facebook likes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
facebook likes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

∴பேஸ்புக்கில் ஏன் பகிர்கிறார்கள்?

வணக்கம்,

நம் பெற்றோர்கள் நமது சுக-துக்கங்களை நமக்கு நெருக்கமானவர்களிடம் பகிர சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் நாம் நெருக்கமான நபர்களிடம் பகிர்கிறோமோ இல்லையோ, எல்லாவற்றையும் ∴பேஸ்புக்கில் கட்டாயம் பகிர்ந்து விடுகிறோம் .

இந்த பழக்கம் பேஸ்புக் உபயோகிக்கும் பலருக்கும் உண்டு,  என்னையும் சேர்த்து தான்... பொதுவாக எந்த மாதிரியான ஆட்களெல்லாம் ∴பேஸ்புக்கில் இருக்கிறார்கள் ? அவர்கள் எதையெல்லாம் பகிர்கிறார்கள் ? ∴பேஸ்புக்கில் ஷேர் செய்வோரில் பல டைப் மக்கள் உண்டு.

facebook-likes-and-shares

Type1: தொடர்ந்து ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டே இருப்பார்கள். நாட்டுநடப்பு, உலக நடப்பு, அரசியல் நடப்பு, வீட்டு நடப்பு, அவர் சொந்த கடுப்பு, வெறுப்பு, மலரும் நினைவுகள் என போட்டு கொண்டே இருப்பார்கள். சிலர் ஓரிரு வரிகளில் போடுவார்கள்; சிலர் பத்தி பத்தியாய் போடுவார்கள். இவர்கள் போஸ்ட் போட்டவுடன் லைக்ஸ் போட நண்பர்கள் கியூவில் நிற்பார்கள்.

Type2: ஒரு சிலர் நாட்டின்/மக்களின் பிரச்னைகளை புரட்சிகரமான கருத்துக்களை கொண்டு பகிர்ந்து கொள்வார்கள்.  இவர்கள் ஏன் இப்படி செய்யவில்லை.? ஏன் அப்படி செய்தார்கள்? ஒருவேளை இப்படி இருந்தால்... என போஸ்ட் போட்டு பகிர்ந்துக்கொண்டே இருப்பார்கள்.

Type3: அடுத்தது பொதுவான மக்கள். ஜோக்ஸ், விடியோக்கள், மீம்ஸ், சினிமா செய்திகள், பொன்மொழிகள், கிச்சன் டிப்ஸ், விழிப்புணர்வு, ஓட்டலில் சாப்பிட போனது, ஊருக்கு போனது, ஊர் சுற்றியது என பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். இருநாட்களுக்கு ஒருமுறை பேஸ்புக் வந்து லைக்களையும், ஷேர்களையும் போட்டு தள்ளி விடுவார்கள். நம் ∴பேஸ்புக் பேஜை திறந்தால், அதில் இருக்கும் 25 notification-ல் 23 அவர்களுடையதாய் இருக்கும்.

Type4: சிலர் தங்களுக்கு பிடித்தமான போட்டோ, விடீயோக்கள் என சிலவற்றை மட்டும் ஷேர் செய்வார்கள்.

Type5: இவர்களில் சிலர் எப்போது எங்கு சென்றாலும் உடனே ∴பேஸ்புக்கில் location checkin பண்ணிவிடுவார்கள். Feeling happy, Feeling sad, Feeling exited, Feeling கடுப்பு என அவர்களின் மூட்-ஐ ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வார்கள்.


Type6: இன்னும் சிலர் வெறும் போட்டோக்களையும், விடீயோக்களையும் பார்த்து ஸ்ரோல் செய்து கொண்டே செல்வார்கள். மற்றபடி, லைக், ஷேர் எதுவும் செய்யமாட்டார்கள்.

Type7: இன்னொரு சாரார் எப்போதாவது ஏதாவது பொன்மொழியோ, போட்டோவோ, சாமி படமோ ஷேர் பண்ணுவார்கள்.

