political news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
political news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 மே, 2021

புதிய விடியல் ஆரம்பம் !

வணக்கம்,

சின்ன இடைவெளி விட்டு மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். தேர்தல் முடிவை அலசும் என்னை போன்ற ஓர் சாமானியனின் அரசியல் பதிவு இது. 

இதுவரை வந்த ஓட்டு எண்ணிக்கை முடிவின் படி, திமுக கூட்டணி வெற்றி பெற்று விட்டது. எல்லா முடிவுகளும் அப்படிதான் சொல்கின்றன. ஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜ.க வுடன் கூட்டணி இருந்திருக்காது. இம்முறையும் அதிமுகவே வென்றிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜ.கவின் நடவடிக்கைகளும், செயல்பாடும் நம் மக்களை மேலும் கடுப்பாகி விட்டது. அதனால் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என அதிமுகவை சற்று ஒதுக்கி வைத்துள்ளனர். எதிர்பார்த்தபடி நட்சத்திர தொகுதியில்  யார் வெல்வார்கள் என மக்கள்  நினைத்தார்களோ அவரே வென்றுள்ளனர். சில இடங்களில் மாறுபட்டிருப்பது சற்றே வேதனைக்குரியது. 

இன்று காலை முதல் பெரும்பாலானோர் வீட்டில் தேர்தல் லைவ் செய்திகள் தான் ஓடி கொண்டிருக்கும். நேற்று வரை கொரோனா தா(க்)கம் கொண்ட டி.வி சேனல்கள், "போனால் போகட்டும் போடன்னு" இன்று மட்டும் கொரோனா செய்திகளுக்கு லீவு விட்டு விட்டார்கள். உயிரிழப்பு, நோய் தொற்று, மருத்துவனை சேர்க்கை, ஆக்சிஜன் பற்றாக்குறை என எல்லாவற்றுக்கும் பாஸ் (Pause) போட்டு வைத்துள்ளார்கள். நாளை முதல் மறுபடியும் லூப்பில் போட்டு ப்பிளே (Play) செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். சில சேனல்களில், நடுநடுவே விளம்பரம் போட்டு வழக்கத்தைவிட சற்று அதிகமாய் சம்பாதித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

புதிய விடியல் ஆரம்பம் !

சரி.. கட்சி நிலவரத்துக்கு வருவோம். அதிமுக ஏன் தோற்றது என நாலரை வருட பழைய புராண கதையை சொல்லி போரடிக்க விரும்பவில்லை. மக்கள் அதிருப்தி, நிர்வாக சீர்கேடு என்றெல்லாம் கூட  அளக்க தேவையில்லை. பா.ஜ.க வுடன் கூட்டணி என்ற ஒற்றை விஷயமே அவர்களை ஒதுக்குவதற்கு போதுமான காரணம் என எண்ணுகிறேன். பேரிடர் சமயத்தில் ஓடி ஓடி சென்று வேலை செய்தவரின் வெற்றி இழுபறியில் இருக்க, ராக்கெட் விஞ்ஞானியின் வெற்றியும், கொங்கு பக்கத்து வெற்றியும் சுலபமாகி இருப்பதை கண்டு மக்களின் மனநிலையை என்னவென்று சொல்ல தெரியாமல் முழி பிதுங்கி போயுள்ளேன்.

உலக நாயகன் கமலஹாசன் கட்சி ஆரம்பித்து, அதிரடியாக வலம் வந்து, கடைசி வரை ஜெயிப்பது போல வந்து கொண்டிருக்கிறார். நல்ல ஒரு போட்டியாளராக தான் களத்தில் இருந்திருக்கிறார். இன்னும் பெரிதாய் வந்திருக்கலாம்! ம்ம்ச்ச்... ஹ்ம்ம்.. 2006 தேர்தலில் விஜயகாந்த் ஒரு சீட்டுடன் சட்டசபைக்கு வந்து, பின்னர் 2011 தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாக உட்கார்ந்தார். அதேபோல ம.நீ.ம க்கும் நடந்திருக்கலாம் என சொல்லவில்லை... நடந்திருந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறேன். அதைவிட ஒரு சினிமா ரசிகனின் ஆசையாக, உலக நாயகனின் புரிபடாத கன்னி பேச்சை சட்டசபையில் கேட்பதற்கு பதிலாய், சேனாபதியின் கரகர குஜராத்தி பேச்சையும், விக்ரமின் மிரட்டலான விருந்தையும் காண என் கண்கள் விழைகிறது! (நடந்தால் நன்றாக இருக்கும்..)

