kamal haasan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kamal haasan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஜூன், 2022

விக்ரம் - சினிமா விமர்சனம்

வணக்கம்,

கிட்ட தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகனின் படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் ஹசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா என நட்சத்திர பட்டாளத்துடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் படம் வெளிவந்துள்ளது.

படத்தின் டைட்டில் டீஸரே "Once Upon a Time There Lived a Ghost" என ஆரம்பித்து பலரை விருந்துக்கு அழைத்து, வேட்டு வைப்பது என அதகளமாய் இருந்தது டீசர். ட்ரைலரிலும் மாஸான ஆக்ஷன் த்ரில்லராகவே காட்டியுள்ளனர். மேலும் பல சினிமா டிகோடர்கள் மார்வல் யூனிவெர்ஸ் போலவே லோகேஷ் யூனிவெர்ஸ் இருக்கிறது; இந்த படத்துக்கும் கைதி படத்துக்கும் சில ஓற்றுமைகள், கனெக்ஷன் இருக்க போகிறது என்ன சொல்லி யூகித்து வந்தனர். பகத் பாசில் போலீஸ், கமலின் மகன் தான் சூர்யா, ட்ரைலரில் காட்டிய அந்த குழந்தையே சூர்யா தான் என நாளொரு நாளாய் ஒவ்வொரு புதிய அப்டேட்டுகளை விட்டு கொண்டே இருந்தது விக்ரம் பட டீம்.

இந்த எதிர்பார்புகளையெல்லாம் மனதில் கொண்டு படம் பார்க்கலாம் என நினைக்கும் போது, ரிலீசன்று விக்ரம் படம் பார்க்க வரும் முன் கைதி படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வாருங்கள் என இயக்குனர் கோரிக்கை விட, அப்போதே தெரிந்து விட்டது இவை இரண்டுக்கும் கனெக்ஷன் உண்டு என்று. இரண்டு படங்களையும் எப்படி லிங்க் செய்தார்கள்,  கதை எப்படி ஆரம்பித்து முடிகிறது என்பதை பார்ப்போம். ஆரம்பிக்கலங்களா ???

vikram-movie-review

போலீஸ் கையில் பிடிபட்ட பல கோடி மதிப்புள்ள கோகெயின் சரக்குக்காக போலீஸ் அதிகாரி காளிதாஸ் ஜெயராம் கொல்லப்படுகிறார். அதனால் கொண்ட ஆத்திரமும், நாட்டை போதையியில்லா  நாடாக்கும் முயற்சியிலும், தனி மனித புரட்சியாக காளிதாஸின் தந்தையாக உலக நாயகன் கமல் ஹாசனின் அதிரடி வேட்டையே விக்ரம் படத்தின் கதை.  

கைதி படத்தில் உள்ள சம்பவங்களை இதில் சீக்குவலாக சேர்த்துள்ளனர். கைதியில் வில்லனாக வந்த நார்கோட்டிக்ஸ் அதிகாரி, நரேன், திருச்சியில் பிடிபட்ட 1 டன் சரக்கு என சில விஷயங்கள் இதிலும் வருகிறது. போனஸாக அடைக்கலம், அன்பு, டில்லி, காமாட்சி என கிளைமேக்சில் பலரையும் காட்டி இன்னும் பூஸ்டப் கொடுத்துள்ளனர். 

மேலும் அடுத்த சீக்குவலுக்கு இப்போவே லீட் கொடுத்து சூர்யாவை எல்லோருக்கும் மேல் பெரிய வில்லனாக காட்டியுள்ளனர். சூர்யா இதில் நடிக்கிறார் என்பதை படக்குழு சொல்லாமலேயே சஸ்பென்சாகவே வைத்திருக்கலாம். அது இன்னும் அல்டிமேட் ட்விஸ்ட்டாக இருந்திருக்கும்.