Type8: வெறும் க்யூட்டான குழந்தைகள் போட்டோ, பூக்களின் போட்டோ மட்டும் இருந்தால் அது பெண்களின் ப்ரோஃபைலாக தான் இருக்கும். பல சமயங்களில் அது ∴பேக் ஐ.டி யாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

Type9: சிலர் தொழிலுக்காகவும், அரசியல் பரப்புரைக்காகவும் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். இவர்களது வெற்றியே எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட் வருகிறது என்பதை கொண்டே தெரியும். ஆனால் இவையெல்லாம் வெறும் வியாபார மார்க்கெட்டிங் நோக்கிற்காக செய்யப்படுபவை.

இவர்களெல்லாம் ஷேர் பண்ணுவது ஏதற்கு? எல்லாம் ஒரு லைக்குக்கு தான். Like, Love, Ha Ha, Wow, Sad, Angry என அதாவது ஒன்றை யாரவது அவர்கள் போட்டோவுக்கோ, போஸ்டுக்கோ ரியாக்ட் செய்திருக்க வேண்டும்; கமெண்ட் செய்திருக்க வேண்டும். இதற்காகவே பலர் தவம் இருக்கிறார்கள். அனைவரும் ஒரு சின்ன லைக் மற்றும் கமெண்ட்டுக்காக தான் இப்படி அலைகிறார்கள்.

ஒரு போட்டோவோ, போஸ்ட்டோ ∴பேஸ்புக்கில் போட்டுவிட்டு எத்தனையோ பேர் லைக்ஸ், கமண்ட் வருகிறது என ∴போனையே பார்த்து கொண்டிருக்கிறார்கள். 100 லைக்ஸ்க்கு மேல் வந்து விட்டால் மகிழ்கிறார்கள். சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் ∴போனில் "மச்சி என் போட்டோவுக்கு லைக் போடுடா... இன்னும் 3 லைக்ஸ் இருந்தா செஞ்சூரி போட்டுருவேன்" என சொல்லி பெருமைப்பட்டு கொண்டிருந்தார். 100 லைக்ஸ் வாங்கிய பின் என்ன செய்வார் என யாருக்கும் தெரியாது. லைக்குகள் வாங்கி குவிப்பது ஏன்? ஒரு சிறு உதாரணம்: ஒரு நாய் தெருவில் போகும் வண்டிகளையெல்லாம் பார்த்து குரைத்து கொண்டே பின்னால் ஓடும். விரட்டி பிடித்து வண்டி நின்ற பின் என்ன செய்ய வேண்டும் என அதுக்கு தெரியாது. வண்டி நின்றபின் மீண்டும் இருமுறை குரைத்து விட்டு போய்விடும். அது போல தான் லைக்ஸ் வாங்கி குவிப்பவரின் நிலையும். 100, 500 அல்லது 1000 லைக்ஸ்க்கு பின் என்ன செய்வார்கள் என அவர்களுக்கும் தெரியாது. இதேல்லாம் ஒரு சின்ன அல்ப சந்தோஷதிற்கு தான்.

