tamil nadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil nadu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 பிப்ரவரி, 2024

பௌத்தமும் சமணமும் !

வணக்கம், 

பண்டைய காலத்தில் சைவமும் வைணவமும் தமிழ்நாட்டில் முழுமையாய் செழுமை பெறும் முன்பே, பௌத்தமும் சமணமும் தழைத்தோங்கி இருந்துள்ளது. சங்ககாலத்தில் சைவத்துக்கும் வைணவத்துக்கும் இணையாய் பௌத்தமும் சமணமும் நடைமுறையில் இருந்துள்ளது என்பதற்கு பல சான்றுகள் இருப்பதாக சொல்கின்றனர்.


பௌத்தமும் சமணமும் நம் நாட்டின் மிக பழமையான சமயங்களில் ஒன்று. பௌத்தம் கி.மு 400-500-ல் கவுதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்டது. சமணம் அதற்கும் முன்னரே 24-ஆம் தீர்த்தங்கரர் மகாவீரரால் கி.மு.900-600-ல் தோற்றுவிக்கப்பட்டது. 


நம் நாட்டின் கலாச்சாரம், பழக்கவழக்கத்தில் உள்ள பல விஷயங்கள் புத்த, சமண மதத்தையொட்டி தழுவி பின்பற்றப்பட்டுள்ளது என பல மானுடவியல் ஆர்வலர்கள் சொல்கின்றனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.


Buddhism-Jainism-tamilnadu


பள்ளிக்கூடம் - பள்ளியறை என்பது 'படுக்கையறையை' குறிக்கும். 'பள்ளி கொள்ளுதல்' என்னும் சொல்லுக்கு 'உறங்குதல்' என்று அர்த்தம். ஆனால் அது ஏன் கல்வி கற்கும் இடத்திற்கு சொல்கிறார்கள் என தெரியுமா? சங்க காலத்தில் (கிமு 2ஆம் நூற்றாண்டு முதல்) சமணர்கள் ஊருக்கு வெளியே மலைகளை குடைந்து படுக்கைகள் அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். அங்கு சென்று தான் ஊரில் உள்ள சிறுவர்/சிறுமியர் கற்படுகையில் அமர்ந்து கல்விப்பாடம் கற்று கொண்டிருந்தனர். சமணர்கள் பள்ளி கொள்ளும் இடத்தில் சென்று கல்வி கற்று கொண்டதால் அது பள்ளிக்கூடம் என இன்றளவும் அழைக்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் விரதமிருந்து காவியுடை தரித்த துறவிகளுக்கு உணவிடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அமாவாசை, பௌர்ணமி எனப்படும் காருவா, வெள்ளுவா நாளில், பௌத்த துறவிகள் கூடி சங்க கூட்டம் நடத்துவார்கள். இதனை இலங்கையில் 'போயா தினம்' என இன்றும் கொண்டாடுகின்றனர். 


சைவ வைணவ வைதீக சமயத்தில், துறவு கொள்பவர்கள் காவியுடை உடுத்துவது வழக்கம். முதன் முதலில் செந்துவராடையை அணிந்து துறவு கொண்டது பௌத்த துறவிகளே ஆகும். அதை பின்பற்றி தான் மற்ற சமயங்கள் துறவர்கள் செவ்வாடையை உடுத்தும் வழக்கம் பின்பற்றப்பட்டது.


முருகனுக்கும், பெருமாளுக்கும் வேண்டிக்கொண்டு தலைமுடியை மொட்டையடிக்கும் பழக்கம் நம்மிடையே பலகாலமாக இருந்து வருகிறது. மொட்டையடிப்பது என்பது புத்த மத துறவறத்தில் உள்ள ஓர் முக்கிய விடயமாகவும். பௌத்த துறவிகள் வைத்திருக்க கூடிய 8 பொருட்களில் மழிக்கும் கத்தியும் ஓர் முக்கியமானதாகும். அதுவே பின்னாளில் இந்து சமயங்களில் பின்பற்றப்பட்டு வேண்டுதலுக்காக மொட்டையடிக்கப்படுகிறது.


தமிழர்கள் பரவலாக ஏற்று கொண்டிருக்கும் பட்டிமன்றம் என்ற கலை வடிவம் பௌத்த மதத்திலிருந்து வந்தது. பௌத்த துறவிகள் பிற மதவாதிகளுடன் வாதம் செய்து புத்த மதத்தை பரப்புவது வழக்கமாக்கி கொண்டிருத்தனர். அவர்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அவ்வூரில் அரச மரத்தின் ஒரு கிளையை நட்டு வைத்துவிட்டு பிற சமயவாதிகளை வாதிட அழைப்பார்கள். அக்காலத்தில் பட்டிமண்டபம் என்பது சமய கருத்துக்களை வாதிடும் இடம் என்று சங்க கால நூல்களில் காட்டப்படுகின்றன. புத்தர் ஞானம் பெற்ற இடம் போதி மரம் என அறியப்படுகிறது. போதிமரம் என்பது அரசமரமே ஆகும். அது புத்த மதத்தினரின் புனித சின்னமாகவும். ஞானத்தின் குறியீடாகவும் கருதப்படுகிறது. இன்றளவும் மக்கள் அரச மரத்தை சுற்றும் வழக்கம் கொண்டுள்ளதையும் பார்க்களாம்.


சமண மதத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான வர்த்தமனா மகாவீரரின் முக்தியடைந்த நாளை சமணர்கள் விளக்கேற்றி விழாவாக கொண்டாடியுள்ளனர். அதுவே சமய மாற்றத்தின் போது தீபாவளியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.


இந்த மதங்கள் வளராமல் போக போல காரணங்கள் உண்டு. கி.மு 3 நூற்றாண்டு முதல் கி.பி. 6 நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் பலரால் போற்றி வளர்க்கபட்ட புத்த, சமண மதங்கள் பின்னர் 7 நூற்றாண்டுக்கு பின்னர் சரிவடைய தொடங்கியது. அக்காலத்தில் சைவமும் வைணவமும் பல தமிழ் துறவிகளாலும், மன்னர்களாலும் வளர்க்கப்பட்டது. சில நேரத்தில் சமய பற்று, சமய வெறியாகி போய் மாற்று சமயத்தின் மீது பலமான விவாதமும், வன்முறையும் கையாளப்பட்டுளது. சைவர்கள் சமணர்களை கழுவேற்றி கொன்றதாக வரலாறுகள் உண்டு. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பௌத்தமும் சமணமும் மறைய தொடங்கியது.


சமண மதம் மறைய தொடங்கியதில் மற்றொரு காரணம், அதில் கடைப்பிடிக்கபடும் கடுமையான நெறிமுறைகள் தான். துறவு மேற்கொள்பவர்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக இருக்க வேண்டும்; தலையை மழித்து மொட்டையடித்து கொள்ள வேண்டும்; எட்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்ண வேண்டும்; அதுவும் பிச்சையெடுத்து உண்ண வேண்டும் என்ற கடுமையான நெறிமுறைகள் மதத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைத்தன. இவ்விரண்டு மதங்களும் ஏழாம் நாற்றாண்டு வரை செழித்து வளர்ந்துள்ளதை பல புத்த மடாலயங்கள், புத்த விகாரங்கள், சமணர் படுக்கைகள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். இதிலிருந்து தமிழ் மக்களிடையே இவ்விரு மதங்களும் ஒன்றோடு ஒன்றாக பின்னி இணைந்திருந்தன என்பதையும் அறியமுடிகிறது.


தகவல்கள்: சமண பௌத்த கட்டுரைகள் - தொ.பரமசிவம் 


நன்றி!!!

பி. விமல் ராஜ்

வியாழன், 30 மார்ச், 2023

நீரும் சோறும் - தமிழர் பண்பாடு

வணக்கம்,

தமிழரின் பண்பாடு மிக தொன்மையானது. சங்க காலத்துக்கும் முந்தையது. மனித வாழ்வியலில் அதுவும் குறிப்பாக தமிழர் வாழ்வியலில் நீருக்கும் சோறுக்கும் முக்கிய இடம் உண்டு. அதனை பற்றிய சற்றே பெரிய பதிவு இது.

நீர்:
இப்போது போலவே பன்நெடுங்காலம் முதல் தமிழ்நாடு வெப்ப மண்டலத்தை சேர்ந்த பகுதியாக விளங்கி வருகிறது. எனவே நீரின் தேவையும், நீர் குறித்த நம்பிக்கையும், அதனை ஒட்டிய பண்பாடும் தமிழர் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

"இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்" என 10ஆம் நூற்றாண்டு பிங்கல நிகண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் மொழி இனிமையானது என்றும், (நீர்மை) தன்மையானது, இயல்பானது என்றும் பொருள் தரும். தமிழை நீருடன் ஒப்பிட்டு உயர்வாக சொல்கின்றனர். குளிர்ச்சியுடையது, தன்மையுடையது என்பதால் நீரை 'தண்ணீர்' என தமிழர்கள் சொல்கிறார்கள். நீரினால் உடலை குளிர்விப்பதால் குளி(ர்)த்தல் என சொல்கிறார்கள்.

திருக்குறளில் வானத்திலிருந்து நீர் (மழையாய்) வருவதால் அதனை அமிழ்தம் என்றும், நீரின்றி இவ்வுலகத்தில் ஒன்றுமில்லை என்றும் சொல்லப்படுகிறது.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று."