அடுத்து நம்ம தம்பிகளின் அன்பு அண்ணன்/ தமிழ் சமூகத்தின் இனமான, வீரமான, தலைவன் செந்தமிழன் சீமான். இம்முறையும் ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.  2011, 2016 தேர்தலில் ஏன் தோற்றீர்கள் என கேட்டதற்கு, எங்கள் வாக்காளர்கள் இன்னும் ஓட்டு போடும் வயதுக்கு வரவில்லை சொல்லி  கொண்டிருந்தனர். இந்த முறையும் அவர்கள் வாக்காளர்கள் வயசுக்கு வரவில்லை போல. அடுத்த முறையாவது... ஹ்ம்ம் வேண்டாம் விடுங்க... ஆனால் ஒரு விஷயத்தில் இவரை பாராட்டலாம்; கூட்டணி இல்லை என்று சொல்லி தனியே நின்று கெத்து காட்டி நிற்கிறார். தமிழ் தேசிய ஆட்சியில் அதிபர் சீமான் என்கிற கனவுலகில் இருந்த இவர் தம்பிகள் மீண்டு வர சில நாட்கள் ஆகும். வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும் தான்; ஆனா ஓவரா பேசுற வாய் .........  இம்முறையும் ஓட்டை பிரிக்கும் இவர்கள் தொழிலை செவ்வனே செய்துள்ளார்கள். இல்லாவிட்டால் இன்னும் சில தொகுதிகளில் தி.மு.க வென்றிருக்கும். 

அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என காத்திருந்து பின்வாசல் வழியாக வாளேந்தி வந்த ஆர்.எஸ்.எஸ்./ பா.ஜ.க. / இந்துத்துவா கட்சிகள், சற்றே பலமான அடியுடன் யோசித்து கொண்டிருப்பார்கள். தற்போது 4 தொகுதிகளை கைப்பற்றி நிற்கின்றனர். அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருந்தாலும் திமுக தில்லுடன் மோத சமாளிக்க வேண்டும்.   

10 வருடங்களுக்கு பிறகு தி.மு.க ஆட்சிக்கு வருகிறது. வாழ்த்துக்கள்! இன்னும் கொஞ்ச காலங்களில் விழபோகும் பேரடியை யோசிக்காமல் ஊரெங்கும் உடன்பிறப்புக்கள் மகிழ்ச்சி பொங்க வெற்றி களியாட்டதில் இருக்கின்றார்கள். ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளை விட, எக்கச்சக்க இடியாப்ப சிக்கலில் நாடும், மாநிலமும் இருக்கிறது. சற்றே உண்மையை சொல்ல வேண்டுமானால், நம் டோப்பாவை கழட்டிவிட்டு மண்டையை சொரியும் அளவுக்கு பிரச்சனைகள் இருக்கிறது. அதை சரிவர கவனித்து, மத்தியில் சமாளித்து ஆட்சி நடத்த வேண்டும். ஏற்கனவே மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை அல்லது மிகவும் சொற்பமாக நிதியை ஒதுக்குகிறார்கள் என சொல்லி  கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் இழுபறியாக இல்லாமல், இருபுறமும் அவதானித்து, சரியான முடிவுகளை எடுப்பது நல்லது. கத்தி மேல் நடக்க போகும் தளபதியின் ஆட்சி எப்படி இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இதிலிருந்து ஒன்று தெளிவாய் தெரிகிறது. மூன்றாம் அணி என யார், எப்பொது வந்தாலும் இந்த இரு பெரும் கட்சிகளை தாண்டி வ(ள)ர முடியவில்லை. மதிமுக, மநகூ, நாதக, மநீம.. என யார் வந்தாலும் மக்கள் முடிவு வேறு விதமாக தான் இருக்கிறது. 

எனக்கு இதில் ஒரே ஒரு அல்ப சந்தோஷம். அப்பாடா! நல்ல வேளை!! ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை... எத்தனை பேர் வாயில் புகுந்து புறப்பட வேண்டியதோ.. மயிரிழையில் தப்பித்தார் தலைவர்! ஹி..ஹி ஹி.. :-) 

தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க. கூட்டணியை கூட்டி அள்ளி குப்பையில் போட்டுவிட்டார்கள் அந்த மாநில மக்கள். நம்மை விட சேட்டன்களும், பெங்காளிகளும் ரோஷகாரங்க போல... 

ஒரு வழியாக விடியல் வந்துவிட்டது. கட்சிக்கா, மக்களுக்கா, யாருக்கென தான் தெரியவில்லை. இனிமேலாவது நம்ம தமிழ் நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி! 

"வெற்றி நடை போடும் தமிழகமே" பாடலின் வேறொரு வெர்ஷனை 2026-ல் கேட்கலாம், தயாராகுங்கள்! 


நன்றி!!!

பி. விமல் ராஜ்

செவ்வாய், 24 மே, 2016

அரசியல் மாற்றம் இது தானோ!

வணக்கம்,

என்னடா நடக்குது நம்ம தமிழ் நாட்டிலே!