இயக்குனரின் மற்ற படம் போலவே பெரும்பாலும் இருட்டிலேயே கதை நகர்கிறது. அன்பரிவின் ஸ்டண்ட்டும் அனிருத் பின்னணி இசையும் அதிரடியாகவும், அட்டகாசமாகவும் இருக்கிறது. படத்தில் எதிர்பாராத இடங்களில் பல ட்விஸ்ட்கள் இருக்கிறது. அதுவே படத்தின் பெரும் பலம். இன்டெர்வல் ட்விஸ்ட், டினா ட்விஸ்ட், வில்லன் ட்விஸ்ட், கிளைமேக்சில் இரு ட்விஸ்ட்கள் என ஹைப்பர் ஏறிக்கொண்டே போகிறது. 

உலகநாயகனின் நடிப்பு சொல்லவே தேவையில்லை. கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கருப்பு வெள்ளை தாடியும், முடியுமாய் கரகர குரலில் நடிப்பில் மிரட்டி எடுத்திருக்கிறார். குழந்தையோடு வரும் பாடலிலும், மகனுக்காக அழும் போதும், கோபப்படும் போதும்  வாழ்ந்திருக்கிறார். 

ஃபகத் பாசில் எப்போதும் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் ஏஜெண்டாக வந்து குற்ற சம்பவங்களை தன் டீமுடன் கண்டுபிடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காயத்ரி. சில காட்சிகள் மட்டுமே வந்து இறந்தும் விடுகிறார். விஜய் சேதுபதி மெயின் வில்லனாக எப்போதும் போல அசத்தியுள்ளார். அவரது அறிமுக காட்சியும், பல்லிடுக்கில் அவர் வைக்கும் போதை மருந்து மேனரிஸமும், வீட்டில் பாம் வைத்துள்ளனர் என்று தெரிந்தவுடன் அவர் பதறும் விதமும் அருமை. 

சில இடங்களில் லாஜிக் சறுக்கல்களும், வேகதடைகளும் இருக்கதான் செய்கிறது. கிளைமேக்ஸில் தீபாவளி கொண்டாடுவது போல குண்டுகள் வெடித்து சிதறிக்கொண்டிருந்தாலும் போலீஸ் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. கமல் எப்படி தலைமறைவாகவே இருந்தார்.? ஆயுதங்களை எப்படி அங்கு கொண்டு வந்தார்?? என நீள்கிறது சந்தேகங்கள்... மேலும் படத்தின் வேகதடைக்கு காரணம் கதையின் நீளமா ? இல்லை தொடர் சண்டை காட்சிகளா? என்னவென்று தெரியவில்லை. 

ஆனால் அந்த சறுக்கல்களெல்லாம் கதையின் ஓட்டத்தில் ம(றை)றந்து விடுகிறது. ஏற்கனவே இயக்குனர் கைதி எடுக்கும் போதே சீக்குவலுக்கு யோசித்து தான் எழுதினாரா? இல்லை விக்ரம் கதைக்காக கைதி படத்துடன் சேர்த்து வருமாறு திரைக்கதை எழுதினாரா என தெரியவில்லை. இரண்டுமே நன்றாகவே பொருந்தியிருக்கிறது. விக்ரம் -3 -ல் சூர்யாவின் வில்லத்தனம், அதோடு இன்னும் சில ஆசிரிய திருப்பங்களை வைத்துள்ளாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.


நன்றி!!!

பி. விமல் ராஜ்    


ஞாயிறு, 2 மே, 2021

புதிய விடியல் ஆரம்பம் !

வணக்கம்,

சின்ன இடைவெளி விட்டு மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். தேர்தல் முடிவை அலசும் என்னை போன்ற ஓர் சாமானியனின் அரசியல் பதிவு இது. 

இதுவரை வந்த ஓட்டு எண்ணிக்கை முடிவின் படி, திமுக கூட்டணி வெற்றி பெற்று விட்டது. எல்லா முடிவுகளும் அப்படிதான் சொல்கின்றன. ஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜ.க வுடன் கூட்டணி இருந்திருக்காது. இம்முறையும் அதிமுகவே வென்றிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜ.கவின் நடவடிக்கைகளும், செயல்பாடும் நம் மக்களை மேலும் கடுப்பாகி விட்டது. அதனால் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என அதிமுகவை சற்று ஒதுக்கி வைத்துள்ளனர். எதிர்பார்த்தபடி நட்சத்திர தொகுதியில்  யார் வெல்வார்கள் என மக்கள்  நினைத்தார்களோ அவரே வென்றுள்ளனர். சில இடங்களில் மாறுபட்டிருப்பது சற்றே வேதனைக்குரியது. 