"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு"


சங்ககாலம் முதல் தமிழர்கள் நீர்நிலைகளை பல பெயர்களை வைத்து அழைத்துள்ளனர். சுனை, கயம், பொய்கை, ஊற்று ஆகிய நீர்நிலைகள் தானே நிலத்திலும் மலையிலும் ஊறி வரும் தன்மை உடையது. மழை நீர் தேங்கி நிற்கும் சிறிய இடம் 'குட்டை' என அழைக்கப்படும். குளிப்பதற்கு பயன்படும் நீர் என்பதால் 'குளம்' என்றும், ஆற்றிலிருந்த்து பிரிந்து ஓடிக்கொண்டே இருப்பது 'ஓடை' என்றும், உண்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுவதால் 'ஊருணி' என்றும், ஏர் (உழவு) தொழிலுக்கு பயன்படும் நீர் 'ஏரி' என்றும், மற்ற நீரை சேர்த்து ஏந்தி வைக்கும் இடம் 'ஏந்தல்' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய்' என்றும் பெயரிட்டு தமிழர்கள் அழைத்து வந்தனர். இப்படி தமிழ் மொழியில் பெரும்பாலான சொற்கள் காரணப்பெயர்களாகவே இருப்பது வியப்பு!

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்பதில் யாருக்கும் சிறிதளவும் ஐயமில்லை.1800 ஆண்டுகளுக்கு முன் காவேரி கரையில் கட்டிய கல்லணை அதற்கு மிக சிறந்த சான்றாகும். மேலும் 9ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட மிகப்பெரிய வீரநாராயண ஏரி (வீராணம் ஏரி), மதுராந்தகம் ஏரி என பல நீர்நிலைகளை கட்டி வீணாய் கடலில் கலக்கும் நீரை உழவுக்கும், மக்களுக்கும் பயன்படுமாறு செய்துள்ளனர்.

ஆற்று நீர் எப்படி ஒரு இடத்திலிருந்து மறுஇடம் போகிறதோ, அது போல தெய்வங்களும் இடம் பெயர்ந்து போகும் என்பது தமிழர் நம்பிக்கை. தெய்வ வழிபாட்டின் போது கரகம் குடங்களில் மஞ்சள் நீரை ஏந்தி வருவார்கள். மஞ்சள் நீர் கலந்த குடத்தை சாமியாடிகளின் தலையில் ஊற்றி குளிர்விப்பார்கள். அப்படி செய்தால் தெய்வம் குளிர்விக்கும் என்பதும் ஒரு நம்பிக்கை.

தமிழகம் வறண்ட பகுதி என்பதால், நெடுஞ்சாலைகளில் கோடைகாலத்தில் நீர்ப்பந்தல் வைப்பது அக்காலம் முதல் அறமாக பார்க்கப்பட்டது. வீடுகளிலும் செம்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி பூசை வேளையில் வைப்பார்கள். செம்பு குவளையிலும் நீரில் பூவையும், பூ இதழ்களையும் போட்டு வைப்பார்கள். இன்றளவும் (மஞ்சள்) நீராடுவதை ஒரு சடங்காகவே வைத்திருப்பவர்கள் நம் தமிழர்கள்.

நீரடித்து நீர் விலகாது.
தண்ணீரிலே தடம் பிடிப்பான்.
தாயையும் தண்ணீரயும் பழிக்கலாமா?

இது போன்ற பல பழமொழிகளும், மரபு தொடர்களும் நீரை வைத்து இயன்றளவும் சொல்லப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நம் வாழ்விலும், பண்பாட்டிலும் நீர் எப்படி நீக்கமற நிறைந்துள்ளது என்பதை அறியலாம்.

Neerum soorum

சோறு:
நீரை போலவே தமிழர் பண்பாட்டோடு சோறு (உணவு) எப்படி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது என்பதை படித்து ருசிகர புசிக்கலாம்.

ஆதி மனிதன் முதல் இன்று வரை அனைவரும் ஓடி திரிந்து வேலை செய்தது உணவுக்காக தான். காற்றையும் வெளிச்சத்தையும் உண்டு உயிர்வாழும் உயிரினங்களுக்கு மத்தியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புவியியல் நிலைமைகளை அறிந்து உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற உணவு வகைகளை உண்டு வாழ்ந்துள்ளனர் தமிழர்கள். ஒரு குறிப்பிட்ட மக்களுடைய பண்பாட்டை, தொன்மையை அறிய அவர்தம் உணவு பழக்க வழக்கங்களை கவனிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தமிழர்கள் நிலங்களை ஐவகை திணையாய் பிரித்து வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் வாழ்கின்ற நிலத்தின் விளைப்பொருட்கள், உற்பத்தி முறை, சமுக பொருளாதார படிநிலைகள் ஆகியவற்றை கொண்டு உணவு பழக்கவழக்கங்கள் அமையும். அத்தகைய சிறந்த வழக்கத்தையே தமிழர்கள் கொண்டிருந்தனர்.

குறிஞ்சித் திணை -  மலைநெல், மூங்கில் அரிசி, தினை

முல்லைத் திணை -  தினை, சாமை, நெய், பால்
மருதத் திணை -  செந்நெல், வெண்நெல், அரிசி
நெய்தல் திணை - மீன், உப்பு விற்று வரும் உணவுப் பொருள்
பாலைத் திணை - வழிப்பறியினால் வரும் பொருள்

இன்று போலவே அன்றும் தமிழர்கள் புலால் உணவான மீன், ஆடு, கோழி, மாடு, பன்றி ஆகிய  இறைச்சி வகைகளை சமைத்து உண்டு கொண்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. 'சமைத்தல்' என்ற சொல்லுக்கு பக்குவப்படுத்துதல் என்று பொருள். அடுப்பில் வைத்து சமைப்பதால் அடுதல் என்றும் பொருள் தரும். சமையல் செய்யும் இடம் காட்டில் அல்லது அடுக்களை என்று அழைக்கப்பட்டது. வீட்டுக்கு கடைசியில் இருப்பதால் அடுப்பாங்கிடை என அழைக்கப்பட்டு பின்னாளில் மருவி அடுப்பங்கரை என ஆனது.  நீரிட்டு அவித்தல், வேக வைத்தால், வறுத்து வைத்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிட்டு பொரித்தல், ஊறவிட்டு வேகவைத்தல் ஆகியவை சமையலின் முறைகளாகும். 

எளிய மக்கள் நிறைய நீரில் தானியங்களை வேகவைத்து உண்பது கஞ்சியாகும். கஞ்சியினை “நீரடுபுற்கை” என்கிறார் திருவள்ளுவர். கஞ்சியில் சேர்க்கப்படும் மற்றொரு பொருள் மோர். வற்றல் என்பது மழைக்காலத்திற்கு எனச் சேமிக்கப்பட்ட உணவாகும். காய்கறிகள் நிறையக் கிடைக்கும் காலத்தில் உப்புக் கலந்த மோரில் ஊறவைத்துப் பின்னர் வெயிலில் நீர் வற்றக் காயவைத்துச் சேமிப்பர். வெண்டை, மிளகாய், பாகல், சுண்டை, கொவ்வை, கொத்தவரை, கத்தரி, மணத் தக்காளி ஆகியன வற்றலுக்கு உரிய காய்கறிகள். 

காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காக கறுப்பு மிளகினை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே “கறி” எனப் பின்னர் வழங்கப்பட்டது. வெள்ளை மிளகினைத் தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர். பழந்தமிழர் உணவு வகைகளைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். தமிழர் உணவு முறைகளில் வறுத்தும், சுட்டும், அவித்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே அதிகமாக இருந்தன. எண்ணெயில் இட்ட பண்டங்கள் அண்மைக் காலங்களிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தயாரிப்பில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நிலக்கடலை எண்ணெய்யும் விஜயநகர ஆட்சிக் காலத்திலேயே இங்கு அறிமுகமானது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க பெரிய மண் பானைகள், பத்தாயம் அல்லது குதிர் எனும் மரப்பலகைகளால் செய்யப்பட்ட அமைப்பு மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் ஆகியவை பண்டைய நாட்களில் இருந்தன.

உப்பு
உணவில் சுவைக்காக சேர்த்து கொள்ளப்படுவது உப்பு. அந்த உப்பு நம் உணவிலும் வாழ்விலும் மனித குல வரலாற்றிலும் பெரும் பங்கு வகிக்கிறது.  மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றதுபோல் உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் ஒரு முக்கியமான அறிவியல் நிகழ்ச்சிதான். 

உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் ‘சுவை’ என்றுதான் பொருள்.  இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்கு பயன்படுத்தப்படும். உப்பிற்கு ‘வெள்ளுப்பு’ என்று பெயர் பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும் தமிழ் பண்பாட்டிலும் உப்புக்குத் தனி இடம் உண்டு. பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது. தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது வெள்ளுப்பு ஆகும். 

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் ‘சம்பளம்’ என்ற சொல் பிறந்தது என்பர் சிலர். ஆங்கிலத்திலும் Salary என்ற சொல் Salt என்பதன் அடியாகப் பிறந்தது என்றும் கூறுவர்.

ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியாரிடத்து இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளவே இவ்வாறு செய்கின்றார்கள். உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது. தின்ற உப்பிற்குத் துரோகம் செய்வது என்பது நன்றி மறந்ததனைக் காட்டும் வழக்கு மொழி. 'உப்பிட்டவரை உள்ளவும் நினை'; 'உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான்',  போன்ற பழமொழிகள் மக்களின் வாழ்க்கை முறை உப்போடு கலந்துள்ளதை அறியலாம்.

பழந்தமிழ் நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்புதான் விளங்கியிருக்கிறது. கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் ‘உமணர்’ என்ற வணிகர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலைத் தமிழிக் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது. உப்பு விளையும் களத்திற்கு அளம் என்றும் பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். அவை பேரளம், கோவளம் (கோ+அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டின் சமூகப் படிநிலைகளை அடையாளம் காட்டும் பொருள்களில் ஒன்றாகவும் உப்பு விளங்கியுள்ளது. ஆக்கிய சோற்றோடு உப்பைச் சேர்த்து உண்பது ஒரு வழக்கமாகும். சாதிய ஒடுக்குமுறை கடுமையாக இருந்த அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியார், சோறு உலையில் இருக்கும்போதே அதில் உப்பையிடும் வழக்கத்தைக் கொண்டு இருந்தனர். இலையில் தனியாக உப்பிட்டு உண்ணும் வழக்கம் மேட்டிமையின் சின்னமாகக் கருதப்பட்டது போலும்.

