவர்கள்.
7.) ரேடியோ/டேப் ரெக்கார்டர் ரிப்பர் செய்பவர்கள்.
8.) தட்டச்சு அலுவலர்கள் / தட்டச்சு மையங்கள்.

9.) டெலிபோன் ஆப்ரேட்டர்கள்.
இதுபோல இன்னும் பல தொழில்கள் இருக்கிறது. 

உலகில் நடக்கவுள்ள அல்லது கண்டுபிடிக்க உள்ள தொழில்நுட்ப மாற்றங்களை கணிப்பது மிக மிக கடினம். ஐம்பது வருடங்களுக்கு முன் உள்ள அறிஞர்களும்,விஞ்ஞானிகளும் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியையும், அதன் வேகத்தையும் கணித்திருக்கவே மாட்டார்கள்.  

இன்னும் சொல்ல போனால் 2040-2050 ஆண்டுகளில் மக்கள் வேலை செய்யப்போகும் / உபயோகப்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை என்பதே உண்மை.

இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார நிபுனர் ஜான் மேநார்ட் கீன்ஸ் (John Maynard Keynes) என்பவர் அவரது ஆராய்ச்சி பதிவு ஒன்றில் 2030-ல் மக்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 15-20 மணிநேரம் தான் உழைப்பார்கள். அவர்களுக்கு விரக்தியும், மனசோர்வும் தான் மேலோங்கி நிற்கும். அதிலிருந்து விடுபட கேளிக்கைகளிலும், அவர்களது கலாச்சரத்திலும்தான் நேரத்தை செலவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

இப்போது செய்யும் பல தனித்துவ வேலைகளை, எதிர்காலத்தில் இயந்திரங்களும், ரோபோக்களுமே செய்து விடும். இதனால் எதிர்காலத்தில்  
சமூக உறுதியற்ற தன்மையும்  (Social instability), படைப்பாற்றல் (Creativity) மிகுந்த வேலைகளும் அதிக அளவில் இருக்கும். இதனால் உலகளவில் பொருளாதாரத்தில் மாற்றங்களும், ஏற்றத்தாழ்வுகள் நிறைய இருக்கும். அகால மரங்களும், தற்கொலைகளும், சட்டவிரோத செயல்களான கொள்ளை, போதை போன்ற செயல்களும் பெருமளவில் அரங்கேறும்.ஜான் மட்டுமல்ல, பல ஆராய்ச்சியாளர்கள் இதைதான் கூறுகின்றனர். 

" ஒரு புத்தகம் மக்களுக்கு உணவையோ, உடையையோ கொடுக்காது. ஆனால் அவர்களுக்கு இந்த உலகில் வாழ்வதற்கு ஒரு தெளிவான அறிவை கொடுக்கும். அது போல, இந்த புத்தகம்  மனிதத்தின் எதிர்காலம் பற்றி விவாதிக்க தெளிவான அறிவையும், அதிகாரத்தையும் கொடுக்குமேயானால், இஃது ஓர் சிறந்த படைப்பாகும்." 
யுவால் நோவா ஹராரி

வருங்காலத்தில் நடக்க கூடியவை என யுவால் என பல துறைகளையும் பற்றி கூறியுள்ளார். அவற்றுள் சில.

தகவல் - Data 
தகவல் (information / data) வருங்காலத்தில் உலகின் மிக பெரிய அதிகாரத்தின் ஆதாரமாக விளங்கப்போகிறது. யாரிடம் தகவல்கள் கொட்டி கிடைக்கிறதோ, அவரே சர்வ வல்லமை படைத்தவராகி உலகையே ஆளக்கூடிய வல்லரசாக இருப்பார். ஏனெனில் தகவல்கள் எதிர்காலத்தின் ஆகச்சிறந்த பலமுள்ள ஆயுதமாக உருவெடுக்கும் என கூறுகின்றனர். இன்னும் சுலபமாக சொல்ல வேண்டுமானால், சமீபத்தில் வெளிவந்த 'இரும்புத்திரை ' படத்தில் வரும் வசனத்தை நினைவு படுத்துகிறேன். 'Information is Wealth' இந்த டேட்டாக்கள் என் கையில் இருந்தால் இந்த உலகையே ஆளும் டிஜிட்டல் உலகத்தின் முடிசூடா மன்னனாக இருப்பேன் என்று அர்ஜுன் சொல்வார். ஆதிகாலம் முதல் இப்போது வரை அதிக நிலங்கள் (land/real estate) வைத்திருப்போரை அதிகாரம் உள்ளவர் என்று சொல்வார்கள்.அரசாங்கங்கள் அவர்களை கட்டுபடுத்த முயற்சி செய்யும். ஆனால் வருக்காலத்தில் யாரிடம் நிறைய டேட்டாக்கள் இருக்கிறதோ அவரே அதிகாரம் உள்ளவர் ஆகப் போகிறார்கள்.