இன்று காலை முதல் பெரும்பாலானோர் வீட்டில் தேர்தல் லைவ் செய்திகள் தான் ஓடி கொண்டிருக்கும். நேற்று வரை கொரோனா தா(க்)கம் கொண்ட டி.வி சேனல்கள், "போனால் போகட்டும் போடன்னு" இன்று மட்டும் கொரோனா செய்திகளுக்கு லீவு விட்டு விட்டார்கள். உயிரிழப்பு, நோய் தொற்று, மருத்துவனை சேர்க்கை, ஆக்சிஜன் பற்றாக்குறை என எல்லாவற்றுக்கும் பாஸ் (Pause) போட்டு வைத்துள்ளார்கள். நாளை முதல் மறுபடியும் லூப்பில் போட்டு ப்பிளே (Play) செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். சில சேனல்களில், நடுநடுவே விளம்பரம் போட்டு வழக்கத்தைவிட சற்று அதிகமாய் சம்பாதித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

புதிய விடியல் ஆரம்பம் !

சரி.. கட்சி நிலவரத்துக்கு வருவோம். அதிமுக ஏன் தோற்றது என நாலரை வருட பழைய புராண கதையை சொல்லி போரடிக்க விரும்பவில்லை. மக்கள் அதிருப்தி, நிர்வாக சீர்கேடு என்றெல்லாம் கூட  அளக்க தேவையில்லை. பா.ஜ.க வுடன் கூட்டணி என்ற ஒற்றை விஷயமே அவர்களை ஒதுக்குவதற்கு போதுமான காரணம் என எண்ணுகிறேன். பேரிடர் சமயத்தில் ஓடி ஓடி சென்று வேலை செய்தவரின் வெற்றி இழுபறியில் இருக்க, ராக்கெட் விஞ்ஞானியின் வெற்றியும், கொங்கு பக்கத்து வெற்றியும் சுலபமாகி இருப்பதை கண்டு மக்களின் மனநிலையை என்னவென்று சொல்ல தெரியாமல் முழி பிதுங்கி போயுள்ளேன்.

உலக நாயகன் கமலஹாசன் கட்சி ஆரம்பித்து, அதிரடியாக வலம் வந்து, கடைசி வரை ஜெயிப்பது போல வந்து கொண்டிருக்கிறார். நல்ல ஒரு போட்டியாளராக தான் களத்தில் இருந்திருக்கிறார். இன்னும் பெரிதாய் வந்திருக்கலாம்! ம்ம்ச்ச்... ஹ்ம்ம்.. 2006 தேர்தலில் விஜயகாந்த் ஒரு சீட்டுடன் சட்டசபைக்கு வந்து, பின்னர் 2011 தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாக உட்கார்ந்தார். அதேபோல ம.நீ.ம க்கும் நடந்திருக்கலாம் என சொல்லவில்லை... நடந்திருந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறேன். அதைவிட ஒரு சினிமா ரசிகனின் ஆசையாக, உலக நாயகனின் புரிபடாத கன்னி பேச்சை சட்டசபையில் கேட்பதற்கு பதிலாய், சேனாபதியின் கரகர குஜராத்தி பேச்சையும், விக்ரமின் மிரட்டலான விருந்தையும் காண என் கண்கள் விழைகிறது! (நடந்தால் நன்றாக இருக்கும்..)