சோறு விற்றல் 
பண்டை காலத்தில் சோறு நீரும் என்றுமே விற்பனைக்கு இருந்ததில்லை. ஏனெனில் பசிக்கும் தாகத்துக்கும் வந்தவரிடம் காசு வாங்குவது பாவம் என்று என்னும் வழக்கம் உடையவர்கள் தமிழர்கள். நெடுந்தூரம் பயணிப்பவர்கள், வெளியூரிலிருந்து வருபவர்கள் என பொதுமக்கள் தங்கவும் இளைப்பாறவும் சத்திரங்களும், சாவடிகளும் இருந்துள்ளன. போன நூற்றாண்டின் இடைப்பகுதி வரை பல உணவு/ அன்னதான சத்திரங்கள் நடைமுறையில் இருந்துள்ளதை அறியலாம். கோவில்களில் வழங்கப்படும் உணவு அடியார்களுக்கும், துறவறம் பூண்டவர்களுக்கும் மடப்பள்ளியில் சமைத்து கொடுக்கப்பட்டது. இடையில் 15-ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஊர்ச் சத்திரங்களில் சோறு விற்கப்படத் தொடங்கியது. நாயக்கர் ஆட்சிக்குப் பிந்தைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஹோட்டல் எனப்படும் உணவு விடுதிகள் உருவாகின. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் நகரங்கள், சிறு நகரங்களில் காசுக்கு சோறு விற்கும் உணவுவிடுதிகள் உருவாகின. ஆங்கிலேயர் காலத்தில் தான் சாவடிகளும், சத்திரங்களும் உணவு விற்கும் சிறு கடைகளாக, ஓட்டல்களாக ஆரம்பிக்கப்பட்டன.

இது போல தமிழ் சமூகம் மற்றும் பண்பாடு சேர்ந்த பல விஷயங்களை நம் பண்டைய உணவு வழக்கங்கள் சொல்கின்றன. இன்று நாம் உணவில் உட்கொள்ளும் பல பதார்த்தங்களும் இத்யாதிகளும் கடந்த சில நூற்றாணடுகளில் சேர்க்கப்பட்டதாகும்.   

மானுடவியல் ஆராய்ச்சியாளர் தொ.ப. அவர்களின் 'பண்பாட்டு அசைவுகள்' மற்றும் தயாளன், ஏ.சண்முகநாதன் அவர்களின் 'மானுட வாசிப்பு-தொ.ப வின் தெறிப்புகள்' ஆகிய நூல்களை படித்து, அதன் மூலம் நான் தெரிந்து கொண்ட தமிழரின் வரலாற்று மற்றும் பண்பாட்டு தொன்மையை உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இதை போலவே பண்பாட்டில் மாறிய/மாற்றப்பட்ட மாற்றங்களை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.

தகவல்கள்:
பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவம்
மானுட வாசிப்பு - தொ.ப.வின் தெறிப்புகள் - தயாளன், ஏ.சண்முகநாதன்


நன்றி!!!
பி. விமல் ராஜ்

சனி, 11 பிப்ரவரி, 2023

தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் வடக்கர்கள்!

வணக்கம், 

சமூக வலைத்தளங்களில் வடக்கன்ஸ் பற்றிய மீம்ஸ் என்றால் மிகவும் பிரபலம். அவர்களை கேலி, கிண்டல் செய்வதற்கும் இன்டர்நெட்டில் பல வீடியோக்கள் உலவி கொண்டிருக்கின்றன. அவர்களும் அதற்கு ஏற்றார் போல தான் நடந்து கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. பான்பராக் போட்டு கண்ட இடங்களில் துப்புவது, ரயிலில் தகுந்த டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது, ஒரு சிலர் திருட்டு/கொள்ளை என ஈடுபடுவது என வடக்கர்களுக்கும் அவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளும் நம்மில் பலருக்கு எரிச்சலை தான் தருகிறது. 

கடந்த சில வருடங்களாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலைக்காக கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் கட்டிட வேலை, சாலை செப்பனிடும் வேலை, தச்சு வேலை, பிளம்பர், லோடு மென் என தினக்கூலிகளாகவே பலர் வருகின்றனர். அவர்களுடைய மாநிலங்களில் சரியான வேலைவாய்ப்பும், தொழில் செய்வதற்கான கட்டமைப்பும் இல்லாததே இதற்கு பெரும் காரணமாகும். மேலும் வேலைக்கு ஏற்ற சரியான சம்பளமும் கிடைப்பதில்லை. ஆனால் நம் மாநிலத்தில் வேலைக்கு தகுந்த கூலியும், தங்குவதற்கு, சாப்பாட்டிற்கு என அதற்கான வசதிவாய்ப்புகள் சுலபமாகவே கிடைப்பதால் பலர் இங்கு வேலைக்கு வந்து விடுகின்றனர்.

இங்குள்ள தமிழர்களுக்கு (வேலையாட்களுக்கு) கொடுக்கப்படும் சம்பளத்தை/கூலியை விட குறைவாக வடக்கர்கள் பெறுவதால் பெரும்பாலும் முதலாளிகள் கூட வடமாநிலத்தவரையே வேலைக்கு வைக்கிறார்கள். இதனால் பல தமிழர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர் என பலரும் குறை சொல்லி வருகின்றனர். 

north-indian-labourers-tamilnadu

என்னை பொறுத்தவரை இது பெரிய தவறு போல தெரியவில்லை. எல்லா இடங்களிலும் வழக்கமாக நடப்பது தான். (மா) நிலம் என்பது நாட்டில் உள்ள எல்லோருக்கும் பொதுவானது. அது இவர்கள் மட்டுமே தான் வேலை செய்ய வேண்டும்; இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரவேண்டும் என்ற சட்டமெல்லாம் இதுவரை மாநிலங்களுக்கிடையே கிடையாது. 1950, 60களில் நம் தமிழ் நாட்டிலிருந்து பலர் கூலி வேலைக்காகவும், பிழைப்பை தேடியும் வெளிமாநிலங்களுக்கு சென்றனர். தில்லி, மும்பை, பெங்களூர், ஐதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு வேலைக்கு சென்று குடியமர்ந்தனர். அப்போதும் அங்குள்ள மாநிலத்தவர் சிலருக்கு வேலைவாய்ப்பு பறிபோனது. சில இடங்களில் கலவரம், தமிழர்கள் மீது தாக்குதல் போன்றவை இதே வாழ்வாதாரம் காரணத்திற்காக நடத்ததேறியுள்ளதை யாராலும் மறக்க முடியாது. அப்போது நாம் கொதித்து எழுந்தோம்; இந்தியா முழுக்க யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். அதற்கு உரிமை உண்டு என முழங்கியுள்ளோம். இப்போது அதே தவறை நாமும் செய்ய ஆயுத்தமாய் இருக்கிறோம். இன்னும் அவர்களை போல அடித்து விரட்டவில்லை; ஆனால் இது போன்ற வெறுப்பு பதிவுகள்/செய்திகள் தொடருமாயின் விரைவில் நடக்க வாய்ப்புண்டு என்பதில் வியப்பில்லை. அஃது நடக்காமல் இருப்பதே நலம். அதுவே என் எண்ணமும் கூட!

தத்தம் மாநிலங்களில்/மண்ணில் அவரர் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று கோருவது நியாயமான ஒன்று தான். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் வேற்று மாநிலத்தவரை யாரையும் பணிசெய்ய அனுமதிக்க மாட்டோம் என்பது எவ்வகையான மனநிலை எனபது தெரியவில்லை. குறைந்த வருமானத்தில் வேலை செய்பவர்கள், தங்கள் வருமானத்திற்காக எந்த மாநிலமாயினும் (தமிழ்நாடாயினும்), அவர்கள் விருப்பத்திற்கேற்ப எங்கு சென்றும் சட்டத்துக்கு உட்பட்டு, அந்தந்த மாநில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணிசெய்ய முடியும். யாராலும் தடுத்து விட முடியாது. இதை ஒரேடியாக நிறுத்தவும் முடியாது. வேண்டுமானால் மாநில அரசு சில விதிமுறைகளை போட்டு கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். 

ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் வீட்டு கட்டிட வேலைக்கு ஆள் தேவை. நன்கு தெரிந்த நபர் மூலம் தமிழர் ஒருவரும் மற்றும் வடமாநில நபர் ஒருவரும் வேலைக்கு வருகிறார்கள். இருவருமே நல்ல திறமையான, நம்பிக்கையான ஆட்கள். தமிழருக்கு 5000 ரூபாய் சம்பளம் தரவேண்டும்; வடமாநிலத்தவருக்கு 3000 ரூபாய் தந்தால் போதும். நீங்கள் யாருக்கு வேலை போட்டு கொடுப்பீர்கள்? 2000 ரூபாய் அதிகமானாலும் பரவாயில்லை என தமிழருக்கு கொடுப்பீர்களா? அல்லது வடமாநிலத்தவருக்கா? இதைத்தான் ஓட்டல் முதலாளிகளும், பட்டறை முதலாளிகளும், கட்டிட மேஸ்திரிகளும் செய்து கொண்டிருக்கின்றனர். இன்னும் கூட ஒரு குற்றசாட்டு உண்டு. தமிழ் வேலையாட்கள் திறமைனவர்கள் தான்; நல்ல உழைப்பாளிகள் தான். ஆனால் சில சமயத்தில் வேலைக்கு சரியாக வருவதில்லை; வந்தாலும் அதிக நேர இடைவேளை விடுதல், திருவிழா, குடும்ப விசேஷம், பண்டிகை என 10 நாட்களாவது விடுப்பு எடுத்து விடுகின்றனர். வடமாநிலத்தவரோ விடுப்பு இல்லாமல் குறைந்த சம்பளத்தில் வேலையை முடித்து தந்து விடுகிறார்கள். விடுப்பு இல்லாமல், எந்த விசேஷத்துக்கும் போகாமல், குறைந்த சம்பளத்துக்கே எல்லோரும் (நானும், நீங்களும் உட்பட) வேலை செய்ய முடியாது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் முதலாளிகளின் (லாப) பார்வையில் வடமாநிலத்தவரையே தேர்ந்தேடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.

இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. ஏன் எல்லா அமெரிக்க அதிபர்களும் தேர்தல் பிரசாரத்தின் போது Say No to India / Say No to Banglore என்று சொல்கின்றனர்? நாளுக்கு நாள் ஆன்சைட் போகும் இந்தியர்களின் எண்ணிக்கை ஏன் அதிகமாகிறது? அங்குள்ள ஜார்ஜ், பெஞ்சமின், ஆபிரகாம், மேரி போன்றோருக்கு கிடைக்க வேண்டிய வேலை நம்மவூர் ரமேஷ், சுரேஷ், அஜய், விஜய், படேல், சிங் போன்றோருக்கு ஏன் கிடைக்கிறது? இந்தியர்களால் பல அமெரிக்க குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது. அமெரிக்கர்களுக்கு சம்பளம், விடுப்பு, மற்ற சலுகைகள் என எல்லாம் முழுமையாக தர வேண்டும்; ஆனால் நம்மாட்களுக்கோ கொடுத்ததை வாங்கி கொண்டு திவ்யமாக வேலைசெய்து வெள்ளை முதலாளிகளிடம் நல்ல பெயர் வாங்கி கொள்வார்கள்! கிட்டத்தட்ட இது தான் இங்கும் நடந்து வருகிறது. நம் மக்கள் வெளி மாநிலத்திலோ/வெளி நாட்டிற்கோ சென்று வேலை செய்து சம்பாரிப்பது போல, அவர்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். அவ்வப்போது இதுபோல வரும் சில புகைச்சலைகளை உடனே மண்ணை போட்டு மூடி விட வேண்டும். இல்லாவிடில் அது அரசியல் மற்றும் ஊடக வியாதிகளால் ஊதி ஊதி நெருப்பாக மாறி, பெரும் இழப்பை தரும்.      


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

சனி, 31 அக்டோபர், 2020

தமிழக ஊர்களின் பெயர் காரணம்

வணக்கம்,

நாம் வசிக்கும் ஊரின் பெயரும், அதன் பெயர் காரணத்தையும் நாம் பெரிதாய் கவனிப்பதில்லை. தமிழகதில் பல ஊர்களின் பெயர்கள் காரணப் பெயராகவே இருந்துள்ளது. அது காலப்போக்கில் மாறி, மருவி ஏதோ ஒரு பெயரில் அழைக்கப்படுகிறது. அதை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம். எல்லா ஊர்களின் பெயர்களும் காரண பெயராகவே இருந்துள்ளது. எல்லா ஊர்களுக்கும் இது தான் உண்மையான பெயர் காரணம் என்று தெளிவாக சொல்ல முடியவில்லை. சில புராண கதையின் படியும், சங்ககாலத்தில் பெற்ற பெயரின் படியும் சில ஊரின் பெயர்கள் இருக்கிறது. நான் இணையத்தில் படித்து தெரிந்து கொண்டதை உங்களிடம் பகிர்கிறேன்.

name reason for tamil cities

சென்னை-    
சங்க காலத்தில் பெண்ணாற்றிற்கும், பொன்னையாற்றுக்கும் நடுவே உள்ள தொண்டை மண்டலத்தில் தான் இப்போதுள்ள சென்னை இருக்கிறது. சோழர் காலத்தில் புலியூர் கோட்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னாளில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயர்கள் 1639-ல் தர்மாலா சென்னப்ப நாயக்கரிடம் கடற்கரை ஒட்டிய 3 மைல் இடத்தை வாங்கி, இவ்விடத்திற்கு சென்னப்பட்டினம் என பெயர் சூட்டினார்கள். 

கடலோரத்தில் வாழ்ந்த 'மதராசன்' என்ற மீனவ தலைவனின் பெயரால் மதராஸ்/ மதராசபட்டினம் என்று அழைக்கபட்டது என்றும்,  போர்த்துக்கீசிய வணிகன் மெட்ரா (Madra)  என்பவரின் பெயராலேயே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது என்றும், மேடு என்பதிலிருந்து மேடுராசபட்டணம் என் அழைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. 

(சென்னையிலுள்ள இடங்களின் பெயர் காரணத்தை வேறொரு பதிவில் பகிர்கிறேன்.)

செங்கல்பட்டு-
செங்கழுநீர் பட்டு என்ற பெயர் தான் இப்போது செங்கல்பட்டு என்று அழைக்கப்படுகிறது.

பொள்ளாச்சி- 
இயற்கை அழகுடன் ஆட்சி செய்யும் பொழிலாட்சி என்ற பெயர் தான் பொள்ளாச்சி என்று மருவி போனது.

தூத்துக்குடி - 
கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் சோதிக்கரை என்றும் முத்துகுளித்துறை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலிருந்தே இப்பகுதியில் முத்துக்குளிக்கும் தொழில்முறை இருந்து வந்துள்ளது. பின்னர் 17ஆம் நூற்றாண்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி, அவரது அறிக்கையில் தவறுதலாக தோத்துக்குரை என்று பதிவு செய்துள்ளார். அதுதான் பின்னாளில் தூத்துக்குடி என மாறியுள்ளயது. ஐரோப்பியர்களின் வாயில் தூத்துக்குடி என்ற பெயர் நுழையாததால் Tuticorin என்று ஆங்கிலத்தில் பதிவானது.
  
ஆற்காடு- 
அத்தி மாலை அணிந்த சோழ மன்னர்களின் ஆண்ட நிலப்பகுதியை ஆற்காடு என்று அழைத்தனர் என்றும், ஆல் -ஆலமரம் நிறைந்த பகுதியால் ஆற்காடு என்று அழைத்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

சேலம்- 
மலைகள் நிறைந்த இப்பகுதியை சைலம் என்று அழைத்தனர்.அதுவே பின்னாளில் சேலம் என்றானது. மேலும் இப்பகுதி சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால் சேரலம் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் சேலம் ஆனது என்றும் ஒரு சிலர் கூறுவர். 

கோயம்புத்தூர்-
சங்க காலத்தில் கோசர் இனத்தை சேர்ந்த சிற்றரசர்கள் கொங்கு மண்டலத்தை ஆண்டு வந்துள்ளார்கள். அவர்கள் பெயராலேயே கோசர்புத்தூர் என்றும் கோசம்புத்தூர் என்றும் அழைக்கப்பட்டு, பின்னாளில் மருவி கோயம்புத்தூர் என்றானது.

கொங்கு மண்டலத்தில் படுகர் இனத்தை சேர்ந்த மலைவாழ் தலைவனின் பெயர் கோவன். அவருடைய பெயராலேயே கோவன்புத்தூர் என்று அழைக்கப்பட்டு பிறகு கோயம்புத்தூர் ஆனது.

இங்குள்ள கோணியம்மன் கோவிலில் பெயராலேயே இப்பகுதி கோணியம்மன் புத்தூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் கோயம்புத்தூர் என்று மாறியது.

உதகமண்டலம் -
மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் பல படுகர், இடும்பர், தோடா என மலைவாழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் மொழியில் ஒத்தை கல் மந்தை /ஒத்தை கல் மாந்தை என அழைக்கப்பட்டுள்ளது. அப்பெயர் ஆங்கிலேயரின் வாயில் நுழையாததால் Ootacamund என்று அழைக்கப்பட்டது. பின்னர் அரசு உதகமண்டலம் என்று மாற்றியது .

ஏற்காடு- 
ஏரியும் காடும் இருக்கும் பகுதி. ஏரிக்காடு என்ற பெயர் ஏற்காடு என்றானது.
    
திருச்சிராப்பள்ளி -
முன்பொரு காலத்தில் இவ்விடம் திருசிராய்பள்ளி என்று அழைக்கபட்டுள்ளதது.  சிராய் - பாறை, பள்ளி - கோவில். பாறை மீது அமைந்துள்ள கோவில். மலைக்கோட்டையை குறிக்கிறது. திருசிராய்பள்ளி  என்ற பெயர் தான் திருச்சிராப்பள்ளி என மருவியுள்ளது.

மேலும் திரிசரன் என்ற பெயருடைய அரக்கன் சிவனை வழிப்பட்டு பயனடைந்ததாக  சொல்லப்படுகின்றது.அவன் பெயராலேயே இது திரிசரன்பள்ளி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் திருச்சிராப்பள்ளி என்றானது.

சிரா என்ற துறவி இங்குள்ள பாறையில் தவம் செய்ததாக சொல்லப்படுகிறது. அதனாலும் இது சிராப்பள்ளி என்று பெயர் பெற்றிருக்கலாம் என்றும் சொல்லபடுகிறது.

தஞ்சாவூர்-
எட்டாம் நூற்றாண்டில் தனஞ்செய முத்தரையர் என்ற அரசரின் பெயரில் தனஞ்செய்யூர் என்ற ஊர் உருவாக்கப்பட்டது. பின்னாளில் அதுவே தஞ்சாவூர் என மாறி போனது. தஞ்சை என்னும் சொல்லுக்கு வளமான குளிர்ந்த வயல்கள் உள்ள பகுதி என்ற பொருளும் உண்டு.
 
சிதம்பரம் -
பெரும்பற்றப்புலியூர் என்பதே பழைய பெயர். அங்கு வியாக்கிரபாதர் என்ற முனிவர் பூசை செய்த இடம். சித் - ஞானம் ; ஆம்பரம் - ஆகாயம். இதனால் தான் இது சிதம்பரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. 

சிற்றம்பலம் என்ற பெயர் தான் பின்னாளில் சிதம்பரம் என்று மருவி போனது. மேலும் இவ்விடத்தில் தில்லை மரங்கள் சிறந்த காடடுகள் இருந்துள்ளதால் இதற்கு தில்லை அம்பலம் என்ற பெயரும் உண்டு.