மனித எண்ணங்களை திருடுதல் - Human Hacking 
கணினியும், இயந்திரத்தையும் hacking செய்வதை பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அப்படி hack செய்து திருடுபவர்கள், வருங்காலத்தில் மனிதனின் மூளையை குறிவைத்து hack செய்ய போகிறார்கள். நம்பமுடியவில்லை தானே !?! நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம்! நம்முடைய சிஸ்டம், மொபைல், வங்கி கணக்குகள், சமூக வலைத்தளங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மட்டுமல்லாமல், நம் மூளையும், நம் எண்ணங்களையும் hack செய்வதற்கான ஆராய்ச்சியில் ஏற்கனவே இறங்கி விட்டார்கள்.

நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது, நம் அடையாள தொழில்நுட்பத்தையும் (biometric) hack செய்து மக்களையும் ஆட்கொள்ள முடிவு செய்து விட்டனர். அப்படி செய்துவிட்டால், நாம் என்ன செய்ய வேண்டும், என்னென்ன நினைக்கிறோம், எதை செய்ய வேண்டும் என எல்லாவற்றையும் அவர்களே முடிவு செய்து விடுவார்கள். இது முழுமையாக  கொண்டுவர முடியாவிட்டாலும், 50% சதவிகிதம் வெற்றிபெற்று விட்டால் கூட மனித இனத்தின் அழிவு யாராலும் தடுக்க முடியாத ஒன்றாகிவிடும்  என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கல்வி - Education 
2040-50-ல் பல வேலைகள்/வேலைவாய்ப்புகள் இல்லாமல் போகும். இப்போதுள்ள பிள்ளைகளும் பள்ளி/கல்லூரிகளில் சொல்லி கொடுக்கும் பாடங்கள் /பாடத்திட்டங்கள் எல்லாம் பயனற்று போக வாய்ப்புண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதுநாள் வரை மனிதனின் முதல் 25-30 ஆண்டுகள் கற்றலுக்காக செலவிட்டு, மீதம் உள்ள ஆண்டுகள் கற்றதை பயன்படுத்தி உலகில் வாழ தயார்படுத்தி கொள்வதே வழக்கமாய் இருந்தது. ஆனால் இனி வரும் காலங்களில் படித்து முடித்து வேலைக்கு போகும் நேரத்தில், படித்தது பலவும் காலாவதியான தகவல்/படிப்பு/ விஷயங்களாக இருக்கும் என்று சொல்கின்றனர்.இவற்றிற்கு ஒரே வழி வாழ்நாளில் கடைசி வரை நம்மை சீர்படுத்தி கொள்ள இந்த போட்டிமயமான உலகில் வெல்ல தொடர்ந்து வாழ நாம் கற்றலை நிறுத்தவே கூடாது. 50 வயதிலும் கற்று கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இப்போதே இந்த நிலைதான் இருக்கிறது என்றாலும், எதிர்காலத்தில் நிலைமை இன்னும் போட்டிமயமானதாக இருக்கும்.

மக்களுடைய உணர்வுசார் நுண்ணறிவையும் (emotional intelligence), மனதையும் சமநிலை படுத்தி (mind balance) கொண்டு வாழ பழகி கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அரசியல் - Politics 
உலக வல்லரசு நாடுகளும் சரி, வளர்ந்து வரும் நாடுகளும் சரி இன்றளவிலும் பழமைவாதையும், தேசியத்தையும், மத கொள்கைகளையும் மட்டுமே பேசி கொண்டிருக்கிறது. எந்த ஒரு உலக அரசியல்வாதிகளும் எதிர்காலத்தில் வரவிருக்கும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது, எப்படி மக்களை முன்னேற்றுவது என்றெல்லாம் பேசுவதோ இல்லை. உலகம் வெப்ப மயமாதல், வருங்காலத்தில் இயந்திரத்தாலும், தொழில்நுட்பத்தாலும் பறிபோகும் வேலைவாய்ப்புக்கள், எதிர்கால சந்ததிகளுக்கு கல்விமுறை என நீண்ட கால முடிவெடுத்தலை இதுவரை முன்வைக்க வரவில்லை.   

புதிய பிரிவு- Useless Class 
உலக மக்களில் upper class, upper middle class, middle class, lower class என்று பிரிப்பார்கள். அதில் புதிதாக Useless class என்னும் புதிய பிரிவு வருங்காலத்தில் வரும். தொழில்நுட்பத்தால் வேலைப்பறிபோன கூட்டம் பெருமளவில் நிற்கும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அவர்களை தான் useless class என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டி, மானியம் வழங்க வேண்டும்; அல்லது மக்களே அவர்களது துறையில் மேலும் கற்று, தொடர்ந்து முன்னேற வாழ பழகி கொள்ள வேண்டும். அல்லது பெரும்பாலானோர் சமூக கேடான விஷயங்களில் ஈடுபட்டு நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் பெரும் பிரச்சனையாக இருப்பார்கள்.