பலரும் அவர்களது சொந்த விஷயங்களை கூட ∴பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார்கள். எங்கு போகிறோம்? எப்போது வருவோம்?.. உடம்பு சரியில்லை.. நாய் செத்து போச்சு.. பாட்டி மண்டைய போட்டுட்டாங்க.. என எல்லா கருமத்தையும் பகிர்ந்து விடுகிறார்கள். ஏதற்காக இப்படி எல்லாவற்றையும் பகிர்கிறார்கள்? எதற்கு இப்படி லைக் வாங்க துடிக்கிறார்கள் என யோசிக்கும் போது, இதற்கெல்லாம் ஒரு வித மனவியாதியே காரணம் என்கின்றனர் மனநல ஆர்வலர்கள். அவர்களுடைய மூளையில் ஒரு விதமான செரோடினின் (Serotinin) என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. அதை Happy Serotinin என்றே மருத்துவ உலகில் சொல்லுகின்றனர். அது சுரக்க சுரக்க மகிழ்ச்சி பெருகும். சாப்பாடு, தூக்கம், சினிமா, பணம், சரக்கு, விளையாட்டு, உடலுறவு, ஊர் சுற்றுதல், சமூக தொண்டு, பாராட்டு என எதை செய்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து இருக்குமோ, அதுபோல சிலருக்கு இது போன்ற ∴பேஸ்புக் லைக் மற்றும் பகிர்தல் மூலம் அவ்வகை ஹார்மோன்கள் சுரக்கிறது. அவை ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியையும், ஒரு வித போதை உணர்வையும் தரக்கூடியவை என உளவியல் ஆர்வலர்கள் சிலர் சொல்கின்றனர்.

அதனால் தான் சிலர் எல்லாவற்றையும் பேஸ்புக்கில் பகிர்ந்து மகிழ்ந்து கொள்கிறார்கள். அடிக்கடி செல்பி எடுப்பதும், இந்த வியாதியினால் தான். இதற்கு தீர்வு என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாம் மனக்கட்டுப்பாட்டோடு இருக்க பழகி கொள்ள வேண்டும். அது தான் முடியலையே என்கிறீர்களா?  முயற்சி செய்து பாருங்களேன்! நானும் முயற்சி செய்கிறேன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

லைக் போட்டால் குண்டாஸ் பாயுமா?

வணக்கம்,

கருத்து சுதந்திரம் என்பது நம் உரிமை. நம்முடைய கருத்தை நாம் எங்கு வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம். ஆனால் அது ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக் போன்றவற்றில் நம் கருத்துரிமையை நேர்பட பதிவு செய்வது என்பது கொஞ்சம் கடினமாகி வருகிறது. மற்றவரின் மனதையோ / நம்பிக்கையையோ/உணர்வையோ புண்படுத்தாமல் நம் கருத்தை பகிரலாம். சில அரசியல் பதிவுகள், மதம் சார்ந்த பதிவுகளை எழுதும் போது பெற்றோரும், உறவினர்களும் படிக்கும் போது பெரிய முட்டு கட்டைகளை போடுகின்றனர்.

"இது மாதிரி அரசியல் பத்தியெல்லாம் எழுதாதே! பின்னால ஏதாவது  நமக்கு பிரச்சனை ஆகிடும். நமக்கு இதெல்லாம் வேண்டாம்பா.. " என குறுக்கே நிற்கிறார்கள். என்னதான் நாம் பல சமாதானங்கள் சொன்னாலும், அவர்கள் ஒப்பு கொள்வதாய் இல்லை.

எனக்கு மட்டுமல்ல. கண்டிப்பாக பல பதிவர்களுக்கும், இதே போன்ற முட்டு கட்டைகளை சந்தித்திருக்ககூடும் . எல்லோரும் நமக்கு ஏதும் பிரச்சனை வந்து விட கூடாது என்று தான் சொல்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால் நாம் ஒண்ணும் இல்லாதது, பொல்லாதது  எல்லாம் எழுத போவதில்லையே!!! நம் கண்முன்னே பார்த்தது, செய்திதாள்களில் படித்ததை மட்டுமே தான் ஃபேஸ்புக் மற்றும் வலைப்பதிவுகளில் நினைவு கூர்ந்துள்ளோம். சில சமயம், அப்போதைய நாட்டு நடப்புகளையும், சில சம்பவங்களையும் தொகுத்து எழுதுகிறோம். இதில் தப்பேதும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.