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்த தேர்தலில் அதிமுக 130 இடங்களில் வென்றதும், மாற்றம் வேண்டும் என்று கூவியவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்ததும், 89 இடங்களில் திமுக சக்தி வாய்ந்த எதிர்கட்சியாக நின்றதும் அனைவருக்கும் வியப்பின் ஆச்சிரிய குறியீடு!

கடந்த ஆட்சியின் போது பல அதிருப்திகளை கொண்ட அதிமுக அரசு, இம்முறை அரசாள வாய்ப்பில்லை என பலரும் சொல்லிவந்த நிலையில், தேர்தலில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. அதில் முக்கிய காரணமாக சொல்லபடுவது இலவச மின்சாரம், மலிவு விலையில் ஸ்கூட்டர். இது போக தேர்தலுக்கு முன் தொகுதியில் விளையாடிய பணநாயகம். ஆனால் இவை மட்டும் காரணமல்ல.

தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என அறைகூவல் விட்ட எந்த கட்சியும், அவர்கள் மேல் நம்பிக்கை வரவைப்பது போல செய்யவில்லை என்பது தான் உண்மை. தேர்தலில் வெல்ல வெறும் வீராவேசமான பேச்சும், முழக்கமும் மட்டும் போதாது.

2014 தேர்தலில் மோடி பிரதமராக வந்தால் நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்வார் என பலரும் நம்பியதால் மட்டுமே, மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தது. அதுபோல மக்கள் நல கூட்டணி , பாமக, நாம் தமிழர், பாஜக உட்பட அனைவரும் அந்த நம்பகத்தன்மையை மக்களிடம் ஏற்படுத்த தவறிவிட்டார்கள். அதனால் தான் மண்ணை கவ்வியுள்ளர்கள். திமுக நூலிழையில்தான் தோற்றுள்ளது. மற்ற குட்டி கட்சிகளுக்கு வாக்குகள் பிரிந்ததால், வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.

சரி! இது போகட்டும் விடுங்க. கடந்த இரு நாட்களாக நடந்த ஆரசியல் நிகழ்வுகளை பாருங்கள்.

அதிமுக தேர்தலில் வென்றதால், நேற்று (23-மே-2016) ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.

*) பதவியேற்பு நிகழ்ச்சியின் போது போயஸ் தோட்டம் முதல் சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபம் வரை ஒரு பேனர் அல்லது அலங்கார தோரணை கூட இல்லையாம்!

*) இனிமேல் அமைச்சர்கள் தம் காலில் விழ வேண்டாம் என முதல்வர் சொல்லியுள்ளராம்! (சமூகதள வழி செய்தி)

*) முதல்வர் பதவி ஏற்றதும், 500 டாஸ்மாக் கடைகள் மூடல், டாஸ்மாக் கடை நேரம் குறைத்தல், 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி, தாலிக்கு 8 கிராம் தங்கம் என அதிரடி உத்தரவுகளை போட்டுள்ளார்.

*) நேற்று முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக-வுக்கும் அழைப்பு போயுள்ளது.

*) ஸ்டாலின் உட்பட சில திமுக பிரதிநிதிகள் நிகழ்ச்சிக்கு போக, அவர்களுக்கு முன் வரிசையில் இடம் தராமல், நான்கு வரிசைகளுக்கு பின் உட்கார இடம் தரப்பட்டுள்ளது. அவர்களும் அமைதியாக நிகழ்ச்சி கடைசி வரை இருந்து பார்த்து, வாழ்த்திவிட்டு வந்திருகின்றனர்.

*) ஸ்டாலின் கலந்து கொண்டது மட்டுமில்லாமல், ட்விட்டரில் வாழ்த்தும் போட்டுள்ளார்!

healthy-politics-tamilnadu
click to enlarge
*) அதற்கு பதிலாக கலைஞர் தமது அறிக்கையில், "பதவியேற்பு விழாவில் தி.மு.க.,வினர் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். கூட்டத்தோடு கூட்டமாக ஸ்டாலினுக்கு இடம் தரப்பட்டது. தேர்தலில் தோற்ற சரத் குமாருக்கு முதல் வரிசையில் இடம் தரப்பட்டது", எனக் கூறியுள்ளார்.

*) அதற்கு பொறுப்புள்ள முதல்வராய் பதில் சொல்லும் விதமாக, "இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. திமுகவையோ,ஸ்டாலினையோ அவமான படுத்தும் எண்ணம் இல்லை. விழாவின் மரபுப்படி அமரவைக்க வேண்டும் என சொல்லியிருந்தேன். ஸ்டாலின் வருவார் என முன்பே தெரிந்திருந்தால், முன் வரிசையில் அமர இடம் ஒதுக்கும் படி  சொல்லியிருப்பேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் நன்மைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் அவரது கட்சியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்", என கூறியுள்ளார்.


கடந்த ஒரு வாரத்தில் நடந்தவை இவை. இதெல்லாம் ஆரோக்கியமான, நாகரீகமான அரசியலுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதொரு ஆரம்பமாக கருதுவோம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 12 மே, 2016

கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !

வணக்கம்,

மே 16 - தமிழக சட்டமன்ற தேர்தல்

அன்பார்ந்த வாக்காள பெருமக்களே! இது தேர்தல் நேரம். எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டம், தேர்தல் அறிக்கைகள், அனல் பறக்கும் பிரச்சாரம், புள்ளி விவரங்கள், கருத்துகணிப்புகள், தொகுதி நிலவரம், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பணம் பறிமுதல் என எங்கு பார்த்தாலும் தேர்தல்மயம். அரசியல் தலைவர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் தேர்தல் ஜூரம் பற்றி கொண்டுவிட்டது. ஒருவழியாய் இன்றோடு எல்லா பிரச்சாரமும் முடிவடைகிறது.

யாருக்கு ஓட்டு போட வேண்டும் என மக்கள் யோசித்து கொண்டிருகிறார்கள். ஏனென்றால் அத்தனை கட்சிகளும் அம்புட்டு நல்லவர்களாகவே இருக்கிறார்கள்!?! எல்லாம் உங்களுக்கு தெரிந்தது தான். இருந்தாலும் கொஞ்சம் மேலோட்டமாக பார்ப்போம்.

ஆளும் அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில்முறையில் எந்த ஒரு வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ காட்டவில்லை. விவசாயத்தில் அவர்களுடைய இரு இலைகளுக்கு மேல் எதுவுமே தழைக்கவில்லை. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கு, மந்திரிகளின் மீதான ஊழல் வழக்கு, விலைவாசி ஏற்றம், டாஸ்மாக்-கிற்கு பாதுகாப்பு கொடுத்தது, அதிகார துஷ்பிரயோகம், சிறைவாசத்தின் போது அரசு இயந்திரம் ரிப்பேராகி போனது, நடுஇரவில் ஏரியை திறந்துவிட்டது, ஸ்டிக்கர் ஒட்டியது என பல குற்றச்சாட்டுகள் உள்ளது.

எதிரே உட்கார்ந்து அடம் பண்ணும் கட்சியிலும், இமாலய 2G ஊழல் வழக்குகளும், கொள்ளு பேரனின் பேரன் வரை சொத்து சேர்த்து வைத்தது, ஈழ போரின் போது மக்களை நம்ப வைத்து ஏமாற்றியது என குற்றப்பட்டியல் நீள்கிறது. இப்போதுள்ள ஆட்சியின் மீதுள்ள வெறுப்பால், இவர்களுக்கு தான் இம்முறை விடியும் என பலரும் சொல்கிறார்கள். அட ஆமா! இப்போ இவங்க turn தானே!

மக்கள் கூட்டணி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணியில் யாரும் இதுவரை அரியணை ஏறியதில்லை. அதனால் ஊழல் வழக்குகளோ, குற்றச்சாட்டுகளோ அவர்கள் மேல் பெரிதாக இல்லை. சாட்டையை பம்பரத்தில் சுற்றி விடுவது போல, சுற்றி விட்டு வேடிக்கை பார்க்கிறார் கூட்டணி ஆரம்பித்த எழுச்சி தலைவர். கடந்த தேர்தல்களில் ஒன்று  அல்லது இரண்டு சீட்களுக்காக கட்சியையும், கூட்டணியும் பேரம் பேசி தாவி கொண்டேயிருந்த பெரும் தலைவர்கள் இங்கு தான் இருகின்றனர்.

இதில் 'மீகாமன்' மட்டும் விதிவிலக்கு. அவர் போன தேர்தலில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்து பின்னர் கையை உயர்த்தி, நாக்கை துருத்தி எதிர்ப்பை காட்டினார். இன்றும் தைரியமாக இரு பெரும் கட்சிகளுக்கு எதிராக நின்று தேர்தலில் கடுமையான போட்டியை கொடுத்து முரசு கொட்டுகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் அரசியலில் முதல் அடி சரியாக வைத்து, சற்று ஜெயித்தும் விட்டார். நாளாக நாளாக இவர் தரம் (பேச்சிலும், செயலிலும்) குறைவது போலவே தெரிகிறது. 2006-ல் இவர் பேசிய பொதுக்கூட்ட பேச்சை பாருங்கள்.. போன வாரம் இவர் பேசியதை பாருங்கள்... உங்களுக்கே புரியும். இப்போது இவர் பேசுவது ஒன்றுமே புரிவதில்லை. மேடைகளிலே தத்துபித்துவென உளறி கொட்டுக்கிறார். பல நேரங்களில் 'தள்ளாடி' நடக்கிறார். இவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வரோ என அண்ணியாருக்கு தான் வெளிச்சம்!