காஞ்சிபுரம்-
மிக பழமையான நகரங்களில் ஒன்று. காஞ்சி மலர்கள் அதிகம் இருப்பதால் காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர்களின் தலைநகரமாகி பின்னாளில் காஞ்சிவரம் என்று அழைக்கப்பட்டு, இப்போது காஞ்சிபுரம் ஆயிற்று.

மதுரை-
குமரிக்கண்டம் காலம் தொட்டு, சங்க காலம், இடைக்காலம் என எல்லா காலங்களிலும் பாண்டியர்களின் தலைநகராக மதுரை இருந்துள்ளது. வைகை நதிக்கரையில் மருத மரங்கள் அதிகம் இருந்ததால், மருத துறை என்ற பெயரே மதுரை என்று அழைக்கப்பட்டது.  
 
பெரு மதில்களும், அதற்குள்  குறு மதில்களும் இருக்கும் நகரம் மதில் நிரை  என்று அழைக்கப்பட்டு , பின்னாளில் மதுரை என்றானது. 

ஈரோடு - 
பெரும்பள்ளம் மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஆகிய இரு ஓடைகளுக்கு நடுவே உள்ள ஊர் என்பதால் இதை ஈரோடை என்று அழைத்துள்ளனர். பின்னாளில் அதுவே ஈரோடு ஆனது.

திருநெல்வேலி-
இப்பகுதி முன்னாளில் வேணுவனம் என்று அழைக்கப்பட்டுள்ளது. வேணு என்பதற்கு மூங்கில் என்று பொருள். மூங்கில் நிறைந்த வனம் என்பதால் இப்பெயரைகொண்டுள்ளது. மூங்கில்/ நெல் நிறைந்த பகுதி நெல்வேலி என்று அழைக்கப்பட்டது.

புராண கதைகளில் வேதபட்டர் என்ற சிவபக்தர், நெய்வேத்தியத்திற்கு உலர வைத்திருந்த நெல்மணிகளை மழையில் நினைய விடாமல் சிவபெருமான் வேலி போட்டு தடுத்ததால், இவ்விடத்திற்கு  திருநெல்வேலி என்று பெயர் வந்தது.       
 
கன்னியாகுமரி-
முன்னபொரு காலத்தில் இப்பகுதி நாஞ்சில் நாடு, வேணாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மிகுந்த வயல்களை கொண்டுள்ளது. நாஞ்சில் என்பதற்கு வயலை உழ பயன்படும் கலப்பை என்று பொருள் தரும். அதனால் இது நாஞ்சில் நாடு என பெயர் வந்துள்ளது.

புராண கதையின் படி, பார்வதி தேவி குமரி பகவதி என்ற பெயரில்  சிவனை வழிபட்டு வந்தடைந்தாக சொல்லப்படுகிறது. குமரி பகவதி அம்மன் சிறு பெண்ணாக, கன்னி பெண்ணாக இருப்பதால் இந்த அம்மனின் பெயராலேயே இவ்வூர் கன்னியாகுமரி என்று பெயர்அழைக்கப்பட்டுள்ளதது. 

கும்பகோணம்- 
சோழ நாட்டில் புகழ் பெற்ற ஊராக இருந்துள்ளது. அக்காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்றும் அழைக்கப்பட்டுள்ளதது. புராண கதையின் படி, அமிர்தம் இருக்கும் கூடத்தின் மூக்கு வழியே கீழே விழுந்த பரவிய ஊர் குடமூக்கு என்று பெயர் பெற்றது. பின்னாளில் கும்பகோணம் என்று மாறியுள்ளது.

தருமபுரி-
சங்ககாலத்தில் இவ்வூர் தகடூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. தகடு என்பதற்கு இரும்பு என்று பொருள். தாது பொருட்கள் இருக்கும் இடம் என்பதால் தகடூர் என்றானது. பின்னாளில் 15/16ஆம் நூற்றாண்டில் தருமபுரி என்று அழைக்கப்பட்டுள்ளது.

இது போல தமிழ்நாட்டில், பல ஊர்களின் பெயர்கள் மருவியுள்ளது. உங்களுக்கு தெரிந்த ஊர்களின் பெயர்கள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்  

வியாழன், 27 ஜூலை, 2017

மூட நம்பிக்கைகள் சில!

வணக்கம்,

நம் மக்களிடையே ஆண்டாண்டு காலமாக பல மூட நம்பிக்கைககள் பரவலாக இருந்து வருகிறது. ஏன் செய்கிறீர்கள்?  எதற்கு ? என்னவென்று காரணம் கேட்டால், அதற்கு சாஸ்திரத்தையும், ஆன்மீகத்தையும் பதிலாய் சொல்கிறார்கள். அப்படி பின்பற்றி வரும் சில மூட நம்பிக்கைகளில் சிலவற்றை இணையத்தில் படித்து உண்மையான காரணங்களை எழுதியுள்ளேன்.


1.) பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது ஏன் ?
பாம்பு புற்றுகள் பெரும்பாலும் அம்மன் கோவில்களில் இருக்கும். மேலும் பாம்புக்கு பாலும் முட்டையும் பிடிக்கும்.  நாம் அதை வைத்து படைத்தால் , முட்டையையும்  பாலையும் குடித்து விட்டு, நாம் வேண்டிக்கொண்டதை நிறைவேற்றும். இதைதான்  நாம்  பல படங்களிலும் பார்த்துள்ளோம்.

உண்மை காரணம் - ஆதி காலத்தில் நாடெங்கும் புதர்களும், காடுமாய் இருந்தது. மனிதன் நடமாட்டத்தை விட பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பெண் பாம்புகளின் மேல் ஒரு வித திரவ வாசம் வரும். அதை வைத்து கொண்டு ஆண் பாம்புகள் இனப்பெருக்கத்திற்காக வரும். பாம்பின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எண்ணி, முட்டையும் பாலும் அதன் புற்றில் ஊற்றினார்கள். இவை இரண்டுக்கும் பாம்பின் மேல் வரும் அந்த வாசத்தை போக்கும் திறன் உண்டு. அதனால் தான் பாம்பு புற்றிற்கு பால் ஊற்றுகிறார்கள். உண்மையில் பாம்புகள் பாலை குடிக்காது.

2.) மாலை நேரத்தில் ஏன் வீடு பெருக்க கூடாது ?
மாலை நேரத்தில் வீட்டை பெருக்கினால், வீட்டுக்கு நல்லதல்ல. துர்தஷ்டம் வந்து சேரும் என நம்பிக்கை. அதேபோல் மாலை நேரத்தில் நகம் வெட்டினாலும், வீட்டுக்கு தரித்திரம் வந்து சேரும் என சொல்வதுண்டு.

உண்மை காரணம்- மின்சாரம் கண்டுபிடிக்காமல் இருந்த காலத்தில், மாலை நேரத்தில், இருட்டிய பின் வீட்டை பெருக்கினால் குப்பைகளோடு ஊசி, தோடு/திருகாணி போன்றவை ஏதாவது சேர்ந்து காணாமல் போக வாய்ப்புண்டு. அதுமட்டுமல்லாமல் நகம் வெட்டி கூட்டி பெருக்கும் போதும் முக்கிய பொருட்கள் குப்பைக்கு போகவும் வாய்ப்புண்டு.  அதனால் தான் மாலை நேரத்தில் வீடு பெருக்க கூடாது என சொல்வார்கள்.

3.) இருட்டிய பின் ஏன் பூப்பறிக்க கூடாது ? 
மாலை நிறத்தில் இருட்டிய பின் செடியிலிருந்து பூப்பறித்தால், வீட்டுக்கு கெட்டது  நடக்கும் என சொல்வார்கள்.

உண்மை காரணம்- மாலை நிறத்தில் இருட்டிய பின், செடி கொடிகளில் பூச்சி, பாம்பு, தேள் போன்றவை இருக்கலாம். அதனால் மக்களின் உயிருக்கு ஆபத்து வர கூடாது என்பதற்காக இருட்டில் பூப்பறிக்க கூடாது என சொல்லியிருப்பார்கள்.

4.) சாவு வீட்டுக்கு சென்று வந்த பின் ஏன் குளித்துவிட்டு பின்வாசல் வழியே வர வேண்டும் ?
சாவு வீட்டுக்கு சென்று வந்த பின் கண்டிப்பாக குளிக்க வேண்டும். இல்லாவிடில் அந்த தீட்டு நமக்கும் ஓட்டி கொள்ளும்.

உண்மை காரணம்- முன்பெல்லாம் ஒருவர் இயற்கையாகவோ/செயற்கையாகவோ இறந்திருந்ததால், உடலை வீட்டில் அப்படியே தரையில் துணி விரித்து போட்டு வைத்திருப்பார்கள். இறந்த உடலிலிருந்து நிறைய நுண்ணுயிர்கள்/கிருமிகள் வந்தவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் உள்ளவரையும் பாதிக்கும். அதனால் தான் சாவு வீட்டுக்கு போய் வந்தால் குளித்துவிட்டு சுத்தமாக  இருக்க வேண்டும். அது சரி.. அது ஏன் கொல்லைப்புறமாக வரவேண்டும் ? முன்பு, குளியலறை வீட்டுக்கு வெளியே கொல்லைப்புறத்தில் தான் இருக்கும். அல்லது வெட்ட வெளியில் கொல்லையில் தான் குளிப்பார்கள். அதனால் பின் வாசல் வழியே குளித்துவிட்டு வீட்டுக்குள் போவார்கள்.

5.) பூனை குறுக்கே வந்தால் ஏன் கெட்ட சகுனம் ?
வெளியே போகும் போது பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம். போகிற காரிய தடைப்படும். மீண்டும் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து கிளம்ப வேண்டும்.