எல்லாரும் சமூக வலைதளங்களில் அரசியல் வேண்டாம் என்று மறுக்க ஒரே காரணத்தை தான் சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன், மகாராஷ்டிரத்தில், சிவசேனாவின் தலைவர் பால் தாக்ரேவின் இறுதி சடங்கின் போது இரு மும்பை பெண்கள் கைது செய்யப்பட்டதை மனதில் கொண்டு தான் அஞ்சுகிறார்கள். "இந்த பந்த்/ கடையடைபெல்லாம் பயத்துக்காக தானே தவிர மரியாதைகல்ல.. " என்ற ரீதியில் போட்ட ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸே கைதுக்கு காரணமாம். கொசுறாக இதை லைக் பண்ண ஒரு மற்றொரு பெண்ணும் சேர்ந்து கைது செய்யப்பட்டாள்.


அன்று முதல் அரசியல் சம்பந்தமுள்ள எந்த ஒரு பதிவும் எவராலும் தைரியமாக போட முடியவில்லை. இருந்தாலும் நம் பதிவர்கள் விடுவதாய் இல்லை. பதிவை படிப்பவர்களுக்கு, இப்படியெல்லாம் அரசியலை பற்றி எழுதியிருக்கிறாரே என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.

மும்பை கைதை முன்வைப்பவர்களுக்கு ஒரு சில சேதிகள்-

1.) அந்த பெண் ஸ்டேடஸ் போட்டது, ஃபேஸ்புக்கில். அவளுடைய நண்பர்கள் மட்டுமே அதை பார்க்க முடியும். மற்றும் அவள் பதிவை லைக் செய்த பெண்ணின் நண்பர்கள் பார்க்க முடியும். இப்படியிருக்க இது எப்படி சிவசேனா தொண்டர்களுக்கு செய்தி போய் சேர்ந்தது என தெரியவில்லை.

2.) சிவசேனா தொண்டர்களுக்கு சிலர் அப்பெண்ணின் உறவினர் ஒருவரின் மருத்துவமனையை அடித்து உடைத்துள்ளனர். ஏன் பெண்ணின் வீட்டுக்கு செல்லாமல், உறவினர்  மருத்துவமனைக்கு சென்றார்கள் என தெரியவில்லை.

3.) போலிஸே நேரடியாக வந்து கைது செய்தது என்றாலும், சைபர் கிரைம் மூலம் இருவரையும் கண்டுபிடிக்கும் அளவுக்கு பால் தாக்ரே ஒன்றும் முதலமைச்சரோ, மந்திரியோ கிடையாது. மராட்டியத்தில் அவர் ஓர்  பெரிய அரசியல் தலைவர் என்றே ஒப்பு கொண்டாலும், சைபர் கிரைம் வைத்து உடனே கைது செய்யும் அளவுக்கு அந்த பெண்களும் தீவிரவாதிகள் இல்லை; இவரும் மகாத்மா இல்லை.

4.) அந்த இரு பெண்கள் கைதாகி பின் விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவர்களை கைது செய்த போலிஸ் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கபட்டதாம். அப்படியென்றால் அவர்கள் யார் சொல்லி அப்பெண்களை கைது செய்தனர்? இதன் பின்னால் இருக்கும் அரசியல் பின்னணி என்ன? அந்த பெண்களும் இதற்கு உடந்தையா??  என பல கேள்விகள் நமக்குள் எழுந்து கொண்டே போகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, சில நாட்களுக்கு பின் தமிழத்தில், சைபர் கிரைம் வகையான குற்றங்களை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்தார் நம் (மக்களின்) முதலமைச்சர். அவ்வளவுதான் ! உடனே ஊடகங்கள் சில, மும்பை பெண்கள் லைக் போட்ட சம்பவத்தையும், முதல்வரின் புது சட்டத்தையும் ஒன்றாய் சேர்த்து , இனிமேல் அரசுக்கு எதிராக ஃபேஸ்புக் பதிவு போட்டாலோ, லைக் போட்டாலோ குண்டாஸ் பாய்ந்து விடும் என்று எழுதி விட்டனர். இதை படித்த பின்னர் எந்த பெற்றோர்/உறவினர்/நண்பராவது நம்மை அரசியல் பதிவு போட விடுவார்களா?  