அடுத்து மாற்றத்தை விரும்பும் கட்சி. சில மாதங்களுக்கு முன், தமது சாதியில் உள்ள ஒருவர் தான் நாடாள வேண்டும் என்று தீச்சட்டியேற்றி பறைசாற்றி கொண்டிருந்தனர். இப்போது அதையே சற்று மாற்றி, ஒரு தமிழன் தான் நாடாள வேண்டும் என்று சொல்கின்றனர். கார்ப்பரேட் கம்பெனி போல மக்களுக்கு 'ஆடியோ விடியோ முறையில்' (AV Presentation) அவர்களது வாக்குறுதிகளை காரைக்கால் திருவிழாவில் வீசுவது போல வீசி கொண்டிருகிறார்கள்.

அடுத்தவர் அண்ணணின் வீரமான தம்பி. கத்தி கத்தி பேசியே மெழுகுவர்த்தி போல உருகி கொண்டிருக்கிறார். அவ்வாறு பேசும் வீர வசனங்களை அவர் எடுக்கும் படங்களில் வைத்தாலாவது கொஞ்சம் பார்க்க /கேட்க முடியும். இவரை பொறுத்த வரை 1000 ஆண்டுகளுக்கு மேல் எந்த சாதிமக்கள் தமிழ் நாட்டிலேயே வாழ்கிறார்களோ, அவர்கள்தான் தமிழினம். மற்ற அனைவரும் வடுக வந்தேறிகள். இவரை விட்டால் தமிழ் நாட்டை இந்தியாவிலிருந்து முற்றிலும் பிரித்து விடுவார்.

இது போல பல கூத்துகளை நம் மக்கள் தினமும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். யார் நல்லவர், வல்லவர், தூய்மையானவர் என சொல்ல முடியவில்லை. அதனால் பலர் ஓட்டே போட தேவையில்லை என நினைக்கிறார்கள். சிலர் அரசியல், தேர்தல் பற்றி ஏதும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் நமக்கு ஒரு கவலையும் இல்லை' என எண்ணி கொண்டிருகின்றனர். சிலர் வெட்கமே இல்லாமல் ஓட்டை விற்று விடுகின்றனர். நாம் ஓட்டுக்கு பணம்/ பொருள் வாங்கினால், நம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நம்மை ஏமாற்றதான் பார்ப்பார்கள். பின்னர் அவர்கள் பெயரை சொல்லி நாம் புலம்ப முடியாது.


அந்த தவறான எண்ணத்தை மாற்ற பலரும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். மக்களாகிய நாம், செய்ய வேண்டியது என்னவென்றால், யார் சரியான வேட்பாளர் என்பதை பார்த்து ஓட்டு போட வேண்டியது மட்டும் தான். இதில் யார் தகுதியானவர் என்று கண்டுப்பிடிப்பது சற்று கடினம் தான். அதை உங்கள் தொகுதியில் நிற்கும் நல்ல தகுதியான வேட்பாளரை ஆராய்ந்து பார்த்த பின் ஓட்டளிக்க வேண்டியது நம் கடமை. அது கடமை மட்டுமல்ல. நம் உரிமையும் கூட. நான் என் கடமையை செய்தேன்; ஆனால் எங்களுக்கு (தொகுதிக்கு) ஒரு நல்லதும் நடக்கவில்லை என சொல்பவர்களுக்கு, கீதா உபதேச வரிகளை நினைவுகூற விரும்புகிறேன். கடமையை செய்! பலனை எதிர்பாராதே! நாம் செய்ய வேண்டியதை சரியாய் செய்வோம். நடப்பது நல்லதாகவே நடக்கட்டும்.

வாருங்கள் ஓட்டு போடுவோம்! நம் கடமையை சரியாக செய்வோம்!! 

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 21 ஏப்ரல், 2014

வாங்க ஓட்டு போடுவோம் !

வணக்கம்,

தேர்தல் வந்தாச்சு. ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி எல்லோரும் பேசி கொண்டிருப்பது இந்த வாரம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை பற்றி தான். புதிதாய் ஓட்டு போட தயாராகும் கல்லூரி இளைஞன் /இளைஞிகள், அரசு அலுவலகங்கள், கார்ப்பரேட்  நிறுவனங்கள், தெருவோர பெட்டிக்கடைகள் என எல்லா இடங்களிலும் அரசியல் பேசும் நேரம் இது.

மத்தியில் இருபெரும் கட்சிகள் மோதுகின்றன. மாநிலத்தில் கூட்டணி கட்சியினரோடு சேர்ந்து கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக பிரச்சாரத்திலும், போட்டியிலும் அனல் பறக்கிறது. இரண்டு பெரும் கட்சிகள் இத்தேர்தலில் மோதும் போது, உடைபடுவது எதோ மக்களின்  மண்டையாக தான் இருக்கிறது. ஆளாளுக்கு பிரச்சார விளம்பரங்களையும், வாக்குறுதிகளையும் அள்ளி வீசி கொண்டு இருக்கின்றனர். நமக்கு தான் எதை கேட்பது என்று தெரியவில்லை.

