dmk லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
dmk லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 அக்டோபர், 2022

நடு சென்டரில் நிற்போம்!

வணக்கம்,

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எல்லோருக்கும் அவரவருடைய கருத்துக்களை பொதுவெளியில் சொல்ல முடியும். சொல்லும் கருத்துக்களுக்கு ஏற்றார் போல அதன் எதிர்வினைகள் வரும். சில சமயம் பெரிதாகவும், சில சமயம் அற்பமாகவும் இருக்கும். இதைதான் நாம் இத்தனை ஆண்டுகளாக பார்த்து/கேட்டு வருகிறோம்.   

முன்பெல்லாம் வலதுசாரியோ அல்லது மதவாத கட்சிகளோ பேசுவதை கேட்கும் போது சற்றே முகசுளிப்பு உண்டாகும். இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் போகட்டும்; மசூதிகளை இடித்து எல்லா கோவில்களையும் மீட்போம்; நாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்; நாடு முழுவதும் ஒரே மதம், ஒரே மொழி என அவர்கள் சொல்வதை கேட்கும் போது 50 ஆண்டுகளாய் திராவிட சிந்தனைகளை கொண்ட ஒரு மாநிலத்து மக்களின் மனம் எப்படி வெறுப்படையும் என்பது எல்லோருக்கும் தெரியும்.    

hindutva-dravidam


ஆனால் இப்போதெல்லாம் இடதுசாரி மற்றும் திராவிட சிந்தனை கருத்துக்களை பற்றி சிலர் பேசும்/  போது என்னடா இது... இவர்களும் இப்படி ஆரம்பித்து விட்டார்களே என கோபம் தான் வருகிறது. அதில் ஒரு சில... 

இராஜராஜ சோழன் தமிழ் மன்னர். சைவ மதத்தை கடைப்பிடித்தவர். அவரை இந்து மன்னனாய் காட்ட முயல்கிறார்கள் சிலர் சொல்வதும், எனக்கு வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. சைவமும் வைணவமும் சேர்ந்தது தான் இன்றைய இந்து மதம் என எல்லோருக்கும் தெரியும். சோழர் காலத்தில் இந்து என்ற வார்த்தையோ, இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது தான். ஆனால் சைவரும், வைணவரும் கும்பிட்ட அதே சிவனும் பெருமாளும் தான், இன்று இந்து மதத்தில் வணங்கப்படுகிறார்கள். பிறகு எல்லாம் ஒன்று தானே! இந்து மன்னனையும், சைவ மன்னனையும் எப்படி இவர்கள் பிரித்து வித்தியாசம் காட்டுவார்கள் என தெரியவில்லை. அடுத்த சில நாட்களில், விடுதலைக்காகவும், வாடிவாசலுக்காகவும் இவர்களுக்கிடையில் நிற்க வேண்டிவரும் என்று  யோசிக்காமல் வார்த்தையை விட்டுவிட்டு நிற்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.    

அதே போல தெலுங்கு படமான RRR-ல் படத்தில் ஒரு காட்சியில் இராமர் சிலையையும், இராமரை போல கதாநாயகன் வேடம் பூண்டு வில்லன்களை அழிக்கிறார் என காட்டியுள்ளனர்.  இன்னொரு படமான பாகுபலியில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போலவும் வரும். அதை வைத்து இது இந்துத்வா கொள்கை பரப்பும் படம் என சொல்லி மட்டம் தட்ட ஆரம்பித்துவிட்டனர் சிலர். தீண்டாமை மற்றும் சாதி கொடுமைக்கு ஆதரவாகவோ, சமூக நீதி எதிராகவோ பேசினால் மட்டுமே சொல்ல வேண்டியதை இராமனும், சிவனும் இருந்தாலே அதை சங்கி படம் என சொல்லி சிங்கி அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

பாரத இதிகாசங்களான ராமாயணமோ/ மகாபாரதமோ இங்கு நடக்கவே இல்லை; அவையாவும் பொய் புரட்டு என சொல்லி கொள்பவர்கள், இராமாயணத்தில் வரும் இலங்கேஸ்வரனான இராவணன் தமிழ் மன்னன் என்று சொல்கின்றனர். இராவணன் வடநாட்டில் உள்ள ரிஷி ஒருவரின் மகன் என புராணம் சொல்கிறது. குபேரனை வீழ்த்தி இலங்கையை கைப்பற்றினான் இராவணன் என்றே சொல்கின்றனர். இதெல்லாம் உண்மையா பொய்யா என்று கூட எனக்கு தெரியாது. கற்பனை கதையான இராமாயணதில் வரும் இராவணன் மட்டும் எப்படி உண்மையான தமிழ் மன்னன் ஆவான் என தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் இராமாயண போர் என்பது ஆரியருக்கும், திராவிடருக்கும் நடந்த போர் என்றும் சொல்லி வருகின்றனர்.    