முன்பே சொன்னது போல, எந்த ஒரு கருத்தும் மற்றவரை புன்படுத்தாதவரை தவறில்லை. அரசியலை பற்றி பதிவு போட்டால் உடனே கைது செய்து விடுவார்கள் என்ற எண்ணம் தவறு. அதற்காக எதையும் எழுதலாம் என்றும் அர்த்தமில்லை.

சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் எல்லாவற்றையும் அரசாங்கத்தால் கண்காணித்து கொண்டிருக்க  முடியாது. அது சாத்தியமானதும் இல்லை. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கானோர் ஸ்டேடஸ்களும், ஆயிரக்கணக்கானோர் லைக் மற்றும் கமென்ட்டுகளும் போடுகிறார்கள். இதில் யார் ஸ்டேடஸ் போடுவது, யார் லைக் போடுவது என்றெல்லாம் தினமும் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு அந்த பக்கம் நின்றால் தவறில்லை. கோட்டை லேசாக தாண்டினால் .. தண்டனை தான்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

ஃபேஸ்புக் அபத்தங்கள் !

வணக்கம், 

நம்மை சிறு வயது முதல், நல்ல விஷயங்களை, சுக-துக்கங்களை நமக்கு நெருக்கமானவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வீட்டில் சொல்லி கொடுத்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில் மனதார பகிர்கிரோமோ இல்லையோ, சமூக வலைதளங்களில் தான் நிறையவே பகிர்கிறோம்.

சமூக வலைதளங்கள் (ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் ) எல்லாமே ஒரு பொழுது போக்குக்காகவும், நமக்கு தெரிந்ததை பகிரவும் தான் உபயோகப்படுத்தபடுகிறது. ஆனால் சமூக வலைதளங்களில் பகிரப்படும் முக்கால்வாசி செய்திகள், போலியான அல்லது தேவையில்லாத அபத்த செய்திகளாக தான் இருக்கிறது.

சில ஆர்வகோளாறு மக்கள், தங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப்-ல் அவர்களுக்கு என்ன போஸ்ட் வந்தாலும் அதை அப்படியே forward செய்து விடுகிறார்கள். அது உண்மையா ? பொய்யா? என்று விசாரிக்க வேண்டாம். சரி, யோசிக்கவாவது வேண்டாம். நல்லது செய்கிறேன் பேர்வழி என கண்டதை பகிர்கிறார்கள். ஏற்கனவே பதிவர் ராம்குமார் இதை பற்றி சில வாரங்களுக்கு முன் எழுதி விட்டார். நானும் பேஸ்புக்கில் பார்த்து வெறுப்பான சிலவற்றை பற்றி இங்கே உங்களுக்கு பகிர்கிறேன்.

1.)  ஏழு நிமிடத்தில் லைக்/ ஷேர் செய்தால் நல்லது நடக்கும்.

இது அடிக்கடி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக்  பதிவு. மத வேறுபாடில்லாமல் விநாயகர், சாய்பாபா, திருப்பதி பாலாஜி, ஏசு கிறிஸ்து, மேரி மாதா, நபிகள் நாயகம் என பலரும் பகிர்ந்து பக்தியை வெளிப்படுத்துவர். ஃபேஸ்புக்கில் லைக் செய்து ஷேர் செய்தால், எப்படி கடவுள் அருள் பாலிப்பார்? எப்படி நமக்கு நல்லது நடக்கும்? மதம்/கடவுள் என எல்லாமே நம் நம்பிக்கையில் தான் இருக்கிறது என்றாலும், இது போன்ற மூட பழக்கத்திற்கு துணை போக யார் சொல்லி கொடுத்தது? இப்பதிவையும் ஆயிரம் முட்டாள்கள் லைக் செய்வார்கள், நூற்று கணக்காணோர் ஷேர் செய்திருப்பார்கள்.


