electionresult லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
electionresult லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 மே, 2019

தாமரை ஏன் மலரவில்லை?

வணக்கம்,

நேற்று முதல் எல்லா இடங்களிலும் இது தான் பேச்சு. தமிழ்நாடு மற்றும் கேரளா தவிர எல்லா இடங்களிலும் காவிக்கொடி. கேரளாவை விட்டு விடுங்கள்; கம்யூனிசம், காங்கிரஸ் என வேறு வரலாறு இருக்கிறது. தமிழ் நாட்டில் ஏன் தாமரை வளர முளைக்க முடியவில்லை??
  • தாமரையை பெரும்பாலான தமிழ் மக்களுக்கு ஏன் பிடிக்கவில்லை.?
  • தமிழ் நாட்டில் ஏன் மோடியை பலருக்கு பிடிக்கவில்லை? 
  • ஏன் பாஜகவை/ஆர்.எஸ். எஸை பிடிக்கவில்லை.?
  • இந்துக்களே இந்துத்துவாவை எதிர்க்க காரணம் என்ன?
ஏன்? ஏன்?? ஏன்??? வாஜ்பாய் இருந்த போது கூட இவ்வளவு எதிர்ப்புக்கள் இருந்ததாக தெரியவில்லை. இவையெல்லாம் காரணங்களா???
  • ஊழல் செய்கிறார்கள்.
  • மோடி உலகம் சுற்றுகிறார்.
  • ஜி.எஸ்.டி.
  • மீத்தேன் /ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பது.
  • தென் மாநிலங்களுக்கு வரிசலுகைகள் தரவில்லை.
  • பேரிடர்களுக்கு தக்க உதவி செய்யாமை. 
  • கார்ப்பரேட் அதிபர்களுக்கு சகாயம் செய்தல்.
இதெல்லாம் கூட எனக்கு பெரிய காரணமாக தெரியவில்லை. இதெல்லாம் காரணமாக  இருந்திருந்தால் இந்தியாவில் / தமிழ்நாட்டில் யாரும் ஆட்சியமைக்கவே முடியாது.

இவர்களை பிடிக்காமல் போக காரணம், இவர்கள் பேசும் இந்துத்துவம் என்னும் இந்து தீவிரவாதம். என்னதான் தமிழகம் முன்னாளில் இந்துகளின் பூமியாக இருந்தாலும், சைவ வைணவ மதங்களின் உறைவிடமாக இருந்த போதிலும், நம் மக்களின் மனதில் கருப்பு சட்டையின் தாக்கம் இன்னமும் ஆட்கொண்டிருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கெல்லாம் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். பெரியாரிச கொள்கைகள் தான் முக்கிய காரணம்.
பெரியாரின் பகுத்தறிவு பேச்சுகள், சுயமரியாதை இயக்கம், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு போன்ற விஷயங்கள் நம் மக்களின் மனதோடு ஒன்றாக ஒன்றி, இன்றும் அதை தாண்டி நம்மால் யோசிக்க முடியவில்லை. சாதி/மத பேதங்கள் முழுவதும் ஒழிந்து விட்டது, சாதியே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இப்போதும் நம்மிடம் சாதியின் பெயரை கேட்பவர்களை ஒரு அசிங்க பொருள் போல ஏற இறங்க பார்க்கும் மனநிலை தான் இருக்கிறது.


மற்ற மாநிலங்களில் இது போன்ற தலைவர் இருந்தாரா, அல்லது கொள்கைகள் இருந்ததா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் இது போன்ற உயரிய சமூக கொள்கைகளை கொண்ட தலைவர் இல்லை என்று தான் நாம் எண்ணி கொள்ள வேண்டும். இருந்திருந்தால் இந்நேரம் தமிழகம் போல மற்ற மாநிலங்களும் இது போன்ற சாதிய மத சிந்தனைகளில் வேறுபட்டிருக்கும்.