ஒரு திராவிட சிந்தனை கொண்ட யூடியுப் சேனல் கந்த ஷஷ்டி பாடலையும், நடராஜர் ஆடலையும் பற்றி பகுத்தறிவாய் விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என கொச்சையாய் பேசி வாங்கி காட்டி கொண்டது. முதலாமவர் கைது செய்யப்பட்டார், இரண்டாமவர் இன்னும் கைதாக செய்யப்படவில்லை. 

சில நாட்களாய் திராவிட கட்சிகள், சிந்தனைவாதிகளின் செயல்கள் இப்படித்தான் இருக்கிறது. இச்செயல்களால் இந்துதுவாவையும் அதன் கொள்கைகளையும் பிடிக்காதவர்கள் கூட சில நேரங்களில் அவர்களுக்கு ஆதரவாக அல்லது இவர்களுக்கு எதிராக பேச ஆரம்பித்து விடுவார்கள். வார்த்தைக்கு வார்த்தை நாங்கள் இந்துக்களுக்கு விரோதியல்ல என சொல்லிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக விரோதிகளாய் தெரிய ஆரம்பிக்கிறார்கள். ஆகவே திராவிட மக்களே, சிந்தனைவாதிகளே, இடதுசாரி கொள்கை பிடிப்புள்ள அரசியல்வாதிகளே... நீங்கள் ஒரேடியாய் அந்த பக்கமும் இல்லாமல், இந்த பக்கமும் இல்லாமல் நடு சென்டரில் கவனமாய் நில்லுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மாநிலங்களில் அடியெடுத்து வைத்து நாட்டை ஆக்கிரமிப்போருக்கு, இது போன்ற செயல்களால் நம் தமிழ் நாட்டிலும் சிவப்பு கம்பளமிட்டு வரவேற்பது போல ஆகிவிடும். ஒட்டகம் கூடாரத்துக்குள் ஒருமுறை வந்துவிட்டால், பின்பு அதை விரட்டவே முடியாது; நாம் தான் கூடாரத்தை பிரித்து கொண்டு வேறு இடதிற்கு செல்ல வேண்டும்.

முழுவதுமாய் எழுதிய பின்னர் நானே இந்த பதிவை மீண்டும் படிக்கும் போது, லேசான பலமான வலதுசாரி வாடை அடிப்பது போல தான் இருந்தது. ஆனாலும் இக்கருத்தை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 


நன்றி!

பி.விமல் ராஜ்

ஞாயிறு, 2 மே, 2021

புதிய விடியல் ஆரம்பம் !

வணக்கம்,

சின்ன இடைவெளி விட்டு மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். தேர்தல் முடிவை அலசும் என்னை போன்ற ஓர் சாமானியனின் அரசியல் பதிவு இது. 

இதுவரை வந்த ஓட்டு எண்ணிக்கை முடிவின் படி, திமுக கூட்டணி வெற்றி பெற்று விட்டது. எல்லா முடிவுகளும் அப்படிதான் சொல்கின்றன. ஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜ.க வுடன் கூட்டணி இருந்திருக்காது. இம்முறையும் அதிமுகவே வென்றிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜ.கவின் நடவடிக்கைகளும், செயல்பாடும் நம் மக்களை மேலும் கடுப்பாகி விட்டது. அதனால் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என அதிமுகவை சற்று ஒதுக்கி வைத்துள்ளனர். எதிர்பார்த்தபடி நட்சத்திர தொகுதியில்  யார் வெல்வார்கள் என மக்கள்  நினைத்தார்களோ அவரே வென்றுள்ளனர். சில இடங்களில் மாறுபட்டிருப்பது சற்றே வேதனைக்குரியது. 