2.)  லைக் / ஷேர் செய்தால் பணம் நன்கொடையாக கிடைக்கும்.

சின்ன பையனுக்கு அல்லது பொண்ணுக்கு உடல் நலமில்லை, தாய் தந்தையருக்கு உயிர்கொல்லி நோய். ஃபேஸ்புக்கும், வாட்ஸ் -அப்பும் கலந்து பேசி, ஒரு லைக், ஷேருக்கு 50 பைசா தருவதாக சொல்லியுள்ளார்கள். ஆகவே இதை ஷேர் செய்து லைக் செய்யுங்கள் என்று மன்றாடி பதிவை போடுவார்கள். எந்த ஒரு காலத்திலும், இது போன்ற செயல்களுக்கு எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியோ அல்லது தொண்டு நிறுவனமோ பணம் நன்கொடையாக  தருவதில்லை,         

3.) குழந்தையை காணவில்லை-கண்டுபிடிக்க உதவுங்கள் !

குழந்தையை காணவில்லை- கண்டுபிடிக்க உதவுங்கள். பெயர்: ரஹீம். வயது:8. ஊர்: பெங்களூரு, மசூதி தெரு, தகப்பனார் பெயர்: அப்துல்லா. இச்சிறுவன் சென்னை சென்ட்ரல் C 2 காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கிறான். தயவு செய்து அதிக ஷேர் செய்து அவன் தாய் தந்தையரிடம் கொண்டுபோய் சேர்க்க உதவுங்கள்.  இது போன்ற அபத்தமான  பதிவை பலரும் பார்த்திருக்ககூடும். சிறுவனே காவல் நிலையத்தில் தான் இருக்கிறான். அவர்களே 15 நிமிடத்தில் பெங்களூரு போலீசிடம் பேசி அனுப்பி வைத்து விடுவார்கள். அதை ஏன் நாம் ஷேர் செய்ய வேண்டும்? அதாவது அவர்கள் கூற்று படி ஐநூறு/ஆயிரம் பேர் ஷேர் செய்வதன் மூலம், ஃபேஸ்புக் வழியாக அப்பதிவு அச்சிறுவனின் தாய் தந்தையரிடம் போய் சேரலாம் என்று எண்ணுகின்றனர். #வாட் எ டிசைன்

4.) ஷேர் செய்து அரிய பரிசை பெறுங்கள்.

பெரும்பாலும் பெரிய வணிக நிறுவனங்கள் இது போன்ற சலுகைகளை கொடுப்பதில்லை. சீல் சரியாக வைக்கபடாத 200 ஐ-பேட் களை, இந்த ஃபேஸ்புக் பக்கத்தை லைக் மற்றும் ஷேர் செய்பவர்களுக்கு இலவசமாக தருகிறது ஆப்பிள் நிறுவனம் என்று புரளி பரப்புகின்றனர். நிஜத்தில் அப்படி சீல் வைக்க படாத பெட்டிகளுக்கு மீண்டும் சீல் வைத்து மார்கெட்டுக்கு அனுப்பு வைத்து விடுவார்களே தவிர, இப்படி இலவச சலுகைகளை தர மாட்டார்கள்.

5.) UNESCO விருதை வென்ற "ஜன ஜன மன .."

நம் தேசிய கீதமான "ஜன ஜன மன" UNESCO வின்  உலகில் சிறந்த தேசிய கீதம்  விருதை பெற்றுள்ளது. ஒவ்வொரு இந்தியனும் இதனால் பெருமை படுவோம் என்று ஷேர் செய்திருப்பார்கள். நாமும் நம் நாட்டு பற்றை விட்டுகொடுக்காமல் லைக் போட்டு போயிருப்போம் (நானும் பண்ணி தொலைச்சேன்). ஆனால் அதுவும் பெரும் பொய்யே! நாங்கள் எந்த ஒரு விருதையும் யாருக்கும் அறிவிக்கவில்லை என்று சொல்கிறது UNESCO.