அடுத்து நம்ம தம்பிகளின் அன்பு அண்ணன்/ தமிழ் சமூகத்தின் இனமான, வீரமான, தலைவன் செந்தமிழன் சீமான். இம்முறையும் ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.  2011, 2016 தேர்தலில் ஏன் தோற்றீர்கள் என கேட்டதற்கு, எங்கள் வாக்காளர்கள் இன்னும் ஓட்டு போடும் வயதுக்கு வரவில்லை சொல்லி  கொண்டிருந்தனர். இந்த முறையும் அவர்கள் வாக்காளர்கள் வயசுக்கு வரவில்லை போல. அடுத்த முறையாவது... ஹ்ம்ம் வேண்டாம் விடுங்க... ஆனால் ஒரு விஷயத்தில் இவரை பாராட்டலாம்; கூட்டணி இல்லை என்று சொல்லி தனியே நின்று கெத்து காட்டி நிற்கிறார். தமிழ் தேசிய ஆட்சியில் அதிபர் சீமான் என்கிற கனவுலகில் இருந்த இவர் தம்பிகள் மீண்டு வர சில நாட்கள் ஆகும். வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும் தான்; ஆனா ஓவரா பேசுற வாய் .........  இம்முறையும் ஓட்டை பிரிக்கும் இவர்கள் தொழிலை செவ்வனே செய்துள்ளார்கள். இல்லாவிட்டால் இன்னும் சில தொகுதிகளில் தி.மு.க வென்றிருக்கும். 

அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என காத்திருந்து பின்வாசல் வழியாக வாளேந்தி வந்த ஆர்.எஸ்.எஸ்./ பா.ஜ.க. / இந்துத்துவா கட்சிகள், சற்றே பலமான அடியுடன் யோசித்து கொண்டிருப்பார்கள். தற்போது 4 தொகுதிகளை கைப்பற்றி நிற்கின்றனர். அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருந்தாலும் திமுக தில்லுடன் மோத சமாளிக்க வேண்டும்.   

10 வருடங்களுக்கு பிறகு தி.மு.க ஆட்சிக்கு வருகிறது. வாழ்த்துக்கள்! இன்னும் கொஞ்ச காலங்களில் விழபோகும் பேரடியை யோசிக்காமல் ஊரெங்கும் உடன்பிறப்புக்கள் மகிழ்ச்சி பொங்க வெற்றி களியாட்டதில் இருக்கின்றார்கள். ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளை விட, எக்கச்சக்க இடியாப்ப சிக்கலில் நாடும், மாநிலமும் இருக்கிறது. சற்றே உண்மையை சொல்ல வேண்டுமானால், நம் டோப்பாவை கழட்டிவிட்டு மண்டையை சொரியும் அளவுக்கு பிரச்சனைகள் இருக்கிறது. அதை சரிவர கவனித்து, மத்தியில் சமாளித்து ஆட்சி நடத்த வேண்டும். ஏற்கனவே மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை அல்லது மிகவும் சொற்பமாக நிதியை ஒதுக்குகிறார்கள் என சொல்லி  கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் இழுபறியாக இல்லாமல், இருபுறமும் அவதானித்து, சரியான முடிவுகளை எடுப்பது நல்லது. கத்தி மேல் நடக்க போகும் தளபதியின் ஆட்சி எப்படி இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இதிலிருந்து ஒன்று தெளிவாய் தெரிகிறது. மூன்றாம் அணி என யார், எப்பொது வந்தாலும் இந்த இரு பெரும் கட்சிகளை தாண்டி வ(ள)ர முடியவில்லை. மதிமுக, மநகூ, நாதக, மநீம.. என யார் வந்தாலும் மக்கள் முடிவு வேறு விதமாக தான் இருக்கிறது. 

எனக்கு இதில் ஒரே ஒரு அல்ப சந்தோஷம். அப்பாடா! நல்ல வேளை!! ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை... எத்தனை பேர் வாயில் புகுந்து புறப்பட வேண்டியதோ.. மயிரிழையில் தப்பித்தார் தலைவர்! ஹி..ஹி ஹி.. :-) 

தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க. கூட்டணியை கூட்டி அள்ளி குப்பையில் போட்டுவிட்டார்கள் அந்த மாநில மக்கள். நம்மை விட சேட்டன்களும், பெங்காளிகளும் ரோஷகாரங்க போல... 