இன்று காலை முதல் பெரும்பாலானோர் வீட்டில் தேர்தல் லைவ் செய்திகள் தான் ஓடி கொண்டிருக்கும். நேற்று வரை கொரோனா தா(க்)கம் கொண்ட டி.வி சேனல்கள், "போனால் போகட்டும் போடன்னு" இன்று மட்டும் கொரோனா செய்திகளுக்கு லீவு விட்டு விட்டார்கள். உயிரிழப்பு, நோய் தொற்று, மருத்துவனை சேர்க்கை, ஆக்சிஜன் பற்றாக்குறை என எல்லாவற்றுக்கும் பாஸ் (Pause) போட்டு வைத்துள்ளார்கள். நாளை முதல் மறுபடியும் லூப்பில் போட்டு ப்பிளே (Play) செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். சில சேனல்களில், நடுநடுவே விளம்பரம் போட்டு வழக்கத்தைவிட சற்று அதிகமாய் சம்பாதித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

புதிய விடியல் ஆரம்பம் !

சரி.. கட்சி நிலவரத்துக்கு வருவோம். அதிமுக ஏன் தோற்றது என நாலரை வருட பழைய புராண கதையை சொல்லி போரடிக்க விரும்பவில்லை. மக்கள் அதிருப்தி, நிர்வாக சீர்கேடு என்றெல்லாம் கூட  அளக்க தேவையில்லை. பா.ஜ.க வுடன் கூட்டணி என்ற ஒற்றை விஷயமே அவர்களை ஒதுக்குவதற்கு போதுமான காரணம் என எண்ணுகிறேன். பேரிடர் சமயத்தில் ஓடி ஓடி சென்று வேலை செய்தவரின் வெற்றி இழுபறியில் இருக்க, ராக்கெட் விஞ்ஞானியின் வெற்றியும், கொங்கு பக்கத்து வெற்றியும் சுலபமாகி இருப்பதை கண்டு மக்களின் மனநிலையை என்னவென்று சொல்ல தெரியாமல் முழி பிதுங்கி போயுள்ளேன்.

உலக நாயகன் கமலஹாசன் கட்சி ஆரம்பித்து, அதிரடியாக வலம் வந்து, கடைசி வரை ஜெயிப்பது போல வந்து கொண்டிருக்கிறார். நல்ல ஒரு போட்டியாளராக தான் களத்தில் இருந்திருக்கிறார். இன்னும் பெரிதாய் வந்திருக்கலாம்! ம்ம்ச்ச்... ஹ்ம்ம்.. 2006 தேர்தலில் விஜயகாந்த் ஒரு சீட்டுடன் சட்டசபைக்கு வந்து, பின்னர் 2011 தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாக உட்கார்ந்தார். அதேபோல ம.நீ.ம க்கும் நடந்திருக்கலாம் என சொல்லவில்லை... நடந்திருந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறேன். அதைவிட ஒரு சினிமா ரசிகனின் ஆசையாக, உலக நாயகனின் புரிபடாத கன்னி பேச்சை சட்டசபையில் கேட்பதற்கு பதிலாய், சேனாபதியின் கரகர குஜராத்தி பேச்சையும், விக்ரமின் மிரட்டலான விருந்தையும் காண என் கண்கள் விழைகிறது! (நடந்தால் நன்றாக இருக்கும்..)

அடுத்து நம்ம தம்பிகளின் அன்பு அண்ணன்/ தமிழ் சமூகத்தின் இனமான, வீரமான, தலைவன் செந்தமிழன் சீமான். இம்முறையும் ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.  2011, 2016 தேர்தலில் ஏன் தோற்றீர்கள் என கேட்டதற்கு, எங்கள் வாக்காளர்கள் இன்னும் ஓட்டு போடும் வயதுக்கு வரவில்லை சொல்லி  கொண்டிருந்தனர். இந்த முறையும் அவர்கள் வாக்காளர்கள் வயசுக்கு வரவில்லை போல. அடுத்த முறையாவது... ஹ்ம்ம் வேண்டாம் விடுங்க... ஆனால் ஒரு விஷயத்தில் இவரை பாராட்டலாம்; கூட்டணி இல்லை என்று சொல்லி தனியே நின்று கெத்து காட்டி நிற்கிறார். தமிழ் தேசிய ஆட்சியில் அதிபர் சீமான் என்கிற கனவுலகில் இருந்த இவர் தம்பிகள் மீண்டு வர சில நாட்கள் ஆகும். வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும் தான்; ஆனா ஓவரா பேசுற வாய் .........  இம்முறையும் ஓட்டை பிரிக்கும் இவர்கள் தொழிலை செவ்வனே செய்துள்ளார்கள். இல்லாவிட்டால் இன்னும் சில தொகுதிகளில் தி.மு.க வென்றிருக்கும். 

அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என காத்திருந்து பின்வாசல் வழியாக வாளேந்தி வந்த ஆர்.எஸ்.எஸ்./ பா.ஜ.க. / இந்துத்துவா கட்சிகள், சற்றே பலமான அடியுடன் யோசித்து கொண்டிருப்பார்கள். தற்போது 4 தொகுதிகளை கைப்பற்றி நிற்கின்றனர். அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருந்தாலும் திமுக தில்லுடன் மோத சமாளிக்க வேண்டும்.   

10 வருடங்களுக்கு பிறகு தி.மு.க ஆட்சிக்கு வருகிறது. வாழ்த்துக்கள்! இன்னும் கொஞ்ச காலங்களில் விழபோகும் பேரடியை யோசிக்காமல் ஊரெங்கும் உடன்பிறப்புக்கள் மகிழ்ச்சி பொங்க வெற்றி களியாட்டதில் இருக்கின்றார்கள். ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளை விட, எக்கச்சக்க இடியாப்ப சிக்கலில் நாடும், மாநிலமும் இருக்கிறது. சற்றே உண்மையை சொல்ல வேண்டுமானால், நம் டோப்பாவை கழட்டிவிட்டு மண்டையை சொரியும் அளவுக்கு பிரச்சனைகள் இருக்கிறது. அதை சரிவர கவனித்து, மத்தியில் சமாளித்து ஆட்சி நடத்த வேண்டும். ஏற்கனவே மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை அல்லது மிகவும் சொற்பமாக நிதியை ஒதுக்குகிறார்கள் என சொல்லி  கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் இழுபறியாக இல்லாமல், இருபுறமும் அவதானித்து, சரியான முடிவுகளை எடுப்பது நல்லது. கத்தி மேல் நடக்க போகும் தளபதியின் ஆட்சி எப்படி இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இதிலிருந்து ஒன்று தெளிவாய் தெரிகிறது. மூன்றாம் அணி என யார், எப்பொது வந்தாலும் இந்த இரு பெரும் கட்சிகளை தாண்டி வ(ள)ர முடியவில்லை. மதிமுக, மநகூ, நாதக, மநீம.. என யார் வந்தாலும் மக்கள் முடிவு வேறு விதமாக தான் இருக்கிறது. 

எனக்கு இதில் ஒரே ஒரு அல்ப சந்தோஷம். அப்பாடா! நல்ல வேளை!! ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை... எத்தனை பேர் வாயில் புகுந்து புறப்பட வேண்டியதோ.. மயிரிழையில் தப்பித்தார் தலைவர்! ஹி..ஹி ஹி.. :-) 

தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க. கூட்டணியை கூட்டி அள்ளி குப்பையில் போட்டுவிட்டார்கள் அந்த மாநில மக்கள். நம்மை விட சேட்டன்களும், பெங்காளிகளும் ரோஷகாரங்க போல... 

ஒரு வழியாக விடியல் வந்துவிட்டது. கட்சிக்கா, மக்களுக்கா, யாருக்கென தான் தெரியவில்லை. இனிமேலாவது நம்ம தமிழ் நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி! 

"வெற்றி நடை போடும் தமிழகமே" பாடலின் வேறொரு வெர்ஷனை 2026-ல் கேட்கலாம், தயாராகுங்கள்! 


நன்றி!!!

பி. விமல் ராஜ்

ஞாயிறு, 21 ஜூலை, 2013

இதுதாங்க நம்ம ஊரு அரசியல் !!!

வணக்கம்,

ஒரு நாட்டின் அரசியல் வரலாறு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. நம் தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றை சற்று திருப்பி பார்த்தால் என்ன என்று எனக்கு தோன்றியது. அதை பற்றி இணையத்தில் தேடி படித்து, உங்களிடம் பகிர்கிறேன்.(தகவல்: விக்கிபீடியா )

இன்றைய தமிழ்நாடு, சென்னை மாகாணம் (Madras Presidency) மற்றும் சென்னை மாநிலம் (Madras State) என அதன் வரலாற்றில் வெவ்வேறு பிராந்திய கட்டமைப்புகளில் இருந்தது.