6.) பெண்களே உஷார் - எச்சரிக்கை !

சில பெண்கள் நலம் விரும்பிகள், பெண்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன் என்று கண்டதையும் ஷேர் செய்வார்கள். உங்கள் பேஸ்புக் ப்ரோபைல் போட்டோ சில சமூக காமுகர்களால் காப்பி செய்யப்பட்டு அதை தவறான இணையதளங்களிலும், போலி பேஸ்புக் அக்கௌன்ட்களிலும் உபயோகப்படுத்துகின்றனர். உஷார் ! ஆகவே உங்கள் படங்களை யாரும் சமூக இணைய தளங்களில் போடாதீர்கள் என்று எச்சரிக்கை
செய்து மிரட்டுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் இணையத்தில் ஒன்றிரண்டு நடந்திருப்பதை மறுக்க முடியாது என்பதை நானும் ஒப்பு கொள்கிறேன். பெண்களை உன் பேஸ்புக் பக்கத்தில்/ டைம் லைனில் கண்டவர்களின் friends request-ஐ ஏற்று கொள்ள கூடாது; தாங்கள் பகிர்வதை இன்னார் மட்டுமே பார்க்க வேண்டும் என்று settings-ஐ  மாற்றி கொள்ள வேண்டும என்று சொல்வதை  விட்டுவிட்டு அவர்கள் சுதந்திரத்திற்கு இடையில் நிற்பது அபத்தமே.

7.) மகாத்மாவின் நடவடிக்கை

இது தான் கொடுமையிலும் கொடுமை. ஒரு தேசபிதாவை அந்த நாட்டினரே அவமதிப்பது மகா கேவலம். மகாத்மா காந்தி எப்பொதும் பெண்களுடன்தான் இருப்பார். அதுவும் சிறு வயது பெண்களுடன். உதவிக்கு ஆண்களை வைத்து கொள்ளாமல்; சிறு பெண்களை வைத்து கொண்டு கூத்தடித்தார் என்று புகைப்படத்துடன் போடுவர்கள். இதை எந்த மூடன் ஆரம்பித்தான் என்று தெரியாவிட்டாலும், இது போன்ற ஆதாரமில்லா செய்திகளை சமூக வலைத்தளங்கள் பரப்பி கொண்டு தான் இருக்கிறது.

8.) டூத் பேஸ்டில் உள்ள கலர் சதுர குறியீடு

நான் சொல்ல வேண்டாம். படத்தை பார்த்தாலே உங்களுக்கே புரிந்திருக்கும். டூத் பேஸ்ட் ட்யுபில்  உள்ள கலர் சதுர குறியீடு அதன் செயல் கலவை  தன்மையை குறிக்கும் என்று பரப்பினார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. அது வெறும் கம்பெனியின் பேக்கிங் வசதிக்காக வைக்கப்பட்ட சீல் என்று விளக்கம் வந்துள்ளது.


9.) ஷாப்பிங் மாலில் ட்ரையல் ரூம்மில் ரகசிய கேமிரா

ஷாப்பிங் மாலில் பெண்கள் ட்ரையல் ரூம்மில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருக்கும். அதை அவர்கள் இணையதளங்களில் விற்றுவிடுவார்கள் என்று பீதியை கிளப்பினார்கள். மேலும் அந்த கண்ணாடி அறையிலிருந்து பார்த்தால், நீங்கள் நிற்பது மறுபக்கத்தில் தெரியும் என்றும் சொன்னார்கள். ஆனால் அது உண்மையல்ல. உள்ளே நீங்கள் நிற்கும் போது உங்கள் செல்போனிலிருந்து கால் செய்து போகவில்லை என்றால், அங்கு ஓர் ரகசிய காமிரா உள்ளது என்று அர்த்தமாம். ஹ்ம்ம்... உண்மையில் காமிரா இருந்தால், கால் போகாது என்பது ஒரு அறிவியல் பூர்வமான பொய்யான தகவல். மேலும் இரு பக்க கண்ணாடியை கண்டுபிடிக்க உங்கள் ஆள்காட்டி விரலை வைத்து சோதிக்க சொல்லியிருப்பார்கள். அதுவும் ஒரு கேவலமான பொய்யே !