தமிழ் நாட்டில் வந்து இங்கு இந்துத்வாதான் நம் கொள்கை, நம் லட்சியம், என்று கூறுவது, மற்ற மதத்தினரை ஏசுவது/பழிப்பது போன்ற செய்கையெல்லம் தான் நம்மை இன்னும் பாஜகவை எதிர்க்க செய்கிறது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற சில தேசிய கட்சிகள், மத்தியில் ஒரு விதமான கொள்கையும், நம் மாநிலத்தில் வேறு விதமான கொள்கையும் கொண்டு ஒப்பேற்றி வருகின்றனர். அதே இவர்களும் தொடர்ந்தால், ஒரு வேளை எதிர்காலத்தில் தமிழ்நாட்டில்  மலர வாய்ப்புண்டு.. ஆனால் அவர்கள் மாற போவதும் இல்லை.. இங்கே மலர போவதும் இல்லை.

மற்றபடி படித்தவர்கள் மோடிக்கு ஓட்டு போட வில்லை என்பதெல்லாம் அபத்தம். "அடேய்! நீங்க தாண்ட திமுக/அதிமுகவை மாறி மாறி அரியணை ஏத்துறீங்க.." 


மேலே இருப்பது பழைய பேப்பரில் 2014 மக்களவை தேர்தலுக்கு முன் எழுதியது. நம்பினோம்.ஆனால் ?!!?

வேறு வழியில்லை. அவர்தான் பிரதமர். நாம் முடிவெடுக்கவில்லை. மற்ற மாநிலங்கள் ஒன்று சேர்ந்து முடிவெடுத்து விட்டன. மீண்டும் வந்து என்னன்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

தாமரை சேற்றில் தான் மலரும். தமிழ்நாடு தெளிந்த அழகிய நீரோடை ஆகிவிட்டதோ? என எண்ணி நம்மை சமாதான படுத்தி கொள்ளலாம்!


நன்றி!!!
பி.விமல் ராஜ்

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஜனநாயகமும் பணநாயகமும் !

வணக்கம்,

எப்போ வரும்? எப்போ வரும்? என மக்கள் எதிர்பார்த்த ஆர்.கே நகர் இடை தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்து, இன்று முடிவுகள் வெளிவந்துள்ளது. எதிர்பாரா விதமாக சுயேச்சை வேட்பாளர் நாகராஜ சோழன் டி.டி.வி. தினகரன் முன்னணியில் வந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி  பெற்றுள்ளார். குக்கர் விசில் சத்தம் காதை  பிளக்கிறது என தொலைக்காட்சியில் மணிக்கு ஒருமுறை சொல்லி கொண்டே இருக்கின்றார்கள்.

எல்லா தேர்தலையும் போல இந்த தேர்தலிலும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. ஓட்டுக்கு பணம் வாங்குவது சரியா? தவறா? என்ற விவாதம் போய் கொண்டிருக்கையில், பலர் ஓட்டுக்கு காசுவாங்கி கொண்டும்,  ஓட்டுக்கு காசு கொடுத்து கொண்டும் தான் இருக்கின்றனர்.

cash-for-vote

ஓட்டுக்கு காசு கொடுப்பதை நமது அரசியல்வாதிகள் மக்களுக்கு நன்கு பழக்கி விட்டு விட்டனர். 2009-ல் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க ஓட்டுக்கு பணம் கொடுத்து "திருமங்கலம் பார்முலாவை" ஆரம்பித்து  வைத்தனர் என சொல்லுகின்றனர். ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது காலம் காலமாக நமது நாட்டில் நடந்து கொண்டு தான் வருகிறது. சில எம்.ஜி.ஆர்  படங்களில் ஓட்டுக்கு பணம்/பொருள் கொடுப்பது பற்றி சோ அவர்களின் வசனம் இருக்கும். அதுபோல "வீட்டுக்கு ஒரு எவர்சில்வர் குடமும், பணமும் கொடுத்து ஓட்டு கேட்டிருக்கிறோம்", என்ற வசனம் அமைதிப்படை படத்தில் வரும். இதிலிருந்தே ஓட்டுக்கு பணம் தரும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக இருப்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. முன்பெல்லாம்  ஒரு ஓட்டுக்கு பாட்டில் சாராயம் மற்றும் ஐம்பது, நூறு என தந்து கொண்டிருந்தனர். திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பிறகு ஐம்பது, நூறுக்கு பதிலாக ஐந்தாயிரம், பத்தாயிரம் என கொடுக்கின்றனர். தேர்தல் மார்க்கெட்டிலும் விலைவாசி சரமாரியாக ஏறிப்போனது தான் இங்கு பிரச்சனை.  
                   