இப்போது நடப்பது நாடாளுமன்ற தேர்தலா? அல்லது மாநிலங்களவை தேர்தலா? என்றே புரியவில்லை. நடக்கிற கூத்தை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. மாநிலத்தில் உள்ள எல்லா கட்சிகளுமே ஒரே மாதிரி நம்மை குழப்புகிறார்கள்.

vote for better India

"ஏமாந்தது போதும்! இம்முறை எங்களுக்கே வாக்களியுங்கள்  எங்ககளை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால், தடையில்லா மின்சாரம் தருவோம், விலைவாசியை குறைப்போம்; வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் ! .....செய்வீர்களா???? நீங்கள் செய்வீர்களா???? " என்று நம்மையே கேள்வி கேட்கிறார்கள். நாம் தானே சொன்னதை செய்வீர்களா? என்று கேட்க வேண்டும். எனக்கு புரியவில்லை.

மற்றொருவரோ, "அவர்கள் சொன்னதை இதுவரை செய்யவில்லை; நாங்கள் மறக்கவில்லை... அதை நீங்கள் மறப்பீர்களா??? மறப்பீர்களா??? " என்று அவர்களை நல்லவர்கள் போல காட்டி கொள்கிறார்கள். அவர்கள் குடும்ப பிரச்சனைகளை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை அறியாதவர் போலும்!

இன்னொருவர், "தெரிஞ்சிகோங்க மக்களே!!! இரண்டு கட்சிகளும் சரியில்லை; ஒரே ஊழல்; அராஜகம்; நம்மால நிம்மதியா இருக்க முடியல...ஏய் ! கொடியை கீழே இறக்குடா...  மறைக்குதுல்ல....எங்க விட்டேன்?... ஆங்...இந்த ஒரு முறை வாய்ப்பு கொடுங்க.. புரிஞ்கோங்க மக்களே!!!" என்று அவருக்கும் புரியாமல், நமக்கும் புரியாமல் பேசுகிறார் உளறுகிறார்.

தேர்தல் விளம்பரத்தில் இவர்களின் சொத்து பட்டியலை மாறி மாறி காட்டி, போட்டு கொடுத்து கொள்கிறார்கள். இதையெல்லாம் ஏன் சி.பி.ஐக்கும், வருமான வரி துறையினருக்கும், முன்னமே தெரியவில்லை என்றுதான் நம் மக்களின் பெரிய சந்தேகமாக இருக்கிறது.

நடக்கவிருப்பது நாடாளுமன்ற தேர்தல். எங்களை வெற்றி பெற செய்தால், எங்கள் வேட்பாளர் உங்களுடைய தொகுதிக்காக பாராளுமன்றத்தில் போய் பேசுவார் என்று சொல்லி ஓட்டு கேட்டால் சரி.  அதை விட்டுவிட்டு, மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் ! விலைவாசியை குறைப்போம்; மின்சாரம் தருவோம் என மாநிலங்களவை தேர்தல் போல பிரச்சாரம் செய்கிறார்கள். விதம் விதமாக நம் காதில் பூ சுற்றுகிறார்கள்.

தேசிய கட்சிகளும் சாதாரணமாக விடவில்லை. நாங்கள் செய்த பத்தாண்டு சாதனைகளை தொடர வழி செய்யுங்கள் என்று வாய் கூசாமல் புளுகுகிறார்கள். மற்றொருவரோ, அவரின் சாதனையை பட்டியல் போடவே நேரம் இல்லாமல் இருக்கிறார். அந்த சாதனை பட்டியலில் சில வேதனை பட்டியல்கள் மறைந்து விடுகிறது. ஆனால், இவரை தான் இந்தியாவின் எதிர்கால ஒளி விளக்கு, வழிகாட்டி என்று எல்லோரும் நம்புகிறார்கள். ஹ்ம்ம்....நம்பி தானே ஆகணும்... வேற வழி ?

அற வழியில் ஊழலை எதிர்கிறேன் என்று கட்சி ஆரம்பித்தவர்; முதல் அடியை சரியாக எடுத்து வைத்து விட்டார். ஆனால், அதன் பின் சரியாக அடியேடுத்து வைப்பாரா என குழப்புகிறார். இரும்பெரும் கட்சிகளை தாக்கு பிடிப்பாரா என்றும் தெரியவில்லை.

மக்கள் யாரும் யோசிக்கவே மாட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள். யாரும் செய்திதாள்கள் படிப்பதில்லை; செய்திகள் கேட்பதில்லை என்று அரசியல்வாதிகளின் நினைப்பு. ஆனால் அதுவும் கிட்டதிட்ட உண்மைதான். ஆம். நம் பாரத தேசத்திற்கென்றே பொதுவான வியாதி ஒன்றுள்ளது.