உண்மை காரணம்- அக்காலத்தில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு போக காட்டு பாதை வழியேதான் போக வேண்டும். காட்டுப்பூனை, சிறுத்தை, புலி போன்ற மிருங்கங்கள் போகும் வழியில் குறுக்கே கடந்து போகும். இப்பூனை வகையறாவை சேர்ந்த மிருகங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. பாதையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் போகும் போது ஒருமுறை நின்று பார்த்து விட்டு தான் கடக்கும். இரையை தேடி கொண்டே போகுமாம். அதனால் தூரத்தில் இப்பூனைகளை கண்டாலோ/ வழியில் வந்தாலோ/கடந்தாலோ திரும்பி போய் விடுவார்கள். அந்த காரணம் தான் இக்காலத்தில் மருவி இப்படி ஆகிவிட்டது.

6.) தும்மினால் கெட்ட சகுனம்- 
நல்ல காரியம் செய்யும் போதோ/வெளியே செல்லும் போதோ தும்மல் வந்தால் அபசகுனம்.

உண்மை காரணம்- தும்மல் ஒரு சாதாரண இயற்கை செயல். ஒருவர் தும்மினால், அவருக்கு உடம்பு சுகமில்லை என கருதி கசாயமோ அல்லது சீரக வெந்நீரோ தருவது பண்டைய வழக்கம். வெளியே போகும் போது தும்மினால், உடம்பு சுகமில்லை போகவேண்டாம் என்றும் சொல்லியும், ஒரு சொம்பு வெந்நீர் கொடுத்து அனுப்புவதையம் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அதைதான் நாம் அபசகுனம் என்று மாற்றியுள்ளோம்.  (இப்படி தான் இருந்திருக்கும் என நானே யோசித்து எழுதியது).

7.)  புரட்டாசி மாதம் ஏன் மாமிசம்  சாப்பிட கூடாது ?
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விசேஷ மாதம். அதனால் பெருமாளுக்கு நோன்பு நோற்று விரதம் எடுத்து, மாமிசம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

உண்மை காரணம்- புரட்டாசி மாதத்தில் வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் பருவ நிலை மாறும் காலம். இம்மாதத்தில் அசைவ உணவை சாப்பிட்டால், உடல் சூடேறி உபாதைகள் வர நேரிடும். அதனால் தான் மாமிச உணவை தவிர்த்து, ஒரு பொழுது உணவை (அளவாக)  சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாய் இருக்கும் என பின்பற்றினார்கள். இதில் பெருமாள் எப்படி வந்தார் என சத்தியமாய் எனக்கு தெரியாது!

8.) ஏன் இரவில் அரச மரத்தடியே படுக்கக் கூடாது ?
இரவு நேரத்தில் அரச மரத்தடியே படுத்து தூங்கினால், காத்து கருப்பு அடித்து விடும் என சொல்வார்கள்.

உண்மை காரணம்- அரசமரம் பகலில் கரியமில வாயுவை எழுத்து கொண்டு, பிராண வாயுவை விடும். ஆனால் இரவில் பிராண வாயுவை எழுத்து கொண்டு, கரியமில வாயுவை வெளியிடும். மரத்தடியில் இரவில் தூங்குபவர்கள்  கரியமில வாயுவை சுவாசித்தால், மூச்சு திணறல் ஏற்படும், உயிர் போகவும் வாய்ப்புண்டு. அதனால் தான் இரவில் அரச மரத்தடியே படுக்க கூடாது என சொல்லி வைத்தார்கள்.

9.) மொய் வைக்கும் போது ஏன் ஒற்றைப் படையில் (101 ருபாய் , 501 ருபாய், 1001 ருபாய்) மொய் வைக்கிறார்கள்?
ஒற்றைப் படையில் மொய் வைப்பது தான் சம்பிரதாயம். அப்படி தான் வைக்க வேண்டும்.

உண்மை காரணம்- இரட்டைப்படை எண்ணை எளிதில் வகுக்க முடியும். அப்படி வகுத்தால் மீதம் (remainder) பூஜியமோ அல்லது perfect number தான் வரும். ஆனால் ஒற்றைப் படை எண்ணை வகுத்தால் பூஜ்யம் வராது. அதுமட்டுமல்லாமல் decimal ஆக தான் வரும். இது போல கணவன் மனைவி பிரியாமல், யாராலும் பிரியப்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. உதாரணம்: (100/2=50) , (101/2=50.5)

10.)  உப்பை கொட்டினால் வீட்டுக்கு கடன் வந்து சேரும்
வீட்டில் உப்பை கொட்டினால் வீட்டுக்கு கடன் வந்து சேரும்.

உண்மை காரணம்- பழங்காலம் முதல் உப்பு மருத்துவம் மற்றும் சமையலில் மிக முக்கியமான பொருள் ஆகும். பண்ட மாற்று முறையிலும் உப்பு மிக முக்கியமானது. அதனால் அதை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டி சொல்லியிருப்பார்கள்.

11.) இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்கும்!
கடந்த பதினைந்து அல்லது இருபது  வருடங்களாக பரவலாக இந்திய பெற்றோர்களால் நம்ப படும் ஒரு அசாத்திய நம்பிக்கை. இதற்கு விளக்கம் தர கொஞ்சம் நிறைய எழுத வேண்டும். அதனால் இதை பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.


 நன்றி !!!

-பி .விமல் ராஜ்

செவ்வாய், 18 ஜூலை, 2017

பற்றி எரிகிறது வீரம் !

வணக்கம்,
இது எனது வெற்றிகரமான 100வது பதிவு! இந்த நாலரை வருடத்தில் இப்போது தான் செஞ்சுரியே போட முடிகிறது. இத்தனை நாட்களாய் என் பதிவுகளை பொறுமையாய் படித்து, கருத்தளித்து, எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் !!!

100th-post-pazhaiyapaper

எனது நூறாவது பதிவில் ஏதாவது ஒரு சமூக பிரச்சனையை பற்றி எழுத வேண்டும் என தோணியது. அதன் விளைவே இப்பதிவு. இப்போதெல்லாம் செய்திகளில், ஒரு முக்கிய செய்தி ஒன்று அடிக்கடி வருகிறது. இளைஞர் தீக்குளிப்பு! முதியவர் தீக்குளிக்க முயற்சி! பெண் தீக்குளித்து இறப்பு! 

தீக்குளித்தல் - ஒருவர் தாமாகவே நெருப்பில் பாய்ந்து உயிரை மாய்த்து கொள்வது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. விரக்தியின் விளிம்புக்கு சென்ற பின் முடிவெடுக்கும் அசாதாரண முடிவு. கொள்கை, லட்சியதிற்காக இப்படி இறப்பவர்களை, பெரும்பாலும் வீரமகனாகவே மாற்றி விடுவது நம் நாட்டின் மரபு.

"என் தலைவருக்கு நியாயம் கிடைக்காவிட்டால், நான் இங்கேயே தீக்குளிப்பேன்" என்ற அரசியல் அல்லக்கைகளின் வசனத்தை பல படங்களில் நாம் கேட்டிருப்போம். இது வெறும் வசனம் மட்டுமல்ல. இது போன்ற சம்பவங்கள், பல இடங்களில் இன்றும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

இது இன்றோ, நேற்றோ ஆரம்பித்தல்ல. சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே துணிச்சல் மிக்க வீர செயல்கள் என சொல்லப்படும் தீக்குளிப்பு சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

வருடம் 1965 ஆம் ஆண்டு. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியால், சென்னை மாகாணமெங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்து, பல இடங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த சமயம்.

திருச்சி கீழப்பழுவூரை சேர்ந்த 27 வயது இளைஞர் இந்தி எதிர்ப்பு போராட்டதிற்காக தீக்குளித்து இறந்தார். இறக்கும் முன், "தமிழ் மொழியை காக்க நான் தீக்குளிக்க போகிறேன்" என கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்டிருக்கிறார். மொழிக்காக உயிரை விட்டதால், இவரை மொழி தியாகியாக்கி, அவர் மரணத்தை வீர மரணம் ஆகிவிட்டனர். நம் தமிழக வரலாற்றில் அச்சில் பதிந்த முதல் தீக்குளிப்பு (வீர) மரணம்.  அதன் பிறகு ஓரிரு ஆண்டுகளில் கோடம்பாக்கம் சிவலிங்கம் (21), விருகம்பாக்கம் அரங்கநாதன்(33), அய்யம்பாளயம் வீரப்பன் (26), சத்தியமங்கலம் முத்து (21).மாயவரம் சாரங்கப்பாணி (20),  கீரனூர் முத்து (21) என இந்தி திணிப்புக்காகவும், இந்தி எதிர்ப்புக்காகவும் பலர் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். இவர்கள் இறப்புக்கு பின் இவர்களை மொழிக்காக உயிர்விட்ட வீர மகன்களாகவும், தியாகிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர்.


தீக்குளித்து இறந்தவர்களுக்கு, இறந்த பின் வீரர் அல்லது போராளி அல்லது வீரமரணம் என போற்றப்பட்டு, அவர்களது குடும்பத்துக்கு உதவி பணமும், மற்ற சலுகைகளும் கொடுக்கபட்டது. பின்னாளில் இதுவே ஒரு ட்ரெண்டாகி போனது வருத்தத்திற்குரியது.

அதன் பின்னர் 1968 ஆம் ஆண்டில், அறிஞர் அண்ணா இறந்த போதும் பலர் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டனர். 1972-ல் எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து விலக்கிய போது இருவர் தீக்குளித்து இறந்தனர். 1981-ல் கலைஞர் கைதுக்காக 21 பேர் உயிரை மாய்த்து கொண்டனர். அதில் பெரும்பாலானோர் தீக்குளித்து இறந்து போயினர்.பின் 1987-ல் எம்.ஜி.ஆர் இறந்த செய்தி கேட்டு 31 பேர் தீக்குளித்தனர். இவர்கள் அனைவருக்கும் தீக்குளித்தற்காக / உயிரை தியாகம் செய்ததற்காக சன்மானமும், வீரர்கள் என புகழாரம் சூட்டப்பட்டு கொண்டும் இருந்தது.

அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு முத்துக்குமார் (26), இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து தீக்குளித்து இறந்தார். அது பெரும் செய்தியாகி அவர் சாவை வீர மரணமாக கருதி, இன்றும் வருடந்தோறும் நினைவேந்தல் கூட்டம் நடந்து வருகிறது. 2011-ல் செங்கோடி (20) ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நால்வருக்கும் நியாயம் கிடைக்க வேண்டி தீக்குளித்துள்ளார். 2016-ல் விக்னேஷ் (26) காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைத்திட தீக்குளித்துள்ளார். இது போல தமிழ் நாட்டில் அரசியலில் நடந்த மாற்றத்தால் ஏற்படும் மக்கள் பிரச்னைக்காக பலரும் தீக்குளித்தும், பிற வழியிலும்  உயிரை மாய்த்துள்ளனர். கடைசியாக 2016-ல் ஜெயலலிதா இறந்தபின் சிலர் தீக்குளித்துள்ளனர்.

தம் உயிரே ஆனாலும் அதை மாய்த்து கொ(ல்லு)ள்ளும்  உரிமை யாருக்கும் கிடையாது. இறந்தவர்கள் பலரும் 20 முதல் 30 வயதுடையவர்கள் தான். இந்த வீர மரணங்களுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும் ???  நொடி பொழுதில் வந்த முடிவா?  கொள்கை வெறியா? இல்லையெனில் அரசியல் பின்னணியா? என யாருக்கும் இதுவரை தெளிவாக தெரியவில்லை.

இவர்கள் அனைவரும் அவர்தம் சொந்த முடிவின் பெயரிலும், கொள்கைக்கவும், தாமாகவே முன் வந்து இருந்ததாகவே எடுத்து கொள்வோம். அது ஓர் தவறான மனநிலையை தான் குறிக்கிறது. இவர்கள் இறப்பை வீர மரணம் என்றும், இறந்த பின் அவர் குடும்பத்துக்கு பொருளும் பணம் கொடுப்பது இச்செயலை அரசியல்வாதிகளே ஊக்கப்படுத்துல் போலாகும். கிட்டத்தட்ட அவர்களின் தீக்குளிப்பை வீரச்செயல் என்றே போற்றப்பட்டு அவர்களை மாவீரர்களாக்கி வருகின்றனர். ஒருவர் தீக்குளிக்க முற்பட்டால், அவரை தடுத்து கண்டிக்க/தண்டிக்க வேண்டும். அதை விடுத்து அவரை நாயகனாக்கினால், பின்னாளில் வருவோரெல்லாம் அவரை ஒரு முன் மாதிரியாக எடுத்து கொண்டு, அதை பின்பற்றி கொண்டு ,தம்மை தாமே பற்ற வைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஹ்ம்ம்..  அதை தான் செய்கிறார்கள்.

நான் இவர்களின் மரணத்தையோ, கொள்கையையோ தவறாக விமர்சிக்கவில்லை. இளம் வயதில் இறப்புக்கு பின், இவர்கள் குடும்பத்தின் நிலை என்னவாகும்? இது போன்ற கொள்கைப்பிடிப்பும், வீர மரணமும்  ஏன் வசதியில் பின் தங்கிய மக்களுக்கே வருகிறது? இறந்தவர்களில் ஒருவர் கூட வசதி படைத்தவர்களோ/ அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் சொந்தமோ இல்லை. எதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 2000 பேர் தீக்குளித்து இறக்கின்றனர். தமிழ் நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதும், இது போல நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கையில் விரக்தி, பரிட்சையில் தோல்வி, திருமணம் வாழ்வு கசந்து போகுதல், வன்கொடுமை, அரசியல், மொழி, சாதியம் என காரணங்கள் வெவ்வேறு இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். எந்த ஒரு பிரச்சனைக்கும் உயிரை மாய்த்து கொள்வது தீர்வல்ல. அதை எப்போது அரசும், அரசியல்வாதிகளும் மற்ற மக்களும் புரிந்து கொள்வார்கள் என தெரியவில்லை.

தகவல்கள்- The Hindu, Sify News, Tamil Tribune

நன்றி !!!
-பி .விமல் ராஜ்

வெள்ளி, 13 ஜனவரி, 2017

வாடிவாசல் திறக்கட்டும்!

வணக்கம்,

ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் போனது, ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மம், ச்ச்சீ...ன்னம்மாவின் அரசியல் பிரவேசம் என எல்லாவற்றையும் மறக்கடிக்கும் ஒரு செய்தியாக இருக்கிறது ஜல்லிக்கட்டு. உச்சநீதிமன்ற தடையால் கடந்த மூன்று ஆண்டுகளாகவே இப்போட்டி நடைபெறவில்லை. ஓவ்வொரு முறையும் மாநில அரசும், மத்திய அரசும் தடையை அகற்றுவோம் என சொல்லி சொல்லி ஓட்டு வாங்கி செல்கின்றனர். ஆனால் ஒன்றும் நடந்த பாடில்லை. இந்த தடைக்கு பெரும் பங்கு பீட்டா (peTA), விலங்குகள் நல வாரியம் (Animal Welfare Board of India - AWBI) போன்ற அமைப்புகள் தான் காரணம். இவை தான் மிருக வதை, காட்டுமிராண்டித்தனம் எனக்கூறி ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரி வழக்கு தொடுத்துள்ளனர்.

jallikattu

இதற்கு தமிழக மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளை விட இந்த வருடம் எதிர்ப்பு அதிகமாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்களிடம் விழிப்புணர்பு ஏற்பட்டதே காரணம். அதில் பெரும்பங்கு சமூக வலைத்தளங்களையே சேரும். கடந்த வருடத்தில் இசையமைப்பாளரான 'ஹிப்-ஆப்' ஆதி  எழுதி, பாடி, நடித்த ஒரு 'டக்கரு டக்கரு' பாடல் யூ-ட்யூபில் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒரு வித விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்தியது. அந்த தீப்பொறியிலிருந்து கிளம்பிய புகை தான் இன்று போகி வரை கொழுந்து விட்டு எரிகிறது.

பின்னர் பலரும் சமூக வலைத்தளங்களிமும், ஊடகங்களிலும் ஜல்லிக்கட்டின் பெருமை, நமது கலாச்சாரம் பற்றியும், பாரம்பரியம் பற்றியும் எழுதி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று போராடி வந்தனர். கடந்த வாரம் ஜனவரி 8-ஆம் தேதியன்று சமூக வலைத்தளங்களில் மீம் கிரியேட்டர்கள் பகிர்ந்தை கொண்டு சென்னை மெரினாவில் 20,000 பேருக்கு மேல் (பெரும்பாலும் இளைஞர்கள்) ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு தடை நீங்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடந்த வேண்டும் என்ற போராட்டம் மாறி ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று கர்ஜித்து வருகின்றனர். #WeDoJallikattu

WeDoJallikattu

ஜல்லிக்கட்டை தடை செய்து நமது தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறார்கள் என சொல்கிறார்கள். தொன்மையான நமது கலாச்சாரத்தை அவர்கள் அழித்து ஒன்றும் செய்ய போவதில்லை; அவ்வளவு சுலபத்தில் செய்யவும் முடியாது. இதன் பின்னால் பெரிய அரசியலே இருக்கிறது என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சொல்கின்றனர்.

ஜல்லிக்கட்டை தடை செய்தால், காளைகள் உழவுக்கும், அடிமாட்டுக்கும் போகும். பின்னர், நாட்டு மாடுகள் பற்றாக்குறையால், இனப்பெருக்கத்திற்கு காளைகளே இல்லாமல் போகும். வெளிநாட்டிலிலிருந்து காளைகளை இறக்க நினைப்பார்கள் (நாட்டு கோழியை விடுத்து பிராய்லர் கோழியை இறக்கியது போல). இல்லாவிடில் காளைகள் இல்லாமல் இனப்பெருக்கம் பெரிதும் குறையும்; பால் தட்டுப்பாடு வரும். செயற்கை முறையில் கருவூட்டல் (Artificial Insemination - AI ) மூலம் தான் கன்று ஈன முடியும் என்ற நிலை வரும். இந்த AI -ன் காப்புரிமைகள் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் இருக்கிறது. இது கிட்டத்தட்ட நம் இன மாடுகளை அழித்து, வியாபாரிகளின் சந்தையாக்க முடிவு செய்யப்பட்டு, பல வெளிநாட்டு  நிறுவனங்கள் இந்தியாவில் பீட்டா போன்ற அமைப்புகளை தூண்டிவிட்டு, நம்மையும் நம் கலாச்சாரத்தையும் நசுக்கப் பார்கின்றனர்.

இதெல்லாம் உண்மை என்று சொல்லும் விதமாக ஜல்லிக்கட்டு ஆர்வலரும், காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனருமான சிவசேனாபதியும், அவரது வழக்கறிஞரும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிய விஷயங்கள் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. "ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் இந்தியாவில் ஒரே குடும்பம் தான்... சின்னி கிருஷ்ணா மற்றும் நந்தினி கிருஷ்ணா ஆகியோர் தான். இவர்கள் தான் இந்தியாவின் மொத்த விலங்குகள் நல அமைப்பையும் கையில் வைத்து கொண்டு, வெளிநாட்டு NGO களுக்கு கைக்கூலியாக உச்சநீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். இந்திய விலங்குகள் நல வாரியதில் (AWBI) துணை தலைவராக (Vice Chairman) சின்னி கிருஷ்ணா பதவி வகிக்கிறார். மேலும் ப்ளூ கிராஸ் அமைப்பின் தலைவரும் (Chairman) இவர்தான். அது மட்டுமல்லாமல் இந்திய விலங்குகள் நல வாரியதில் ஒரு வெளிநாட்டு பெண் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். ஒரு வெளிநாட்டு பெண் எப்படி இந்தியாவிலுள்ள சட்டரீதியான ஆலோசனை வழங்கும் அமைப்பில் உறுப்பினராக முடியும் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்."