ஒரு வழியாக விடியல் வந்துவிட்டது. கட்சிக்கா, மக்களுக்கா, யாருக்கென தான் தெரியவில்லை. இனிமேலாவது நம்ம தமிழ் நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி! 

"வெற்றி நடை போடும் தமிழகமே" பாடலின் வேறொரு வெர்ஷனை 2026-ல் கேட்கலாம், தயாராகுங்கள்! 


நன்றி!!!

பி. விமல் ராஜ்

புதன், 11 நவம்பர், 2015

தூங்காவனம் - விமர்சனம்

வணக்கம்,

உலக நாயகனுக்கு இந்த வருடத்தில் ரிலீசாகும் மூன்றாவது படம் இது.  நீண்ட இடைவேளைக்கு பிறகு, இப்படி ஒன்றன் பின் ஒன்றாக இவருடைய படங்கள் வெளிவருகிறது. படப்பிடிப்பு  ஆரம்பிக்கும் போதே இது 'Sleepless Night' என்ற ப்ரெஞ்ச் படத்தின் அதிகாரபூர்வ தழுவல் என்று சொல்லிவிட்டனர். இல்லாவிடில் இதுவும் காப்பியடிக்க படம் என்று ஜல்லியடித்திருப்பர்கள் நம் வலைமன்னர்கள்.

டிரெய்லரை பார்க்கும் போது ஒரு விறுவிறுப்பான படம் போல தான் தெரிந்தது.  'நான் சொன்னா செய்வேன்...' என்ற பஞ்ச்சில் மிரள வைக்கிறார் உலக நாயகன் கமல் ஹாசன்.


படத்தில் பாடல்கள் இல்லை; டூயட் பாட ஹீரோயின் இல்லை. நைட் கிளப்பில் ஒரு நாள் இரவில் நடக்கிறது மொத்த கதையும். அண்டர்கவர் போலிஸ் அதிகாரியான கமலின் மகனை வில்லன் கும்பல் கடத்தி விடுகிறது. தன் மகனை எதிரிகளிடமிருந்து எப்படி மீட்டார் என்பதே கதை. பொதுவாக இது போன்ற ஆக்ஷன் திரில்லர் வகையறா படங்களில் உலக நாயகன் நடிக்கிறார் என்றால் கதையும், திரைக்கதையும் பின்னி பெடலெடுத்து இருப்பார். ஆனால்  இப்படத்தில் திரைக்கதையில் கொஞ்சம் தேய்வு இருப்பது வருத்தம் தான்.

போதை தடுப்பு பிரிவு போலிசாக கமல். நடிப்பில் எப்போதும் போலதான். நோ கமெண்ட்ஸ்! மகனிடம் பரிவு காட்டும் போதும் சரி, வில்லனிடம் கோபம் காட்டும் போதும் சரி. ஏ கிளாஸ் நடிப்பு. இன்னொரு போலிசாக திரிஷா. மேக்கப் இல்லாமல் பார்க்கும் போது பழைய நடிகை கமலா காமேஷ் போல தான் தெரிகிறார் (சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் மனைவியாக நடித்தவர்). அதிரடி பெண் போலிஸ் ஆபிசராக நடிக்க இன்னும் பயிற்சி வேண்டும் என நினைக்கிறன். கமலின் மகனாக அமன் அப்துல்லா. நடிப்பு பரவாயில்லை. மேலும் பிரகாஷ் ராஜ், சம்பத், உமா ரியாஸ், மது ஷாலினி, ஜெகன், கிஷோர், யூகி சேது என பலர் கதையில் வந்து சென்றிருகிருக்கின்றனர்.

கமலின் திருமண வாழ்க்கை, அவருக்கு கொடுக்கப்பட்ட அண்டர்கவர் அசைன்மெண்ட்,  யூகி சேது - கிஷோரின் முன்கதை என எதையும் விரிவாக சொல்லவில்லை.

இது கமல் படம் என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதையிலும், காட்சியமைப்பிலும் அவருடைய டிரேட் மார்கே இல்லை; மது ஷாலினி கிஸ்ஸிங் சீன் தவிர. படம் முழுக்க காட்சிகளும்,  ஹீரோவும் பரபரவென ஓடி கொண்டே இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் படம் பார்க்கவே போர் அடிக்கிறது. கொஞ்சம் தூக்கம் தான் வருகிறது. இருந்தாலும் ஒருமுறை பார்க்கலாம், கமலுக்காக !