1799 முதல் 1852 வரை கிழக்கிந்திய கம்பெனி சென்னை மாகாணத்தில் (சென்னை மட்டுமல்ல, பாரதம் முழுவதும்), ஜமீன்தார்ககளை குறுநில மன்னர்களை போல வரிவசூலிக்கவும், மக்களை ஆளவும் நியமித்திருந்தது.

பின்னர் 1920-ல் சென்னை மாகாணம் நிறுவிய பிறகு, சென்னை சட்டசபை தேர்தல் (Madras Legislative Assembly) மூலம் முதல்வர்களை தேர்ந்தெடுத்தனர். அக்காலத்தில் சென்னை சட்டசபை தேர்தலில் முதல்வர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் மட்டும் தான். 1920 முதல் தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர்களின் பட்டியல் கீழ்வருமாறு:

சென்னை மாகாண முதல்வர்கள் (1920-1950)
சென்னை மாநில முதல்வர்கள்  (1950-1969)
தமிழ்நாடு மாநில முதல்வர்கள் (1969 முதல்)

பெயர் வருடம் கட்சி
A.சுப்பராயலு ரெட்டியார்  1920-1921 நீதிக்கட்சி
சர் பனங்கட்டி ராமராயங்கார்(அ)
பனங்கல் ராஜா
1921-1923 நீதிக்கட்சி
சர் பனங்கட்டி ராமராயங்கார்(அ)
பனங்கல் ராஜா
1923-1926 நீதிக்கட்சி
P.சுப்பராயன் 1926-1930 நீதிக்கட்சி
B.முனுசாமி நாயுடு  1930-1930 நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ்  1932-1934 நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ் 1934-1936 நீதிக்கட்சி
P.T.ராஜன்  1936
(4 மாதம்)
நீதிக்கட்சி
ராமகிருஷ்ண ரங்காராவ் 1936-1937
(8 மாதம்)
நீதிக்கட்சி
குர்மா வெங்கடரெட்டி நாயுடு 1937
(3 மாதம்)
நீதிக்கட்சி
C.ராஜகோபலாச்சாரி 1937-1939 இந்திய தேசிய காங்கிரஸ்
கவர்னர் ஆட்சி 1939-1946 ---
தங்குட்ரி பிரகாசம் 1946-1947 இந்திய தேசிய காங்கிரஸ்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1947-1949 இந்திய தேசிய காங்கிரஸ்
P.S.குமாரசுவாமி ராஜா 1949-1950 இந்திய தேசிய காங்கிரஸ்
C.ராஜகோபலாச்சாரி 1950-1952 இந்திய தேசிய காங்கிரஸ்
K.காமராஜ் 1954-1963 இந்திய தேசிய காங்கிரஸ்
M.பக்தவத்சலம் 1963-1967 இந்திய தேசிய காங்கிரஸ்
C.N.அண்ணாதுரை 1967-1969  திமுக
C.N.அண்ணாதுரை 1969
(1 மாதம்)
 திமுக
V.R.நெடுஞ்செழியன் 1969
(10 நாள் )
 திமுக
M.K.கருணாநிதி 1969-1971  திமுக
M.K.கருணாநிதி 1971-1976 திமுக
ஜனாதிபதி ஆட்சி 1976-1977
(5 மாதம்)
---
M.G.ராமசந்திரன்  1977-1980 அஇதிமுக
ஜனாதிபதி ஆட்சி 1980
(4 மாதம்)
---
M.G.ராமசந்திரன் 1980-1984 அஇதிமுக
M.G.ராமசந்திரன் 1984-1987 அஇதிமுக
V.R.நெடுஞ்செழியன் 1987-1988
(14 நாள்)
அஇதிமுக
ஜானகி ராமசந்திரன் 1988
(23 நாள்)
அஇதிமுக
ஜனாதிபதி ஆட்சி 1988-1989 ---
M.K.கருணாநிதி 1989-1991 திமுக
ஜனாதிபதி ஆட்சி 1991
(5 மாதம்)
---
J.ஜெயலலிதா 1991-1996 அஇதிமுக
M.K.கருணாநிதி 1996-2001 திமுக
J.ஜெயலலிதா 2001
(4 மாதம்)
அஇதிமுக
O.பன்னீர்செல்வம்   2001-2002
(6 மாதம்)
அஇதிமுக
J.ஜெயலலிதா 2002-2006 அஇதிமுக
M.K.கருணாநிதி 2006-2011 திமுக
J.ஜெயலலிதா 2011 முதல்  அஇதிமுக

இந்திய சுதந்திரதிற்கு முன்பும் பின்பும் சென்னை மாகணத்தில் மேல் குடியினாராம் உயர்ந்த சாதி மக்களே அதிகாரத்திலும் பொறுப்பிலும் இருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜனரலாக பொறுப்பாற்றியவர், சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி. இவர் எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர்.