மறதி- நம் நாட்டின் தேசிய வியாதி. இந்த வியாதி இருக்கும் வரை நம்மால் எந்த ஒரு நல்ல தெளிவான முடிவையும் (ஆட்சியையும்) எடுக்க முடியாது. நம் மக்கள், போன ஆட்சியில் நடந்ததை இந்த ஆட்சியில் மறந்து விடுவார்கள்; இந்த ஆட்சியில் நடப்பதை அடுத்த ஆட்சியில் மறந்து விடுவார்கள். யார் அப்போதைக்கு நல்லது செய்கின்றார்கள் என்று மட்டுமே சிலர் பார்கின்றனர்.

எந்த தேர்தலானாலும், சாதியையும் , மதத்தையும் மட்டுமே வைத்து ஓட்டு போடுபவர்களும், பணம் வாங்கி கொண்டு ஓட்டை விற்பவர்களும் இருக்கும் வரை நாம் தகுதியான அரசை எதிர்பார்க்க முடியாது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு வீட்டில் இருந்தபடியே ஓட்டு போடாமல் இருக்கும் சில சோம்பேறிகளும் திருந்த வேண்டும். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில், வெறும் 58% வாக்குகள் தான் பதிவாகி இருந்தது என புள்ளிவிவரம் கூறுகிறது (தவறாக இருப்பின் திருத்தலாம்). பாரதத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க, ஆள் காட்டி விரலை கூட தூக்க முடியாத ஜென்மங்கள் அரசியலை பற்றியோ, நாட்டை பற்றியோ குறை கூற தகுதியிள்ளாதவர்கள்.

யாருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள், ஓட்டு எந்திரத்தில் கடைசி பொத்தானை அழுத்தி யாருக்கும் என் வாக்கு இல்லை (NOTA - None Of The Above) என்று பதியலாம்.    

ஒவ்வொரு ஓட்டும், ஒவ்வொரு குடிமகனின் கடமை, தன்மானம், பொறுப்பு, எல்லாமே. இதை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். நம்முடைய இந்த நிலையெல்லாம் மாறி, எப்போது தகுதியான வேட்பாளரை ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தேடுகின்றோமோ, அன்று தான் ஓரு சிறந்த தலைமை மத்தியிலும், மாநிலத்திலும் அமையும்; புதிய பாரதமும் உருவாகும்.

வாருங்கள் ! தகுதியான வாக்காளர்களை தேர்ந்தெடுப்போம்; நம் கடமையை செவ்வனே செய்வோம் ! வாழ்க பாரதம் !


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


ஞாயிறு, 30 ஜூன், 2013

இன்றைய சமூகத்தில் ஊடகங்களின் பங்கு

வணக்கம்,

தமிழில் '..பேனை பெருமாளாக மாற்றுபவன்.. ' என்று ஒரு பழமொழி உண்டு. ஒன்றுமே இல்லாத விஷயத்தை பெரியதாக்கி ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக்கி விடுபவர்களை தான் அப்படி சொல்லுவார்கள். அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இன்றைய ஊடகங்களுக்கு மிக சரியாக பொருந்தும். எந்த செய்தியை ஒளிப்பரப்ப வேண்டுமோ, அதை செய்யாமல் தேவையில்லாததை எல்லாம் ஒளிப்பரப்புகின்றனர். இதை பற்றி ஏற்கனவே தொலைக்காட்சி பற்றிய முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்.

இப்போதெல்லாம் யாருக்காவது சரியான தீர்ப்போ, நீதியோ கிடைக்கவில்லை என்றால், அவர்களுடைய சாதியை வைத்து கொண்டு அரசியலாக்குவதும், ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துவதும் தான் சமீபத்திய பேஷன். அதுவே தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தால், அவ்வளவுதான்.  தாழ்த்தப்பட்டவருக்கு அநீதி நடந்துவிட்டது!  நியாயம் தவறிவிட்டது! என கூறி ஒரு வாரத்திற்கு  ஊடகங்களில் செய்திகளை  போட்டு கிழித்து விடுவார்கள். இதன் மூலம் சில பல வன்முறைகளும் நடைபெறும். உதரணத்திற்கு, சமீபத்திய தர்மபுரி சம்பவம். அந்த பெண்ணிற்கு எதுவும் சாதகமாக நடக்கவில்லை என்பதற்காக, அது தாழ்த்தபட்டவருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி என்று ஊடகங்கள் செய்திகளை ஒளிப்பரப்பின. அநீதி மேல்தட்டு மக்களுக்கு நடந்தால் அவர்களுக்கு பரவாயில்லை. அப்போது அது ஒரு பெரிய செய்தியாக வெளிவராது. சட்டமும், நியாயமும் எல்லாருக்கும் சமம். ஒரு நடுநிலையான செய்தியைத்தான் ஊடகங்கள் வெளியிட வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்வதில்லை.