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 4 ஜூலை, 2015

பாபநாசம் - விமர்சனம்

வணக்கம்,

ஏற்கனவே மலையாளத்தில் வெளியான 'திருஷ்யம்' படத்தைச் சமீபத்தில் தான் பார்த்துத் தொலைத்தேன். பாபநாசம் பட டிரைலரில் காட்சியும், வசனமும் பார்த்த போதே தெரிந்து விட்டது, தமிழில் கொஞ்சம் கூட மாற்றவில்லை என்று. ஹ்ம்ம்...எப்படியிருந்தால் நமக்கென்ன ? நமக்குத் தேவை உலக நாயகனின் நடிப்பு பசியை வெள்ளி திரையில் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.

சாதாரணக் குடும்பத்தில் ஓர் எதிர்பாராத அசம்பாவிதம் நடந்து விடுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதே திருஷ்யம் (மலையாளம், தெலுங்கு & வர போகும் ஹிந்தி ) மற்றும் பாபநாசம் படத்தின் கதை.


கமல்ஹாசனின் நடிப்புக்கு தான் வயசாகவில்லையே தவிர, அவர் முகத்தில் கொஞ்சம் வயது முதிர்வு தெரியதான் செய்கிறது. இருந்தாலும், கருப்புச் சட்டையில் வெள்ளை தோலுமாய்த் திராட்சை நிற கண்களை உருட்டி பார்க்கும் போது, அவர் கருவிழியில் இன்னும் ஆயிரம் கதாபாத்திரங்களை நடிக்கத் தயாராய் இருக்கிறார் என்பது நமக்குத் தெரிய வரும்.


சுயம்புலிங்கமாக நெல்லை தமிழ் பேசி அசத்தியுள்ளார் கமல். அசல் நெல்லைகாரனே தோற்றான் போங்க! ஒவ்வொரு சீனிலும் கமலின் நடிப்பு உச்சத்தைத் தொடுகிறது. பிணத்தைத் தோண்டி எடுத்த பின்பு, எல்லாரும் ஒரு முறை அதிர்ச்சியும் ஆச்சிர்யத்துடனும் கமலை திரும்பி பார்க்க, 'உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது போங்கடா' என்று ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்..ச்சே...சான்ஸே இல்ல. அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது. அதெல்லாம் சரி, ஏன் இவ்வளவு 'அவுட்டேட்டடான' கெளதமி ஆண்ட்டியை ஹீரோயினாகத் தேர்வு செய்தார் கமல் என்று தான் புரியவில்லை. இருப்பினும் மலையாளத்தில் மீனா செய்த வேலையைத் தமிழில் நன்றாகச் செய்து இருக்கிறார்.

கமல் - கெளதமியின் மகள்களாக (படத்தில்!) நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் இருவரும் அழகாக நடித்துக் கொடுத்திருகின்றனர். நிவேதா ஏன் இன்னும் நம் தமிழ் தயாரிப்பளர்கள் கண்ணில் படவில்லை என்பது வியப்பின் வியப்பு. மற்றபடி, எம்.எஸ்.பாஸ்கர், கலாபவன் மணி, போலிஸ் அதிகாரியாக வரும் பெண்மணி என எல்லோரும் சரியான அளவில் தங்களது பணியைக் குறையில்லாமல் செய்துள்ளனர்.

ஜிப்ரானை தன் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாற்றிவிட்டார் கமல். அதனால் தான் எல்லாப் படப் பாடல்களும் கமலின் பெயர் சொல்வது போல இருக்கிறது. இதிலும் 'கோட்டிக்காரா ' பாடல் பார்க்க, கேட்க ரம்மியமாக இருக்கிறது.