மக்கள் ஏன் வாங்குகின்றனர்? அவர்கள் கொடுக்கின்றனர்; அதனால்  வாங்குகிறார்கள். தேர்தலுக்கு பின் எப்படியிருந்தாலும் யாரும் ஒன்றும் செய்யப்போவதில்லை. அதனால் முன்னாலேயே காசை வாங்கி விடுவோம் என்று எண்ணி தான் காசாகவோ, பொருளாகவோ வாங்குகின்றனர். காசை வாங்கி கொண்டு தமக்கு விருப்பமான கட்சிக்கு தான் ஓட்டு போடுகின்றனர். ஓட்டு போடுவது  நமது உரிமை; சரியான தலைவரை தேர்ந்தெடுப்பது நம் கடமை; ஓட்டுக்கு பணம் வாங்குவது சட்டப்படி தவறு தான். இவையனைத்தும் இருந்தும் மக்கள் ஏன் பணம் வாங்குகிறார்கள்?

சில மேல் தட்டு வர்க்க மக்களும் , நடுத்தர வர்க்க மக்களும், நமக்கு வரும் பணத்தை ஏன் விடவேண்டும் என்று எண்ணுகின்றனர். நாம் பணம் வேண்டாம் என சொன்னால் அதை நம் பெயரில் வேறு ஒருவன் வாங்கிக்கொள்வான்; அல்லது கட்சிக்காரனே 'லபக்' கிவிடுவான். வலிய வருவதை ஏன் விடவேண்டும் என்று எண்ணி எல்லா கட்சிகளிடமும் கேட்டு வாங்கி கொள்கின்றனர்.  அதே போல கடைநிலை வர்க்க மக்களுக்கு வருமானமோ மிக குறைவு. ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் கிடைக்கும் போது, நான்கு/ஐந்து பேர் கொண்ட குடிசை /கூரை /ஓட்டு வீட்டில்/  வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருப்போர்களுக்கு ஐம்பதாயிரம் வரை கிடைக்க வாய்ப்புண்டு. இது அவர்களுக்கு மிக பெரிய தொகை. இதை விட்டு உரிமையை காப்பாற்றுங்கள் என யார் கூறினாலும் கேட்கமாட்டார்கள்.  எல்லா வித மக்களுக்கும் பணம் முக்கிய தேவை.  அது கிடைக்கும் போது, அதுவும் பொறுப்பில்லாத, ஊழல் மலிந்து கிடக்கும் நம் நாட்டில் யாரும்  பணத்தை விட்டுவிட்டு ஜனநாயகம், கடமை, உரிமை, பொறுப்பு என யாரும் யோசிக்க மாட்டார்கள். இது தான் இன்றைய ஜனநாயக அரசியலின்  உண்மை  நிலை.

இந்த நிலை எப்பொழுது மாறும் என அவ்வளவு எளிதில் சொல்லிவிட  முடியாது. பொதுமக்கள் மீது தான் தவறு; அவர்கள் தான்  திருந்த வேண்டும் என பழியை முழுவதும் அவர்கள் மேல் போட்டு விட முடியாது. அவர்கள் தேவையை முதலில் முழுவதும் பூர்த்தி செய்ய வேண்டும். காசு வேண்டாம் என மக்கள் சொல்வது போல ஆட்சியையும் அரசும் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே பணநாயகம் இல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடைபெறும். "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது." பொதுமக்கள், அரசியல்வாதிகள் என எல்லோருக்கும் இந்த பாடல் வரி பொருந்தும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்