பறிபோகும் வேலைகள் - Job Lost
அசுர வேக தொழில்நுட்ப வளர்ச்சியினால், எதிர்காலத்தில் பலரின் வேலைவாய்ப்புகள் பறிபோகும். இன்று உலகெங்கும் லட்சக்கணக்கானோர் வாடகை வண்டிகளை (Taxi) ஓட்டி வருகின்றனர். எதிர்காலத்தில் தானியங்கி டாக்ஸிகளும்,கார்களும் நம் சாலையெங்கும் ஓடி கொண்டிருக்கும். அதற்கான ஆயுத்த வேலைகளில் Tesla, Google போன்ற தொழில்நுட்ப முதலைகள் இப்போதே ஆரம்பித்து விட்டனர், 

மேலும் டெலிகாலர்கள், கஸ்டமர் சேவை அதிகாரிகள், வங்கி கேஷியர்கள், பேங்க் லோன் அதிகாரிகள், ஹோட்டலில் ஆர்டர் எடுப்பவர்கள், போஸ்டல்/கூரியர் வேலைகள், வீடு மற்றும் அலுவலகம் தூய்மை  செய்பவர்கள் என பல வேலைவாய்ப்புக்கள் உலகளவில் பறிபோக இருக்கிறது.

புதிய வேலைகள் - Future Jobs 
நோயாளிகளுக்கு தானாகவே ஆபரேஷன் செய்யும் மெஷின்கள், மருந்து கடைக்காரர் பதிலாக தானாய் மருந்து, மாத்திரையை எடுத்து கொடுக்கும் தானியங்கி  மெஷின்கள் என பலவும் மாறி வர போகிறது.

வயதானவர்களை பார்த்து கொள்ளும் caretaker -கள், உளவியல் நிபுணர்கள், மறுவாழ்வு மையங்கள்,  நியூட்ரிஷன் /டயட்டிங் நிபுணர்கள், பல்வேறு துறையிலுள்ள creative designerக்கள், ரோபோடிக்/பாட்  என்ஜினீயர்கள், Virtual Currency Organizer, தானியங்கி வாகனங்களை பாதுகாக்கும்/ மேற்பார்வை பார்க்கும் ஆய்வாளர்கள், AR/ VR  என்ஜினீயர்கள் என வருங்காலத்தில் இந்த வேலைகலெல்லாம் கொட்டி கிடக்க போகிறது.

கண்டிப்பாக இன்னும் 30 ஆண்டுகளில் விண்வெளி சுற்றுலா பயணம் ஒரு சாதாரண நிகழ்வாக பார்க்கப்படும். விண்வெளியி துறையில் பயிற்சி பெற்றவர்கள் பெரும் வாய்ப்புகளை பெறுவார்கள். 

The Matrix படத்தில் வருவது போல ஒரு செயற்கையான உலகத்தை உருவாக்கி அதில் நம்மை உலவ விட போகிறார்கள். ஏற்கனவே அது போல Virtual Reality விளையாட்டுகள் வந்து விட்டாலும், அதை விட பலமடங்கு தொழில்நுட்ப வளர்ச்சியில் வளர்ச்சியடைந்து virtual உலகத்தில் நம்மை மூழ்கடிக்க செய்ய போகிறார்கள். Virtual Tour என்ற கனவுலகத்தில் நம்மை கட்டுப்படுத்தி விடுவார்கள் .

இதெல்லாம் உங்களை பயமுறுத்துவதற்காக எழுதவில்லை. இதெல்லாம் கண்டிப்பாக நடந்துவிடும் என்று சொல்லவில்லை. முன்பே சொன்னது  போல, எல்லா தொழில்நுட்ப வளர்ச்சியும் நாம் 100% நேர்த்தியாக கணிப்பது சாத்தியமல்ல. மேலே சொன்னதில் 60% சதவிகிதம் நடந்தாலே போதும். வேலையில்லா திண்டாட்டமும், பொருளாதார ஏற்ற இறக்கமும் வந்து சேரும். இதில் தப்பிக்க ஒரே வழி, தொடர்ந்து கற்றல் தான். அப்படி இல்லாவிடில் useless class என்னும் தொழில்நுட்பத்தால் வேலை பறிபோன கூட்டம் பெருமளவு நிற்கும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

இந்த விஞ்ஞான மற்றும் அறிவியல் மாற்றங்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரே வழி கற்றலே ஆகும். தொடர்ந்து கற்று, மற்றவர்க்கும் கற்பித்து அவரவர் தம் வாழ்வியலை சிறப்பிப்போம்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்