மற்ற மொழியில் திருஷ்யதை பார்க்காதவர்களுக்கும், கதையின் கிளைமேக்ஸ் சஸ்பென்ஸ் தெரியாதவர்களுக்கும் இந்தப் படம் கண்டிப்பாகச் சிறந்த பொழுதுபோக்காக அமையும். மற்றவர்கள் உலக நாயகனின் நடிப்பு ஆளுமையைப் பார்த்துப் புளங்காகிதம் அடைவார்கள்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 4 மே, 2015

உத்தம வில்லன் - விமர்சனம்

வணக்கம்,

உலக நாயகனின் படம் என்றாலே எதிர்பார்ப்பு கூடிவிடும். படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரே பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் ட்ரைலரும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த, சில பல இன்னல்களுக்கு பிறகு படம் இப்போது வெளியாகியுள்ளது.

மிரட்டலான 'இரண்ய நாடகம் ' பாடல் ப்ரோமோவை பார்த்த பின் உலக நாயகனின் நடிப்பு தாகத்தை வெள்ளி தரையில் பார்த்தே தீர வேண்டும் என்று எண்ணி கொண்டிருந்தேன். படத்தை "காமெடி-டிராமா" என்ற வகையறாவில் சேர்க்கப்பட்டதால் கமலின் முந்தய படங்களான பஞ்ச தந்திரம், காதலா! காதலா! போல இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இம்முறை நம்மை சற்று ஏமாற்றி இருக்கிறார் இந்த வில்லன்.


படத்தில் நாயகனின் நிஜ வாழ்க்கை கதையும், அதனுள்ளே இன்னொரு சினிமா கதையும் காண்பிக்கிறார்கள். உச்சபட்ச நட்சத்திர நடிகரின் கதையும், அவர் நடிக்கும் படத்தில் உள்ள உத்தமனின் கதையும் மாறி மாறி காட்டுகிறார்கள். 

அறுபத்தைந்து வயதிலும் கமல் முதல் பாடலுக்கு ஆடும் நடனம் நம்மை ரசிக்கதான் வைக்கிறது. உலக நாயகனின் நடிப்பு அருமை, அபாரம் என்று ஒற்றை வரியில் சொல்லி விட முடியாது. கமலின் நடிப்புக்கு நிகர் அவரே! ஜெயராம் கமலிடம் அவருடைய பெண்ணின் புகைப்படங்களை காட்டும் போது, வேதனையும் அழுகையும் கமல் வண்ண சாயம் பூசாமலேயே முகத்தில் காட்டியிருப்பார். 'பக்கும் பக பக ' பாடல் ஜிப்ரானின் இசை என்று கர்ஜித்து சொல்கிறது. 'என் உதிரத்தின் விதை' பாடல் மட்டும், அலங்காரம் மற்றும் காட்சியமைப்புக்காகவும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.

இந்த கதைக்கு இயக்குனர் இமயம் தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. வேறு யாராவது குணசித்திர நடிகரே நடித்திருக்கலாம். கே.பி யை இந்த படத்தில் நடிக்க வைத்து வீணடித்திருக்கிறார் கமல். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அண்ட்ரியா, பார்வதி போன்ற பாத்திரங்களில் அவ்வளவாக பலம் இல்லை. நாயகியாக பூஜா குமார் கொஞ்சம் ஓவராகவே நடித்திருக்கிறார் என்று தான் நினைக்க தோன்றுகிறது.

கதையில் வரும் உத்தமன் கமல், தெய்யம் கலைஞராக ஆரம்பிக்கும் போது ஏதோ பெருசாக சொல்ல போவதாக நினைக்க வைத்து, இடையில் சில மொக்கை காமெடிகளை சேர்த்து, கடைசியில் இரண்ய நாடகத்தில் சுபம் போட்டிருக்கிறார்கள். நாசர் மற்றும் அவரது மந்திரி கோஷ்ட்டிகளை வைத்து சிரிப்பே வாராத காமெடிகளை கோர்த்து கதை நகர்த்துகிறார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த்.

மொத்தத்தில் கமலுக்காகவும் மற்றும் திரைக்கதைக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். கடைசியில் வில்லனை காமெடியன் ஆக்கிவிட்டார்கள்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்