கல்வியில் பின்தங்கியிருந்த தமிழ்நாட்டில்,1960-ல் காமராஜர் பள்ளியில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி, கல்விக்கு கண் கொடுத்தார். இன்னும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். பிரதமர் பதவியே கிடைத்த போதிலும் வேண்டாம் என உதறிவிட்டு, மக்களுக்காகவே வாழ்ந்தவர். அப்பேர்ப்பட்ட காமராஜரையே தோற்கடிக்க வைத்த பெருமை நம் தமிழ் மக்களுக்கு உண்டு. (அவர்கள் மட்டுமே காரணமல்ல)

தந்தை பெரியார் ஈ.வெ .ராமசாமி அவர்கள், திராவிடர் கழகம் ஆரம்பித்து அதன் மூலம் சுய மரியாதை இயக்கம், தீண்டாம்மை ஒழிப்பு, தமிழ் தேசியவாதம், என்று இன்றைய தமிழ் திராவிடம் உருவாக காரணமாக இருந்தவர். இவர் இன்றைய தமிழக அரசியல்வாதிகளின், அரசியல் கட்சிகளின் தந்தையாக இருப்பவர்.

அறிஞர் C.N.அண்ணாதுரை ஆரம்பத்தில் திராவிடர் கழகத்தில் இருந்து, பின்னர்  பெரியாருடன் கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து, திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளே அவர் முதலமைச்சராக இருந்த போதிலும், தமிழ் பேச்சாற்றலாலும், மக்களுக்கு செய்த நல்ல பணிக்காகவும், அவர் இன்னும் மக்களால் பேசப்படும் ஒரு உன்னத தலைவர். 
  
தமிழ் சினிமாவின் மூலமாக, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவர், M.G.ராமசந்திரன். ஆரம்பத்தில் அண்ணாவின் பேச்சாற்றலாலும், கொள்கையினாலும் ஈர்க்கப்பட்டு,  திராவிட முன்னேற்ற கழகதில் இருந்தவர், கலைஞர் M.கருணாநிதியுடன் ஏற்பட்ட 'கருத்து வேறுப்பாடு' காரணமாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து சாகும் வரை முதலமைச்சராய் இருந்தவர்.

எம்.ஜி.ஆர் இறந்த பின், அவரை தொடர்ந்து  பல சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தும், கட்சியில் சேர்ந்தும் ஆட்சியை பிடிக்க நினைத்தார்கள். ஒரு சிலரை தவிர யாராலும் அவரைப் போல வெற்றி பெற முடியவில்லை. 

இப்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் பெரியார், காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் படங்களை போட்டு கொண்டும், 'திராவிட' மற்றும் 'கழகம்' என்ற வார்த்தையை கட்சி பெயரில் சேர்த்து கொண்டும் தான் கட்சி ஆரம்பிகின்றனர்.

இன்னும் அச்சில் ஏறாத அரசியல் பதிவுகள் நிறைய உள்ளது. அதை எல்லோராலும் வெளிப்படையாய் சொல்லிவிட முடியாது. மக்களாட்சி நடக்கிறதோ இல்லையோ, 1967- க்கு பிறகு தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சித்தான் மாறி மாறி தமிழகத்தில் நடக்கிறது. இதுதாங்க நம்ம ஊரு அரசியல் வரலாறு. இவ்வளவு தூரம் அலசிவிட்டு, முக்கிய விஷயங்களை பதிவு செய்யவில்லையே என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இதற்கு பிறகு நடந்த, நடக்கின்ற கதை கூத்து  தான் எல்லோருக்கும் தெரியுமே!! அதை நான் வேற தனியாக சொல்ல வேண்டுமா???



நன்றி !!!

-பி .விமல் ராஜ்