10.) வாட்ஸ்-அப் ஃபார்வோர்ட்கள் -

சில நாட்களுக்கு முன் ஒரு அழகிய பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி, கூடவே ஒரு ஆடியோ பைலையும் சேர்த்து பரப்பியுள்ளனர். அதில் அந்த பெண் ஒரு ஜெகஜால திருடி என்றும், ஆண்கள் இல்லாத நேரத்தில், வீடு வீடாக சென்று கேஸ் கனெக்ஷன் சரி பார்க்க வந்துள்ளதாக சொல்லி நகை மற்றும் பணத்தை திருடி விடுவாள், உஷாராக இருக்கவும் மக்களே என்று ஒரு மேதாவி பேசியுள்ளார். அந்த பெண்ணின் போட்டாவில்  அழகாக ஐ.டி. கார்டு டேக் போட்டு கொண்டு சோபாவில் உட்கார்ந்து போஸ் கொடுக்க பட்டிருக்கும். திருடி என்றால் இப்படியா போஸ் கொடுத்து போயிருப்பாள். அதை கூட யோசிக்காமல், பல ஆர்வ கோளாறுகள் ஷேர்/ forward  செய்துவிட்டனர். இதை ஒரு தினசரி நாளிதழ், உண்மையா? பொய்யா? என்று கூட விசாரிக்காமல் தங்கள் பத்திரிகையில் போட்டு விட்டனர். பின்னர் அது பொய் என்று ஒரிரு வாரம் கழித்து தான் தெரிந்தது.


இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு forward மெசேஜ். சென்னையின் போலீஸ் கமிஷனர் ராஜேஷ் மாரியா, பெண்களின் பாதுகாப்புகாக ஒரு புது திட்டத்தை தொடங்கியுள்ளார். அதாவது  பெண்கள் டாக்ஸி/ஆட்டோ ஏறும் முன் அந்த வண்டியின் என்னை 9969777888 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், அதை அவர்கள் ஜி.பி.எஸ் மூலம் டிராக் செய்து கொள்வார்களாம். உங்கள் அக்கா/தங்கை/நண்பிகளுக்காக ஷேர் செய்யுங்கள் என்று வந்தது. அடப்பாவிகளா !!! ராஜேஷ் மாரியா மும்பையின் போலீஸ் கமிஷனர். இந்த திட்டமும் மும்பையில்தான் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இப்போது சென்னையின் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ். இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் சிலர் பகிர்கின்றனர்.



ஏ.டி.எம்-ல் பின்-நம்பரை தலைகீழாய் போடுவது, டெலிகிராம் ஆப் ஓர் இந்திய தயாரிப்பு நிறுவனம், ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்,  இவை எல்லாம் போலியான செய்திகளே! இன்னும் இது போன்ற அபத்தங்கள் பல இணையத்தில் உலவுகின்றன. கூகுளில் சென்று social media hoax என்று தேடி பாருங்கள். இன்னும் பல கதைகளை காணலாம். நான் இங்கே பகிர்வதும்  இணையத்தில் தேடி படித்தது தான். இணையத்திலும், சமூக வலைமனைகளிலும் பகிரப்படுவது பெரும்பாலும் போலியான அல்லது அபத்தமான செய்தி பதிவுகளே ! இதனால் பெரும் பாதிப்புகள் வராது என்று வைத்து கொண்டாலும், முடிந்த வரை சரியான தகவல்களை பகிருவோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

நன்றி !!!

-பி .விமல் ராஜ்