இதேபோல் சில வருடங்களுக்கு முன், வட இந்தியாவில், ஒரு நடுத்தர வயது பெண்ணை நடு தெருவில் நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளனர். அதை Youtube போன்ற சமூக வலைதளங்கள்  மூலமாகவும், தொலைக்காட்சி  மூலமாகவும், அந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமையை ஒளிபரப்பி செய்திகளை வழங்கினர் .இதனால்  குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைத்தது. ஆனால் அவர்கள் தொகுத்து வழங்கிய விதம் தான் சரியில்லை. ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டதை மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்காக, அது தாழ்த்தப்பட்ட தலித் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடூரம் என அதற்கு சாதி சாயம் பூசி மேலும் எரிகிற கொள்ளியில் எண்ணெயை  ஊற்றுவது போல செய்கிறார்கள்.



என்னை பொறுத்த வரையில் எந்த ஒரு குற்றத்திற்கும் சாதி  சாயம் பூசாமல், வெறும் குற்றத்தின் பின்னணியும், அதில் பாதிக்கபட்டவருக்கு நியாயமும் கிடைக்க செய்தாலே போதும்.

என்னால் என்னொரு உதாரணமும்  சொல்ல முடியும். சமீபத்தில் உத்தர்காண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால், பல மாநிலத்து மக்கள் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு  தவித்தனர் . ஒவ்வொரு மாநில முதலமைச்சரும், அவர்தம் மாநில மக்களை காப்பாற்ற முயற்சிகளை எடுத்து கொண்டிருந்தனர். நரேந்திர மோடியும் (குஜராத்) தம் மாநில மக்களை காப்பாற்றினார். ஆனால், செய்தி ஊடகங்கள் அவர் பிரதமர் வேட்பாளர் என்பதால், அவருடைய செயலை பெரியதாக காட்ட, நரேந்திர மோடியும் தம் மாநில மக்களை காப்பாற்ற 800 இன்னோவா கார்கள், 25 சொகுசு பேருந்துகள் என படையோடு சென்று படையை அனுப்பி 15,000 குஜராத் மக்களை 5 மணி நேரத்தில் காப்பாற்றினார் என செய்தி ஒளிபரப்பின. ஒளிபரப்பியதொடு இல்லாமல் அவர் இயற்கை பேரிழப்பை அரசியலாக்குகிறார் என் அவர் மீதே பழி போடுகின்றனர். அவர் செய்தது சரியா? தவறா? என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும், அவர் கட்சியினரே விளம்பரப்படுத்த சொன்னாலும்,  இவர்களை (ஊடகங்கள்) யார் இப்படி விளம்பர படுத்த சொன்னது ??? வெறும் அவர்களுடைய விளம்பரத்திற்காகவும், (T.R.P rating) டி .ஆர். பி ரேடிங் -காகவும் வடக்கில் உள்ள எல்லா பத்திரிக்கைகளும், செய்தி தொலைக்காட்சி ஊடகங்களும், மோடியை  புகழ்ந்து தள்ளி விட்டு, பின்னர் அவர் அரசியல் ஆதாயம் பார்க்கிறார் என்று குற்றம் சாட்டுகின்றனர்.  என்ன நியாயமடா இது ?

அரசியலில்  மட்டுமல்ல, திரைப்பட உலகில் உச்சபட்ச கதாநாயகன்  ஒரு சிறு விஷயம் செய்தாலே அது ஒரு இமாலய செயல் போல முதல் பக்கத்தில் போடுவார்கள். ஒரு நாயகன்/ நாயகியின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சித்தும், அதை ஒரு கவர் ஸ்டோரி யாக போட்டும், விளம்பரம் தேடி கொள்கின்றனர்.
 
மக்கள் உபயோகிக்கும் எந்த ஒரு பொருளோ, அல்லது அந்த நிறுவனத்தின் அடையாளமாக இருப்பது, அதனுடைய தரம்  தான். அந்த தரமும் மக்களிடம் போய் சேர்ப்பதும் ஊடகங்களின் விளம்பரம் தான். எந்த ஒரு அரசியல் கட்சியாகட்டும், தேசிய/ மாநில தலைவர்களாகட்டும், விளையாட்டு, விளையாட்டு வீரர்கள் , கலை மற்றும் கலைஞர்கள் , திரைப்படம்,  நடிகர் , நடிகை உட்பட அனைத்துமே  ஊடகங்கள்  மூலமாக தான் மக்களுக்கு சென்றடையும். அப்படி சென்றடையும் போது, சரியான விளம்பரங்களை, செய்திகளை  நடுநிலையோடு தர வேண்டும் என்பது எனது வாதம். இந்த சமூதாயத்தில் ஊடகங்களின் பங்கு மிக பெரியது. அதை அவர்கள் செம்மையாக செய்தாலே நாட்டில் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.  
   


நன்றி !!!

-பி .விமல் ராஜ்