மேலும் சின்னி கிருஷ்ணா அளித்துள்ள ஒரு பேட்டியில், மத்திய அரசின் முடிவை கேட்க மாட்டோம் என்றும், இம்முறையும் ஜல்லிக்கட்டு நடக்காது என்று திட்டவட்டமாக சொல்லியுள்ளார்ன்.


இந்த வீடியோக்கள் கடந்த வருடம் ஜூலை மாதம் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு ஊடகமும் பெரும்செய்திகளாய் ஒளிபரப்பவில்லை. இப்போது தான் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். ஜல்லிக்கட்டு தடைக்கு மத்திய அரசு கார்ப்பரேட் சாதகமாக செயல்படுகிறது. மாநில அரசு தடையை மீறி நடத்தவும் முடியாமல், அவர்களை எதிர்க்கவும் முடியாமல், தமிழக மக்களுக்கு அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு வாயடைத்து நிற்கிறது. மாநில மற்றும் தேசிய ஊடகங்களும், இதை பெரிதாக்க விரும்பவில்லை. இதனை வெறும் பரபரப்பான செய்திகளாகதான் பார்க்கின்றனர்.

யார் தடுத்தாலும் சரி, தடை நீக்காவிட்டாலும், ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என ஜல்லிக்கட்டு வீரர்கள் கூறி வருகின்றனர். இம்முறையாவது வாடிவாசல் திறக்கப்பட்டு, காளைகள் திமிறி எழுகிறதா என பார்க்கலாம்! நம் தமிழ் மண்ணின் பாரம்பரியமும், கலாச்சாரமும், வீரமும் காப்பாற்றப்படட்டும்!

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 12 மே, 2016

கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !

வணக்கம்,

மே 16 - தமிழக சட்டமன்ற தேர்தல்

அன்பார்ந்த வாக்காள பெருமக்களே! இது தேர்தல் நேரம். எங்கு பார்த்தாலும் பொதுக்கூட்டம், தேர்தல் அறிக்கைகள், அனல் பறக்கும் பிரச்சாரம், புள்ளி விவரங்கள், கருத்துகணிப்புகள், தொகுதி நிலவரம், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பணம் பறிமுதல் என எங்கு பார்த்தாலும் தேர்தல்மயம். அரசியல் தலைவர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் தேர்தல் ஜூரம் பற்றி கொண்டுவிட்டது. ஒருவழியாய் இன்றோடு எல்லா பிரச்சாரமும் முடிவடைகிறது.

யாருக்கு ஓட்டு போட வேண்டும் என மக்கள் யோசித்து கொண்டிருகிறார்கள். ஏனென்றால் அத்தனை கட்சிகளும் அம்புட்டு நல்லவர்களாகவே இருக்கிறார்கள்!?! எல்லாம் உங்களுக்கு தெரிந்தது தான். இருந்தாலும் கொஞ்சம் மேலோட்டமாக பார்ப்போம்.

ஆளும் அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில்முறையில் எந்த ஒரு வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ காட்டவில்லை. விவசாயத்தில் அவர்களுடைய இரு இலைகளுக்கு மேல் எதுவுமே தழைக்கவில்லை. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கு, மந்திரிகளின் மீதான ஊழல் வழக்கு, விலைவாசி ஏற்றம், டாஸ்மாக்-கிற்கு பாதுகாப்பு கொடுத்தது, அதிகார துஷ்பிரயோகம், சிறைவாசத்தின் போது அரசு இயந்திரம் ரிப்பேராகி போனது, நடுஇரவில் ஏரியை திறந்துவிட்டது, ஸ்டிக்கர் ஒட்டியது என பல குற்றச்சாட்டுகள் உள்ளது.

எதிரே உட்கார்ந்து அடம் பண்ணும் கட்சியிலும், இமாலய 2G ஊழல் வழக்குகளும், கொள்ளு பேரனின் பேரன் வரை சொத்து சேர்த்து வைத்தது, ஈழ போரின் போது மக்களை நம்ப வைத்து ஏமாற்றியது என குற்றப்பட்டியல் நீள்கிறது. இப்போதுள்ள ஆட்சியின் மீதுள்ள வெறுப்பால், இவர்களுக்கு தான் இம்முறை விடியும் என பலரும் சொல்கிறார்கள். அட ஆமா! இப்போ இவங்க turn தானே!

மக்கள் கூட்டணி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணியில் யாரும் இதுவரை அரியணை ஏறியதில்லை. அதனால் ஊழல் வழக்குகளோ, குற்றச்சாட்டுகளோ அவர்கள் மேல் பெரிதாக இல்லை. சாட்டையை பம்பரத்தில் சுற்றி விடுவது போல, சுற்றி விட்டு வேடிக்கை பார்க்கிறார் கூட்டணி ஆரம்பித்த எழுச்சி தலைவர். கடந்த தேர்தல்களில் ஒன்று  அல்லது இரண்டு சீட்களுக்காக கட்சியையும், கூட்டணியும் பேரம் பேசி தாவி கொண்டேயிருந்த பெரும் தலைவர்கள் இங்கு தான் இருகின்றனர்.

இதில் 'மீகாமன்' மட்டும் விதிவிலக்கு. அவர் போன தேர்தலில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்து பின்னர் கையை உயர்த்தி, நாக்கை துருத்தி எதிர்ப்பை காட்டினார். இன்றும் தைரியமாக இரு பெரும் கட்சிகளுக்கு எதிராக நின்று தேர்தலில் கடுமையான போட்டியை கொடுத்து முரசு கொட்டுகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் அரசியலில் முதல் அடி சரியாக வைத்து, சற்று ஜெயித்தும் விட்டார். நாளாக நாளாக இவர் தரம் (பேச்சிலும், செயலிலும்) குறைவது போலவே தெரிகிறது. 2006-ல் இவர் பேசிய பொதுக்கூட்ட பேச்சை பாருங்கள்.. போன வாரம் இவர் பேசியதை பாருங்கள்... உங்களுக்கே புரியும். இப்போது இவர் பேசுவது ஒன்றுமே புரிவதில்லை. மேடைகளிலே தத்துபித்துவென உளறி கொட்டுக்கிறார். பல நேரங்களில் 'தள்ளாடி' நடக்கிறார். இவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வரோ என அண்ணியாருக்கு தான் வெளிச்சம்!

அடுத்து மாற்றத்தை விரும்பும் கட்சி. சில மாதங்களுக்கு முன், தமது சாதியில் உள்ள ஒருவர் தான் நாடாள வேண்டும் என்று தீச்சட்டியேற்றி பறைசாற்றி கொண்டிருந்தனர். இப்போது அதையே சற்று மாற்றி, ஒரு தமிழன் தான் நாடாள வேண்டும் என்று சொல்கின்றனர். கார்ப்பரேட் கம்பெனி போல மக்களுக்கு 'ஆடியோ விடியோ முறையில்' (AV Presentation) அவர்களது வாக்குறுதிகளை காரைக்கால் திருவிழாவில் வீசுவது போல வீசி கொண்டிருகிறார்கள்.

அடுத்தவர் அண்ணணின் வீரமான தம்பி. கத்தி கத்தி பேசியே மெழுகுவர்த்தி போல உருகி கொண்டிருக்கிறார். அவ்வாறு பேசும் வீர வசனங்களை அவர் எடுக்கும் படங்களில் வைத்தாலாவது கொஞ்சம் பார்க்க /கேட்க முடியும். இவரை பொறுத்த வரை 1000 ஆண்டுகளுக்கு மேல் எந்த சாதிமக்கள் தமிழ் நாட்டிலேயே வாழ்கிறார்களோ, அவர்கள்தான் தமிழினம். மற்ற அனைவரும் வடுக வந்தேறிகள். இவரை விட்டால் தமிழ் நாட்டை இந்தியாவிலிருந்து முற்றிலும் பிரித்து விடுவார்.

இது போல பல கூத்துகளை நம் மக்கள் தினமும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். யார் நல்லவர், வல்லவர், தூய்மையானவர் என சொல்ல முடியவில்லை. அதனால் பலர் ஓட்டே போட தேவையில்லை என நினைக்கிறார்கள். சிலர் அரசியல், தேர்தல் பற்றி ஏதும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் நமக்கு ஒரு கவலையும் இல்லை' என எண்ணி கொண்டிருகின்றனர். சிலர் வெட்கமே இல்லாமல் ஓட்டை விற்று விடுகின்றனர். நாம் ஓட்டுக்கு பணம்/ பொருள் வாங்கினால், நம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நம்மை ஏமாற்றதான் பார்ப்பார்கள். பின்னர் அவர்கள் பெயரை சொல்லி நாம் புலம்ப முடியாது.


அந்த தவறான எண்ணத்தை மாற்ற பலரும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். மக்களாகிய நாம், செய்ய வேண்டியது என்னவென்றால், யார் சரியான வேட்பாளர் என்பதை பார்த்து ஓட்டு போட வேண்டியது மட்டும் தான். இதில் யார் தகுதியானவர் என்று கண்டுப்பிடிப்பது சற்று கடினம் தான். அதை உங்கள் தொகுதியில் நிற்கும் நல்ல தகுதியான வேட்பாளரை ஆராய்ந்து பார்த்த பின் ஓட்டளிக்க வேண்டியது நம் கடமை. அது கடமை மட்டுமல்ல. நம் உரிமையும் கூட. நான் என் கடமையை செய்தேன்; ஆனால் எங்களுக்கு (தொகுதிக்கு) ஒரு நல்லதும் நடக்கவில்லை என சொல்பவர்களுக்கு, கீதா உபதேச வரிகளை நினைவுகூற விரும்புகிறேன். கடமையை செய்! பலனை எதிர்பாராதே! நாம் செய்ய வேண்டியதை சரியாய் செய்வோம். நடப்பது நல்லதாகவே நடக்கட்டும்.

வாருங்கள் ஓட்டு போடுவோம்! நம் கடமையை சரியாக செய்வோம்!! 

நன்றி !!!

-பி .விமல் ராஜ்